புதன், செப்டம்பர் 03, 2014

ஃபுகுஷிமா குறிப்புகள்: ஒரு போராட்டத்தை நோக்கி வரலாற்று பயணம்- கோ.சுந்தர்ராஜன்

வருடந்தோறும் பனிப்பொழிவின் முதல் வாசனையை திருவிழாவாக கொண்டாடும் அழகிய, சிறுநகரம்தான் இதாதே. இதாதே நகரத்தை பொருத்தவரையில் பனிப்பொழிவு எப்போதும் புன்னகைகளை பரிசளிக்கும். பனிப்பொழிவு, வசந்தகாலத்தின் வரவேற்பு. மரப்பலகைகளில் சாக்பீஸ்களால் வரையப்பட்ட கோடுகள் சொல்கின்றன, ஒவ்வொரு வருடமும் பனிப்பொழிவு தரும் மகிழ்ச்சியை. “பனிப்பொழிவு தொடங்கும் நாளை இப்படி கோடு வரைந்து குறித்துக்கொள்வோம், பல விஷயங்களை திட்டமிட உதவும்” என்கிறார் கெனிச்சி ஹசேகவா.

தலைமுறை தலைமுறையாக பால் பண்ணை நடத்தி வருபவர் ஹசேகவா. இது பனிப்பொழிவு காலம். ஆனால் ஹசேகவாவிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. இப்போதெல்லாம் பனிப்பொழிவு அந்த மகிழ்ச்சி பற்றிய நினைவாக மட்டுமே எஞ்சியிருக்கிறது.

ஹசேகவாவின் சாக்பீஸ் குறிப்புகள் 2011ஓடு முடிகிறது. அந்த வருடம் மார்ச் மாதம்தான் ஃபுகுஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 160,000 பேர் இடம் பெயர்க்கப்பட்டார்கள். அந்த வருடத்திலிருந்து பனிப்பொழிவு உற்சாகத்தை கொண்டு வரவில்லை. அப்போதிலிருந்து இதாதேவில் விவசாயப்பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. ஹசேகவாவின் பால் பண்ணை வியாபாரமும் முடங்கிவிட்டது. தனது அழகிய சிறுநகரத்தில் வாழும் மற்றவர்களை போலவே இதையெல்லாம் மீண்டும் தொடங்குவது சாத்தியமா என்று மலைத்துப் போய் முடங்கியிருக்கிறார் ஹசேகவா.

 ஃபுகுஷிமாவில் பாதிக்கப்பட்ட பிறரைப் போலவே ஹசேகவாவின் வாழ்க்கையும் சிதறிப் போயிருக்கிறது. பால் பண்ணை அவருக்கு தொழில் மட்டுமல்ல. தலைமுறை தலைமுறையாக அது அவரது குடும்பத்தை ஒன்றிணைத்த பந்தம். ஃபுகுஷிமா விபத்திற்கு பிறகு அது அப்படி தொடராது என்று அவருக்கு தெரியும். பல வருடங்களாக அவர் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த 50 மாடுகளை அவர் தனது கைகளால் விஷம் வைத்து கொன்றார். “அவை எனக்கு குடும்பம் போல, ஆனால் வேறு வழியில்லை. கதிரியக்கத்தால் அவை பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றால் மற்றவருக்கும் ஆபத்து” சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்ணீர் வெடிக்கிறது அவரிடம்.

ஃபுகுஷிமா விபத்து அவருக்கு ஒரு புதிய தொழிலை சொல்லித் தந்திருக்கிறது. இதுவரை அவர் அறிந்திராத தொழில் அது. ஒரு கேமராவை கையில் ஏந்தியபடி அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு ஒளிப்படமும் அவருக்கும் அவருடைய அழகிய இதாதே நகருக்கும் இடையே இருந்த பந்தத்தை உயிர்க்கச் செய்யும் என்று அவர் நம்புகிறார். “என்னுடைய நகரத்துடன் எனக்கு இருக்கும் கடைசி பிணைப்பு இது. இந்த நகரில்தான் எனது தந்தையரும் மூதாதையரும் வாழ்ந்தார்கள். இங்குதான் நான் படித்தேன், விளையாடினேன், வாழ்ந்தேன். இறப்பேன் என்று நம்பினேன்.” அவர் பதிவு செய்த ஒளிப்படங்கள் சாக் பீஸ் குறிப்புகள் போல தெளிவானவையாக இல்லை. இதாதே நகரின் மனநிலையை பிரதிபலிப்பது போல ஒரு வலியை அவை வெளிப்படுத்துகின்றன. இருந்தாலும் அது மட்டுமே இதாதே நகருடனான தனது தொடர்பை பேணும் வழி என்று நம்புகிறார் ஹசேகவா. “நான் ஒரு விவசாயி, எனது நிலத்தை தொலைத்திருக்கிறேன். இந்த அழகிய நகரத்தை தொலைத்திருக்கிறேன். இந்த வலியை சொல்ல எந்த வார்த்தைகளும் இல்லை.”

கேமராவை மார்போடு அணைத்த படி கண்ணீரில் நனைகிறார் ஹசேகவா. கடந்த மூன்று வருடங்களாக தாதே நகரத்தில் தற்காலிக குடியிருப்பில் வாழ்கிறார் அவர். விபத்தில் அவரது குடும்பம் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை..

தொழில் மாறுவது என்பது, ஹசேகவாவிற்கு மட்டும் நடக்கவில்லை. முப்பது ஆண்டுகளாக இயற்கை விவசாயியாக இருந்தவர் டாட்சுகோ ஒகவரா. இப்போது கதிரியக்க வீச்சின் அளவு   குறிப்புகளை கொண்ட விவசாய பொருட்களை விற்கும் கடையை வைத்திருக்கிறார். மாதம் ஒரு முறை ஷியாடகே* காளான் கதையை வளர்ந்தவர்களுக்கு சொல்லும் பொம்மலாட்டத்தை  நடத்துகிறார். சுமார் 35 வருடங்களாக ஷியாடகே காளான் விவசாயிகளாக இருந்த அவரது நண்பர்களின் கண்ணீர் கதையை சொல்லும் பொம்மலாட்டம் அது. “ஃபுகுஷிமாவால் அவர்கள் நான்கு டன் ஷியாடகே காளான்களை வீணடிக்க வேண்டியிருந்தது. கதிரியக்க குப்பை என்று குறிக்கப்பட்ட 60,000 காளான்கள்தான் இப்போது அவர்களிடம் எஞ்சியிருக்கின்றன. அவர்களின் கதையை சொல்லதான் நான் இந்த பொம்மலாட்டத்தை உருவாக்கினேன். என்னுடைய இந்த பொம்மலாட்டம் இன்னமும் நிறைவு பெறவில்லை, இது தொடர வேண்டும், முடிந்தவரை எல்லோருக்கும் இந்த செய்தி போய் சேர வேண்டும் என்றுதான் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.”

ஒகவராவைப் பொறுத்தவரையில் மறப்பது என்பது அவரை மிகவும் அச்சுறுத்துகிறது. “அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் என்று எனக்கு கவலையாக இருக்கிறது. அது மிகவும் அச்சுறுத்தக்கூடியது. அவர்கள் மறந்துவிட்டால், அந்த விபத்து மீண்டும் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றுதானே பொருள்” என்று கேட்கிறார், கண்ணீர்த்துளியை துடைத்தபடி.  

”கடந்து போனவற்றை மறக்கிறவர்கள், அதை மீண்டும் மீண்டும் நிகழ்த்துமாறு கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று அமெரிக்க தத்துவவியலாளார் ஜார்ஜ் சண்டியானா சொன்னது எனக்கு அப்போது நினைவு வந்தது. ஒகவரா பயப்படுவது போல ஃபுகுஷிமாவில் மட்டுமல்ல, எங்கு வேண்டுமானாலும் அது நிகழலாம் என்பதுதான் உண்மை.

 ஃபுகுஷிமா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் வாய்ப்போடு க்ரீன் பீஸ் இந்தியா அமைப்பு என்னை தொடர்பு கொண்ட போது, அந்த வாய்ப்பை தவறவிட கூடாது என்பதுதான் எனது முக்கியமான எண்ணமாக இருந்தது. இடிந்தகரை மக்களுக்கு ஃபுகுஷிமாவில் நடந்த விபத்துதான் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஃபுகுஷிமாவில் விபத்து நடக்கும் வரை, அவர்களது ஊரில் இருக்கும் அணு உலைகளால் எந்த பிரச்னையும் வரும் என்று அவர்கள் நம்பவில்லை. தொலைகாட்சியில் ஃபுகுஷிமா விபத்தின் கோரக் காட்சிகளை பார்த்து போராட வெளியேறியவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை. சாதாரண பெண்களையும் மீனவர்களையும் ஒரு தீவிரமான வீரியமான போராட்டத்திற்கு தலைமையேற்க வைத்ததன் பின்னணியில் ஃபுகுஷிமா விபத்து இருந்திருக்கிறது. ஃபுகுஷிமா விபத்தின் காரணமாகவே, மிகப்பெரிய அதிகாரத்தை எதிர்க்கும் உறுதி அவர்களுக்கு வந்தது.

எனது ஜப்பான் பயணம் ஒரு நல்லெண்ண அடிப்படையிலேயே தொடங்கியது. விபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதிக்கு செல்வதால் விசா தொகையை செலுத்த வேண்டாம் என்று சொன்னது ஜப்பான் தூதரகம். அப்போது ஜப்பானிற்கு அதன் மக்கள் மீதிருந்த கரிசனம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அந்த வியப்பு ஜப்பான் சென்றவுடன் காணாமல் போனது. தங்களை அரசாங்கம் எப்படி கைவிட்டதென்று ஃபுகுஷிமாவை சேர்ந்த ஒவ்வொரு ஜப்பான் குடிமகனும் குடிமகளும் சொன்ன போது அரசாங்கங்கள் மக்களுக்கானவை அல்ல என்பது மீண்டும் உறுதியானது. ஃபுகுஷிமா அணு உலை தொடங்கப்படவிருந்த காலகட்டத்திலிருந்தே அதை குறித்த அவநம்பிக்கைகளோடு இருந்தவர் அணு உலை இருக்கும் பகுதியான ஃபுதாபா நகரத்தின் நகரதந்தை காத்சுதகா இடோகாவா.  

அணு உலை தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே அவர் ஜப்பான் மத்திய அரசிடமும் டோக்கியோ மின்சார கம்பனியிடமும் (டெப்கோ) ஒரே ஒரு கேள்வியைதான் மீண்டும் மீண்டும் கேட்டார். “இந்த அணு உலைகளில் விபத்து ஏற்படாது என்று நீங்கள் உறுதியாக உத்திரவாதம் தர முடியுமா?” ஒரே பதிலைதான் அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். “நிச்சயமாக.”

"ஃபுகுஷிமா மாநிலம், ஃபுதாபா நகரம் மற்றும் டெப்கோவிற்கு இடையில் அணு உலைகளில் விபத்து நிகழாது" என்று ஒப்பந்தமே கையெழுத்தானதாக இடோகாவா சொல்கிறார்.  ஃபுகுஷிமா விபத்து நடப்பதற்கு முன்பே அரசாங்கமும் டெப்கோவும் எங்களிடம் பொய்தான் சொல்கிறது என்று எனக்கு தெரியும் என்கிறார் இடோகாவா.


தனது வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த நாளை மிகத்துல்லியமாக நினைவுக்கூறுகிறார் இடோகாவா. “நகர மையத்தின் நான்காவது மாடியிலுள்ள ஜன்னலிலிருந்து என்னால் கடலை பார்க்க முடிந்தது. அலைகளில் வீடுகளும் மரங்களும் மிதந்து கொண்டிருந்தன. அங்கு இருக்க கூடாத பொருட்கள் இருந்தன, இருக்க வேண்டிய பொருட்கள் காணாமல் போயிருந்தன. அது போல ஒரு காட்சியை நான் அதற்கு முன்பு பார்த்ததில்லை.”

ஃபுகுஷிமாவில் தொடர்ந்து நிறைய பேரிடம் உரையாடும், அவர்களது அனுபவங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது மினாகோ சுகனோ என்கிற பெண்ணின் வார்த்தைகள்தாம். மூன்று குழந்தைகளின் தாய் அவர். இப்போது அணு உலை எதிர்ப்பு போராளி. ”எனக்கு மூன்று அழகான குழந்தைகள் இருக்கிறார்கள். செய்வதற்கு அழகான வேலைகள் இருக்கின்றன. ஆனால் அணு உலைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். தினமும் இணையத்தில் அணு உலை பற்றி எதையாவது வாசித்துக்கொண்டிருக்கிறேன். உலகிலுள்ள அணு உலை எதிர்ப்பு போராளிகளை தொடர்பு கொண்டு அவர்களோடு இணைந்து பணி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்” என்கிறார் சுகனோ. “உங்களது முதல்வர் ஒரு பெண் தானே? கதிரியக்க நிலத்தில் வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை நிச்சயம் அவர் புரிந்து கொள்வார். நான் வேண்டுமானால் அந்த கொடுமையின் அனுபவத்தைச் சொல்லி அவருக்கு ஒரு கடிதம் எழுதட்டுமா?” என்று ஆர்வமாக கேட்கும் சுகனோவிடம் சொல்வதற்கு ஒரு நம்பிக்கையான வார்த்தையும் என்னிடம் இல்லை.  

அவரது ஊரில் விபத்து நிகழ்ந்த காலகட்டத்திலிருந்து இப்போது வரையில் பார்க்கும் எல்லோரிடமும் கதிரியக்கம் தனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்றும் அது எவ்வளவு ஆபத்தானது என்றும் அவர் சொல்ல தயங்குவதில்லை. “அவர்கள் பிறந்து வளர்ந்த நிலத்திலிருந்து எனது குழந்தைகளை நான் பிடுங்கி வர வேண்டியிருந்தது. எனது மூத்த மகனுக்கு அந்த வீட்டிலிருந்து வர விருப்பமே இல்லை. இந்த இடமும் ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் எனது சொந்த வீட்டை விட இங்கு கதிரியக்க அபாயம் கொஞ்சம் குறைவு” என்று பேசிக்கொண்டே வீட்டிற்குள் துணிகளை காயப்போடுகிறார் சுகனோ. “வெளியே உலர்த்துவது ஆபத்து, கதிரியக்க அளவு வெளியே மிக அதிகம்.”

ஃபுகுஷிமாவில் நுழந்த முதல்நாளே கதிரியக்கம் மக்களை எவ்வளவு பயமுறுத்தி வைத்திருக்கிறது என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஃபுகுஷிமாவில் நுழந்தவுடன் கையில் இரண்டு கருவிகளை திணிக்கிறார்கள். அவற்றை உடலில் பொருத்திக்கொள்ளும் படி அறிவுறுத்துகிறார்கள். தொடர்ந்து நமது உடலில் கதிரியக்க அளவை கண்காணிக்கும் கருவிகள் அவை. அதே போல தங்கும் விடுதியின் அறைக்குள் நுழைந்தவுடன் அறையை இரண்டாக பிரித்துவிட சொல்கிறார்கள் அமைப்பாளர்கள். வெளியிலிருந்து கொண்டு வந்த கதிர்வீச்சுள்ள பொருட்களை முதல் பாதியிலேயே விட்டுவிட வேண்டும், அறையின் இன்னொரு பாதியை கதிரியக்கம் குறைவாக உள்ள பகுதியாக வைத்திருக்க வேண்டும்.

சுகனோவின் வீட்டில் இது போல பல நிபந்தனைகளுடன்தான் அவர் வாழ்க்கையை கழிக்க வேண்டியிருக்கிறது.

சுகனோவிடம் பேசும் போது எல்லாம் எனக்கு சுந்தரி அக்காவின் நினைவு மேலோங்கிக்கொண்டேதானிருந்தது. வெறும் எட்டாவது மட்டுமே படித்த,  குடும்பத்தலைவியாக மட்டுமே இருந்த சுந்தரி அக்காவை ஃபுகுஷிமாதானே போராட்ட தலைவியாக மாற்றியது? அவரும் சுகனோ போல ஒரு தாய். சுகனோ போலவே தனது குழந்தைகளுக்காகவும் வருங்கால தலைமுறையினருக்காகவும் போராட வீதிக்கு வந்திருக்கும் ஒரு பெண்.

ஜப்பானில் என்னை வியப்பில் ஆழ்த்திய, மனநிறைவை அளித்த ஒரு கணம் வாய்த்தது. வாரந்தோறும் ஜப்பானில் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடக்கும். வெள்ளிகிழமை தோறும் நடக்கும் அந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3000 பேர் கலந்து கொண்டு ஆடல், பாடல், கோஷம் எழுப்புதல்  என்று பல வடிவங்களில் அணு உலை எதிர்ப்பை பதிவு செய்வார்கள். நான் சென்ற வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்திய பதாகைகளில் இடிந்தகரை போராட்ட புகைப்படங்களும் இருந்தன. ஃபுகுஷிமாவிலிருந்து பாடம் பெற்றவர்கள் நாம். இன்று நமது போராட்டத்தை அவர்கள் முன்னுதாரணமாக ஏந்தி நிற்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. இடிந்தகரையில் உள்ள தோழர்களிடம் ஃபுகுஷிமாவைப் பற்றி சொல்லும் போது அந்த பயணத்தில் அவர்களும் ஒரு பகுதியாக இருந்ததை பகிர்ந்து கொண்டேன். அதனாலேயே எப்போதும் மறக்க முடியாத பயணம் அது.

சுந்தரி அக்காவிலிருந்து சுகனோ வரையில், பெண்கள் தான் உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள் என்று எனக்கு உணர்த்திய பயணம். வேறு எதற்காக இல்லாவிட்டாலும் எனது குழந்தைகளின் அமைதியான எதிர்காலத்திற்காக இந்த போராட்டத்தை தொடர வேண்டும் என்று நினைவுறுத்திய பயணம் அது.  
·         
குறிப்பு: ஷியாடகே காளான் என்பது ஜப்பானில் மிகவும் பாரம்பரியமான ஒரு காளான் வகை.


வியாழன், ஆகஸ்ட் 21, 2014

களவாடப்படும் மலைவளம் -சுப. உதயகுமாரன்

“காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்றான் பாரதி. நமது சாதியிலும், கூட்டத்திலும் பலரும் காணாமற்போய்க் கொண்டிருப்பதைக் கவனித்தீர்களா?

அண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சாலைவழியாகப் பயணித்தபோது பல இடங்களில், குன்றுகளும் மலைகளும் தரைமட்டமாக்கப் பட்டிருப்பதை, அல் லது உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன். ஆங்காங்கே கனரக இயந்திரங்கள் மலைகளின்மீது மொய்த்துக் கொண்டிருப்பதையும், சாரை சாரையாக லாரிகள் கல், ஜல்லி, மணல் எனக் கடத்திக் கொண்டிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. எப்படி இந்தப் பகல்கொள்ளை இவ்வளவு பட்டவர்த்தனமாக நடைபெறுகிறது என்று விசாரித்தபோது, அரசுகளின் அனுமதியோடும், ஆசீர்வாதத் தோடும் தான் இந்த மலையழிப்பு நடக்கிறது என்று சொன்னார்கள்.

தங்க நாற்கர சாலை தரையெங்கும் வழிப்பாதை என்று முடிவெடுத்த அரசுகள், சாலை ஒப்பந்தக்காரர்களோடு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டிருக்கிறார்களாம். அதாவது அருகேயுள்ள குன்றுகளை, மலைகளை அடித்து உடைத்து சாலைப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அது. ஊரை அடித்து உலையில் போடும் கூட்டம், உத்தரவு கிடைத்த பின்னர் ஒரு கணம் சும்மா இருப்பார்களா? ஒரு கல்லையாவது விட்டுவைப்பார்களா? அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும், மலையழிப்பு கனஜோராக இரவும் பகலும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. ‘வளர்ச்சி’ பேய் பிடித்தாட்டும் நிலையில், பலருக்கும் மலையழிப்பு வாழ்வளிக்கும் வரப்பிரசாதமாகத் தோற்றமளிக்கிறது.

ஊரெங்குமுள்ள மலைகளை அரசுகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் கபளீகரம் செய்துகொண்டிருக்க, ஆங்காங்கிருக்கும் சில சிறப்பு மலைகளை, குன்றுகளை தனியார் நிறுவனங்கள் விழுங்கத் துடிக்கின்றன. திருவண்ணாமலை நகரின் அருகேயுள்ள இரும்புத்தாது நிரம்பிய கவுத்தி மலை, வேடியப்பன் மலை இரண்டையும் ஜிண்டால் நிறுவனம் தமிழக அரசின் உதவியுடன் விழுங்கி ஏப்பம் விட ஆவன செய்து வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அதிமுக அரசு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர் ஆட்சிபுரிந்த திமுக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்தது. மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் அமைத்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும், 2008ஆம் ஆண்டு இத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மற்றும் மத்திய அரசின் உதவியுடன் இத்திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட ஜிண்டால் நிறுவனம் அனுமதி பெற்றிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 325 ஹெக்டேர் வனத்துறை நிலமும், 26,918 ஏக்கர் விளைநிலமும் கையகப்படுத்தப்படும். இந்தப் பகுதியிலிருந்து 9.30 கோடி டன் இரும்புத்தாது வெட்டியெடுக்க முடியும். வெறும் 180 பேருக்கு வேலை கிடைக்கும். ஏறத்தாழ 51 கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தம் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்களும், அரிய மூலிகைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். மலையைத் தோண்டும் அதிர்வுகளால், தூசியால், சத்தத்தால், பத்து கி.மீ. சுற்றளவிலுள்ள கிராமங்கள், மக்கள் பாதிக்கப்படுவர். ஆண்டவன் அண்ணாமலையாரின் பக்தர்களின் கிரிவலப் பாதைகூடப் பாதிப்படையும்.

நண்பர்களும் நானும் இந்த மலைகளைக் கடந்த ஜூன் மாதம் நேரடியாகச் சென்று பார்வையிட்டோம். உள்ளூர்த் தோழர்களும் உடன் வந்தனர். எங்கள் வாகனத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்ட அந்தப் பகுதி கிராமப் பெண்கள், நாங்கள் யார், என்ன வேண்டும் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். எங்களைப் பற்றிச் சொன்னதும், தங்கள் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர். அனைவருமாக வேடியப்பன் மலைமீது ஏறினோம். அங்கே அமைந்திருக்கும் அருள்மிகு வேடியப்பன் திருக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாம். மனதில் ஒன்றை நினைத்து வேண்டிக்கொண்டு இங்கே வந்து சென்றால், அந்தக் காரியம் நிச்சயம் கைகூடும் என்று ஆண்களும், பெண்களும் அடித்துச் சொன்னார்கள். கோவிலருகேயுள்ள சுனைநீரைக் குடித்தால் தீராத நோயெல்லாம் தீரும், நலம் கிடைக்கும் என்று மாசி எனும் பூசாரி சொன்னார். தண்ணீரைக் குடித்துப் பார்த்தபோது, அதில் இரும்புச்சத்து நிறைந்திருப்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.

இந்தச் சுரங்கத் தொழிலால் உள்ளூர்ச் சந்தை கொழிக்கும் என்றும், உள்ளூர்த் தொழிற்சாலைகளால் இந்தப் பகுதியின் கட்டமைப்பு வசதிகள் பெருகும் என்றும் ஜிண்டால் நிறுவனம் ஆசை காட்டுகிறது. உள்ளூர் மக்களின் பொருளாதாரமும், நாட்டின் நலன்களும் உயரும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் இருப்பதையும் இழந்துவிட்டு ஏதிலிகளாகி விடுவர் இம்மக்கள். கொள்ளை லாபம் பெறும் ஜிண்டால் நிறுவனத்தின் வருமானத்தில் ஒரே ஒரு சதவீதம் பணம் மட்டும் தமிழக அரசுக்கு மூன்று ஆண்டுகளுக்குக் கிடைக்குமாம்.

சந்தைப் பொருளாதார ஏற்பாட்டில் மலைகளும் வியாபாரப் பொருட்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. இவையனைத்துமே மாற்றியமைக்கப்படத்தக்கவை என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. கவுத்தி மலை, வேடியப்பன் மலை போன்றவற்றை நாம் கொண்டு வந்தோமா அல்லது கொண்டுதான் போகப் போகிறோமா எனும் ரீதியில்தான் ஆளும் வர்க்கமும், ஆதிக்க சக்திகளும் சிந்திக்கின்றன, செயல்படுகின்றன. இம்மலைகளின் வெளிப்புறத் தன்மைகளை, நன்மைகளை, சுற்றுப்புற மனித நல்வாழ்விற்கான பங்களிப்புகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இம்மலைகளுக்குள் புதைந்துகிடக்கும் கனிம வளங்களை அள்ளி எடுப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதும்தான் வளர்ச்சி என்று கொள்ளப்படும்போது, மலையழிப்பதே வாழ்வளிப்பது என்றாகி விடுகிறது.

ஆனால், கவுத்தி மலை, வேடியப்பன் மலைப் பகுதி மக்களோ மலையழிப்பது வாழ்வழிப்பதே எனக்கொண்டு நிராயுதபாணிகளாய் அறவழியில் பன்னாட்டு மலைவிழுங்கி மகாதேவன்களை எதிர்த்துப் போரிட்டு வருகிறார்கள். குறிப்பாக அப்பகுதிப் பெண்கள் மிகத் தெளிவாகச் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். இவர்கள் போன்ற தமிழ்ப் பெண்களால்தான் நம் மலைகளும், கடல்களும், நிலமும், நீரும், காற்றும் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.

(கட்டுரையாளர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்)

நன்றி: காலச்சுவடு, ஆகஸ்ட் 2014

சனி, ஆகஸ்ட் 16, 2014

அம்பரப்பர் மலையில் அணுசக்திக் கழிப்பறை - சுப. உதயகுமாரன்

கடந்த 2014 பிப்ருவரி மாதத் துவக்கத்தில் நமது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஜம்முவில் நடந்த ‘அரவணைத்துக் கொள்ளும் வளர்ச்சிக்கான அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள்’ (Innovations in Science and Technology for Inclusive Development) எனும் தலைப்பிலான ‘இந்திய அறிவியல் காங்கிரசு’ நிகழ்வைத் துவக்கிவைத்தார். அப்போது தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் அமைக்கப்படவிருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு ரூ. 1450 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார்.

இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கும்போது, அத்திட்டம் கொண்டுவரப் போகும் நலன்களைப் பற்றியெல்லாம் இங்கே தமிழகத்துக்கு வந்து மக்களிடம் விளக்கிப் பேசி அறிவித்திருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். தமிழர்கள் தலையில் கட்டும் திட்டத்திற்காகக் காஷ்மீரத்தில் காசு அறிவிப்பது இந்திய ஒருமைப்பாட்டின் இனிய வெளிப்பாடு. அரவணைத்துக் கொள்ளும் வளர்ச்சி (Inclusive Development) அப்படித்தான் வேலை செய்யும்.

அறிவியல், வளர்ச்சிக்கிடையேயான தொடர்புகள் பற்றிச் சிந்தித்து, நியூட்ரினோ திட்டம் எந்த மாதிரியான அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்களை, வளர்ச்சியைப் பாமரத் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்குத் தரும் என்று நீங்கள் தொடர்ந்து அடுத்த கேள்வி கேட்டால், உங்களுடைய தேசபக்தியைச் சந்தேகிக்க வேண்டிவரும். எந்தத் தொண்டு நிறுவனம் உங்களை இப்படிக் கேள்வி கேட்கத் தூண்டுகிறது, எந்த நாடு அந்தத் தொண்டு நிறுவனத்துக்கும் உங்களுக்கும் காசு அனுப்புகிறது என்றெல்லாம் இந்திய உளவுத் துறை ஆராய வேண்டியிருக்கும்.

இந்த இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் (Indian Neutrino Observatory - INO) வான்வெளியில் சுற்றித் திரியும் நியூட்ரினோ துகள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அமைக்கப்படுகிறதாம். புவியீர்ப்புவிசை அலை பரிசோதனையில் (Gravitational Wave Experiment) இது உலகிலேயே மூன்றாவது மையமாக அமையுமாம். 1954ஆம் ஆண்டு ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட அணு ஆய்வு செய்யும் ஐரோப்பியக் குழுவான CERN (Conseil Européen pour la Recherche Nucléaire) அமைப்பில் நமக்குத் துணை உறுப்பினர் (முழு உறுப்பினர்கூட அல்ல) பதவி கிடைக்குமாம்.

சரி, இந்த அபார அறிவியல் திட்டத்தால் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு எந்த வகையில், என்ன லாபம் என்று தயவு செய்து சிந்தியுங்கள். இந்தியாவில் அறுபது கோடி மக்களுக்குக் கழிப்பறை கிடையாது. நாட்டின் கழிவுகளை மேலாண்மை செய்யும் வழிமுறை கிடையாது. நாற்பது சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி நோஞ்சான்களாகப் பிறக்கிறார்கள். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி நாம் கட்டிக்கொண்டிருக்கும் வரிப்பணத்தைச் செலவு செய்யும் இந்த முறை சரியானதுதானா? அனைத்து இந்தியருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்வரை, இந்தக் காலனி மனப்பான்மையோடு நடத்தப்படும் ஆழ்ந்த அறிவியல் ஆய்வுகள் காத்திருக்க முடியாதா?

இந்தத் திட்டம் பற்றிப் பல வருடங்களாக எழுதிக் கொண்டும் பேசிக்கொண்டுமிருக்கும் நான் அண்மையில் சில தோழர்களுடன் பொட்டிப்புரம் பகுதியிலுள்ள அம்பரப்பர் மலைக்குச் சென்று நியூட்ரினோ திட்டம் அமைக்கப்படும் இடத்தைப் பார்த்தேன். மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான அந்த மலை ஒரு ராட்சச சிவலிங்கம் போன்று ஓங்கி நிற்கிறது. மலை உச்சியில் மூன்று வெள்ளைக் கோடுகளைக் கிடை மட்டத்தில் வரைந்து போட்டிருந்தீர்கள் என்றால் சிவ லிங்கம் என்று சொல்லி இந்துத்துவ சக்திகளின் உதவியோடு மலையைக் காப்பாற்றியிருக்கலாமே என்றேன்.

நீண்ட தூரத்துக்கு அந்த மலையைச் சுற்றி வேலி அமைத்திருக்கிறார்கள். அருகே ஐம்பது அடி விட்டமும் ஆழமுமுள்ள ஒரு வட்ட வடிவிலான ராட்சச நீர்த்தொட்டியும் கட்டியிருக்கிறார்கள். குழாய் பதித்து முல்லைப் பெரியாரிலிருந்து தண்ணீரும் கொண்டுவந்து விட்டார்கள். விரைவில் கட்டுமானம் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

அந்த மலையில் சுமார் 2.5 கி.மீ. நீளமுள்ள 16,235 ச.மீ. பரப்பளவுள்ள, 3,18,181 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு குகைகள் உருவாக்கப்படுமாம். அங்கிருந்து எட்டு லட்சம் டன் எடையுள்ள பாறைகள் அகற்றப்படுமாம். குகை ஆய்வகத்தினுள் ஒரு லட்சம் டன் இரும்பு, 35,000 டன் சிமென்ட், மணல், உலோகங்களுடன் கட்டுமானம் நடக்குமாம். இந்தப் பகுதி கிராமங்கள் என்ன கதியாகும்? மலைகளும் காடுகளும் பல்வகை உயிரினங்களும் பழங்குடி மக்களும் அரியவகை மரங்களும் மூலிகை களுமாகப் பல்லுயிரியத்தின் அடிப்படையாக இருக்கும் இந்தப் பகுதி குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகப் போகிறது.

மலைக்குப் போய்விட்டுத் திரும்பும் வழியில் தே.புதுக்கோட்டை என்கிற கிராமத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்தோம். ஏராளமானோர் கூடித்தங்கள் மனக்குமுறலைத் தெரிவித்தனர். என்ன செய்வது என்றறியாது திகைத்து நிற்கின்றனர். திட்டத்துக்கு எதிராகப் போராடினால், “வழக்குப் போடுவோம், உள்ளே தள்ளிவிடுவோம்” என்று காவல்துறையினர் மிரட்டுவதாகச் சொன்னார்கள். அந்தக் கிராமத்தை விட்டு நாங்கள் வெளியே வரும்போது, ஒரு வண்டி நிறையக் காவல்துறையினர் ஊருக்குள் போவதைப் பார்த்தோம். பிறகு சோழநாயக்கன்பட்டி, தேவாரம் போன்ற கிராம மக்களிடமும் சின்னமனூர் கிராம இளைஞர்களிடமும் பேசினோம்.

“நியூட்ரினோ திட்டத்தை நீங்கள் நடத்திக் கொள்ளுங்கள், ஆனால் கேரளா பக்கமிருந்து மலைக்கு வாருங்கள்” என்றக் கோரிக்கையை முன்னிறுத்துங்கள் என அம்மக்களைக் கேட்டுக்கொண்டேன். சிரித்தார்கள், சிந்தித்தபடியே! இந்த அணுச் சுரங்கத்திலிருந்து 36 கி.மீ. தொலைவில் இடுக்கி அணையும் 49 கி.மீ. தொலைவில் முல்லைப் பெரியார் அணையும் உள்ளன. நியூட்ரினோ திட்டத்தால் இந்த அணைகளுக்கும் அந்தப் பகுதியில் குடியிருக்கும் கேரள மக்களுக்கும் ஆபத்து வரும் என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நிச்சயமாகப் பிற கேரளத் தலைவர்களும் அவரைப் போலவேதான் சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்.

அச்சுதானந்தன் அவர்களும் இன்னும் பலரும் வேறொரு ஆபத்தையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆய்வகம், அக்ரகாரம் என்றெல்லாம் புளுகிவிட்டு அல்லது கொஞ்சக் காலத்தை ஓட்டிவிட்டு, இந்தியாவெங்கும் உருவாகப்போகிற அணுக் கழிவுகளை இங்கே கொண்டுவந்து கொட்டப் போகிறார்கள் என்ற அச்சம்தான் அது. நியூட்ரினோ திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு விண்ணப்பித்தபோது “அணு உலை/அணு உலை எரிபொருள்/அணு உலைக் கழிவுகள்” என்ற வகையில்தான் விண்ணப்பித்திருக்கின்றனர். மே 6, 2013 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அணுஉலைக் கழிவுகளை எங்கேப் புதைப்பது (Deep Geological Repository) என்பதை இந்திய அணுசக்திக் கழகம் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு நேர் எதிராக அமைந்துள்ள வடபழஞ்சி கிராமத்தில் “அணுக்கழிவு ஆய்வு மையம்” ஒன்றை நிறுவும் ஆயத்தப் பணிகளைத் துவக்கியிருக்கிறார்கள். இப்போது புரிகிறதா தேனி மாவட்டம் தேவாரத்தில் வரப் போவது என்னவென்று?

தேவாரம் ஊரைச் சார்ந்த தனராசு அவர்கள் வீட்டில் ஒரு திட்டமிடல் கூட்டம் நடத்தினோம். சுமார் நாற்பது பேர் சேர்ந்து “முல்லைப் பெரியார், நியூட்ரினோ, பதினெட்டாம் கால்வாய் போராட்டக் குழு” என்ற பெயரில் ஒரு குழுவை உள்ளூர் தோழர்கள் தோற்றுவித்தனர். கூட்டம் நடந்த வீட்டைச் சுற்றி ஏராளமான உளவுத்துறை அதிகாரிகள் நின்றனர். நாங்கள் தேனி நகருக்குத் திரும்பும்போதும் பின்தொடர்ந்து வந்து இரவு முழுவதும் எங்களைக் கண்காணித்தனர். மறுநாள் காலை மதுரைக்குத் திரும்பும்போது ஒரு வாகனத்தில் காவல்துறை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர். எங்களை ஒரு தீவிரவாதக் கூட்டம்போலப் பார்ப்பதற்கு, நடத்துவதற்குப் பதிலாகத் தமிழ் மக்களின் நலனைச் சற்றேனும் கவனத்தில் கொள்ளக் கூடாதா என்று தலையில் அடித்துக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது.

-சுப. உதயகுமாரன்

நன்றி: காலச்சுவடு, ஜூலை 2014புதன், ஆகஸ்ட் 06, 2014

அழிவின் அருங்காட்சியகம்

எல்லாவற்றையுமே மறந்துவிடலாம்
ஆனால்
உன் குழந்தைகளை ஒளித்து வைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைந்த
அந்த பின்மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியைப் பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஒளிந்தபடி காத்திருந்தபோது
பிடுங்கி எறிபட்ட பெண்ணே,
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க?
-    சேரன்


சில மாதங்களுக்கு முன்பு ஹிரோஷிமா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அழிவின் பெருநகரமாய் கற்பனை செய்து வைத்திருந்த ஹிரோஷிமாவில் நம்ப முடியாத அளவிற்கு மாற்றங்கள். ஜப்பானின் அபரிதமான வளர்ச்சி ஹிரோஷிமாவிலும் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. உலகின் முதல் அணு குண்டு வீசப்பட்ட நகரமாய் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஹிரோஷிமா, இன்று அந்த அழிவின் தடங்கள் எதையும் சுமந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் வரலாற்றிலிருந்து கற்ற பாடத்தை  எளிதில் கடக்கவோ, மறக்கவோ ஹிரோஷிமா மக்கள் தயாரில்லை.


ஹிரோஷிமா நகரில் நிறுவப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தைப் பார்க்கும்போது, “வரலாற்றின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுப்பவர்கள், அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வார்கள்” என்று அறிஞர் ஜார்ஜ் சாந்தயானா சொன்னதை அந்த நகரத்து மக்கள் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றியது. வரலாறு தங்களுக்கு இழைத்த அநீதிகளிலிருந்து ஹிரோஷிமா மக்கள் கற்றுக்கொண்ட பாடமாய், அவர்கள் உலகிற்கு சொல்ல விரும்பும் செய்தியாய் எழுந்து நிற்கிறது ஹிரோஷிமா அருங்காட்சியகம்.

ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியம் என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் ஆகஸ்ட் 1955ல் – அணுகுண்டு வீசப்பட்டு பத்து வருடங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டது. ஹிரோஷிமா குண்டு வெடிப்பின் தடங்களை, அது குறித்த வரலாற்று பதிவுகளை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.  சேகுவேரா, போப், அன்னை தெரசா தொடங்கி மானுடத்தை நேசிக்கும் பல தலைவர்களும் இங்கு அமைதியின் வலிமையான செய்தியை பரப்ப வருகை தந்திருக்கிறார்கள்.

அருங்காட்சியகத்தை ஒட்டி செயல்படும் ஹிரோஷிமா அமைதி பூங்கா அணு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றி பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அமைதிப்பூங்காவின் ஒரு பகுதியாக இருக்கிறது அணு குண்டு மாடம். குண்டு வெடிப்பின் போது தரைமட்டமாகாமல் தப்பித்த ஒரே கட்டடம் அது. போரின் குரூரங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அதை அப்படியே விட்டுவிடுவது என்று முடிவு செய்திருக்கிறது ஹிரோஷிமா நிர்வாகம். உலகிற்கு நாங்கள் சொல்லும் அமைதியின் செய்தி என்று அணு குண்டு மாடத்தை சொல்கிறார்கள் அந்த மக்கள். 1996ல் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய உலக நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது அணுகுண்டு மாடம். இங்கிருந்து ஒரு 200 அடி தொலைவில் இருக்கிறது அருங்காட்சியகம்.

கிழக்கு கட்டடம், பிரதான கட்டடம் என்று 1994ல் விரிவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் கிழக்கு கட்டடத்தில் குண்டுவெடிப்புக்கு முன்பும் பின்பும் ஹிரோஷிமாவின் வரலாற்றை அறியலாம். பிரதான கட்டடத்தில் குண்டு வெடிப்பை புகைப்படங்கள் வாயிலாகவும் குண்டுவெடிப்பில் மிச்சமிருந்த பொருட்களின் வாயிலாகவும் பார்க்கலாம். அருங்காட்சியகத்தை நிறுவியதன் நோக்கமே அணுகுண்டுக்கு எதிரான தரவுகளை பரப்ப வேண்டும் என்பதும், உலக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான்.

இதனைப் பார்க்கும்போது, மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தும்கூட அமைதியின் பக்கம் நிற்கும் ஜப்பான் மக்கள் மீதான மரியாதை அதிகமாகிறது.

ஒரே ஒரு குண்டுவீச்சால் தரைமட்டமாக்கப்படுவதற்கு முன்பு எவ்வளவு வளம் நிறைந்த நகரமாக ஹிரோஷிமா இருந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அணுகுண்டு மானுடத்துக்கு எதிரான கண்டுபிடிப்பு என்பது மேலும் உறுதியாகிறது. கோட்டை நகரமாக நிர்மாணிக்கப்பட்ட ஹிரோஷிமா ஜப்பானின் பழமையான இடங்களில் ஒன்று. தொழிலும் கல்வியும் செழித்த நகரமாக இருந்திருக்கிறது ஹிரோஷிமா. அந்நகரின் தோற்றம் முதல் அதன் வளர்ச்சி வரை வரைபடங்கள் மூலமாகவும் புகைப்படங்கள் மூலமாகவும் கிழக்குக் கட்டடத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. குண்டு வெடிப்பிற்கு பிந்தைய ஹிரோஷிமாவின் வளர்ச்சியையும் இந்த பகுதியில் காணலாம்.

ஆனால் மானுடம் மீதான நம்பிகையை அசைத்துப் பார்க்கும் ஆவணங்களை கொண்டிருப்பது பிரதான கட்டடம்தான்.

தட்டாம்பூச்சியை பிடித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளி சிறுவன் மீது, இறந்தாலும் ஒன்றாகவே இறக்க வேண்டும் என்று குழந்தைகளை பிரியாது சுற்றிக்கொண்டிருந்த தாய் மீது, செடிக்கு நீருற்றும் தாத்தாவை பார்த்துக்கொண்டே தோட்டத்தில் விளையாடிய பேரக் குழந்தை மீது, மிட்டாய் வாங்க அம்மா காசு தந்த உற்சாகத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய ஒரு குழந்தை மீது விழுந்திருக்கிறது அந்த அணுகுண்டு. லட்சக்கணக்கில் மக்களைக் காவுவாங்கிய அந்த அணு குண்டு ஏற்படுத்திய அழிவின் சாட்சியங்களாய் சுமார் 20,000 பொருட்களை கொண்டிருக்கிறது அருங்காட்சியகம். இறந்தவரின் புகைப்படங்கள், எரிந்த நிலையில் துடித்துக்கொண்டிருக்கும் மக்களின் புகைப்படங்கள், ஆயிரக்கணக்கில் புதைக்கப்ப்பட்ட சமாதிகளின் புகைப்படங்களைத் தாண்டி, போரின் கருணையின்மையை, அணு குண்டின் கோர முகத்தை ஏந்திக்கொண்டிருப்பது அந்த பொருட்கள்தான்.

போருக்கு அனுப்பபட்ட தந்தையிடம் காட்டவென்று குண்டுவெடிப்பில் இறந்த மகனின் நகங்களையும் கொஞ்சம் தோலையையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் ஒரு தாய். தாகம் தாங்காமல் விரல்களிலிருந்து வழிந்த சீழ் நீரை குடித்த அந்த மகன் குண்டு வெடிப்பிற்கு அடுத்த நாள் இறந்துவிட்டதாக அருங்காட்சியகத்தின் குறிப்பு சொல்கிறது. சடலமாக கூட கண்டடைய முடியாத 13 வயது மியகோவின் பாதச் சுவடை இன்னமும் தாங்கிக்கொண்டிருக்கும் மர செருப்பு, 54 வயது மொசோரோவின் உருகி சிதைந்த கண்ணாடி, உருக்குலைந்து கூடாக நிற்கும் மூன்று சக்கர வாகனம் என்று அருங்காட்சியகத்தில் இருக்கும் எண்ணற்ற பொருட்கள் இப்போதும் உலகின் எதோவொரு மூலையில் நடந்து கொண்டிருக்கும் போரின் அபத்தங்களையும் ஆபத்துகளையும் ஒரு சேர சொல்கின்றன.

ஆனால் எப்போதும் என்னால் கடக்க முடியாத வலியை தருவது 13 வயது ஓரிமேன் இறக்கும் தருவாயிலும் வயிற்றோடு அணைத்தபடி வைத்திருந்த மதிய உணவைதான். அணு குண்டின் வெப்பத்தில் உலர்ந்து கருகிய உண்ணப்படாத உணவை எப்படி மறக்க?
-பொறியாளர் கோ. சுந்தர்ராஜன்


ஆகஸ்ட் 6, 1945 ஹிரொஷிமாவில் அணு குண்டு வீசப்பட்ட நாள். மூன்று நாள் கழித்து, ஆகஸ்ட் 9ந் தேதி நாகாசாகியில் அணு குண்டு வீசப்பட்டது.


செய்தி குறிப்பு:

உலகத்தில் எந்த நாடு அணுகுண்டு சோதனை செய்தாலும் உடனே ஹிரோஷிமா  நாகசாகி மேயர்கள்  தலைவர்களுக்கு கடிதம் அனுப்புகிறார்கள். இந்த சோதனையே கடைசி சோதனையாக இருக்கட்டும்,அனுகுண்டின் அழிவை பார்ப்பதற்கு  எங்கள் நகரங்களுக்கு வாருங்கள் என்று சொல்கிறார்கள்.  இந்தியாவிற்கு இதுவரை 3 கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

கோட்டை நகரமாக நிர்மாணிக்கப்பட்ட ஹிரோஷிமா, ஜப்பானின் பழமையான ஊர்களில் ஒன்று. தொழிலும் கல்வியும் செழித்த நகரமாக இருந்திருக்கிறது. அந்நகரின் தோற்றம் முதல் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் வரைபடங்கள், ஒளிப்படங்களாகக் கிழக்குக் கட்டிடத்தில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. குண்டு வெடிப்புக்குப் பிந்தைய ஹிரோஷிமாவின் வளர்ச்சியையும் இங்கே காணலாம்.

நடந்தது என்ன?
ஹிரோஷிமா அணுவெடிப்பு
நாள்: ஆகஸ்ட் 6, 1945
குண்டின் பெயர்: லிட்டில் பாய்
வெடிபொருள்: யுரேனியம்
பாதிக்கப்பட்ட பரப்பு: 10 சதுர கி.மீ. பரப்பில் இருந்த அனைத்து உயிர்களையும் துடைத்து அழித்தது. மக்கள், புல், பூண்டு உட்பட அனைத்தும் பஸ்பமாகின. நகரத்தின் 69 சதவீதக் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
பலியானவர்கள் எண்ணிக்கை: 1.45 லட்சம் பேர் (உடனடியாக 90,000 பேர்).

நாகசாகி அணுவெடிப்பு
நாள்: ஆகஸ்ட் 9, 1945
குண்டின் பெயர்: பேட் மேன்
வெடிபொருள்: புளூடோனியம்
பாதிக்கப்பட்ட பரப்பு: ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும்.
பலியானவர்கள் எண்ணிக்கை: 75,000 பேர் (40,000 பேர் உடனடியாக).
இரண்டு அணுகுண்டு வீச்சுகளால் உடனடியாகவும் காலப் போக்கிலும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,50,000 பேர்

செவ்வாய், மார்ச் 11, 2014

ஆலிவ் ரிட்லி C/O சென்னை

'ஆலிவ் ரிட்லி பார்க்கப் போலாம்... ஃப்ரைடே நைட்!’ - தோழியிடம் இருந்து மெசேஜ். 'இப்படி ஒரு இங்கிலீஷ் படம் கேள்விப்பட்டது இல்லையே... அதுவும் ஏன் நைட் ஷோ போகணும்?’ என்றுதான் முதலில் தோன்றியது. பிறகுதான் தெரிந்தது, அது 'டர்ட்டில் வாக்’ எனப்படும் ஆமைக் கண்காணிப்புப் பணிக்கான அழைப்பு.
'ஆலிவ் ரிட்லி’ என்பது, உலக அளவில் அருகிவரும் ஆமை இனம். பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் 'கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் மாணவர்கள் கூட்டமைப்பு’ (Students Sea Turtle Conservation Network) ஒவ்வொரு வருடமும் நடத்தும் 'ஆமை நடை’க்கான அழைப்பு.
சென்னை நீலாங்கரை கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரம் நள்ளிரவில் நடக்க வேண்டும். அப்போது ஆமைகள் போட்ட முட்டைகளைக் கவர்ந்து பாதுகாப்பாகப் பொறிக்கவைத்து, குட்டி ஆமைகளை மீண்டும் கடலில்விட வேண்டும். இதுதான் அசைன்மென்ட்!  
சென்னை கடற்கரைகளில் அரங்கேறும் ஆமை முட்டையிடும் நிகழ்வை, கடந்த கால் நூற்றாண் டுக்கும் மேலாகக் கண்காணித்து, அருகிவரும் ஆமை இனத்தின் நீட்சியைத் தங்களால் முடிந்தமட்டும் நீளச்செய்கிறார்கள் எஸ்.எஸ்.டி.சி.என். அமைப்பினர்.
ஒரு வெள்ளி இரவில் நான் கலந்துகொண்ட 'ஆமை நடை’யின் லைவ் ரிலே இங்கே...  
''சோம்பேறியா இருக்கிறவங்களை 'ஆமை மாதிரி’னு சொல்றது, 'ஆமை புகுந்த வீடு உருப்படாது’... இப்படிச் சொல்லித்தான் உங்களுக்கு எல்லாம் பழக்கம். ஆனா, அந்த நினைப்பை எல்லாம் மாத்திக்கங்க. கடலைச் சுத்தமா வெச்சுக்கிறதுல ஆமைகளின் பங்கு அதிகம். நிலத்தில்தான் ஆமைகள் மெதுவாக நடக்கும். ஆனா, கடலுக்குள் சுறா, திமிங்கலங்களுக்கு எல்லாம் டேக்கா கொடுத்து நீந்தும். ஒரே வருஷத்துல அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு நீந்தி மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பும் அளவுக்கு வேகமாக நீந்தும். நம்மால் ஓடும் வேகத்துக்கு இணையா நீந்த முடியுமா?'' என ஆமைகளைப் பற்றி ஓர் அறிமுகம் கொடுத்தார் எஸ்.எஸ்.டி.சி.என். அமைப்பைச் சேர்ந்த அருண். அவர் கூறிய மேலும் பல தகவல்கள் ஆச்சரியத்தின் உச்சம்.
''உலகில் அருகிவரும் ஏழு வகை கடல் ஆமை இனங்களில் ஆலிவ் ரிட்லியும் ஒன்று. பொதுவா ஆமைகள் எங்கே பிறக்கிறதோ, அங்கேதான் முட்டையிடும். எந்தக் கடலில் இருந்தாலும் முட்டையிடும் பருவத்தில் தான் பிறந்த இடத்தைத் தேடி, கண்டம் தாண்டிகூட வந்துவிடும். அப்படி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை கடற்கரைகளில் பிறந்த ஆமைகளின் சங்கிலித் தொடர்ச்சிதான், இப்போ வரை ஆலிவ் ரிட்லி ஆமைகளை இங்கே ஈர்க்குது!
ஆலிவ் ரிட்லி இன ஆமைகளுக்கு இளஞ்சூடான கடல்நீரும், வெப்பமான கடற்கரையும் தேவை. அதனால்தான் அவை இந்தியப் பெருங்கடலில் நீந்தி சென்னைக்கு வருகின்றன. ஜனவரியில் இருந்து மார்ச் வரை முட்டையிடும். முட்டையிட்ட 45 நாட்கள் கழித்து குட்டி ஆமை வெளிவரும். வெளியே வந்ததுமே, வெளிச்சத்தை நோக்கிப் போகணும்னு அதன் மூளையில் இயற்கை, புரோகிராம் பண்ணியிருக்கு. ஏன்னா, கடல் நிலவொளியைப் பிரதிபலிக்கும். அந்த வெளிச்சத்தை நோக்கி நகர்ந்து கடல்ல போய் சேரணும். கடல் நீரைத் தொட்டதும் நீந்த ஆரம்பிச்சிடும். இதுதான் இயற்கையின் புரோகிராம். ஆனா, இப்போ கடற்கரையை ஒட்டி ஏகப்பட்ட விளக்குக் கம்பங்களை வெச்சுட்டதால், அந்த வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு கடலுக்கு எதிர்திசையில் நடந்து ஊருக்குள் போயிடுது. நாய்கள், அதைப் பார்த்தா கடிச்சுக் குதறிடும். சின்னப் பசங்ககிட்ட சிக்கினா, அதைக் கயித்துல கட்டி விளையாடியே கொன்னுடுறாங்க. மிஞ்சுறது வாகனத்துல அடிபட்டுச் செத்துப்போயிரும். அதனால் ஆமையின் முட்டைகளை நாங்க எடுத்து காப்பகத்தில் வைப்போம்.
45 நாள்கள் கழிச்சு குஞ்சுகள் பொறிச்சு வெளிவந்ததும், அதைக் கடல்ல விட்ருவோம். இப்போ நாம ஆமை முட்டை தேடிப் போவோமா?'' என்று அருண் கேட்டபோது, மணி நள்ளிரவு 12.  
மை முட்டைகளைக் கவரும் பயிற்சி பெற்ற சிறு குழுவைப் பின்தொடர்ந்தோம். அந்தக் குழுவைச் சேர்ந்த அகிலா, முட்டைகளை எப்படிக் கண்டுபிடித்துக் கவர்வது என்று தேடுதல் பணிகளுக்கு இடையில் விளக்கினார்.  
''நம்ம கடலுக்கு வரும் ஆலிவ் ரிட்லி 'மாஸ் நெஸ்ட்டிங்’ செய்யும் உயிரினம். அதாவது ஒரே நாளில் 20, 30 ஆயிரம் ஆமைகள் கூட்டமாக வெளியில் வந்து வெதுவெதுப்பான சூடு இருக்கும் நிலத்தில்தான் முட்டையிடும். கரையேறி வந்து, அதன் துடுப்பை வைத்து ஒரு அடிக்கு அழகா பானை வடிவில் பள்ளம் பறிக்கும். பிறகு, மேல் இருந்தவாறே 80 முதல் 150 முட்டைகள் வரை அந்தப் பள்ளத்துக்குள் இடும். ஆமை முட்டையின் ஓடுகள் மென்மையாகவும், ரப்பர் தன்மைகொண்ட டென்னிஸ் பால் அளவுக்கும் இருக்கும். ஒவ்வொரு முட்டையின் மேல்புறமும் சின்னக் குழிவோடு இருக்கும். அதனால், அடுக்கிவைத்ததுபோல அழகாக ஒன்றன் மேல் ஒன்றாக முட்டைகள் செட் ஆகிடும். முட்டையிட்ட பிறகு, ஆமைகள் அந்தக் குழியை மண் தள்ளி மூடிவிட்டு, நடனமாடுவது போல நடக்கும். அந்த இடத்தைச் சமமாக்குவதற்காகத்தான் அந்த நடனம்!'' என்று கூறிக்கொண்டே வந்தவர் சட்டென உற்சாகக் குரலில், ''அங்கே பாருங்க... ஒரு ஆமையின் தடம்!'' என்று சுட்டிக்காட்டிய இடத்தில் ஆமையின் காலடித் தடங்கள்.
ஓர் இடத்தில் அந்தத் தடங்கள் முடிந்து மணலை அமுக்கிவைத்ததுபோல இருந்தது. அந்த இடத்தில் ஒரு குச்சியை மெதுவாக உள்ளே விடுகிறார்கள். கடற்கரை மணல் வழக்கமான இறுக்கத்துடன் இல்லாமல், தளர்வாக இருக்க, அந்த இடத்தைக் குறித்துக்கொள்கிறார்கள். அங்கு கைகளால் மெதுமெதுவாக மணலை அகழ்ந்து பார்த்தால்... ப்பா..! சுமார் 150 முட்டைகள் நிலவொளியில் மணலுக்குள் மினுமினுத்தன! அந்த முட்டைகளைக் கவனமாக எடுத்துக்கொண்டு, அந்தப் பள்ளத்தை அளந்துகொண்டனர். அதே அளவில் காப்பகத்தில் மணல் பள்ளம் அமைத்து முட்டைகளைப் பத்திரப்படுத்துவார்களாம்!
முட்டை தேடும் படலத்துக்கிடையில் ஓர் அதிர்ச்சி காட்சி. முட்டையிட வந்த தாய் ஆமையொன்று நாய் கடித்தோ மீன் வலையில் சிக்கியோ கழுத்து, கால்களில் காயப்பட்டு பெரும் ரத்த சேதத்துடன் பரிதாபமாகத் துடித்துக் கொண்டிருந்தது. அந்த ஆமைக்கு நாங்கள் முதலுதவி அளிக்க, மனிதர்களின் அருகாமை காரணமாகப் பதற்றத்தில் துள்ளத் தொடங்கியது. ''ஆமைகள் குளிர் ரத்தப் பிராணி. ரொம்ப நேரம் நம்ம கட்டுப்பாட்டுல வெச்சிருக்க வேண்டாம். ஸ்ட்ரெஸ் ஜாஸ்தி ஆச்சுனா ஆமை மூக்குல இருந்து ரத்தம் வரும். ஏன்னா, மூக்கை ஒட்டித்தான் அதுக்கு மூளை இருக்கு. சீக்கிரம் கடல்ல விட்ருவோம்!'' என்று ஒரு சீனியர் சொல்ல, அதன் மூக்கின் அருகே தடவிக்கொடுத்தபடி விறுவிறுவென முதலுதவியை முடித்து ஆமையை கடலில் விட்டோம். மீண்டும் தொடர்ந்தது முட்டை சேகரிக்கும் பணி.  
அதிர்ஷ்டவசமாக அந்த இரவு நாங்கள் நான்கு 'நெஸ்ட்’களைக் கண்டோம். ஒவ்வொன்றிலும் சராசரியாக 150 முட்டைகள். ஆங்காங்கே பல ஆமைகள் இறந்தும் கிடந்தன. நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கிய 'ஆமை நடை’, அதிகாலை 4 மணிக்கு முடிந்தபோது, சுமார் 550 முட்டைகளைச் சேகரித்துவிட்டோம். இந்த சீஸனில் இதுவரை 40 'நெஸ்ட்’களில் இருந்து முட்டைகளைச் சேகரித்திருக்கிறது எஸ்.எஸ்.டி.சி.என். அதே சமயம் இறந்துகிடந்த ஆமைகளின் எண்ணிக்கை 150.
நாம் கடற்கரையில் வைக்கும் ஒரு சின்ன விளக்கு, ஆமை இனத்தையே அரிதாக்குகிறது. ஆனாலும் மனிதனின் அத்தனை இடையூறுகளையும் கடந்து, நூற்றாண்டுகளாக அடி மேல் அடி வைத்து வருகின்றன ஆமைகள்!
-ந.கீர்த்தனா, படங்கள்: ரா.மூகாம்பிகை

நன்றி: ஆனந்தவிகடன், 12-03-2014

திங்கள், மார்ச் 10, 2014

மீத்தேன் அரக்கன்! காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்

பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.
கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.
மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?
மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு!  
பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.
காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.
''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.
இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!
உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.
வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?
மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது!
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.
அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.
நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது!  
மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமனிடன் பேசியபோது...
''நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோலியம் எடுப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பல இடங்களில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கான குழாய் பதிப்பு வேலைகள், ஓ.என்.ஜி.சி-யின் பெயரில் நடைபெறுகின்றன. நரசிங்கம்பேட்டை, திருநகரி என்று பல இடங்களில் இப்படிச் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணை செயற்பாட்டாளர்கள் (co-operators). ஆகவே, அவர்களுக்காக இவர்கள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து தருகின்றனர். அதனால் ஓ.என்.ஜி.சி. பெயரில் நடந்தாலும் அது மீத்தேன் திட்டத்துக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.
ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றுவரும் நிலக்கரி மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளில் ஓ.என்.ஜி.சி-யுடன், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான் செயல்பட்டு வருகிறது. அங்கு, மொத்தப் பணிகளில் 25 சதவிகிதத்தை கிரேட் ஈஸ்டர்ன் செய்கிறது. ஆனால், டெல்டா பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது என்றபோதிலும், முழு திட்டமும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போதைய நிலையில் 'மன்னார்குடி பிளாக்’ என்று அழைக்கிறது.  
காவிரிக்கும் மீத்தேனுக்கும் என்ன தொடர்பு?
இந்தத் திட்டத்தின் வேறொரு கோணத்தை விவரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு.
''35 ஆண்டுகளில், 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பகுதியில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது எங்கேயோ இருக்கும். விவசாயத்தை நம்பி நடைபெறும் இதரத் தொழில்களையும், கால்நடைகளின் மதிப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால்,                  35 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 35 லட்சம் கோடி மதிப்புக்கு இங்கே விவசாயம் நடைபெறும். ஆகவே, லாபம் என்ற அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் முட்டாள்தனமான திட்டம்.
மேலும், இவர்கள் நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர். அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால்          தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் சரிந்துவிழும் வாய்ப்பு இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது'' என்று அதிரவைக்கிறார்.
திருநாவுக்கரசு குறிப்பிடும் மற்றொரு கோணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த  40 ஆண்டுகளுக்கும்  மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் 'பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? 'இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்!
தேர்தலுக்குப் பிறகு என்னவாகும்?
இந்தத் திட்டத்துக்காக, மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,000 இடங்களில் கிணறுகள் அமைத்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்திருக்கும். மீத்தேன் வாயுக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக வயல்வெளிகளில் பாய்ந்தோடும். இதற்காக ஒவ்வோர் இடத்திலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல நிலங்களை வாங்கியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு தற்போது சற்றே மெதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மிதவேகம் தேர்தலுக்கானது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசின் அசுர பலத்துடன் திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்!  
''அப்படித்தான் நாங்களும் யூகிக்கிறோம்'' என்ற பேராசிரியர் ஜெயராமன் இதன் அரசியல் கோணத்தை விளக்கினார்.
''இந்த மீத்தேன் வாயுத் திட்டத்துக்காக 2010-ல் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 2011-ல் அப்போதைய மாநில தி.மு.க. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 'மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்பட அனைத்து அனுமதிகளையும் பெற்று நாங்களே திட்டம் செயல்படுத்துவதை உறுதி செய்வோம்’ என்றது அந்த ஒப்பந்தம். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். திட்டத்துக்கு எதிர்ப்பு இருப்பதைப் பார்த்ததும் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய்ந்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிப்பார்கள் என்று சொன்னார். அவர்கள் ஆராய்ந்தார்களா... இல்லையா? என்று தெரியாது. இன்னமும் அறிக்கை வரவில்லை. ஆனால், அந்த நிபுணர் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையும் இருக்கிறது. அமெரிக்கா, நைட்ரஜன் குண்டு தயாரிக்க வைத்திருந்த வேதிப்பொருள்களை நைட்ரேட் உப்பாக்கி இங்கு கொண்டுவந்து பசுமைப் புரட்சி என்ற பெயரில் மண்ணை மலடாக்கியவர் சுவாமிநாதன். ஆகவே, அறிக்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.
எங்களைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களுக்கு விரோதிகளாகத்தான் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள்கூட அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பது இல்லை. இப்போது நாங்கள் நம்பியிருப்பது மாபெரும் மக்கள் சக்தியை மட்டும்தான். குழாய் அமைக்கப்படும் ஒவ்வோர் ஊரிலும் 2,000 பேர் திரண்டு அதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே எங்கள் திட்டம். ஏனெனில், அரசாங்கமும் சட்டமும் அதிகாரபூர்வமாக எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அதைத் தட்டிக்கேட்பது எங்கள் கடமை!'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் அவர்.
கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் அலுவலகம் எதுவும் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் அவர்கள் தரப்பின் விளக்கம் பெறுவதற்காக மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டோம். 'விரைவில் உங்களைத் தொடர்புகொள்கிறோம்’ என பதில் வந்த நிலையில், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரையிலும் எந்தப் பதிலும் வரவில்லை.
கருணாநிதி, திருவாரூர்க்காரர். அ.தி.மு.க-வில் மன்னார்குடிக்காரர்களின் ஆதிக்கம்தான் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன... பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தங்கள் சொந்த ஊர்களைக்கூட திறந்துவிடுவதில் இவர்களுக்கு சிறு தயக்கமும் இல்லை. ஆனால், உழவர்களைப் பொறுத்தவரை இது 'வாழ்வா, சாவா?’ போராட்டம். இதில் விட்டுக்கொடுத்தால் அநாதைகளாகப் பஞ்சம் பிழைக்க ஊர், ஊராகத் திரியவேண்டி இருக்கும். வண்டல் மண்ணின் வாசம் நிறைந்த மருத நிலத்தின் உழவர்கள், தங்களின் பல்லாயிரம்  ஆண்டு கால விவசாயப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைக்க நடத்தப்போகும் இறுதிப் போர் இது!

கூடங்குளம் தரும் படிப்பினை!
சமகாலத்தில் இதே மின்சாரத்தை முன்வைத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் போராட்டங்களில் ஒன்று கூடங்குளம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம் தொடர்ந்தாலும்கூட நோக்கத்தில் வெற்றி அடைய முடியவில்லை. மின் உற்பத்தியும் பகுதி அளவில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் இருந்து மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும், டெல்டா பகுதி மக்களும் சில படிப்பினைகளைப் பெறவேண்டியது அவசியம்.
இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஜெயராமன், ''மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை, பரவலாக ஆயிரக்கணக்கான இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டும். அந்தந்தப் பகுதி மக்களின் எழுச்சி இல்லாமல் இதை முறியடிக்க முடியாது. அதனால் மக்களிடம் இதுகுறித்த விழிப்பு உணர்வையும், இதன் அரசியல் நியாயத்தையும் எடுத்துச் செல்கிறோம். மேலும், போராட்டத்தை லாபகரமாக மாற்றவும் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும் முயலும் என்.ஜி.ஓ. குழுக்களைத் தடுத்து நிறுத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம்!'' என்றார்.
கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன?
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்... கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்.
 கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, 'அவர்கள் யார்?’, 'நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும்.
  கிராமசபா கூட்டத்தில், 'எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!

-பாரதி தம்பி
ஓவியங்கள்: ஹாசிப்கான், படங்கள்:கே.குணசீலன்
நன்றி: ஆனந்தவிகடன், 12.03.2014

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

நம்மாழ்வார் தொடுத்த போர் !

நம்மாழ்வார் இறப்புச் செய்தி வெளியான நாளிதழ்களின் மறுபக்கம் மற்றுமொரு செய்தியும் வெளியாகி இருந்தது. அது எம்.எஸ். சுவாமிநாதனின் மரபணு மாற்று தொழில்நுட்பத்தின் நன்மைகள் குறித்துதான். இது தற்செயலானதாகத் தோன்றினாலும், இந்திய விவசாய வரலாற்றின் திசைகளைச் சுட்டிக் காட்டும் இரு வேறு பாதைகளின் வரைபடம் என்றும் இணையாததாகவே உள்ளது. கடந்த 50,60 வருடமாக நாம் அதிகமாக நோயுற்று இருக்கிறோம், நோய்களின் பெயர்களும் நமக்கு நெறைய நேரம் தெரிவதில்லை, மருந்துக்கடைகளில் மருந்து வாங்க மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், மருத்துமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது, மருத்துவர்கள் கட்டடங்களுக்கு மேல் கட்டடங்கள் கட்டுகிறார்கள், வியாபாரம் அமோகம், கல்லாபெட்டி நிரம்பி வழிகிறது. 80 சதவீத மக்களின் நோயுற்ற உடல்களின் காரணம் என்ன? ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தை நோய்களினால் முடக்கிப் போட அடிப்படை காரணமாக உணவு இருக்கிறது. ஒரு பன்னாட்டு அரசியல் காரணமாக நம்முடைய உணவு முறையும், விவசாய முறையும் மாற்றப்பட்டது, நம் முந்தைய அரசின், அரசியல்வாதிகளின் துணையோடு, 1960 களில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் நம்முடைய விவசாய முறை மாற்றப்படுவதற்கு, விடுதலை கிடைப்பதற்கு முன்பே போடப்பட்ட இந்த சதிதிட்டத்திற்கு பல்வேறு தொடர்ச்சியான காரணங்கள் உள்ளன.
நம்மாழ்வார் ஆரோவில் பெர்னார்டுடன் 
புகைப்படம் உதவி- பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் ஆரம்பித்த நாளிலிருந்தே நம்முடைய பாரம்பரிய விவசாய முறையும், கல்வி முறையும் மாற்றப்பட்டு, அது இழிவானதாக சுட்டிக்காட்டும் போக்கு ஆரம்பித்து விட்டது. மக்களே தம்முடைய வாழ்க்கையை நாகரிகமற்றதாக எண்ணும் போக்கை ஆங்கிலேயர்கள் உருவாக்க ஆரம்பித்த காலத்திலிருந்து விடுதலை கிடைப்பது வரை பல்வேறு உலக நாடுகளின் விவசாய ஊடுருவல் நம்முடைய நாட்டில் இருந்தன. காந்தி புகழ்பெற்ற தலைவராயிருந்த போதிலும், அவரோடு இணைந்து பணியாற்றிய, தற்சார்பு சிந்தனைகளை விதைத்த ஜே.சி. குமரப்பா போன்றவர்களை நேருவின் படையினர் புதிய, நவீன இந்தியாவை உருவாக்குவதில் தடையாக இருக்கக்கூடும் என்று முதலிலேயே கண்டுகொண்டனர். பிரமாண்டமான இந்தியாவை உருவாக்குவற்காக ஜே.சி. குமரப்பா போன்ற சிறியவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். விவசாயத்தைப் பற்றிய ஆழமான கருத்துக்களை வைத்திருந்தாலும், பன்னாட்டு நவீன தொழில்நுட்பத்தை எதிர்த்து, 5000 வருட இந்திய விவசாய வரலாற்றை முன்வைத்தாலும் அவர் நிராகரிக்கப்பட்டார். அவருடைய எச்சரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. நாம் நோயுற்று இருப்பதின் முதல் விதை இதுதான்.

 பப்ளிகேசன் டிவிசன் 1960 களில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. ஒன்று Food weapon,(உணவு ஆயுதம்), இரண்டு weather weapon(தட்ப வெப்ப ஆயுதம்). இந்த இரண்டு புத்தகங்களையும் எனக்குக் கொடுத்தவர் வைகை குமாரசாமி, நாம் நோயுற்று இருப்பதை முதலில் உணர்ந்த தலைமுறையைச் சார்ந்தவர் அவர். புத்தகத்தின் கருத்துகள் எளிமையானவைதான், எல்லா அபாயங்களையும் போல, ஒரு நாட்டை அடிமையாக்குவற்கான எதிர்காலத் தொழில்நுட்பத்தை வலுவாக அப்புத்தகங்கள் முன்வைத்தன. ஒரு நாட்டின் உணவு முறைகளையும், தட்பவெப்பத்தினையும் மாற்றி அமைப்பதன் மூலம் அந்நாட்டை அடிமையாக்க முடியும் என்பதுதான். இதற்கான திட்டங்களின் முதல் படிதான் பசுமைப்புரட்சி.

 1960 களில் இச்சதித்திட்டம் எம்.எஸ். சுவாமிநாதன், சி.சுப்பிரமணியன் ஆகியோர்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா தன்னுடைய போரை இந்தியாவின் மீது தொடங்கியது. போரை மிகவும் வெற்றிகரமாக நடத்த எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, சென்னையில் இருக்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லாமல் விவசாய விஞ்ஞானிக்கான விருதுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை போரும் தொடர்கிறது. விருதுகளும் தொடர்கின்றன. எம்.எஸ். சுவாமிநாதனைத் தவிர இப்போரில் இந்தியாவின் மிக முக்கிய பார்ப்பனர்கள் ஈடுபட்டனர், அல்லது இந்த இந்த பார்பனர்தான் வேண்டும் என்று அமெரிக்கா அடம்பிடித்து சிவராமன் போன்ற பார்ப்பனர்களை நியமித்தனர். இந்த சிவராமன்தான் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக அழித்து, நம் நிலக்காட்சிகளின் அழகையும், 500 வருட தமிழ்க்காட்சிப் படிமங்களையும் மாற்றியவர். கருவேல மரத்தை வலுக்கட்டாயமாக திணித்தவர், நம்முடைய காமராஜர் அல்ல. காமராஜர் ஆட்சிக்காலத்தில் சிவராமனால் திணிக்கப்பட்டது. இவ்வாறு தமிழனின் உடலையும், மனதையும் நிலைகுலையச் செய்யும் போர் இன்று வரை உக்கிரமாகத் தொடர்கிறது. போரின் விளைவுகள் தெரிந்ததே, மரணங்களும், துயரங்களும் . ஈழஇனப்படுகொலைக்குப் பின்னர் ‘ஒவ்வொறு அழிவுக்குப் பின்னரும் நெறைய வாய்ப்புகள் உள்ளன’ அன்று கூவிய எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இம்மரணங்களும், துயரங்களும் நடக்கும் என்று தெரிந்தேதான் பசுமைப்புரட்சியை அரங்கேற்றினார். இரண்டு லட்சங்களுக்கு மேலான விவசாயின் தற்கொலைகளுக்குப் பின்னும் அமெரிக்க பயணம் இன்றும் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

இரண்டு வருடங்களுக்கும் மேலான கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை வழிநடத்தும் சுப.உதயக்குமார், ‘பார்பனத்துவம், அணுத்துவம்’ என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அணுசக்தி துறையின் பெரும்பாலன அனைத்து தலைவர்களும், அதிகாரிகளும் பார்பனர்களே, இந்தியாவின் அணுசக்தி கொள்கைக்கும், அணு உலையினால் மக்கள் கொல்லப்படுவதற்கும் பார்பனர்களின் சதியே காரணம் என்று ஆராய்ந்து விளக்குகிறார் உதயக்குமார். அதே வாதம் பசுமைப்புரட்சிக்கும் பொருந்தும். மேல் நிலையிலிருந்து, நம்முடைய விவசாய முறை தவறு என்றும், பசுமைப்புரட்சியை அறிமுகப்படுத்தாவிடில் உணவுத்தட்டுப்பாடு காரணமாக பஞ்சம் வந்து எல்லோரும் சாக வேண்டியதுதான் என்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு முன் உணவுத்தட்டுப்பாடு வந்தது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதுதான். அதற்கான ஆதாரங்கள் உள்ளது. மேலும் இச்சதித்திட்டம் இந்திய விவசாயிகளின் மத்தியில் சுலபமாக நிறைவேற்றப்படவில்லை, நெறைய எதிர்ப்புகள் இருந்தன. அதிகாரத்தின் மூலமும், அரசு ஊடகங்களான அகில இந்திய வானொலியின் மூலமும், தினமணி போன்ற பத்திரிக்கைகளின் தொடர்ச்சியான தலையங்களாலும் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் உச்சபட்சமாக ஹலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் போன்ற கொடிய விஷங்கள் நிலங்களில் தூவப்பட்டன. அதன் விளைவுகள் இன்னும் பயங்கரமாக உள்ளது. நாம் நோயுற்றதற்கான போர் இப்படித்தான் நடந்தேறியது. இக்கொடிய வரலாற்றை அறிந்தவர் சிலர், அறியாதவர் பலர். மருத்துவர்கள் கார்ப்பொரேட்டுகளாக மாறியதும் இதனால்தான். அனேக மருத்துவர்கள் மருந்துகள் கொடுப்பாவர்களே தவிர, நீங்கள் நஞ்சான உணவு உட்கொள்ளுகிறீர்கள், உணவை மாற்றுங்கள் நோய்கள் குணமாகும் என்று சொல்வதில்லை.

 நம்மாழ்வார் குறித்த அஞ்சலிக்கட்டுரைக்கு இவ்வரலாறே அதிகம் என நினைக்கிறேன். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் பல்வேறு அழிவுகள் நடந்து விட்டன. சுற்றுச்சூழல் முன்னோடியான ரேச்சல் கார்சன் தன்னுடைய ’மொளன வசந்தம்’ புத்தகத்தில் முதலில் பூச்சிக்கொல்லியின் கொடுமையால் எவ்வாறு நிலமும், உயிரினங்களும் அழிந்தன என்பதை விளக்க ஆரம்பித்தார். ஒற்றைவைக்கோலில் புரட்சியை ஆரம்பித்தார் ஃபுகோகா சதித்திட்டங்கள் அம்பலமாக தொடங்கின. இந்தியாவிலும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் அமெரிக்க எம்.எஸ். சுவாமிநாதன் சதிகளை அம்பலப்படுத்தத் தொடங்கினர். வந்தனா சிவா, கிளாட் ஆல்வாரிஸ், ரிச்சார்யா போன்றோர் ஊடகங்களில் போரின் கொடுமையை விளக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் எஸ்.என், நாகராஜன், வைகை குமாரசாமி போன்றோர் மூர்க்கமாக இதை அம்பலப்படுத்த ஆரம்பித்தனர். புளியங்குடியில் கோமதி நாயகம் விவசாய இயக்கம் இவர்களின் சிந்தனைப் புரட்சிகள் சிறப்பாக செயல்படுத்தியது. சிறுபத்திரிக்கைகள், குறுங்குழுக்கள் மத்தியில் வேகமாக பரவ ஆரம்பித்தன. இச்சூழலில்தான் விவசாயத்துறையில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து பூச்சிக்கொல்லியின் கொடுரங்களை உணர்ந்து, புகோகாவின் தத்துவங்களைத் தரிசித்து வேலையை உதறி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு எதிராகத் தலைமையேற்று பெருந்திரள் விவசாய இயக்கமாக மாற்ற தன்னையே அர்ப்பணித்தார் நம்மாழ்வார். அன்றிலிருந்து அவர் சாகும் வரை எந்த கூட்டத்திலும் எம்.எஸ். சுவாமிநாதன், சி.சுப்பிரமணியன்களின் பேரை அவர் உச்சரிக்க மறந்ததில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் ஞானம், விவசாய வரலாற்றில் நேரடி அனுபவம், மண்ணோடும், சகதியோடும் கரைந்த விவசாய அறிவு என்று தமிழகத்தையும், உலகத்தையும் வலம் வரத் தொடங்கினார் நம்மாழ்வார். அவரது பயணங்கள் அசாத்தியமானது. தீவிரவாத இயக்களின் தலைவர்கள் போல இருஇரவுகள் அவர் ஒரே ஊரில் தங்கியதில்லை. பேச்சு, பேச்சு, பேச்சு, பேச்சு அவர் மூச்சாயிருந்தது. நோயுற்றவர்களும், விவசாயிகளும், இளைஞர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். பின் தொடர்ந்த படித்த இளைஞர்கள் விவசாயிகளாக மாறினர். அவரது நேரடியான விவசாய செயல் முறை விளக்கங்கள் மந்திரத்தன்மையுடையதாய் வசீகரமாக இருந்தது. சிந்தனையிலும் செயலிலும் சளைக்காத போராளியாக இருந்தார். 5000 வருட தமிழக விவசாய அறிவைத் தேடி அவற்றில் மூழ்கித் திளைத்தார். சிறு விவசாயச் செயல்பாடுகளும், கண்டுபிடிப்புகளும் அவரை குதூகலிக்கச் செய்தன. சிலந்தி வலைத் தொடர்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். சிலந்தி இல்லாமல் விவசாயம் இல்லை!

 நான் ஒரு மாத காலம் அவரோடு இரவு பகலாக பயணித்திருக்கிறேன். பயணங்களின் கவனக்குறிப்புகளை இங்கு பகிர்கிறேன். தன்னைத் தேடி வந்த இளஞர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தார். வெவ்வேறு ஊர்களில் பன்முகமான விவசாய பரிசோதனைகளை மேற்கொண்டார். ஒரு வறட்சியான ஊரையை மக்களின் துணையோடு காடாக மாற்றியிருந்தார், வெறு மரங்கள் நடுவதே சில ஊரில் செய்தார், கால்வாயிலிருந்து மீன்கள் விவசாய நிலத்திற்கு வந்து இரவு முழுவதும் எச்சமிட்டு அதிகாலையில் கால்வய்க்குத் திரும்பும் முறைகளை சில ஊர்களில் ஏற்படுத்தியிருந்தார், கால்நடைகளோடு இணைந்த விவசாயப் பண்ணை, தேனீக்களோடு இணைந்த பண்ணை, மண்புழு எரு மட்டுமே கொண்ட பண்ணைகள் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விவசாயமுறை என்றே அவர் பணி இருந்தது. ஒரே விவசாய முறையை எல்லா ஊர்களிலும் திரும்பத் திருப்பச் செய்யும் விசயத்தை அவர் ஒரு போதும் அவர் செய்வதில்லை. பெரும்பாலும் நீரில்லாத, விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களைத் தேர்தெடுத்து அதனை பசுமைப் பூமியாக மாற்றுவதில் அவருக்கு அதிகம் உற்சாகம் இருந்தது. எல்லாமே பசுமையாக மாறியது.

 விவசாயத்திற்கு பிறகு, அவர் பசுமைப் புரட்சியின் கொடுமைகளை ஊர் ஊராக விளக்குவதில் நாட்டுப்புறப் பேச்சாளராக மாறியிருந்தார். 2000 த்திற்குப் பிறகு பயணம் மட்டுமே அவருடைய வாழ்க்கையாக இருந்தது. நகரங்களில் பசுமைப் புரட்சியின் விளைவுகள், விதைகளைப் பாதுகாப்பது, பன்னாட்டு அரசியல் போன்றவை விரிந்தாலும், கிராமங்களில் நேரடியான கள அனுபவம், செயல்முறை விளக்கங்கள் என்று பேச்சைக் குறைத்தார். இடது சாரி சிந்தனை, திராவிட இயக்களின் பேச்சாற்றல், பெரியாரியம், தொல் தமிழ் அறிவு, போன்றவை கலந்து கதம்பமாக மிளிரின. 1960 களில் இவ்வளவு பெரிய கொடூரம் நிறைவேறியது எப்படி என்று இடதுசாரி இயக்கங்களோ, அரசியல் இயக்கங்களோ, தெரியாமல் இருந்தன?. மக்களின் வாழ்வையும், இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிப்போடும் பசுமைப்புரட்சிக்கு இந்தியாவில் எல்லா அரசியல் இயக்கங்களும் எப்படி துணை போயின? என்ற கேள்வியும் எழுப்பினார். அதற்குப் பிறகும் கூட இடது சாரி இயக்கங்கள், தன்னைத் தனியாக விட்டுவிட்டன, என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 பயணத்தில் நானும் அவரும் ஒரு பள்ளியில் தங்கினோம், இரவு உணவு வழங்கப்பட்டது. சமையல் நன்றாக இருந்தது என்றார், பாவமாய் ஓர் அம்மாவைக் கூட்டி வந்து, இவர்தான் சமைத்தார், இவருடைய கணவர் இறந்து விட்டார், மிகவும் துயரம் என்று ஒருவர் அறிமுகப்படுத்தினார் பரிதாப உணர்வோடு. "அற்புதம்! உன்னைப் பிடித்த கஷ்டம் ஒழிந்தது, விட்டு விடுதலையாகி நிம்மதியாக உன் வாழ்க்கையைத் தொடரு, இனிதான் உனக்கு விடிவு காலம்" என்றார் அந்த அம்மாவைப் பார்த்து, எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டனர், பின்னர் சிரித்தனர், அவர்தான் நம்மாழ்வார்.

 நம்மாழ்வாரின் திடீர் மரணம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இப்பொழுதுதான் எல்லாம் கூடிவருகிறது, மெதுவாகப் பற்றிப் பரவுகிறது என்று உற்சாகமான காலகட்டத்தில் நம்மைவிட்டு மறைந்து விட்டார். எனினும் நம்மாழ்வார் என்பது ஒரு சிந்தனை மரபின் தொடர்ச்சி, அம்மரபின் நெருப்பை அணைக்காமல் பிறருக்கு கொண்டு செல்வதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

 ஏன் அதனை நெருப்பு என்று குறிப்பிடுகிறேன் என்றால், அது அவிக்கக்கூடியது. ஆனால் பசுமைப்புரட்சியின் சதிகாரர்களை அம்பலப்படுத்தி அவர் கூறியதை யாரும் மறந்து விடக்கூடாது, அவர்கள் ஒவ்வொருவரையும் மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும், எந்தப் பூச்சிக்கொல்லிக்காகக் கடன் வாங்கி, அதனால் மனம் உடைந்து அதே பூச்சிக்கொல்லியை அருந்தி, தான் வேலை செய்த மண்ணில் விழுந்து, கைகளால் மண்ணைக்கட்டிக் பிடித்து தற்கொலை செய்தார்களோ, அந்த விவசாயிகளுக்கு நீதி வேண்டும், அதையே நம்மாழ்வாரின் நெருப்பு என்கிறேன். இந்த நெருப்பை நிறுத்தி விட்டால் நம்மாழ்வார் இல்லை, இந்த அரசியல் நெருப்பை அறியாமல் அவரை படிமக்குறியீடாக மாற்றுவதை எதிர்ப்போம். அவர் சாமியாரோ, அன்பானவரோ, ஜக்கி வாசுதேவோ இல்லை?

 2012 முதல் நம்மாழ்வாரின் பணி உக்கிரமடைந்தது, பாலாறு அழிவை மக்களுக்கு செய்தியாக்கி நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டார். பனை காக்க நடந்தார், கெயில் கேஸ்க்கு எதிராக விவசாயிகளோடு கைகோர்த்தார், அணுஉலைகளை எதிர்த்தார், விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடும் மீத்தேன் வாயுத் திட்டதை எதிர்த்தார். முதலில் அடையாளமாக உண்ணாவிரதம் இருந்தவர், இது கதைக்குதவாது என்று நேரடியாக மக்களைச் சந்தித்து வீரவுரையாற்றினார். உக்கிரமான போர் என்றே சொல்ல வேண்டும், அவர் இறப்பதற்கு முதல் நாள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மீத்தேன் வாயுத் திட்டத்தை கடுமையாக எதித்துப் பேசினார். இறுதியாக அவரின் செய்தியாக மீத்தேன் வாயுக்காக விவசாய நிலங்களில் போடப்பட்டிருந்த கற்களையும், வேலிக் கல்லையும், பிரித்துப் போட ஆணையிட்டார், விவசாயிகள் அக்கல்லைப் பிடுங்கி வீசினார். இது நம்மாழ்வாரின் செய்தி, அவர் தொடுத்த போர், போரைத் தொடர்ந்து நடத்துவோம், நம்மாழ்வாரை, உயிர்ப்பிப்போம்.

 -ஆர்.ஆர்.சீனிவாசன் 

 (தீராநதி பெப்ரவரி 2014 இதழில் வெளியான கட்டுரையின் முழுவடிவம்)