வியாழன், பிப்ரவரி 02, 2012

அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு (3) By ஞாநி


அணுஉலையை விட்டால் மின்சாரத்திற்கு வேறு வழி கிடையாது என்கிறார்களே ?

அணுசக்தி துறையின் பூச்சாண்டி அது. அதை நம்பி வேறு
வழிகளை நாம் மேற்கொள்ளாமல், அணுமின்சாரத்தை நம்பினால்,
நாம்தான் முட்டாள்களாகிவிடுவோம். அணுமின்சாரம் இதுவரை
எவ்வளவுகிடைத்திருக்கிறது என்ற கணக்கை இத்தனை மெகாவாட்,
இத்தனை யூனிட்டுகள் என்று சொல்லி பிரும்மாண்டமாகக்
காட்டி ஏமாற்றுகிறார்கள். அத்தனையும் இந்தியாவின் மொத்த
மின்சாரத் தயாரிப்பில் வெறும் 2.3 சதவிகிதம்தான். இதற்குத்தான்
கோடிக்கணக்கான ரூபாய்களை ஐம்பது வருடங்களாக வீணடித்துக்
கொண்டிருக்கிறோம். அடுத்த 20 வருடங்கள் இன்னும் பல்லாயிரம்
கோடிகளைக் கொட்டினாலும் அணு மின்சாரத்திலிருந்து பத்து
சதவிகிதத்தைக் கூட நாம் அடையும் வாய்ப்பு இல்லை.

2050க்குள் 30 ஆயிரம் மெகாவாட் அணுசக்தியிலிருந்து தருவோம் என்கிறார்களே ?

கடன் வாங்கித் திருப்பித் தராமல் ஏமாற்றுவதை வழக்கமாக செய்யும் ஆசாமிகள் படுகவர்ச்சியாகப் பொய்கள் சொல்வார்களில்லையா, அது போலத்தான் இது. 1962ல் என்ன சொன்னார்கள் தெரியுமா? 1982ல் மொத்தம் 20 கீகாவாட் தருவோம் என்றார்கள்.ஆனால் வந்தது வெறும் 1.06 கீகாவாட்தான். திரும்பவும் 1970-களில் சொன்னார்கள். இனி ஒவ்வொரு ஆண்டும் ஒரு 500 மெகாவாட் அணு மின் உலை கட்டப்படும் என்றார்கள். ஒரு 500 மெகாவாட் உலை கட்டவே மொத்தமாக 35 வருடம் ஆயிற்று. அடுத்த ரீல்: 2000மாவது வருடத்துக்குள் 43.5 கீகாவாட் உற்பத்தி தருவோம் என்றார்கள். கொடுத்தது வெறும் இரண்டே கீகாவாட்தான்.
 
கதிர்வீச்சுக்கு நிகரான வாய்வீச்சு ஓயவே இல்லை. 1980ல்
சொன்னார்கள்: பத்தாயிரம் மெகாவாட் வந்துவிடும். வந்தது அதில்
பத்து சதவிகிதம்தான். தொடர்ந்து இந்த அளப்பையெல்லாம்
பார்த்துக் கொண்டிருப்பவர் கணக்கு தணிக்கை அதிகாரி. அவர்
1999
ல் சொன்னார் ஒரு திட்டத்துக்கு 5400 கோடி செலவிட்டும் பயன் பூஜ்யமாக இருக்கிறது.
 
கூடங்குளம் உலையிலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஆயிரம் மெகாவாட் தருவோம் என்கிறார்களே?

இதுவும் நம் காதில் பூ சுற்றும் பிரசாரம்தான். முதலில் ஒன்றைப்
புரிந்துகொள்ளவேண்டும். அணுசக்தி துறை ஆயிரம் மெகாவாட்
தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி
அளவுகூட உற்பத்தியே செய்வதில்லை என்பதுதான் வரலாறு.
கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான்
மொத்த உற்பத்தி திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம்
தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.

ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில்
உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித்
திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம்
தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம்
கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு
உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன).
மீதி 1080 மெகாவாட்தான். இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம்
எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.)

ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட்.
இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும்
டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது
405
மெகாவாட்தான்.
 
இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை
விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும்
இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500
மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போது
டிரான்ஸ்மிஷன் லாஸ் என்ப்படும் மின் கடத்துதலில் ஏற்படும்
இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40
சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
 
இந்த மாதிரி நடைமுறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும் உண்டா?

நிறையவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 5500 மெகாவாட்
மின்சாரத்தை காற்றாலைகளிலிருந்து தயாரிக்கலாம். ஆனால் இதில்
4700
மெகாவாட்தான் இப்போது தயாரிக்கிறோம். அதிலேயே இன்னும் 700 மெகாவாட் மீதம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின் கூரைகளில் மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதையே பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், என்று பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம் உபரியாகிவிடும்.

தூய்மையான மாற்று வழிகளான காற்று, சூரியசக்தி இவற்றால் போதுமான மின்சாரம் தயாரிக்க முடியாது என்று அணு விஞ்ஞானிகள் சொல்கிறார்களே ?

அவர்கள் வேறு எப்படி சொல்வார்கள் ? அரசாங்கமும் அவர்களும்
கூட்டாக அணுசக்தியை தூக்கிப் பிடிப்பதற்காக இதர வழிகளைப் பற்றி தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். மே 2011ல் மும்பையில் அணு விஞ்ஞானிகள் பங்கேற்ற ஒரு கருத்தரங்கு நடந்தது. இதில் ஜப்பான் புகோஷிமா விபத்து, அணுஉலைகள் பாதுகாப்பானவை என்பதை நிரூபித்துவிட்டதாக அணுவிஞ்ஞானிகள் பேசியிருக்கிறார்கள். சுனாமியே தாக்கி அணு உலையே உருகியும் கூட சுற்றுச் சூழலுக்கும் ஊழியர்களுக்கும் மிகக் குறைவான பாதிப்புதான் ஏற்பட்டிருகிறதாம்! 

அதாவது சேதாரத்தை ரிப்பேர் செய்ய 40 வருடம் தேவைப்படக் கூடிய விபத்து அவர்களுக்கு மிகக் குறைவான பாதிப்பு ! இந்தக் கருத்தரங்கில் தலைமை தாங்கிப் பேசிய அணுசக்தி கமிஷனின் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் சூரிய சக்தி மின்சாரம் வணிகரீதியாகக் கட்டுப்படியாகாது என்று பேசினார். அவரை அடுத்த மூன்றே மாதங்களில் ஆகஸ்ட் 2011ல் இந்திய அரசு இந்தியாவின் சூரிய சக்திக்கான உச்சமான அமைப்பான தேசிய சோலார் எனர்ஜி கம்பெனியின் தலைவராக நியமித்துவிட்டது ! ஆட்டுக்குட்டிக்கு காவலாக ஓநாயை நியமிக்கமுடியுமா?

கொடுமைதான் ! அப்படியானால் மாற்று மின்சார தயாரிப்பு
வழிகள் பற்றிய உண்மைகள்தான் என்ன ?

உலக அளவிலேயே அணுமின்சாரத்துக்குக் கொட்டிக் கொடுத்தது
போல வேறு எந்த வழிமுறைக்கும் கொடுத்தது கிடையாது.
சோவியத் யூனியன் அதிபராக இருந்து அது பிரிவதற்கு காரணமாக
இருந்த அதிபர் மிக்கேல் கோர்பசேவ், அணு விஞ்ஞானிகளின்
பத்திரிகையின் மார்ச்/ஏப்ரல் 2011 இதழில் எழுதியதைப் பாருங்கள்:
மின்சாரத் தேவைக்கோ, சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கோ சிலர்
சொல்வது போல அணுமின்சாரம் ஒன்றும அருமருந்தல்ல. அது
மலிவு என்பது மிகைப்படுத்தப்பட்ட பேச்சு. அதன் விலையில் பல
செலவுகள் காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருக்கின்றன. மான்யம்
அள்ளித் தரப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 1947 முதல் 1999
வரை நேரடியாக் கொடுத்த மான்யம் 115 பில்லியன் டாலர்கள் (சுமார்
ஐந்து லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்கள்). மறைமுக மான்யங்கள் ஏழு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதே காலகட்டத்தில் காற்று சூரியசக்திக்கெல்லாமாக சேர்த்து கொடுத்த மொத்த மான்யம் வெறும் 5.5.பில்லியன் டாலர் (வெறும் 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள்)”. செர்னோபில் விபத்துதான் சோவியத் யூனியன் அரசு இனி பகிரங்கமாக எல்லா உண்மைகளையும் மக்களிடம் சொல்லியே ஆகவேண்டும் என்ற கருத்து-தகவல் சுதந்திரத்தைக் கொண்டு வந்தது; செர்னோபில்தான் என் கண்களைத் திறந்தது என்கிறார் கோர்பசேவ் கலாமுக்கும் மன்மோகனுக்கும் கண் திறக்க இங்கே ஒரு செர்னோபில் கூடப் போதாது.
 
இந்தியாவில் மின்சார தயாரிப்புக்கான மாற்று வழிகளின் நிலைமை என்ன ? அதற்குப் போதுமான பணம் ஒதுக்கப்படுகிறதா?

மிக முக்கியமான உண்மை ஏற்கனவே அணு மின்சாரத்தை விட
அதிகமான மின்சாரம் நமக்கு மாற்று வழிகளான் காற்று, சூரியசக்தி
ஆகியவற்றிலிருந்துதான் கிடைக்கிறது. அணுமின்சாரம் வெறும்
2.5
சதவிகிதம். காற்றும் சூரியசக்தியும் ஏற்கனவே 7 சதவிகிதத்தை
எட்டிவிட்டன. ஆனால் அணு மின்சாரத்தோடு ஒப்பிடும்போது
அவற்றுக்கு அரசு ஒதுக்கும் தொகைகள் மிக மிகக் குறைவு.

இந்த வருடம்தான் இந்திய அரசு மிக அதிக தொகை
ஒதுக்கியிருக்கிறது. 1000 கோடி ரூபாய் ! கூடங்குளத்தில்
கொட்டியிருப்பது மட்டுமே 13 ஆயிரம் கோடி ரூபாய் !!
காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட்
மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. புனல் மின்சாரம் எனப்படும் நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசிய புனல்மின் கழகம் இந்தியாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்கமுடியும் என்றும் இப்போது அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது.
 
சூரியசக்தி பல மடங்கு பிரும்மாண்டமானது. மொத்தம் நான்கு
லட்சம் மெகாவாட் தயாரிக்க முடியும்.இந்தியாவின் மொத்தத்
தேவையை விட இது பல மடங்கு அதிகம். வருடத்தில் நான்கே
மாதம் மட்டும் வெயில் அடிக்கக்கூடிய ஜெர்மனி, நார்வே போன்ற
நாடுகளில் ஏற்கனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை
சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில்
300
நாட்களுக்கு மொத்தம் 2500 மணி நேரம் தெளிவான வெயில்
இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போட்டோ
வொல்டேய்க் செல் பேனல்கள் தங்கள் மொத்த திறனில் வெறும்
பத்து சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம்
2015
ல் இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம் !
 
சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கச் செலவு அதிகம் என்று
அணு விஞ்ஞானிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்
பிரசாரம் செய்கிறார்களே ?

எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல்
விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை
அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில்
பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு
அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு மெகாவாட்டுக்கு 21 கோடி
ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள்
அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.
அங்கே நிறுவும் செலவு ஒரு மெகாவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான்.
நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.
 
இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும்
பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார்
போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. 

அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது. ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள்.

காற்று சூரியசக்தி மின்சாரத்தையெல்லாம் தேசிய கிரிட்டில் இணைப்பது கடினம் என்றும் அவற்றைக் கொண்டு 500, 1000, 2000 மெகாவாட் நிலையங்களை நடத்த முடியாது என்றும் சொல்கிறார்களே ?

முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும் ஆயிரக்கணக்கான
மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே
நாம் கேள்வி கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும்
வாகங்களை எடுத்துக் கொள்ளுவோம். சைக்கிள், டூ வீலர், கார்,
ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக
இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ்
நடத்தச் சொல்வோமா
 
இதே போல மின் உபயோகமும் பலதரப்பட்டது. வீட்டு உபயோகம்,
விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும் கிரிட் மூலம்தான் செய்யவேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான் மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன் லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது.
 
இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு
தொழிற்சாலை தேவைகளை பூர்த்தி செய்யலாம். வீட்டுத்
தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட் மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் இன்வர்ட்டர் வைத்துக் கொள்வதை விட சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம்.
 
மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில்
குவித்துவைத்துக் கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது.
சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர்கட். அத்திப்பட்டில்
ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால் நடப்பது.
அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே
ஒரு மணி நேரம் கூட பவர் கட் இருக்காது.

சூரிய சக்தி, காற்று மட்டுமல்ல, கிராமங்களில் வீணாகக் கிடக்கும்
முள்மரங்களை, தேங்காய் சிரட்டைகளை ஆவியாக்கிக் கூட மின்சாரம் தயாரிக்கலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனம் ஓர் ஒற்றை மெகாவாட் மின் நிலையத்தை ஆறாண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த மின்சாரத்தை தன் கிரிட்டுக்கு தமிழக மின் வாரியம் வாங்கிக் கொள்கிறது.
ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் இது போன்ற சிறு மின்
நிலையங்களை நிறுவி கிரிட்டுக்கே மின்சாரத்தை அனுப்பாமல்,
அந்த யூனியனின் இருக்கும் கிராமங்களுக்கு மட்டும் அனுப்பி
லோகல் மின்தேவையை அதிலேயே சந்தித்துவிடலாம். மின்வெட்டே
இல்லாமல் விவசாயம் சீராக நடக்கும். ஆந்திர மாநிலம் முழுக்க
இவ்வாறு சிறு மின் நிலையங்கள் நிறுவும் திட்டத்தை தீவிரமாக
பரிசீலித்து வருகிறது.

சூரியசக்தி மின்சாரத்தை பல விதமாக தயாரிக்கலாம்.
போட்டொவோல்டேய்க் செல் பேனல் முறை ஒன்று. இன்னொன்று
குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப் பயன்படுத்தி
தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த
வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும் பயன்படுத்த வசதி இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரும்மாண்டமான சூரியசக்தி மின் நிலையங்களை ஏற்படுத்தினால் 15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம்.
 
வெளிநாடுகளில் சூரியசக்தி மின்சாரம் நிலை எப்படி ?

இந்தியாவைப் போல வருடம் முழுவது வெயில் இல்லாத நாடுகள்
கூட முன்பே இதில் இறங்கிவிட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகித மின்சாரம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவொல்டெய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. உலக அளவில் 3800 மெகாவாட்டுக்கான் சோலார் பேனல்களில் சரி பாதியை தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
 
இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி
மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கிரிட்டுடன் இணைத்துவிட்டது.
 
இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர்
அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டொ வோல்டெய்க் செல்
பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சார தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது.
 
அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை
கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்து கவனிக்க
வேண்டும்.
 
ஆனால் இன்னமும் உலகம் முழுவதும் புது அணு உலைகள் தொடங்கப்படுவதாக அணு உலை ஆதரவாளர்கள் சொல்கிறார்களே?

அதுவும் பொய்தான். ஒவ்வொரு தகவலாகப் பார்க்கலாம். 1.
நான்கு வருடங்களாக் உலக அளவில் அணு மின்சாரத் தயாரிப்பு
அளவு தேக்கமடைந்தது மட்டுமல்ல, குறைந்தும் வருகிறது. 2006ல்
15.2
சதவிகிதமாக இருந்தது 2010ல் 13.5 ஆகிவிட்டது. 2. அதே
போல உலக அளவில் இருக்கும் அணுமின்சாரத் தயாரிப்புக்கான
நிறுவப்பட்ட திறன் அளவும் குறைந்துவிட்டது. 2006ல் இது 8.7 சதவிகிதம். 2010ல் 7.4தான். 3.வருகிற 2030க்குள் மொத்தம் 143 உலைகள் வயதாகிவிட்டதால் மூடியாக வேண்டிய நிலையில் நிரந்தர சமாதி வைக்கப்படவேண்டியவை. எனவே 2030ல் உலக நிலையைப் பார்த்தால் இப்போதுள்ளதை விட 30 சதவிகிதம் அணு உலைகள் குறைவாகவே இருக்கும். ஜெர்மனி 2020க்குள் தன் அணு உலைகள் அனிஅத்தையும் மூடப் போகிறது. ஆஸ்திரியா, ஸ்பெயின், ஸ்வீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் தங்கள் அணு உலைகளைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன. 4. இப்போது மொத்தமாக 64 உலைகள் கட்டப்பட்டு வருவதாக உலக அணுசக்தி முகமை தெரிவித்தது. இதில் 12 உலைகள் 20 வருடங்களாகக் கட்டப்பட்டு வருபவை. மொத்தம் 64ல் 43 உலைகள் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்றே நாடுகளில் கட்டப்படுபவை. மேலை நாடுகளில் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஆனால் நமக்கு அணு உலை விற்பதில் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்களே ?

ஆபத்தான தொழில்நுட்பத்துக்கு தங்கள் நாடுகளில் எதிர்ப்பு
பலமாக இருக்கும்போது அதை நம் போன்ற முட்டாள் நாடுகளின்
தலையில் கட்டுவதுதான் அவற்றின் வாடிக்கை.
அமெரிக்காவில் 1982ல் பத்து லட்சம் பேர் அணு உலைகளுக்கு
எதிராகப் பேரணி நடத்தியபிறகு அமெரிக்காவில் புது உலையே
கட்டவில்லை. சுமார் 80 இயக்கங்கள் அங்கே உள்ளன. அமெரிக்க
துணை ஜனதிபதியாக இருந்த அல் கோரே, நுகர்வோர் உரிமைப்
போராளி ரால்ப் நாடர் போன்றோரும் நூற்றுக்கணக்கான விஞ்
ஞானிகளும் அங்கே அணு உலைக்கு எதிராக பகிரங்கமாக குரல்
கொடுத்து வந்துள்ளனர்.
 
தோல் பதனிடுதல், துணிகளுக்கு சாயம் ஏற்றுதல் இரண்டும்
சுற்றுச் சூழலைக் கடுமையாக பாதிக்கின்றன என்று மேலை
நாடுகளில் எதிர்ப்பு வந்ததும், அந்த வேலையை நம் தலையில் அவை கட்டிவிட்டன. டாலருக்கும் யூரோவுக்கும் ஆசைப்பட்டுகொண்டு நம் தொழிலதிபர்கள் நம் ஆறுகளையும் விளைநிலங்களையும் தொடர்ந்து நாசமாக்கிவருகிறார்கள். நம் ஊரை நாசப்படுத்தி பொருட்களை தயாரித்து அவர்கள் உபயோகத்துக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். 

நொய்யல் ஆற்றை மாசுபடுத்தி அழித்த சாயப்பட்டறைகளுக்கோ பாலாறை நாசமாக்கிய தோல் பதனிடும் கூடங்களுக்கோ யாருக்கும் எந்த கோர்ட்டிலும் தண்டனை எதுவும் தரப்பட்டதில்லை. அவர்களிட்ம அபராதாம் வசூலித்ததில்லை. விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததில்லை. மாறாக அரசாங்கப் பணத்தைக் கோடிக்கணக்கில் சாயப்பட்டறை முதலாளிகளுக்கு போலி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதகாக மான்யமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
போபால் விஷ வாயு விபத்தில் தவறு செய்த அமெரிக்கக் கம்பெனி
முதலாளியை விமானத்தில் தப்பிச்செல்லவிட்டுவிட்டு அவரை கோர்ட்டில் ஒப்படைக்கும்படி கோரிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்தபடி அங்கேயுள்ள அணு உலை தயாரிப்பாளர்களுக்கு
அடுத்த மார்க்கெட்டாக இந்தியா போன்ற ஏமாளி நாடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கான சிறந்த வர்த்தக தரகராக
மன்மோகன்சிங் அவர்களுக்கு அமைந்திருக்கிறார்.
உலகத்திலேயே தன்வசம் அதிக அளவு யூரேனியத்தை (25 சதவிகிதம்) வைத்திருக்கும் ஆஸ்திரேலியாவிடம் யூரேனியம் கேட்டு இந்தியா மன்றாடுகிறது. அந்த ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலை கூட கட்டப்படவில்லையே, ஏன் என்று யோசிக்க வேண்டாமா

 பிரும்மாண்டமான பாலைவனம், ஆளற்ற பகுதிகள் இருந்தும் அணு உலை கட்டவே இல்லையே, ஏன் ? அது ஆபத்தானது என்பதால் அங்கே மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
 
ஆனால் கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால்
அந்நிய சக்திகள் இருப்பதாக மன்மோகனும் கலாமும் பூச்சாண்டி
காட்டுகிறார்கள். உலகப் பொருளாதார ஏகாதிபத்ய சக்திகள் இந்தியா
முன்னேறவிடாமல் தடுக்க இப்படி செய்வதாகக் கலாம் சொல்கிறார்.
யார் அந்த சக்தி ? அமெரிக்காதானே ? அது மன்மோகன் அரசுடன்
போட்ட 123 ஒப்ப்ந்தத்தின் நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவதா?
அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிடம் அணு உலைகளை வாங்க
இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது ? அதில் எப்படி
இந்தியா முன்னேறும்

விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈட்டை அணு உலை விற்ற கம்பெனி
முழுக்க தரமுடியாது. இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது ? அதை கலாம் எதிர்க்கவில்லை ? அந்த ஒப்பந்தம் போடத் தடையாக இருந்த இந்திய இடதுசாரிகள் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை முறியடிக்க முலாயம் சிங் யாதவின் உதவியை கலாம்தான் பெற்றுத் தந்தார். 

உண்மையில் அந்நிய நாடுகளுக்கும் வெளிநாட்டு சக்திகளுக்காகவும் இங்கே வேலை பார்ப்பது மன்மோகன்சிங்கும், அவரது ஆட்சியும் அணு உலை ஆதரவாளர்களும்தான். இதை எதிர்ப்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து தூண்டுதல், பண உதவி என்று இந்த போலி தேசபக்தர்கள்தான் பழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் நியாயமாகத்தான் இருக்கிறது. மீண்டும் 
தொடக்கத்துக்கே வருவோம். கூடங்குளம் அணு உலை
திட்டத்தை இப்போது எதிர்க்கிற தீவிரத்துடன் 1987லேயே
எதிர்த்திருந்தால் கட்டாமலே நிறுத்தியிருக்கலாமே

அப்போது மட்டுமல்ல, ஐம்பது வருடங்களாக இந்தியாவின்
பல்வேறு பகுதிகளில் அனு உலைகளுக்கு எதிராக பல விஞ்ஞானிகளும் அறிஞர்களும், சாதாரண மக்களின் இயக்கங்களும் குரலெழுப்பிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவற்றை அரசும் மீடியாவும் பொருட்படுத்தவில்லை.
 
கேரள மாநிலத்தின் எதிர்ப்பு மட்டும்தான் இதுவரை வெற்றி
பெற்றிருக்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றுவதிலும்
இப்போது கூடங்குளத்தின் தலையில் கட்டப்பட்ட அணு உலையை
தங்கள் மாநிலத்துக்கு வர விடாமல் தடுத்ததிலும் அவர்கள் மட்டுமே
ஜெயித்தார்கள். அடுத்து மேற்கு வங்கத்தில் மம்தா அரசு சற்று
உறுதியாக எதிர்க்கிறது.
 
இங்கே 1987ல் போராடிய பலரை மிரட்டி, வழக்கு போட்டு ஊரை
விட்டே ஓடச் செய்து அரசு அந்த போராட்டத்தை முறியடித்தது.
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அரசு பல இடங்களில் பின்பற்றும்
அதே முறைதான். இப்போதும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளை
எடுக்க ஆயத்தம் செய்துகொண்டுதான் இருக்கிறது. ஜெயலலிதா
அரசு இன்னமும் முழுமையாக ஒத்துழைக்காததால் தள்ளிப்
போகிறது. படித்தவர்கள், அறிவுஜீவிகள்,பாமர மக்களுடன் இணைந்து குரலெழுப்பி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை கேரள அரசு போல உறுதியாக இருக்கும்படி வற்புறுத்த வேண்டும்.

ஒரு சிலர் பெரும் தொகையான 13 ஆயிரம் கோடி ரூபாய்
இதில் இப்போது முடங்கியிருப்பதால் இந்த உலைகளை
மட்டும் அனுமதித்துவிடலாமா என்று கேட்கிறார்களே

மன்மோகன்சிங் கூட ரஷ்யாவில் நிருபர்களிட்ம பேசும்போது, சுமார்
13
ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு அமைத்த உலையை அப்படி
எளிதில் மூடிவிட்டுப் போய்விடமுடியாது என்று பேசியிருக்கிறார்.
அதாவது அவருக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய்தான் முக்கியம்.
மக்களின் நலனோ, அச்சமோ அதை விட சின்ன விஷயம்தான்.

இடிந்தகரை கிராமத்திலிருந்து வந்த சாதாரணப் பெண்ணிடம்
சென்னை நிருபர் சந்திப்பில் ஒரு நிருபர் கேட்டார். இத்தனை கோடி
ரூபாய் செலவு செய்து கட்டிய பிறகு மூடச் சொல்வது நியாயமா?
பணம் வீணாகிறதே ? அந்தப் பெண் சொன்ன பதில்: உங்க மகளுக்கு
திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி விடிந்தால்
கல்யாணம் நடத்தபோறீங்க. பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு
முந்தின ராத்திரி தெரிய வந்தா, அடுத்த நாள் காலையில கல்யாணம்
செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம்
நடக்கட்டும்னு விடுவீங்களா

பாமரப் பெண்ணுக்கு புரிகிற விஷயம் மெத்தப் படித்த மேதாவி
மன்மோகனுக்குப் புரிவதில்லை. அவருக்குப் புரிவதெல்லாம்
அவருடைய லட்சிய பூமியான அமெரிக்காவில் சொல்வதும்
செய்வதும்தான் என்பதால், அவருக்காக அமெரிக்க அணு உலைகள்
வரலாற்றிலிருந்து ஒரு தகவலைப் பார்ப்போம்.

1979ல் த்ரீ மைல் ஐலண்ட் அணு உலையில் விபத்து ஏற்படுவதற்கு
முன்பு 1973ல் நியூயார்க் பகுதியில் இருக்கும் லாங் ஐலண்ட் என்ற
இடத்தில் கட்ட ஆரம்பித்த ஷோர்ஹேம் ப்ளாண்ட்டை 1984ல் கட்டி
முடித்தார்கள்.இது. 1983ல் அமெரிக்க மத்திய அரசு இந்த உலையில்
விபத்து ஏற்பட்டால் எப்படி மக்களை வெளியேற்றவேண்டும்
என்பதற்கான அவசர கால திட்டத்தை உருவாக்கி வெளியிட்டது.

இதற்கு உள்ளூர் பஞ்சாயத்தான சஃபோக் பகுதி கவுண்ட்டியின் ஒப்புதல் வேண்டும். ஆனால் அதை ஏற்கமுடியாது என்று உலை இருக்கும் பகுதியான சஃபோக் கவுண்ட்டி (பஞ்சாயத்து) தெரிவித்தது.
ஆறு பில்லியன் டாலர் (சுமார் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணு
உலை வேண்டாம் என்று அங்கே மக்கள் வாக்களித்தார்கள். அதை
அரசு ஏற்றுக் கொண்டது. உலை சொந்தக்காரரான லில்கோ
கம்பெனிக்கு அந்தப் பணத்தை அரசு செலுத்தியது. உலை மூடும்
செலவான இன்னொரு 186 மில்லியன் டாலரையும் அரசு ஏற்றது.
இத்தனையும் கட்டி முடித்து இயங்கவே ஆரம்பிக்காத அணு
உலைக்கு! இப்படி உலையை மூடும் செலவுக்காக பொது மக்கள்
அடுத்த 30 வருடத்துக்கு மின் கட்டணத்தில் மூன்று சதவிகிதம்
சர்சார்ஜ் செலுத்தும்படி அரசு கோரியதை சஃபோக் கவுண்ட்டி ஏற்றுக்
கொண்டது. அங்கே யாரும் அய்யோ மின்சாரம் தேவைஎன்று
கூப்பாடு போடவில்லை. இத்தனைக்கும் வருடந்தோறும் அப்போது
அங்கே மின் தேவை 1 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
மூடப்பட்ட அணு உலை சிறு மாற்றங்களுடன் 2002ல் இயற்கை
எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையாக மாற்றப்பட்டது. ஷோர்ஹேம் உலை மூடப்பட்டபிறகு அமெரிக்காவில் புதிய அணு உலை எதுவும் ஆரம்பிக்கப்படவே இல்லை.

அமெரிக்க தாசரான மன்மோகன் இந்த வரலாற்று நிகழ்விலிருந்து
சில பாடங்களைக் கற்க வேண்டும். பல கோடி ரூபாய் செலவழித்து
விட்டதற்காக ஆபத்தான உலையை ஆரம்பித்துவிடக் கூடாது.
உண்மையான ஜனநாயகம் என்பது மத்திய அரசு தன் விருப்பத்தை
பஞ்சாயத்துகளின் மீது திணிப்பது அல்ல. உலை இருக்கும் பகுதியின்
பஞ்சாயத்து எடுக்கும் முடிவுக்குதான் மத்திய அரசு கட்டுப்பட
வேண்டும். மத்திய அரசின் முடிவுக்குத் தலையாட்டுவது பஞ்சாயத்தில் வேலையல்ல.
 
கூடங்குளம் பகுதியில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதமே எல்லா பஞ்
சாயத்துகளும் கூடி அணு உலை இங்கே வேண்டாம் என்று தீர்மானம்
நிறைவேற்றியிருக்கின்றன. கட்டிய உலையை வேறு எரிபொருள்
கொண்டு இயக்கமுடியுமா என்று ஆராய்வதுதான் விஞ்ஞானிகளின்
வேலை. அது முடியும். ஷோர்ஹேம் போல கூடங்குளத்தையும்
இயற்கை எரிவாயு அல்லது அனல் மின் நிலையமாக மாற்றமுடியும்.
 
அப்படிச் செய்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடுமா?

இல்லை. அது ஒரு கட்டம். அடுத்த கட்டமாக இந்தியாவில்
இனி புது அணு உலைகள் தொடங்குவதில்லை என்ற முடிவை
எடுக்கவேண்டும். ஏற்கனவே இயங்கிவரும் உலைகளை ஒவ்வொன்றாக மூட வேண்டும். குறிப்பாக தமிழத்தில் தலைநகர் சென்னைக்கு அருகில் கடந்த இருபதாண்டுகளாக இயங்கும் கல்பாக்கம் உலைகள் பற்றி முழுமையான சுதந்திரமான ஆய்வு செய்யப்படவேண்டும். கல்பாக்கம் அணு உலைகளில் என்னென்ன விபத்துகள் நிகழ்ந்தன, ஏன் நிகழ்ந்தன என்பதையும், கல்பாக்கத்தை சுற்றிலும் இருக்கும் பகுதிகளில் கதிர் வீச்சு பாதிப்பு பற்றிய மருத்துவ ஆய்வையும் அணு சக்தித் துறைக்கு தொடர்பில்லாத விஞ்ஞானிகளைக் கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தரச் சொல்லவேண்டும்
இந்தியாவில் ஏற்கனவே இயங்கிவரும் அணு உலைகளின் நிலை
என்ன? ஒவ்வொரு அணு உலை, யுரேனிய சுரங்கம், சுத்திகரிப்பு
வளாகங்கள் ஆகியவை இருக்கும் இடங்களில் அந்த சுற்று வட்டார
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன ? மீனவர் வாழ்க்கையும்
மீன்வளமும் அந்தப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன?
பணி புரிவோரில் கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்படுவோர் யார் யார்?
அதில் தினக்கூலிகள் எத்தனை பேர்? இதுவரை நடந்த விபத்துகள்
என்ன? அவற்றின் விளைவுகள் என்ன? இதைப் பற்றியெல்லாம்
அரசுக்கு தொடர்பில்லாத சுயேச்சையான மருத்துவர்கள், அறிஞர்கள், நீதிபதிகள், சூழல் ஆர்வலர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி விசாரிக்கவேண்டும். கல்பாக்கம் உடபட அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் பணியாற்றுவோர், பணியாற்றினோர் ரகசியமாக குழுவின் முன்பு தகவல் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்.
ஊழலும் லஞ்சமும் ஒழுக்கக் கேடும் மலிந்து கிடக்கும் இந்தியச்
சூழலில், எந்த அமைச்சருக்கு எந்த இலாகா, எந்த இலாகாவுக்கு
யார் அமைச்சர் என்பதை தொழிலதிபர்களின் தரகர்கள் தீர்மானிக்கும்
கேடு கெட்ட அரசியலில், மனித குலத்தாலேயே இதுவரை தீர்வு
காணப்படாத ஆபத்தான அணு தொழில் நுட்பத்தை அமலாக்குவது
மிக மிக ஆபத்தானது. இரண்டு சதவிகித மின்சாரத் தயாரிப்பில்
இருக்கும் போதே முடிவெடுப்பது அவசியம். அணு உலைக்கு
இறைக்கும் கோடிக் கணக்கான பணத்தை மாற்று முயற்சிகளுக்கு
ஒதுக்க வேண்டும்.
 
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விட, இந்திய அணு
உலைகளை ஆய்வுக்குட்படுத்த சுயேச்சையான ஒரு லோக்பாலை
உருவாக்குவதுதான் என்னைப் பொறுத்த வரையில் இன்னும்
அவசரமான பிரச்சினை. ஏனென்றால் உயிரோடு இருந்தால்தான்
லஞ்சம் கொடுப்பது வாங்குவது அதை விசாரிப்பது பற்றியெல்லாம்
பேசமுடியும்.
 
வீட்டுக்கு வீடு இலவச டி.வி.பெட்டி, கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ்,
வாஷிங் மெஷின், குறைந்த வட்டிக் கடனில் ஏ.சி, கார், மெட்ரோ
ரயில், கேட்டட் கம்யூனிட்டியில் ஒரு சொகுசான வீடு கிடைத்தால்
போதும் என்று ஏங்கிக் கிடக்கும் முட்டாள்களாகிய நாம், சொல்லாமல் கொள்ளாமல் வரவிருக்கும் இலவசமான கதிர் வீச்சு பற்றி இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால் பேரழிவுக்கு வழி வகுப்பது உறுதி.
இல்லாவிட்டால் பேரழிவு வரும்போது உங்களால் கரப்பான் பூச்சியாக மாறிவிடமுடியுமா என்று யோசிக்கவேண்டும்.

கரப்பான் பூச்சியாக மாறுவதா? ஏன்? எதற்கு?

சென்னையில் அணு எதிர்ப்பு இயக்கத்தை 1986ல் நடத்திய
நானும் நண்பர்களும் அப்போது உங்களால் கரப்பான் பூச்சி ஆகமுடியுமா என்ற தலைப்பில் ஒரு பிரசாரப்படம் எடுத்தோம். காரணம் கரப்பான் பூச்சிதான் கதிரியக்கத்தில் அழியாதது என்று அப்போது நாங்கள் அறிந்து வைத்திருந்தோம். காஃப்காவின் உலகப் புகழ் பெற்ற மெடமார்ஃபசிஸ் கதையின் கதாநாயகன் பூச்சியாக மாறிவிடுகிறான். அது போல் நாம் எல்லாரும் கரப்பான் பூச்சிகளாக மாறமுடிந்தாலொழிய அணுக் கதிர் வீச்சிலிருந்து தப்பமுடியாது என்று அப்போது சொன்னோம்.
உண்மையில் கரப்பான் பூச்சிக்கு மனிதனை விட கதிரியக்கத்தை
தாங்கும் சக்தி பதினைந்து மடங்கு அதிகமாக இருக்கிறது. அதை
விட அதிக தாங்கும் சக்தி உள்ளது ப்ரூட் ஃப்ளை எனப்படும் ஈ !
 
கரப்பான் பூச்சி, ஈக்களை விட கதிரியக்கத்தை தாங்கும் சக்தி
உள்ளது ஏதாவது உண்டா

ஒரு பாக்டீரியா இருக்கிறது அதன் பெயர் டைனோகாக்கஸ்
ரேடியோடியூரான் ! இது கதிரியக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில்
கூட தழைக்கக்கூடியது. கதிர்வீச்சைத் தாங்கும் சக்திக்காக இது
கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்றிருக்கிறது.

டைனோகாகஸை 1956ல் தற்செயலாகக் கண்டுபிடித்தவர்
விஞ்ஞானி ஆண்டர்சன் இறைச்சியை கதிரியக்கத்தின் மூலம்
பதப்படுத்திவைக்கும் சோதனையின்போது பல நாள் கதிர் வீச்சுக்குப்
பிறகும் அந்த இறைச்சியிலேயே உருவாகியிருந்த பாக்டீரியாதான்
டைனோகாகஸ் ரேடியோடியுரான். இதையடுத்து இந்த பாக்டீரியாவைப் பயன்படுத்தி கதிர்வீச்சுள்ள பொருட்களின் கதிரியக்கத்தை அழிக்கவோ குறைக்கவோ முடியுமா என்று ஆராய்ந்தார்கள். அணு ஆயுதத் தயாரிப்பில் வரும் கழிவுகளில் இருக்கும் மெர்க்குரியை கரைக்க மட்டும் இது பயன்பட்டது.

இந்த பாக்டீரியாவின் முழு மரபணுக் கூறுகளும் கண்டுபிடிக்கப்பட்ட
பின்னர் 2003ல் ஒரு வித்யாசமான சோதனை செய்தார்கள்.

கதிரியக்கத்தால் உயிர்கள் எல்லாம் அழிந்தால் அதன்பின்னரும் இந்த
பாக்டீரியா இருக்குமானால், இதன் வழியே எந்த தகவலையாவது
அடுத்து பரிணாமத்தில் உருவாகக்கூடிய உயிரினத்துக்கு கிடைக்க
வசதியாக வைத்துவிட்டுப் போகமுடியுமா என்பதே இந்த சோதனை.
இந்த சோதனைக்காக ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்தார்கள். அது
இட் ஈஸ் எ ஸ்மால் வேர்ல்ட்என்ற பாடல். 1964ல் யூனிசெஃப்
கண்காட்சியில் குழந்தைகள் அரங்குக்காக வால்ட் டிஸ்னி கம்பெனியின் தயாரிப்பில் ஷெர்மன் பிரதர்ஸ் எழுதி உருவாக்கிய அந்தப் பாடலை. மரபணுக் கூறுகளாக மாற்றி பாக்டீரியாவின் டி.என்.ஏ.வில் செலுத்திவைத்து அந்த பாக்டிரீயாவின் நூறு தலைமுறைகளுக்குப் பின்னரும் அதிலிருந்து அந்தப் பாடலைப் பிரித்தெடுக்க முடியுமா என்று முயற்சித்தார்கள். பிரித்தெடுக்க முடிந்தது! என்றாலும் இவ்வாறு அணுக் கதிர் வீச்சால் உலக உயிர்கள் அழிந்தபிறகும் எதிர்காலத்துக்கு எல்லா தகவல்களும் கிடைப்பது போல பாக்டீரியாவைப் பயன்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன.

இன்றே அணு உலைகளை அகற்ற நாம் உழைக்காவிட்டால் நாளை
நம் எதிர்கால தலைமுறைகள் மனிதர்களாகப் பிறப்பதற்கு பதில்
டைனோகாக்கஸ் ரேடியோடியுரான் பாக்டீரியாவாகப் பிறக்காமல்
போனோமே என்று வருந்தும் நிலைதான் வரும்.
 
இட் ஈஸ் எ ஸ்மால் வேர்ல்ட்ஓர் அற்புதமான பாடல். வரிகள்
இதோ :
அது சிரிப்புகளின் உலகம்..
அது கண்ணீர்த் துளிகளின் உலகம்
அது நம்பிக்கைகளின் உலகம்
அது அச்சங்களின் உலகம்
நாம் பகிர்ந்துகொள்ள இங்கே ஏராளம்
எனவே இது உணர்ந்துகொள்ளும் தருணம்
இது ரொம்ப சின்ன உலகம்.. அட
இது ரொம்ப சின்ன உலகம்.
இருப்பது ஒரே ஒரு நிலா
ஒரே ஒரு பொன்னிற சூரியன்
எல்லாரும் நணபரே என்று சொல்ல
எப்போதும் தேவை ஒரு புன்னகைதான்
மலைகள் பிரித்தாலும்
கடல்கள் விரிந்தாலும்
இது ரொம்ப சின்ன உலகம் அட
இது ரொம்ப சின்ன உலகம்
——————————————-
இந்த சிறு தொகுப்பை வாசித்து முடித்ததும் மனதில் பல கேள்விகள் எழுவது இயற்கை. எனவே மறுபடியும் ஒரு முறை படியுங்கள். நம் கேள்விகளுக்கான பதில்கள் பல நம்மிடமே இருப்பது தெரியும். மேலும் பதில்களை தேடிச் சென்று கண்டடைய முயற்சித்தால் வெற்றியடைவோம்.
நன்றி
ஞாநி

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆமாம் ஞானி பெரிய விஞ்ஞானி.. அவர் சொல்லிட்டாராம்.. எந்த எந்த விஷயத்தை யார் யார் பேசறதுன்னு இருக்கு.

அணு மின்சாரம் வேண்டாம். மின்சாரம் கட் ஆகக் கூடாது. அதுக்கு காசும் அதிகம் தரமாட்டோம். ப்ரீயா தரனும். விளங்கிடும் தமிழகம்

பெயரில்லா சொன்னது…

//ஆமாம் ஞானி பெரிய விஞ்ஞானி.. அவர் சொல்லிட்டாராம்.. எந்த எந்த விஷயத்தை யார் யார் பேசறதுன்னு இருக்கு.//
ஆமாம். ஞாநி, அப்துல் கலாம் அளவுக்கு கோமாளி கிடையாது. அவர் எப்படி, இப்படி பதில் சொல்லமுடியாத ஏடாகூட கேள்விகளை கேட்கலாம்.


//அணு மின்சாரம் வேண்டாம்.//
ஆமாம் வேண்டாம். அதற்கு பதிலாக ஆபத்தில்லாத மின்சாரம் வேண்டும்.
//மின்சாரம் கட் ஆகக் கூடாது.//
ஆமாம் கட் ஆகக்கூடாது. இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு கட் ஆகாத மின்சாரம் வழங்கும்போது எங்களுக்கும் கொடுத்தால் என்ன.

//அதுக்கு காசும் அதிகம் தரமாட்டோம்.//
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தருகிறமாதிரியே எங்களுக்கும் கொடுங்கள் என்று கேட்பது தவறா

// ப்ரீயா தரனும்.//
ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் தரலாம். அதில் தவறில்லைதான்.

//விளங்கிடும் தமிழகம் //

விளங்கட்டும் தமிழகம்.

JOTHI சொன்னது…

இங்கே நாம் கருத்துக்கு கருத்து வைத்து தெளிவை நோக்கியே நடைபோட வேண்டும்.அய்யா சூரிய ஓளி தயாரிப்பதைப் பற்றிய கட்டுரைகள் ,விளக்கங்கள் ,படங்கள் போன்றவைகளை எதிர்பார்க்கிறேன்.மற்ற படி மாற்று மின்சாரம் தயாரிப்பது போன்றவற்றிற்கு யாரை கேட்டால் விவரம் தெரியும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள் .

பூவுலகின் நண்பர்கள் சொன்னது…

@JOTHI
நன்றி சகோதரி.

http://www.kalpakkam.net/2011/10/nuclear-free-carbon-free-world-is.html

இந்த இணைப்பில் நீங்கள் கேட்கும் விபரங்கள் உள்ளன.இதுபோல மேலும் பல விவரங்களும் உள்ளன. அவற்றை தமிழில் மொழிபெயர்த்து வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்தப் பணியில் வாய்ப்பிருந்தால் நீங்களும் பங்கேற்கலாம்.

enpaarvaiyil சொன்னது…

நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழலில் கொழுத்து திளைக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கு தீனி போடுவதற்கு ஏன் மக்கள் தங்கள் சம்பாதிக்கும்
ஊதியத்தில் பெரும்பகுதியை அழ வேண்டும் என்று சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது

வீட்டு உபயோகத்தில் தண்ணீர் இறைக்கும்,ஏர் கண்டிஷனர் ,அரவை இயந்திரம்
கருவிகள் தவிர்த்து அனைத்து உபயோகங்களுக்கும் சூரிய சக்தியை பயன்படுத்தினால் மின்சார வாரியம் தரும் மின்சக்தியில் பெரும்பகுதி மிச்சம் ஆகும்

அதை தொழிற்சாலைகளுக்கு வழங்கினால் அவர்களுக்கு தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும்

மின்சாரத்தை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லும் செலவு கணிசமாக குறையும்

விவசாய நிலங்களில் காற்றாலை மூலம் / மின்சாரம்மூலம் தண்ணீர் இறைக்கும் பம்புகளை
நிறுவினால் பெரும்பகுதி மின்சாரம் சேமிக்க முடியும்

சாணம், மனித கழிவு, மற்றும் அழுகும் பொருட்கள் மூலம் மீத்தேன் வாயு மூலம் சமையல் தேவைகளை பூர்த்தி செய்தால் மின்சக்தி தேவை பெரும்பகுதி குறைந்துவிடும்

தற்போதுஅதிக மின்சக்தியை செலவழிக்கும் Inductionstove மக்களிடையே உபயோகத்தில் கொண்டுவர நடவடிக்கை பன்னாடை நிறுவனங்கள் கடும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன

எனவே அணுசக்தி மூலம் பெறும் மின்சாரம் அதிக செலவு பிடிப்பதும்,ஆபத்தானதும் கூட என்பதை மக்கள் புரிந்து கொள்ள இன்னும் தீவிர விழிப்புணர்வு பிரசாரம் தேவை

அரசு அதற்க்கு தயாரில்லை .மக்களும் தயாரில்லை
அர்த்தமற்ற வாதங்களும், வன்முறையை தூண்டும் அறிக்கைகளும்தான் தினமும் மக்களை குழப்பிகொண்டிருக்கின்றன

மேற்கண்ட வழிகளில் மின்சாரத்தை பயன்படுத்த தமிழ் நாட்டில் பல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அவர்களை பெரிய வணிக நிறுவனங்களோ அரசு நிறுவங்களோ ஆதரவு அளிப்பதும் இல்லை
மாறாக அவர்களை நசுக்க முயற்சி செய்வது வேதனைக்குரியதும் கண்டனதிற்குரியதும் ஆகும்

enpaarvaiyil சொன்னது…

Mr Gnaani has put forth valid points against atomic energy, People must look into the facts and not about him
It is the Govt that should act But it is adamant
and incapable of handling the situation
That is the curse of the Indiyan people. .
The govt should stop giving free current .If it wants to give it should be given to the needy persons only and not given by random which is misused other than the purpose for which it is given
The govt should stop theft of current with iron hand
The Govt. should efficiently handle the electric supply with latest technology then and there with efficient staff
The use of illegal current for lavish lightings festivals, political meetings should be completely curbed

கருத்துரையிடுக