வெள்ளி, ஜனவரி 13, 2012

உலைகள்…ஊழல்கள்….

இன்னும் இரண்டு வாரங்களில் கூடங்குளம் அணு உலை இயங்க ஆரம்பித்துவிடும் என்று பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யாவில் அந்த நாட்டு பிரதமரை சந்தித்தபோது அறிவித்தார். இது எப்படி சாத்தியம் என்று இந்த வாரம் சென்னையில் ஒரு டி.வி.நிகழ்ச்சியில் சந்தித்த மத்திய அரசின் உயர் மட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அணுசக்தித் துறை விஞ்ஞானியுமான பாலு அவர்களிடம் படப்பிடிப்புக்கு வெளியே பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன்.

கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டியின் கீழ் இடிந்தகரை பகுதி மக்களுக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிடும். அத்துடன் போராட்டம் முடிந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.


மத்திய அரசைப் பொறுத்தமட்டில் கூடங்குளம் அணு உலை கட்டியபோது சுற்றிலும் உள்ள எல்லா கிராமங்களுக்கும் நல்லது நடந்தது. உலைக்குப் பின்பக்கம் இருக்கும் இடிந்தகரைக்கு மட்டும் அந்த நன்மைகள் போய்ச் சேரவில்லை. அதில் அதிருப்தியடைந்த மீனவர்கள் போராட்டம் தொடங்கினார்கள். அதை உதயகுமார் போன்றவர்கள் கையிலெடுத்து பெரிதாக்கிவிட்டார்கள். அதிருப்தியடைந்த கிராமத்தினருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டால், எல்லாம் பிசுபிசுத்துவிடும் என்று அரசு தரப்பு கணக்கு போடுகிறது. இதையேதான் அப்துல் கலாமும் அங்கே 200 கோடி ரூபாய் செலவில் கிராம வளர்ச்சி திட்டம் நடத்துங்கள் என்று அறிவித்தார்.

கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி ( சி.எஸ்.ஆர்) என்பது இப்போது உலகம் முழுவதும், இந்தியாவிலும் பெரிய தனியார் கம்பெனிகள் செய்துவரும் ஏமாற்று வேலை. ( விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சில விதிவ்லக்குகள் தவிர.) சி.எஸ்.ஆர் என்றால் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு என்று அர்த்தம். இதன் கீழ் எய்ட்ஸ் முதல் ரத்த தானம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என்று விதவிதமாக சமூகத் தொண்டு செய்ய கம்பெனி கொஞ்சம் பணம் ஒதுக்கும். இந்த பண விநியோகத்தை திட்டமிட்டு செய்ய சோஷியல் ஒர்க் படித்த பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் விமானங்களில் பறந்து ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் செமினார்கள் நடத்தி அழிக்கும் பணம் போக எஞ்சியது பயனாளிகளுக்கும் சற்றே பொசியும்.

போபால் விபத்துக்கு நஷ்ட ஈடு முறையாகக் கொடுக்காமல் ஏய்க்கும் டவ் கெமிகல்ஸ், அமெரிக்கக் கடலையே மாசுபடுத்திய எண்ணெய் கம்பெனி பிரிட்டிஷ் பெட்ரோலியம் போன்று தங்கள் தொழிலில் பொறுப்பில்லாமல் செயல்படும் எல்லா கம்பெனிகளும் கூடவே சி.எஸ்.ஆர் மூலம் சமூக சேவை செய்கின்றன. இப்போது இந்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனும் தன் பங்குக்கு சி.எஸ்.ஆரைப் பயன்படுத்திக் கூடங்குளம் மக்களுக்கு குல்லா போடமுடியுமா என்று பார்க்கப்போகிறது.

இன்னொரு பக்கம் கூடங்குளத்தில் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய நிறுவனமான ரோசாட்டம் ரஷ்யாவில் கடும் ஊழல் பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.அந்த விவரங்களைப் பார்ப்போமா?

ரோசாட்டம்தான் ரஷ்ய அரசின் தலைமை அணுசக்தி அமைப்பு. அதன் கீழ் பல்வேறு கம்பெனிகள் இருக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்துதான் ரஷ்யாவுக்குள்ளு வெளிநாடுகளிலும் அணு உலை திட்டங்களை நிறைவேற்றிவருகின்றன. இந்தியாவில் கூடங்குளத்தில் மட்டும் ஆறு உலைகலைக் கட்ட ரோசாட்டத்துடன் பூர்வாங்க ஒப்ப்ந்தம் இருக்கிறது.

இந்த ரோசாட்டம் பற்றியும் அது கட்டி வரும் உலைகள் பற்றியும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் பற்றியும் முழு தணிக்கைக்கும் விசாரணைக்கும் உத்தரவிடவேண்டுமென்று ரஷ்யாவில் இருக்கும் தேசிய ஊழல் எதிர்ப்புக் குழு பிரதமருக்கும் கணக்குத் தணிக்கை அதிகாரிக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறது. 2010ல் மட்டும் ரோசாட்டம் நிறுவனத்தின் கீழுள்ள 35 அதிகாரிகள் ஊழலுக்காக நீக்கப்பட்டார்கள். 2011ல் ரோசாட்டத்தின் கீழ் இருக்கும் வெவ்வேறு துறைகளின் தலைவர்கள் பன்னிரெண்டு பேர் ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.

ரோசாட்டம் பல்வேறு அணு உலைகளைக் கட்டுவதற்காக டெண்டர் விடும்போது வேண்டியவர்களுக்காக டெண்டர் விதிகளை வளைப்பது, தரக் குறைவான பொருட்களை வாங்கிக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவது போன்ற ஆபத்தான ஊழல்களை செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ரோசாட்டத்தின் பல்வேறு டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்த டிரான்ஸ்பரென்சி இண்ட்டர்நேஷனல் அமைப்பும் மாஸ்கோவில் இருக்கும் ஈகோடிபென்ஸ் அமைப்பும் ரோசாட்டம் தான் நிர்ணயித்த பாதுகாப்பு அம்சங்களை தானே மீறியிருப்பது அதன் 87 ஆவணங்களில் வெளிப்பட்டிருப்பதாக கூறுகின்றன.

ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்ட மிகப்பெரிய உயர் அதிகாரி ரொசாட்டமின் துணை இயக்குநர் யெவ்கெனி யெஸ்தரோவ். இவர் ஒரு கோடி 80 லட்சம் அமெரிக்க டாலர்களை சுருட்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இவர்தான் ரோசாட்டம் கட்டும் அணு உலைகளின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்துக்கு பொறுப்பானவர் ! பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை எப்படி பத்திரமாக நீக்குவது என்ற ஆய்வில் இவர் ஈடுபட்டிருந்தாராம்.! இவர் கீழேதான் கதிர்வீச்சு ஆபத்தை தடுக்கும் நிபுணர்கள் பணிபுரிகிறார்கள். இந்த கைதே கண்துடைப்புதான் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

இதற்கு முன்பு 2005ல் ரஷ்யாவின் அணு சக்தித்துறை அமைச்சராக இருந்த அடமோவ் என்பவரும் பெரும் பண மோசடி செய்ததாக ஸ்விட்சர்லாந்தில் இண்ட்டர்போல் போலீசால் கைதானார். அவர் அமெரிக்காவை ஏமாற்றியதாக மெரிக்காவும் ரஷ்யாவை ஏமாற்றியதாக ரஷ்யாவும் வழக்கு தொடுத்தன. அமெரிக்காவுக்கு அவரை அனுப்பியிருந்தால் 20 வருட சிறை கிடைத்திருக்கும். ஸ்விஸ் கோர்ட் அவரை ரஷ்யாவிடம் ஒப்படைத்தது. அங்கே அவருக்கு 4 வருட சிறை தண்டனை விதித்துவிட்டு முதிர்ந்த வயதினர் என்பதால் அதை ரத்தும் செய்துவிட்டார்கள்.எனவெ இப்போது நடந்துள்ள கைதும் கண்துடைப்பு என்றே கருதப்படுகிறது. புகோஷிமா விபத்துக்குப் பிறகு ரஷ்ய அணுசக்தித்துறையின் இமேஜை சரி செய்வதற்காக இப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சூழல் அமைப்புகள் சொல்கின்றன.

ரோசாட்டம் ஜூன் மாதத்தில் நடத்திய உள் ஆய்வறிக்கையின்படி ரஷ்யாவில் இருக்கும் பெரும்பாலான அணு உலைகள் பழையவை. மனித தவறால் விபத்தோ, பூமி அதிர்ச்சியால் சிதைவோ ஏற்பட்டால் அத்தனையும் பெரும் ஆபத்தில் முடியும் என்று உள் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே எல்லாவற்றையும் சரி செய்கிறோம் என்று காட்டுவதற்காக ஒப்புக்கு இந்த ஊழல் கைது நடவடிககைகள் நடத்தப்படுவதாக சர்வதேச சூழல் இயக்கங்கள் கருதுகின்றன.
இப்படி மாபெரும் ஊழல்களும் தரமற்ற நடவடிக்கைகளும் நிரம்பிய சூழலில் விபத்துகள் எந்த நேரமும் நடக்கலாம் என்று அவை தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

உலை கட்டும்போதே ஒரு விபத்து ஆறு மாதம் முன்னால் ஜூலை 14 அன்று நடந்தது ! கூடங்குளத்தில் இருக்கும் அதே மாடல் அணு உலைகளை இப்போது ரஷ்யாவின் லெனின்கிராடிலும் ஈரானிலும் ரோசாட்டம் கட்டி வருகிறது. லெனின்கிராட் உலையில் ஐந்தடி கனமுள்ள கவசச் சுவர்களைக் கட்டும்போது கான்கிரீட் ஊற்றுகையில் இரும்புக் கம்பிச் சட்டங்கள் சிதைந்து நொறுங்கின. சுமார் 1200 டன் இரும்புக் கம்பிச் சட்டங்களையும் இப்போது அகற்றிவிட்டு புதிதாகக் கட்டவேண்டும்.விபத்துக்குக் காரணம் என்ன ? ஊழல்தான்.

தரமில்லாத பொருட்களைக் கட்டுமானப்பணியில் பயன்படுத்துவதாக் ரோசாட்டம் நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்ற ஜனவரியில் இதே உலைக் கட்டுமான இடத்தில் விதிகளைப் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் ரோசாட்டம் கம்பெனியைக் கடுமையாகக் கண்டித்து அபராதங்கள் விதித்தது. கட்டட ஊழியர்களுக்கு குடிநீர் இல்லை. கழிப்பிடம் இல்லை. தீயணைப்பு வசதி இல்லை. இவற்றையெல்லாம் செய்து தரும்வரை வேலையை நிறுத்தும்படி கோர்ட் உத்தரவிட்டது. அணு உலைகள் கட்டும் வேலையில் தரம் குறைவான பொருட்களைப் பயன்படுத்துவதாக ரோசாட்டத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கள சோதனையில் சுமார் ஆயிரம் யூனிட் தரக் குறைவான கான்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூலை விபத்துக்குப் பின் ரஷ்யாவின் அண்டை நாடான லித்துவேனியாவின் வெளிவிவகார அமைச்சர் எல்லையருகே இருக்கும் ரஷ்ய அணு உலைகள் தங்களுக்கு பெரும் கவலை தருவதாக அறிவித்திருக்கிறார். இந்த லேட்டஸ்ட் உலையின் டிசைனே சரியில்லை என்று தோன்றுவதாக அவர் கூறியிருக்கிறார். இப்படி ரஷ்யாவிலும் பக்கத்து தேசத்திலும் கடும் புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்த ரோசாட்டம்தான் கூடங்குளம் உலையையும் நிர்மாணித்திருக்கிறது.

இந்திய அணுசக்தித் துறையில் கட்டும்போதே விபத்தோ, ஊழலோ நடக்காதா? அதற்கும் ஒரு சரித்திர நிகழ்ச்சியைப் பார்ப்போமா?
கர்நாடகத்தில் உள்ள கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 130 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது. நூற்றுக்க்கணக்கான் தொழிலாளர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால் 14 பேருக்குதான் காயங்கள் ஏற்பட்டதாக நிர்வாகம் சொல்லிற்று. இந்த கலசம்தான் கதிரியக்கம் வெளியே பரவாமல் தடுக்கவேண்டிய கவசச் சுவர். இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான்.

விபத்துக்கு என்ன காரணம் ? அணுசக்தி துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் “நெருக்கமான உறவினால்” டிசைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது.

கூடங்குளம் உலை கட்டப்பட்டு வந்தபோது அப்போது குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த அப்துல் கலாம் அங்கே சென்றார். அவரும் பத்திரிகையாளர்களும் உலையை சுற்றிவந்தபோது ஒரு பெரிய இரும்பு கர்டர் கூரையிலிருந்து கீழே விழுந்தது. கலாமும் நிருபர்களும் அந்த இடத்தை அப்போதுதான் கடந்து போய்விட்டதால் அது தலையில் விழாமல் தப்பினார்கள். இதை புகைப்படம் எடுத்த எல்லா புகைப்படக்காரர்களிடமிருந்தும் புகைப்படங்கள் அணுசக்தி துறையினரால் கைப்பற்றப்பட்டன. படத்தை அழித்தபின்தான் நிருபர்களை வெளியே விட்டார்கள்.

ஊழல்,மிரட்டல், லஞ்சம் கொடுத்து மக்களை ஏமாற்றப் பார்த்தல் என்று இருக்கும் சூழலில் என்னதான் விடிவு ? லோக்பால் வந்தால், அதுவும் நாங்கள் சொல்லும் லோக்பால் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சில பேர் மெய்யாலுமே நம்புகிறார்கள். லோக்பாலின் கீழ் விதிவிலக்கு தரப்பட்டிருக்கும் துறைகளில் ஒன்று அணுசக்தித் துறை !

-ஞாநி

நன்றி: கல்கி 7.1.2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக