செவ்வாய், ஜனவரி 31, 2012

(அணு மின்நிலைய) கதிர் வீச்சுக்கு இல்லை மதவெறி!

வயிற்றுப் பசிக்காரனிடம் முழங்கால் பசிக்காரன் உபவாசம் இருப்பது நல்லதுதான் என்று கூறும் நிலையே கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களை நோக்கி வீசப்படும் கணைச் சரங்களால் தோன்றியுள்ளன.  

எதிர்ப்பாளர்களைத் ""தீய சக்திகள்'' என்று சற்றும் கூச்சமின்றிச் சாடுவோர் தங்களை தேசபக்தியின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாகக் கருதிக் கொள்வதுதான் விசித்திரம். கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பை ஒரு நாடகம் என்று கொச்சைப்படுத்துவோர், தாங்கள் ஏற்றுள்ள பாத்திரங்களை மறந்துவிடுகின்றனர். ""உலகமே ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் கதாபாத்திரங்கள்'' என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியுள்ளதை உணர்ந்தால் விமர்சனம் தரம் தாழ வேண்டிய நிலையிருக்காது.  

மேகாலய மாநிலத்தில் அணுமின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியத்தை வெட்டி எடுப்பதற்குத் தடையாக இருந்து போராட்டம் நடத்திவரும் மக்களும் கூடங்குள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் ஏறக்குறைய ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பது என்ன தவறு?  

இன்னும் தெளிவாகக் கூறினால் கூடங்குளத்தில் போராடுபவர்கள் நோயை எதிர்த்தும் மேகாலயாவில் எதிர்ப்பவர்கள் "நோய் முதல்' எது என்பதைக் கண்டறிந்து அதை எதிர்த்தும் போராடி வருகின்றனர் என்பதே உண்மை. அமைப்பாக அணி திரளும்போதுதான் மக்கள் திரளின் வலு கூடுதலாகும் வாய்ப்புகள் உள்ளன. போராட்டம் தொடர்ந்து நடைபெற அமைப்பே அடிப்படையாகும். இந்தியாவுக்கு அணுகுண்டு தேவையென்று கூறுவோர் கைவசமுள்ள 100 அணுகுண்டுகள் போதாவெனக் கூறுகின்ற நிலைக்கு நாம் என்ன செய்ய முடியும்? சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இருப்பதைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே இருப்பதாகப் புலம்புவோரை என்ன செய்வது?

 சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இருப்பதைவிட 100 அணுகுண்டுகள் கூடுதலாக இருந்தால் அவை பயந்து ஓடிவிடுமா?

 பிரதமராக இருந்த நேரு அணுகுண்டு தயாரிக்க வேண்டுமென்று ஏன் விரும்பவில்லை? மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று தொடங்கினால் உறுதியாக அது அணுகுண்டுப் போராகத்தான் இருக்கும்; அப்படியொரு போரின் முடிவில் பூமியில் உயிரினம் எதுவும் மிஞ்சாது என்பதை நன்கு உணர்ந்திருந்த காரணத்தால்தான் போருக்கான பொறி தோன்றும்போதே அதை அணைத்து உலகைக் காக்கும் சமாதானப் புறாவாக விளங்கினார். நீரிலும் நிலத்திலும் நடக்கும் அணுஆயுத சோதனைகளுக்குத் தடை விதிக்கக் கோரிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் அணுஆயுதக் கொள்கையையும் மாற்றி அமைத்துத் திசை திருப்பினார் இந்திரா காந்தி.

 உலகிலுள்ள நாடுகளில் அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகளை எளிதாக விரல்விட்டு எண்ணிவிட முடியும். அவை தவிர, மிகப் பெரும்பான்மையான நாடுகளில் ராணுவம்கூடப் போதுமான வலுவுடன் இருப்பதாகக் கூற முடியாது. மக்கள்தொகை ஒரு கோடிக்கும் குறைவான நாடுகள் ஏராளமாக உள்ளன. சென்னை நகர மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கைக்கொண்ட நாடுகள் இருக்கின்றன. அவற்றிடம் அணுகுண்டு இல்லை.

 கூடங்குளத்துக்கு நேரில் சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அணுமின் நிலையம் ஆபத்தில்லாதது என்று கூறினார். நாளேடுகளில் 4 பக்க விளக்க அறிக்கை தந்தார். தலைசிறந்த அறிவியல் மேதையான அவர், இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமென இளைஞர்களிடத்தில் வெறியூட்டினார்.  

அணுமின் நிலையத்தைக் காப்பாற்ற அவருக்கு ஏன் அக்கறை? கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகள் மறுத்துவிட்ட நிலையில் தமிழகத்தின் தலையில் கட்டப்பட்ட திட்டம்தான் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் என்பதை அவரால் ஒப்புக்கொள்ளாதிருக்க முடியுமா? அம்மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணத்தை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? 

 அணுக்கழிவைப் பாதுகாக்க நூற்றுக்கு நூறு உத்திரவாதமுள்ள முறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற உண்மை அவருக்குத் தெரியாதா? 

 அணுமின் நிலைய விபத்துகளால் ஏற்படும் இழப்பைச் சாலை விபத்து, ரயில் விபத்து, விமான விபத்து ஆகியவற்றுடன் ஒப்பிடுவது எத்தனை அபத்தமானது?  

ஏனைய விபத்துகளில் இறந்தோரின் மரணத்துடன் பாதிப்புகள் கடுமையாகத் தொடர்வதில்லை. ஆனால், அணுமின் நிலைய விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரின் தலைமுறைகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. போபால் நச்சு வாயு விபத்தின் விளைவுகள் தொடர்கதையாகிக் கொண்டிருப்பதை நாம் அறியவில்லையா? 

செர்நோபில் விபத்தின் தாக்கம் அண்டை நாடுகளின் நிலம், நீர், தாவரங்களென, விலங்குகளென விரியவில்லையா?  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்கெனவே பணிபுரிந்தோர், இப்போது பணிபுரிவோர் ஆகியோரைச் சுயேச்சையான மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்த அரசு தயாரா? அதைச் சுற்றி வாழும் மக்களையும் பரிசோதிக்க அரசு ஏற்பாடு செய்யுமா?  

முன்னால் செல்பவரின் காலில் முள் குத்தினால் நாம் எச்சரிக்கையுடன் நடப்பதில்லையா? பிறருடைய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம். பரமார்த்த குருவின் சீடர்கள் ஆற்றின் ஆழத்தைச் சராசரிக் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டது போன்று அணுமின் உற்பத்தியில் கூட்டல், கழித்தல் பார்த்து ஆபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. 

 அணு வல்லமை என்பதன் லட்சணம் வீணாகப் பகையை வளர்ப்பதில்தான் முடியும். இந்தியா போன்ற கனிம வளமுள்ள நாட்டை எளிதில் ஏமாற்றித் தங்களுடைய நலன்களைப் பெருக்கிக் கொள்ள விழையும் நாடுகள் ஆயுத விற்பனைக்காகப் போர்களை விரும்புகின்றன. போர் மேகம் சூழ்ந்துள்ள அச்ச நிலையிலேயே மக்களை வைத்துள்ள நாடுகளின் தலைவர்கள் பதவியில் நீடிக்க வழி காண்கின்றனர்.  

கத்தோலிக்க தேவாலயத்தினர் கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பில் முன்னணியில் இருப்பது எவ்வகையில் தவறாகும்? கிறிஸ்தவ நாடுகளில் அணுமின் நிலையம் இருக்கும் சூழலில் கூடங்குளத்தில் பிரச்னை என்ன? அணுமின் நிலையத்துக்கும் மதத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை உணர்த்துவதே முக்கியமாகும். கடற்கரை கிராமங்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு பெறுவது தேவாலயத்தினரின் பொறுப்பாகும். மீனவர்களான அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் பாதிரியார்கள் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் இருக்க முடியாது.  

மேகாலயாவில் யுரேனியம் வெட்டியெடுக்க கிறிஸ்தவ அமைப்புகள் தடையாக உள்ளனவென்றும் கூடங்குளத்திலும் அவையே பிரதான எதிர்ப்பாக இருக்கின்றனவென்றும் சொல்வதன் மூலமாகக் கிறிஸ்தவர் அல்லாதாரிடையே வெறியைத் தூண்ட முயலும் செயல் வெளிப்படையாக நடக்கிறது.மீண்டும் மீண்டும் இந்தியா அணுவல்லமை பெற வேண்டுமென்று கிளிப்பிள்ளை மாதிரி இடைவிடாமல் கூறிக் கொண்டிருப்பதன் மூலமாக இங்குள்ள வறுமை, பிணி, அறியாமை ஆகியவற்றை மறக்கடிக்க முயற்சி செய்கின்றனர். அரசு தன் ராணுவத்தால் மக்களை அடக்கலாம். தாற்காலிக வெற்றியும் பெறலாம். எனினும் கடுமையான எதிர்ப்பு இருந்தது என்பதை வரலாறு நன்றியுடன் அழுத்தமாகப் பதிவு செய்யும்.

தெ.சுந்தரமகாலிங்கம், 
வத்திராயிருப்பு, 
விருதுநகர் 

நன்றி: தினமணி 23-01-2012

புதன், ஜனவரி 25, 2012

தானே புயல் நிவாரணம் : முதல்வருக்கு கோவணாண்டி கோரிக்கை!

ங்கத் தாரகை... பசுமைத் தாய்... புரட்சித் தலைவி, கருணைக் கடல்... தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா  அவர்களுக்கு, சோக வணக்கம் சொல்லிக்கறான் ஒங்க பாசக்கார கோவணாண்டி! 'தானே’ புயலால தரைமட்டமாகிப் போன வாழ்க்கையை மீட்க, தினம் தினம் போராடிக்கிட்டிருக்கற எங்க மக்களுக்கு, உங்க பரிபூரண ஆதரவைக் கேட்டுத்தான் இந்தக் கடுதாசி!

 'அதான்... அரசாங்கம் சார்புல நிவாரணத்தைக் கொடுத்துட்டிருக்கோமே.. இன்னும் என்ன?’னு நீங்க கேப்பீங்கனு தெரியும்மா. ஆனா, பிரச்னையே அதுதாங்க. நீங்க பிடுங்கச் சொன்ன ஆணியை விட்டுட்டு, தேவையில்லாத ஆணியைத்தான் அதிகாரிங்க பிடுங்கிக்கிட்டு இருக்காங்கம்மா. அதைப்பத்திதான் சொல்ல வந்தேன்.

சோமாலியா நாட்டுல... பட்டினியால குத்துயிரும், கொலை உயிருமா மக்கள் அலையறது அன்றாட காட்சிங்கறது உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படி அலையற அந்த ஜீவனுங்க பின்னாடியே, பொணந்தின்னி கழுகுங்களும் அலையுமாம். 'இந்த உடம்பு எப்ப செத்து விழும்... நாம கொத்தித் திங்கலாம்?'னு! அதேமாதிரிதான் புயல் தாக்குதலால நடைபிணமாக கிடக்கற எங்க மக்களை சுத்திச்சுத்தி அலைஞ்சுகிட்டிருக்குது அதிகாரிகள் கூட்டம். 'தானே’வால பாதிக்கப்பட்டவங்களுக்கு நீங்க கொடுத்த நிவாரணம் மொத்தத்தையும், தானே வெச்சுக்கப் பாக்குது இந்தக் கூட்டம்.
இதுதான் இப்படினா... வார்டு, வட்டம், ஒன்றியம், மாவட்டம்னு இருக்கற ஒங்கக் கட்சி ஆளுங்க, அந்த அதிகாரிகளைவிட மோசமா, நிவாரணப் பணத்துல மஞ்ச குளிக்கப் பார்க்கறது கொடுமையிலயும் கொடுமை!

4 மாச நெல்லு காலி; ஒரு வருச கரும்பு காலி; அம்பது, நூறு வருஷம் நின்னு பலன் கொடுக்குற பலா, முந்திரி, தென்னை எல்லாம் காலி; மொத்தத்துல பிய்ச்சுப் போட்ட தலையணை கணக்கா கிடக்குது புயல் பூமியோட விவசாயம்.

இதையெல்லாம் பார்த்துட்டு ஆளாளுக்கு ரத்தக் கண்ணீர் வடிச்சுட்டிருக்காங்க. ஆறுதல் சொல்ல வேண்டிய அதிகார வர்க்கமோ... ஆளாளுக்கு முறுக்கிக்கிட்டு நிக்கறாங்களாம். விவசாயத்துறை சொல்றதை... வருவாய்த்துறை கேட்கறது இல்லை; வருவாய்த்துறை சொல்றதை... மின்சாரத்துறை கேட்கிறது இல்லை; இவங்க யாரு பேச்சையுமே காவல்துறை கேட்கிறது இல்லை... இப்படி ஒவ்வொரு துறையுமே மூலைக்கு ஒண்ணா திரியுது. இவங்களோட சண்டையெல்லாமே... பாதிப்பை கணக்கெடுக்குறதுக்காக இல்லை. நிவாரணத்தைப் பங்கு போடறதுக்குத்தான்!

கீழ்மட்ட அதிகாரிகள சரியான வகையில வழி நடத்தி, மக்களுக்கு முறையா நிவாரணம் போய்ச் சேரணும்னா, மாவட்ட தலைமையில சரியான அதிகாரிங்க இருக்கணும். இந்த விஷயத்தைப் புரிஞ்சுகிட்டு, புயல் அடிச்சதுமே அந்த இடத்துல சரியான ஆளை அமர்த்தியிருக்கணும். ஆனா, இருபத்தி அஞ்சு நளைக்குப் பிறகு, முழிச்சுக்கிட்டு கலெக்டர்கள இப்பத்தான் மாத்தியிருக்கீங்க. இதுமட்டும் போதாதது... கீழ்மட்டத்துல இருக்கற புல்லுருவிகளையும் கொஞ்சம் களையெடுத்தீங்கனா... புண்ணியமா போகும்!

அப்பன், ஆத்தாளா இருந்து எங்க ஆளுங்களுக்கு இத்தனைக் காலமும் சோறு போட்ட மரங்களெல்லாம் சாய்ஞ்சிக் கிடக்குது. அதை வெட்டி, ஒழுங்குபடுத்தி வெளியேத்தவே இன்னும் ஆறு மாசம் ஆகும் போலிருக்கு. அதுக்கு வழியில்லாம நாங்க கையைப் பிசைஞ்சுகிட்டு நிக்கறோம். இந்த நேரத்துல மரக்கன்னுகள கொண்டு வந்து கொடுத்து 'நடுங்க நடுங்க'னு அதிகாரிங்க சொன்னா... எங்க தலையிலயா நட்டுக்க முடியும்?

முதல்ல, விறகுக்குப் போறது, வேலைக்கு ஆகுறதுனு விழுந்து கெடக்குற மரங்களை பிரிச்சு, அதை அரசே எடுத்துக்கிட்டு, உரியப் பணத்தைக் கொடுக்கச் சொல்லுங்க. 'வலுத்தவன் வெட்டினதே வாய்க்கால்’ங்கிற கணக்கா, இந்த அதிகாரிங்களும், ஒங்க கட்சி ஆளுங்களும் சேர்ந்துகிட்டு, விவசாயிகளோட நஷ்ட கணக்கை அரைகுறையா எடுத்து வெச்சுருக்காங்க. அதையெல்லாம் தூக்கி வீசிட்டு, நல்ல அதிகாரிகள அனுப்பி, முழுக் கணக்கையும் மறுபடியும் எடுக்கச் சொல்லுங்க.

பொத்தாம் பொதுவா பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம்னு சொல்லாம... நீண்டகாலப் பயிர் இழப்பு (பலா, முந்திரி), ஒரு வருடப் பயிர் இழப்பு (கரும்பு, வாழை), குறுகியகாலப் பயிர் இழப்பு (நெல், காய்கறிகள்) என, கணக்கெடுக்க சொல்லுங்க. இதுக்கெல்லாம் உரிய இழப்பீடு எவ்வளவுங்கறத விவசாய பிரதிநிதிகள்கிட்டயும் கேட்டு முடிவு பண்ணுங்க. அப்பத்தான், எங்க ஆளுங்களுக்கு ஏற்பட்ட சோகத்தை முழுசா தீர்க்க முடியும். காலமெல்லாம் அவங்க மனசுல நல்ல முதலமைச்சரா நீங்க நிறைய முடியும்!

கடைசியா ஒரு சில வார்த்தைகள்... நிவாரணம் கொடுக்கறது முக்கியமில்ல. அது சரியா போய் சேர்ந்துச்சானு பாக்குறதுதுதான் முக்கியம். இல்லைனா... மக்களோட கோபம் உங்க பக்கம்தான் திரும்பும். இதுவரைக்கும் உங்க ஆட்சியோட கெட்டப்பேரெல்லாம்... மன்னார்குடி கும்பல் மேல விழுந்துகிட்டிருந்துச்சு. அவங்கள துரத்தி அடிச்சுட்டீங்க! இனி, எது நடந்தாலும் அது உங்களைத்தான் நேரடியா தாக்கும்... மறந்துடாதீங்க!

இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமைவிகடன், 10-2-12

செவ்வாய், ஜனவரி 24, 2012

பாம்பு வாழும் புற்று அல்ல.. பாம்புக்கு வந்த புற்று...!


பாம்பு புற்று என்பதை பலரும் பார்த்திருப்போம். பாம்புக்கே புற்று வந்து பார்க்கமுடியுமா?

பாம்பு புற்று என்று பரவலாக கூறப்படும் புற்றுகள் உண்மையில் பாம்பால் உருவாக்கப்படுவதல்ல. கரையான்களால் உருவாக்கப்படும் புற்றுகளை இந்த பாம்புகள் விலையோ, வாடகையோ கொடுக்காமல் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதே உண்மை.


பாம்பு புற்று இருக்கட்டும். பாம்புக்கு புற்று வந்த கதையை பார்ப்போம்...

கோவை வ.உ.சிதம்பரனார் உயிரியல் பூங்காவில் உள்ள ஐந்து வயதான ஒரு நாகப்பாம்பின் உடலில் சில கட்டிகளை அங்குள்ள உதவியாளர்கள் பார்த்துள்ளனர். அந்தக் கட்டிகள் நாளுக்கு நாள் பெரிதாக வளர்வதோடு, பாம்பும் வழக்கமான உற்சாகத்தோடு இல்லாமல் சோம்பி இருப்பதையும் கண்டு, அந்த விலங்கு காப்பகத்தின் இயக்குனர் மருத்துவர் அசோகன் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஹலோ மிஸ்டர் நாகராஜன்! எப்படி இருக்கீங்க?

மருத்துவர் அசோகனின் ஆய்வில் அந்த நல்ல பாம்பிற்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. அந்த பாம்பிற்கு சிகிச்சை அளிப்பது குறித்து வெளிநாடுகளில் உள்ள கால்நடை மருத்துவர்கள் உட்பட பல நண்பர்களை கலந்து ஆலோசித்த மருத்துவர் அசோகன், அந்த பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்.
இது கேன்சர்தான்... சந்தேகமே இல்லை...
மற்ற பணியாளர்களுடன் உதவியுடன் அறுவை சிகிச்சைக்கான ஆயத்தப்பணியில் இறங்கியபோது வழக்கம்போல மின்சாரம் தடைபட்டது.

மின்சாரம் போயிடுச்சா.. சரி..சரி. அந்த பேட்டரி லைட்டை எடுப்பா


ஐயா! காமெராவை சரியா பிடிங்க. படம் முழுமையா வரணும்...
எனினும் கையிலிருந்த பேட்டரி விளக்கின் உதவியுடன் அறுவை சிகிச்சையை நடத்திய மருத்துவர் அசோகன், அந்த நல்ல பாம்பின் உடலில் இருந்த புற்றுநோய் பாதித்த தசைப்பகுதியை துண்டித்தார்.

இவ்வளவு பெரிய புற்றுக்கட்டி இருந்தா பாவம் மிஸ்டர் நாகராஜன் எப்படி தாங்குவார்..?
அப்பாடா.. ஒரு வழியா புற்றுக்கட்டியை நீக்கியாச்சு...
பின், அந்த நல்ல பாம்பின் உடலில் தையல் போடப்பட்டது.
நல்லா பிடிங்க சார்.. மிஸ்டர் நாகராஜன் சீக்கிரம் சரியாயிடுவார்..!
ஓகே. ஆபரேஷன் சக்ஸஸ்...!


ஒரு குழாய் மூலம் மருந்தும், உணவும் அளிக்கப்பட்டது.
மிஸ்டர் நாகராஜன் வாயைத்திறங்க.. மருந்து சாப்பிட சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்கக்கூடாது...
மிஸ்டர் நாகராஜன்! இதுதான் உங்க உடம்பில் இருந்து எடுத்த புற்றுக்கட்டி.. நல்லா பார்த்துக்குங்க...
பிறகு தையல் போட்ட பகுதியில் கட்டுப்போட்டு சிறப்பு கவனிப்பு பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
ஓகே. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. உடம்பு சீக்கிரம் சரியாகிவிடும்...

மருத்துவர் அசோகன் கால்நடை மருத்துவத்தில் இளங்கலைப் பட்டமும், சமூக சேவையில் முதுகலை பட்டமும் பெற்றவர். மேலே இருக்கும் பாம்புக்கு சிகிச்சை அளித்ததைப் போலவே பல சவாலான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இது மரப்பூனை சார். மரத்திலிருந்து கீழே விழுந்துட்டாங்க அவ்வளவுதான்...


 மனிதர்களுக்கு புற்று நோய் வருவதற்கான காரணத்தை யாரும் இதுவரை திட்டவட்டமாக கண்டுபிடிக்கவில்லை. புகையிலை உபயோகித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் நிகழ்தகவு அடிப்படையிலேயே கூறப்படுகிறது. மாறிவரும் சமூகச்சூழலும், அதனால் ஏற்படும் சூழல் சீர்கேடுகளுமே புற்று நோய் போன்ற கேடுகளின் காரணம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இயற்கையிலிருந்து விலகி வரும் மனித இனத்திற்குத்தான் இத்தகைய கேடுகள் வருவதாக இதுவரை நம்பி வந்தோம். ஆனால் இயற்கையிலிருந்து விலகுவதற்கு வழியே இல்லாத பாம்புகளுக்கும் புற்றுநோய் போன்ற கேடுகள் ஏற்படுவது, நம்முடைய சூழல் எந்த அளவிற்கு சீர்கெட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வற்கான ஒரு அளவுகோலாகவே தெரிகிறது.

வியாழன், ஜனவரி 19, 2012

25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல.


1986 இல் தினமணியில் அணுஉலையின் பாதிப்புகள் பற்றி டி.என்.கோபாலன் அவர்களின் மிக விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது. இந்தக் கட்டுரை அன்றைய காலகட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணுஉலை எதிர்ப் பியக்கங்களின் செயல்பாடும் இந்த விவாதங்களின் வழி தொடங்கியது. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. 1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம். 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 1989 இல் ஜூனியர் விகடனில் இந்த உலையின் ஆபத்துகளை முன்வைத்து கொல்ல வரும் கூடங்குளம்என்ற தலைப்பில் சில கட்டுரை களை எழுதினார் எழுத்தாளர் நாகார்ஜுனன். 1988 இல் நவம்பர் 21 அன்று கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தப் பட்டது. இதே சமயம் இந்தியாவுக்கு வருகை தந்த சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவுக்கு மும்பையிலும், தில்லியிலும் கருப்புக் கொடி காட்ட பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

1989 மே முதல் தேதியில் தண்ணீரைக் காப்பாற்று; உயிரைக் காப்பாற்றுஎன்ற கோஷத்துடன் தேசிய மீனவர்கூட்டமைப்பு தாமஸ் கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பெரும் பேரணி நடைபெற்றது. இதில் 10,000-த்திற்கும் மேற் பட்டவர்கள் பங்கு பெற்றனர். அவர்களின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது பலர் காயமடைந்தனர். இந்த 1989 போராட்டம் பற்றிய ஆவணப் படம் இன்றும் கேரளாவிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பிரபலமான ஒன்று. 1989 ஜூன் 13 வரை மருத்துவர் குமாரதாஸ் அவர்கள் தலைமையில் நெல்லையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அணுஉலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஜூன் 13 அன்று கூடங்குளத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. 1989 இல் பேச்சிப் பாறையில் உள்ள நீரை அணுஉலைக்கு எடுக்கப் போவதாகத் தகவல் பரவியதை ஒட்டி 101 தொடர் பொதுக் கூட்டங்கள் நாகர்கோவில், அதன் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் நடத்தப்பட்டன. 1989 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் கூடங்குளம் அணு உலையைக் கைவிடும் கோரிக்கையை வைத்தன. பேச்சிப்பாறை அணை யில் இருந்து தண்ணீர்க் குழாய் அமைக்க எல்லைக் கற்கள் நடப்பட்டிருந்தன. அந்தக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடைபெற்றது. இப்படி 25 ஆண்டுகளாக நடக்கும் இந்தப் போராட் டத்தில் பெண்களின் பங்களிப்பு எப்பொழுதுமே முதன்மையானதாக இருந்து வந்துள்ளது.

தொடர் எதிர்ப்பின் காரணமாக மூன்று முறை அடிக்கல் நாட்டு விழா கைவிடப்பட்டது. முறையே ராஜீவ் காந்தி, ஆர். வெங்கட்ராமன், கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடைபெறவிருந்த விழாக்கள் அவை. பேச்சிப்பாறை தண்ணீர் மற்றும் மீனவர்கள் கோரிக்கையை ஒன்றிணைத்துப் போராட்டம் இன்னும் வலுப்பெற்றது. தமிழகத்தின் புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்களைப் பெரும் தொகை கொடுத்து தென் தமிழகம் முழுவதும் அணு உலைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்தது நிர்வாகம்.

விடுதலை, தினமணியில் தொடர்ந்து அணுஉலை யின் பாதிப்புகள் பற்றிக் கட்டுரைகள் வெளி வந்தன. பிரதமர் இந்திரா காந்தி அணு உலையின் கழிவுகளைக் குற்றாலம் மலையில் புதைக்க வேண்டும் என்று ஒரு முடிவு செய்தார். அந்த சமயம் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஐராவதம் மகாதேவன் தினமணியில் ஒரு விரிவாக கட்டுரை எழுதினார். இதனை அடிப்படையாக வைத்து எம்.ஜி.ஆர். இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று அறிவித்தார். தமிழக கவர்னர் முன்னிலையில் மதுரையில் நடைபெற்ற ஒரு மிகப் பெரும் பொது நிகழ்வில் இசை அமைப்பாளர் இளையராஜா அணுஉலையை எதிர்த்துப் பேசினார். உடனே அவரது வீட்டிற்கு அன்றே வருமான வரித் துறையினர் ரெய்டு செய்தனர். தமிழில் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கூடங்குளம், செர்நோபில் அணு உலையின் பாதிப்புகள் என பல தலைப்புகளில் வெளிவந்தன. மருத்துவர் ரமேஷ், பிரேமா நந்தகுமார், அ.ஜ.கான், புகழேந்தி, நெடுஞ்செழியன், வி.டி. பத்மனாபன், ஞாநி, நாகார்ஜுனன், ஏ.எஸ்.பன்னீர் செல்வன், சீ. டேவிட், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, கார்முகில், செல்ல பாண்டியன், துறைமடங்கன், அண்டன் கோமஸ், பிரகாஷ், பாமரன், செந்தில் குமார், நீலகண்டன், குமாரசாமி, பிரபாகர், அசுரன், ஐராவதம் மகாதேவன், புருஷோத்தம், சந்தோஷ், மருத்துவர் தெய்வநாயகம், சுப. உதயகுமார் என இங்கு கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தொடர் செயல்பாடு கூடங்குளம் திட்டத்திற்கு எதிராகப் பலரால் முன் வைக்கப்பட்டுள்ளது. (பட்டியல் முழுமையானதல்ல). இயக்குநர் பாலசந்தர், நடிகர் நாசர் உள்ளிட்ட ஏராளமான சினிமா நடிகர்கள் கூடங்குளத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டனர்.

ஃபிரண்ட்லைன் பத்திரிகையில் இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் சூழலியலாளர், உலகமய எதிர்ப்பாளர் பிரபுல் பித்வாய் கடந்த 25 ஆண்டுகளாக கூடங்குளத்தைஎதிர்த்தும், அணுஉலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். திரேந்திர சர்மா, நீரஜ் ஜெயின், அகர்வால், க்ளாட் அல்வாரிஸ், அசின் விநாயக், அனில் சௌத்ரி, அருந்ததி ராய், எம்.வி.என்.நாயர், சுவரத ராஜு, எம்.வி.ராமண்ணா, மூத்த மார்க்சிஸ்ட் எம்.பி.பரமேஸ்வரன் என நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் இந்தியாவில் அணுஉலைகளின் ஆபத்துகளைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளாக அறிவு தளத்தில் செயல்படும்பொழுது எல்லாம் இதனை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அரசு, மக்கள் இதில் பெரும் திரளாகப் பங்கேற்றவுடன் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தத் தொடங்கியது. 2500 கோடி பணம், வெளிநாட்டு சதி, கிறித்துவ தலைமை என தினமும் ஒரு புதிய கண்டுபிடிப்பை அரசும், புதிதாய் முளைக்கும் லெட்டர் பேடு அமைப்புகளும் குற்றம் சாட்டுவது இந்த நூற்றாண்டின் பெரும் நகைச்சுவையாக உள்ளது. உதயகுமாரை அமெரிக்கா தான் இந்த திட்டத்தை முடக்க இங்கு அனுப்பியது என்பது தான் நகைச்சுவையின் உச்சம். இன்று இந்தியாவில் உள்ள மிகப் பெரிய அமெரிக்க ஏஜெண்டுகளே மன்மோகனும் மாண்டேக் சிங் அலுவாலியாவும் தான் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் நிறுவனத்தால் இந்த திட்டத்தை ஒரு கையெழுத்தில் முடக்கிவிடலாம். ஏன் அமெரிக்கா தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும். இவர்களை வைத்துக் கொண்டு உதயகுமாரைப் பற்றி பேசுவது மன்மோகனைக் கொச்சைப் படுத்துவதற்கு சமம், அவரே இதை விரும்பமாட்டார். இதே ரஷ்ய அணு உலையை வங்கத்தை விட்டு விரட்டினார் மம்தா பேனர்ஜி, அவரைப் பார்த்து 2500 கோடி பணம், வெளிநாட்டு சதி என குற்றம்சாட்ட ஏன் இந்தியாவில் எவனுக்கும் தைரியம் இல்லாமல் போனது? அதிகாரத்திற்கும் நிலத்தில் கால்பதித்து நிற்கும் எளிய விளிம்புநிலை மனிதனுக்கும் அணுகுமுறையில் எத்தனை பெரிய வித்தியாசம்.

உதயகுமார் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கிராமங்களுக்கு எல்லாம் செல்லும் பொழுது இந்தக் கிராமத்தினர் எல்லாம் அவரை ஒரு எதிரிபோலவே பார்த்தனர். இந்தப் பகுதியின் வளர்ச்சியை முடக்க வந்தவன் என்றே நினைத்தனர். இந்த மக்கள் எங்களைப் பார்த்த பார்வையில் நானே உதயகுமாரிடம் நோட்டீஸ் விநியோகித்து விட்டுப் பத்திரமாக ஊர் திரும்பிவிடுவோமா என்று கேட்டதுண்டு. ஃபுகுஷிமாவில் நடந்த அணுஉலை வெடிப்பும் அதனை ஒட்டி இங்கு பத்திரிகைகள், நாளேடுகள், தொலைக்காட்சிகள் தொடர்ந்து வழங்கிய செய்திகள், நிகழ்ச்சிகள் தான் மக்களை விழிப்படையச் செய்துள்ளது. இந்த ஊடகங்கள் பரபரப்பாக விற்கும் சரக்கு சக்கை போடுபோடும் தானே. அதனை ஒட்டி கூடங்குளம் அணுஉலையில் நடந்த சோதனை ஓட்டம் அதில் இருந்து இரவு பகலாக வந்த ஓசையில் மக்கள் தூக்கத்தை இழந்தனர். அணுஉலை நிர்வாகம் வந்து கூடங்குளம் கிராம மக்களைத் திரட்டி தரையில் படுங்கள், இது தான் ஐயோடின்என்று வகுப்பு எடுக்க தொடங்கியது. மக்கள் வீதியில் திரண்டனர். அன்றுதான் அவர்கள், “அந்த ஆள கூட்டிட்டு வாங்கடாஎன்று உதயகுமாரை தேடி ஆட்களை அனுப்பியது. நீங்கள் கூறியது எல்லாம் நடக்கும் போல் உள்ளது. நாங்கள் வீதிக்கு வந்துவிட்டோம், எங்களை வழி நடத்துங்கள்என்று உதயகுமாரைக் கேட்டுக் கொண்டனர்.

பெரிய அணைகளுக்கு எதிரான போராட்டம், கனிமங்கள் வெட்டி எடுத்தல், சுற்றுச் சூழலுக்கு எதிரான போராட்டங்கள், மக்கள் வாழ்வாதாரங்களுக்காக நடத்தும் போராட்டம், நிலங்களை இழந்து நகர பிளாட்பாரங்களில் நிர்க்கதியாக நிற்பவர்கள், நாடு மீண்டும் பன்னாட்டு நிறுவனங் களின், ஏகாதிபத்தியங்களின் குடியேற்ற நாடாக மாறி வருவதை எதிர்த்து இரண்டாம் சுதந்திரப் போரை நடத்தி வருகிறார்கள். இவர்களில் யார் போராட்டம் நடத்தினாலும் உடன் அதனை வெளிநாட்டு சதி என்றும், இதற்குப் பின்னால் வெளிநாட்டுப் பணம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை உலகமயத்திற்குப் பின் கூச்சம் இல்லாமல் சொல்ல பழகி விட்டன நம் நாட்டின் பெரு ஊடகங்கள்.

உலகமயம் இவர்களுக்கு வழங்கும் அனுகூலங்களைப் பற்றி நாம் தான் ஆய்வு செய்து எழுத வேண்டும். எது எப்படியோ, பத்திரிகை தர்மம் வாழ்க!

கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்’ - நூலிலிருந்து

வெள்ளி, ஜனவரி 13, 2012

உலைகள்…ஊழல்கள்….

இன்னும் இரண்டு வாரங்களில் கூடங்குளம் அணு உலை இயங்க ஆரம்பித்துவிடும் என்று பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யாவில் அந்த நாட்டு பிரதமரை சந்தித்தபோது அறிவித்தார். இது எப்படி சாத்தியம் என்று இந்த வாரம் சென்னையில் ஒரு டி.வி.நிகழ்ச்சியில் சந்தித்த மத்திய அரசின் உயர் மட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அணுசக்தித் துறை விஞ்ஞானியுமான பாலு அவர்களிடம் படப்பிடிப்புக்கு வெளியே பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன்.

கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டியின் கீழ் இடிந்தகரை பகுதி மக்களுக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிடும். அத்துடன் போராட்டம் முடிந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.


மத்திய அரசைப் பொறுத்தமட்டில் கூடங்குளம் அணு உலை கட்டியபோது சுற்றிலும் உள்ள எல்லா கிராமங்களுக்கும் நல்லது நடந்தது. உலைக்குப் பின்பக்கம் இருக்கும் இடிந்தகரைக்கு மட்டும் அந்த நன்மைகள் போய்ச் சேரவில்லை. அதில் அதிருப்தியடைந்த மீனவர்கள் போராட்டம் தொடங்கினார்கள். அதை உதயகுமார் போன்றவர்கள் கையிலெடுத்து பெரிதாக்கிவிட்டார்கள். அதிருப்தியடைந்த கிராமத்தினருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டால், எல்லாம் பிசுபிசுத்துவிடும் என்று அரசு தரப்பு கணக்கு போடுகிறது. இதையேதான் அப்துல் கலாமும் அங்கே 200 கோடி ரூபாய் செலவில் கிராம வளர்ச்சி திட்டம் நடத்துங்கள் என்று அறிவித்தார்.

கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி ( சி.எஸ்.ஆர்) என்பது இப்போது உலகம் முழுவதும், இந்தியாவிலும் பெரிய தனியார் கம்பெனிகள் செய்துவரும் ஏமாற்று வேலை. ( விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சில விதிவ்லக்குகள் தவிர.) சி.எஸ்.ஆர் என்றால் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு என்று அர்த்தம். இதன் கீழ் எய்ட்ஸ் முதல் ரத்த தானம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என்று விதவிதமாக சமூகத் தொண்டு செய்ய கம்பெனி கொஞ்சம் பணம் ஒதுக்கும். இந்த பண விநியோகத்தை திட்டமிட்டு செய்ய சோஷியல் ஒர்க் படித்த பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் விமானங்களில் பறந்து ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் செமினார்கள் நடத்தி அழிக்கும் பணம் போக எஞ்சியது பயனாளிகளுக்கும் சற்றே பொசியும்.

போபால் விபத்துக்கு நஷ்ட ஈடு முறையாகக் கொடுக்காமல் ஏய்க்கும் டவ் கெமிகல்ஸ், அமெரிக்கக் கடலையே மாசுபடுத்திய எண்ணெய் கம்பெனி பிரிட்டிஷ் பெட்ரோலியம் போன்று தங்கள் தொழிலில் பொறுப்பில்லாமல் செயல்படும் எல்லா கம்பெனிகளும் கூடவே சி.எஸ்.ஆர் மூலம் சமூக சேவை செய்கின்றன. இப்போது இந்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனும் தன் பங்குக்கு சி.எஸ்.ஆரைப் பயன்படுத்திக் கூடங்குளம் மக்களுக்கு குல்லா போடமுடியுமா என்று பார்க்கப்போகிறது.

இன்னொரு பக்கம் கூடங்குளத்தில் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய நிறுவனமான ரோசாட்டம் ரஷ்யாவில் கடும் ஊழல் பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.அந்த விவரங்களைப் பார்ப்போமா?

ரோசாட்டம்தான் ரஷ்ய அரசின் தலைமை அணுசக்தி அமைப்பு. அதன் கீழ் பல்வேறு கம்பெனிகள் இருக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்துதான் ரஷ்யாவுக்குள்ளு வெளிநாடுகளிலும் அணு உலை திட்டங்களை நிறைவேற்றிவருகின்றன. இந்தியாவில் கூடங்குளத்தில் மட்டும் ஆறு உலைகலைக் கட்ட ரோசாட்டத்துடன் பூர்வாங்க ஒப்ப்ந்தம் இருக்கிறது.

இந்த ரோசாட்டம் பற்றியும் அது கட்டி வரும் உலைகள் பற்றியும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் பற்றியும் முழு தணிக்கைக்கும் விசாரணைக்கும் உத்தரவிடவேண்டுமென்று ரஷ்யாவில் இருக்கும் தேசிய ஊழல் எதிர்ப்புக் குழு பிரதமருக்கும் கணக்குத் தணிக்கை அதிகாரிக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறது. 2010ல் மட்டும் ரோசாட்டம் நிறுவனத்தின் கீழுள்ள 35 அதிகாரிகள் ஊழலுக்காக நீக்கப்பட்டார்கள். 2011ல் ரோசாட்டத்தின் கீழ் இருக்கும் வெவ்வேறு துறைகளின் தலைவர்கள் பன்னிரெண்டு பேர் ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.

ரோசாட்டம் பல்வேறு அணு உலைகளைக் கட்டுவதற்காக டெண்டர் விடும்போது வேண்டியவர்களுக்காக டெண்டர் விதிகளை வளைப்பது, தரக் குறைவான பொருட்களை வாங்கிக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவது போன்ற ஆபத்தான ஊழல்களை செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ரோசாட்டத்தின் பல்வேறு டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்த டிரான்ஸ்பரென்சி இண்ட்டர்நேஷனல் அமைப்பும் மாஸ்கோவில் இருக்கும் ஈகோடிபென்ஸ் அமைப்பும் ரோசாட்டம் தான் நிர்ணயித்த பாதுகாப்பு அம்சங்களை தானே மீறியிருப்பது அதன் 87 ஆவணங்களில் வெளிப்பட்டிருப்பதாக கூறுகின்றன.

ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்ட மிகப்பெரிய உயர் அதிகாரி ரொசாட்டமின் துணை இயக்குநர் யெவ்கெனி யெஸ்தரோவ். இவர் ஒரு கோடி 80 லட்சம் அமெரிக்க டாலர்களை சுருட்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இவர்தான் ரோசாட்டம் கட்டும் அணு உலைகளின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்துக்கு பொறுப்பானவர் ! பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை எப்படி பத்திரமாக நீக்குவது என்ற ஆய்வில் இவர் ஈடுபட்டிருந்தாராம்.! இவர் கீழேதான் கதிர்வீச்சு ஆபத்தை தடுக்கும் நிபுணர்கள் பணிபுரிகிறார்கள். இந்த கைதே கண்துடைப்புதான் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

இதற்கு முன்பு 2005ல் ரஷ்யாவின் அணு சக்தித்துறை அமைச்சராக இருந்த அடமோவ் என்பவரும் பெரும் பண மோசடி செய்ததாக ஸ்விட்சர்லாந்தில் இண்ட்டர்போல் போலீசால் கைதானார். அவர் அமெரிக்காவை ஏமாற்றியதாக மெரிக்காவும் ரஷ்யாவை ஏமாற்றியதாக ரஷ்யாவும் வழக்கு தொடுத்தன. அமெரிக்காவுக்கு அவரை அனுப்பியிருந்தால் 20 வருட சிறை கிடைத்திருக்கும். ஸ்விஸ் கோர்ட் அவரை ரஷ்யாவிடம் ஒப்படைத்தது. அங்கே அவருக்கு 4 வருட சிறை தண்டனை விதித்துவிட்டு முதிர்ந்த வயதினர் என்பதால் அதை ரத்தும் செய்துவிட்டார்கள்.எனவெ இப்போது நடந்துள்ள கைதும் கண்துடைப்பு என்றே கருதப்படுகிறது. புகோஷிமா விபத்துக்குப் பிறகு ரஷ்ய அணுசக்தித்துறையின் இமேஜை சரி செய்வதற்காக இப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சூழல் அமைப்புகள் சொல்கின்றன.

ரோசாட்டம் ஜூன் மாதத்தில் நடத்திய உள் ஆய்வறிக்கையின்படி ரஷ்யாவில் இருக்கும் பெரும்பாலான அணு உலைகள் பழையவை. மனித தவறால் விபத்தோ, பூமி அதிர்ச்சியால் சிதைவோ ஏற்பட்டால் அத்தனையும் பெரும் ஆபத்தில் முடியும் என்று உள் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே எல்லாவற்றையும் சரி செய்கிறோம் என்று காட்டுவதற்காக ஒப்புக்கு இந்த ஊழல் கைது நடவடிககைகள் நடத்தப்படுவதாக சர்வதேச சூழல் இயக்கங்கள் கருதுகின்றன.
இப்படி மாபெரும் ஊழல்களும் தரமற்ற நடவடிக்கைகளும் நிரம்பிய சூழலில் விபத்துகள் எந்த நேரமும் நடக்கலாம் என்று அவை தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

உலை கட்டும்போதே ஒரு விபத்து ஆறு மாதம் முன்னால் ஜூலை 14 அன்று நடந்தது ! கூடங்குளத்தில் இருக்கும் அதே மாடல் அணு உலைகளை இப்போது ரஷ்யாவின் லெனின்கிராடிலும் ஈரானிலும் ரோசாட்டம் கட்டி வருகிறது. லெனின்கிராட் உலையில் ஐந்தடி கனமுள்ள கவசச் சுவர்களைக் கட்டும்போது கான்கிரீட் ஊற்றுகையில் இரும்புக் கம்பிச் சட்டங்கள் சிதைந்து நொறுங்கின. சுமார் 1200 டன் இரும்புக் கம்பிச் சட்டங்களையும் இப்போது அகற்றிவிட்டு புதிதாகக் கட்டவேண்டும்.விபத்துக்குக் காரணம் என்ன ? ஊழல்தான்.

தரமில்லாத பொருட்களைக் கட்டுமானப்பணியில் பயன்படுத்துவதாக் ரோசாட்டம் நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்ற ஜனவரியில் இதே உலைக் கட்டுமான இடத்தில் விதிகளைப் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் ரோசாட்டம் கம்பெனியைக் கடுமையாகக் கண்டித்து அபராதங்கள் விதித்தது. கட்டட ஊழியர்களுக்கு குடிநீர் இல்லை. கழிப்பிடம் இல்லை. தீயணைப்பு வசதி இல்லை. இவற்றையெல்லாம் செய்து தரும்வரை வேலையை நிறுத்தும்படி கோர்ட் உத்தரவிட்டது. அணு உலைகள் கட்டும் வேலையில் தரம் குறைவான பொருட்களைப் பயன்படுத்துவதாக ரோசாட்டத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கள சோதனையில் சுமார் ஆயிரம் யூனிட் தரக் குறைவான கான்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூலை விபத்துக்குப் பின் ரஷ்யாவின் அண்டை நாடான லித்துவேனியாவின் வெளிவிவகார அமைச்சர் எல்லையருகே இருக்கும் ரஷ்ய அணு உலைகள் தங்களுக்கு பெரும் கவலை தருவதாக அறிவித்திருக்கிறார். இந்த லேட்டஸ்ட் உலையின் டிசைனே சரியில்லை என்று தோன்றுவதாக அவர் கூறியிருக்கிறார். இப்படி ரஷ்யாவிலும் பக்கத்து தேசத்திலும் கடும் புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்த ரோசாட்டம்தான் கூடங்குளம் உலையையும் நிர்மாணித்திருக்கிறது.

இந்திய அணுசக்தித் துறையில் கட்டும்போதே விபத்தோ, ஊழலோ நடக்காதா? அதற்கும் ஒரு சரித்திர நிகழ்ச்சியைப் பார்ப்போமா?
கர்நாடகத்தில் உள்ள கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 130 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது. நூற்றுக்க்கணக்கான் தொழிலாளர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால் 14 பேருக்குதான் காயங்கள் ஏற்பட்டதாக நிர்வாகம் சொல்லிற்று. இந்த கலசம்தான் கதிரியக்கம் வெளியே பரவாமல் தடுக்கவேண்டிய கவசச் சுவர். இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான்.

விபத்துக்கு என்ன காரணம் ? அணுசக்தி துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் “நெருக்கமான உறவினால்” டிசைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது.

கூடங்குளம் உலை கட்டப்பட்டு வந்தபோது அப்போது குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த அப்துல் கலாம் அங்கே சென்றார். அவரும் பத்திரிகையாளர்களும் உலையை சுற்றிவந்தபோது ஒரு பெரிய இரும்பு கர்டர் கூரையிலிருந்து கீழே விழுந்தது. கலாமும் நிருபர்களும் அந்த இடத்தை அப்போதுதான் கடந்து போய்விட்டதால் அது தலையில் விழாமல் தப்பினார்கள். இதை புகைப்படம் எடுத்த எல்லா புகைப்படக்காரர்களிடமிருந்தும் புகைப்படங்கள் அணுசக்தி துறையினரால் கைப்பற்றப்பட்டன. படத்தை அழித்தபின்தான் நிருபர்களை வெளியே விட்டார்கள்.

ஊழல்,மிரட்டல், லஞ்சம் கொடுத்து மக்களை ஏமாற்றப் பார்த்தல் என்று இருக்கும் சூழலில் என்னதான் விடிவு ? லோக்பால் வந்தால், அதுவும் நாங்கள் சொல்லும் லோக்பால் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சில பேர் மெய்யாலுமே நம்புகிறார்கள். லோக்பாலின் கீழ் விதிவிலக்கு தரப்பட்டிருக்கும் துறைகளில் ஒன்று அணுசக்தித் துறை !

-ஞாநி

நன்றி: கல்கி 7.1.2012

புதன், ஜனவரி 11, 2012

கன்னத்துல அறையறதோட மட்டும் விடமாட்டோம் ! -கோவணாண்டி எச்சரிக்கை

ஒரு கன்னத்தில் அறை வாங்கினது போதாதுனு, மறுகன்னத்தை எப்பவும் தயாரா வெச்சுக்கிட்டே திரியற... மராட்டிய சிங்கம், மத்திய விவசாயத் துறையோட பங்கம்... அடச்சே, ஒரு எதுகை-மோனையில அப்படியே வந்துடுச்சுங்கோ... மன்னிச்சுக்கோங்க. மத்திய விவசாய மந்திரி சரத் பவார் அய்யாவுக்கு, வணக்கம் சொல்லிக்கறான் கோவணாண்டி.


எங்க ஊருல பொங்கல்னாலே, 'உழவர் திருநாள்'னு சொல்லி, என்னைய மாதிரி கோவணாண்டிகளைக் கொண்டாடுவாங்க. அப்படிப்பட்ட நல்ல நாள் சமயத்துல, விவசாயத் துறைக்கு மந்திரியா இருக்கற உங்களை வாழ்த்தி, வணங்கலாம்னுதான் கடுதாசி எழுத நினைச்சேன். ஆனா, பிரதமருக்கு காரசாரமா நீங்க ஒரு கடுதாசியை எழுதி, என்னோட நோக்கத்தையே திசை திருப்பிட்டீங்க!

வழக்கமா எங்க ஊரு தலீவருதான், 'இலங்கைத் தமிழர், தமிழக மீனவர், முல்லை-பெரியாறு'னு பிரதமருக்கு கடுதாசி எழுதியே பூச்சாண்டி காட்டிக்கிட்டிருப்பாரு. இப்ப நீங்களும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துட்டீங்க போல! 'எனக்கு இன்னும் அதிக அதிகாரம் வேணும்'னு கேட்டு, காரசாரமா பிரதமருக்கு கடுதாசி எழுதியிருக்கீங்களாமே?!

குறிப்பா, இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டம், அதாங்க... விவசாயிங்களோட நிலத்தை இஷ்டத்துக்கும் புடுங்கிக்கிட்டு, அவனைக் கோவணத்தோட திரிய விடறதுக்காக வெள்ளைக்காரன் போட்டு வெச்சானே ஒரு சட்டம். இந்தச் சட்டத்தை திருத்துற விஷயத்துல, கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்கிட்ட இருக்கற அதிகாரத்தைப் புடுங்கி, என்கிட்ட கொடுக்கணும்னு கேட்டுப்புட்டீங்களாமே!

'நான்தான் விவசாய மந்திரி. விவசாயம்னா... பூமி, நீர், வானம், ஏரி, குளம், குட்டை, ஆறு, காடு எல்லாம் அதுலதான் அடங்கும். அப்படி இருக்கறப்ப... நிலம் கையகப்படுத்துற அதிகாரத்தை கிராமப்புற மேம்பாட்டு மந்திரிகிட்டயும், நீர் ஆதாரங்கள் தொடர்பான அதிகாரத்தை தேசியத் திட்டக் குழுகிட்டயும் எதுக்காக கொடுக்கறீங்க? அது ரெண்டையும் புடுங்கி, மொதல்ல என்கிட்ட கொடுங்க. இல்லைனா, 2020|ம் வருஷத்துக்குத் தேவையான 280 மில்லியன் டன் உணவு தானியம் கிடைக்காது’னு சாட்டையைச் சொழட்டியிருக்கீங்களாமே!

'யாரு இந்த ஜெய்ராம் ரமேஷ்..? சுத்த கிறுக்கா இருக்கார். பன்னாட்டு, இந்நாட்டு பண முதலைங்க தொழில் தொடங்க நிலம் வேணும்னு கேட்டா... விவசாயிகளுக்கு நாலு காசத் தூக்கி எறிஞ்சுட்டு, நிலத்தைப் பிடுங்கி கொடுக்க வேண்டியதுதானே. அத விட்டுட்டு... நிலங்கொடுத்த விவசாயிகளுக்கு மறுவாழ்வு... மறு குடியிருப்புனு விவரம் கெட்டத்தனமா பேசிட்டு திரியறார். நம்மை வாழவெக்குற பன்னாட்டு, இந்நாட்டுப் பண முதலைங்க எல்லாம் இப்பவே முணுமுணுக்கறாங்க... அவங்களோட கோபத்துக்கு ஆளாகக்கூடாது. அதனால நிலம் கையகப்படுத்துற சட்டத்தை உடனே பிடுங்கி, என் கையில கொடுங்க’னு காரசாரமா விளாசிட்டீங்களாமே!

நீங்க போட்ட போடுல, பிசாசு பிடிச்சது கணக்கா ஆகிப்போயிட்டாராமே நம்ம 'மௌன குரு' மன்மோகன் சிங்!

எல்லா விஷயத்தையும் இங்கிலீஸ் பேப்பர்ல பாத்துட்டு, வழக்கம்போல எங்க ஊரு கோணவாய்க்கா மதகுல உக்கார்ந்துகிட்டு, எங்க இங்கிலிபீஸு வாத்தியாரு பெருசா கச்சேரி வெச்சுப்புட்டாருங்க.

இதைக் கேட்டதுமே... 'ஏற்கெனவே இந்த ஆளுகிட்ட கொடுத்த அதிகாரத்தையெல்லாம்... மக்கள் சேவைக்காக இவரு பயன்படுத்தின அழகு தெரியாதா? எப்பப் பார்த்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட்னு திரியறது தெரியாதா? இதையெல்லாம் பாத்து பூரிச்சுப் போய்த்தான், இவரோட கன்னத்துல ஒரு சீக்கிய இளைஞன் சூப்பரா ஒரு அறை கொடுத்தான். அதைப் பார்த்து உலகமே சிரிச்சுட்டு இருக்கு. இந்த லட்சணத்துல, இன்னும் அதிக அதிகாரம் வேணும்னு எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு கேட்கறாரு இந்த ஆளு. இன்னொரு கன்னத்துலயும் பரிசு கொடுத்தாத்தான் சரிப்பட்டு வருவாரு போல'னு எங்க ஊரு இளந்தாரிக பொங்க ஆரம்பிச்சுட்டாங்க.

அதுசரி, 'என்னால விவசாயம், பொது வினியோகம்னு பல துறைகள கவனிக்க முடியாது. இதனால கிரிக்கெட் விளையாட்டுல என்னால ஒழுங்கா கல்லா கட்ட முடியல. என்கிட்ட இருக்கற கூடுதல் பொறுப்பைத் திரும்ப வாங்கிக்கோங்க'னு கொஞ்ச நாளைக்கு முன்ன, மத்திய அரசுகிட்ட சண்டை போட்டுகிட்டு இருந்தீங்க. இப்ப என்னடானா, கூடுதல் அதிகாரம் வேணும்னு கேக்கறீங்களே... எந்த ஊரு நியாயம்?

பாவம், நீங்களும் என்னதான் பண்ணுவீங்க? உங்களைவிட வயசுல கொறைஞ்ச மந்திரிகளெல்லாம், ஆயிரம் கோடி, லட்சம் கோடினு சம்பாதிக்கறப்ப... உங்களுக்கும் அந்த ஆசை வராம இருக்குமா? இன்னிக்கு நல்லா ஓடுற குதிரை... நிலச் சந்தைதான். அதனால, சரியா அதுமேல கண்ணைப் போட்டிருக்கீங்க... சபாஷ்!

'வளர்ச்சித் திட்டம்', 'தொழில் வளர்ச்சி' னு அரிதாரத்தைப் பூசிக்கிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, முடிஞ்ச வரைக்கும் லாபம் பார்க்கலாம்னு இலாகாவைத் தட்டிப் பறிக்கத் தயாராயிட்டீங்க போல!

அய்யா, தெரியாமத்தான் கேட்கிறேன்... நிலம் கையகப்படுத்துறதுங்கறதே விவசாயிகளையும், விவசாயத்தையும் ஒழிக்கிற முயற்சி. ஆனா, நொடிக்கு நூறு தரம், விவசாய மந்திரினு சொல்லிக்கிட்டு, விவசாயிகளை ஒழிச்சுக் கட்டுற 'நிலம் அபகரிப்பு’ துறை வேணும்னு 'நில வெறி' பிடிச்சு அலையறீங்களே... இது நியாயங்களா?

உங்க சொந்த மாநிலத்துல விவசாயிக கொத்துக் கொத்தா செத்துகிட்டே இருக்காங்களே... அந்த விவசாயிகளை எல்லாம் காப்பாத்தறதுக்கு எனக்கு வானளாவிய அதிகாரம் வேணும்னு கேட்டிருந்தா சந்தோஷப்படலாம். ஆனா, நினைச்ச மாதிரி நிலத்தைக் கையகப்படுத்த முடியலனு பண முதலைங்க கவலைப் பட ஆரம்பிச்சதும், அவங்களுக்காக 'தையதக்கா’னு குதிக்கறீங்களே?

இப்ப இருக்கற மந்திரிகள்ல... ஜெய்ராம் ரமேஷ் ஒருத்தருதான்... ஏதோ விவசாயிகளையும் மனுஷனா மதிச்சி, ஒக்கார வெச்சு பேசறாரு. முடிஞ்சவரை கோவணாண்டிகளுக்கு ஆதரவா இருக்காரு.

ஆனா, 'இந்த ஆளு இப்படி இருந்தா, எங்கள மாதிரி அரசியல் யாவாரிகள் எப்படி பொழைக்கறது?'னு நீங்க பொங்க ஆரம்பிச்சுட்டீங்க.

வேண்டாங்கய்யா... எங்களுக்கு மிஞ்சினது இந்த நிலம், நீச்சுதான். அதையும் தட்டிப் பறிச்சு, பன்னாட்டு, இந்நாட்டுப் பண முதலைங்க கையில கொடுக்க துடிக்காதீங்க. அப்படி நீங்க துடிச்சா... கடைசியில, எங்ககிட்ட மிஞ்சுறது கோவணமாத்தான் இருக்கும்!

அப்படி ஒரு நிலைமை உருவான பிறகு, 'இது மட்டும் நம்மள காப்பாத்த போகுதாக்கும்?'னு நாங்க கோவப்பட ஆரம்பிச்சா... அது நல்லாயிருக்காதுங்க. பசிச்ச வயிறுகள பகைச்சுக்கிட்ட நாடு, உருப்பட்டதா வரலாறே இல்லீங்க!

'வேணும்னா ரெண்டாவது கன்னத்துல அறைஞ்சுக்கோ, பரவாயில்ல. அதுக்குப் பிறகு வேற கன்னம் இல்லியே'னு மட்டும் நினைச்சுட்டு இருந்துடாதீங்க... ஜாக்கிரதை!

இப்படிக்கு,
கோவணாண்டி


நன்றி: பசுமை விகடன் 25-01-2012

செவ்வாய், ஜனவரி 10, 2012

கூடங்குளம் அணு உலையும், மின் தடையில்லா தமிழகம் என்ற மாயையும்…!

ஒருபுறம் கூட‌ங்குளம் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக‌ தொட‌ர்ந்து போராடிவ‌ரும் வேளையில் ம‌றுபுற‌ம் அணு உலை அதிகாரிகளோ எல்லோரிட‌த்திலும் பாதுகாப்பு சான்றித‌ழ்க‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌ன‌ர். அதும‌ட்டுமின்றி கூட‌ங்குள‌ம் அணு உலையிலிருந்து கிடைக்கும் 50 விழுக்காடு மின்சார‌த்தின் மூல‌மாக‌ த‌மிழ்நாட்டின் மின்ப‌ற்றாக்குறை வெகுவாக‌ குறைந்துவிடும் என்றும் அதிகாரிக‌ள் கூறிவ‌ருகின்ற‌ன‌ர். இந்த‌ சூழ்நிலையில் அணு உலையை ஆத‌ரிப்பதா அல்ல‌து எதிர்ப்ப‌தா என்ற‌ குழ‌ப்பமான‌ மனநிலையில் த‌மிழ்நாட்டு ம‌க்க‌ள் இருக்கின்றனர்.

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மின்சாரத்தின் பங்கை ஒரு அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்தினால் நமது ஐயங்கள் எல்லாம் தெளிவுறும். இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் மின்சார துறை எதிர்கொண்டு வரும் தடைகளை கணக்கில் கொண்டு அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் பின்வரும் அட்டவணையில் தெளிவாக விளக்கப்படுகின்றது. தமிழகத்திற்கு வெறும் 405 மெகாவாட் மின்சாரம் தான் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் என்பது இந்த அட்டவணையிலிருந்து கிடைத்த‌ முடிவுகள் மூலம் நமக்கு தெரியவருகின்றது. இதில் இறுதியில் பயனாளருக்கு கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 305 மெகாவாட் ஆகும்


மொத்த அளவு(மெகா வாட்டில்) குறிப்புகள்
கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2*1000 2000 கூடங்குளத்தின் மொத்த உற்பத்தியான 2*1000 என்பது தற்போது இரசியாவில் நடைபெற்று வரும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது 4*1000 என மாறும்
அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும் 1200 எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது. இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.
ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை(அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது) 1,080 இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%) 540 ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் 405 மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.
இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு 305 பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை
இதில் பேச்சுவார்த்தை நலம்பட முடிந்து மேலும் இரண்டு அணு உலைகளையும் சேர்த்தால் 4 அணு உலைகளாக கொண்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் 610

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சாரத்திற்காக அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் ஏற்கனவே ஒரு அணு உலை செயல்பட்டுவருகின்றது. தமிழ்நாட்டின் மின் தேவையை ஈடுசெய்ய மக்களுக்கு எந்த ஒரு கேடும்விளைவிக்காத மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றதா என்பதே நம்முன் இப்பொழுது இருக்கும் கேள்வி

புதுப்பிக்கதக்க மின்மூலங்கள்

புதுப்பிக்கதக்க மின்மூலங்கள்

தமிழ்நாட்டில் இருக்கும் மின் ஆதாரங்களை அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் நம்மிடம் பல மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றன என்பது தெரியவருகின்றது. இது போன்ற சரியான மாற்று முறைகளின் மூலம் நமக்கு பெரிய அளவில் மின்சாரம் கிடைக்கக்கூடும் என பின்வரும் அட்டவணையிலிருந்து தெரிகின்றது. மேலும் தற்பொழுதுள்ள மின்னுற்பத்தி ஆதாரங்களில் இருந்து நமக்கு பயன் கிடைப்பதற்காக, புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் செலவழிக்கப்படும் தொகையில் 20 விழுக்காடு செலவழித்தாலே போதும், அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மரபுசாரி மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் பாதிப்புகள் இதில் எதுவும் இல்லை. புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து மின்னுற்பத்தி தொடங்குவதற்கு நமக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுபோலன்றி இங்கு நாம் பயன் பெறுவதற்கு மிகச்சிறிய காலமே போதுமானது, இதன் மூலம் சமூகத்திற்கு கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியதும், நிலையானதுமாகும்.

தற்பொழுதுள்ள மின்னுற்பத்தியை வைத்தே நாம் பின்வரும் சேமிப்புகளை மேற்கொள்ளலாம். மெகாவாட் குறிப்புகள்
மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு >>500 இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 1,575 தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவ்ய் செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது
தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 2,625 இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.

புதுப்பிக்கப்பட்ட மின் மூலங்கள் மூலம் கிடைக்கும் பயன்கள்

காற்றாலை 700 மெகாவாட் தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
உயிர்ம எரிபொருள் 900 மெகாவாட் உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல் >> 5,000 மெகாவாட் தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல், சூரிய ஒளியின் மூலம் நீரை சூடேற்றும் கருவிகளை மற்ற கட்டிடங்களில் வைத்தல் மிக அதிக அளவு சேமிப்பு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள்……..

மரபு சார் மின்னுற்பத்தி நிறுவனங்களைப் போலல்லாமல் புதுப்பிக்கதக்க மின்மூலங்கள் அதிக செலவு கொண்டதும், நம்பக்கூடியதுமல்ல என்ற வாதங்களும் உள்ளன. நீண்ட கால பயன்பாட்டில் புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காக அரசு செலவிடும் தொகை என்பது மிகவும் குறைவே. நம்மிடம் உள்ள மாற்று வழிகளை எல்லாம் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலம் கூடங்குளம் அணு உலையின் தேவையே இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், கல்பாக்கம் அணு உலையையும் வருங்காலத்தில் மூடிவிடலாம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவான கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகின்றது. இது ”தேசிய சூரிய ஒளி மின்சார ஆணையத்தின்” இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி கோரலிலும் எதிரொலித்துள்ளது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவும் நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பதற்கு ஆகும் செலவும் ஒன்றாகிவிடும்.

அணு உலைக்காக செலவு செய்யப்படும் நேரடி, மறைமுக செலவுகளையும், மாற்று வழிகளின் மூலமாகவும், புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காகவும் செலவு செய்யப்படும் தொகையையும் இவ்விரண்டின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் பயன்களையும் ஆய்வு செய்தால் நாம் அணு உலைக்கு ஆகும் அதிக செலவையும், அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் தெளிவாக காணலாம். இந்த நாட்டிலேயே ஒரு முன்மாதிரியான மின் கொள்கையை தமிழ்நாடு வருவாக்குவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.

தற்பொழுது செயல்பட்டு வரும் மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை குறைப்பதற்கும் , அணு உலை பேரழிவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கும் வேறு வழியில்லாததால் நாட்டின் மின் தேவை, மின்னுற்பத்தியை சீராக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடு உள்ளது.வீட்டில் கிடக்கும் ஒரு பழைய நாற்காலியை பழங்கால பொக்கிசம் என்று ஏமாற்றி விற்பதற்காக சில மன நோயாளிகளை பணக்காரர்கள் போல தயார் செய்து அவர்கள் அனைவரும் அந்த நாற்காலியை ஏலம் எடுப்பதற்காக வந்திருப்பதாகவும், அந்த நாற்காலி பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனையாகும் என்று ஏலக் கடைக்காரரின் தலையில் கட்டிவிடுவார் நடிகர்.பாண்டியராஜன். அது போலவே மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலை என்ற பழங்கால நாற்காலியை மக்களின் தலையில் கட்டுவதற்காக இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகிறோமா ????

– சங்கர் சர்மா

மின் கொள்கை ஆய்வாளர்

நன்றி – Dia Nuke Org.

மூலப்பதிவு – http://www.dianuke.org/power-benefits-for-tamil-nadu-from-kknp/

மொழியாக்கம் – நற்றமிழன்.ப

திங்கள், ஜனவரி 09, 2012

அப்துல் கலாமும் கூடங்குளமும் - பொய்யும் உண்மையும்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் கூடங்குளம் சென்ற அன்றையதினம் இந்து ஆங்கில நாளிதழ் அவருடைய மிகப்பெரும் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. Nuclear power is our gateway to a prosperous future என்ற அந்தக் கட்டுரை இந்தியாவுக்கு அணுசக்தி அவசியம் தேவை என தனது வாதங்களை மிக ஆணித்தனமாக எடுத்துரைத்தது. அக்னிச் சிறகுகளைப் படித்த அதே வேகத்தோடுதான் படித்தேன். இரண்டு முறை படித்தேன். கட்டுரையின் உள்ளடக்கத்தையும் அதன் நோக்கத்தையும் உடனே புரிந்துகொண்டேன். தக்க சமயத்தில் மத்திய அரசுக்கு கலாம் உதவியிருக்கிறார் என்பதை மறுநாள் கட்டுரைக்கு கிடைத்த வாசகர்கள் வரவேற்பைக் கொண்டு அறிந்துகொண்டேன். அணு உலை ஆதரவாளர்களுக்கு மிகப்பெரும் உதவியைக் கலாம் செய்திருக்கிறார். ஆனால் கலாமின் கட்டுரையை மறுத்து பேச ஏராளம் உள்ளது.


ஒவ்வொரு அணுவினுள்ளும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சக்தி உள்ளது. கரிம எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களின் சக்தியைவிட அணுவின்சக்தி பலலட்சம் மடங்கு அதிகம். ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு 50 சரக்குப்பெட்டிகளில் ஏற்றப்பட்டுள்ள 10000 டன் நிலக்கரி தரும் சக்தியை 500 கிலோ யுரேனியம் தாது தரும். இன்னமும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால், 62. 5 கிலோ தோரியத்திலிருந்து இந்த சக்தியை எடுத்துவிடலாம் என்ற பாலபாடத்திலிருந்து ஆரம்பிக்கும் டாக்டர் கலாம், இன்றைய நவீன யுகத்தின் பல தேவைகளுக்கு சக்தி எப்படி அவசியமானது என்பதை விவரிக்கிறார். வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக சக்தி அவசியம் எனக் குறிப்பிடும் கலாம், சராசரி அமெரிக்கன் சராசரி இந்தியனைவிட 15 மடங்கு அதிகமாக சக்தியை செலவிடுவதாக ஒரு புள்ளி விபரத்தையும் சுட்டிக்காட்டுகிறார். (அப்படி அதிக சக்தியைச் செலவழித்து, தினவெடுத்துப்போய் த‌ன்னை சோத‌னை என்ற‌ பெய‌ரில் அவம‌திக்கும் அமெரிக்க‌ தேச‌த்தை போனால் போக‌ட்டும் என‌ விட்டுவிட‌க்கூடிய‌ மாபெரும் ச‌க்தி க‌லாமுக்கு மட்டுமே உண்டு.)

இன்றைய நவீன உலகமய யுகத்தில் இந்தியாவின் தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. நம் கட்டுமானத் துறையையும், 75 கோடி மக்கள் வசிக்கிற 6 லட்சம் கிராமங்களையும் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் மிகு சக்திகளாக மாற்றுவதே இந்தப் பத்தாண்டுகளின் குறிக்கோள் என கலாம் கூறுகிறார். அதற்கு அணுமின்சாரம் எப்படி உதவும் என அவர் கூறவில்லை. நாடு சுதந்திரமடைந்ததிலிருந்தே கிராமப்புறங்களும் அதன் வாழ்வும் நமது ஆட்சியாளர்களால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. நாட்டின் எல்லாப் பகுதிகளும், எல்லா மாநிலங்களும் சீரான வளர்ச்சியைப் பெறவைக்க மத்திய அரசிடம் திட்டங்கள் இல்லை. மஹாராஷ்டிரா மாநிலத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். உலகத் தரத்திலான கட்டுமானங்களும், வாழ்க்கையும் மும்பையில் குவிந்து கிடக்க, மாநிலத்தின் மற்றொரு பகுதியான விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலைகள் சில லட்சங்களைத் தொட்டுவிட்டன.

நாடு முழுவதும் நகர்ப்புறங்கள் வீக்கமடைந்து கிராமப்புறங்கள் சூம்பிப்போக விடப்படுகின்றன. கிராமப்புற மக்கள் விவசாயத்தைக் கைவிட்டு சாரை சாரையாக நகர்ப்புறங்களுக்கும், வேறு மாநிலங்களுக்கும் குடிபெயர ஆரம்பித்துவிட்டனர். நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கைகளை கலாம் படிக்காமல் இருந்திருக்கமாட்டார். ஆட்சியாளர்கள் கூறும் 9, 10 சத வளர்ச்சி என்பது மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சில கோடி பேருக்கு மட்டுமே என்பதும், டாட்டா-அம்பானிகளின் வளர்ச்சி 100 சதவீதத்தைத் தாண்டும் என்பதும், கிராமப்புற ஏழை மக்களின் வளர்ச்சி மைனஸில்தான் என்பதையும் கலாம் நிச்சயம் அறிந்திருப்பார். இந்தியா உலகமயத்தின் பிடியில் சிக்கியபிறகு இத்தகைய வளர்ச்சிதான் சாத்தியமாகியிருக்கிறது என்பதை கலாம் நிச்சயம் உணர்ந்திருப்பார். உலகம் முழுவதும் நிதிமூலதனங்கள் பற்றியும், அதன் ஆன்லைன் சூதாட்டங்களையும் கலாம் அறிந்திருப்பார். கிராமப்பொருளாதாரத்தைச் சீரழித்துப் போட்டிருக்கிற உலகமயக் கொள்கைகளை நீக்கினால் மட்டும்தான் கிராமப்பொருளாதாரம் மேம்பாடடையும். கிராமப்புற மக்களை கிராமங்களிலிருந்து வெளியேற்றாத, அவர்களின் பொருளாதாரத்திற்கு நீடித்த வளர்ச்சியை அளிக்கக்கூடிய திட்டங்கள்தான் தேவை. அதற்கு மின்சாரம் தேவை என்பது நூறில் ஒரு கூறுதான். ஏனெனில் இதைச் செயல்படுத்த ஆட்சியாளர்களின் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவேண்டும். அதனால்தான் அணுமின்சாரத்தோடு கிராமப்புற வளர்ச்சியை கலாம் ஒப்பிடும்போது அவ்வளர்ச்சி(!) கிராமப்புறங்களை மேலும் மேலும் சின்னாபின்னமாக்கிவிடுமோ என அஞ்சவே தோன்றுகிறது.

கலாமின் புரா(PURA)திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு வழங்குதல் என்பது இதன் உள்ளடக்கம். நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து கிராமப்புறங்களில் சிறந்த தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை தொலைத்தொடர்பு நிறுவனமும்(தற்போது BSNL), கிராமப்புறங்களின் பட்டி தொட்டியெங்கும் மின்வசதிகளை மாநில மின்சாரவாரியங்களும் செய்துகொடுத்துள்ளன. ஆனால் இன்றைய நவீன உலகமய யுகத்தில் இந்நிறுவனங்கள் திவாலாகட்டுமாறு மத்திய, மாநில அரசுகளால் கைவிடப்படுகின்றன. கலாம் முதலில் இதைத் தடுத்து நிறுத்தவேன்டும்.

நம்முடைய பொருளாதாரத்தின் பலத்தைப்பற்றி கலாம் பேசுகிறார். 2008-ல் 1 ட்ரில்லியன் டாலர்(1 ட்ரில்லியன்=1000 பில்லியன், 1 பில்லியன்=100 கோடி)என்ற இலக்கத்தை நம் பொருளாதாரம் அடைந்துவிட்டது. சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் கழிந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2016-க்குள்ளாக இது 2 ட்ரில்லியன் டாலர் என்ற அளவையும், 2025 வாக்கில் 4 ட்ரில்லியன் டாலர் என்ற அளவையும் இந்தியப்பொருளாதாரம் தொடும் எனவும் கலாம் கூறுகிறார். இத்தகைய மிகப்பெரும் வளர்ச்சியை எட்ட மிகப்பெரும் மின்சக்தி தேவை. தற்போதைய மின்தேவையான 1, 50, 000 மெகாவாட்டிலிருந்து, 2030 வாக்கில் 9, 50, 000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என கலாம் கூறுகிறார். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்தப் பேச்சுவார்த்தைகளின்போதும், ஒப்பந்தத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கருத்துத் திரட்டல்களை எதிர்கொள்ளவும் எதிர்கால மின் உற்பத்தியில் அணுமின்சாரத்தின் பங்கு குறித்த மிகையான புள்ளி விபரங்களை அரசும், அதிகாரிகளும், அணுமின் விஞ்ஞானிகளும் இட்டுக்கட்டியதைப் பற்றி நாம் அறிவோம். ஹோமி ஜஹாங்கீர் பாபா அடியெடுத்து வைத்து பரப்பிய அணுமின்சக்தி பற்றிய புனைவுகள் இன்றைக்கு அப்துல்கலாம் வரைக்கும் முழுவீச்சுடன் நாடுமுழுவதும் செறிவாய் பரப்பப்பட்டு வருகின்றன. இதுவ‌ரை ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ கோடி ரூபாய்க‌ளை முழுங்கியுள்ள‌ ந‌ம‌து அணுச‌க்தித்துறை இன்றுவ‌ரை 4385 மெகாவாட்டுக‌ளை

ம‌ட்டுமே மின் உற்ப‌த்தி செய்ய‌ முடிந்துள்ள‌து என்ப‌தை அறியும்போது, நாட்டின் மொத்த‌ மின் உற்ப‌த்தியில் இது வெறும் 2. 85 சத‌விகித‌ம் ம‌ட்டுமே என‌ உண‌ரும்போது, க‌லாம் எடுத்துரைத்த‌ இந்த‌ ட்ரில்லிய‌ன் டால‌ர் பொருளாதார‌ம் இன்றைக்கும் வ‌றுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள‌(ஒரு நாளைக்கு 32 ரூபாய் கூட‌ ச‌ம்பாதிக்க‌ முடியாத‌)ப‌ல‌ கோடி ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தாம‌ல் எதை நோக்கி திசை திருப்ப‌ப்ப‌டுகிற‌து என்ப‌தை என்ணி வேத‌னைப்ப‌டாம‌ல் இருக்க‌முடிய‌வில்லை.

40 வ‌ருட‌ப் ப‌ழ‌மையான‌ புகுஷிமா அணு உலை விப‌த்து, பொருளாதார‌த்தில் வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌ மாற‌ நாம் காணும் க‌ன‌வைத் த‌ட‌ம்புர‌ள‌ அனும‌திக்க‌ வேண்டுமா? என‌ க‌லாம் கேட்கிறார். பொருளாதார‌த்தில் வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌ மாறுவ‌து ம‌ட்டும்தான் கலாமின் ல‌ட்சிய‌மாக‌ இருக்கிற‌து. அப்போதுதான் அணுச‌க்தித்துறைக்கு ப‌ல்லாயிர‌ம் கோடிக‌ளையும், இந்திய‌ன் ச‌ந்திர‌னில் இற‌ங்குவ‌த‌ற்கு ப‌ல்லாயிர‌ம் கோடிக‌ளையும், அக்னி-9, 10, 11 என‌ தொட‌ர்ச்சியாக‌ உற்ப‌த்தி செய்ய‌ ப‌ல்லாயிர‌ம் கோடிக‌ளையும் நாம் செல‌விட‌முடியும்!அன்பில் வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌, அமைதியில் வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌ இந்தியா அமைந்திட‌ அவர் விரும்ப‌வில்லை. அப்ப‌டி விரும்பியிருந்தால் 1998 அணுவெடிப்புச் சோத‌னையில் முன்ன‌ணி த‌ள‌ப‌தியாக‌ அவ‌ர் நின்றிருக்க‌மாட்டார். ந‌ம‌க்கும் பாகிஸ்தானுக்கும், ந‌ம‌க்கும் சீனாவுக்கும் ஆயுத‌ப்போட்டியை ப‌ல‌நூறு ம‌ட‌ங்கு பெருக்கிய‌ ப‌ல‌வித‌ ஏவுக‌ணைக‌ளை அவ‌ர் உருவாக்கியிருக்க‌மாட்டார். கலாம் உருவாக்க‌வில்லையென்றால் இந்தியா ஏவுக‌ணைக‌ளை உருவாக்கியிருக்காது அல்ல‌து வாங்கியிருக்காது என்று அர்த்த‌ம‌ல்ல‌. ஏவுக‌ணைக‌ளை, பேர‌ழிவு ஆயுத‌ங்க‌ளை, அணுவெடிப்புக‌ளை ஒரு ந‌ல்ல‌ செய்தியாக‌ குழ‌ந்தைக‌ள்வ‌ரை கொண்டுசென்ற‌துதான் அவர் புரிந்த‌ மிக‌ப்பெரும் த‌வ‌று.

'ஜெர்ம‌னி அணு உலைக‌ளை மூட‌ப்போவ‌தாக‌ அறிவித்துள்ள‌தை முன்வைத்து நாமும் அணுமின் உணு உலைக‌ள் வேண்டாம் என்று கூறுவ‌து த‌வ‌று. சில‌ அணுமின் உலைக‌ளை இழ‌ப்ப‌த‌னால் அத‌ன் மின் உற்ப‌த்தியில் எந்த‌ப் பாதிப்பும் ஏற்ப‌ட‌ப்போவ‌தில்லை. மேலும் யுரேனிய‌த்தின் வ‌ள‌ம் ஜெர்ம‌னியில் அருகிப்போய்விட்ட‌தால் த‌ன‌து எதிர்கால‌ அணுமின் உற்ப‌த்திக்கு வேற்று நாடுக‌ளைச் சார்ந்திருக்க‌ அது விரும்ப‌வில்லை'என‌ க‌லாம் கூறுகிறார். 2007‍ல் ஜப்பானில் காஷிவசகி அணுமின் உலை பூகம்பத்தால் சேதமடைந்து 317 கேலன் கதிரியக்கம் கலந்த தண்ணீர் கடலுக்கு திருப்பிவிடப்பட்டதைத் தொடர்ந்தும், அதே ஆண்டு ஜெர்மனியில் இரண்டு அணு உலைகளில் ஏற்பட்ட விபத்தையடுத்தும்தான் ஜெர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சர் நாட்டின் பழமையான அணு உலைகளை மூடிவிடவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். எனவே யுரேனிய வளம் தங்களிடம் இல்லை என்பதைக்காட்டிலும் அணு உலைகள் தவறானவை என்ற அவர்களது புரிதலே ஜெர்மனியின் முடிவுக்குக் காரணம். கலாம் கூறுவதுபோல யுரேனியம் தாதுப் பற்றாக்குறைதான் காரணம் என வைத்துக்கொள்ளுவோம். அப்ப‌டியானால் யுரேனிய‌த்தின் தேவைக்கு இந்தியா ம‌ட்டும் ஒவ்வொரு நாட்டிட‌மும் கையேந்தி நிற்க‌வேண்டுமா?இந்த‌க் கையேந்த‌ல் இறுதியில் அமெரிக்காவிட‌ம் ம‌ண்டியிடுவ‌தில் போய் முடியும் என்ப‌தை க‌லாம் அறிய‌வில்லையா?

வளர்ந்த நாடுகள் அணுமின்சாரத்தை மிகையாக உற்பத்தி செய்யவல்லவையாக இருப்பதை கலாம் புள்ளி விபரங்களோடு பட்டியலிடுகிறார். அணுமின்சாரத்தை அதிகம் உற்பத்தி செய்வதால்தான் அவை வளர்ந்த நாடுகளாக இருக்கின்றன என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் கலாம், வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகள் வளர்ந்த நிலையை அடைய விரும்பவில்லை என்றும், அதனால்தான் அணுமின்சாரம் உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கு எதிரான‌ நிலையை அந்நாடுக‌ள் எடுக்கின்ற‌ன‌ என்றும் க‌லாம் கூறுகிறார். இந்தியா அணுமின்சார‌ம் உற்ப‌த்தி செய்வ‌தை எந்த‌ மேலைநாடும் எதிர்த்த‌து கிடையாது. சொல்ல‌ப்போனால் க‌லாம் ப‌ட்டிய‌லிட்டிருக்கிற‌ அமெரிக்கா, பிரான்ஸ், ஜ‌ப்பான், ர‌ஷ்யா, கென்யா, உக்ரைன், க‌ன‌டா, இங்கிலாந்து என‌ கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லா நாடுக‌ளுமே இந்தியா அணுமின்சார‌ம் உற்ப‌த்தி செய்ய‌ வேண்டும், அத‌ற்கு த‌ங்க‌ள் நாடுக‌ளின் அணு உலைக‌ள் அல்ல‌து யுரேனிய‌ம் விற்ப‌னை செய்ய‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌தையே விரும்புகின்ற‌ன‌. இந்நாடுக‌ளுட‌ன் இந்தியா த‌னித்த‌னியே அணுச‌க்தி ஒப்ப‌ந்த‌த்தையும் செய்துகொண்டுள்ள‌து. எல்லா நாடுக‌ளிலும் அணுமின்ச‌க்திக்கு எதிரான‌ இய‌க்க‌ங்க‌ள் ம‌ட்டும்தான் தீவிர‌மாக‌ப் போராடிவ‌ருகின்றன. 'இந்தியாவின் தேவைக்கு என்ன‌ வேண்டுமோ அதை இந்திய‌ர்க‌ள்தான் தீர்மானிக்க‌வேண்டும்' என்ற‌ க‌லாமின் கூற்றைத்தான் பொன்னெழுத்துக்க‌ளால் பொறிக்க‌வேண்டும். நம் நாட்டிற்கு எது தேவை என்ப‌தை இந்திய‌ அதிகார‌வ‌ர்க்க‌ம் தீர்மானிக்க‌க்கூடாது. இந்திய‌மக்க‌ள்தான் தீர்மானிக்க‌வேண்டும். அத‌ன்ப‌டி மான்சான்டோவும், வால்மார்ட்டும், டவ் கெமிக்க‌லும் இந்தியாவில் நுழைய‌ அனும‌திக்க‌முடியாது. அணுமின் உலைக‌ள் ப‌ற்றிய‌ உண்மையான‌ விப‌ர‌ங்களை பொதும‌க்க‌ள் முன்பு வைக்கும்போது அணுமின் உலைக‌ளையும் இந்திய‌ம‌க்க‌ள் நிராக‌ரிப்பார்க‌ள் என்ப‌தில் ச‌ந்தேக‌மேயில்லை.

மிகத்தூய்மையான மின்சக்தி காற்றிலிருந்தும், சூரியனிலிருந்தும்தான் பெறப்படுகின்றன என ஒப்புக்கொள்ளும் கலாம், அதன் பேரளவு உற்பத்தி குறித்து சந்தேகம் தெரிவிக்கிறார். உலகெங்கிலும் 29 நாடுகளில் 441 அணுமின் உலைகள் தயாரிக்கும் 375000 மெகாவாட் மின்சாரம்தான் நம்பத்தகுந்த மூலம் என கலாம் தெரிவிக்கிறார். சூரிய மின்சக்தி, காற்றுமின் சக்தி குறித்த தொழில்நுட்ப ஆய்வுகளை பரந்த அளவுக்கு செயல்படுத்தி, அணுசக்தித் துறைக்கு செலவழிக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இத்துறைகளுக்கு செலவழித்தால், சூரிய, காற்று மின் உற்பத்தி பன்மடங்கு உயரும் என்பது கலாமுக்குத் தெரியாததல்ல.

அணுமின் உற்பத்தி குறித்த, அணு உலைகள் பற்றிய மக்களின் பயங்கள் குறித்து கலாம் கேலி பேசுகிறார் என்று கூட சொல்லலாம். பெரும்பாலான அணு உலை எதிர்ப்பு அமெரிக்கா ஜப்பானில் வீசிய அணுகுண்டுகளிலிருந்து கிளர்ந்தெழும்பிய காளான் மேகங்கள் பற்றிய புகைப்படங்களைப் பார்த்து எழுந்த பயம்தான் என்பது கலாமின் கூற்று. அனகொண்டாவைப் பார்த்து மட்டும் பயப்படுங்கள், நம்முர் நல்லபாம்புகளைக் கண்டு ஏன் பயம்? என்று கலாம் நேரடியாக சொல்லிவிட்டுப் போகலாம். கடந்த நூற்றாண்டின், ஏன் இதுவரை மனிதகுல வரலாற்றிலேயே மிகக்கொடுமையான கண்டுபிடிப்பாக அணுப்பிளப்பை சொல்லலாம். 375000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறதே என்று பார்க்காமல், பல லட்சக்கணக்கான ச‌மாதிகளை அணு உருவாக்கியுள்ளது. இன்னமும் உருவாக்கும் என்று ஒப்பிடும்போதுதான் மனிதகுலத்தின் வலி என்னவென்பதைப் புரிந்துகொள்ளமுடியும். "அணுகுண்டு என்றால் என்ன?அணு உலை என்றால் என்ன?இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்க‌ள்!அணுகுண்டு என்ப‌து மிக‌ப்பெரும் வெப்ப‌த்தை, க‌திர்வீச்சை வெளியிடும் ச‌க்தி கொண்ட‌ பொருள். அணு உலை என்ப‌து மித‌மான‌ வெப்ப‌த்தை வெளிப்ப‌டுத்தி, அத‌ன் ப‌ய‌னை மின்சார‌ம் த‌யாரிக்க‌ உத‌வும் அமைப்பு. அணுமின் உலைக‌ளில் ஏற்ப‌டும் விப‌த்து என்ப‌து சுற்றுவ‌ட்டார‌த்தில் சேத‌த்தை ஏற்ப‌டுத்த‌வ‌ல்ல‌து. அணுகுண்டை போன்று நேர‌டியான உயிர்ப்ப‌லிக‌ள் எதுவும் ஏற்ப‌டுவ‌தில்லை. செர்னோபிள் விப‌த்தையொட்டி புற்றுநோயால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் 4000 பேர். நேர‌டியாக‌ விப‌த்தில் இற‌ந்த‌வர்க‌ள் 57 பேர்". க‌லாமின் இந்த‌ போத‌னைக‌ளும், த‌வ‌றான‌ப் புள்ளிவிப‌ர‌ங்களும் அவ‌ர் மீது நாம் வைத்துள்ள‌ ந‌ம்பிக்கைக‌ளை அசைத்துப்பார்க்கிற‌து.

செர்னோபிள் விப‌த்தைய‌டுத்து ஏற்ப‌ட்ட‌ உயிர்ப்ப‌லிக‌ள் ப‌ற்றி அரசின் அதிகார‌ப்பூர்வ‌ அறிவிப்பு என்ன‌ தெரியுமா?"அங்கு ப‌ணிபுரிந்த‌ 28 ப‌ணியாளர்க‌ள் மற்றும் 15 பொதும‌க்க‌ள் மொத்த‌ம் 43 பேர் ம‌ட்டுமே". ஆனால் உண்மை நில‌வ‌ர‌ம் என்ன‌?நியூயார்க் அறிவிய‌ல் க‌ழ‌க‌ம் 2009-ல் Chernobyl : consequences of the catastrophe for people and environment என்ற‌ 327 ப‌க்க‌ அறிக்கையை வெளியிட்ட‌து. அது என்ன‌ சொல்கிற‌து தெரியுமா? 'செர்னோபிள் விப‌த்தால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ உக்ரைன் ம‌ற்றும் ர‌ஷ்ய‌ப் ப‌குதிக‌ளில் 1990 முத‌ல் 2004 வரை ந‌ட‌ந்துள்ள‌ இற‌ப்புக‌ளில் 4 ச‌த‌விகித‌ம் செர்னோபிள் விப‌த்தால் நேரிட்ட‌வை'. இப்புள்ளி விப‌ர‌த்தின் ப‌டி ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் செர்னோபிள் விப‌த்து ஏற்ப‌டுத்திய‌ கொடும் நோய்க‌ள் க‌ண்டு இற‌ந்திருக்கிறார்க‌ள்.

செர்னோபிளோடு ஒப்பிடும்போது புகுஷிமா ஒன்றுமே இல்லை என்ற‌ க‌லாமின் கூற்றும் பிர‌ச்சினையை திசை திருப்பும் ஒன்றாகும். ஹில்லாரி கிளின்ட‌னின் ஆலோச‌க‌ராக‌ விள‌ங்கும் அணு விஞ்ஞானி ராப‌ர்ட் ஆல்வாரேஸ் எழுதுகிறார்:"புகுஷிமா 4ம் அணு உலையில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ எரிபொருள் சேமிப்ப‌க்கிட‌ங்கு ஒன்றில் இருக்கும் சீசிய‌ம் 137-ன் அள‌வான‌து, இதுவ‌ரை பூமியின் வட‌ப‌குதியில் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ எல்லா வ‌ளிம‌ண்டல‌ அணு வெடிப்பு சோத‌னைக‌ளின்போது வெளிப்ப‌ட்ட‌ சீசிய‌ம்-137 அள‌வைவிட‌ அதிக‌ம். இந்த‌க் கிட‌ங்கில் ம‌ட்டும் வெடிப்பு ஏற்ப‌ட்டால், செர்னோபிளைப் போல‌ 3 முத‌ல் 9 ம‌ட‌ங்கு வ‌ரை க‌திரியக்க‌ப்பொருட்க‌ள் வெளிப்ப‌ட்டு சேத‌த்தை ஏற்ப‌டுத்தும்".

In Fukushima's Wake என்றக் கட்டுரையில் அலெக்ஸாண்டர் காக்பர்ன் பின்வருமாறு எழுதுகிறார்: "அமெரிக்கா மொத்தம் 104 அணு உலைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் பலவும் ரொம்பவும் பழமையானவை. இவற்றுள் 24 அணு உலைகள் புகுஷிமாவைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டவை. வடக்கு கரோலினாவிலுள்ள ஸரோன் ஹாரிஸ் அணுமின் நிலையத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு வேறு இரண்டு அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கமோ, சுனாமியோ வேண்டாம். ஒரு அறிவார்ந்த பயங்கரவாதி இம்மின்நிலையத்தின் தடுப்புகளை ஊடுருவி உலையின் குளிர்விக்கும் கருவிகளை சேதப்படுத்தி விடுவதாக வைத்துக்கொள்வோம். அதன்பிறகு அங்கு ஏற்படும் ஒரு தீவிபத்தானது 140000 புற்று நோயாளிகளை உருவாக்கும். சுற்றளவில் பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலங்களை நாசமாக்கும்".

காலம் செல்ல செல்ல தொழில்நுட்பம் முன்னேற முன்னேற அணு உலை விபத்துகள் வராமல் தடுக்கும் மக்களின் சக்தியும் அதிகரிக்கும் என்று கலாம் கூறுகிறாரே தவிர, விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்கமுடியும் என்பதை கலாம் உறுதியாகச் சொல்லவில்லை. மனிதத் தவறுகளும், பயங்கரவாதச் செயல்களும் அணுமின் உலைகளை அணு குண்டுகளாக மாற்றும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.

அணு உலை விபத்துகளை ரயில் விபத்தோடும், விமான விபத்தோடும் ஒப்பிட்டுப்பேசுவது கலாமுக்கு வாடிக்கையாகிப் போய்விட்டது. முன்பு ஒருமுறை இவ்வாறு ஒப்பிட்டுப் பேசியது என் நினைவிலிருக்கிறது. தற்போது டைட்டானிக் கப்பலுக்கும், அப்பல்லோ ராக்கெட் முயற்சிகளுக்கும் கலாம் தாவுகிறார். ஒவ்வொருவருடமும் விமானவிபத்தில் 15000 பேர் வ‌ரை உயிரிழக்கும் போதும், 1912-ல் டைட்டானிக் கப்பல் விபத்தில் 1500 பேர் வரை உயிரிழந்தபோதும், அப்பல்லோ விண்வெளிப்பயணம் 10 முறை தோல்வியடைந்தபோதும் மனிதன் சோர்ந்திருந்தால், பின்வாங்கியிருந்தால் இன்று கண்டம் விட்டு கண்டம் விமானத்திலும், கப்பலிலும் பயணம் செய்யமுடியுமா?அல்லது நிலாவில்தான் வைத்திடமுடியுமா?நியாயமான கேள்விதான். இன்னொரு கேள்வியையும் கலாம் கேட்டிருக்கலாம்:"ராமேசுவரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையிடம் தொடர்ச்சியாக அடிவாங்கிக்கொண்டு மீன்பிடிக்கச் செல்லவில்லையா?"

ஒரு அணு உலையில் ஏற்படுகின்ற விபத்துகளையும், நாட்டில் அன்றாடம் நடக்கும் விமான, ரயில் விபத்துகளையும் ஒப்பிடுவது அறமற்றது என்று சொல்வதைத்தவிர வேறு என்ன சொல்லமுடியும்?

2010-ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி அணு ஆயத வல்லமை பெற்றுள்ள உலகின் 9 நாடுகளில் மொத்தம் 22000 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதில் 8000 அணு ஆயுதங்கள் உடனடியான செயல்பாட்டிற்குத் தயாராக இருப்பதாகவும், அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கத்தினர் முதலில் இந்த அணுஆயுதங்களில் 90 சதவிகிதத்தை வைத்திருக்கும் அமெரிக்கா மற்றும் ரஷிய நாடுகளை எதிர்த்து இயக்கம் நடத்தவேண்டும் எனவும் கலாம் கூறுகிறார். அணுமின் நிலையங்களையே எதிர்ப்போர் அணு ஆயுதங்களையும் நிச்சயமாக எதிர்க்கத்தான் செய்வார்கள். அதில் கலாமுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம். அணுமின் நிலையங்கள் வேண்டாம் என்பதற்கான முக்கியமான காரணமே 22000 அணுஆயுதங்களின் எண்ணிக்கை மேற்கொண்டும் உயர்ந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தினால்தான். ஏனென்றால், உலகின் பல நாடுகளில் புதிது புதிதாக அணுமின்நிலையங்கள் நிறுவ முயற்சி செய்யப்படும் வேளையில், மேலும் பற்பல நாடுகள் அணுஆயுத வல்லமைக் கொண்ட நாடுகளாக மாறும் அபாயம் இருப்பதையும், அவை மிக எளிதாக தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிடும் வாய்ப்புகள் இருப்பதையும் கலாம் வேண்டுமானால் மறுக்கலாம். யதார்த்தத்தை யாராலும் மறைக்கமுடியாது. அடுத்த சில ஆண்டுகளில் ஈரானும், சவூதி அரேபியாவும், சிரியாவும் அணுஆயுதம் பெற்ற நாடுகளாகிவிடும். சர்வதேச அணுசக்தி கமிஷனின் ஆய்வுப்படி அடுத்த 30, 40 வருடங்களில் ஏறத்தாழ 30 நாடுகள் அணுஆயுதங்களை உற்பத்தி செய்யும். அவை தீவிரவாதிகளின் கைகளுக்கு எளிதில் செல்லும். எல்லாவற்றிற்கும் மூல காரனம் அணுமின் உலைகள் என்பதை மீண்டும், மீன்டும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

ப‌ல‌ ஆயிர‌ம் ஆண்டுக‌ள் நீடித்து நிலைக்க‌க்கூடிய‌ அணுக்க‌ழிவுக‌ளை ந‌ம‌து எதிர்கால‌ ச‌ந்த‌திக‌ள் எப்ப‌டியாவ‌து எதிர்கொள்ள‌ட்டும், அதைப்ப‌ற்றி இன்று வாழும் நான் ஏன் க‌வ‌லைப்ப‌ட‌வேண்டும் என்ற‌ அணுமின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் ம‌ன‌நிலையை அவ‌ர்க‌ளின் சுய‌ந‌ல‌த்தின் வெளிப்பாடாக‌, அவர்க‌ளின் வ‌ல்லாதிக்க‌த்தின் புற‌வ‌டிவ‌மாக‌ நாம் பார்க்க‌லாம்.

இதுவ‌ரை அமெரிக்கா ச‌ம்பாதித்து வைத்துள்ள‌ அணுக்க‌ழிவுக‌ளில் பாதிய‌ள‌வு வாஷிங்ட‌ன் அருகே, ஹான்ஃபோர்டில் ம‌ட்டும் உள்ள‌து. இர‌ண்டாம் உல‌க‌ப்போர் காலம் தொட‌ங்கி இன்றுவ‌ரை(ப‌னிப்போர் ந‌டைபெற்ற‌ கால‌த்தில் ம‌ட்டும் உச்ச‌ம்) அது த‌யாரித்த‌, சோத‌னை செய்த‌ அணுஆயுத‌ங்க‌ளின் க‌ழிவுக‌ள்(யுரேனிய‌ம், புளுட்டோனிய‌ம் உட்ப‌ட‌) 200 கிட‌ங்குக‌ளில், 2 ல‌ட்ச‌ம் ட‌ன்க‌ள் அள‌வு இங்கு குவிந்துள்ள‌து. இவை அனைத்தும் உய‌ர் அபாய‌ம் கொண்ட‌ க‌திரிய‌க்க‌க் க‌ழிவுக‌ள். க‌ட‌ந்த‌ 60 வ‌ருட‌ங்க‌ளில் உருவான‌ இக்க‌ழிவுக‌ள் க‌ழிவுச் ச‌க‌தியாக‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. மிக‌ உய‌ர் க‌திரிய‌க்க‌முள்ள‌ இந்த‌க் க‌ழிவுக‌ளை திட‌ப்பொருளாக்கி, பின்ன‌ர் க‌ண்ணாடி போன்ற‌ப் ப‌டிக‌ங்க‌ளாக‌ மாற்றி, பெரும் பெரும் க‌ண்ணாடிப்பெட்ட‌க‌ங்க‌ளினுள் வைத்து புதைக்க‌ப்ப‌ட‌வேண்டும். இவ்வாறு செய்வ‌த‌னால் உட‌ன‌டியாக‌ அது காற்றில் க‌ல‌ப்ப‌தில்லை. க‌ண்ணாடியின் வேதிப்பொருட்க‌ள் நியூட்ரானை உறிஞ்சும் த‌ன்மை கொண்டிருப்ப‌தால் அணுப்பிள‌ப்பு நிக‌ழவும் அத‌னுள் ந‌டைபெற‌ வாய்ப்பில்லை. ஆனால் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ளுக்குப் பின்ன‌ர் என்ன‌ ந‌ட‌க்கும் என‌ க‌ற்ப‌னை செய்து பாருங்க‌ள்! அந்த‌க் க‌ண்ணாடிப்பெட்ட‌க‌ங்க‌ள் உடைந்து போக‌லாம். உள்ளே இருக்கும் திட‌க்க‌ழிவுக‌ள் துண்டு துண்டாக‌ச் சித‌றி ம‌ண்ணோடும், த‌ண்ணீரோடும் க‌ல‌க்க‌லாம். அல்ல‌து மேலும் தூள்தூளாகி வ‌ளிம‌ண்ட‌ல‌த்தில் க‌ல‌க்க‌லாம். ந‌ம‌து எதிர்கால‌ச் ச‌ந்த‌திக‌ளுக்கு நாம் விட்டுச்செல்லும் உல‌க‌ம் இத்த‌கைய‌துதானா?ஏற்க‌ன‌வே ஹான்போர்டின் அணுக்க‌ழிவு சேமிப்புக்கிட‌ங்குக‌ளிலிருந்து க‌சிவு ஏற்ப‌ட்டு கொல‌ம்பியா ஆறு மாசுப‌ட்டுக்கொண்டிருப்ப‌தையும் நாம் சுட்டிக்காட்ட‌வேண்டும். எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ இக்க‌ழிவுக‌ளைக் கையாண்டு, இறுதியில் புதைக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கும், அத‌ன்பின்ன‌ரும் அப்புதைவிட‌ங்க‌ளைப் பாதுகாக்க‌வும் ஆகும் செல‌வு என்ன‌?அதை யார் த‌ருவ‌து?ப‌லான‌ அமெரிக்காவுக்கே இத்த‌கைய‌ப் பிர‌ச்சினைக‌ள் என்றால் ந‌ம‌க்கு?!

கூட‌ங்குள‌ம் அணுமின் உலைக‌ளிலிருந்து வ‌ர‌ப்போகும் அணுக்க‌ழிவுக‌ளிலிருந்து க‌லாம் கூறுவ‌து போல‌ 75 ச‌த‌விகித‌த்தை ம‌றுசுழ‌ற்சி மூல‌ம் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டாலும் எஞ்சிய‌க் க‌ழிவுக‌ளை 40, 50 ஆண்டுக‌ள் க‌ழித்து என்ன‌ செய்ய‌ப்போகின்றோம் என்ப‌த‌ற்கு எந்த‌ ப‌திலும் இல்லை. 1000 மெகாவாட் அணுமின் உலையான‌து ஆண்டொன்றுக்கு 27 ட‌ன்க‌ள் மிக‌ உய‌ர் அபாய அணுக்க‌ழிவையும், 310 ட‌ன்க‌ள் உயர் அபாய‌ அணுக்க‌ழிவையும், 460 ட‌ன்க‌ள் குறை அபாய‌ அணுக்க‌ழிவையும் உருவாக்க‌வ‌ல்ல‌து. கூட‌ங்குள‌த்தில் த‌ற்போது 1000 மெகாவாட் திற‌னுடைய‌ இர‌ண்டு மின் உலைக‌ள் உள்ள‌து. மேலும் 1000 மெகாவாட் திற‌னுடைய‌ 4 அணு உலைக‌‌ள் நிறுவ‌ப்ப‌டும் என‌ அர‌சின் அதிகாரிக‌ளும், அமைச்ச‌ர்க‌ளும் அறிவிக்கின்ற‌ன‌ர். உருவாகும் க‌ழிவின் அள‌வை நீங்க‌ளே க‌ண‌க்கிட்டுக் கொள்ளுங்க‌ள்.

"நாம‌ல்ல‌, நாடுதான் முக்கிய‌ம்" என்ற‌ ஒரு அரிய‌க் க‌ருத்தை அறிய‌ முடியாத‌வர்க‌ளின் தாக்க‌மும் கூடங்குள‌ம் போராட்ட‌த்திற்கான‌ மிக‌ முக்கிய‌ கார‌ண‌மாக‌ க‌லாம் கூறுகிறார். சுத‌ந்திர‌ப் போராட்ட‌க்கால‌த்தில் காந்தியும், தில‌க‌ரும்கூட‌ தேச‌த்துரோகிகளாக‌ அன்றைய‌ அதிகார‌வ‌ர்க்க‌த்தால் குற்ற‌ம் சும‌த்த‌ப்ப‌ட்ட‌தை நோக்கும்போது, க‌லாம் கூறிய‌து ப‌ற்றி போராட்ட‌க்கார‌ர்க‌ள் பொருட்ப‌டுத்த‌வேண்டிய‌தில்லை. "வெறும் கூட்டத்தால் மாற்றத்தைக் கொண்டுவரமுடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது"என்றும் கலாம் கூறுகிறார். அரபு நாடுகளில் சமீபத்திய அமைதிப் புரட்சி வெறும் மக்கள் கூட்டங்களால்தான் சாத்தியமானது. முகமது கடாபி, ஹோஸ்னி முபாரக், ஸ்டாலின் போன்ற தனிமனிதர்களும்கூட வரலாறு(!)களைப் படைத்திருக்கிறார்கள்.

கூடங்குளம் அணுமின் உலைகள் வழிகாட்டும் நெறிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கிறது என்றக் கூற்றை குறிப்பிடும் கலாம், வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை என்கிறார். இதுவரை இந்தியாவில் கட்டப்பட்டுள்ள அணு உலைகளில் எவ்வளவு விதி மீறல்கள் உள்ளனவோ?!பூம்புகாரை கடல் கொண்டது பற்றிக் குறிப்பிடும் கலாம், கூடங்குளத்தில் பலமான நிலநடுக்கமோ, சுனாமியோ ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார். ரிக்ட‌ர் அளவுகோலில் 6 வரை ஏற்படும் நிலநடுக்கத்தைத் தாங்கவல்ல சக்தி கூடங்குளம் அணு உலைகளுக்கு உண்டு என்கிறார். அப்படியானால் 6 க்கு மேல் பூகம்பம் வந்தால்? வராது என உறுதிபடத்தெரிவிக்கும் கலாமின் கூற்று ஒன்றும் வேத வாக்கல்ல! கதிரியக்கம் மரபணுக்களைப் பாதிக்காது என்கிறார். கதிரியக்கம் டி. என். ஏ. வைப் பாதிக்கும். ஆனால் அப்பாதிப்பை சரிசெய்யும் சக்தி செல்லுக்குள்ளேயே உண்டு என்கிறது அறிவியல். அதாவது டி. என். ஏ. வின் பாதிப்புகளை சரி செய்யும் சக்தியை செல் இழந்துவிடுமானால் கதிரியக்கப் பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாகத் தொடரும். அணுமின் உலைகளுக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் தேசப்பாதுகாப்புக்கு எதிரான கருத்துகள் என்று கலாம் முத்தாய்ப்பாக தனது கூரியப் பிரச்சாரத்தை முடிக்கிறார். இந்திய தேசத்தின் பாதுகாப்பை மேருமலை போன்று தனது பேனா முனையில் தூக்கிப்பிடித்திருக்கும் கலாமை எண்ணும்போது வியப்புதான் மேலிடுகிறது. கோபம் கொஞ்சம் கூட வரவேயில்லை.

- செ.சண்முகசுந்தரம்

( c.shanmughasundaram@gmail.com)

நன்றி:அம்ருதா, ஜனவரி-2012 & கீற்று.காம்