சனி, மார்ச் 31, 2012

மின்பற்றாக்குறை => மாற்றுச் சிந்தனை + மாற்று எரிபொருள்


“அறிவியலின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்தால், புதியதாகப் பத்துப் பிரச்சினைகள் உருவாகும்” இது ஜார்ஜ் பெர்னார்ட்ஷாவின் கூற்று. உலகெங்கும் அணுசக்திக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன. மின்சாரம் என்னும் இந்தப் பிரச் சினையைத் தீர்ப்பதற்குக் கண்டு பிடிக்கப்பட்ட அணுமின் உலைகள் எதிர்பார்த்தபடி மின்சாரத் தேவையையும் நிறைவேற்றவில்லை என்பது கூடுதல் பிரச்சினை. இந்தப் புரிதலின் தொடர்ச்சியாகத்தான் நாம் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தைப் பார்க்க வேண்டும்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூட வலியுறுத்தி மக்கள் நடத்திவரும் போராட்டம் இதுவரை இத்தேசம் காணாத ஓர் எழுட்சி. தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு நடத்தும் இந்தப் போராட்டம் இப்போது ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் போராட்டக்காரர்களைப் பிளவுபடுத்த முயல்கின்றன இந்த மக்கள் விரோத அரசுகள்.
ஒருபுறம் மக்கள் அணுசக்திக்கு எதிராகப் போராடுவதும் மற்றொரு புறம் மின்சாரம் வேண்டும் அதனால் கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று கூறி வேறு பகுதி மக்கள் வீதிக்கு வருவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. இச்சமயத்தில் நாம் ஒரு முக்கியமான அம்சத்தை நினைவில்கொள்ள வேண்டும், “மின்சாரம் வேண்டும்” என்று கேட்கும் உரிமை மக்கள் அனைவருக்கும் உள்ளது. ஆனால் “கூடங்குளத்திலிருந்துதான் மின்சாரம் வேண்டும்” என்று கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது. கூடங்குளம் பகுதியில் வாழும் மக்கள் அணுமின் உலையை - கூடங்குளம் மட்டும் என்றில்லை எந்தப் பகுதியில் வாழும் மக்களும் ஒரு திட்டத்தை - எதிர்த்தால் அதற்குச் செவி சாய்க்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமை.

அணு உலைகள் பற்றியும் அதன் கொடூர விளைவுகள் பற்றியும் நாம் நன்றாக அறிந்திருந்தாலும் இரண்டு அம்சங்களை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். அணு விஞ்ஞானிகள், எல்லாம் அறிந்த காங்கிரஸ் கட்சியினர், அணு உலைகளைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் (நிச்சயமாக அப்துல் கலாமைக் குறிப்பிடவில்லை!), அணு மின்நிலையம் வந்தால் இந்த நாடு சுபிட்சமாகிவிடும் என்றும் நம்பும் அதிமேதாவிகள், அணுசக்தி மட்டுமே நம்முடைய நாட்டை ‘வல்லரசு’ ஆக மாற்றும் என்று நம்பும் தேசபக்தர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். இவர்கள் கூறுவதுபோல் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால் ஏன் எந்த நாடும் அணு உலை விபத்து இழப்பீட்டிற்கு ஒத்துகொள்ள மறுக்கிறது? மனசாட்சி உள்ளவர்கள் இந்தக் கேள்விக்கு விடையை அறிந்துகொண்டு பின்னர் அணு உலைகளை ஆதரியுங்கள்.

தொழில்நுட்பத்திலும் பேரிடர் மேலாண்மையிலும் மிகவும் தேர்ச்சி பெற்ற ஜப்பானே புகுஷிமா விபத்தைக் கையாள முடியாமல் திணறிய. போபால் அனுபவம் பேரிடரை எதிர்கொள்வதில் நமது லட்சணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது. கால்நூற்றாண்டைக் கடந்தும் நாம் இன்னும் போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை. இந்த நாட்டின் ‘மேலாண்மையே’ பெரிய ‘பேரிடராக’ இருக்கும்போது நாம் எப்படிப் “பேரிடர் மேலாண்மை”யை மேற்கொள்ளப்போகிறோம்?

அணு உலைகள் வெறும் இயந்திரங்களே! உலகில் பழுதடையாத இயந்திரங்களே இல்லை எனலாம். ஆனால் இந்த இயந்திரம் பழுதானால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். கல்பாக்கத்தில் ஒரு விபத்து நடந்தால் நாம் சென்னையில் வாழும் கோடிக்கும் அதிகமான மக்களை எப்படி வெளியேற்றுவோம்? அதற்கு என்ன திட்டங்கள் இருக்கின்றன? அதற்கு எவ்வளவு பணம் செலவு ஆகும்? இந்தக் கேள்விகளுக்கு யாருக்கும் விடை தெரியாது. புகுஷிமாவில் இப்போது நடந்த விபத்தால் ஏற்பட்ட பொருள் செலவு சுமார் ஐந்து லட்சம் கோடி. இது போக அணு உலைகளைச் செயலிழக்கச் செய்ய சுமார் எண்பதாயிரம் கோடி செலவு பிடிக்கும் என்றும் சுமார் நாற்பது வருடங்களாகும் என்றும் உறுதியான அறிக்கைகள் சொல்கின்றன (இதனால்தான் எந்த அணு உலை தயா ரிப்பாளர்களும் இழப்பீடு தர மறுக்கிறார்கள்).

நாம் அனைவரும் அறிந்தபடி ஓர் அணு உலையின் ஆயுள் காலம் சுமார் நாற்பது ஆண்டுகள்தாம். அதற்குப் பிறகு நாம் அதைச் செயல் இழக்கச் செய்ய வேண்டும். ஆனால் நமது நாட்டில் தாராப்பூர் அணு உலை நிறுவி கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் நாம் இன்னும் அதைச் செயலிழக்கச் செய்வது பற்றிப் பேசவே ஆரம்பிக்கவில்லை. இந்தியாவில் “De-commissioning Authority of India” இல்லவே இல்லை. இதுதான் நாம் நம் அணுஉலைகளுக்குப் பாதுகாப்புத் தரும் லட்சணம்!
அணுசக்தி மோசமானதுதான் என்று ஏற்றுக்கொண்டாலும், மின்சாரத்துக்கு என்னசெய்வது என்ற கேள்வி எழாமல் இல்லை.

பொதுவாகவே நம் எல்லாக் காரியங்களுக்கும் இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று நல்ல காரணம். இன்னொன்று உண்மையான காரணம். அணுசக்தியைப் பொறுத்தமட்டில் கூறப்படும் நல்ல காரணம் மின்சாரம். உண்மையான காரணம் என்ன என்பது எல்லோரும் அறிந்ததுதான். அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது என்பது ஈயைக் கொல்வதற்குப் பீரங்கியைப் பயன்படுத்துவதைப் போல. தண்ணீரை நீராவி ஆக்குவதற்கு மட்டுமே அணுசக்தி பயன்படுகிறது. ஆனால் இந்த உலைகளில் வரும் கழிவுகளை என்னசெய்வது என்பதற்கு எந்த நாட்டிடமும் தொழில் நுட்பம் இல்லை. இந்தக் கழிவுகளை நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும். நாம் என்ன தான் அணுசக்திக்கு எதிராக வாதங்களை வைத்தாலும் “மின்சாரம்” என்னும் ‘நல்ல காரணத்தை’ வைத்து இந்த அரசுகள் மக்களை நம்பவைத்து விடும். நாம் நமக்கு மின்சாரத்தை எவ்வாறு பெறமுடியும் என்பதைப் பார்ப்போம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த எரிசக்தித் தேவையில், மின்சாரத்தின் பங்கு என்பது வெறும் 18 சதவீதம்தான். இதற்குத்தான் நாம் இவ்வளவு போராடுகிறோம். இந்தியாவின் இன்றைய மின் உற்பத்தி திறன் 1,80,000 விகீ. இந்த அளவில் சுமார் 89, 000 விகீ அனல் மின்சார நிலையங்களில் இருந்து நமக்குக் கிடைகிறது. இது போக சுமார் 18, 000 விகீ இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தியும் டீஸலைப் பயன்படுத்தி 1, 800 விகீ மின்சாரமும் புனல் மின்நிலையங்களில் இருந்து 39, 000 விகீ மின்சாரமும், புதுப்பிக்கக்கூடிய சக்திகளில் இருந்து 19, 000 விகீ மின்சாரமும் அணுசக்தியைப் பயன்படுத்தி 4,780 விகீ மின்சாரமும் பெறப்படுகிறது. இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்ள முடிகிறது என்றால், இத்தனை ஆண்டுகள் (சுமார் 60 ஆண்டுகள்) கடந்தாலும், பல லட்சம் கோடிகள் செலவுசெய்த பின்னும் நம்முடைய மின்தேவையில் வெறும் 2. 7 சதவீதம் தான் இந்திய அணுமின் சக்திக் கழகத்தால் பூர்த்திசெய்ய முடிகிறது.

தமிழ்நாட்டில் (தமிழ்நாடு மட்டும்) உள்ள குண்டு பல்புகளை மாற்றிவிட்டு LED விளக்குகளைப் பயன்படுத்தினால் நம்மால்இந்த மின்சாரத்தை - 2, 000 MW - பெற முடியும். இதை இந்தியா முழுவதும் நிறைவேற்றினால் எவ்வளவு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மின்சாரத்தைப் பொறுத்தமட்டில், எவ்வளவு மின்சாரத்தைச் சேமிக்கிறோமோ அவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம் என்று அர்த்தம்.

இந்தியாவில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் மோட்டார்கள் சுமார் 30 சதவீதம் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இவை 45 சதவீதம் குறைவான திறனில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் சுமார் 160 லட்சம் மோட்டார்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றைத் திறன் மேம்பட்ட மோட்டார்களாக (சுமார் 15 சதவீதம் இழப்பு) மாற்றினால் நமக்கு 14, 400 MW மின்சாரம் கிடைக்கும். இதற்கு ஆகும் செலவு (ஒரு மோட்டாருக்கு ரூ 4,000 என்று வைத்துக்கொண்டால்) சுமார் 6, 400 கோடி. இதே அளவு மின்சாரத்தை நாம் அனல் மின் நிலையத்தில் உற்பத்திசெய்வதற்கு ஆகும் செலவு (ஒரு விகீக்கு 5 கோடி) சுமார் 72,000 கோடிகள் ஆகும். இந்த சிறிய அளவிலான செலவு மூலம் நமக்கு மிச்சமாகும் பணம் 65,600 கோடி ரூபாய். இதைத் தவிர தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் திறனை மேம்படுத்தினால் நமக்கு நிறைய மின்சாரம் மிச்சமாகும். ஓர் உதாரணத்தை நாம் பார்க்கலாம். இந்தியாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், சர்வதேசத் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சுமார் 30 சதவிகித மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றன. இந்த இயங்திரங்களைச் சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்தினால் கூடுதலாகச் செலவழிக்கப்படும் மின்சாரத்தைச் சேமிக்கலாம். இந்தியாவின் வீடுகளில் உள்ள மின்னணுச் சாதனங்களைப் புனேவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்த ஆய்வின் முடிவில் நாம் இப்போது பயன்படுத்தும் திறன் குறைந்த சாதனங்களை மாற்றிக் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் திறன்மிக்கச் சாதனங்களைப் பயன்படுத்தினால் சுமார் 1, 00, 000 MW மின்சாரம் சேமிக்கப்படும் என்று தெரியவந்தது.
இந்தியாவில் மின்சார உற்பத்தித் திறனை மேம்படுவதன் மூலம் நமக்கு 35 சதவீதம் மின்சாரம் மிச்சமாகும் என்று ‘ஒன்றும் படிக்காத சுப. உதயகுமார்’ சொல்லவில்லை, இந்தியா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட Bureau of energy efficiency என்ற நிறுவனம் சொல்கிறது. இந்த மின்சாரம் தற்போது அமைக்கப்படவுள்ள அணு மின்நிலையன்களிலிருந்து பெறப்போகும் மின்சாரத்தின் அளவைவிட அதிகமானது. தவிர இந்தியாவின் AT&C (Aggregate Technical & Commercial loss) இழப்பு என்பது 32 சதவீதம். அதாவது மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இடத்திலிருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் இடத்திற்குக் கொண்டுசெல்லும் போதும் அதை விநியோகிக்கும் போதும் ஏற்படும் இழப்புகளும் மின்சாரத் திருட்டு ஏற்படுத்தும் இழப்பையும் சேர்த்து இந்த இழப்பு கணக்கிடப்படுகிறது.

நெல்லையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘தேசாபிமானி’ ப. சிதம்பரம் அவர்கள் சீனா அப்படி முன்னேறுகிறது, இப்படி முன்னேறுகிறது என்று ஒவ்வொன்றுக்கும் சீனாவை உதாரணம் காட்டியே சொற்பொழிவாற்றினார். ஆனால் அவர் மறைக்கும் உண்மை சீனாவின் AT&C இழப்பு என்பது வெறும் 8 சதவீதம் என்பதை. தென்கொரியாவின் AT&C இழப்பு வெறும் 4 சதவீதம். இப்போது நமக்குப் புலப்படுகிறது, நாம் நம்முடைய முதலீட்டை எங்கே செய்ய வேண்டும் என்று? இந்தியாவின் இழப்பை 15 சதவீதமாகக் குறைத்தால் நமக்கு 20,000 MW அளவுக்கு உற்பத்தித் தேவை குறையும். இவை அனைத்தும் மக்களுக்கோ மண்ணுக்கோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதைத் தவிர நம்முடைய மின்னுற்பத்தி நிலையங்களின் செயல்திறன்களை மேம்படுத்தினால் இன்னும் நிறைய மின்சாரம் தயாரிக்க முடியும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்கள் மூலமான மின்சாரத்தை மனித குலம் முழுமைக்கும் அளிப்பதற்கான இயக்கம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலும் குறிப்பாக 2012ஆம் ஆண்டு, “நீடித்து நிலைக்கும் (மின்) ஆற்றலை அனைவருக்கும் அளிப்பதற்கான சர்வதேச ஆண்டாக”க் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் யாரையும் பாதிக்காத வகையில் முக்கியமாகச் சூழலியலுக்கு இசைவான வகையில் நாம் எரிபொருளைத் தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சுமார் 5900 துணை மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 80 சதவீதம் துணை மாவட்டங்களுக்கு 15 முதல் 20 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேவை. மிகக் குறைந்த அளவிலான இந்த மின்சாரத்தை அந்தந்தப் பகுதிகளிலேயே நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்களிலிருந்து தயாரிக்க முடியும். இந்தக் குறைந்த அளவு மின்சாரத்தைச் சூரிய சக்தி, காற்றாலை, பயோ-மாஸ் மூலமாக ஒரு மேம்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம் பெறமுடியும்.

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் இங்கிலாந்தில் இருந்த ஷூமாகர் எனும் பொருளியல் நிபுணர் ஒரு விஷயத்தை முன்வைத்தார், “சிறியது எப்போதுமே அழகானது” என்று. காந்தியின் சீடரும் ஊரகப் பொருளாதார நிபுணருமான J. C. குமரப்பா ஒரு சித்தாந்தத்தை முன்வைத்தார், “India does not require Mass production, it requires production by Masses” என்று, இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில் பார்த்தாலும் பரந்துபட்ட எரிசக்தி உற்பத்தியே சரியான தீர்வாக அமையும்.

அடிப்படையில் ஒரு கேள்வி? கல்பாக்கத்தில் மின்சாரம் தயாரித்து ஏன் கடப்பாவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்? எங்கே என்ன கிடைக்கிறதோ அதைவைத்து மின்சாரம் தயாரித்துக்கொள்ளலாமே? மின்சாரம் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அதன் சுற்றுப்புறத்தில் பகிர்மானம் செய்யப்பட்டு அங்கேயே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த முயற்சியில்தான் சூழலுக்கு இசைவான மின்சாரத்தைப் பெற முடியும்.
சூழலுக்கு இசைந்தும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் மின்சாரத்தைத் தயாரிப்பதற்கு மாற்று வழிகள் இருந்தும் அதிகச் செலவு பிடிக்கும், எதிர்காலத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் அணுமின் நிலையங்களை ஆதரிப்பது சாமானிய மக்களின் அறியாமையே. ஆனால் அணுமின் நிலையங்களை அரசியல் கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆதரிப்பது அறியாமையால் அல்ல. மக்களின் நலனை அடகுவைத்துப் பெரும் பொருளீட்டும் கயமைச் செயலே.

அணுசக்தியின் அறிவியல், பொருளியல், அரசியல் குறித்துப் பொது மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வும் ஒன்றுபட்ட எதிர்ப்புக் குரலுமே நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பாக அமைப்பதற்கு உதவும்.

இந்தியாவில் முன்னர் பயன்படுத்தப்பட்ட காற்றாலைகள் சுமார் 200 கிலோ வாட் மின் உற்பத்தித் திறனைக் கொண்டிருந்தன. தற்போது சுமார் 2 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட காற்றாலைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எனவே தற்போது பயன்பாட்டில் உள்ள உற்பத்தித் திறன் குறைந்த காற்றாலைகளின் திறனை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு உற்பத்தித் திறன் மேம்பட்ட காற்றாலைகளைத் துணை மாவட்டம் ஒன்றுக்குச் சுமார் 10 வீதம் பொருத்தினாலே அப்பகுதியின் மின்சாரத் தேவையை நிறைவு செய்ய முடியும். இந்தக் காற்றாலைகள் அனைத்தும் தரையிலிருந்து சுமார் 150 அடி உயரத்தில் சுழல்கின்றன. இதையும் சற்று மாற்றி அமைத்து இரண்டு வேறு உயரங்களில் இரண்டு அடுக்குக் காற்றாலைகள் அமைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளிலேயே இந்தக் காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. இதன் கீழே காலியாக இருக்கும் வெற்றிடங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பானல்களை நிறுவலாம். அல்லது இதன் இடையே உள்ள இடங்களில் மாற்று எரிபொருளாகப் பயன்படத்தக்க தாவரங்களைச் சாகுபடி செய்ய முடியும்.

இவ்வளவு இருந்தும் நம்முடைய அரசுகள் ஏன் இந்த அணு உலைகளைப் பிடித்துத் தொங்கிகொண்டு இருக்கின்றன என்று ஆராய்ந்தால் நமக்கு ஒரு விடயம் புலப்படும். அணு உலைகள் மற்றும் பெரிய மின் திட்டங்கள் எல்லாம் பல லட்சம் கோடிகள் முதலீடு உடையவை, இவை அனைத்தும் பெரும் முதலாளிகள் செய்யக்கூடியவை. ஆனால் சூரிய சக்தி, காற்றாலை போன்றவை சின்ன அளவினாலான முதலீடு உள்ளவை. சிறு, குறுந்தொழில்நடத்துனர்தாம் இதில் ஆர்வம் காண்பிப்பார்கள். அரசுகளுக்குப் பெரு முதலாளிகள் மீதுதாம் அக்கறை. காரணம் சொல்லத் தேவை இல்லை. இதைத் தான் சங்க இலக்கியத்தில் நான்மணி கடிகையில் சங்கப் புலவன் படியுள்ளான்,
கல்லில் தோன்றும் கதிர்மணி
காதலி சொல்லில் தோன்றும் உயர் மதம் மற்றும்
உன் அருளில் தோன்றும் அறநெறி எல்லாம்
பொருளில் தோன்றிவிடும்

-கோ. சுந்தர்ராஜன்


சென்னையில் வசித்துவரும் பொறியாளரான கட்டுரையாளர் “பூவுலகின் நண்பர்கள்” என்னும் சுற்றுச்சூழலுக்கான அமைப்புச் செயல்பாட்டாளர்களில் ஒருவர்.

நன்றி: காலச்சுவடு, மார்ச் 2012

செவ்வாய், மார்ச் 20, 2012

சிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்? (மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் நாள்)


சிட்டுக்குருவிகள்
எங்கள் வீட்டுக்கு வருவதை
நிறுத்திவிட்டன
- ஆதி வள்ளியப்பன்
(மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் நாள்)
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை பறவை நோக்கும் பந்தயத்தில் (Bird Race) பங்கேற்றபோது, சென்னையில் வாழும் பறவை வகைகளை கணக்கெடுக்கும் வேலையில் நானும் சில நண்பர்களும் ஈடுபட்டிருந்தோம். ஒரே நாளில் காலையில் இருந்து மாலை ஆறு மணிக்குள் எத்தனை வகை பறவைகளை குறிப்பிட்ட எல்லை பரப்புக்குள் பதிவு செய்கிறோம் என்பதே அந்தப் போட்டி. கிட்டத்தட்ட 49 பறவைகளைப் பார்த்துவிட்டோம். “கவலைப்படாதீர்கள் இன்னும் ஒரு பறவைதானே, போட்டியின் இறுதி நிகழ்ச்சிக்குச் செல்லும் முன் சிட்டுக்குருவியை பார்த்துவிட்டால் 50 ஆகிவிடும்” என்று நம்பிக்கையுடன் கூறினார், எங்களை வழிநடத்திச் சென்ற ரயில்வே துறையில் பணிபுரிந்து வரும் பறவை ஆர்வலர் ஜெயசங்கர். காக்கை போன்ற சாதாரண பறவைகளை காலையில் புறப்பட்ட உடனே பார்த்துவிட்டோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கும் இடமெல்லாம் படபடவென்று இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை அன்றைக்கு தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
sparrow_370அதிர்ஷ்டவசமாக நான் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த மந்தைவெளி ராஜா தெருவுக்கு அருகேயிருந்த ராஜா கிராமணி தோட்டம் என்ற சிறிய சந்தில் அப்போது 10 - 12 சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. அந்த சிறிய சந்துப் பகுதி சாதாரண, எளிய மக்கள் வாழும் பகுதி. இப்படியாக சென்னையில் சில பகுதிகளில் இன்னமும் சிட்டுக்குருவிகள் எஞ்சி இருக்கின்றன.
சிட்டுக்குருவிகள் குறித்த எனது ஞாபகங்கள் மனதின் ஓரத்தில் எப்போதும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க நகரத்திலேயே வாழ்ந்த எனக்கு, சிட்டுக்குருவி மனதுக்கு மிகவும் நெருக்கமான பறவை என்று சொல்லலாம். சிட்டுக்குருவிகள் குறித்த எனது நினைவுகள் மிகவும் சிறிய வயதிலேயே தொடங்கிவிட்டன. திருச்சி தில்லைநகர் ராம் நகர் காலனியில் நான் வளர்ந்த 80களின் தொடக்கத்தில், எங்கள் வீட்டு கம்பி ஜன்னல் வழியாக தினசரி உள்ளே பறந்து வந்து, எங்களது வீட்டுப் பரணில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், இதர பொருள்களுக்கு இடையே வைக்கோலால் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்தது ஒரு சிட்டுக்குருவி குடும்பம். அதே வீட்டின் மற்றொரு பிரிவில் இருந்த மின்பெட்டி இடைவெளியில் பல சிட்டுக்குருவிகள் கூடமைத்து, குஞ்சு பொரித்து சந்தோஷமாக வாழ்ந்துள்ளன. அந்த நேரத்தில் என் தம்பி பிறந்திருந்தான் என்பதால், அந்த சிட்டுக்குருவிகள் என் ஞாபக அடுக்குகளில் ஆழமாக பதிந்துவிட்டன.
1980களின் இறுதியில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் நாங்கள் குடியேறியிருந்தோம். அந்த வீட்டில் காற்று வருவதற்காக அறையின் மேற்பகுதியில் விடப்பட்டிருந்த வென்டிலேட்டர் செவ்வக ஓட்டை வழியாக உள்ளே வந்த ஒரு சிட்டுக்குருவி ஜோடி, உள்அறையின் மேற்பகுதியில் அதேபோல இருந்த மற்றொரு செவ்வக வடிவ ஓட்டை பகுதியில் வைக்கோல் வைத்து கூடு கட்டியது. உள் வெண்டிலேட்டரில் அவை கூடு கட்டியதற்குக் காரணம், எதிரிகளிடம் இருந்து கிடைத்த பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அந்தக் குருவிகளுக்கு தைரியம் சற்று அதிகமாத்தான் இருந்திருக்க வேண்டும். அவையும் பிறக்கப் போகும் அவற்றின் குஞ்சுகளும் ஒரு சில செ.மீ. நகர்ந்தாலும் கீழே விழுந்துவிடக் கூடிய நிலைமையிலும், தைரியமாக கூடு கட்டி வாழ்ந்தன. ஏனென்றால் அவ்வளவு குறைவான இடம்தான் அங்கே இருந்தது. வென்டிலேட்டர் துளை வழியாக தினசரி அவை உள்ளே வந்து, கூட்டுக்குப் போவதற்கு இடையில் எங்கள் வீட்டு மின்விசிறி இருந்தது. எங்கள் குடும்பத்தில் குருவிகள் வரும் நேரத்தில் மின்விசிறியை போடாமலிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். எதிர்பாராத ஒரு நாளில் மாலை, இரவுக்கு இடைப்பட்ட நேரத்தில் மின்விசிறி வேகமாகச் சுழன்று கொண்டிருந்தபோது உள்ளே பறந்து வந்த தாய்க் குருவி, மின்விசிறியின் வேகத்தை கணிக்காமல் அடிபட்டு சிதறிவிட்டது. எங்களுக்கு அது மிகப் பெரிய வருத்தத்தைத் தந்தது என்பதை சொல்ல வேண்டியதில்லை. எங்கள் வீட்டுக்குள் கூடமைத்த கடைசி சிட்டுக்குருவி அதுதான். அதற்குப் பிறகு சிட்டுக் குருவிகள் எங்கள் வீட்டுக்குள் வரவில்லை.
சிட்டுக்குருவி (House sparrow, Passer domesticus)
சிட்டுக்குருவி 15 செ.மீ நீளம் கொண்டது. ஊர்க்குருவி என்றும் இதை அழைப்பது உண்டு. முன்பு நகர்ப்புறங்களில் பரவலாகக் காணப்பட்டது. ஆணின் தலை, பிடரி, முதுகு, வால்மேல் போர்வை இறகுககள் பழுப்புத் தோய்ந்த கருஞ்சாம்பல் நிறம். மேல் முதுகும் இறக்கைகளும் கரும்பழுப்புக் கோடுகள் கொண்ட செம்பழுப்பு நிறம். பெண், சாம்பல் தோய்ந்த உடலின் மேற்பகுதியில் மஞ்சள் தோய்ந்த பழுப்புக் கோடுகளைக் கொண்டது.
இனப்பெருக்கக் பருவத்தில் ஜோடியாகத் திரியும். இது பின்னர் குழுவாக ட்சிஇ, இட்சி, ட்சிஇ எனக் குரல்கொடுத்தபடி பெருங்கூட்டமாக பறக்கும். தானியங்கள், புழு பூச்சிகள், முளைகள், மலர் அரும்புகள், தேன், இளந்துளிர், வீட்டு புறக்கடை கழிவுகள் உள்ளிட்டவற்றை உண்ணும். நீலகிரியில் இப்போது பரவலாகக் காணப்படும் இது, அண்மைக் காலம் வரை 1000 மீ. உயரத்துக்கு மேல் மலைப்பகுதிகளில் காணப்பட்டதில்லை. அதற்குக் கீழ் பகுதிகளில்தான் வசித்து வந்தது.
உணவுப் பழக்கத்தை போலவே கூடுகட்டுவதிலும் வரையறை ஏதுமின்றி வீட்டுக் கூரை, சுவரில் உள்ள பொந்து, கிணற்றின் இடுக்குகள் (பல முறை நேரில் பார்த்திருக்கிறேன்) என வசதியுள்ள இடங்களில் புல், வைக்கோல், குப்பைக் கூளம், பஞ்சு கொண்டு 3, 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவி அடுத்தடுத்து இனப்பெருக்கம் செய்யும், இடைவெளி ஏதுமில்லை.
நம்மால் வீட்டு விலங்காக ஊருக்குள் அழைத்து வரப்படாத உயிரினங்களில் ஒன்று சிட்டுக்குருவி. வாழ உகந்த சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் பல உயிரினங்கள் காட்டிலிருந்து ஊருக்குள் இடம்பெயரும். “குருவிக் கூட்டை கலைப்பது பாவம்” என்று கருதி அவற்றை தொந்தரவு செய்யாமல் இருந்த பண்பு நம் சமூகத்தில் இருந்தது. குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே அறிமுகமாகும் சிட்டுக்குருவிகள் நம்முடைய சினிமா பாடல்கள், குழந்தை பாடல்கள், கவிதைகள், கதைகள் என பல்வேறு வகைகளில் பதிவு பெற்றுள்ளன. இப்படி நம்மோடு ஒன்றறக் கலந்து வாழ்ந்து வந்த சிட்டுக்குருவி இனம், மனிதர்களின் நாகரிக வளர்ச்சி, அறிவியல் - தொழில்நுட்பம் காரணமாக அழிவை நோக்கி சென்று வருகிறது. சிட்டுக்குருவிகளின் அழிவு என்பது, உண்மையிலேயே பயங்கரமான நிலைக்குச் செல்லாதபோதும், அந்த அழிவு சிறியதாக இருக்கும்பட்சத்திலும்கூட, அது சுற்றுச்சூழல் சீரழிவின் மிக முக்கியமான சுட்டிக்காட்டி என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இப்படிப்பட்ட எச்சரிக்கை சமிக்ஞைகளை புறக்கணிப்பது நமது சூழல் மேலும் சீரழியவும், நமது ஆரோக்கியம் மேலும் மோசமடையவுமே வழிவகுக்கும்.
சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணமாகக் கருதப்படும் பல்வேறு காரணங்களை நோக்கும்போது இது நமக்குத் தெளிவாகப் புரியும். சிட்டுக்குருவிகளின் அழிவுக்கான மிக முக்கிய காரணமாக செல்ஃபோன் அலைகள் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இதை நிரூபிப்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம், ஆய்வு இல்லை. பிரிட்டனில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்ஃபோன் அலைகள்தான் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள் ஏதுமற்ற நிலையில், அதே காரணம் அப்படியே இங்கே பொருந்தும் என்று கூற முடியாது. ஆனால், குருவிகளின் அழிவுக்குக் கூறப்படும் மற்ற காரணங்கள் முக்கியமானவை. தீப்பெட்டிகளை அடுக்கியது போன்ற வெளிக்காற்று உள்ளே புக முடியாத ஏ.சி. பொருத்தப்பட்ட வீடுகள், கட்டடங்கள் கண்ணாடி, அலுமினியம் பதிக்கப்பட்டு முற்றிலுமாக மூடப்படுகின்றன. இதனால் குருவிகள் கூடு கட்ட முடியாமல் போகிறது.
மேலும் செடிகள், பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி தெளிப்பதால் பூச்சிகள், சிறு புழுக்கள் இறந்துவிடுகின்றன. சிறு புழுக்கள்தான், முதல் 15 நாளைக்கு குஞ்சுகளின் முக்கிய உணவு. அது இல்லாவிட்டால், குஞ்சுகள் வளர்வது தடைபடும். மேலும் பயிர்களின் மீது பூச்சிக் கொல்லிகள் தெளிப்பதால் தானியங்கள் நஞ்சாகிவிடுகின்றன. இதுவும் சிட்டுக்குருவிகளை பாதிக்கிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையில் உள்ள "மீதைல் நைட்ரேட்" என்ற மாசுப் புகை சிட்டுக்குருவிகளின் உணவான பூச்சிகளைக் கொல்கிறது என்றொரு தகவலும் உண்டு.
முன்னைப் போல இல்லாமல் தானியங்கள் சாக்கு மூட்டைகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன. இதனால் தானியங்கள் எங்குமே சிதற வாய்ப்பில்லை. முன்பெல்லாம் லாரியில் நெல், தானியங்கள் ஏற்றப்பட்டு அவை செல்லும் வழியெல்லாம் சிறிதளவு தானியம் சிதறிக் கொண்டே போகும். இவற்றை பறவைகள் கொத்திக் கொண்டிருக்கும். திருச்சி காந்தி மார்கெட் போன்ற பகுதிகளில் தானியங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகளை அதிகமாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு இந்த நடைமுறைகள் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டதால், சிட்டுக்குருவிகளுக்கு உணவு கிடைப்பது தடைபட்டு விட்டது. இப்படியாக நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை உணர முடிகிறது. ஆனால் இதை நிரூபிப்பதற்குத் தேவையான அறிவியல் ஆதாரங்கள், ஆராய்ச்சிகள் தற்போது இல்லை. இதை விரிவாக நடத்த வேண்டி உள்ளது. அதேநேரம் கிராமப் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் குறையவில்லை என்பதை மூத்த பறவை ஆர்வலர் க.ரத்னமும், வாழ உகந்த இடங்களில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறையவில்லை என்பதை பறவை ஆராய்ச்சியாளர் எஸ்.கோபி சுந்தர் போன்றோரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
முந்தைய தலைமுறையினர் சிட்டுக்குருவிகளையோ, அவை கூடுகட்டுவதையோ தொந்தரவாக நினைக்காமல் இருந்தனர். அவர்களது வாழ்க்கை நடைமுறைகளும் அவற்றுக்கு உதவும் வகையிலேயே இருந்தன. வீட்டில் உலை வைக்க இருந்த கொஞ்சம் அரிசியையும் சிட்டுக்குருவிகளுக்கு போட்டதற்காக செல்லம்மாவிடம் பாரதியார் திட்டு வாங்கியிருக்கிறார். தனக்குப் பிரியமான சிட்டுக்குருவிகளை, தனது பாடல்களிலும் பாரதியார் பல முறை குறிப்பிட்டுள்ளார். மஞ்சள்தொண்டை சிட்டுக்குருவியை ஆசையாக விளையாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின், அந்தக் குருவியின் நிறம் வித்தியாசமாக இருந்தது சாலிம் அலியின் மனதில் கேள்வியை எழுப்பியது. அந்தக் கேள்வியைப் பின்தொடர்ந்து சென்ற சாலிம் அலி, உலகின் மிக முக்கியமான பறவையியலாளர் ஆனார். இப்படி மேதைகளின் வாழ்க்கையிலும் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்காற்றியுள்ளன.
sparrows_575
இன்றைய தலைமுறையோ சிட்டுக்குருவிகள் என்றொரு உயிரினம் தங்களிடையே வாழ்ந்தது என்பது பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் இருக்கின்றனர். சென்னை புத்தகக் கண்காட்சியில் பூவுலகின் நண்பர்கள் அரங்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், கைவிடப்பட்ட தூக்கணாங்குருவிக் கூடுகளை எடுத்து வந்து மாட்டியிருந்தோம். அதைப் பார்த்த பெரும்பாலான குழந்தைகள், அது என்னவென்று விசாரித்தனர். குழந்தைகளுக்கு இயல்பாகவே புதிய விஷயங்களை, உயிரினங்களை, அவற்றின் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ள ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த ஆர்வத்தை வளர்க்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் தவறிவிடுகிறார்கள்.
யானை, புலி போன்ற பெரிய உயிரினங்களின் அழிவு மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தாவிட்டாலும்கூட, சமூகத்தின் மத்தியில் சிறிய அதிர்வுகளையாவது ஏற்படுத்துகிறது. ஆனால் சிட்டுக்குருவிகள் போன்ற நமது சுற்றுச்சூழலின் நலனை சுட்டிக்காட்டுகிற சிறுபறவைகளின் அழிவு நமது சமூகத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை.
எப்படியோ, சிட்டுக்குருவிகளின் அழிவு அதல பாதாளத்துக்குச் செல்லவில்லை என்பது நிஜம். ஆனால் தமிழகத்தில், இந்தியாவில் ஏற்கெனவே தொடங்கிவிட்ட சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, அந்த இனத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல; நமது சூழல் வாழத் தகுதியற்றதாக மாறி வருவதன் முக்கியமான அறிகுறி. இதை கவனிக்கத் தவறுவதும், புறக்கணிப்பதும், நாளை நமது ஆரோக்கியத்தை, உடல்நலத்தை, வாழ் சூழலை, பூவுலகை முற்றிலும் சீரழிப்பதாக மாறிவிடக் கூடும். இன்றைக்கு சிட்டுக்குருவி, நாளை மனிதன்; இதுவே சிட்டுக்குருவி இனத்தின் அழிவு நமக்கு மறைமுகமாக உணர்த்தும் செய்தி. சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பு, விழிப்புணர்வுக்காக உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
சிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்?
உள்ளூர் தாவரங்களை அதிகம் வளர்க்க வேண்டும். அதுதான் இயற்கையான சூழல் சமநிலையை பாதுகாக்கிறது. பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். இவை நுண்ணுயிரிகள், நன்மை செய்யும் பூச்சிகள், புழுக்களை அழிக்கின்றன. சிட்டுக்குருவிகளை இது பாதிக்கிறது.
எளிதில் வளரக் கூடிய வெளிநாட்டுத் தாவரங்கள் பசுமை பாலைவனங்களையே உருவாக்குகின்றன. இவை உள்நாட்டு உயிரினங்களுக்கு உணவையோ, மற்ற சூழல் கைமாறுகளையோ செய்வதில்லை. எனவே, பராமரிக்க எளிதாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அவற்றை வளர்ப்பது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.
சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளுக்கு உணவு அளிக்கலாம். தானியங்களை மட்டுமே அளிக்க வேண்டும். உப்பும் எண்ணெயும் மிகுந்த, மக்கிய, மீதமான உணவுப் பொருள்களை கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். கம்பு, அரிசி, கோதுமை போன்றவற்றை தரலாம். வெயில் காலங்களில் தண்ணீர் வைக்கலாம்.
கட்டடங்களில் பறவைகள் கூடு கட்ட வசதியாக இடம் விட்டு கட்டலாம். ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் சிட்டுக்குருவி நுழையும் அளவுக்கு ஓட்டையிட்டு, எதிரிகள் அணுகாத உயரத்தில் வைத்துவிட்டால், அதுவே அவற்றின் வீடாகிவிடும்.
சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு - நீங்களும் பங்கேற்கலாம்
சிட்டுக்குருவிகளை முறைப்படி பாதுகாக்கும் நோக்கத்தோடு, இந்த சிட்டுக்குருவிகள் தினத்தில் நாடு முழுவதும் அவற்றை கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. இதில் நீங்களும் பங்கேற்கலாம். தொடர்புக்கு: www.citizensparrow.in இந்த முன்முயற்சியை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமும், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகமும் இணைந்து முன்னெடுத்துள்ளன. எளிமையான சில கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் சிட்டுக்குருவிகளை அழிவில் இருந்து காப்பாற்ற நீங்களும் பங்களிக்க முடியும்.
 தமிழக சிட்டுக்குருவிகள் பற்றி ஆவணப் பட இயக்குநர் கோவை சதாசிவம் அருமையானதொரு ஆவணப் படத்தை “சிட்டு” என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார். தொடர்புக்கு: 99650 75221. இந்த சிட்டுக்குருவிகள் தினத்துக்கு சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கம் பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்துகிறது. தொடர்புக்கு: 94440 49492,mnssparrow@yahoo.in
(நன்றி: அறிவியல்பூர்வமான தகவல்களின் அவசியத்தை வலியுறுத்தி, உடனடியாக அவற்றை தந்த எழுத்தாளரும் காட்டுயிர் ஆராய்ச்சியாளருமான ப.செகநாதனுக்கு)
 - ஆதி வள்ளியப்பன் ( amithatamil@gmail.com)

புதன், மார்ச் 14, 2012

'ஆத்தாவே, காப்பாத்து... அக்கிரமத்தை தடுத்து நிறுத்து!'

பாசக்கார பாரதத் தாய்க்கு, பணிவோட வணக்கம் சொல்லிக்கறான்... உன் பிள்ளை ரோசக்காரக் கோவணாண்டி.

பங்காளி, பகையாளினு பாக்காம... எல்லாருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கற இயற்கை அன்னை மாதிரி, பல மதம், பல ஜாதி, பல பாஷைனு வாழற அத்தனைப் பேரையும் அன்பா அரவணைக்குற அன்னையே... நாடு மோசமான பாதையில போறதைப் பாத்து பொறுக்க மாட்டாமத்தான், இந்தக் கடுதாசியை உனக்கே எழுதுறேன்!

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுற மாதிரி, உன் பாலைக் குடிச்சு வளந்த பிள்ளைகளே... உனக்கு ஒட்டுமொத்தமா பால் ஊத்த பாக்குறாங்க தாயீ. மனுஷன் உடம்புக்குள்ள ஓடுற ரத்தம் மாதிரிதானே, பூமியில ஓடுற நதிகளும். இப்ப அதுக்கே வெச்சுட்டாங்கம்மா ஆப்பு. இந்த அநியாயத்தைப் பொறுக்க மாட்டாமத்தான் இந்தக் கடுதாசியை எழுதறேன்!

எங்க ஊருல ஓடுற வைகை, தென்பெண்ணை, காவிரி, பாலாறு வத்திப் போச்சுனா... அது செய்தியில்ல. அதுகள்ல தண்ணி வந்தாத்தான் செய்தி. ஆனா, மலை பிறந்த காலத்துல இருந்து, இன்னிவரைக்கும் வடநாட்டுல வத்தாம ஓடிக்கிட்டு இருந்த பிரம்மபுத்திரா நதியே... வறண்டுபோச்சாம். கேக்கும்போதே அடிவயித்துல அக்கினி எரியுது.

''போன வருஷம்கூட வினாடிக்கு 20 லட்சம் கன அடி தண்ணியை சுமந்துகிட்டு வந்து, வங்கதேசத்தைப் பயமுறுத்துன ஜீவநதி, இப்ப வறண்டு போச்சே?''னு எங்க ஊருல காய்ஞ்சு கிடக்கற கோணவாய்க்கா மதகுல உக்கார்ந்துகிட்டு, இங்கிலிபீஸு பேப்பரை கையில வெச்சுக்கிட்டு, குமுறித் தள்ளிக்கிட்டு நிக்கறாரு, எங்க இங்கிலிபீஸு வாத்தியாரு.
'காய்ஞ்சு போன பூமியெல்லாம், வத்தாத நதியைப் பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சுப் போயிட்டா யாரால ஆறுதல் சொல்ல முடியும்’னு 'தங்கப் பதக்கம்' 'சினிமா படத்துல ஒரு வசனம் வரும். அந்தக் கதையா துக்கம் தொண்டையை அடைக்குது தாயே!

''அதிர்ச்சியில மூர்ச்சையான அருணாச்சல பிரதேச மக்கள், இன்னும் எழுந்திருக்கவே இல்லை. 'வத்தாத ஜீவநதி... இப்படி வத்திப் போனதுக்கு காரணம் என்ன?'னு நதியோட போக்குலயே போய் ஆராய்ச்சி பண்ணி பார்த்தா, பிரம்மபுத்திராவோட முகத்துவாரம் இருக்கற திபெத் பகுதியில ஒரு அணையைக் கட்டி, தண்ணிக்குத் தடை போட்டுருக்காம் சீனா.

'ஆத்தையும் (பிரம்மபுத்திரா), அருணாச்சல பிரதேசத்தையும் எனக்குக் கொடுனு கேட்டு, அணையைக் கட்டி, மடையை மாத்தி அழிச்சாட்டியம் செய்யுது சீனா'னு நம்ம எல்லையைக் காக்கற சிப்பாய்க சொல்லுறாங்க.
ஆனா, 'அதெல்லாம் ஒண்ணுமில்ல... அணையாவது, சுனையாவது சும்மா கை, கால் கழுவ ஒரு கரையைப் போட்டு இருக்கோம். எங்களால எந்தத் தொல்லையும் இல்லை’னு சொல்லுது சீனா. 'யாரும் பதட்டப்படாதீங்க.... அந்த அணையால நமக்கு பிரச்னை எதுவும் இல்லை’னு வார்த்தைக்கு வலிக்காம வாயைத் தொறந்து இருக்காரு பாரத பிரதமர் மன்மோகன் சிங்''குனு விஷயத்தை விலாவாரிய விளக்கிச் சொல்லி, எங்க வேதனையை ரொம்பவே கிளறிவிட்டுட்டாருங்க எங்க இங்கிலபீஸு வாத்தியாரு!

பாரதத் தாயே... ஏற்கெனவே லஞ்சம், ஊழல், வன்முறைனு உன் உடம்புல முத்திப்போன நிலையில இருக்கு புத்துநோயி. அதையெல்லாம் கண்டுக்கணும்கற அக்கறையே இல்லாம, 'எங்களுக்குத் தேவை பதவி... அதிகாரம்'னு திரியற சுயநலக்கிருமிகளால... இப்ப உன் உசுருக்கே ஆபத்து வந்துருச்சே தாயே. 120 கோடி பிள்ளைகளுக்கு உணவு தயாரிக்க அடிப்படை ஆதாரமே தண்ணிதானே. ஆனா, அதைப் பத்தியே கவலைப்படாத 'குடும்பத் தலைவர்'களை வெச்சுகிட்டு, எப்படிம்மா பொழைக்கிறது.

ஏற்கெனவே ஊரு நாட்டுல இருந்த ஆறு, குளம், ஏரிக்கெல்லாம் கால் முளைச்சு... கட்டடமா நிக்குது. அதையும் கண்டுக்கல, இந்தக் கணக்குப்பிள்ளைக. சொல்லப் போனா அதுக்கு காரணமே இவங்கதான். இதனாலதானே, உள்ளூர்லயே தண்ணிக்காக அண்ணன், தம்பிக அடிச்சுக்கிட்டு சாகுறாங்க. இந்த லட்சணத்துல, வத்தாம வந்துகிட்டிருக்கற தண்ணியும் இல்லாம போனா, என்ன நடக்கும்னு யோசிச்சு பாக்கவே பயமா இருக்கு.

'நாலு நல்லி எலும்பைத் தூக்கிப் போட்டா... இந்தியாவுல எதை வேணாலும், செய்யலாம்’ங்கிற தைரியத்துலதான்... அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான்னு பாதையில போறவனெல்லாம் வீட்டுக்குள்ள வந்து பஞ்சாயத்து பண்றான். இதைப் பயன்படுத்திகிட்டு, சீனாக்காரன், சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டப் பாக்குறான். தட்டிக் கேட்க நாதியில்லாம போனதால, நதிகளை நாசமாக்குறாங்க.

இதுல ஏதோ சர்வதேச சதி இருக்குது தாயே... விவசாயத்த ஒழிச்சு, விவசாயிகளை வெளியேத்தினாதான்... அவங்க நினைச்சபடி பூமிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு பட்டா போட்டுக் கொடுக்க முடியும்னு நினைக்கறாங்களோனு சந்தேகமா இருக்கு. அந்நிய முதலீட்டுக்கும், அதுக்கான கமிஷனுக்கும் ஆசைப்பட்டு... காடுகளை அழிச்சு, உர மானியங்களைக் குறைச்சு, வயல்களை ஒழிச்சுனு விவசாயத்தையே துடைச்சி எறியப் பாக்குறாங்க. அப்பத்தான் பன்னாட்டு கம்பெனிகளுக்கு மலிவு விலையில் கூலி ஆளுக கிடைப்பாங்கனு கணக்கு போடுறாங்க போல.
எப்படியோ இந்த களவாணிக ஒண்ணு சேர்ந்து, வளமான உன்னை... வறுமையில தள்ளப்போறாங்க. சத்தமில்லாம இந்தியாவை இன்னொரு சோமாலியாவா மாத்தப் போறாங்க. நான் சொல்றதை சொல்லிட்டேன். இவங்ககிட்ட இருந்து எங்களை மட்டுமில்ல... உன்னையும் காப்பாத்திக்கறது... உன் கையிலதான் இருக்கு... ஆமாஞ்சொல்லிப்புட்டேன்!

இப்படிக்கு,
கோவணாண்டி


நன்றி: பசுமை விகடன், 25-03-23

செவ்வாய், மார்ச் 13, 2012

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் ! ... பகுதி: 2

வில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில் எனக்கு வாய்த்த நண்பர்களில் இருவர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் க.சு.சுப்பையா தாவரவியலில் அறிவாழம் உள்ளவர். இலக்கியப் பரிமாற்றத்தில் ஈடுபாடு கொண்டவர். சுப்பையா குடும்ப நண்பராகவும் ஆனார்.

நுண்ணறிவும், ஆற்றலும், திறமையும் உள்ளவர்களை முடக்குவதற்கு... மேற்பதவிகளில் இருந்தவர்கள் அயராது பாடுபடுவார்கள்; பலவித வித்தைகளையும் கட்டவிழ்த்து விடுவார்கள். இதிகாச காலம்தொட்டு, இன்றையக் காலம் வரை மேற்பதவிக்காரர்களின் குணம் மாறாது இருப்பது ஆச்சரியம்தான்!

மேற்பதவிக்காரர்களின் கட்டுப்பாடுகள் பிடிக்காதவர்கள், ஒருகட்டத்தில் சலிப்படைந்து வெளியேறுவார்கள். இப்படி வெளியேறியவர்களில் க.சு.சுப்பையாவும் ஒருவர். பின்னாளில் 'ஸ்பிக்' ரசாயன உரக் கம்பெனியின் துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற சுப்பையாவை, தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றின்போது சமீபத்தில் பார்த்தேன். உடல் நலிவுற்ற நிலையில் இருந்தார்.

இன்னொரு நண்பர்... 'ஸ்டோர் காப்பாளர்' சங்கரன். மிக எளிமையானவர். அதுவே அவரது வலிமையும்கூட! அவர் சினந்து நான் பார்த்ததே இல்லை. விதைகள் விளைபொருட்கள், இடுபொருட்கள், கருவிகள் அனைத்தும் இவர் பொறுப்பில் இருந்தன. ஆதலால் எல்லாரையும் சந்திக்கும் அவசியம் இவருக்கு இருந்தது. கோவில்பட்டியைச் சேர்ந்தவர். வெளி செல்வாக்கும் உண்டு. யாராக இருந்தாலும், இவரிடம் ஏதாவது உதவி பெற்றிருப்பார்கள். எட்டயபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரதி விழா நிகழ்வுகளுக்கு என்னை அழைத்துச் சென்றவர்.
பாரதி விழாவின்போது நா.வானமாமலை, நல்லக்கண்ணு, பாலதண்டாயுதம், குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி போன்றவர்களோடு நெருக்கமாக இருக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதுவே... பாரதியுடன் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. 'பாரத சமுதாயம், ஒப்பில்லாத சமுதாயமாகவும்... உலகத்துக்கு ஒரு புதுமையாகவும் விளங்க வேண்டும்' என்கிற உணர்ச்சித் தீ, அப்போதுதான் என்னையும் பற்றிக் கொண்டது.

'நேர் படப் பேசு, நையப் புடை’ என்கிற பாரதி சொல்லுக்கு இலக்கணமாக இருந்தவர்களில் பருத்திப் பிரிவு விஞ்ஞானி ராஜகோபாலின் தந்தையும் ஒருவர். மாவட்ட அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கோயில்களுக்குப் போவதில்லை. வீட்டிலேயே கடவுள் படங்களை வைத்து வழிபடுபவர். அவர் ஒரு முறை கூறிய சொல், வாழ்நாள் முழுவதும் என்னோடு பயணிக்கிறது.

‘YIELDING TO INJUSTICE AND MISUSE OF POWER ARE NOTHING BUT MORAL PROSTITUTION.’

'அநீதிக்கு விட்டுக் கொடுப்பதும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், மனதளவில் விபசாரம் செய்வதைத் தவிர வேறில்லை' வாழ்க்கையின் இலக்கணத்தைச் சொன்ன வார்த்தைகள் இவை. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அநாகரிகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், அந்த வார்த்தைகளின் சத்தியமான உண்மை நெஞ்சை அறைகிறது.

கோவில்பட்டி வந்த ஆறு மாதத்தில் மூன்று நிகழ்வுகள் நடந்தேறின. பண்ணைக்குள்ளேயே எனக்கு வீடு ஒதுக்கப்பட்டுவிட்டது. திருமணம் முடித்து மனைவி சாவித்திரியை அழைத்து வந்துவிட்டேன். பருத்தி ஆராய்ச்சிப் பிரிவில் இருந்த என்னை, 'மேலாளர்' பதவி கொடுத்து, கரிசல் காட்டுப் பண்ணைக்கு மாற்றி விட்டார்கள்.

உடனடியாக எனக்கு இருந்த கடமைகள் இரண்டு. ஒன்று, வேலியாக வளர்ந்திருந்த சீமைக் கருவேல் மரங்களை வேரோடு பெயர்த்து அப்புறப்படுத்த வேண்டும். இரண்டு, 158 ஏக்கர் நிலத்துக்கும் முள்கம்பி வேலி போட வேண்டும்!

சீமைக் கருவேல் வேலியை அப்புறப்படுத்த வேண்டிய முடிவு எப்படி வந்தது?

'வேலியே பயிரை மேய்ந்த கதை' என்பதற்கு ஆதார சம்பவம் அது.
வேலியில் இருந்து 12 மீட்டர் தூரத்துக்குப் பருத்திச் செடி வளர்ச்சி குன்றி இருந்தது. வேலியில் இருந்து 1 மீட்டர் தூரம் தள்ளி 60 சென்டி மீட்டர் அகலம் மற்றும் ஆழத்துக்குப் பள்ளம் தோண்டினார்கள். குறுக்கிட்ட சீமைக்கருவேல் வேர்களை எல்லாம் வெட்டி வீசினார்கள். அடுத்தப் பருவத்தில் இருந்து பருத்திச் செடி நன்றாக வளர்ந்து பூத்துக் காய்த்தது. இந்த வளர்ச்சி மூன்று ஆண்டுகளுக்குத்தான். அதன் பிறகு, மீண்டும் பருத்திச் செடி வளர்ச்சி குன்றியது. நிலத்தை அகழ்ந்து பார்த்த போது ஓர் உண்மை புரிந்தது. சீமைக் கருவேல் மரம்... தனது வேரை, வெட்டப்பட்ட பள்ளத்துக்குக் கீழே அனுப்பியது. பிறகு, வேரானது மேல் எழுந்து நீண்டு பயிரை மேய்ந்தது. சீமைக் கருவேல் வேரில் சுரக்கும் நச்சு, பயிர்ச் செடிகளின் சாரத்தைச் சப்பி எடுத்துவிடுகிறது. இந்த உண்மை தெரிந்த பிறகே வேலிக் கருவேல் மரங்களை அப்புறப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.

வேலிக்காக சீமைக்கருவேல் வளர்த்தது போலவே... சிந்தனை மட்டத்தில் ஒரு நச்சுமரம் வளர்க்கப்பட்டது. 'அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ஆராய்ச்சியும் நடைமுறையும் இந்தியாவில் புகுத்தப்பட்டால், இங்கு விளைச்சல் பெருகும், பஞ்சம் அகலும்' என்ற பிழையான கருத்து அரசியல்வாதிகள் மற்றும் விஞ்ஞானிகளின் முழக்கமாக இருந்தது.

இதற்கேற்ப ஆராய்ச்சிகளும் பயிர் வகைகளும் மாற்றப்பட்டன.
கோவில்பட்டி வட்டார உழவர்கள் எதைப் பயிரிட வேண்டும் என்பதை டெல்லியில் முடிவு செய்தார்கள். அமெரிக்க எண்ணெய் கம்பெனி ராக்பெல்லர் நிறுவனமும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் கைகோத்தபடி புதிய ஒட்டுரகச் சோளம் (C.S.H), ஒட்டுரகக் கம்பு (HB) விதைகளை உண்டு பண்ணி, கோவில்பட்டிக்கு அனுப்பினார்கள். அவற்றுக்கு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி நஞ்சுகள், பூஞ்சணக் கொல்லி நஞ்சுகளைப் பரிந்துரை செய்தார்கள்.

நடப்பில் இருந்த விதைக்கும், டெல்லி இறக்குமதி செய்த விதைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நடப்பில் இருந்தவை... பொறுக்கு விதை முறையில் தனித்தேர்வு (Pure Line Selection) செய்யப்பட்டவை.

நம் மூதாதையர் சில ஆயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்த முறைதான் இந்த பொறுக்கு விதை முறை. விளைந்துள்ள ஒரு நிலத்தில் இறங்கி, நன்கு விளைந்துள்ள சில கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்து, உலர்த்தி, மணிகளை உதிர்த்து சேமித்து வைத்து, தனி நிலத்தில் விதைப்பார்கள். அதில் விளையும் சிறந்த கதிர்களை மீண்டும் கொய்வார்கள்; சேமிப்பார்கள். இப்படி மீண்டும் செய்வதன் மூலம் பெறுவதே பொறுக்கு விதைகள். கோவில்பட்டி 2 வெள்ளைச் சோளம், கே.1 (கோவில்பட்டி) மிளகாய், கே.1 கம்பு, கே.2 ராகி எல்லாம் இப்படித் தேர்வு செய்யப்பட்டவையே. டெல்லி அனுப்பிய சோளமும், கம்பும் அப்படிப்பட்டவை அல்ல. முற்றிலும் வேறுபட்ட இரண்டு செடிகளின் மகரந்தத்தையும் சூலையும் ஒட்டுக் கட்டித் தயாரிக்கப்பட்டவை.
பொறுக்கு விதையில் இருந்து விளைந்தவற்றிலிருந்து திரும்பத் திரும்ப விதை எடுக்கமுடியும். ஒட்டு விதையில் அப்படி செய்தால்... பகுதி செடிகளில் கதிர் வராது, அல்லது கதிரில் மணி பிடிக்காது.

பாரம்பரிய விதைகளை விதைப்பதற்கு என்று ஒரு பருவம் உண்டு. ஒட்டு விதைகளுக்கு அத்தகையக் கட்டுப்பாடு கிடையாது. பாரம்பரிய விதைக்கு ஆட்டு எரு, மாட்டு எரு, பிண்ணாக்கு போதுமானது. ஒட்டு விதைகளுக்கு ரசாயன உரம் தேவை.

பாரம்பரிய விதைகள் உயர்ந்த தரம் உள்ளவை. ஒட்டு விதைகள் கூடுதல் விளைச்சலுக்காகவே உற்பத்தி செய்யப்பட்டவை. அவை, 'அமோக விளைச்சல் ரகங்கள்’ (High Yielding Varieties) என்று பெயர் சூட்டப்பட்டவை. ஆனால், வானம் பார்த்த பூமியில்... அமோக விளைச்சல் ரகங்கள் என்று கொடுக்கப்பட்ட சோளமும், கம்பும் அமோகமாக விளையாதது மட்டும் அல்ல; அதனால் வந்த பக்க விளைவுகளும் பாதகமாகவே இருந்தன!

-இன்னும் பேசுவேன்...

நன்றி:  பசுமைவிகடன், 25 மார்ச் 2012

வியாழன், மார்ச் 08, 2012

கூடங்குளம் போராட்டம் - நாம் கற்க வேண்டிய பாடம் : கீற்று நந்தன்


நீண்ட நாட்களாக மனதில் புரண்டு கொண்டிருந்த ஆவலை கடந்த சனி, ஞாயிறுகளில் தீர்த்துக் கொண்டேன். நண்பர்கள் இருவருடன் கூடங்குளம், இடிந்தகரை சென்றிருந்தேன். கூடங்குளம் பகுதியில் இருக்கிற ஒரு பொறியியல் கல்லூரியில்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் கணிப்பொறியியல் படித்தேன் என்பதால், அந்தப் பகுதியின் நிலவமைப்பு எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். மிகவும் வறண்ட பூமி. அரிதாகத் தென்படும் மரங்கள், உரத்து வீசும் காற்று, 150 மீட்டர் உயர வெள்ளைக் கொக்குகளாக நிற்கும் காற்றாலைகள், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்கள் - இவை இந்தப் பகுதியின் பொதுவான அடையாளங்கள். படித்தவர்கள் என்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மிகவும் பிற்போக்கான பகுதி இது. சாதி வெறி, மதவெறியும் ஒப்பீட்டளவில் இங்கு அதிகம்.
உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் இடிந்தகரைப் பெண்கள்
நான்கு ஆண்டுகள் அந்தப் பகுதியில் படித்த அனுபவத்திலிருந்து யோசிக்கும்போது, தற்போது நடைபெறும் போராட்டத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை ஆண், பெண் பேதமின்றி கலந்து கொள்கிறார்கள் என்பது மிகவும் வியப்பான செய்திதான். ஆறுமாதமாக போராட்டம் நடைபெறுகிறது என்றால் வருமானத்திற்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி மனதிற்குள் இருந்தது. அங்கு போனபோதுதான் அந்தப் போராட்டத்தின் திட்டமிட்ட செயல்பாடுகள் பெரிய ஆச்சரியமாக மனதிற்குள் விரிந்தது. ஆண்கள் வழக்கம்போல் வேலைக்குச் செல்கிறார்கள். பெண்கள்தான் உண்ணாநிலை இருக்கிறார்கள். கைக்குழந்தைகளை முன்னால் படுக்க வைத்து, கையில் பீடி சுற்றியவாறு காலையிலிருந்து மாலை வரை உண்ணாநிலை மேற்கொள்கிறார்கள். ஆண்களில் பெரும்பாலும் முதியவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள். முற்றுகைப் போராட்டம், பேரணி போன்ற நாட்களில் மட்டும் போராட்டக் குழு எடுக்கும் முடிவின்படி, ஆண்கள் வேலைக்குச் செல்லாமல் முற்றுகையில் கலந்து கொள்கிறார்கள்.
அந்த மக்களிடம் சொல்வதற்கு நமக்கு ஒன்றுமில்லை... கற்றுக் கொள்வதற்குத்தான் ஏராளம் இருக்கிறது. மக்களுக்காக உழைப்பது என்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றால், நாம் நிச்சயம் போய் கற்றுக் கொள்ள வேண்டிய இடம் கூடங்குளம்.
காவல் துறை போட்ட வட்டத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தி பழக்கப்பட்ட நமக்கு, 'மக்களின் அனுமதி இல்லாமல் எஸ்.பி. கூட இடிந்தகரை போராட்ட இடத்திற்குள் நுழைய முடியாது' என்ற உண்மை அதிர வைத்தது.
உளவுத் துறையினர் உள்ளே நுழைந்தால் சிறிது நேரத்தில் சுற்றி வளைத்துப் பிடித்து விடுகிறார்கள். பின்பு அவர்கள் கெஞ்சிக் கேட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவார்களாம். போராட்டக்குழு ஆதரவாளர்கள் என்றால், வாஞ்சையுடன் அரவணைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் மனவுறுதி, போர்க்குணத்திற்கு முன் நாராயணசாமியும், மன்மோகன் சிங்கும் நடுநடுங்கிக் கிடப்பதில் ஆச்சரியமில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் இருக்கிற கிராமங்களில் உண்மையிலேயே மக்களின் ஆட்சி நடக்கிறது. அந்தப் பகுதி முழுவதும் எளிய, அதே நேரத்தில் போர்க்குணம் மிக்க‌ மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
koodankulam_dmk
ஈழப் பிரச்சினை, மூவர் உயிர் காப்பு அனைத்திலும் தேர்தல் கட்சித் தலைவர்களின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, தொண்டர்கள் தங்களது உணர்வுகளை அடக்கிக் கொள்வதை சென்னையில் பார்த்திருக்கிறோம். ஆனால், அங்கு நிலைமை அப்படியல்ல.. போராட்டத்திற்கு எதிராக கருணாநிதி பேசியதும், அத்தனை திமுக தொண்டர்களும் தங்களது கரை வேட்டியை எரித்திருக்கிறார்கள். நாங்கள் போயிருந்தபோது திமுக கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் பெரும்பாலோனோர் காலம்காலமாக திமுக தொண்டர்களாக இருந்தவர்கள்.
மறைந்த சுற்றுச்சூழல் போராளி அசுரன் மூலமாக தோழர் உதயகுமார் அமெரிக்காவில் இருந்தபோதே கீற்று இணையத்தை வாசித்திருக்கிறார். அதை அவர் பகிர்ந்துகொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.
போராட்டக் களமாக மாறியிருக்கும் இடிந்தகரை தேவாலயம்
மதியம் முழுவதும் இடிந்தகரையில் இருந்துவிட்டு, மாலையில் கூடங்குளம் அணு உலை பக்கமாகச் சென்றோம். தூரத்தில் 40, 50 போலீஸ்.. நமது கையில் காமிரா, வாய்ஸ் ரெக்கார்டர் எல்லாம் இருந்ததால் கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. பக்கத்தில் போனால் அத்தனை போலிசுக்கும் முன்னால் நாலைந்து போராட்டக்குழுவினர் (பெரும்பாலோனோர்க்கு 50 வயது) கைலி கட்டிக்கொண்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு ரவுசு விட்டுக் கொண்டிருந்தார்கள். போனால் போகிறது என்று போலிசுக்காரங்களை இந்த இடத்திலே விட்டிருக்கிறோம் என்பதுபோல் இருந்தது அவர்களது தோரணை. அசந்துவிட்டோம். கூடங்குளம் அணுமின் நிலைய வாயிலில் இரண்டு செக்போஸ்ட்கள். ஒன்று போலீஸ் செக்போஸ்ட். மற்றொன்று கூடங்குளம் மக்களின் செக்போஸ்ட். மக்களின் செக்போஸ்ட்டைத் தாண்டி, அணுமின் நிலையத்திற்குள் வேலை பார்க்க யாரும் போய்விட முடியாது. முன்பு பத்தாயிரம் வேலை பார்த்த இடத்தில், இப்போது பராமரிப்பு பணிகளுக்காக 90 பேரை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள் மக்கள்.
இத்தனை போலிசு இருக்காங்களே பயமில்லையா என்று கேட்டபோது ஒரு பெருசு பதில் சொன்னார்: "இவங்க எத்தனை பேரைச் சுடுவாங்க... அதுவுமில்லாம அணு உலை திறந்தா எப்படியும் கொஞ்சம் கொஞ்சமா சாகப்போகிறோம். அதுக்கு துப்பாக்கி குண்டுலே ஒரே தடவையா நிம்மதியா போயிருலாம்"
koodankulam_police
வெறும் உயிருக்குப் பயந்து மட்டும் அவர்கள் போராடவில்லை. "யுரேனியத்திலிருந்து மின்சாரம் எடுத்தபின்பு, புளுடோனியம் கிடைக்கும். அதை வச்சி அணு குண்டு தயாரிப்பாங்க.. எங்கோ ஒரு நாட்டுலே அதைப் போடப் போறாங்க.. அங்கேயும் மக்கள்தான் சாகப் போறாங்க.. அதற்கு எங்க ஊரைப் பயன்படுத்துறதை எப்படி அனுமதிக்கிறது?" என்று அவர்கள் கேட்டபோது அவர்களது மனிதநேயம் நெகிழவைத்தது. மாற்று எரிபொருள், மின்பகிர்மானம், பன்னாட்டு நிறுவனங்கள், வல்லரசு நாடுகள், காங்கிரஸ் அரசின் யோக்கியதை, ஈழத் தமிழர்களை காங்கிரஸ் கொன்றது என அவர்கள் அரசியல் அறிவும், தகவல் அறிவும் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள்.
'எங்க மக்களிடம் பேசுங்கள்' என்று மத்திய அரசின் குழுவையும், மாநில அரசுக் குழுவையும் உதயகுமார் கேட்பதற்கு காரணமில்லாமல் இல்லை. போராடும் மக்களின் பிரதிநிதிகளாகத்தான் உதயகுமார், புஷ்பராயன், மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். அனைத்து முடிவுகளும் மக்களிடம் கலந்தாலோசித்தே எடுக்கப்படுகிறது. பிரதிநிதிகளை சமாதானப்படுத்தி காரியத்தை சாதித்துவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அந்த மக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்.
போராட்டத்தின் தளகர்த்தர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்றால் அரசு, வன்முறையைக் கட்டவிழ்க்கத் தயங்காது என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். பெண்கள் சொல்கிறார்கள்.. "ஆம்பளைங்க பின்னாடி இருக்கட்டும்.. அவங்க செத்து, சோத்துக்கு வழியில்லாம நாங்க தவிக்கிறதை விட, நாங்களும், பிள்ளைகளும் குண்டடிபட்டு சாகிறோம்.. அடுத்து அவங்க போராடட்டும்.. கை, கால் ஊனமா பேரப் புள்ளைங்க பிறக்கிறதைப் பார்க்கறதைவிட, மொத்தமாக போராடி சாகலாம்" என்று தீர்க்கமாக சொல்கிறார்கள்.
அந்த எளிய மனிதர்களின் சொல்லாடல்களில் நாராயணசாமி, மன்மோகன் சிங், அப்துல் கலாம், கருணாநிதி, சு.சுவாமி எல்லாம் அடிக்கடி வந்துபோகிறார்கள். அற்பப் புழுக்கள் என்பதைத் தாண்டி அவர்களுக்கு ஒரு மரியாதையும் இல்லை..
போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்று ஆளும் வர்க்கமும், ஆளும் வர்க்கத்தை நக்கிப் பிழைப்பவர்களும் கூறிக்கொண்டிருக்க, உண்மை வேறுவிதமாக அப்பட்டமாக காட்சி அளிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் திரட்டும் அளவிற்கு அங்கு செலவு ஏதும் பெரிதாக இல்லை. ஒரு மீனவர் சொன்னார்: "சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரு நாளைக்கு போராட்டத்திற்கு ஆகுற செலவு என்ன தெரியுமா? 25 லிட்டர் வாட்டர் கேன் 2, 3 தான். நாங்க போராட்டம் நடத்துற சர்ச் எங்க கட்டடம். போட்டிருக்கிற கொட்டகை எங்க கொட்டகை. அதனாலே ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு ஆகிறதே அதிகம்தான். போராட்டக்குழு வெளியூர் போகும்போதுதான் கொஞ்சம் செலவு ஆகும். நாங்க சம்பாதிக்கிறதுலே பத்திலே ஒரு பங்கை போராட்டத்திற்குக் கொடுத்திட்டு வர்றோம். எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து காசு வருதுன்னு சொல்றவன் தைரியமிருந்தா எங்க மக்கள் முன்னாடி வந்து சொல்லட்டும்"
மீனவ மக்கள் தற்சாற்புடைய மக்கள். யாருடைய கையையும் நம்பி வாழ்கிறவர்கள் அல்ல. அதனால் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல. அடித்தால், திருப்பி அடிக்கும் குணம் உடையவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தகரை மீனவர்களுக்கு குடைச்சல் கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை நையப்புடைத்திருக்கிறார்கள். பிறிதொரு முறை போலீஸ் ஒருவரின் துப்பாக்கியைப் பிடுங்கி, அவர் நெஞ்சிலேயே வைத்து, 'ரொம்ப வாலாட்டுனே.. ஊரைத் தாண்டிப் போயிற முடியாது' என்று மிரட்டியிருக்கிறார்கள். அப்படி இருந்த மக்கள்தான் இன்று உதயகுமாரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அமைதி வழியில் போராடி வருகிறார்கள். ஈ, காக்கை கூட அவர்களின் அனுமதியில்லாமல், போராட்ட இடத்திற்குள் நுழைந்துவிட முடியாது. அந்த மக்களை மீறி உதயகுமாரை யாரும் நெருங்கிவிட முடியாது.
அணு உலை வாயிலுக்கு முன்பாக கூடங்குளம் மக்களின் 'செக்போஸ்ட்'
எலியும் பூனையுமாக பகையுடன் இருந்த ஊர்கள்தான் இடிந்தகரையும், கூடங்குளமும். சாதியால் பிளந்திருந்த மக்களின் மனதை உதயகுமார் தனது தன்னலமற்ற தொண்டால் இணைத்திருக்கிறார். எங்க ஊர் காமராசர் என்கிறார்கள் மக்கள்.
இங்கே சில‌ர் கீறல் விழுந்த‌ ரெக்கார்ட்டைப் போல‌ திரும்ப‌த் திரும்ப‌ ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறார்க‌ள், 'ம‌க்க‌ளின் அச்சத்தைப் போக்கிவிட்டு, அணு உலையைத் திற‌க்க வேண்டும்' என்று. ஏதோ அந்த‌ ம‌க்க‌ளிட‌ம் குழ‌ப்ப‌மும், தேவையில்லாத‌ ப‌ய‌மும் இருப்ப‌தாக‌க் க‌ருதிக் கொண்டு சொல்கிறார்க‌ள்.  அவ‌ர்க‌ள் அத்த‌னை விப‌ர‌ங்க‌ளையும் முழுக்க‌ அறிந்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் அச்ச‌மில்லை. மிக‌வும் தீர்க்க‌மாக‌க் கூறுகிறார்க‌ள் 'அணு உலையை மூட‌ வேண்டும்'. அவ‌ர்க‌ளிட‌ம் பிர‌ச‌ங்க‌ம் ந‌ட‌த்தி ஏமாற்றி விட‌லாம் என்ற பேச்சுக்கே இட‌மில்லை. 'அணு உலையை எடுத்திட்டு, அதே க‌ட்ட‌ட‌த்தில் மாற்று வ‌ழியில் மின்சார‌ம் த‌யாரிக்க‌ட்டும். நாங்களே அவர்களுக்கு முழு உதவியையும் செய்கிறோம்' என்கிறார் கூட‌ங்குளப் பெரிய‌வ‌ர் ஒருவ‌ர்.
காவல் துறை சொல்கிற இடத்தில், சொல்கிற நேரத்திற்குள்ளாக ஆர்ப்பாட்டம் செய்து, எந்தத் தீர்வையும் எட்டாமலேயே போராட்டங்கள் முடிந்து விடுவதைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிருக்கும் நமக்கு கூடங்குளம் போராட்டம் பெரிய மலையாக உயர்ந்து நிற்கிறது. மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து கட்சியினரும், இயக்கத்தவர்களும் கூடங்குளம் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. வெறுமனே அங்கு போய் ஆதரவு கொடுப்பது என்பதோடு மட்டுமல்லாமல், எப்படி மக்களைத் திரட்டுவது, எப்படி மக்களுக்கு கற்பிப்பது, எப்படி போராடுவது என்பதையெல்லாம் கற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். நம் சமகாலத்தில் தமிழகத்தில் இப்படி ஒரு போராட்டத்தை யாரும் பார்த்ததில்லை என்பதுபோல் கூடங்குளம் போராட்டம் உள்ளது. இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் ஆவணமாக்க வேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் உள்ளது. அது, அடுத்து போராட வரும் தலைமுறையினருக்கான வேதநூலாக இருக்கும்.
- கீற்று நந்தன் editor@keetru.com)