புதன், செப்டம்பர் 26, 2012

வாங்கித் தந்தார் காந்தி தாத்தா...வித்துப்போட்டார் சோனியா ஆத்தா !


இந்தப் புண்ணிய பூமியோட மகாபிரபு... மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வேறவழியே இல்லாம வணக்கம் சொல்லி, கச்சேரியை ஆரம்பிக்கறான்... பாரத தேசத்து பரிதாப ஜீவன்கள்ல ஒருத்தனான இந்தக் கோவணாண்டி!

''டும்... டும்... டும்... இதனால, சகல உலகத்தினருக்கும் அறிவிக்கறது என்னன்னா... இன்னியிலிருந்து இந்தப் பெருமை வாய்ந்த இந்தியா விற்பனைக்குத் தயாரா இருக்கு. காசு வெச்சு இருக்கற யாரு வேணும்னாலும்... செவ்வாய் கிரகத்தச் சேர்ந்தவங்களா இருந்தாலும்.. எங்க நாட்டுல வந்து கடைவிரிக்கலாம். எங்க நண்பர் அமெரிக்க அதிபர் ஒபாமா... எங்க தலைவி இத்தாலி அன்னை சோனியா ஆசைப்படி... ஆணைப்படி... அவங்களோட 'கைப்பிள்ளை'யாகிய மன்மோகன் சிங் ஆகிய நான் அறிவிக்கிறேன்... டும்... டும்...டும்...''னு உடுக்கை அடிச்சுட்டீங்கனு ஒங்கமேல ஏக கோவத்துல இருக்கறாருங்க எங்க ஊரு இங்கிலிபீசு வாத்தியாரு.

வழக்கம்போல கோணவாய்க்கா மதகுல குந்திக்கிட்டு, இங்கிலீஸ் பேப்பரை கையில வெச்சுக்கிட்டு, போறவன்... வர்றவனெயெல்லாம் கூட்டி உக்கார வெச்சுக்கிட்டு உருமி அடிக்கறாருங்க.

'ஏதோ பொருளாதாரச் சீர்திருத்தம் செய்யறதா சொன்னாங்க. கரன்ட் கட்டு நின்னு போகும்; நின்னுபோன பனியன் கம்பெனிக, நூல் மில்லுக எல்லாம் மறுபடியும் வேகமெடுத்து ஓடும்; வெளிநாட்டுல பதுங்கிக் கெடக்கிற கறுப்புப் பணம் நம்ம ஊரு தெருவுல வெள்ளமா ஓடும்; குடும்பத்துக்கு ரெண்டு லட்சம் வீதம் கிடைக்கும்... இப்படியெல்லாம் கனவா கண்டுக்கிட்டிருந்தா, கடைசியில திங்கற சோத்துல மண்ண அள்ளிப் போட்டுட்டாரு மன்மோகன் சிங். சிலிண்டருக்குக் குடும்பக் கட்டுப்பாடு, டீசல் விலை ஏத்தம், பன்னாட்டுக் கம்பெனிங்களுக்கு வாசலைத் திறந்துவிடறது(51% அன்னிய முதலீடு)னு நாட்டையே அந்நியனுக்கு வித்துப்புட்டாரு சிங்' - இப்படி இந்தத் தள்ளாத வயசுல... பேசிப்பேசியே மதகுல சரிஞ்சு கிடக்கறாருங்க அந்த வாத்தியார்.

பாவம்ங்க அவரு... வெள்ளைக்காரனுங்கள விரட்டி விரட்டி அடிக்கற அளவுக்கு காங்கிரஸ் வீரியமா இருந்த காந்தி காலத்துல பொறந்தவரு. இன்னிக்கு, கதர் கூட்டமே கொள்ளைக் கூட்டமா மாறிப் போயிருக்கற நிலையில... அவரால புலம்ப மட்டும்தான் முடியுது.

நானும் தெரியாமத்தான் கேட்கிறேன்... சீர்திருத்தம்னா, நாட்டை அந்நியனுக்குக் கூறுபோட்டு விக்கிறதுதானுங்களா?

இப்படி கேட்டாக்கா... 'அந்நிய நிறுவனங்கள் கடை திறந்தால், இந்திய விவசாயிகளின் விளைபொருளுங்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்க்கை மலரும்'னு பக்கம் பக்கமா விளம்பரம் கொடுத்து, எங்களயும் இழுத்துவிடறீங்க. கதர் சட்டைங்க காசு பண்றதுக்கும்... கமிஷன் பார்க்கறதுக்கும்... இளிச்சவாயன் நாங்கதான் கிடைச்சோமா?

'மொத்த முதலீட்டில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் கிராமங்கள்ல செலவிடப்படும்'னு வேற சொல்லியிருக்கீங்களே... அப்படினா, ஒட்டுமொத்தமா கிராமங்கள்ல இருக்கற நிலங்கள, பன்னாட்டு முதலைங்களும் வளைச்சு வளைச்சு வாங்கிப் போடறதுக்கு வழியைக் காட்டிட்டீங்க, அப்படித்தானே! 'ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'னு வேற கதையளந்திருக்கீங்க. எல்லாமே கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, கேப்பையில நெய் வடியாதே!

'கறை நல்லது’னு டி.வி-யில விளம்பரம் வர்றது கணக்கா... 'டீசல் விலை உயர்வு நல்லது... பொருளாதாரம் வளரும்... நாடு நல்லப் பாதையில பயணிக்கும்..'னு கலர்கலரா கதையளந்திருக்கீங்க. நீங்க ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கி, இதுவரைக்கும் நூறு, நூத்தம்பது தடவை டீசல் விலையை ஏத்தியிருப்பீங்க. 

அப்படியிருந்தும் இதுவரைக்கும் ஏனுங்க ஒங்க பொடலங்கா பொருளாதாரம் உசரவே இல்ல! ஒருவேள நீங்க சொல்ற மாதிரி ஒசந்திருக்குனு வெச்சுப்போம். விவசாய விளைபொருட்களான நெல்லு-கொள்ளு... ஆவக்கா-கோவக்கா... தேங்கா-மாங்கா... பால்-பருத்தி...னு எல்லாத்தோட விலையையும் ஏத்துங்க... அப்பவும் பொருளாதாரம் வளரத்தானே செய்யும்.

'ஈமு கோழியை நம்பி பணம் கட்டுறவனுங்கதானே... எதை வித்தாலும் வாங்கிடுவாங்க'னு ரொம்ப நம்பிக்கையோடத்தானே அந்நியனுக்கு கதவைத் தொறந்துவிட்டிருக்கீங்க. பரவாயில்ல... சீக்கிரமே, ஒட்டுமொத்தமா எல்லாத்தையுமே அந்த அந்நிய முதலைங்க வளைச்சுடப் போறாங்க. அதுக்குப் பிறகு, அவுங்க கடையில விக்கிற விஷத்துல (மரபணு மாற்றுப்பயிர்) விளைஞ்ச கத்திரிக்கா முதல், கருவாடு வரைக்கும் அவுங்க சொல்ற விலையில... அவங்க கொடுக்கற அளவுலதான் வாங்கிச் சாப்பிட வேண்டியிருக்கும். சீனாவுக்கு போனா... பாம்பு சூப் பத்து ரூபா... வெஜிடபிள் சூப் நூறு ரூபாய்னுதான் விக்கும். அதேபோல இவனுங்களும் 'மரபணு மாத்தின காய்கறி 20 ரூபா... இயற்கைக் காய்கறி வேணுமா... 200 ரூபாய்'னு சொல்லுவான்!

நம்ம ஊரு நாட்டுத் தக்காளி... சின்னது, பெருசு... வளைஞ்சது, நெளிஞ்சதுனு இஷ்டத்துக்கு விளைஞ்சு கிடக்கும். உங்க ஊரு விவசாயிக்கு விளைவிக்க தெரியல... இங்க பார்த்தீங்களா... 'சும்மா 15 செ.மீ. ரவுண்டுக்கு ஒரேமாதிரியா விளைஞ்ச தக்காளி'னு விஷத்துல விளைஞ்சத பளபளப்பா இறக்குமதி பண்ணி விப்பான்.

நம்ம ஊருலதான் கோட்-சூட் போட்டு டை கட்டிக்கிட்டு வர்றவன், கழுதை விட்டையை பொட்டலம் கட்டி வித்தாகூட... 'திஸ் ஈஸ்... விட்டமின்- பி'னு சொல்லிக்கிட்டே வாங்கி முழுங்கறதுக்கு ஆளுங்க இருக்கே.
ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2 ஜி ஊழல் எல்லாம் தாண்டி, இப்ப நிலக்கரி ஊழல்ல வந்து நிக்கறீங்க. நாடே இதைப் பத்தித்தான் இப்ப உருமி அடிக்குது. 'ஏண்டா... இந்தியானு ஒண்ணு இருந்தாதானே... ஊழல்பத்தியெல்லாம் பேசுவீங்க. ஒட்டுமொத்தமா அந்நியனுக்கு வித்துட்டா என்ன செய்வீங்க?'னுதானே 'சீர்திருத்தம்'ங்கற பேருல... அன்னை சோனியா காந்தியோட உத்தரவுப்படி நாட்டை விலை பேசியிருக்கீங்க.

'கேட்டாக்கா... வெறும் 51% சதவிகிதத்தைத்தான் தந்திருக்கோம். என்ன இருந்தாலும், இந்தியாவோட சட்டதிட்டங்கள மதிச்சுதான் அவங்கள்லாம் நடந்துக்குவாங்க. நம்மள மீறி எதையும் செய்ய முடியாது... சட்டப் பாதுகாப்பு இருக்குது'னு வியாக்கியானம் வேற பேசறீங்க.

ம்க்கும்... காவிரி ஆணையத்தோட தலைவர்னு சொல்லிக்கிட்டு உக்கார்ந்திருக்கீங்க நீங்க. ஆனா, நீங்க தலையிட்ட பிறகும்கூட தமிழ்நாட்டுக்கு காவிரித் தண்ணியைத் தரமுடியாதுனு சொல்லிட்டு, உங்க மூஞ்சியில அடிச்ச மாதிரி ஆணையக் கூட்டத்தைவிட்டே வெளியில எழுந்திருச்சி போயிருக்கார் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். உள்ளூர்க்காரன்கிட்டயே ஒங்க அதிகாரம் செல்லுபடியாகல. இதுல வெளிநாட்டுக்காரன் மட்டும் கேட்டுடுவானாக்கும்?

இந்தியாவே திரண்டு பந்த் நடத்திக்கிட்டிருக்குது ஒங்களோட முடிவுகளை எதிர்த்து. ஆனா, அதே தினத்துல... 'அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி... சட்டம் அமலுக்கு வந்தது'னு வீம்பா அறிவிக்கறீங்க. நாட்டுமேல என்னமோ ஒங்களுக்கு மட்டுமே அக்கறை இருக்கற மாதிரி தடலாடியா முடிவெடுக்கறீங்க. இதெல்லாம் நல்லதுக்கே இல்லீங்க. 'மோகன்தாஸ் காந்தி வாங்கித் தந்ததை... சோனியா காந்தி விலை பேசி வித்துப்புட்டாங்க'ங்கற கெட்ட பேரு வேணாமுங்க.

'தற்சார்புப் பொருளாதாரத்தை அழிச்சு... புறசார்புப் பொருளாதாரத்தை அனுமதிச்சா... நாடு நாசமாகும்'கறது... தொல்காப்பியர், நாலடியார், திருவள்ளுவர் காலத்துல இருந்தே நம்ம நாட்டுல கடைபிடிச்சுட்டு வர்ற கொள்கை. ஆனா... 'மாப்பிள்ளை செத்தா என்ன... பொண்ணு செத்தா என்ன... மாலை பணம் கிடைச்சா போதும்'கிற மனநிலையில் இருக்கிற நீங்க... இதையெல்லாம் எங்க காதுல ஏத்திக்கப் போறீங்க?

வாழ்க பாரதம்... வாழ்க ஜனநாயகம்!

-கோவணாண்டி

நன்றி: பசுமை விகடன், 10-10-12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக