வெள்ளி, ஜூன் 21, 2013

சுற்றி வளைக்கும் புற்று! - ஓர் உஷார் ரிப்போர்ட்

ரு காலத்தில் தமிழ் சினிமாவில் மட்டுமே மக்களைப் பதறவைத்த புற்றுநோய், இன்று சினிமா இடைவேளை முடிந்ததும் ஸ்க்ரீனில் விரியும் 'இவர்தான் முகேஷ்...’ என்று கரகரக் குரல் கேட்டதும் கைதட்டி விசிலடிக்கும் அளவுக்கு மலிந்துவிட்டது. 'அவருக்கு கேன்சராம்’ என எங்கோ, யாருக்கோ வந்ததைப் பற்றி அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டது ஒரு காலம். அப்போது எங்கோ இருந்த புற்றுநோய் இப்போது நம்மைச் சுற்றி கொடிய நச்சுபோலப் பரவி வியாபித்துவருகிறது.  

தன் அழகால் உலகை வசீகரித்த ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, மார்பகப் புற்றுநோய் காரணமாகத் தன் இரண்டு மார்பகங்களையும் அகற்றிக்கொண்டது சமீபத்திய செய்தி. மனீஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ் என இந்திய நடிகைகளும் புற்றுநோய்க்குத் தப்பவில்லை. நோயின் கொடுமையில் இருந்து தற்காத்துக்கொள்ள, பிரபலங்களான இவர்களிடம் பணம் இருக்கிறது. ஏழைகளுக்கு என்ன இருக்கிறது? நோயின் வேதனையைத் தாங்க முடியாமல், சிகிச்சைக்குப் பணம் புரட்ட முடியாத பிள்ளை களின் குற்றவுணர்ச்சியைக் காணச் சகிக்காமல் மரணத்தை எதிர்பார்த்து மருத்துவமனைகளில் மன்றாடிக்கிடக்கிறார்கள் பாதிக்கப்பட்ட பல முதியவர்கள்.  

தேசியப் புற்றுநோய் ஆவணக் காப்பகம், ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோய்குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடு கிறது. இதன்படி ஏறத்தாழ 22 லட்சம் புற்றுநோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் 80 ஆயிரம் புதிய புற்றுநோயாளிகள் உருவாகின்றனர். இதில் தமிழ்நாட்டின் பங்கு 20 ஆயிரம் பேர். இதில் 25 சதவிகிதம் பேர் எந்தவித மருத்துவ வசதிகளும் எடுத்துக்கொள்ள வசதியின்றி, நோயின் கொடுமையால் மடிந்துபோகின்றனர். தேசிய அளவில் கணக்கிட்டால், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 100 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இவர்களில் 50 பேர் இறந்துவிடுகின்றனர். இது எல்லாமே மொத்த நாடும் ஒரு திறந்தவெளி நோய்க் கூடாரம்போல மாறிக்கிடப்பதற்கும், நமது வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் கீழே இறங்கிக்கொண்டிருப்பதற்குமான ஆதாரங்கள். இதைப் பற்றி மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினேன்.
''இன்னாருக்குத்தான் புற்றுநோய் வரும் என்ற கணக்குகள் பொய்யாகும் காலம் இது. பரம்பரை யில் யாருக்கும் இல்லை. புகை, மது போன்ற தீய பழக்கங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒருவருக்குப் புற்றுநோய் வருகிறது. காரணம், நாம் வாழும் சூழல். இன்றைக்கு மனிதர்களைத் தாக்கும் பெரும்பான்மையான புற்றுநோய்க்குக் காரணம், பிளாஸ்டிக். பிளாஸ்டிக் மூலம் புற்றுநோய் வரும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த உலகமே ஒரு நோய்க்கிடங்காக மாறிவருவதற்கு பிளாஸ்டிக்தான் காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஒரு நிமிடம் அப்படியே நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றி நோட்டம் விடுங்கள். எவை எல்லாம் பிளாஸ்டிக்? கம்ப்யூட்டர், மவுஸ், கீ போர்டு, டெலிபோன், செல்போன், மணிபர்ஸ், வாட்ச், டிபன் பாக்ஸ், செருப்பு... வீட்டுக்குப் போனால் ஃபிரிஜ், வாஷிங்மெஷின், டி.வி., வீதியில் இறங் கினால் பேருந்து, ஆட்டோ என  அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக்மயம்தான். இந்த உலகத்தை பிளாஸ்டிக் ஓர் ஆக்டோபஸைப் போல் சூழ்ந்திருக்கிறது.
பொதுவாக, வெப்ப நிலை 100 டிகிரிக்கு மேல் போனாலோ, 15 டிகிரிக் குக் கீழ் போனாலோ பிளாஸ்டிக்கில் இருந்து டை-ஆக்ஸின் என்ற வேதிப் பொருள் வெளியேறும். இது புற்றுநோயை உண்டாக்கும் ஓர் ஆபத்தான வேதிப்பொருள். கார்களை நான்கைந்து மணி நேரத்துக்கும் மேல் வெயிலில் நிறுத்தி விட்டுக் கதவைத் திறந்தால், உள்ளிருந்து ஒரு வாசனை வருவதைக் கவனிக்கலாம். அது பென்சீன் மற்றும் ஸ்டைரீன். காரின் உட்பகுதி முழுக்க ஆக்கிரமித்திருக்கும் பிளாஸ்டிக், அதிக வெப்பத்தின் காரணமாக உமிழும் ஆபத்தான வேதிப்பொருட்கள் அவை. அதுபோலவே, இந்த அறையில் நாம் அமர்ந்திருக்கிறோம். ஒன்றரை டன் ஏ.சி. ஓடுகிறது. நாள் முழுக்க இந்த ஏ.சி. ஓடும்போது வெப்ப நிலை 15 டிகிரிக்கும் கீழே குறையலாம். இந்த அறையில் நிறைந்திருக்கும் பிளாஸ்டிக்குடன் அது வினைபுரிந்து ஆபத்தான டை-ஆக்ஸினை வெளிவிடலாம். ஆகவே, முதல் கட்டமாக நமது ஒவ்வொரு இன்ச் வாழ்க்கையிலும் சூழ்ந்திருக்கும் பிளாஸ்டிக்கில் இருந்து முடிந்த வரை வெளியில் வர முயல வேண்டும்!'' என்கிறார் சிவராமன்.

நமது உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் வேதிப் பொருட்கள் இன்னும் ஓர் எமன். அது கீரையோ, முள்ளங்கியோ, முட்டைக்கோஸோ... எதுவாயினும் நமது காய்கறிகளில் அளவுக்கு அதிகமாகப் பூச்சிமருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து உண்ணும்போது புற்றுநோய்க்கான வாய்ப்பு கூடுதலாகிறது. பிராய்லர் கோழியையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். சதை அதிகமாக வளர்ந்து சீக்கிரமே எடை பிடிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் கோழிகள் மனித இனத்தின் பேரபாயம். பிராய்லர் கோழிகளைச் சிறு வயது முதலே சாப்பிடும் பெண் குழந்தைகள், வழக்கத்தைவிடக் குறைந்த வயதிலேயே பூப்படைகின்றனர். பிராய்லர் கோழி, சாக்லேட் போன்றவற்றில் அளவுக்கு அதிகமான கலோரிகள் இருப்பதால் பெண்களின் ஹார்மோன் கூடுதலாகத் தூண்டப் படுகிறது. மருத்துவ ஆய்வு முடிவுகளின்படி, 14-15 வயதில் பூப்படையும் பெண்களைவிட, 9-10 வயதில் பூப்படையும் பெண்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

அடுத்தது புகையிலை. பான் மசாலா, குட்கா, புகையிலை, சிகரெட், பீடி போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், யார் கேட்கிறார்கள்? உலக அளவில் புகையினால் உண்டாகும் புற்றுநோயில் 70 சதவிகிதம் சீனா மற்றும் இந்தியாவில்தான் வருகிறது.

Sudden infant death syndrome பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டு முதல் ஆறு மாதக் குழந்தைகள், இன்ன தென்று அறிய முடியாத காரணத்தால் திடீர் திடீர் என்று செத்துப்போகின்றன. இப்படி உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சாகின்றன. காரணம் தேடி ஆராய்ச்சிகள் நடக்கின்றன. முதல் கட்ட ஆராய்ச் சியில் தெரியவந்திருக்கும் உண்மை, இந்தக் குழந்தைகளின் மரணத்துக்கு சிகரெட் புகையும் ஒரு முக்கியக் காரணம். யாரோ, எங்கோ ஊதித் தள்ளிய சிகரெட் புகை, ஒரு சின்னஞ் சிறு குழந்தையின் உயிரைப் பறிக்கிறது.

இதைத் தவிர, சில நிலப்பரப்புகளில் இயற் கையாகவே கதிரியக்கம் அதிகம் இருக்கும். தமிழ்நாட்டின் தென்பகுதி நிலம் இத்தகையதுதான். அங்கு காலம் காலமாக வாழும் மக்களின் உடல், இயற்கையான கதிரியக்கத்தை ஏற்றுக்கொள்ளப் பழகியிருக்கும். ஆனால், அந்தக் கதிரியக்க மண்ணை லாப வெறியுடன் தோண்டி எடுக்கும்போது, அதிகமாக வெளியாகும் கதிரியக்கத்தைத் தாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை. தென்பகுதி மக்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
இவற்றைவிட மருத்துவர் சிவராமன் சொல்லும் ஒரு விஷயம் முக்கியமானது. ''மனிதர்களின் வாழ்வில் 35-45 வயது முக்கியமானது. அதுவரை ஓடியாடி வேலை பார்த்திருப்போம். வாழ்க்கைபற்றிய அபரிமிதமான கற்பனைகளும் கனவுகளும் வடிந்து 'யதார்த்தம் இதுதான்; இப்படித்தான் நம் வாழ்க்கை இருக்கப்போகிறது’ என்பது புரிந்திருக்கும். ஆனால், தற்போதைய சூழலில் இந்த வயதில் உள்ளவர்கள் நிம்மதி இழந்துள்ளனர். ஏராளமான கடன்கள், தவணைகள், அலுவலக நெருக்கடிகள், குடும்ப உறவுச் சிக்கல்கள் என மன அழுத்தத்தில் இருக் கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

மனதின் அடி ஆழத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதுதான் கேன்சர் உள்ளிட்ட  அனைத்து நோய்களையும் தடுப்பதற்கான மருந்து. பலர், கார் வாங்கினால், ஐபோன் வாங்கினால் அது மகிழ்ச்சி என்று நினைக்கிறார்கள். வாரக் கடைசியில், மது பாட்டில்களில் மகிழ்ச்சியைத் தேடுகின்றனர். அது செயற்கையான மகிழ்ச்சி, ஒரு டெலி காலர் உங்களிடம் சிரித்துப் பேசுவதைப் போல. அதுவும் சிரிப்புதான். ஆனால், உணர்ச்சியற்ற சிரிப்பு. மாறாக, மகிழ்ச்சி என்பது இயற்கையைச் சிதைக்காமல் வாழ்வது. அடுத்தவர்களுக்கு உதவிசெய்து வாழ்வது. அடிமையைப் போல உழைக்காமல் சுதந்திரத்துடன் சிந்திப்பது. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களோடு இருப்பது. கள்ளம் கபட மற்று இருப்பது. மற்றபடி, மகிழ்ச்சிக்கு வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை!’

''சோதனை அவசியம்!''

மருத்துவர் அய்யப்பன், புற்றுநோய் சிறப்பு மருத்துவர், மெட்ராஸ் கேன்சர் கேர் பவுண்டேஷன்:      
''மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலந்தோறும் புற்றுநோயாளிகள் உருவாகிக்கொண்டுதான் உள்ளனர். இப்போது மக்களிடையே விழிப்பு உணர்வு அதிகரித்திருக்கிறது. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் பெரும்பாலான புற்று நோய்களைக் குணமாக்கிவிட முடியும் என்பதுடன் சிகிச்சைக்கான செலவும் குறையும். இதற்கு, 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் உடம்பில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக உணர்ந் தால், உடனே மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் ஊரில், 'நாங்கள்லாம் ஆஸ்பத்திரிக்கே போக மாட்டோம்’ என உடல்நலம் மீது அக்கறையின்றி இருப்பதை ஏதோ குடும்பக் கௌரவம் போலச் சொல்கிறார்கள். மாறிவிட்ட வாழ்க்கைச் சூழல் காரணமாக நோய்கள் பெருகிவிட்ட நிலையில், முன்கூட்டியே சோதனை செய்துகொள்ள வேண்டும். மனித உடம்பு எந்த நோயாக இருந்தாலும், உணர்ந்துகொள்ளும் வகையில் ஓர் அறிகுறியைக் காட்டத்தான் செய்கிறது. அதை நாம் சரியாக இனம் காண வேண்டும்!''

செக் லிஸ்ட்!
இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது 'நமக்கும் புற்றுநோய் இருக்குமோ?’ எனச் சந்தேகம் வரலாம். கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

*அளவுக்கு அதிகமான உடல் சோர்வு.
*எதிர்பாராத இடங்களில் கட்டிவருவது. அது நீண்ட நாட்களாக இருக்கிறது என்றால், உடனே பார்க்க வேண்டும்.
*நீண்ட காலமாக மது, புகை, புகையிலை பழக்கம் இருந்தால், வாய்ப்பு அதிகம்.
*நாள்பட்ட நோய்கள் இருந்தால், புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
*பாரம்பரியமாக உங்கள் பெற்றோருக்கோ, தாத்தா, பாட்டிக்கோ இருந்தால், எச்சரிக்கை அவசியம்!
 -பாரதி தம்பி

நன்றி: ஆனந்தவிகடன், 26-06-2013

திங்கள், ஜூன் 10, 2013

பால் பவுடர் முதல் முகப் பவுடர் வரை... பெற்றோர் உஷார்!

ரசியல், ஐ.பி.எல். சந்தடிகளில் கண்டுகொள்ளப்படாமல் போன செய்தி அது. ஆனால், பேரதிர்ச்சி உண்டாக்கிய செய்தி. குழந்தைகளுக்கான முகப்பூச்சு பவுடரில் புற்றுநோயை உருவாக்கும் 'எத்திலீன் ஆக்ஸைடு’ என்கிற நச்சுப்பொருள் அளவுக்கு அதிகமாகக் கலந்திருப்பதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், பிரபல நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் மும்பை - முகுந்த் தொழிற்சாலையின் உரிமத்தை ரத்துசெய்துள்ளது உணவு மற்றும் மருந்து நிர்வாகம். பிறந்த சிசுக்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் என்றாலே மனதில் மின்னுவது அந்தப் பெயர்தான். 

அந்த அளவு நம்பிக்கைகொண்டிருந்த அந்த நிறுவனத்தின் பொருளே குழந்தைகள் உபயோகத்துக்கானது அல்ல என்றால், வேறு எதைத்தான் நம்புவது?

''குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், தடுப்பு ஊசிகளின் சந்தை அரசியலைப் புரிந்துகொண்டால் யாரை நம்ப வேண்டும் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்!'' என்கிறார் நக்கீரன். குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி ஆபத்து தொடங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டு புத்தகங்கள் எழுதிவரும் சூழலியல் எழுத்தாளரான நக்கீரன் பகிர்ந்துகொண்ட பல தகவல்கள் பகீர் ரகம்...  

''உலகில் சுமார் ஏழு லட்சம் பொருட்கள், வேதியியல் கலவைகள்கொண்டு தயாரிக்கப்படுகின்றன. உணவு மற்றும் மருந்துப் பொருட்களில் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கான புதுப்புது வேதியியல் கலவைப் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. அந்த ஏழு லட்சம் வேதியியல் கலப்புப் பொருட்களில் சுமார் 1,700 பொருட்களுக்கு மட்டுமே, சர்வதேசப் பாதுகாப்பு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது, எதிர்மறையான எந்தவிதப் பின்விளைவும் இருக்காது என்றும், அந்தப் பொருள் எந்த வேதியியல் கூட்டுக் கலவை யில் தயாரிக்கப்பட்டது போன்ற அதிகாரப்பூர்வத் தகவல்கள் பொருளின் உறை மீது அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், இந்த 1,700 பொருட்களில் பெரும்பாலானவை மேற்கத்திய நாடுகளில்தான் சந்தைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
சர்வதேசப் பாதுகாப்பு விவரங்கள் அளிக்கப்படாத, அனுமதி அல்லாத சுமார் 50 ஆயிரம் வகை வேதியியல் கலப்பு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அனைத்துவிதமான தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி பின்விளைவுகளைச் சோதிக்க வேண்டும் என்றால், அதற்கு 80 ஆண்டுகளாகும். ஒரு வேதியியல் கலப்புப் பொருளை நிலம், நெருப்பு, காற்று, தண்ணீர், மனிதன், விலங்குகள், காடுகள் உள்ளிட்ட சகல விஷயங்களின் மீதும் பிரயோகித்து, சோதித்து முடிவுகளை அறிவிக்க, மூன்று ஆண்டுகள் தேவை. ஐந்து லட்சம் டாலர் செலவு பிடிக்கும் நடைமுறை. அதனால்தான் பெரும்பான்மையான பொருட்கள் மேற்கண்ட சோதனைகளைத் தவிர்த்து சந்தைக்குள் ஊடுருவிவிட்டன. சொல்லப்போனால், அந்த அனுமதி அல்லாத பொருட்களின் சோதனைச் சுண்டெலிகளே... மூன்றாம் உலக நாட்டு மக்கள்தான்!

2008-ல் சீனாவில் நியூலாந்தைச் சேர்ந்த சன்லு குழுமத்தின் பால் பவுடரை உட்கொண்ட 53,000 குழந்தை கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 80 சதவிகிதக் குழந்தைகள் இரண்டு வயதுக்கு உட்பட்டவர்கள். சில குழந்தைகள் இறந்தன. ஆய்வில், குறிப்பிட்ட பால் பவுடரில் 'மெலமைன்’ என்கிற நச்சு வேதியியல் பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. (கவனிக்க... வேதியியல் பொருள் கலப்பு இல்லாமல் பால் பவுடர் மட்டுமல்ல; எந்த baked food-ம் தயாரிக்க இயலாது. வேதியியல் பொருள் கலப்பே ஆபத்தானது. அது அளவுக்கு அதிகமாகும்போது, அதி ஆபத்தாகிறது!) சீன அரசு அந்த நிறுவனத்தை விரட்டி அடித்ததோடு, அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்த மேயரைப் பதவி நீக்கம் செய்தது. ஆனால், இந்தியாவில் அந்த நிறுவனத்துடன் கைகோத்துதான் இன்னொரு பிரபல பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் இப்போது செயல்பட்டுவருகிறது.

'குழந்தைகளுக்கான பால் பவுடரில்கூடவா நச்சுப் பொருட்கள் இருக்கும்?’ என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஆனால், குழந்தைகளுக்கான பொருட்கள் என்பது பெருநிறுவனங்களுக்குத் 'தங்க முட்டையிடும் வாத்து’. அந்தச் சந்தையின் பின்னிருக் கும் நுண் அரசியல் ஆபத்தானது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அரசியல் ஆட்டம் தொடங்கியது. அன்றைய கால கட்டத்தில் யுனிசெஃப் அமைப்பு, 'மூன்றாம் உலக நாடுகளில் தாய்ப்பால் இல்லாமல் பெரும் சதவிகிதக் குழந்தைகள் இறக்கிறார்கள்’ என்ற ரீதியில் நீண்ட ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அறிக்கையின் சாராம்சம், ஒருவேளை அக்கறையும் உண்மையும் நிறைந்ததாகக்கூட இருக்கலாம். 

ஆனால், அது பன்னாட்டுப் பால் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒரு சிக்னல் கொடுப்பதாக அமைந்தது. தங்கள் செல்வாக்கு மூலமாகத் தாய்ப்பாலுக்கு நிகரானது புட்டிப்பால் என்று அரசு இயந்திரங்கள் மூலமாகவே பிரசாரம் செய்யவைத்தன அந்த நிறுவனங்கள். இந்தியாவிலும் அது நடந்தது. ஏழைகளுக்கு இப்படியான பிரசாரம் என்றால், நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கு வேறு வகையான உத்தி... 'தாய்ப்பால் கொடுத்தால் மார்பழகு மறைந்துவிடும்’ என்று விளம்பரங்களில் மிரட்டினார்கள்.

அரசாங்கமே பிரசாரம் செய்யவும் செயற்கைப் பால் பவுடரை நம்பி விழுந்தார்கள் மக்கள். ஒரு தலைமுறையே தாய்ப்பாலைத் தவிர்த்தது. ஆனால், அதன் பிறகுதான் நாடு முழுக்கக் குழந்தைகளுக்கான நோய்கள் அதிகரித்தன. விதவிதமான நோய்களால் கொத்துக்கொத்தாகக் குழந்தைகள் இறந்தார்கள். விழித்துக்கொண்ட மத்திய சுகாதாரத் துறையும் ஐ.நா-வின் உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, 'தாய்ப்பாலே மகத்தானது. தாய்ப்பாலில்தான் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது. ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கு அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்’ என்று இப்போது அறிவிக்கின்றன. ஆனால், அதற்குள் மிக ஆழமாகக் காலூன்றிவிட்டன பால் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள். இன்றும் வட இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. காரணம், தாய்ப்பாலுக்கு எதிரான பிரசாரத்தின் வீரியம்.

பால் பவுடர் மட்டுமல்ல; குழந்தைகளுக்கான ஷாம்பு, சோப்பு தொடங்கி அழகுசாதனப் பொருட்கள் வரை நச்சுக்களால் நிரம்பி இருக்கின்றன. குழந்தைகளுக்கான ஷாம்புவில் சோடியம் லாரல் சல்பேட் மற்றும் சோடியம் ஈத்தேல் சல்பேட் என்கிற வேதியியல் நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன. 'நாங்கள் தயாரிப்பது மூலிகை ஷாம்பு தான். அது குழந்தைகளின் கேசத்துக்கு மிகவும் நல்லது’ என்று நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. ஆனால், சோடியம் லாரல் சல்பேட் இல்லாத மூலிகை ஷாம்பு, இந்தியாவில் மிகமிக அரிது.  

'பேபி ஆயில் போட்டு, குழந்தைகளுக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். குழந்தையின் சருமம் பளபளவென மின்னும்’ என்று விளம்பரம் செய்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். குழந்தைகளுக்கான எண்ணெயில் பிசுபிசுப்பை அகற்றி, அடர்ந்த எண்ணெயில் இருந்து வடிகட்டிய, லேசாக்கப்பட்ட எண்ணெயை எடுக்க ஹெக்சேன் (Hexane) என்கிற வேதியியல் பொருள் பயன்படுத்தப்படுகிறது. தவிர, எண்ணைய் கெடாமல் இருக்கவும் சில ஆர்கானிக் உப்புகளைச் சேர்க்கிறார்கள். தொடர்ந்து இந்த எண்ணெயை உபயோகப்படுத்தும்போது, அது குழந்தையின் மெல்லிய சருமத்தில் ஊடுருவி, தோல் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு என்று பிரத்யேக நகப்பூச்சுகள் சந்தையில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி ஆய்வு செய்தபோது, அதில் தோல் புற்றுநோய்க் காரணிகளான 'காரீயம்’ அளவுக்கு அதிகமாகக் கலந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நகப்பூச்சைப் பயன்படுத்தும்போது, நகத்தின் வழியாக ரத்தத்தில் அந்த நச்சு கலக்கும் வாய்ப்புகள் அதிகம். தவிர, வினிகர் கலந்த அமிலத்தன்மை வாய்ந்த ஜங்க் ஃபுட் வகை உணவுகளை, குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கிறோம். அந்தத் தன்மை உள்ள உணவைச் சாப்பிடும்போது நகப்பூச்சில் இருக்கும் 'காரீயம்’ உணவில் எளிதாகக் கரைந்துவிடும். இதன் காரணமாக உணவுக் குழாய் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

முன்பெல்லாம் விசேஷ நாட்களில் மட்டும்தான் குழந்தைகளுக்கு மேக்கப் போடுவார்கள். ஆனால், இன்றைக்கு மேல்தட்டுக் குடும்பங்களில் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே மேக்கப் இல்லாமல் அனுப்புவதே இல்லை. கண் இமையின் மீது பூசப்படும் அழகூட்டியில் PolyCyclic Hydro Carbon எனப்படும் புற்றுநோயை உண்டாக்கவல்ல வேதிப்பொருள் இருக்கிறது. சருமம் மற்றும் உதட்டுச் சிவப்புக்குப் போடப்படும் சாயங்களில் Hydroqui-none மற்றும் Phthalates  ஆகிய மார்புப் புற்றுநோய்க் காரணிகள் இருக்கின்றன. தவிர, இவை ஹார்மோன்களையும் பாதிக்கச்செய்து, பெண் குழந்தைகளை விரைவில் பூப்படையச்செய்கின்றன.
மேற்கத்திய நாடுகளில் இந்தப் பொருட்களுக்குத் தடை உண்டு. ஆனால், இந்தியாவில் மட்டும் சிவப்புக் கம்பளம் விரித்து, நச்சு நிறுவனங்களை வரவேற்கிறது அரசு. மேற்கண்ட பொருட்கள் நம் குழந்தைகளை மட்டும் கொல்வது இல்லை; தாயையும் சேர்த்தே கொல்கின்றன. ஆம், பூமிதானே நம் அனைவருக்கும் தாய். ஷாம்பு, சோப்பு, முகப்பூச்சு, சருமப் பூச்சுகள், உதட்டுச் சாயங்கள், பேபி ஆயில் இவையெல்லாம் குளிக்கும்போது, நீரில் வழிந்து, நிலத்தில் கரைந்து, மண்ணை மலடு ஆக்குகிறதே!

சரி, இவற்றுக்கெல்லாம் தீர்வு என்ன? தாய்ப்பால் புகட்டுங்கள். சீயக்காய், அரப்பு, செம்பருத்தி, பெருநெல்லி போன்றவற்றைவிடச் சிறந்த ஷாம்பு உலகில் எங்கு இருக்கிறது? நம் பருப்பு வகைகளை யும் பழ வகைகளையும்விடவா அழகூட்டிகள் இயற்கையான அழகை நமக்கு அளிக்கும்? செக்கு எண்ணெய் என்று தேங்காய் எண்ணெயும் நல்லெண்ணெயும் இருக்க, பேபி ஆயில் நமக்கு எதற்கு? என்ன... செக்கு எண்ணெய் சீக்கிரம் கெட்டுவிடும்... வாடை அடிக்கும். வாரம் ஒருமுறை வாங்கிப் பயன்படுத்துங்கள்!'' என்கிறார் நக்கீரன்.

வினை விதைத்தால், எதை அறுப்போம் என்று உங்களுக்குப் புரிகிறதா?

-டி.எல்.சஞ்சீவிகுமார்

எது சரி? எது தப்பு?
'இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பொருட்களில் எதை, எப்படிப் பயன்படுத்தலாம்’ என்று குழந்தை நல மருத்துவர் சுரேஷிடம் கேட்டோம். ''குழந்தைகளுக்கு பவுடர் தேவையே இல்லை. சருமத்தின் மேல் உள்ள துவாரங்களை பவுடர் அடைத்துக்கொள்ளும். குழந்தைகளை அப்படியே இயற்கையாக இருக்கவிடுங்கள். வாரம் ஒருமுறை இளம்சூடான நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் மசாஜ் போதும். சீப்பு பயன்படுத்தாதீர்கள். விரலால் கோதிவிடுங்கள். வாசனை திரவியங்கள் கண்டிப்பாகக் கூடாது. தளர்வான பருத்தி ஆடைகள் மட்டுமே நலம். மூன்று மணி நேரத்துக்கு மேல் நாப்கினைப் பயன்படுத்தக் கூடாது. அதுவும் கட்டாயம் தேவையென்றால் மட்டும்தான். பொட்டு, செயற்கை மை, சாந்து வேண்டாம். வளையல், கொலுசு குழந்தைக்கு உறுத்தலாம். நீண்ட நேரம் ஏ.சி. வேண்டாம். பதப்படுத்தப்பட்டு, அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாவு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் புகட்டுவது அவசியம். அதன் பின்பு வீட்டிலேயே தானியங்களை வறுத்துத் தயாரிக்கப்படும் சத்துமாவுக் கஞ்சி தரலாம். குழந்தை களின் துணிகளை வீரியம் இல்லாத சோப்புகளைப் பயன்படுத்தித் துவைத்து, பல தடவை நன்னீரில் அலசி, வெயிலில் காயவைக்கவும். கிருமிநாசினி தேவை இல்லை. அது சருமத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம்!'' என்றார்.
- உமா ஷக்தி

நன்றி: ஆனந்தவிகடன், 12-06-2013

பூவுலகின் நண்பர்கள் - ஒரு எச்சரிக்கை அறிவிப்பு!சென்னை
10-06-2013

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!

“பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகைகளில் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். அண்மையில் மரபணு மாற்று வேளாண்மை, அணுமின் சக்தி உள்ளிட்ட அம்சங்களில் பல்வேறு தரப்பினருடன் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் “பூவுலகின் நண்பர்கள்” தீவிரமாக ஈடுபட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள்.

“பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு ஜனநாயக ரீதியிலும், இந்திய நாட்டின் சட்டவிதிகளின்படியும் இயங்கும் ஒரு வெளிப்படையான அமைப்பு. சுற்றுச்சூழல் குறித்த ஆவணப்பதிவுகள், வெளியீடுகள், விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல், தேவையான இடங்களில் சட்டரீதியான தலையீடு போன்ற வெளிப்படையான செயல்பாடுகளில் மட்டுமே “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும்  வசிக்கும் தமிழர்களிடமும் “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பிற்கு சற்றும் தொடர்பில்லாதவர்கள், “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு சார்பில் தொடர்பு கொள்வதாகக்கூறிக்கொண்டு பல்வேறு உதவிகளையும், தகவல்களையும் கோருவதாக தகவல்கள் வருகின்றன.  “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பிற்கு தமிழ் மக்களிடம் உள்ள நன்மதிப்பை தவறாக பயன்படுத்தி பலன் பெறவும், “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் பெயரை கெடுக்கவும் சில சமூகவிரோதிகள் இந்த செயலில் ஈடுபடுவதாக தெரிகிறது.

மேலும் சிலர் “பூவுலகின் நண்பர்கள்” பெயரில் பல்வேறு சர்ச்சைக்குரிய துண்டுபிரசுரங்களை வெளியிடுவதாகவும், அலைபேசி குறுந்தகவல் வழியாகவும் சில சர்ச்சைக்குரிய செய்திகளை பரப்புவதாகவும் தெரிகிறது.

“பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் தொடக்க கால அமைப்பாளர்களான கோவை சி.மா. பிரிதிவிராஜ், புதுவை தமிழ்மணி ஆகியோருடன் சென்னையில் இருக்கும் சில தோழர்கள் மட்டுமே பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் இயங்கும் அதிகாரம் பெற்றவர்கள்.

எனவே “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் சார்பில் தங்களை யாரேனும் தொடர்பு கொண்டால், அவர்கள் உண்மையிலேயே “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!

பூவுலகின் நண்பர்கள் சார்பாக,
பொறியாளர் கோ. சுந்தர்ராஜன்

தொடர்புகளுக்கு:

பொறியாளர் கோ. சுந்தர்ராஜன் – 98410 31730
வழக்குரைஞர் பி. சுந்தரராஜன் – 90945 96699

வெள்ளி, ஜூன் 07, 2013

விவசாயிகள் மட்டுமல்ல விவசாயமும் வெளியேறப் போகிறது!

தமிழ்நாட்டு விவசாயிகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரிய​வந்துள்ளது. 

கடந்த 2001 தொடங்கி 2011-ம் ஆண்டுவரை​யிலான 10 ஆண்டு காலத்தில் வேளாண் தொழிலை விட்டு நகரங்களை நோக்கி இடம்​பெயர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, 8 லட்சத்து 67 ஆயிரம் பேர் என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.

''விவசாயிகள் மட்டுமல்ல... விவசாயமும் சேர்ந்து வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கம், அதை அழித்துவருகிறது'' என்று ஆதங்கப்பட்டார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.
''ஒரு காலத்தில் விவசாயம் மரியாதைக்குரியதாக இருந்தது.  ஆனால்,உணவுப் பயிர் விவசாயத்தை அழித்துப் பணப் பயிர் விவசாயத்தைக் கொண்டுவந்து விவசாயிகளிடம் திணித்ததன் விளைவு, அவர்களைக் கிராமங்களைவிட்டே ஓடவைத்துவிட்டது. அரசாங்கம் விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. விளைபொருளுக்கான விலையை வழங்காமல், அதை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது.

செலவு இல்லாத பாரம்பரிய விவசாயம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்துவந்த நம் விவசாயிகளை, பசுமைப் புரட்சி என்ற பெயரில் பணப் பயிர் சாகுபடிக்கு விரைவாகத் தாவவைத்து வீரிய விதைகளை அவன் தலையில் கட்டியது. உரம், பூச்சிமருந்து என்று ரசாயனங்களைக் கொடுத்துக் கடனாளி ஆக்கியது.

ராகி, சோளம், கம்பு, தினை, கொள்ளு, பாசிப் பயறு, தட்டை என்று உணவுப் பயிர்கள் செய்து 'வரவு’ விவசாயியாக இருந்தவனுக்கு, பணக்கார நாடுகளின் வேளாண் முறைகள்  செலவை அதிகரித்ததுதான் மிச்சம்.
1970-களில் நான்கு மூட்டை நெல் விற்று ஒரு பவுன் தங்கம் வாங்கினோம். இன்று ஒரு மூட்டை நெல் 6,000 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே, நான்கு மூட்டை நெல்லைப் போட்டு பவுன் தங்கம் வாங்க முடியும். ஆனால், ஒரு மூட்டை நெல் 1,000 ரூபாய்கூட விற்பது இல்லை. அன்று ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கினோம். இன்று டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ அதே 5 ரூபாய்தான். விவசாயப் பொருட்களின் விலையை யாரும் கண்டுகொள்வதே இல்லை. கட்டுப்படியாகாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, காணாமல்போன மானாவாரி விவசாயம் போன்ற பல காரணங்கள்தான் விவசாயிகளை 'டவுன் பஸ்’ ஏறவைத்தது'' என்றார் நம்மாழ்வார்.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வேளாண் பொருளாதார வல்லுனரும் அமெரிக்காவின் கார்வெல் விவசாயப் பல்கலைக்கழகத்தின் இப்போதைய ஆலோசகருமான முனைவர் சி.ராமசாமியிடம் கேட்டபோது, '40 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் யாரும் விவசாயத்தில் இப்போது இல்லை. அடுத்த தலைமுறை விவசாயக் குழந்தைகள் படித்து நிரந்தர ஊதியம் கிடைக்கும் பணிகளுக்குச் சென்றுவிட்டனர். குறைவாகப் படித்தவர்கள் பஞ்சாலை, பனியன் கம்பெனி, பட்டாசுத் தொழிற்சாலை போன்ற சிறுதொழில் கூடங்களின் தினக்கூலியாகிவிட்டனர். சிறு விவசாயிகள் பலரும் விவசாயக் கூலிகளாகவும் கட்டட வேலையாளாகவும் மாறிவிட்டனர். 

பல்லாயிரக்கணக்கில் இருந்த மேய்ச்சல் நிலங்கள் கல்லூரிகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உருமாறிவிட்டன. முப்போகம் விளைந்த பூமியில் ரியல் எஸ்டேட்காரர்களின் கலர் கொடிகள் பறக்கின்றன. 

வாழ்வாதாரத்துக்குக் கைகொடுத்துவந்த கால்நடைகள் மேய்வதற்கு இடமின்றிப் போய்விட்டன. விவசாயம் செய்வதைவிட விவசாயக் கூலியாக இருப்பது நிரந்தர வருமானத்தைக் கொடுக்கும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.

ஆட்கள் பற்றாக்குறைகளைப் போக்கிட சிறுசிறு வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். துண்டுதுண்டாக இருக்கும் விவசாய நிலங்களை ஒன்றாக்கி, பல ஏக்கரில் ஒரே பயிர் சாகுபடியை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் கிராமங்கள்தோறும் அமைக்க வேண்டும். பாரம்பரிய விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது அவசியம்'' என்கிறார் ராமசாமி.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் தர்மபுரி சின்னசாமி, ''கஷ்டப்பட்டு நஷ்டப்படுகிற தொழிலாக விவசாயம் மாறிவருகிறது. கட்டுப்படியாகாத விலை, கடுமையான வறட்சி, பயிர்களைத் தாக்கும் மர்ம நோய்கள் போன்ற இடர்பாடுகள் விவசாயிகளைக் கடனாளியாக்குகிறது. சொகுசு கார் வாங்க உடனே கடன் கொடுக்கிற பல வங்கிகள், விவசாயி ஒரு கறவைமாடு வாங்க கடன் தரத் தயங்குகிறது. பல கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் பெரும் தொழிலதிபர்களின் கடன்தொகை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்கிறது. 1,000 ரூபாய் கடன் வைத்திருக்கும் விவசாயி வீட்டுக் கதவில் 'ஜப்தி’ நோட்டீஸ் ஒட்டுகிறது'' என்றார் சின்னசாமி.

ஏர் நடந்தால் பார் நடக்கும் என்றாள் ஒளவை. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டில் 'பார்’ மட்டும்தான் நடக்கும்போலும்!

- ஜி.பழனிச்சாமி
படங்கள்: தி.விஜய், ரமேஷ் கந்தசாமி

நன்றி: ஜூனியர்விகடன், 09-06-2013

வியாழன், ஜூன் 06, 2013

இயற்கை ஈரப்பதனிகள்!

ரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி! 

வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும்  குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...

கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மலைப் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!

-செ.திலீபன்
நன்றி: ஆனந்தவிகடன், 05-06-2013