புதன், டிசம்பர் 12, 2012

கூடங்குளம் அணு உலை சட்டப் போராட்டம் - கோ. சுந்தர்ராஜன்


அணுசக்தியை ராணுவரீதியாக மட்டுமன்றி ஆக்கபூர்வமாகவும்கூடப் பயன்படுத்தக் கூடாது என்பதே பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் அடிப்படையான நிலைப்பாடு. தொழில்நுட்பரீதியில் அணு சக்தி மனித குலத்துக்கு எதிரானது என உறுதியாக நம்புகிறோம். அணு உலை விபத்துக்கள் மட்டுமல்ல அவற்றின் ஒட்டு மொத்தச் செயல்பாடுகளுமே மனிதர்கள், இயற்கை, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு எதிரானது. எனவே அணு சக்தியின் பயன்பாட்டை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது எமது இயக்கத்தின் ஆழமான நம்பிக்கை. அது உண்மையும் கூட. யுரேனியத்தின் தொடர்வினையைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இன்னும் வளர்த்தெடுக்கப்படவில்லை. அணுக்கரு பிளவு என்னும் வினை ஒருமுறை தொடங்கப்பட்டுவிட்டால் பிறகு அதை நம்மால் ஓரளவு மட்டுப்படுத்த முடியுமே தவிர முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. நூறு சதவிகிதம் வெற்றிகரமானதும் பாதுகாப்பானதுமான இயந்திரம் என உலகில் எதுவும் கிடையாது. இது இயந்திரங்களின் அடிப்படை விதி. எனவே எப்போதும் ஆபத்தை உள்ளடக்கியிருக்கும், மனித சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பாதுகாப்பற்ற இந்த அணு சக்தியை நாங்கள் எதிர்க்கிறோம்.


கூடங்குளம் அணு உலைத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே எங்கள் அமைப்பு இதை எதிர்த்து வந்திருக்கிறது. கூடங்குளம் அணு உலைக்கெதிரான முதல் வழக்கை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 2011இல் தொடர்ந்தோம். அணு உலை என்பது அரசின் கொள்கை முடிவு. அதற்கெதிராக நீதிமன்றதுக்கு செல்வது நடைமுறையில் சாத்தியமில்லாதது. அது மக்கள் மன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டியது. அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றங்களால் தீர்ப்பு வழங்க முடியாது என்ற அடிப்படை உண்மையை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆகவே நாங்கள் அப்படியொரு கோரிக்கையுடன் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை. அணு உலை நிறுவப்பட்டது முதல் தற்போது வரை இந்திய அணுசக்திக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அத்தகைய குறைபாடுகளுடன் அணு உலை தொடங்குவதை அனுமதிப்பது ஆபத்தானது என்பதை வலியுறுத்துவதே நாங்கள் தொடர்ந்த வழக்குக்கு அடிப்படை.

ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின்னர் மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளின் பாதுகாப்பையும் ஆராய்வதற்காக நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அந்த நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்துவதற்காகவே வழக்குத் தொடர்வது குறித்து யோசித்தோம். கூடங்குளம் அணு மின் உலையைச் செயல்படுத்துவதில் பின்பற்றப்படும் தவறான நடைமுறைகள் குறித்து மக்களின், அரசின் கவனத்தை அதன் மூலம் ஈர்க்க நினைத்தோம். செப்டம்பர் 2011இல் ஒன்று, மற்றது மார்ச் 2012இல் என மொத்தம் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள அணு உலைகள் குறித்து ஆய்வு செய்த நிபுணர்குழு அரசுக்குப் பல் வேறு பரிந்துரைகளை வழங்கியிருந்தது. அதில் இணைப்பு 8இல் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் கூடங்குளம் அணு உலை குறித்தது. 17 பரிந்துரைகள் அதில் இடம்பெற்றிருந்தன. புகுஷிமா அணு உலை விபத்தையொத்த அபாயங்களைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகள் அவை. அவற்றை நிறைவேற்றாமல் கூடங்குளம் அணு உலை இயக்கப்படுவது ஆபத்தானது என்பதை நீதிமன்றத்துக்குச் சுட்டிக்காட்டினோம்.

முழுமையான சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதனடிப்படையில் ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டு அது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அவர்களது ஒப்புதல் பெறப்பட்ட பின்பே சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையின்மைச் சான்று அளிக்க வேண்டும் என 1994இன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் தெரிவிக்கிறது. இதற்கு முன்னரே அதாவது 1991இல் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் கடற்கரையிலிருந்து 500 மீட்டருக்குள் எந்தத் தொழிற்சாலையும் செயல்படக் கூடாது என வலியுறுத்துகிறது. தவிர தேசிய அணுசக்தி கழகம் இந்தச் சட்டங்களுக்கு உட்பட்டு கூடங்குளம் அணு உலை செயல்படும் என்பதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது இப்படி எந்தச் சான்றிதழையும் பெற்றிருக்க வில்லை. ஆனால் அவர்கள் 1989இல் வாங்கிய சுற்றுச்சூழல் ஒப்புதல் எல்லாக் காலத்துக்கும் போதுமானது எனத் தெரிவித்திருந்தார்கள். இதை எதிர்த்துத்தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். 1994இன் சுற்றுச்சூழல் சட்டப்படி, 1994க்கு முன்பு ஒப்புதல் பெறப்பட்டிருந்த திட்டங்கள், அவை உள்ளூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெற்றிருந்தாலோ திட்டம் தொழில்நுட்பரீதியில் எந்தவித மாற்றங்களுக்கும் உள்ளாகாததாக இருந்தாலோ மாசு அளவு மாறுபடாமல் இருந்தாலோ அவை புதிதாக ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. இவை எவையுமே கூடங்குளம் அணு உலைக்குப் பொருந்தவில்லை. 2001இல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு அனுப்பிய ஒரு நோட்டீசில் தனது ஒப்புதலைப் பெறாமல் வேலைகளைத் தொடங்கியது குறித்துக் கேள்வியெழுப்பியிருந்தது.

மத்திய அரசின் நிபுணர் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப்படுத்தாத பட்சத்தில் அணு உலை செயல்பட அனுமதி அளிக்க மாட்டோம் என அணு சக்தி ஒழுங்குமுறைக் கழகம் 2012 ஜூனில் நீதிமன்றத்தில் தெரிவித்தது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரின் வெப்பநிலை 45 டிகிரிவரை இருக்கலாம் எனச் சான்றிதழ் வழங்கியிருந்ததை அறிந்துகொண்டோம். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வெளியேற்றப்படும் நீரின் வெப்ப நிலை 37 டிகிரி என இருப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீரின் வெப்பநிலையை 45டிகிரிவரை உயர்த்திக்கொள்வதற்கு எப்படி அனுமதித்தது என்பது குறித்து நீதிபதிகளே கேள்வியெழுப்பினர். உடனடியாக ஒரே இரவில் 45 டிகிரி வெப்பநிலையை 37 டிகிரியாகக் குறைத்துச் சான்றிதழ் வழங்குவதற்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூச்சப்படவேயில்லை. நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. எப்படித் திடீரென இவ்வளவு வெப்ப நிலையைக் குறைத்துச் சான்றிதழ் வழங்கினீர்கள் என்றோ அந்த அளவுக்கு வெப்ப நிலையைக் குறைப்பது எப்படி என்றோ அடிப்படையான எந்த கேள்வியும் எழுப்பாமல் நீதிமன்றம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டது. நீதிமன்றத்தின் இந்தச் செயல் எங்களுக்குப் பதற்றத்தை உருவாக்கியது. சாதாரண மக்களைக் காப்பாற்ற வேண்டிய நீதிமன்றங்கள் அரசின் அங்கமாகச் செயல்படுகிறது என்ற கசப்பான உண்மையை எங்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.

நீதிமன்ற விசாரணைகள் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த சமயத்தில் கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்ப ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துவிட்டது. வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும்போது எப்படி ஒப்புதல் அளிக்க முடியும்? இது எங்களுக்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி. மக்கள் போராட்டம் தீவிரமடையவும் இந்த உத்தரவு ஒரு காரணமாக அமைந்தது என்பதை இங்கே நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். எனவே அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் இந்த உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தோம். மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு அளித்திருந்த 17 பரிந்துரைகளை மேற்கொள்ளாமல் ஒப்புதல் வழங்கமாட்டோம் எனத் தெரிவித்துவிட்டு இப்போது எப்படி எரிபொருள் நிரப்ப உத்தரவிட்டீர்கள் எனக் கேள்வியெழுப்பினோம். அதற்குப் பதில் தெரிவித்த ஒழுங்கு முறை ஆணையம் கூடங்குளம் உச்சபட்ச பாதுகாப்பு கொண்டது என்றும் அதீத பாதுகாப்புக்குத்தான் 17 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துவிட்டது. நீதிமன்றமும் அதை ஒப்புக்கொண்டு இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டது. தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களை நீதிமன்றம் தீர்மானிக்க இயலாது என - இரண்டு மூன்று மாதங்கள் விசாரணை நடத்திய பின்னர் -நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. எனவே நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் இந்த இரு வழக்குகள் தவிர இழப்பீடு குறித்த மற்றொரு வழக்கையும் தொடர்ந்துள்ளோம்.

இந்திய சட்டப்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள்தாம் அதற்கான நிவாரணப் பணிகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். தொழிற்சாலை விபத்தில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிற் சாலை நிர்வாகம்தான் நிவாரணம் வழங்க வேண்டும். இதுதான் நடைமுறை. கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் ரஷ்ய நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என அணுசக்திக் கழகம் தெரிவித்துள்ளது. ஒப்புக்கொள்ளப்பட்ட இழப்பீட்டுத் தொகையின் வரம்பு வெறும் 1500 கோடி ரூபாய். அதுவும் இயந்திரக் கோளாறுக்கான இழப்பீடு மட்டுமே. அதைக் கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இது மிகச் சொற்பத் தொகை என்பதால் இழப்பீட்டு தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு தனி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஒருவேளை ஏதாவது விபரீதத்தின் போதோ இயந்திரக் கோளாறின் போதோ 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஆதாரம் தேவைப்பட்டால் அதை யார் வழங்குவது? ஆனால் உச்சபட்ச பாதுகாப்பு கொண்டதெனக் கூறப்படும் இந்த அணு மின் நிலையத்தில் இழப்பீட்டின் அளவை உயர்த்துவதற்கு ரஷ்ய நிறுவனம் தயாராக இல்லை. அதையும் மத்திய அரசு ஒத்துக்கொண்டது.

அணு உலைக் கழிவு மிகப் பெரிய பிரச்சினை. ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளே இக் கழிவுகளை என்ன செய்வதெனத் தெரியாமல் திணறுகின்றன. அணுக் கழிவை எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள் என நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். ஏனெனில் உச்சநீதிமன்றம் பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளாமல் செயல்படுவதாகத் தெரிகிறது.

கூடங்குளம் அணு உலைகளைப் பொறுத்தவரை இவை முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் உருவானவை. இவற்றைக் கையாள்வது எளிதல்ல. கையாள்வது குறித்த அனுபவ அறிவு இந்தியாவுக்குக் கிடையாது. எனவே உச்சபட்ச பாதுகாப்பு மட்டும் போதாது. அதீத பாதுகாப்பும் தேவை.

மேலும் அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம் ஒரு வல்லுநர் குழுவை நியமித்து கூடங்குளம் பகுதியில் காணப்படும் சிக்கல்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு இரண்டு அறிக்கைகளை அளித்துள்ளது. அந்தப் பணிகளை பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தான் ஒருங்கிணைத்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கைகளின் படி கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டுள்ள பகுதியின் நிலவியல், புவியியல், நீரியல் கூறுகள் அணு உலைக்கு ஊறு விளைவிக்கும் விதத்திலேயே உள்ளன. கூடங்குளத்திலிருந்து 90 கிமீட்டரில் கடல் நீருக்குள் இரண்டு வண்டல் குவியல்கள் உள்ளன. இவை சுனாமி உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பப்புவா நியூ கினியாவில் 1998இல் இந்த வண்டல் குவியல்களால் பெரிய சுனாமி ஒன்று ஏற்பட்டுள்ளது. பெரிய பூகம்பம் வந்தால்தான் சுனாமி உருவாகும் என்பதில்லை. மிகச் சிறிய அளவிலான பூகம்பமே இந்த வண்டல் குவியல்கள் மூலம் சுனாமியை உருவாக்கும் ஆபத்து கொண்டவை. எனவே கூடங்குளம் அணு உலைக்கு உச்சபட்சப் பாதுகாப்பு தேவையில்லை என்பதில் உண்மையில்லை.

2012இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழடுக்கு மட்டத்திலான விபத்து நடந்தால் எப்படி மக்களை அப்புறப்படுத்துவீர்கள் எனக் கேட்டிருந்தோம். அப்படி ஒரு விபத்தையே நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனப் பதிலளிக்கிறார்கள். இதை உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளோம். அச்சன்கோயில் பிளவு கூடங்குளம் வழியாகவே போகிறது. இந்தப் பிளவு நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் முக்கியக் காரணி. மேலும் சின்னச்சின்ன எரிமலைக் குழம்புகள் கூடங்குளத்தில் காணப்படுகின்றன. இவை எல்லாம் இருப்பதால் கூடங்குளத்தில் 7 அடுக்கு விபத்து நடக்க வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. தண்ணீரைப் பொறுத்த அளவில் கூடங்குள அணு உலை குளிர்விப்பில் மிக அதிகமாகக் கடல் தண்ணீர்தான் பயன்படப் போகிறது. தினமும் 4200 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளப்பட்டு பயன்பாட்டுக்குப் பிறகு அணு உலையிலிருந்து வெளியேற்றப்பட்டுக் கடலில் கலக்கும். அணு உலைக்குள் குளிர்விப்பானாக செயல்பட்டு வெளியேறும் இந்தக் கழிவு நீர் கடல்வாழ் உயிரினங்களை முற்றிலும் அழித்துவிடும். கழிவு நீரில் வெறும் வெப்பம் மட்டும் இல்லை, கதிரியக்கமும் இருக்கும்.

கல்பாக்கத்தில் கடலில் வருடத்திற்குப் பல்லாயிரக்கணக்கான கிலோ அளவில் சிங்க இறால்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. தற்போது ஆண்டுக்கு 5 கிலோகூடக் கிடைப்பதில்லை, இதற்குக் காரணம் அணுக்கழிவுநீர் கடலில் கொட்டப்பட்டதுதான். கல்பாக்கம் கடல் பகுதியில் செயற்கைப் பவளப்பாறைகளை உருவாக்கப் போவதாக இந்திய அணு சக்திக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? இயற்கையான பவளப் பாறைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன என்பது தானே? அணு உலை சட்டபூர்வமாக இயக்கப்படத் தேவையான அறிவுறுத்தல்களை உச்ச நீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம். நீதிமன்றம் சென்றதன் மூலம் அணு உலை விஷயத்தில் அரசின் செயல்பாட்டில் காணப்படும் பல அசட்டுத்தனங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்குக் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டத்திற்குக் கடற்கரை ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதல் பெறவில்லை என்பது நாங்கள் நீதிமன்றம் சென்றதால்தான் தெரியவந்தது. மேலும் வழக்கு விசாரணை குறித்த செய்திகள் வருவதால் இந்தியா முழுவதிலும் இது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இவை எல்லாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் ஏற்பட்ட அனு கூலம். நியாயத்திற்காக கூடங்குளம் பகுதியை சேர்ந்த மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். சட்டப்படி அதன் வழிமுறைப்படி அணு உலையின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே நாங்கள் சட்டப் போராட்டம் நடத்துகிறோம். நீதி அமைப்பின் செயல்பாடுகள் அது எளிய மக்களைப் பாதுகாக்கத் தவறிவிடுமோ என்னும் பயத்தை உருவாக்குகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. உயர் நீதிமன்றத்தில் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே கூறியிருக்கிறாறே என மேற்கோள் காட்டுகிறார்கள். இதைவிட அபத்தம் வேறு என்ன இருக்க முடியும்? அப்துல் கலாம் அணு விஞ்ஞானியே அல்ல. அவரை மேற்கோள் காட்டுவது அறியாமை.

தலித்துகளும் மீனவர்களும் வாழும் பகுதி என்பதால் அதீதப் பாதுகாப்பு தேவையில்லை என்று அரசு கருதுகிறதா? அமைச்சர்களுக்கு மட்டும்தான் அதீதப் பாதுகாப்பு தேவையா? இவர்களுக்கு அதீதப் பாதுகாப்பு தேவையில்லை என்பதை எப்படித் தேசிய அணு சக்தி கழகமும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் முடிவுசெய்ய முடியும்? இதனால்தான் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அணு உலையை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். மக்கள் போராட்ட மும் நீதிமன்றப் போராட்டமும் வெவ்வேறுவகையான செயல்பாடுகள். நீதிமன்றத்தின் வெற்றி தோல்விகள் மக்கள் போராட்டத்தைப் பாதிக்கப்போவதில்லை. நீதிமன்றத்தில் நாங்கள் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் மக்கள் போராட்டம் அணு உலை மூடப்படுவது வரை தொடரத் தான் செய்யும்.

-கோ. சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
சந்திப்பு: தேவிபாரதி, மண்குதிரை
தொகுப்பு: செல்லப்பா

நன்றி: காலச்சுவடு, டிசம்பர் 20121 கருத்து:

பெயரில்லா சொன்னது…

I think that what you published was very reasonable. But, what about this?
what if you added a little content? I am not suggesting your information isn't solid, but what if you added a post title that makes people want more? I mean "கூடங்குளம் அணு உலை சட்டப் போராட்டம் - கோ. சுந்தர்ராஜன்" is a little plain. You ought to peek at Yahoo's home page and watch
how they create news headlines to grab people to click.
You might add a video or a picture or two to get readers excited about what you've written. Just my opinion, it could make your posts a little bit more interesting.
my web page :: acne breakouts

கருத்துரையிடுக