சனி, மார்ச் 31, 2012

மின்பற்றாக்குறை => மாற்றுச் சிந்தனை + மாற்று எரிபொருள்


“அறிவியலின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்தால், புதியதாகப் பத்துப் பிரச்சினைகள் உருவாகும்” இது ஜார்ஜ் பெர்னார்ட்ஷாவின் கூற்று. உலகெங்கும் அணுசக்திக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன. மின்சாரம் என்னும் இந்தப் பிரச் சினையைத் தீர்ப்பதற்குக் கண்டு பிடிக்கப்பட்ட அணுமின் உலைகள் எதிர்பார்த்தபடி மின்சாரத் தேவையையும் நிறைவேற்றவில்லை என்பது கூடுதல் பிரச்சினை. இந்தப் புரிதலின் தொடர்ச்சியாகத்தான் நாம் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தைப் பார்க்க வேண்டும்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூட வலியுறுத்தி மக்கள் நடத்திவரும் போராட்டம் இதுவரை இத்தேசம் காணாத ஓர் எழுட்சி. தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு நடத்தும் இந்தப் போராட்டம் இப்போது ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் போராட்டக்காரர்களைப் பிளவுபடுத்த முயல்கின்றன இந்த மக்கள் விரோத அரசுகள்.
ஒருபுறம் மக்கள் அணுசக்திக்கு எதிராகப் போராடுவதும் மற்றொரு புறம் மின்சாரம் வேண்டும் அதனால் கூடங்குளத்தைத் திறக்க வேண்டும் என்று கூறி வேறு பகுதி மக்கள் வீதிக்கு வருவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. இச்சமயத்தில் நாம் ஒரு முக்கியமான அம்சத்தை நினைவில்கொள்ள வேண்டும், “மின்சாரம் வேண்டும்” என்று கேட்கும் உரிமை மக்கள் அனைவருக்கும் உள்ளது. ஆனால் “கூடங்குளத்திலிருந்துதான் மின்சாரம் வேண்டும்” என்று கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது. கூடங்குளம் பகுதியில் வாழும் மக்கள் அணுமின் உலையை - கூடங்குளம் மட்டும் என்றில்லை எந்தப் பகுதியில் வாழும் மக்களும் ஒரு திட்டத்தை - எதிர்த்தால் அதற்குச் செவி சாய்க்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமை.

அணு உலைகள் பற்றியும் அதன் கொடூர விளைவுகள் பற்றியும் நாம் நன்றாக அறிந்திருந்தாலும் இரண்டு அம்சங்களை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். அணு விஞ்ஞானிகள், எல்லாம் அறிந்த காங்கிரஸ் கட்சியினர், அணு உலைகளைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் (நிச்சயமாக அப்துல் கலாமைக் குறிப்பிடவில்லை!), அணு மின்நிலையம் வந்தால் இந்த நாடு சுபிட்சமாகிவிடும் என்றும் நம்பும் அதிமேதாவிகள், அணுசக்தி மட்டுமே நம்முடைய நாட்டை ‘வல்லரசு’ ஆக மாற்றும் என்று நம்பும் தேசபக்தர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். இவர்கள் கூறுவதுபோல் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால் ஏன் எந்த நாடும் அணு உலை விபத்து இழப்பீட்டிற்கு ஒத்துகொள்ள மறுக்கிறது? மனசாட்சி உள்ளவர்கள் இந்தக் கேள்விக்கு விடையை அறிந்துகொண்டு பின்னர் அணு உலைகளை ஆதரியுங்கள்.

தொழில்நுட்பத்திலும் பேரிடர் மேலாண்மையிலும் மிகவும் தேர்ச்சி பெற்ற ஜப்பானே புகுஷிமா விபத்தைக் கையாள முடியாமல் திணறிய. போபால் அனுபவம் பேரிடரை எதிர்கொள்வதில் நமது லட்சணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது. கால்நூற்றாண்டைக் கடந்தும் நாம் இன்னும் போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை. இந்த நாட்டின் ‘மேலாண்மையே’ பெரிய ‘பேரிடராக’ இருக்கும்போது நாம் எப்படிப் “பேரிடர் மேலாண்மை”யை மேற்கொள்ளப்போகிறோம்?

அணு உலைகள் வெறும் இயந்திரங்களே! உலகில் பழுதடையாத இயந்திரங்களே இல்லை எனலாம். ஆனால் இந்த இயந்திரம் பழுதானால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். கல்பாக்கத்தில் ஒரு விபத்து நடந்தால் நாம் சென்னையில் வாழும் கோடிக்கும் அதிகமான மக்களை எப்படி வெளியேற்றுவோம்? அதற்கு என்ன திட்டங்கள் இருக்கின்றன? அதற்கு எவ்வளவு பணம் செலவு ஆகும்? இந்தக் கேள்விகளுக்கு யாருக்கும் விடை தெரியாது. புகுஷிமாவில் இப்போது நடந்த விபத்தால் ஏற்பட்ட பொருள் செலவு சுமார் ஐந்து லட்சம் கோடி. இது போக அணு உலைகளைச் செயலிழக்கச் செய்ய சுமார் எண்பதாயிரம் கோடி செலவு பிடிக்கும் என்றும் சுமார் நாற்பது வருடங்களாகும் என்றும் உறுதியான அறிக்கைகள் சொல்கின்றன (இதனால்தான் எந்த அணு உலை தயா ரிப்பாளர்களும் இழப்பீடு தர மறுக்கிறார்கள்).

நாம் அனைவரும் அறிந்தபடி ஓர் அணு உலையின் ஆயுள் காலம் சுமார் நாற்பது ஆண்டுகள்தாம். அதற்குப் பிறகு நாம் அதைச் செயல் இழக்கச் செய்ய வேண்டும். ஆனால் நமது நாட்டில் தாராப்பூர் அணு உலை நிறுவி கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் நாம் இன்னும் அதைச் செயலிழக்கச் செய்வது பற்றிப் பேசவே ஆரம்பிக்கவில்லை. இந்தியாவில் “De-commissioning Authority of India” இல்லவே இல்லை. இதுதான் நாம் நம் அணுஉலைகளுக்குப் பாதுகாப்புத் தரும் லட்சணம்!
அணுசக்தி மோசமானதுதான் என்று ஏற்றுக்கொண்டாலும், மின்சாரத்துக்கு என்னசெய்வது என்ற கேள்வி எழாமல் இல்லை.

பொதுவாகவே நம் எல்லாக் காரியங்களுக்கும் இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று நல்ல காரணம். இன்னொன்று உண்மையான காரணம். அணுசக்தியைப் பொறுத்தமட்டில் கூறப்படும் நல்ல காரணம் மின்சாரம். உண்மையான காரணம் என்ன என்பது எல்லோரும் அறிந்ததுதான். அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது என்பது ஈயைக் கொல்வதற்குப் பீரங்கியைப் பயன்படுத்துவதைப் போல. தண்ணீரை நீராவி ஆக்குவதற்கு மட்டுமே அணுசக்தி பயன்படுகிறது. ஆனால் இந்த உலைகளில் வரும் கழிவுகளை என்னசெய்வது என்பதற்கு எந்த நாட்டிடமும் தொழில் நுட்பம் இல்லை. இந்தக் கழிவுகளை நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும். நாம் என்ன தான் அணுசக்திக்கு எதிராக வாதங்களை வைத்தாலும் “மின்சாரம்” என்னும் ‘நல்ல காரணத்தை’ வைத்து இந்த அரசுகள் மக்களை நம்பவைத்து விடும். நாம் நமக்கு மின்சாரத்தை எவ்வாறு பெறமுடியும் என்பதைப் பார்ப்போம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த எரிசக்தித் தேவையில், மின்சாரத்தின் பங்கு என்பது வெறும் 18 சதவீதம்தான். இதற்குத்தான் நாம் இவ்வளவு போராடுகிறோம். இந்தியாவின் இன்றைய மின் உற்பத்தி திறன் 1,80,000 விகீ. இந்த அளவில் சுமார் 89, 000 விகீ அனல் மின்சார நிலையங்களில் இருந்து நமக்குக் கிடைகிறது. இது போக சுமார் 18, 000 விகீ இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தியும் டீஸலைப் பயன்படுத்தி 1, 800 விகீ மின்சாரமும் புனல் மின்நிலையங்களில் இருந்து 39, 000 விகீ மின்சாரமும், புதுப்பிக்கக்கூடிய சக்திகளில் இருந்து 19, 000 விகீ மின்சாரமும் அணுசக்தியைப் பயன்படுத்தி 4,780 விகீ மின்சாரமும் பெறப்படுகிறது. இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்ள முடிகிறது என்றால், இத்தனை ஆண்டுகள் (சுமார் 60 ஆண்டுகள்) கடந்தாலும், பல லட்சம் கோடிகள் செலவுசெய்த பின்னும் நம்முடைய மின்தேவையில் வெறும் 2. 7 சதவீதம் தான் இந்திய அணுமின் சக்திக் கழகத்தால் பூர்த்திசெய்ய முடிகிறது.

தமிழ்நாட்டில் (தமிழ்நாடு மட்டும்) உள்ள குண்டு பல்புகளை மாற்றிவிட்டு LED விளக்குகளைப் பயன்படுத்தினால் நம்மால்இந்த மின்சாரத்தை - 2, 000 MW - பெற முடியும். இதை இந்தியா முழுவதும் நிறைவேற்றினால் எவ்வளவு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மின்சாரத்தைப் பொறுத்தமட்டில், எவ்வளவு மின்சாரத்தைச் சேமிக்கிறோமோ அவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம் என்று அர்த்தம்.

இந்தியாவில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் மோட்டார்கள் சுமார் 30 சதவீதம் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இவை 45 சதவீதம் குறைவான திறனில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் சுமார் 160 லட்சம் மோட்டார்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றைத் திறன் மேம்பட்ட மோட்டார்களாக (சுமார் 15 சதவீதம் இழப்பு) மாற்றினால் நமக்கு 14, 400 MW மின்சாரம் கிடைக்கும். இதற்கு ஆகும் செலவு (ஒரு மோட்டாருக்கு ரூ 4,000 என்று வைத்துக்கொண்டால்) சுமார் 6, 400 கோடி. இதே அளவு மின்சாரத்தை நாம் அனல் மின் நிலையத்தில் உற்பத்திசெய்வதற்கு ஆகும் செலவு (ஒரு விகீக்கு 5 கோடி) சுமார் 72,000 கோடிகள் ஆகும். இந்த சிறிய அளவிலான செலவு மூலம் நமக்கு மிச்சமாகும் பணம் 65,600 கோடி ரூபாய். இதைத் தவிர தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் திறனை மேம்படுத்தினால் நமக்கு நிறைய மின்சாரம் மிச்சமாகும். ஓர் உதாரணத்தை நாம் பார்க்கலாம். இந்தியாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், சர்வதேசத் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சுமார் 30 சதவிகித மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றன. இந்த இயங்திரங்களைச் சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்தினால் கூடுதலாகச் செலவழிக்கப்படும் மின்சாரத்தைச் சேமிக்கலாம். இந்தியாவின் வீடுகளில் உள்ள மின்னணுச் சாதனங்களைப் புனேவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்த ஆய்வின் முடிவில் நாம் இப்போது பயன்படுத்தும் திறன் குறைந்த சாதனங்களை மாற்றிக் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் திறன்மிக்கச் சாதனங்களைப் பயன்படுத்தினால் சுமார் 1, 00, 000 MW மின்சாரம் சேமிக்கப்படும் என்று தெரியவந்தது.
இந்தியாவில் மின்சார உற்பத்தித் திறனை மேம்படுவதன் மூலம் நமக்கு 35 சதவீதம் மின்சாரம் மிச்சமாகும் என்று ‘ஒன்றும் படிக்காத சுப. உதயகுமார்’ சொல்லவில்லை, இந்தியா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட Bureau of energy efficiency என்ற நிறுவனம் சொல்கிறது. இந்த மின்சாரம் தற்போது அமைக்கப்படவுள்ள அணு மின்நிலையன்களிலிருந்து பெறப்போகும் மின்சாரத்தின் அளவைவிட அதிகமானது. தவிர இந்தியாவின் AT&C (Aggregate Technical & Commercial loss) இழப்பு என்பது 32 சதவீதம். அதாவது மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இடத்திலிருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் இடத்திற்குக் கொண்டுசெல்லும் போதும் அதை விநியோகிக்கும் போதும் ஏற்படும் இழப்புகளும் மின்சாரத் திருட்டு ஏற்படுத்தும் இழப்பையும் சேர்த்து இந்த இழப்பு கணக்கிடப்படுகிறது.

நெல்லையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘தேசாபிமானி’ ப. சிதம்பரம் அவர்கள் சீனா அப்படி முன்னேறுகிறது, இப்படி முன்னேறுகிறது என்று ஒவ்வொன்றுக்கும் சீனாவை உதாரணம் காட்டியே சொற்பொழிவாற்றினார். ஆனால் அவர் மறைக்கும் உண்மை சீனாவின் AT&C இழப்பு என்பது வெறும் 8 சதவீதம் என்பதை. தென்கொரியாவின் AT&C இழப்பு வெறும் 4 சதவீதம். இப்போது நமக்குப் புலப்படுகிறது, நாம் நம்முடைய முதலீட்டை எங்கே செய்ய வேண்டும் என்று? இந்தியாவின் இழப்பை 15 சதவீதமாகக் குறைத்தால் நமக்கு 20,000 MW அளவுக்கு உற்பத்தித் தேவை குறையும். இவை அனைத்தும் மக்களுக்கோ மண்ணுக்கோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதைத் தவிர நம்முடைய மின்னுற்பத்தி நிலையங்களின் செயல்திறன்களை மேம்படுத்தினால் இன்னும் நிறைய மின்சாரம் தயாரிக்க முடியும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்கள் மூலமான மின்சாரத்தை மனித குலம் முழுமைக்கும் அளிப்பதற்கான இயக்கம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலும் குறிப்பாக 2012ஆம் ஆண்டு, “நீடித்து நிலைக்கும் (மின்) ஆற்றலை அனைவருக்கும் அளிப்பதற்கான சர்வதேச ஆண்டாக”க் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் யாரையும் பாதிக்காத வகையில் முக்கியமாகச் சூழலியலுக்கு இசைவான வகையில் நாம் எரிபொருளைத் தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சுமார் 5900 துணை மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 80 சதவீதம் துணை மாவட்டங்களுக்கு 15 முதல் 20 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேவை. மிகக் குறைந்த அளவிலான இந்த மின்சாரத்தை அந்தந்தப் பகுதிகளிலேயே நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்களிலிருந்து தயாரிக்க முடியும். இந்தக் குறைந்த அளவு மின்சாரத்தைச் சூரிய சக்தி, காற்றாலை, பயோ-மாஸ் மூலமாக ஒரு மேம்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம் பெறமுடியும்.

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் இங்கிலாந்தில் இருந்த ஷூமாகர் எனும் பொருளியல் நிபுணர் ஒரு விஷயத்தை முன்வைத்தார், “சிறியது எப்போதுமே அழகானது” என்று. காந்தியின் சீடரும் ஊரகப் பொருளாதார நிபுணருமான J. C. குமரப்பா ஒரு சித்தாந்தத்தை முன்வைத்தார், “India does not require Mass production, it requires production by Masses” என்று, இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில் பார்த்தாலும் பரந்துபட்ட எரிசக்தி உற்பத்தியே சரியான தீர்வாக அமையும்.

அடிப்படையில் ஒரு கேள்வி? கல்பாக்கத்தில் மின்சாரம் தயாரித்து ஏன் கடப்பாவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்? எங்கே என்ன கிடைக்கிறதோ அதைவைத்து மின்சாரம் தயாரித்துக்கொள்ளலாமே? மின்சாரம் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அதன் சுற்றுப்புறத்தில் பகிர்மானம் செய்யப்பட்டு அங்கேயே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த முயற்சியில்தான் சூழலுக்கு இசைவான மின்சாரத்தைப் பெற முடியும்.
சூழலுக்கு இசைந்தும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் மின்சாரத்தைத் தயாரிப்பதற்கு மாற்று வழிகள் இருந்தும் அதிகச் செலவு பிடிக்கும், எதிர்காலத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் அணுமின் நிலையங்களை ஆதரிப்பது சாமானிய மக்களின் அறியாமையே. ஆனால் அணுமின் நிலையங்களை அரசியல் கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆதரிப்பது அறியாமையால் அல்ல. மக்களின் நலனை அடகுவைத்துப் பெரும் பொருளீட்டும் கயமைச் செயலே.

அணுசக்தியின் அறிவியல், பொருளியல், அரசியல் குறித்துப் பொது மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வும் ஒன்றுபட்ட எதிர்ப்புக் குரலுமே நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பாக அமைப்பதற்கு உதவும்.

இந்தியாவில் முன்னர் பயன்படுத்தப்பட்ட காற்றாலைகள் சுமார் 200 கிலோ வாட் மின் உற்பத்தித் திறனைக் கொண்டிருந்தன. தற்போது சுமார் 2 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட காற்றாலைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எனவே தற்போது பயன்பாட்டில் உள்ள உற்பத்தித் திறன் குறைந்த காற்றாலைகளின் திறனை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு உற்பத்தித் திறன் மேம்பட்ட காற்றாலைகளைத் துணை மாவட்டம் ஒன்றுக்குச் சுமார் 10 வீதம் பொருத்தினாலே அப்பகுதியின் மின்சாரத் தேவையை நிறைவு செய்ய முடியும். இந்தக் காற்றாலைகள் அனைத்தும் தரையிலிருந்து சுமார் 150 அடி உயரத்தில் சுழல்கின்றன. இதையும் சற்று மாற்றி அமைத்து இரண்டு வேறு உயரங்களில் இரண்டு அடுக்குக் காற்றாலைகள் அமைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளிலேயே இந்தக் காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. இதன் கீழே காலியாக இருக்கும் வெற்றிடங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பானல்களை நிறுவலாம். அல்லது இதன் இடையே உள்ள இடங்களில் மாற்று எரிபொருளாகப் பயன்படத்தக்க தாவரங்களைச் சாகுபடி செய்ய முடியும்.

இவ்வளவு இருந்தும் நம்முடைய அரசுகள் ஏன் இந்த அணு உலைகளைப் பிடித்துத் தொங்கிகொண்டு இருக்கின்றன என்று ஆராய்ந்தால் நமக்கு ஒரு விடயம் புலப்படும். அணு உலைகள் மற்றும் பெரிய மின் திட்டங்கள் எல்லாம் பல லட்சம் கோடிகள் முதலீடு உடையவை, இவை அனைத்தும் பெரும் முதலாளிகள் செய்யக்கூடியவை. ஆனால் சூரிய சக்தி, காற்றாலை போன்றவை சின்ன அளவினாலான முதலீடு உள்ளவை. சிறு, குறுந்தொழில்நடத்துனர்தாம் இதில் ஆர்வம் காண்பிப்பார்கள். அரசுகளுக்குப் பெரு முதலாளிகள் மீதுதாம் அக்கறை. காரணம் சொல்லத் தேவை இல்லை. இதைத் தான் சங்க இலக்கியத்தில் நான்மணி கடிகையில் சங்கப் புலவன் படியுள்ளான்,
கல்லில் தோன்றும் கதிர்மணி
காதலி சொல்லில் தோன்றும் உயர் மதம் மற்றும்
உன் அருளில் தோன்றும் அறநெறி எல்லாம்
பொருளில் தோன்றிவிடும்

-கோ. சுந்தர்ராஜன்


சென்னையில் வசித்துவரும் பொறியாளரான கட்டுரையாளர் “பூவுலகின் நண்பர்கள்” என்னும் சுற்றுச்சூழலுக்கான அமைப்புச் செயல்பாட்டாளர்களில் ஒருவர்.

நன்றி: காலச்சுவடு, மார்ச் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக