புதன், ஜனவரி 23, 2013

சிறுதானியங்களைப் புறந்தள்ளிய வணிக அரசியல்! புத்துயிரூட்டும் உணவுத் திருவிழா!!


ரகுச் சோறு, சாமைச் சோறு, குதிரை வாலித் தயிர்ச் சோறு, சோள தோசை, தினைப் பொங்கல், மாப்பிள்ளை சம்பா சாம்பார், பானகம்... எனக் கால ஓட்டத்தில் காணாமல் போன பாரம்பரிய உணவு வகைகளை மீண்டும் கண் முன் கொண்டுவந்து நிறுத்தப்போகிறது 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு! 

ஜனவரி 26-ம் தேதி, சென்னை லயோலா கல்லூரியில் 'முந்நீர் விழவு’ என்ற பெயரில் தண்ணீர் குறித்த பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கம் நடக்கிறது. காலையில் பழங்குடி மக்களின் பாடல்கள், நடனங்கள், இயற்கை உணவுப் பொருட்கள் கண்காட்சி, நாடகம் என்று களை கட்ட... மாலையில் முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரியத் தானியங்களின் உணவுத் திருவிழாவை நடத்துகின்றனர். 'நல்ல சோறு’ என்ற அமைப்புடன் இணைந்து இதற்கானப் பணிகளை செய்துவருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.
அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சிவராமனிடம் பேசினோம். ''இன்றைய சூழலில் அரிசி, கோதுமை ஆகிய இரண்டும்தான் பிரதான உணவுப் பொருளாக முன்னிறுத்தப்படுகிறது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் ராகி, கம்பு, சோளம் என பல சிறுதானியங்கள் நமது அன்றாட உணவுப் பொருளாக இருந்தது என் பதைப் பலரும் மறந்துவிட்டனர். அந்தத் தானியங்களைப் பயிர்செய்ய அதிக நீர் தேவைப்படாது. ரசாயன உரங்களும் தேவைஇல்லை. அரிசி, கோதுமையைத் தாண்டி இதில் அனைத்து விதமானசத்துக்களும் உள்ளன. ஆனால், அரிசிக்கும் கோதுமைக்கும் பின்னணியில் இருந்த வணிக அரசியல் மற்றும் ஆளுமைத்தன்மை அந்தச் சிறுதானியங்களை முற்றிலும் பின்னுக்குத் தள்ளி ஒழித்து விட்டது. சிறுதானிய வளர்ப்பையும், அதன் அருமைகளையும் நம் மக்கள் மெள்ள மெள்ள மறந்து வருகின்றனர்.

இன்று நம் ஒட்டுமொத்தத் தேசத் துக்கே மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பவை சர்க்​கரை வியாதி, ரத்தக் கொதிப்பு போன்றவைதான். அரிசி, கோதுமை அதிகம் சாப்பிடுவதுதான் இதுபோன்ற நோய்களுக்கான காரணம் என்று உணவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதற்கு மாற்று உணவு சிறுதானியங்கள்தான். இதில் உள்ள நார்ச்சத்து பல நோய்களை அண்டவிடாமல் நம்மைக் காப்பாற்றும். மேலும், இப்போதைய சூழலில் விவ சாயிகள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யப் பரிதவித்து வருகின்றனர். சிறுதானியம் பயிரிட்டால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பாக இருக்கும். மண்ணும் மேம்படும். சிறுதானியங்களின் அருமை, பெருமைகளை மீண்டும் நம் மக்கள் மனதில் ஆழப் பதியவைத்து, அனைவரும் ஆரோக்கியமுடன் வாழ வேண் டும் என்ற நல்ல நோக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த உணவுத் திருவிழாவை நடத்தி வருகிறோம்.

பெரும்பாலும் நம் மக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். இந்த தானியங்களைக்கொண்டு சமைக் கும் உணவில் சாம்பார், ரசம் ஊற்றி சாப்பிட முடியுமா? மீன் குழம்பு, சிக்கன் குழம்புக்கு நன்றாக இருக்குமா? பிரியாணி போன்ற உணவு வகைகளை இந்த தானியங்கள்கொண்டு சமைத்தால் ருசியாக இருக்குமா? குழந்தைகள் விரும்பிச் சாப்பி டுவார்களா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்பார்கள். இதற்கு எல்லாம் அந்தத் திருவிழாவில் பதில் கிடைக்கும். உணவு வகைகளைப் பரிமாறும்போதே அதன் செய் முறைகளையும் மக்களுக்கு விளக்கிக் கூறப்போகிறோம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானிய உணவுகளில்தான் உண்மையான ருசியும் சத்தும் உள்ளது என்பதை உணர்ந்த திருப்தியோடு செல் லலாம்!'' என்று கூறினார்.

மூதாதையர்களின் வாழ்க்கை முறையையும் ஆரோக்கியத்தின் ரகசியத்தையும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு!
- தி.கோபிவிஜய்

நன்றி: ஜூனியர் விகடன், 27.01.2013

வியாழன், ஜனவரி 17, 2013

ரீ சார்ஜ் செய்தால் தண்ணீர்! கழுத்தை நெரிக்கும் தனியார் மயம்!!


'தண்ணீருக்கு விலைவைப்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்’ - இப்படி திருவாய் மலர்ந்தார் நமது நிதி அமைச்சர் ப.சிதம்பரம். இது அவரது சொந்தக் கருத்து அல்ல. உலக வங்கியின்; உலக வர்த்தகக் கழகத்தின்; சர்வதேச நாணய நிதியத்தின் கருத்து. உலகின் இயற்கை வளங்களை எல்லாம் லாப வெறியுடன் சூறையாடி முடித்துவிட்ட இவர்களின் குறி, இப்போது தண்ணீர்! 

ஏற்கெனவே தென் ஆப்பிரிக்​காவில் தண்ணீர் தனியார்மயம் ஆக்கப்பட்டது. உங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், உங்கள் அக்கவுன்ட்டை ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். அக்கவுன்ட்டில் பணம் இருக்கும் வரை, குழாயில் தண்ணீர் வரும். அக்கவுன்ட்டில் பேலன்ஸ் தீர்ந்துவிட்டால், தண்ணீர் பாதியில் நின்றுவிடும். அடுத்து எப்போது டாப்-அப் செய்கிறீர்களோ, அப்போது​தான் தண்ணீர். 'குடிக்கத் தண்ணீர் வாங்கக் காசு இல்லாதவன் எல்​லாம் எதுக்கு உயிர் வாழ​ணும்?’ என்பதுதான் உலக​மயத்தின் கருத்து. இப்போது ப.சிதம்பரத்தின் கருத்தும்கூட.
தாகத்துக்கான தண்ணீரை லாபத்துக்கானதாக மாற்றும் இந்த அபாயகரமானப் போக்கு குறித்து விரிவாகப் பேச, 'முந்நீர் விழவு’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பாக சென்னை லயோலா கல்லூரியில் ஜனவரி 26-ம் தேதி நடக்கும் இந்தக் கருத்தரங்கில் தண்ணீர் அரசியல் குறித்து பல்வேறு நிபுணர்களும் பேசுகின்றனர்.

'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் இதுபற்றி நம்மிடம் பேசினார். 'மத்திய அரசு, தண்ணீரைத் தனியார்மயமாக்க ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. 'தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012’ என்ற திட்ட வரைவை இந்திய நீர்வள அமைச்சகம் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. 'இந்தியாவில் மிகவும் அடி​மட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம் தண்ணீர். இதை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று சொன்ன திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலு​வாலியாவின் வழிகாட்டுதலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

உலக வர்த்தகக் கழகத்தின் காட் (GATT) ஒப்பந்தம், தண்ணீரை வர்த்தகப் பண்ட​மாக வரையறுக்கிறது. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குத் தண்ணீரை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதைத் தடை செய்யக் கூடாது என்கிறது காட் ஒப்பந்தம். அதாவது சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று எல்லாம் பேசாமல், தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை எவ்வளவு வேண்டும் என்றாலும் உறிஞ்சிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்கிறது அந்த ஒப்பந்தம். அது மட்டுமல்ல... நீர்க் கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், நிலத்தடி நீர் மேலாண்மை, விவசாய நீர் மேலாண்மை, அணைகள் கட்டுமானம், தண்ணீர் வியாபாரம் மற்றும் தண்ணீர் போக்குவரத்து போன்றவை பணம் ஈட்டும் நல்வாய்ப்புகள் என்​கிறது காட் ஒப்பந்தம். ஏற்கெனவே பல நாடுகளில் இது அமலில் இருக்கிறது. இந்த வர்த்தகத்தை இவர்கள் 'தாகம் தீர்க்கும் சேவை’ என்று சொல்வதுதான் கொடுமை.

தண்ணீர் மூன்று வகைகளில் தனியார்மயமாக்கப்படுகிறது. ஒன்று, ஒட்டுமொத்தமாகத் தண்ணீர் விநியோகத்​தையும் மேலாண்மையையும் தனியாரிடம் ஒப்படைத்துவிடுவது. இது இங்கிலாந்தில் நடை​முறையில் இருக்கிறது. இரண்டாவது, நீர் விநியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்துக்குத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைவிடுவது. இந்த முறை பிரான்ஸ் நாட்டில் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது, நீர் மேலாண்மை நிர்வாகத்தை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைத்துவிடுவது. உலகமயத்தை வரவேற்கும், காட் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட நாடுகள் தண்ணீர் தனியார்மயமாதலில் மேலே உள்ள மூன்றில் ஒன்றை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்​படுகின்றன.

தண்ணீரின் மீதான மனிதனின் உரிமை என்பது எந்த அரசாங்கமும் சட்டமும் வழங்கியது அல்ல. அது இயற்கை நமக்கு வழங்கிய, பிரிக்க இயலாத உரிமை. ஆனால், 'நிலத்தடி நீரின் மீது நில உரிமை​யாளருக்கு உரிமை இல்லை’ என்கிறது புதிய வரைவுக் கொள்கை. மின்சாரம் போலவே தண்ணீருக்கும் பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பக் கட்டணம் விதிக்க வேண்டும் என்றும் சொல்​கிறது.

ஆண்டுதோறும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல், உலகம் எங்கும் ஐந்து வயதுக்கு குறைவான 21 லட்சம் குழந்தைகள் இறந்துபோகிறார்கள். எய்ட்ஸ், மலேரியா போன்ற கொடிய நோய்களால் கொல்லப்​படுபவர்களின் எண்ணிக்கையைவிட, குடிநீர் பிரச்னையால் கொல்லப்படுபவர்கள் அதிகம். ஐ.நா-வின் கணக்குப்படி, உலகில் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்​குறையால் அவதிப்படுகின்றனர்.

தண்ணீர் தனியார்மயமானால், அது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சென்ற​டையும். இப்போதே நகரங்களின் குடிநீர் ஆதாரம் கேன் வாட்டர் மூலம் முழுவது​மாக தனியார்மயமாகிவிட்டது. ஒட்டுமொத்த இந்தியாவில் தண்ணீரையும் தனியார்மயப்படுத்தத் துடிக்​கிறார்கள். இதற்கு எதிராகக் கருத்து அளவில் ஒரு தெளிவைப் பெறுவதற்காக, இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறோம். மாபெரும் மக்கள் போராட்டங்கள் மூலமாக மட்டுமே இந்த அபாயத்​தைத் தடுத்து நிறுத்த முடியும்'' என்றார்.

இன்னொரு உலகப் போர் நடந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கு என்று சொன்னது நிஜமாகிவிடுமோ?  

பாரதி தம்பி

நன்றி: ஜூனியர் விகடன், 20-1-13

புதன், ஜனவரி 16, 2013

முந்நீர் விழவுபூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் "முந்நீர் விழவு" விழ இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில் நடை பெறுகிறது. 

அனைவரும் கலந்து கொள்ளவும்.

 

மாலை கலை நிகழ்ச்சிகள் மற்றும் இயற்கை உணவு திருவிழா இரவில் நடக்க உள்ளது.

 உணவு திருவிழாவிற்கான "டிக்கெட் " புத்தக காட்சியில் கடை எண் 387 இல் உள்ளது

அனைவரும் வாருங்கள் இயற்கையை கொண்டாடுவோம்

வியாழன், ஜனவரி 10, 2013

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே! மதிப்பிற்குரிய திமுக தலைவர் அவர்களே!!


சனவரி 9, 2013

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தி.மு.க. தலைவர் திருமிகு. கலைஞர் கருணாநிதி அவர்கள்,
சென்னை

மாண்புமிகு முதல்வர் அவர்களே, திருமிகு. கலைஞர் அவர்களே:

வணக்கம். தாங்கள் இருவரும் எதிரும் புதிருமான அரசியல் நடத்தி வந்தாலும், ஒட்டு மொத்த தமிழக மக்கள் நலனுக்காகக்கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவோ, நேரில் பார்த்துக்கொள்ளவோ மாட்டீர்கள் என்றாலும், தங்கள் இருவருக்குமாகச் சேர்த்து இந்தக் கடிதம் எழுதப்படவேண்டியிருக்கிறது. தற்போது மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்து வருகிற தங்கள் கட்சிகள்தான் தமிழகத்தின் அரசியலை, சமூகப் பொருளாதார விடயங்களை கடந்த அரை நூற்றாண்டாக மாறி மாறி மேலாண்மை செய்து வருகிறீர்கள்.


தமிழகத்தின் மிக முக்கியமான தங்கள் இருவரின் ஆளுமைகளைப் பற்றிய ஒப்பீடு செய்வதோ, தாங்கள் இருவரும் வழிநடத்தும் தமிழகத்தின் இரு முக்கிய திராவிட இயக்கங்களின் நிறை குறைகளைப் பற்றி அலசுவதோ, தங்கள் கட்சிகளின் ஆட்சிகளைப் பற்றிய விமரிசனத்தில் ஈடுபடுவதோ இந்தக் கடிதத்தின் நோக்கமல்ல. மாறாக, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வருகிற நாங்கள் அந்தப் பிரச்சினையில் தமிழக மக்களை எப்படி இருவருமாக சேர்ந்து கரிசனமின்றி கைவிட்டுவிட்டீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

துவக்கத்தில் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்த தி.மு.க., தனது நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசியபோது அதை அமோதிக்கவே செய்தது. கட்சியின் முக்கியத் தலைவர் திரு. முரசொலி மாறன் கூட கூடங்குளம் திட்டத்தை எதிர்த்தார். பின்னர் கூடங்குளத்தை ஆதரித்த தி.மு.க. அரசு 1989 மே மாதம் 1-ம் நாள் கன்னியாகுமரியில் நடந்த எதிர்ப்பு மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியது; ஒரிருவரைக் கொன்று, பலரைக் காயப்படுத்தியது. மன்மோகன் சிங் அமைச்சரவைக் கொண்டு வந்த இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்த தி.மு.க. மேலவை உறுப்பினர் திருமிகு. கனிமொழி 2007-ம் ஆண்டு நிகழ்த்திய தனது பாராளுமன்ற கன்னிப்பேச்சில் அணு ஆற்றல் துறையில் இந்தியா தன்னிறைவடைய வேண்டியதன் தேவையைப் பற்றி விவரித்து, கூடங்குளம் திட்டம் தொய்வடைந்து கிடக்கிறதே எனும் கவலையைத் தெரிவித்தார்.

ஆனால் தமிழக முதல்வர் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தீர்கள். அமெரிக்காவின் அணுசக்திக் கப்பல் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் 2007 யூன் மாதம் சென்னைக்கு வந்தபோது கதிர்வீச்சு ஆபத்து எழுமென்பதால் கப்பல் வரக்கூடாது என்று ஆணித்தரமாக ஆட்சேபித்தீர்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான உச்சக்கட்டப் போராட்டம் துவங்கியபோது, முதலில் உலையை ஆதரித்த முதல்வர், மக்கள் போராட்டத்தை மதித்து நிலைப்பாட்டை மாற்றி, மக்களுக்கு ஆதரவாக அமைச்சரவை தீர்மானம் இயற்றினீர்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மாற்றுவழி மின்சாரத் திட்டங்கள் பற்றிப் பேசினீர்கள், திட்டமிட்டீர்கள். ஒரு முறை கூட கூடங்குளம் திட்டத்தை ஆதரித்துப் பேசவில்லை. உங்களில் ஒருத்தியாக இருப்பேன்என்று போராடும் மக்களுக்கு உத்தரவாதம் அளித்தீர்கள்.

கூடங்குளம் திட்டம் காலதாமதமானதற்கு முதல்வர்தான் காரணம் என்று கலைஞர் அவர்கள் குற்றம் சாட்டினீர்கள். தமிழகத்தின் மின்சாரப் பிரச்சினைக்கு கூடங்குளமே தீர்வு என்று சொல்லி, கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலைவதாக முதல்வரை பகடிப் பேசினீர்கள்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த கையோடு, முதல்வர் அவர்கள் எந்தக் காரணமும் சொல்லாமல், இனியன் குழு அறிக்கையை மக்களோடு பகிர்ந்து கொள்ளாமல், தங்கள் நிலைப்பாட்டை அவசரம் அவசரமாக மாற்றிக் கொண்டீர்கள். அனுசரணையோடு எங்களிடம் அளவளாவிய தாங்கள், அப்படியே மாறி எங்களைக் கைது செய்தீர்கள், தங்களையும், தங்கள் கட்சியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து வந்த உண்மையான உழைத்து வாழும் மீனவ மக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி, சுட்டுக் கொன்றது தங்கள் காவல்துறை.

இந்தியாவிலேயே மிகப்பெரிய, இறக்குமதி செய்யப்பட்ட, தரம் நிரூபிக்கப்படாத ரஷ்யாவின் அணுமின் நிலையம் கூடங்குளத்தில் கட்டப்படுகிறது. ஒரு மிகப்பெரிய அணு உலைப் பாலைவனம் பூங்காஎன்ற பெயரில் உள்ளூர் மக்களுக்கு எந்த தகவலும் தரப்படாது, அவர்கள் அனுமதியின்றி, முன்தயாரிப்பு உதவிகளின்றி கட்டப்படுகிறது. தாங்கள் இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு அதனை ஆதரிக்கிறீர்கள்.

கூடங்குளத்திலிருந்து ஐநூறு மெகாவாட் மின்சாரம் எங்களுக்கு வேண்டும் என்று உரிமை கொண்டாடும் கேரள முதல்வர் தனது மாநிலத்தில் ஓர் அணு உலையைக்கூடத் திறக்க முன்வரவில்லையே, அதனை தாங்கள் இருவரும் கவனித்தீர்களா? கூடங்குளம் கழிவுகளை கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் எங்குமே புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், கர்நாடகாவின் மத்திய காங்கிரஸ் அமைச்சர்களும் கடுமையாக எதிர்ப்பதை கவனித்தீர்களா? எங்களை தேச துரோகிகள் என்றும், இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றும் சொன்ன பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் கோலார் பிரச்சினையில் அணுசக்திக்கு எதிரான ஒரே நிலைப்பாடு எடுப்பதையும் தாங்கள் அவதானித்திருப்பீர்கள். தாங்கள் இருவரும் ஏன் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன் வரவில்லை? தாங்கள் இருவரும் இவ்வளவு சக்திமிக்க தலைவர்களாக, ஆட்சிப் பீடத்தில் இருக்கும்போதே தமிழர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் இந்திய அரசால்.

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு தாருங்கள் என்று முதல்வர் கேட்கிறீர்கள்; அதற்கும் மத்திய அரசு செவிமடுக்கவில்லை. ஏதோ கடமைக்குக் கேட்டது போல, தாங்களும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அதிக மின்சாரம் கிடைத்து, தமிழக மின்தட்டுப்பாடு தீர்ந்துவிட்டால் எங்கே அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அதிகரித்துவிடுமோ, நமக்கு செல்வாக்கு குறைந்து விடுமோ என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உதவி செய்ய மறுக்கிறது. தமிழ் மக்களுக்காக உழைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தங்கள் இரு கட்சிகளும், அரசுகளும் உண்மையில் தங்கள் நலனுக்காகத்தான் இயங்குகிறீர்களோ என்று நாங்கள், சாதாரண மக்கள், ஐயுறுகிறோம்.

இந்த நிலையில் இரண்டு அண்மை நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி பகுதியில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தால் கடலோர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், மீஞ்சூரில் அமைந்துள்ள கடல் நீரைக் குடிநீராக்கும்திட்டத்தினால் பழவேற்காடு பகுதியைச் சுற்றியுள்ள பதினைந்து கிராமங்களில் மீனவ மக்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு அம்மக்களுக்கு நிவாரணமும், வேலை வாய்ப்புக்களும் உதவிகளும் அறிவிக்கிற முதல்வர் கூடங்குளம் அணுமின் நிலையத்தால், அதனுள் இருக்கிற நான்கு கடல் நீரைக் குடிநீராக்கும்திட்டங்களால் எங்கள் பகுதி மக்களுக்கு எந்தத் தீங்கும் வராது, எதிர்ப்போர் மாயவலைவிரிக்கிறார்கள் எனப் பேசுவது ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்கள்தான் தங்கள் மீன்பிடித்  தொழிலால் மிக அதிகான வருமானத்தையும், அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருகிறார்கள் என்பது தங்கள் இருவருக்கும் தெரியாததல்ல. துறைமுகத்தையும், அணு உலையையும் எப்படி ஒன்றாக பாவிக்க முடியும்? எங்கள் பகுதியில் ஐநூறு கோடி ரூபாய் செலவில் மக்கள் ஓடுவதற்கு சாலைகளும், சாவதற்கு மருத்துவமனைகளும் கட்டித்தருகிறோம் என்று அறிவித்திருக்கின்றன தங்களின் அரசுகள்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க சனவரி 19 அன்று தங்கள் தலைமையில் ஒரு மிகப் பெரிய போராட்டமே அறிவித்திருக்கிறீர்கள். அந்த ஊருக்கு அருகாமையில் இடிந்தகரையில் கடந்த ஐநூறு நாட்களுக்கு மேலாக நாங்கள் தமிழினத்தின் மண்ணுக்காக, கடலுக்காக, நீருக்காக, காற்றுக்காக, உணவுக்காக, எதிர்கால சந்ததிகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். தாங்களோ, தங்கள் கட்சியை சார்ந்த அதிகாரபூர்வமான ஒரு பிரதிநிதியோ இதுவரை எங்களை வந்து பார்க்கவில்லை. ஒரு சிலைக்குக் கொடுக்கும் மரியாதையை தமிழ் மக்களுக்குத் தர மறுப்பதேன்? தமிழர் வாழ்ந்தால்தானே திருவள்ளுவர் வாழ்வார்?

தமிழ் மக்களாகிய நாங்கள் தாங்கள் இருவரிடமும் மீண்டும் ஒருமுறை எங்கள் விண்ணப்பத்தை முன்வைக்க விரும்புகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்க அனுமதிக்காதீர்கள். தமிழ் மண்ணில் இந்த அணு அரக்கனை கால் பதிக்க, கோலோச்ச, நம் வருங்கால தமிழனத் தலைமுறைகளைத் துன்புறுத்த அனுமதிக்காதீர்கள். தாங்கள் இருவரும் தங்களின் நீண்ட பொதுவாழ்வு மூலமாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் இதைச் செய்வீர்கள், செய்ய வேண்டும் என்று அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறோம்.

சுயநலக் காரண காரியங்களை மட்டுமே கருத்திற்கொண்டு, தமிழ் மக்களைக் கைவிட்டால் ஒரு மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை செய்வதோடு எதிர்கால தமிழ் சமுதாயம் தாங்கள் இருவரையும், தங்கள் கட்சிகளையும் பழிக்க ஏதுவாகும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூம்என்பது தமிழரின் உறுதியான நம்பிக்கை ஆயிற்றே? வணக்கம்.

தங்களன்புள்ள,

சுப. உதயகுமார் ம. புஷ்பராயன் மை.பா. சேசுராசு,

இரா.சா. முகிலன் பீட்டர் மில்டன்