வியாழன், ஜூலை 21, 2016

அழிவின் பாதையில் பேருயிர்!

டுத்தடுத்து மரணிக்கும் காட்டு யானைகளைப் பற்றியச் செய்திகள் அத்தனையும் நம்மை அதிர வைக்கின்றன.  இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடி வரை, எண்ணிக்கை ஏழு. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.

 `மதுக்கரை மகராஜ்' மரணம் நம் காதுகளை வந்தடையும் முன்னரே, ஓசூர் நெடுஞ்சாலையில் இன்னொரு யானை இறந்துபோனது. அடுத்த நாளே கோவையில் இன்னொரு தாய் யானை, குட்டியைத் தனியாக விட்டுவிட்டு இறந்துவிட்டது என அடுத்தடுத்து மரணச் செய்திகள். 


`காட்டு யானைகள், காடுகளைவிட்டு ஊருக்குள் வருவதால்தான் இறந்து போகின்றன. அவை தன்பாட்டுக்கு காட்டுக்குள் இருந்தால், ஏன் இவ்வளவு பிரச்னை வரப்போகிறது?' வெவ்வேறு தரப்பினரிடம் இருந்தும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் கேள்வி இது. 

காடு என்பது, வேலியிடப்பட்ட மிருகக்காட்சி சாலை அல்ல. அங்கே காட்டு உயிர்களுக்கு கட்டளையிட்டு தடுத்து நிறுத்த முடியாது. நம் காடுகளின் பரப்பளவு, ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டேபோகிறது. உணவுக்காகவும் நீருக்காகவும் காட்டு உயிர்கள் அல்லல்படுகின்றன. இன்னொரு பக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், ஆன்மிக ஆசிரமங்களும் காடுகளையும் மலைகளையும் இயற்கைச் சூழலையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர். இப்படி ஒரு சூழலில் நாம் கேள்வி எழுப்ப வேண்டியது, காட்டு விலங்குகளையா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களையா? 

இந்தக் காட்டு ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அழிப்பது, வெறும் காடுகளை மட்டும் அல்ல; யானைகளின் வாழ்விடங்களையும், வலசைப்பாதைகளையும், வழித்தடங்களையும் தான். யானைகளின் வலசைப்பாதைகள் என்பது, பல ஆயிரம் ஆண்டுகளாக யானைகளின் ஞாபக அடுக்குகளில் புதைந்து கிடக்கும் மரபார்ந்த நினைவுப்பாதை. 

ஒரு காட்டு யானை, ஒவ்வொரு நாளும் சராசரியாக 200 கிலோ உணவையும், 150 லிட்டருக்கும் அதிகமான நீரையும் உட்கொள்ளும். அதை ஒரே இடத்தில் இருந்து பெற முடியாது. எனவே, அது காட்டின் பல பகுதிகளுக்கும் நடந்து கடந்து கண்டு அடையும். அப்படி ஒரு வாழ்விடத்தில் இருந்து இன்னொரு வாழ்விடத்துக்குச் செல்லும் இந்தப் பாதை `யானைகளின் வழித்தடம்' (Corridor) என அழைக்கப்படுகிறது. இந்த மரபுவழிப் பாதைகளை யானைகள் தலைமுறை தலைமுறையாக மறப்பதே இல்லை. 

இந்தியா முழுக்க வன இணைப்புப் பாதைகள் 166-க்கும் அதிகமாக இருந்தன. இதில் நாம் அழித்தது, குடியேறியது, ஆக்கிரமித்தது, ஆட்டையைப்போட்டது எல்லாம் போக, இப்போது எஞ்சி இருப்பது 88தான். இதில் மிக அதிக அளவில் ஆசிய யானைகள் வாழும் பகுதியான தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் 20 பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பாதைகளில் 
15 இணைப்புப் பாதைகள் ஏற்கெனவே மனிதர்களால் சூறையாடப்பட்டு கட்டடங்களாக உயர்ந்து நிற்கின்றன. எஞ்சி இருக்கும் பாதைகளில்தான் காட்டு உயிர்கள் கூட்டம் கூட்டமாகப் பயணிக்கின்றன. இவற்றில் யானை வழித்தடங்கள் எவ்வளவு மிச்சம் இருக்கின்றன. அதில் இன்னமும் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பவை எவ்வளவு என்பது குறித்து, இதுவரை முறையான ஆய்வுகள் எதுவுமே நடத்தப்படவில்லை.  இப்படிப்பட்ட இணைப்புப் பகுதிகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் முக்கியமானது கோவை வட்டாரம்தான். இந்த ஏழு யானைகளில் ஐந்து யானைகள் இங்குதான் இறந்துபோயிருக்கின்றன. 

கோவைக்கும் யானைகளுக்குமான உறவு, மிக நீண்டதும் நெடியதுமான வரலாறு. தெற்கே ஆனைமலைக்கும் வடக்கே கோவையின் காடுகளுக்கும் இடையே உள்ள பாலக்காடு கணவாய் என்பது கேரளா-தமிழக யானை வலசைப்பாதையாக பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தது. சமீபத்தில் கோவை குமிட்டி பகுதியில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களே இதற்குச் சாட்சியாக விளங்குகின்றன. ஆனால், இன்று அந்த வழிகள் எல்லாம் மனிதர்கள் குடியேறி ஊர்களாகவிட்டன. ஆனைக்கட்டி, வேலந்தாவளம், மாவூத்தம்பதி என யானைகளோடு தொடர்புடைய ஊர் பெயர்கள் கோவை மக்களுக்கும் யானைகளுக்குமான தொடர்பை வெளிப்படுத்தும். கோவையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர்களில் பலர், இப்போதும் காட்டு யானைகளை மரியாதையோடு அழைப்பதைக் காணலாம். ஆனைக்கட்டியை அடுத்துள்ள பல மலைக்கிராமங்களில் யானைகளைப் பற்றி பேசும்போது `பெரியவங்க' `பெரியவரு' என அழைக்கிறார்கள். கோவை மக்களுக்கும் யானைகளுக்குமான அன்பு அந்த அளவுக்கு உள்ளார்ந்தது. தங்கள் வாழ்விடத்துக்காக விரட்டியடித்தாலும், அந்த ஆதி அன்புதான் மதுக்கரை மகராஜின் மரணத்துக்குக் கண்ணீர் சிந்தவும் போஸ்டர் அடிக்கவும் வைத்துள்ளது.
சென்னைக்கு அடுத்ததாக வெகுவேகமாக வளர்ந்துவரும் நகரமாக கோவை முன்னேறியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் அதன் வேகம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. இது நகர விரிவாக் கத்தைத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டது. 

``கோவையின் மேற்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகம் உருவாக ஆரம்பித்துள்ளன. அழகிய மலைச்சாரல், எந்நேரமும் சுத்தமான நீர், அமைதியான சூழல் என மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரியல்எஸ்டேட் நிறுவனங்களால் காட்டை ஒட்டியிருக்கும் நிலங்கள் பந்திவைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன. அமைதியை நாடும் பணக்காரர்கள் இந்தப் பகுதிகளில் வீடுகள் கட்டிக்கொள்ள எவ்வளவு தொகையும் தரத் தயாராக இருப்பதால், இங்கே பரபரவென வசிப்பிடங்கள் விற்கத் தொடங்கியுள்ளன. உல்லாச ரிசார்ட்டுகள், மனசாந்தி தரும் ஆன்மிக ஆசிரமங்கள், சர்வதேசப் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் என மேற்குத்தொடர்ச்சி மலை சூறையாடப்படுகின்றன. இதில் சிக்கித் தவிப்பவை அப்பாவி காட்டு உயிர்கள்தான்'' என்கிறார் சூழலியல் எழுத்தாளரான கோவை சதாசிவம். இதன் விளைவாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் காட்டு உயிர்களுக்கும் மனிதர் களுக்குமான மோதலும் இந்தப் பகுதிகளில் அதிகரித்துள்ளன. 

கோவையைச் சுற்றியுள்ள மலைகளை அடுத்துள்ள காட்டுப்பகுதிகளை `ரிசர்வ் ஃபாரஸ்ட்' எனப்படும் காப்புக் காட்டுப் பகுதியாக வரையறுத்துள்ளனர். இங்கு `காட்டுப்பகுதி' என்ற ஒரு எல்லைக்கல் நடப்பட்டிருக்கும். இந்த எல்லையில் இருந்து 150 மீட்டர்கள் வரைக்கும் பஃபர் ஜோன் (Buffer zone). இங்கே எந்தக் கட்டடங் களும் கட்டப்படக் கூடாது. இங்கே எந்தவித மாற்றங்களும் செய்யக் கூடாது என்பதுதான் விதி. ஆனால், இந்தப் பகுதிகளில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த விதிகளைக் கடைப்பிடிப்பது இல்லை. இப்படி காப்புக்காட்டு எல்லைக்குள் உருவாக்கப்படும் இந்த வேலிகளில் பலவும் யானைகளின் வழித்தடங்களை மறிக்கின்றன. ``யானைகளின் வலசைப்பாதைகளும் வழித் தடங்களும் தனியார் வசம் உள்ளன. நம்முடைய சட்டங்களில் அவற்றை மீட்பதற்கான வழிகள் எதுவுமே இதுவரை இல்லை. இப்படி ஆக்கிர மிக்கப்பட்ட மனிதர்கள் வாழும் பகுதிகளைக் கடக்கும் யானைகள் தங்களுடைய பாதைகளில் குழப்பமடைந்து திரும்பிச் செல்ல நேருகின்றன. அப்படிச் செல்லும்போது உணவுக்காகவும் நீருக்காகவும் வயல்களுக்குள்ளும் குடியிருப்பு களுக்குள்ளும் நுழைந்துவிடுகின்றன'' என்கிறார் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் காளிதாஸ். 

`ஹாக்கா' - Hill Area Conservation Authority (HACA) என்பது, மலைதலப் பாதுகாப்புக் குழு. மலை அடிவாரப் பகுதிகளில் ஏதேனும் கட்டடங்கள் கட்டவேண்டும் என்றால், இவர்களிடம்தான் அனுமதி பெறவேண்டும். மலைகளுக்கும் காடுகளுக்கும் மிக அருகே இருக்கும் ஒருசில கிராமங்கள் இந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனால், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருக்கிற மத அமைப்புகள், ஆன்மிக ஆசிரமங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் பலவும் ஹாக்காவிடம் இதுவரை அனுமதி வாங்கவில்லை. 

``2012-ம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இந்த உத்தரவுக்கு எதிராக பல தனியார் விடுதிகளும் நிறுவனங்களும் உச்ச நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை பெற்றுவிட்டனர். இப்போது வழக்கு நிலுவையில் உள்ளது'' என்று தங்களுடைய ஆதங்கத்தை நம்மிடம் பதிவு செய்தார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின், வழக்குரைஞர் வெற்றிச்செல்வன். 

கோவையைச் சுற்றியுள்ள விளைநிலங்களில், குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் நுழைவதால் பெரிய அளவில் பாதிப்பைச் சந்திப்பது விவசாயிகளும் பொதுமக்களும்தான். இதனால் விவசாயிகள் தொடர்ந்து தங்களுடைய பயிர்களுக்காகக் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அதையும் மீறி யானைகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்வதால் மிகுந்த கோபத்துக்கு ஆளாகின்றனர். அவர்களுடைய கோபத்துக்கான காரணம் யானைகள் மட்டும் அல்ல, இப்படி காட்டு உயிர்களால் பயிர்கள் நாசமாகும்போது, அதற்கான இழப்பீடுகளுக்காக அலைக்கழிக்கும் அரசு அலுவலகங்களும்தான்.  அதனாலேயே தங்களுடைய மின்வேலிகளில் அதிக அளவு மின்சாரத்தைப் பாய்ச்சி யானைகளை விவசாயிகள் தாக்குவதும், மின்தாக்குதலுக்கு ஆளான யானைகள் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துவதும் தொடர்கதையாகிவிட்டன. ஆனால், ஆக்கிரமிப்பு கார்ப்பரேட் நிறுவனங்களோ இதைப் பற்றி எந்தவிதக் கவலைகளும் இல்லாமல் விவசாயி களுக்கும் யானைகளுக்குமான இந்தத் தொடர் மோதலை லாபவெறியோடு வேடிக்கை பார்க்கின்றன. 

கோவைப் பகுதிகளில் யானைகளைக் காவு வாங்கும் இன்னோர் எமன் ரயில் தண்டவாளங்கள். எத்தனையோ காடு, மலைகளை எளிதில் கடக்கும் யானைகளால் தண்டவாளங்களைக் கடக்க முடிவதில்லை. குறிப்பாக, போத்தனூர் - பாலக்காடு ரயில்பாதை வனப்பகுதிக்குள் செல்லக்கூடியது. 

2002-ம் ஆண்டு தொடங்கி 2009-ம் ஆண்டுக்குள் இந்தப் பாதையில் 11 யானைகள் இறந்துள்ளன. 

2008-ம் ஆண்டில் இந்தப் பாதையில் மூன்று யானைகள் இறந்துபோனபோது, குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். அந்தச் சமயத்தில் `ரயில் பாதைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பது, காட்டுப் பகுதிகளுக்குள் செல்லும்போது விளக்கு ஒளிகளைக் கட்டுப்படுத்துதல், வேகத்தைக் குறைத்தல்' எனப் பல விஷயங்களை ரயில்வே நிர்வாகம் செய்வதாக ஒப்புக்கொண்டது. ஆறு ஆண்டுகளாக இங்கே யானைகள் மரணம் தவிர்க்கப்பட்டுவந்த நிலையில், இப்போது இந்தக் கண்காணிப்புகள் குறைந்துவிட்டதால் மீண்டும் மரணங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன. 

``நம் காடுகளில் யானைகளுக்கான உணவு என என்ன இருக்கிறது? யானைகள் உண்ணும் மூங்கில், உசிலம், வெட்பாலை, மறுக்காரை, வெட்டாலம் என எந்த மரமும் இப்போது பரவலாக இல்லை. முழுக்க அந்நிய தாவரங்கள் நிறைந்து கிடக்கின்றன. யானைகள் உண்ணும் புற்களும் சுத்தமாக இல்லை. மலை அடிவாரங்களில்தான் அவை கிடைக்கின்றன. ஆற்றோரங்களில் இருந்த காடுகள் எல்லாம் அழிந்து விட்டன.  யானைகள் உண்ணுவதற்கான தாவரங்களை வனத்துறை வளர்க்க முன்வர வேண்டும். அவை குடிப்பதற்கான நீரும் தாரளமாக கிடைக்க வேண்டும். இன்று வரை கோவையின் மதுக்கரைக்கும் நரசிபுரத்துக்கும் நீருக்காகவும் உணவுக்காகவும்தான் இந்த யானைகள் வருகின்றன. இப்படி வரும் யானைகளைப் பிடித்துக் கொண்டுபோய் வேறு இடங்களில் விடுவதலோ, பழக்கப்படுத்தி வளர்ப்பு யானைகளாக மாற்றிவிடுவதாலோ பிரச்னை தீர்ந்துவிடும் என வனத்துறையினர் நினைக்கிறார்கள். 

உண்மையில், ஒரு காட்டுயானையைப் பயிற்றுவிக்கப்பட்ட யானையாக மாற்றுவதற்காக பிடித்துச் செல்வதைவிட அவை மயக்க மருந்தினால் இறந்துவிடுவதே மேல் எனத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு நம்முடைய வனத்துறையினர் யானைகளை கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்குகிறார்கள். மாதக்கணக்கில் பட்டினி போட்டு, அவற்றைத் துன்புறுத்தி, அடிமைகளாக மாற்றி, தன் இயல்புக்கு மாறாகப் பழக்குவது எந்த வகையிலும் அறமுள்ள செயலாக இருக்காது. காட்டின் ஆதார உயிர், யானை. அதன் வாழ்விடங்களைச் செழிப்பாக மாற்றுவதும், மேற்குத்தொடர்ச்சி மலையைக் காப்பாற்ற அறிவியல் அறிஞர்களைக்கொண்டு ஆய்வு செய்து தீர்வுகளை நோக்கி முன்னேறுவதும்தான் ஆரோக்கியமான நடவடிக்கையாக இருக்கும்'' என்று குறிப்பிடுகிறார் கோவை சதாசிவம்.

நம்முடைய பாதைகளில் சாலைகளில் யானைகள் குறிக்கிடுவதாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நாம்தான் யானைகளின் வழித்தடங்களில் ரயில்களையும் பேருந்து களையும் இயக்குகிறோம். நாம்தான் யானைகளின் காடுகளில் குடியேறி, கட்டடங்கள் கட்டி அட்டகாசம் பண்ணுகிறோம். ஆக்கிரமிப்புகளை எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாமல், தயவுதாட்சண்யம் இன்றி அகற்றுதலில் தொடங்கி, காட்டு உயிர்களின் வாழ்விடங்களைச் சீரமைத்து, அதில் போதிய உணவும் நீரும் கிடைப்பதற்கான வழிமுறைகளை அதிகரிக்காமல் யானைகளை வெடிவைத்து விரட்டியும், மயக்க மருந்து கொடுத்து இடப்பெயர்த்தும் எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிடாது. ஏன் என்றால், ஒரு யானையின் மரணத்தில் நாம் கணிசமான அளவுக்குக் காட்டையும் சேர்த்தே இழக்கிறோம். யானைகளின் அழிவு என்பது, காட்டின் அழிவு. 

தீர்வுகள் என்ன?

இந்தக் காட்டு உயிர் பிரச்னை என்பது, வெறும் வனத்துறை தொடர்பான பிரச்னை கிடையாது. இதில் வருவாய்த் துறை, விவசாயத் துறை, காவல் துறை எனப் பலரும் இணைந்து செயல்பட வேண்டும். 
யானைகளின் உணவாக இல்லா பயிர்களை, வனத்துக்கு அருகில் இருக்கும் விளைநிலங்களில் பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு மாற்று யோசனைகள் தந்து உதவலாம்.

வனப்பகுதிகளில் நீர்நிலைகளை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றோரக் காடுகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளுதல்.

தனியார்களிடம் இருந்து வலசைப்பாதைகளை மீட்டு அவற்றை யானைகள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைப்பது.

குத்தகைக்கு விடப்பட்டுள்ள காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களை மீட்டு, அங்கே மீண்டும் வனங்கள் அமைப்பது.

யானைகளின் வழித்தடங்களில் மின்வேலி அமைத்து இருந்தால், அதில் மின்சாரத் துறை உதவியோடு அதிக அழுத்த மின்சாரம் பயன்படுத்துவதைத் தடுப்பது.

குப்பைகளால் அழியும் காட்டு உயிர்!

சட்டத்துக்குப் புறம்பாக கோவையைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் தொடர்ச்சியாகக் குப்பைகள் குவிக்கப்படுகின்றன. இது காட்டு உயிர்களின் ஜீரண மண்டலத்தை வெகுவாகப் பாதிக்கக்கூடியது. கூடவே காட்டு உயிர்களுக்கு வெவ்வேறுவிதமான புதிய நோய்களையும் பரப்புகிறது. மிக அண்மையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் குப்பைகளைக் கிளறி தின்றுகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். யானைகளின் மர்ம மரணங்களுக்கு இந்தக் குப்பைகளும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

ஆயிரம் யானைகள்

இந்தியா முழுக்க பல ஆண்டுகளாக நடந்துவந்த யானை வேட்டைகளைத் தடுக்க 1991-ம் ஆண்டில் `புராஜெக்ட் எலிஃபென்ட்ஸ்' என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. வேட்டைத் தடுப்புக் காவலர் பணி நியமனங்களும் அந்தச் சமயத்தில்தான் நடந்தது. இதன் பலனாக, கடந்த ஆண்டுகளில் யானைகள் வேட்டையாடப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் கடந்த பத்து ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. யானைகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும் இன்னொரு பக்கம் காடுகளின் அளவு குறைவதும், அதிகரித்துள்ள யானைகளுக்குப் போதுமான நீரும் உணவும் கிடைக்காமல்போனதும்தான் யானைகளின் இந்த மனித மோதலுக்குக் காரணமாக உள்ளது.

2001-ம் ஆண்டு தொடங்கி 2015-ம் ஆண்டு வரைக்குமான கால இடைவெளியில் இறந்துபோன யானைகளின் எண்ணிக்கை 1,113. இவற்றில் 1,020 யானைகள் இயற்கையாகவும், 65 யானைகள் மின்வேலிகளில் மின்தாக்குதலுக்கு உள்ளாகியும் இறந்துபோயுள்ளன. இதில் 47 யானைகள் இறந்துபோனது கோவைப் பகுதிகளில். இவற்றில் 28 யானைகள் வேட்டையாடப்பட்டு இறந்துள்ளன. 

-அதிஷா
நன்றி: ஆனந்தவிகடன், 20 ஜூலை 2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக