புதன், ஆகஸ்ட் 06, 2014

அழிவின் அருங்காட்சியகம்

எல்லாவற்றையுமே மறந்துவிடலாம்
ஆனால்
உன் குழந்தைகளை ஒளித்து வைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைந்த
அந்த பின்மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியைப் பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஒளிந்தபடி காத்திருந்தபோது
பிடுங்கி எறிபட்ட பெண்ணே,
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க?
-    சேரன்


சில மாதங்களுக்கு முன்பு ஹிரோஷிமா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அழிவின் பெருநகரமாய் கற்பனை செய்து வைத்திருந்த ஹிரோஷிமாவில் நம்ப முடியாத அளவிற்கு மாற்றங்கள். ஜப்பானின் அபரிதமான வளர்ச்சி ஹிரோஷிமாவிலும் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. உலகின் முதல் அணு குண்டு வீசப்பட்ட நகரமாய் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஹிரோஷிமா, இன்று அந்த அழிவின் தடங்கள் எதையும் சுமந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் வரலாற்றிலிருந்து கற்ற பாடத்தை  எளிதில் கடக்கவோ, மறக்கவோ ஹிரோஷிமா மக்கள் தயாரில்லை.


ஹிரோஷிமா நகரில் நிறுவப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தைப் பார்க்கும்போது, “வரலாற்றின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுப்பவர்கள், அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வார்கள்” என்று அறிஞர் ஜார்ஜ் சாந்தயானா சொன்னதை அந்த நகரத்து மக்கள் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றியது. வரலாறு தங்களுக்கு இழைத்த அநீதிகளிலிருந்து ஹிரோஷிமா மக்கள் கற்றுக்கொண்ட பாடமாய், அவர்கள் உலகிற்கு சொல்ல விரும்பும் செய்தியாய் எழுந்து நிற்கிறது ஹிரோஷிமா அருங்காட்சியகம்.

ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியம் என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் ஆகஸ்ட் 1955ல் – அணுகுண்டு வீசப்பட்டு பத்து வருடங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டது. ஹிரோஷிமா குண்டு வெடிப்பின் தடங்களை, அது குறித்த வரலாற்று பதிவுகளை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.  சேகுவேரா, போப், அன்னை தெரசா தொடங்கி மானுடத்தை நேசிக்கும் பல தலைவர்களும் இங்கு அமைதியின் வலிமையான செய்தியை பரப்ப வருகை தந்திருக்கிறார்கள்.

அருங்காட்சியகத்தை ஒட்டி செயல்படும் ஹிரோஷிமா அமைதி பூங்கா அணு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றி பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அமைதிப்பூங்காவின் ஒரு பகுதியாக இருக்கிறது அணு குண்டு மாடம். குண்டு வெடிப்பின் போது தரைமட்டமாகாமல் தப்பித்த ஒரே கட்டடம் அது. போரின் குரூரங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அதை அப்படியே விட்டுவிடுவது என்று முடிவு செய்திருக்கிறது ஹிரோஷிமா நிர்வாகம். உலகிற்கு நாங்கள் சொல்லும் அமைதியின் செய்தி என்று அணு குண்டு மாடத்தை சொல்கிறார்கள் அந்த மக்கள். 1996ல் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய உலக நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது அணுகுண்டு மாடம். இங்கிருந்து ஒரு 200 அடி தொலைவில் இருக்கிறது அருங்காட்சியகம்.

கிழக்கு கட்டடம், பிரதான கட்டடம் என்று 1994ல் விரிவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் கிழக்கு கட்டடத்தில் குண்டுவெடிப்புக்கு முன்பும் பின்பும் ஹிரோஷிமாவின் வரலாற்றை அறியலாம். பிரதான கட்டடத்தில் குண்டு வெடிப்பை புகைப்படங்கள் வாயிலாகவும் குண்டுவெடிப்பில் மிச்சமிருந்த பொருட்களின் வாயிலாகவும் பார்க்கலாம். அருங்காட்சியகத்தை நிறுவியதன் நோக்கமே அணுகுண்டுக்கு எதிரான தரவுகளை பரப்ப வேண்டும் என்பதும், உலக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான்.

இதனைப் பார்க்கும்போது, மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தும்கூட அமைதியின் பக்கம் நிற்கும் ஜப்பான் மக்கள் மீதான மரியாதை அதிகமாகிறது.

ஒரே ஒரு குண்டுவீச்சால் தரைமட்டமாக்கப்படுவதற்கு முன்பு எவ்வளவு வளம் நிறைந்த நகரமாக ஹிரோஷிமா இருந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அணுகுண்டு மானுடத்துக்கு எதிரான கண்டுபிடிப்பு என்பது மேலும் உறுதியாகிறது. கோட்டை நகரமாக நிர்மாணிக்கப்பட்ட ஹிரோஷிமா ஜப்பானின் பழமையான இடங்களில் ஒன்று. தொழிலும் கல்வியும் செழித்த நகரமாக இருந்திருக்கிறது ஹிரோஷிமா. அந்நகரின் தோற்றம் முதல் அதன் வளர்ச்சி வரை வரைபடங்கள் மூலமாகவும் புகைப்படங்கள் மூலமாகவும் கிழக்குக் கட்டடத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. குண்டு வெடிப்பிற்கு பிந்தைய ஹிரோஷிமாவின் வளர்ச்சியையும் இந்த பகுதியில் காணலாம்.

ஆனால் மானுடம் மீதான நம்பிகையை அசைத்துப் பார்க்கும் ஆவணங்களை கொண்டிருப்பது பிரதான கட்டடம்தான்.

தட்டாம்பூச்சியை பிடித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளி சிறுவன் மீது, இறந்தாலும் ஒன்றாகவே இறக்க வேண்டும் என்று குழந்தைகளை பிரியாது சுற்றிக்கொண்டிருந்த தாய் மீது, செடிக்கு நீருற்றும் தாத்தாவை பார்த்துக்கொண்டே தோட்டத்தில் விளையாடிய பேரக் குழந்தை மீது, மிட்டாய் வாங்க அம்மா காசு தந்த உற்சாகத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய ஒரு குழந்தை மீது விழுந்திருக்கிறது அந்த அணுகுண்டு. லட்சக்கணக்கில் மக்களைக் காவுவாங்கிய அந்த அணு குண்டு ஏற்படுத்திய அழிவின் சாட்சியங்களாய் சுமார் 20,000 பொருட்களை கொண்டிருக்கிறது அருங்காட்சியகம். இறந்தவரின் புகைப்படங்கள், எரிந்த நிலையில் துடித்துக்கொண்டிருக்கும் மக்களின் புகைப்படங்கள், ஆயிரக்கணக்கில் புதைக்கப்ப்பட்ட சமாதிகளின் புகைப்படங்களைத் தாண்டி, போரின் கருணையின்மையை, அணு குண்டின் கோர முகத்தை ஏந்திக்கொண்டிருப்பது அந்த பொருட்கள்தான்.

போருக்கு அனுப்பபட்ட தந்தையிடம் காட்டவென்று குண்டுவெடிப்பில் இறந்த மகனின் நகங்களையும் கொஞ்சம் தோலையையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் ஒரு தாய். தாகம் தாங்காமல் விரல்களிலிருந்து வழிந்த சீழ் நீரை குடித்த அந்த மகன் குண்டு வெடிப்பிற்கு அடுத்த நாள் இறந்துவிட்டதாக அருங்காட்சியகத்தின் குறிப்பு சொல்கிறது. சடலமாக கூட கண்டடைய முடியாத 13 வயது மியகோவின் பாதச் சுவடை இன்னமும் தாங்கிக்கொண்டிருக்கும் மர செருப்பு, 54 வயது மொசோரோவின் உருகி சிதைந்த கண்ணாடி, உருக்குலைந்து கூடாக நிற்கும் மூன்று சக்கர வாகனம் என்று அருங்காட்சியகத்தில் இருக்கும் எண்ணற்ற பொருட்கள் இப்போதும் உலகின் எதோவொரு மூலையில் நடந்து கொண்டிருக்கும் போரின் அபத்தங்களையும் ஆபத்துகளையும் ஒரு சேர சொல்கின்றன.

ஆனால் எப்போதும் என்னால் கடக்க முடியாத வலியை தருவது 13 வயது ஓரிமேன் இறக்கும் தருவாயிலும் வயிற்றோடு அணைத்தபடி வைத்திருந்த மதிய உணவைதான். அணு குண்டின் வெப்பத்தில் உலர்ந்து கருகிய உண்ணப்படாத உணவை எப்படி மறக்க?
-பொறியாளர் கோ. சுந்தர்ராஜன்


ஆகஸ்ட் 6, 1945 ஹிரொஷிமாவில் அணு குண்டு வீசப்பட்ட நாள். மூன்று நாள் கழித்து, ஆகஸ்ட் 9ந் தேதி நாகாசாகியில் அணு குண்டு வீசப்பட்டது.


செய்தி குறிப்பு:

உலகத்தில் எந்த நாடு அணுகுண்டு சோதனை செய்தாலும் உடனே ஹிரோஷிமா  நாகசாகி மேயர்கள்  தலைவர்களுக்கு கடிதம் அனுப்புகிறார்கள். இந்த சோதனையே கடைசி சோதனையாக இருக்கட்டும்,அனுகுண்டின் அழிவை பார்ப்பதற்கு  எங்கள் நகரங்களுக்கு வாருங்கள் என்று சொல்கிறார்கள்.  இந்தியாவிற்கு இதுவரை 3 கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

கோட்டை நகரமாக நிர்மாணிக்கப்பட்ட ஹிரோஷிமா, ஜப்பானின் பழமையான ஊர்களில் ஒன்று. தொழிலும் கல்வியும் செழித்த நகரமாக இருந்திருக்கிறது. அந்நகரின் தோற்றம் முதல் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் வரைபடங்கள், ஒளிப்படங்களாகக் கிழக்குக் கட்டிடத்தில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. குண்டு வெடிப்புக்குப் பிந்தைய ஹிரோஷிமாவின் வளர்ச்சியையும் இங்கே காணலாம்.

நடந்தது என்ன?
ஹிரோஷிமா அணுவெடிப்பு
நாள்: ஆகஸ்ட் 6, 1945
குண்டின் பெயர்: லிட்டில் பாய்
வெடிபொருள்: யுரேனியம்
பாதிக்கப்பட்ட பரப்பு: 10 சதுர கி.மீ. பரப்பில் இருந்த அனைத்து உயிர்களையும் துடைத்து அழித்தது. மக்கள், புல், பூண்டு உட்பட அனைத்தும் பஸ்பமாகின. நகரத்தின் 69 சதவீதக் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
பலியானவர்கள் எண்ணிக்கை: 1.45 லட்சம் பேர் (உடனடியாக 90,000 பேர்).

நாகசாகி அணுவெடிப்பு
நாள்: ஆகஸ்ட் 9, 1945
குண்டின் பெயர்: பேட் மேன்
வெடிபொருள்: புளூடோனியம்
பாதிக்கப்பட்ட பரப்பு: ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும்.
பலியானவர்கள் எண்ணிக்கை: 75,000 பேர் (40,000 பேர் உடனடியாக).
இரண்டு அணுகுண்டு வீச்சுகளால் உடனடியாகவும் காலப் போக்கிலும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,50,000 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக