செவ்வாய், அக்டோபர் 02, 2012

கழிவும் விளைவும்!


யூனியன் கார்பைடு நிறுவனத்தில் உள்ள 350 டன் சயனைடு கழிவுகளை வான்வழியாக ஜெர்மனிக்குக் கொண்டு செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த இயலாது என்று ஏற்கெனவே இதற்கு ஒப்புக்கொண்ட ஜெர்மானிய நிறுவனம் தனது ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டுவிட்டது.
இந்த சயனைடு கழிவுகள் குறித்து ஜெர்மன் ஊடகங்கள் ஏற்படுத்திய பரபரப்புச்  செய்திகளும் மக்கள் எதிர்ப்பும்தான் இந்த முடிவுக்குக் காரணம். இந்திய-ஜெர்மானிய உறவு கெட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அந்த நிறுவனம், மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.                                                               
யூனியன் கார்பைடு நிறுவனம் விட்டுச்சென்ற சயனைடு கழிவுகள் போபால் நகரத்தின் நிலத்தடி நீரை மாசுபடுத்தி வருகிறது என்பது உறுதியான பிறகு, அந்தக் கழிவுகளை 6 மாதத்தில் அகற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் கழிவுகளை அகற்ற மத்திய அமைச்சரவை ரூ.25 கோடியை அனுமதித்திருந்தது. இக்கழிவுகளை அகற்ற ஒப்புக்கொண்ட நிறுவனம் தற்போது பின்வாங்கிவிட்ட நிலையில், இந்திய அரசு மீண்டும் சிக்கலான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சயனைடு கழிவுக்கு இந்த நிலை என்றால், கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவுகளை என்ன செய்யப் போகிறது இந்திய அரசு என்பதுதான் தற்போது கூடங்குளம் அணுஉலை கூடத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அமைப்புகள் எழுப்பும் கேள்வி.
இந்தக் கேள்விக்கு அணுசக்தித் துறை சார்பில் சில மாதங்களுக்கு முன்பாகவே நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது. "இந்தியா-ரஷ்யா இடையே 1998-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில், அணுஉலைக் கழிவுகளை மீண்டும் ரஷியாவுக்குத் திருப்பி அனுப்ப அல்லது ஒப்படைக்க கையெழுத்தாகியிருந்தாலும், அதற்கடுத்த துணை ஒப்பந்தங்களில் இந்த ஷரத்து நீக்கப்பட்டு, அணுஉலைக் கழிவுகளை இந்தியா தானே வைத்துக்கொள்ளவும், மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தவும் உரிமையைப் பெற்றுள்ளது', என்பதுதான் அந்த விளக்கம்.
இந்திய அணுசக்தித் துறை, அணுஉலைக் கழிவுகளை ஆய்வுக்கூடத்தில் வைத்து புளூட்டோனியத்தை மட்டும் தனியே எடுத்து மறுபடியும் அதனை அணுஉலைக்கான எரிசக்தியாக உபயோகிப்பது என்றும், ஏனைய அறிவியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக்கொள்வது என்றும் தீர்மானித்திருக்கிறது. ஆனால், இதற்கான ஆய்வுக்கூடங்கள் இந்தியாவில் இருக்கின்றனவா? இவ்வாறு ரீ-பிராஸஸிங் மூலம் கிடைக்கும் பலன் என்ன? இதைப் பிரித்தெடுக்கும் செலவுக்கும் பயன்பாட்டினால் கிடைக்கும் ஆதாயத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? இதுபோன்ற நிறைய கேள்விகளுக்குச் சரியான பதில் தரப்படவில்லை.
இந்தியாவில் தற்போதைய நடைமுறைப்படி, பூமிக்கு கீழே, ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் மிகஉறுதியான கான்கிரீட் தொட்டிகள் கட்டி, அதற்குள் அணு உலைக் கழிவுகளைப் போட்டு வைப்பதுதான் திட்டம். இது பாதுகாப்பான நடைமுறை என்று சொல்லப்படுகிறது. இருப்பினும்கூட, இந்தக் கழிவுகளை ரஷியாவுக்கே திருப்பிக் கொடுத்துவிடாமல், நாமே வைத்துக்கொள்ளும் முடிவு ஏன் மேற்கொள்ளப்பட்டது? இதனால் ஆதாயம் காணப்போவது இந்தியாவா, ரஷியாவா? போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.
புகுஷிமாவில் ஏற்பட்டதைப் போன்று, பேரிடர் ஏதாகிலும் கூடங்குளத்தில் நேரிட்டாலும்கூட, அதைத் தாங்கி நிற்கும் வகையில் கூடங்குளம் அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது என்று தேசிய அணுசக்திக் கழகம் நீதிமன்றத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த மனுவில் தெரிவித்துள்ளது. மீண்டும் இக்கருத்தை உறுதிப்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அணுஉலைக் கூடம் பாதுகாப்பானது என்பதை ஏற்கெனவே பலரும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், அணுஉலைக் கழிவு குறித்து இந்த நேரத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சயனைடு கழிவுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் நிலை ஏற்படும் என்றால் அணுஉலைக் கழிவுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?
அணுமின்சாரத்தை 2030-க்குள் இந்திய மின்தேவையில் 25% ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ள இந்திய அரசு எவ்வாறு அணுஉலைக் கழிவைக் கையாளப்போகிறது? புளூட்டோனியத்தைப் பிரித்துப் பயன்படுத்த முடியுமானால் அதற்கான ஆய்வுக்கூடங்களை அமைத்திருக்கிறோமா? அமைக்கும் முயற்சியைத் தொடங்கி இருக்கிறோமா?
சுவீடன் நாட்டில் 10 அணுஉலைக் கூடங்கள் உள்ளன. அவர்கள் அணுஉலைக் கழிவை கடலில் மிக ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள 63,000 கனமீட்டர் அளவுக்கான பாதுகாப்பு பெட்டகத்துக்குக் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் 31,000 கனமீட்டர் நிரம்பியுள்ளது என்றும், இதுவரை அணுஉலைக் கழிவுகளால் கதிரியக்க வெளிப்பாடு ஏற்பட்டதில்லை என்றும் அந்நாட்டின் அணுஉலைக் கழிவுகளை அகற்றும் துறை உறுதியாகச் சொல்கிறது.
சுவீடன் நாட்டைப்போல உறுதிபடச் சொல்வதற்கு ஏதாவது திட்டம் இருந்தால் அதை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கவேண்டிய பொறுப்பு இந்திய அணுசக்தித் துறைக்கு இருக்கிறது. அணுஉலைக் கழிவுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், "இது கழிவுப்பொருள் அல்ல; ஆதாயப் பொருள், பயன்படு பொருள்' என்கிறது இந்திய அணுசக்தித் துறை. அப்படியானால், அணுஉலைக் கழிவுகளைக் கையாளவும், அதனை மறுசுழற்சிக்கும் புளூட்டோனியத்தைப் பிரிப்பதற்கும் நம்மிடம் ஆய்வுக்கூடங்கள் தயாராக இருக்கின்றன என்பதைச் சொல்ல வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதையும் உறுதிசெய்ய வேண்டியது ஓர் அரசின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதான். ஆனால், அதைவிட முக்கியம், எந்தக் காரணத்தாலும் அந்த வளர்ச்சியை எட்டுவதற்காகத் தனியொரு குடிமகனுக்கு அநீதி இழைக்கப்பட்டு விடக்கூடாது என்பதும், தேசத்தின் வளர்ச்சி வருங்கால சந்ததியரின் நல்வாழ்வையோ, உரிமைகளையோ பாதித்து விடக்கூடாது என்பதும்தான்.
அணு உலைகளை இயக்குவதன் மூலம் மின்சாரம்பெற்று இன்றைய தலைமுறையின் நல்வாழ்வை உறுதிசெய்துவிட்டு, அதன் பின்விளைவுகளை வருங்கால சந்ததியினர் அனுபவித்துக் கொள்ளட்டுமே என்கிற குறுகிய கண்ணோட்டம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. நமது முன்னோர்கள் நமக்கு நல்லதொரு பூமியை அளித்து, ஆரோக்கியமாக வாழ வழி வகுத்ததுபோல, நாமும் தூய்மையான, ஆபத்தில்லாத பூமியை நமது சந்ததியினருக்கு விட்டுச்செல்லக் கடமைப்பட்டவர்கள்.
 கண்களை விற்றா சித்திரம் வாங்குவது?
-ஆசிரியர், தினமணி
நன்றி:: தினமணி, 28-09-12

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படித்தது தான்... பலர் அறிய பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

கருத்துரையிடுக