சனி, நவம்பர் 26, 2011

கூடங்குளம் அணு உலை - அப்துல்கலாமின் குழப்பல் வாதம்

சிறந்த அறிவியலாளர், மனிதநேயர் என்று முனைவர் அப்துல் கலாமைக் கருதி கொண்டிருந்த பலரும் கூடங்குளம் அணு உலை குறித்த அவரது நேர்காணலைக் கேட்டபிறகு அதிர்ச்சியும் அருவெறுப்பும் அடைந்தார்கள். பொய்யுரையும், திரிபுகளும் நிறைந்த அவரது இந்தப் பேச்சு மக்களைக் குழப்புவதற்கான திட்டமிட்ட முயற்சியாக இருந்தது. கூடங்குளம் அணு உலையை இயக்கச் செய்வதற்காக இந்திய அரசின் தூதராக தான் வரவில்லை என்று சொல்லி கொண்டாலும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாமின் முயற்சி உண்மையில் அதுவாகத்தான் இருக்கிறது.

கடந்த 06.11.2011 அன்று கூடங்குளம் அணு உலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பு அவர் நடுநிலையாளர் அல்ல என்பதை அம்பலப்படுத்தியது. அணு உலையின் அவசியம் பற்றி அப்துல் கலாம் அதிகமாகவே வலியுறுத்தியவர்தான். என்றாலும் கூடங்குளம் செல்கிற அன்று ’இந்து’ நாளேட்டில் ஸ்ரீ ஜன்பால் சிங் என்பவருடன் இணைந்து அவர் எழுதிய நீண்ட கட்டுரை அவரது முன் முடிவை எடுத்துக் காட்டியது.

ஏற்கெனவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அணு ஆற்றல் துறையினரும் கூறி வருவதைப் போலவே அணு மின்சாரத்தின் அவசியம் குறித்து பொய்யான விவரங்கள் அடிப்படையில் அப்துல் கலாமும் வலியுறுத்துகிறார்.

அணு உலை இயங்கும் போது சாதாரண காலத்திலேயே - இயல்பான உற்பத்தி நடக்கும்போதே அப்பகுதியில் கதிரியக்கத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அப்துல் கலாம் மறுத்தார்.

அதைவிட அணுமின் உலை கதிரியக்கத்தின் வெளிப்பாட்டால் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் பெரிய பாதிப்பு ஏதும் வராது என்று அடித்துப் பேசினார். அணுமின்சார உலையிலிருந்து வெளிவரும் கதிரியக்கமானது உடனடியாக தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு புற்று நோயை உருவாக்கும் என்பதையும், அடுத்தடுத்தத் தலைமுறையினருக்கும் தொடர் பாதிப்புகளை உண்டாக்கும் என்பதையும் அடியோடு மறுத்த அப்துல் கலாம் இது காமிக் கதைகள் போன்ற கற்பனை என்று எள்ளி நகையாடினார். ஹிரோஷிமா, நாகசாகி பாதிப்பு கள் கூட மிகைப்படுத்தப்பட்ட பரப்புரை என்று கூறினார்(தி இந்து கட்டுரை, 06.11.2011).

அதே கட்டுரையில் கதிரியக்கம் தாக்கினால் மனித உடலில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை என்றும் கூறிக்கொள்கிறார்.

ஹிரோஷிமா அணு குண்டு வீச்சால் இன்று வரை ஜப்பானியர்களிடையே புற்று நோயும் பிறவி ஊனங்களும் தொடர்கின்றன என்ற உண்மை மக்களின் பட்டறிவு மூலமாகவும், பல்வேறு மருத்துவ ஆய்வுகளின் வழியாகவும் பலமுறை மெய்பிக்கப்பட்டுவிட்டன. அதைக்கூட அப்துல் கலாம் மறுக்கிறார்.

சோவியத் ஒன்றியத்தில் செர்னோபில் அணு மின்சார உலை விபத்து 1987-ல் நிகழ்ந்த போது உடனடியாக இறந்தவர்கள் 7000 பேர் தான். ஆனால் அதில் வெளிப்பட்ட மிகைக் கதிர்வீச்சு காற்றிலும் நிலத்திலும் தங்கி, தாவரங்களிலும், கால்நடைகளிலும் உயிரணுக்களில் படிந்து, மனிதர்களையும் தொற்றி 25 ஆண்டுகளுக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பதும், சென்ற ஆண்டு வரை இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரம் பேர் என்பதும் இரஷ்ய அரசே ஒத்துகொண்டுள்ள உண்மையாகும்.

தாராப்பூர், கல்பாக்கம், கைகா அணு உலைகளில் ஏற்படும் கதிர்வீச்சால் அவற்றை சுற்றி வாழும் மக்களிடையே இரத்த புற்றுப்நோய், எலும்புப் புற்றுநோய், தைராய்டு வீக்கம் போன்ற நோய்கள் அதிகரித்துள்ளதை சுதந்திரமான அமைப்புகளின் பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இவற்றில் எதைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் ”அறிவியலாளர்” அப்துல்கலாம் இவை காமிக் புத்தக கட்டுகதைகள் என எள்ளி நகையாடுவது அவர் கொஞ்சமும் நெஞ்சில் ஈர மற்றவர் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

ஒரு சில மணிநேரங்கள் கூடங்குளம் அணுமின் உலையை சுற்றிப் பார்த்துவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன என்று அவர் சான்று வழங்கினார். அங்கு போவதற்கு முன்பே மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலிலும் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று கூறி விட்டார்.

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள இரஷ்யாவின் வி.வி.இ.ஆர்.1000 (V.V.E.R 1000) அணு உலையில் 31 பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதையும் அணு உலை இயங்கத்தொடங்கி இரண்டாண்டுகளுக்கு பிறகு விபத்துகள் நேர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதையும் இரஷ்ய அறிவியலாளர்களே இரஷ்ய அரசுக்கு கடந்த சூலை 2011ல் அளித்த ஆய்வறிக்கையில் எடுத்துக் கூறியுள்ளனர். இது பற்றி அப்துல் கலாம் வாய் திறக்கவே இல்லை.

அணு உலைக்கு மிகப்பெரும் அளவில் கடல் நீர் வேகமாக உறிஞ்சப்படும் போதும், அணு உலையிலிருந்து கொதி நீர் கடலுக்குள் விடப்படும் போதும் கடலியல் சூழல் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். மீன் வளம் பெருமளவு குறையும். இதனை ஏராளமான கடலியல் ஆய்வறிக்கைகளும் மீனவ மக்களின் பட்டறிவும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பித்துள்ளன. தாராபூரிலும், கல்பாக்கத்திலும் மேற்கொள்ளப்பட்ட கடலியல் ஆய்வுகளும் இந்த உண்மையை உறுதி செய்துள்ளன.

இவைபற்றியெல்லாம் கலாமுக்கு கொஞ்சமும் கவலையில்லை. மீன்வளம் குறையாது மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நெஞ்சாரப் பொய்கூறினார்.

அணு உலையில் வெளிப்படும் கதிரியக்கக் கழிவுகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு அப்துல் கலாமும் அவர் அருகில் இருந்த கூடங்குளம் அணு உலை உயர் அதிகாரி எஸ்.கே. ஜெயினும் ஆளுக்கொரு கருத்தை சொன்னார்கள். அணு உலை வளாகத்திற்குள்ளேயே ஆழக் குழிதோண்டி கதிரியக்கக் கழிவுகளை கனமான கலன்களில் கொட்டி வைத்து பாதுகாப்பார்கள் என கலாம் கூறினார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த எஸ்.கே.ஜெயின் ஆபத்தான இக்கழிவுகளை மறு சுழற்சி செய்து கண்ணாடி இழைகளாக மாற்றி உருண்டை யாக உருட்டி வைத்து மேலேயே பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம் என அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம் போல சொல்லிக் கொண்டிருந்தார்.

தில்லியில் இச்சிக்கல் குறித்து பேசிய இந்திய அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் அணுக்கழிவுகளை தாராப்பூருக்கு எடுத்துச்சென்று விடுவோம் என்று கூறினார். இந்த அணுக் கழிவுகளை மறு உருவாக்கம் செய்து பயன்படுத்தி கொள்வோம் என இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீ குமார் பானர்ஜி கூறி வருகிறார்.

இப்படி இவர்கள் ஆளுக்கொன்றாக கூறுவதிலிருந்தே அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைக்க இந்திய அரசிடம் எந்த திட்டவட்டமான ஏற்பாடும் இல்லை என்பது தெளிவாகிறது.

உலகம் முழுவதும் அரசுகள் சந்திக்கிற முக்கியமான பிரச்சினையாகவும் இது உள்ளது. அணு உலைகளை இனி இயக்க வேண்டாம், மூடிவிடலாம் என முடிவு செய்துவிட்ட நாடுகள் கூட இதுவரை வெளியான அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பது எப்படி என்று உறுதியான முடிவெடுக்க முடியாமல் முடியை பிய்த்து கொண்டிருக்கிறார்கள் ஏனெனில் அணுக்கழிவுகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் அணு உலையின் கதிரியக்கத்தை விட வீரியமானது; ஆபத்தானது. இவற்றின் கதிரியக்க வீரியம் பாதியாகக் குறைவதற்கே குறைந்தது 22, 500 ஆண்டுகள் ஆகும்.

அதற்கு பிறகும் கதிரியக்கம் தொடரும். குறைந்தது 25000 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக புதைத்து வைப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடித்தாக வேண்டும். இன்று வரை விடை கிடைக்காத பெரும் சிக்கல் இது.

நெல்லையப்பர் கோயிலும் தஞ்சை பெரிய கோயில் கோபுரமும் ஆயிரம் ஆண்டுகளாக அப்படியே இருப்பதிலிருந்தே நெல்லை மாவட்டமும் கூடங்குளமும் நிலநடுக்கம் பாதிக்காத பகுதி என்பது தெரியவில்லையா என அப்துல் கலாம் கேட்டார். இது எளிய மக்களை குழப்புவதற்கான மலிவான உத்தி ஆகும்.

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் கோபுரமும் கூடங்குளம் அணு உலையும் ஒன்றல்ல. கோயில் கோபுரத்தில் சிறு விரிசலோ பிளவோ ஏற்பட்டால் கூட அக்கோபுரம் உடனடியாக வீழ்ந்துவிடாது; சரிசெய்து கொள்ள முடியும். திருச்சி, திருவரங்கம் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டதை அனைவரும் அறிவர். ஆனால் அக்கோபுரம் உடனடியாக வீழ்ந்துவிடவில்லை. அக்கோபுரம் ஒருவாறு சீரமைக்கப்பட்டு இன்றும் நிற்கிறது. காளஹஸ்தி கோயில் கோபுரம் கடந்த ஆண்டு தரைமட்டமாக சரிந்தது. அதனால் சுற்றுச் சூழலுக்கோ மனித உயிர்களுக்கோ பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

அணு உலை அப்படியானது அல்ல. அதன் ஆயுட்காலமே 35 ஆண்டுகள்தான் என அதை வடிவமைத்த வல்லுநர்களே வரையறுத்துவிட்டார்கள். ஜப்பானில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம், அதைத்தொடர்ந்த ஆழிபேரலை ஆகியவைதான் வரவேண்டும் என்பதல்ல, நில அதிர்வு ஏற்பட்டு அணு உலைச் சுவரில் சிறிய விரிசல் ஏற்பட்டாலே கூட அதன்வழியாக பெருமளவு கதிரியக்கம் வெளிப்பட்டு பேரழிவை ஏற்படுத்தி விடும்.

கூடங்குளம் பகுதியிலும் நெல்லை மாவட்டத்திலும் நில அதிர்வுகள் 18ஆம் நூற்றாண்டிலிருந்தே அடிக்கடி ஏற்பட்டு வருவதை அரசின் பதிவேடுகள் கூறுகின்றன. 2006 மார்ச் 10ஆம் நாள் கூடங்குளம் அருகில் உள்ள அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சாமித்தோப்பு ஆகிய சிற்றூர்களில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதை அரசின் குறிப்புகளே பதிவு செய்துள்ளன. 2011 ஆகஸ்டில் தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் நில அதிர்வு நிகழ்ந்துள்ளது.

தென் தமிழ்நாட்டின் கடலுக்குள் எரிமலை இருப்பதை நிலவியல் ஆய்வுகள் பலவும் எடுத்துகூறுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தை அச்சன் கோயில், தாமிரபரணி நிலக் கிழிவு மண்டலம் (AchanKovil , Thamirabharani Shear zone- ATS) என நில இயற்பியலாளர்கள் வகைப் படுத்துகின்றனர். அப்பகுதியில் உருகி உருமாறிய பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் உள்ளிட்ட பல்வேறு காலப்பகுதி பாறைகள் சந்திக்கின்றன என்றும் நிலத் தகடுகள், இணையும் பகுதியாக (Contact Zone) உள்ளதையும் ஆய்வுகள் எடுத்து கூறுகின்றன. (எ.கா Restivity studies to Deliniate st ructural features near Abhishekapatti, Thiru nelveli - Y.Srinivas et al-Journal of Indian Geophysics Union, Vol 12, no: 4, page 157 -163-October, 2008). இந்த நிலத் தகடுகள் ஒன்றின் மீது ஒன்று நகரும்போது இலேசான நில அதிர்வில் இருந்து பெரிய நிலநடுக்கம் வரையிலும் ஏற்படுகின்றன. இதுதான் அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படக் காரணமாகும்.

இந்த அடிப்படை அறிவியல் உண்மையை மறைப்பதற்காகவே அப்துல் கலாம் கோயில் கோபுரத்தை எடுத்து காட்டாகக் கூறி குழப்ப முயல்கிறார்.

இதற்கு மேலும் உறுதியாக போராடிக்கொண்டிருக்கிற தமிழக மக்களை பிளவுப் படுத்துவதற்காக ஆசை வார்த்தை காட்டும் கேவலமான உத்தியிலும் அவர் இறங்கி விட்டார். சில நூறு கோடி ரூபாய் செலவில் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் நாற்கரச் சாலை அமைப்பது, மருத்துவ மனை நிறுவுவது, புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்குவது, பள்ளிக்கூடங்கள் கட்டித் தருவது, பூங்காக்கள் அமைப்பது என ஆசைவார்த்தைகள் கூறி நாற்காலி அரசியல்வாதிகளின் நிலைக்கு இழிந்து பேசினார். இதன் மூலம் அப்பகுதி மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது என்பதே அவரது திட்டம்.

தான் பிறந்த இராமேசுவரம் பகுதியிலேயே நாள்தோறும் தமிழக மீனவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதையும், அவர் பிறந்த மண்ணிலிருந்து கூப்பிடு தொலைவில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் ஒரே ஆண்டில் இனப்படுகொலை செய்யப்பட்ட்தையும் கண்டு மனச்சான்று உருத்தாத மனிதர்தான் இந்த அப்துல் கலாம்.

இவரைப்போலவே அரசமைப்புச் சட்ட பதவிகளில் இருந்த நீதிபதிகள் வீ.ஆர்.கிருஷ்ணய்யரும், பகவதியும் மக்கள் உரிமைக்காக அவ்வப்போது குரல் கொடுக்கும்போது பதவிக் காலம் முடிந்தபிறகும் மனிதப் படுகொலைகளை கூட கண்டிக்காத இந்தியத் தேசியக் கல் நெஞ்சர் தான் கலாம்.

மராட்டிய மாநிலத்தின் ஜெய்தாபூரிலும், மேற்கு வங்கத்தின் அரிபூரிலும் அணு உலைக்கு ஆதரவாக படையெடுக்காத அப்துல் கலாம் தமிழினத்தை அழிக்கும் கூடங்குளம் அணு உலையை நிலை நிறுத்துவதற்காக மட்டும் கோடாரிக் காம்பாக ஓடோடி வந்து ஒரு தலைச்சார்பாக பேசி சீர் குலைக்க முயல்கிறார்.

அணு மின்சாரம் சிக்கனமானது, தூய்மையானது, தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு தேவையானது என்ற ஆட்சியாளர்களின் வாதங்களையே மீண்டும் அவர் பேசினார். இவற்றிற்கெல்லாம் அறிவியல் வழிப் பட்ட விடைகளைச் சொல்லி யாகிவிட்டது. (காண்க: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15, 2011 மற்றும் கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது-த.தே.பொ.க வெளியீடு).

அப்துல் கலாமைப் போன்ற அறிவு அதிகார வர்க்கத்தினரையும், அறிவியல் அடியாட்களையும் எதிர்கொண்டு அணுஉலைக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் முன்னேற வேண்டியது அவசியமாகும்.

-கி. வெங்கட்ராமன்

நன்றி: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் நவம்பர்16_2011

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அப்துல் கலாம் என்பவரைப்பற்றிய மாயை கொஞ்சமாவது விலக இந்தக் கட்டுரை உதவும் என்று நம்புகிறேன்..

Unknown சொன்னது…

I think Dr Kalam is right. please read junior vikatan this week and read the deatils regarding some of the points you raised here.

பிரபு கிருஷ்ணா சொன்னது…

வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

சமுதாய சிற்பிகள் நம்முடன் - பெருமைகொள் வலையுலகே

-பலே பிரபு

பாலா.R சொன்னது…

நல்லதொரு பதிவு. நன்றிகள் பல.

கருத்துரையிடுக