சனி, நவம்பர் 26, 2011

கன்னங்கருத்த அன்னம் - தியடோர் பாஸ்கரன்

பறவைகளைப்பற்றிப் பேசும்போது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி அன்னத்தைப் பற்றியது. தமிழ்நாட்டில் இப்பறவை இருந்ததா? அடுத்த கேள்வி அன்னம் நீரையும் பாலையும் பிரிக்கும் திறன் கொண்டதாமே? தண்ணீரைப் பாலிலிருந்து பிரிக்கும் அன்னம், மழை நீரை உண்டு வாழும் சாதகப்புள், இவையெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட தொன்மவழி விவரங்களே. இரண்டு, மூன்று முறை குஜராத்தின் கட்ச் பகுதிக்கு இப்பறவை வந்தது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அன்னம் என்றறியப்படும் Swan இந்தியாவிலே இருந்ததில்லை. ஆனால் ஐரோப்பிய ஓவிய மரபின் தாக்கம் கொண்ட ராஜா ரவிவர்மா தீட்டிய அன்னம் விடு தூது ஓவியத்தில் தமயந்தியுடன் ஓர் Swanஐத்தான் சித்தரித்திருக்கின்றார்.

தமிழ்நாட்டில் இந்தப் பறவை இருந்ததில்லை. பின் அன்னம் என்று இலக்கியத்தில் குறிப்பிடப்படுவது எந்தப் பறவை? அன்னநடை என்ற சொற்றொடர் எவ்வாறு புழக்கத்தில் வந்தது? பட்டைத்தலை வாத்துதான் (Barred headed goose) அன்னம் என்றழைக்கப்பட்டது என்பது என் அனுமானம். கூந்தங்குளம் போன்ற பறவை சரணாலயங்களுக்கு குளிர்காலங்களில் திரள்திரளாக வந்து தங்கும் இப்பறவை தென்னிந்தியாவில் காணப்படும் வாத்து இனங்களிலேயே பெரியது. பட்டைத்தலை வாத்து உயிரியல் ரீதியாக ஸ்வான் குடும்பத்தைச் சேர்ந்தது.

திருச்சிக்கு அருகிலுள்ள தேவராயன் ஏரியிலும் நான் இந்த வாத்தைப் பார்த்திருக்கின்றேன். நீர்நிலைகளில் சுதந்திரமாய் வாழும் உண்மையான அன்னத்தை, ஸ்வானை, நான் முதலில் பார்த்தது ஹாலந்தில். எந்தவிதமான ஒலியையும் எழுப்பாத இந்தப் பறவைக்கு Mute Swan என்று பெயர். இது முழுவதும் பால் போன்ற வெண்மை நிறம். அதே போல் முழுவதும் கருமை நிறம் கொண்ட ஸ்வான் இனம் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழ்கின்றது. அந்நாடு ஒரு தீவாக இருப்பதால் அங்கு கங்காரு, பிளாடிபஸ் போன்ற வேறெங்கும் காண முடியாத உயிரினங்கள் உருவாகியுள்ளன. அதுபோன்ற தீவில் தனிமையில் உருவான ஒரு பறவைதான் இந்த வான்கோழி பெரிய கறுப்பு அன்னம்.

அண்மையில் சிட்னி நகருக்கு 200 கி. மீ. தூரத்தில் ஒரு காட்டுயிர் சரணாலயத்திற்குப் பறவைகளை அவதானிக்கப் போய் இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். காலையில் சாப்பாடு பொட்டலம், குடிநீர் பாட்டில் இவைகளுடன் கடலோரமாக நடக்க ஆரம்பித்து, மூன்று கி.மீ. கடந்து ஒரு ஏரிக்கரையை அடைந்தோம். ஒருபுறம் பசிபிக் சமுத்திரம். மறுபுறம் ஒரு ஏரி. நடுவே ஒரு மணற்திட்டு. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், பனி உருகியபோது, கடல் நீர்மட்டம் உயர்ந்து, நீர் நிலத்தினுள் புகுந்து இந்த நீர்நிலை உருவானது என்று அறிவிப்பு பலகை கூறியது. இந்த ஏரியின் பெயர் உல்லபுல்லா என்றும் அது ஒரு பறவை சரணாலயம் என்றும் இந்த அறிவிப்பு தெரிவித்தது. இந்தப் பெயர் ஆஸ்திரேலியப் பழங்குடியினரான அபாரிஜினி மொழியில் ஒரு சொல். அவர்களுக்கு இந்த நீர்நிலை ஒரு புனித இடமாக இருந்திருக்கின்றது.

அந்த ஏரியில் ஒரு கண்கொள்ளாக் காட்சி. பரந்த அந்த நீர்ப்பரப்பில் முழுவதுமாக ஆயிரக்கணக்கான... ஆமாம்... ஆயிரக்கணக்கான கறுப்பு அன்னங்கள் இருந்தன. சில நீந்திக்கொண்டிருந்தன. சில கரையில் இருந்தன. இதற்கு முன் இம்மாதிரி மிகப் பெரிய பறவைக் கூட்டத்தை நான் ஒரு முறைதான் கண்டிருக்கின்றேன். கென்யா நாட்டிலுள்ள நக்கூரா ஏரியில் பூநாரைகள் கூட்டத்தைப் பார்த்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளம்சிவப்பு வண்ணம்தான் தெரிந்தது.

அத்தனை பறவைகள் இருந்தும் அமைதியான சூழ்நிலை. அவ்வப்போது உஸ். . . உஸ். . . என்று அன்னம் எழுப்பும் ஒலி மட்டும் கேட்டது. பைனாகுலரில் பார்த்தபோது சில அன்னங்கள் குஞ்சுகளுடன் இருப்பது தெரிந்தது. கறுப்பு அன்னத்தின் குஞ்சுகள் பொரிக்கும்போது வெண்மையாக இருக்கும். வளர வளரத்தான் கறுப்பாக மாறும். பெரிதான பின்கூட, இறக்கையில் ஒரு வெண்மை பகுதி இருக்கும். ஆனால் பறக்கும்போது மட்டுமே இப்பகுதி தெரியும். அலகு பவளச்சிவப்பு. நீண்ட கழுத்தை S வடிவில் வளைத்து வைத்துக்கொண்டு இந்தப் பறவை, எந்த முயற்சியுமின்றி மிதப்பது போன்று நீந்திச் செல்வது ஒரு எழிலார்ந்த காட்சி. பறக்கும்போது மட்டும் கொம்பூதுவது போல் ஒற்றை ஒலியை எழுப்பும்.

உவர்ப்பு நீர் கொண்ட இந்த ஏரியில் நீருக்கடியில் வளரும் சிலவகை தாவரங்கள் செழித்து மிகுந்துள்ளன. இந்தச் செடிகளால் ஈர்க்கப்பட்டுத்தான், செடிகளை மட்டுமே உண்ணும் கறுப்பு அன்னங்கள் இங்கே வருகின்றன. தன் நீண்ட கழுத்தை நீருக்குள் விட்டு இரை தேடும். ஒரு முறை 12000 அன்னங்கள் இங்கே கூடியிருந்ததைக் கண்டதாகப் பறவை ஆர்வலர் குழு ஒன்று பதிவு செய்துள்ளது. உப்பு நீரில் மட்டுமே பல்கிப் பெருகும் சிற்றுயிர்களை இரையாகக் கொள்ளும் புள்ளினங்களும் இந்த நீர்நிலையைத் தேடி வருகின்றன. இந்தியாவில் காணக்கூடிய நாமக்கோழி, கோட்டுள்ளான், உப்புக்கொத்தி போன்ற பட்சிகளை இங்கே பார்க்க முடிந்தது.

உல்லபுல்லா ஏரிக்கருகில் ஒரு கோல்ஃப் திடலை அமைக்க இன்று முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படிச் செய்தால், புல்லுக்குப் போடும் உரம், பூச்சிக்கொல்லி மருந்து இவை ஏரிக்குள் வந்து அங்கு வளரும் தாவரங்களையும், சிற்றுயிர்களையும் அழித்து விடும் என்று அதற்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. எங்கு சென்றாலும் இந்தப் பிரச்சினைதான். காட்டுயிர் வாழிடங்களில் அதிகம் அழிக்கப்படுவது, எளிதாக சீரழிக்கப்படுவது நீர்நிலைகள்தாம். ஆஸ்திரேலியாவில் இம்மாதிரியான இயக்கங்களை ஆதரிக்கும் Green party ஐச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கே மக்களின் ஆதரவை உல்லபுல்லா பறவைகளுக்காகத் திரட்டிக்கொண்டிருக்கின்றார்.

கறுப்பு அன்னங்கள் ஆயுள் முழுவதும் ஒரே ஜோடியுடன் இணை சேர்கின்றன. அது மட்டுமல்ல, கூடு கட்டுவது, அடைகாப்பது, குஞ்சுகளைப் பாதுகாப்பது போன்ற வேலைகளை இரு பறவைகளுமே செய்கின்றன. வட இந்தியாவில் வயல்களில் வாழும் நம் நாட்டு சாரஸ் கொக்கும் (கிரௌஞ்ச பறவை) உயிருள்ள வரை ஒரே துணையுடன் வாழும்.

பாலியல் ஒழுக்கத்தைப்பற்றிக் கவலையற்ற பறவை உலகில் இது வெகு அரிதான நடத்தை. பெருவாரியான புள்ளினம் இணை சேர்ந்தபின் தன் வழியே போய்விடும். பெட்டை பறவைதான் அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்.

வேறு சில பறவைகள் இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் தன் ஜதையுடனிருக்கும். கூடு கட்டுவது, குஞ்சுகளுக்கு இரை கொடுப்பது போன்ற வேலைகளை ஆணும், பெட்டையும் செய்யும். தூக்கணாங்குருவி ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் குஞ்சுகள் கூட்டை விட்டுப் பறந்து போனபின், இவ்விரு பறவைகளும் தத்தம் வழியே போய்விடும். அடுத்த இனப்பெருக்க காலத்தில் வேறு துணையைத் தேடி இணையும். வேடந்தாங்கலில் கூடுகட்டும் அன்றில் பறவை வாழ்நாள் முழுதும் ஒரு துணையுடனிருக்கும். "அன்றில் சிறு பறவை ஆண்பிரிய வாழாது. ஞாயிறு தான் வெம்மை செயில் நாண் மலர்க்கு வாழ்வுளதோ" என்று பாரதி எழுதி வைத்தார்.

கறுப்பு அன்னங்கள் உலகின் பல நாடுகளில் வீடுகளிலும், பூங்காக்களிலும் வளர்க்கப்படுகின்றன. நான் இந்தப் பறவையை முதன்முதலில் பார்த்தது ஷில்லாங் நகரில். நகரின் நடுவேயுள்ள ஏரியில் இரு கறுப்பு அன்னங்கள் விடப்பட்டு இருந்தன. இறக்கை, இறகுகள் சிலவற்றைக் கத்தரித்து விட்டால் அவைகளால் பறக்க முடியாது. நீந்தவும், கரையில் நன்றாக நடக்கவும் முடியும். இந்த இரு பறவைகளும் இனப்பெருக்கம் செய்ய தீர்மானித்து ஏரிக்கரையருகே கூடு அமைக்க ஆரம்பித்தபோது அன்று மேகாலயா சீப் செக்ரட்டரியாக இருந்த ருஸ்தம்ஜி -தீவிர பறவை ஆர்வலர்- இதைக் கவனித்து விட்டார். இந்த அன்னத் தம்பதிக்கு 24 மணி போலீஸ் காவல் போட்டார். தினமும் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது ஏரியில் நின்று இந்தப் பறவைகளைக் கவனித்து விட்டுத்தான் போவார். சில வாரங்களில் நான்கு குஞ்சுகளுடன் இந்த இரு பறவைகளும் ஏரியில் வலம் வர ஆரம்பித்தபோது, இந்த அன்னக் குடும்பத்தைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் வர ஆரம்பித்தனர்.

நன்றி : உயிர்மை

1 கருத்து:

முன்பனிக்காலம் சொன்னது…

அழகான வலைப்பூ. அழகான இடுகை...வாழ்க்கை அழகானது, உலகமும் அழகானது. உங்களது இலக்கு உயர்ந்தது. உங்களுடன் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி.

கருத்துரையிடுக