திங்கள், நவம்பர் 21, 2011

கூடங்குளம் : ஆற்றலும் அபாயங்களும்

1980களின் பிற்பகுதியில் நடந்த கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிற்சிமுகாம் ஒன்று இத்தருணத்தில் என் நினைவுக்கு வருகிறது. நான் பணியில் சேர்ந்து அப்போது இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது. நான் பயின்ற கல்லூரியில் பணியாற்றிய, நான் பெருமளவு மதிப்பு வைத்திருந்த பேராசிரியர் ஒருவர் பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் நுழைய அனுமதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள், அபாயங்கள் மற்றும் அவற்றின் சுரண்டல்கள் குறித்தெல்லாம் அம்முகாமில் தெளிவாகவும் விரிவாகவும் பேசினார். சமூக உணர்வு மிக்க செயல்பாட்டாளர் அவர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அப்போது அதிக அளவில் இந்தியாவில் இடம் இல்லாதிருந்தது. ஆனால், ‘உலகமயமாதல்’ என்னும் பெயரில், அவை இங்கே கடைவிரிப்பதற்கு வசதிகள் செய்துகொடுப்பதில் ஆர்வமாயிருந்தது மத்திய அரசு. ‘யூனியன் கார்பைடு’ விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட கொடிய விளைவுகள் மக்களிடையே அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், நொந்துகொள்வதையும் புலம்புவதையும் தவிர வேறென்னதான் அவர்களால் செய்ய இயலும்? வாக் களித்த மக்களைக் கேட்டா கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன?

நான் சொல்ல வந்த கதை வேறு. மேலே குறிப்பிட்ட முகாம் உரையின் விவாத வேளையில் ‘கூடங்குளம்’ குறித்த சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். ரஷ்ய நாட்டு உதவியுடன் 1,000 மெகாவாட் திறன் கொண்ட வி. வி. இ. ஆர். வகை அணு உலைகள் இரண்டு நெல்லை மாவட்டத்தின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றான கூடங்குளத்தில் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. ‘மூன்று மைல் தீவு’ மற்றும் ‘செர்னோபில்’ அணு உலை விபத்துகள் தந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீண்டிருக்கவில்லை. ‘கூடங்குளம் வேண்டாம்; வேண்டவே வேண்டாம்’ என்று பல்வேறு குரல்கள் பரவலாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. பலமுனைகளில் அறப் போராட்டங்களும் நடந்துகொண்டிருந்தன. நண்பர்கள் மனோ, குமாரசெல்வா ஆகியோருடன் சில போராட்டங்களில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். இவற்றின் மூலம் நான் பெற்ற வெளிச்சத்தில் சில கருத்துகளை மேலே குறிப்பிட்ட விவாதத்தில் பகிர்ந்துகொண்டேன். மூன்று மைல் தீவு, செர்னோபில் விபத்துகளைப் பற்றிச் சொல்லி, அணு உலை விபத்துகளின் கொடூரங்களை விளக்கி, கூடங்குளம் திட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டும் என்று பேசினேன். அதற்குப் பேராசிரியர் அளித்த பதிலுரை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. அவரது பதிலின் சாரம் இது : ‘மின்சாரம் நமக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. மின்சாரம் இல்லாமல் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது. பேருந்து, ரயில் மற்றும் விமான விபத்துகள் ஏற்படுகின்றன என்பதற்காக அவை வேண்டாம் என்று சொல்கின்றோமா?’ பன்னாட்டு நிறுவனங்கள் விஷயத்தில் மிகவும் அறிவுபூர்வமாகப் பேசியவர் கூடங்குளம் விஷயத்தில் பாமரத்தனமாகப் பதிலளித்தது பெரும் புதிராயிருந்தது. நான் மறுபடியும் எழுந்து அணு உலை விபத்துகளைப் பேருந்து, ரயில், விமான விபத்துகளுடன் ஒப்பிடுவது முட்டாள்தனமானது என்று ஆவேசத்துடன் சொன்னேன். தேநீர் இடைவேளையின்போது, முகாம் அமைப்பாளர்களில் ஒருவரான வேறொரு பேராசிரியர் என்னிடம் “நீங்கள் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அவர் எவ்வளவு பெரிய மனிதர்! அவர் பேசியதை ‘முட்டாள்தனமானது’ என்றால் என்ன அர்த்தம்? அவரை மறைமுகமாக ‘முட்டாள்’ என்று சொல்வதற்கு நிகரல்லவா அது?” என்று கேட்டு என்னைக் கடிந்துகொண்டார். “முட்டாள்தனத்தை முட்டாள்தனம் என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது?” என்று அவரிடம் கேட்டேன்

முட்டாள்தனமான இதே கருத்தையே நடுத்தர வகுப்பினர் பலரும் கொண்டிருக்கிறார்கள். அணுசக்தித் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் திரும்பத் திரும்ப இந்த முட்டாள்தனத்துக்கும் மேலான முட்டாள்தனமான விஷயங்களை, அறியாமையால் அல்ல, அறிந்தே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அரசு சொல்வதை அப்படியே ஒப்பிக்கும் நிலையில் வாழ்ந்துவரும் அவர்கள் மாபெரும் பொய்கள் என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் அப்படிப் பேசுகிறார்கள். அணுசக்தித் துறையிடமிருந்து ஊதியம் பெற்றுக்கொண்டு அதன் அபாயங்களை வெளிப்படையாகப் பேசமுடியுமா என்ன? ஆனால் அணு உலைகளில் பணிபுரியும் ஊழியர்களிடமோ அவர்களின் நெருங்கிய உறவினர்களிடமோ தனியாகப் பேசிப்பாருங்கள். ஆண்டு தோறும் எத்தனை பேர் கதிர்வீச்சின் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற உண்மையைப் பலரும் பேசுவார்கள். அணு உலை விபத்து ஏற்படாத போதே இந்த நிலையென்றால் விபத்து ஏற்பட்டால் விளைவு எப்படியிருக்கும்?

மின்சாரத்துக்கோ வளர்ச்சித் திட்டங்களுக்கோ நாம் எதிரிகளல்ல. மின்சாரம்தான் அரசின் குறிக்கோள் என்றால் அதற்கு நிறைய மாற்று வழிமுறைகள் இருக்கின்றன. கூடங்குளம் திட்டத்தைவிடக் குறைந்த பணச்செலவில், குறைந்த கால அவகாசத்தில் நிறைவேற்றியிருக்கக் கூடிய மின் திட்டங்கள் குறித்து அரசுகள் இதுவரை பரிசீலித்துப் பார்த்ததாகக்கூடத் தெரியவில்லை. கூடங்குளம் அணு உலையிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தால் ரஷ்யாவுக்கு எந்தப் பயனும் இல்லை. இருப்பினும் ரஷ்யா இவ்வளவு முனைப்பு காட்டுவது ஏன்? இந்தப் புதிருக்கான விடை அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அணு உலைகளிலிருந்து கிடைக்கும் அணுக்கழிவானது அணுகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்.

மின்சாரம் குறித்த இன்னொரு உண்மையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நமக்குத் தேவையான மின்சாரம் நம்மிடம் உண்டு. அப்புறம் ஏன் மின்வெட்டு? நமது மின்சாரத்தில் பெரும்பகுதி நம் நாட்டில் தொடங்கப்படும் வெளிநாட்டுத் தொழிற்சாலைகளின் கிளைகளுக்குத் தடையின்றி வழங்கப்படுகிறது என்பது தான் நிஜம். புதிய தொழிற்சாலைகளுக்காக ஒப்பந்தம் போடப்படும்போது மின்சார விஷயத்தில் ‘தடையின்றி’ வழங்கப்படுவதற்கான உடன்பாடும் ஏற்படுகிறது. மக்களும் சிறு தொழிற்சாலைகளும் பயன்படுத்த வேண்டிய மின்சாரத்தின் கணிசமான பகுதி பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குப் போய்விடுகிறது. இதனால், ஆட்சியாளர்களின் வேண்டியவர்களுக்கு அத்தொழிற்சாலைகளின் பங்குகள் சலுகை விலையிலோ இலவசமாகவோ கிடைக்கின்றன. மின்வெட்டின் பின்னாலுள்ள கசப்பான உண்மை இது.

அணு உலை விபத்து ஏற்பட்டால் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதைப் பலமுறை உலகம் உணர்ந்தாகிவிட்டது. பேருந்து, ரயில், விமான விபத்துகளைப் போன்றதல்ல அது. அணு உலையைச் சுற்றிப் பல கிலோ மீட்டர் பரப்பில் வாழும் மக்கள் எல்லோரையும் கொடூரமாகத்தாக்கும் அபாயம் கொண்டது அணு உலை விபத்து. மக்களின் வாழ்வாதாரங்களான மண்வளம், நீர்வளம் ஆகியவற்றையும் பலநூறு ஆண்டுகள் எவரும் பயன்படுத்த முடியாதபடி நாசமாக்கும் ஆற்றலும் அணு உலை விபத்துகளுக்கு உண்டு. அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஃபுகுஷிமா அணு உலைக்கு ஏற்பட்ட கதியையும் அதனால் உண்டான கொடூர விளைவுகள் இவற்றையெல்லாம் காட்சி ஊட கங்கள் நம் கண்முன்னே கொண்டு வந்த பின்னரும் ‘கூடங்குளம் பாது காப்பானது; இது வெடிக்காது; இங்கு நிலநடுக்கம் வராது . . .’ என்றெல்லாம் மடத்தனமாகச் சிலர் இன்னும் பேசிக்கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. உலை வெடிக்கும்வரை ‘வெடிக்காது; பாதுகாப்பானது’ என்று கூறிக்கொண்டிருப்பார்கள். வெடித்த பிறகு?

யூனியன் கார்பைடு விபத்து தொடர்பான இழப்பீடு விஷயத்தில் அரசு நடந்துகொண்ட விதத்தையும் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் அவலத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நிலநடுக்கங்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறிதும் பெரிதுமாய் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன. 2004இல் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி உண்டாக்கிய பேரழிவு குறித்து இவர்களின் பதில் என்ன? இந்தோனேஷியாவில் உண்டான நிலநடுக்கத்தின் தாக்கம் எவ்வளவு குரூரமாக இங்கு வெளிப்பட்டது! இத்தனைக்கும் பிறகு, நிலநடுக்கமோ சுனாமியோ கூடங்குளத்தை நெருங்காது எனப் பிதற்றுவதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? நிலநடுக்கமோ சுனாமியோ வந்தாலும் ஃபுகுஷிமா உலை போல் கூடங்குளம் ஆகிவிடாது என்பது சிலர் கருத்து.

‘கூடங்குளம் பாதுகாப்பானது’ என்று அறிக்கைவிடும் எவருமே ‘எங்கள் ஊரில் அணு உலை அமையுங்கள்’ என்று கோரவில்லை என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. டிவி, ஃபிரிட்ஜ், ஏசி இவையெல்லாம் இடையூறின்றி இயங்க மின்சாரம் தேவைதான். நடுத்தட்டு மக்களுக்கு இதுதான் கவலை. ஆனால், பல்லாயிரம் மக்களைப் பிணமாக்கி, அவர்கள் சமாதி மேல் தயாரிக்கப்படும் மின்சாரம் தேவையா என்பதை எண்ணிப் பார்ப்பது ஒவ்வொருவரின் கடமை.

அணு உலைகளுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்பதற்கு இது ஏற்ற தருணம் . இது கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சார்ந்த மக்களின் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரச்சினை. தன் கொள்கையை மறு பரிசீலனை செய்ய அரசை நிர்ப்பந்திக்கத் தக்க பிரச்சினை. சில ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாகிவிட்டதே; இனி எப்படி நிறுத்துவது? என்ற முனகல்களும் ஆங்காங்கே கேட்கின்றன. இவையும் மறைமுகமாக கூடங்குளத்தை ஆதரிக்கும் குரல்களே. பல நூறு கோடி ரூபாய் செலவழித்த பின் சேதுக் கால்வாய் திட்டத்தைக் கைவிடவில்லையா? ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்களால் நாட்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படவில்லையா? சென்னையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு எடுக்கவில்லையா? இப்படியிருக்க, மக்கள் நலனுக்காகக் கூடங்குளம் திட்டத்தைக் கைவிடுவதில் என்ன தவறு? மேலும், கூடங்குளம் திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே மக்கள் எதிர்த்த பின்னரும் அதையும் மீறி கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தது மக்களின் குற்றமல்லவே! வாக்களிப்பது மட்டும்தான் மக்களின் ஜனநாயகக் கடமையா? மக்கள் விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்வோம் என்ற அரசியல் திமிருக்குப் பெயர்தான் மக்களாட்சியா? இந்த வினாக்களுக்கான விடைகள் இலகுவானவையாகத் தோன்றலாம். ஆனால் சிக்கலானவை.

o

கூடங்குளம் அணு உலைகளுக்கெதிரான மக்கள் போராட்டம் இப்போது தீவிரமடைந்திருக்கிறது. அதற்குக் காரணமாய் அமைந்தவை இரண்டு நிகழ்வுகள். ஒன்று ஜப்பான் ஃபுகுஷிமா அணு உலை விபத்து; இன்னொன்று நிர்வாகம் நடத்திய விபத்துத் தடுப்புச் சோதனை. ‘அபாய ஒலி கேட்டதும் அனைவரும் ஓடி வந்து வாகனத்தில் ஏற வேண்டும்; அணுக்கசிவு ஏற்பட்டால் கதவு, சன்னல்களைப் பூட்டிவிட்டு, முகத்தில் ஈரத் துணியைச் சுற்றிக்கொண்டு படுக்க வேண்டும்; விபத்தின் தாக்கம் அதிகமானால் உடனே இடம் பெயர வேண்டும்’ என்றெல்லாம் மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அவர்களைச் சிந்திக்கவைத்தன. மேலும் கதிர்வீச்சுத் தாக்காதிருக்க ஒரு மாத்திரையும் மக்களுக்கு வழங்கப்பட்டதாம். மக்கள் மனத்தில் பல ஐயங்களையும் கிலியையும் ஏற்படுத்திய செயல் இது. கூடங்குளம் எமன் குறித்த அச்சம் அவர்களைக் கலவரப்படுத்தியதாலேயே போராட்டத்தில் குதித்தார்கள். 2011 செப்டம்பர் 11 முதல் இடிந்தகரையில் பல்லாயிரக்கணக்கானோர் உண்ணா விரதப் போரில் ஈடுபட்டார்கள். 127 பேர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள். சாதி, இன, மத வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் ஒரே பந்தலின் கீழ் திரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல், பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் உண்ணாவிரதப் பந்தலில் இருந்தார்கள். கடைகளெவையும் திறக்கப்படவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உறுதிமொழியும் தமிழக அமைச்சரவைத் தீர்மானமும் போராட்டக் குழுவினருக்குச் சற்று நம்பிக்கை தந்துவிடத் தற்காலிகமாகப் போராட்டம் நிறுத்தப்பட்டது. பிரதமரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் போராட்டக் குழுவினருக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் அரசியல் பிரமுகர்கள் சிலருடன் பிரதமரைச் சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், பிரதமரின் நோக்கம் மக்கள் பிரச்சினைகளை உள்வாங்குவதல்ல, அரசின் முடிவைப் போராட்டக் குழுவினரிடம் திணிப்பதுவே. பிரதமரின் அறிக்கையும் மறைமுக மிரட்டலும் தமிழக முதல்வருக்கு பிரதமர் அனுப்பிய கடிதமும் போராடும் மக்களிடையே அதிருப்தியையும் கொந்தளிப்பையும் உருவாக்க, சில நாள் இடைவெளிக்குப் பின் மீண்டும் போராட்டம் தொடர்கிறது. வேலையாட்களையும் விஞ்ஞானிகளையும் அணு வளாகத்தினுள் செல்லவிடாமல் தடுப்பது என்ற வகையில் போராட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இத் தருணத்தில், அறிவுத்தளத்திலிருந்தும் சமூகத் தளத்திலிருந்தும் இப் போராட்டத்துக்கு முழு ஆதரவையும் தெரிவிப்பது நமது தார்மீகக் கடமையாகும்.

அணு ஆதரவாளர் ஒருவரிடம் பேசும்போது அவர் சொன்னார், ‘நடைபெற்றது வெறும் mock drill தான். அதற்காகப் போராட்டம் நடத்துவது அவசியமற்றது!’

நான் கேட்டேன், ‘கூடங்குளம் திட்டம் பாதுகாப்பானது, விபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லாதது எனில் எதற்காக mock drill நடத்த வேண்டும்?’

ஆம் விபத்துகளுக்கான எல்லாவித சாத்தியக் கூறுகளும் கொண்டதுதான் கூடங்குளம் அணுஉலையும். கடலையும் நிலத்தையும் நஞ்சாக்கிப் பலகொடிய நோய்களின் விளைச்சல் நிலமாகவும் மாறப் போகிறது கூடங்குளம்.

-ஜே. ஆர். வி. எட்வர்ட்

நன்றி: காலச்சுவடு, நவம்பர்-2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக