திங்கள், செப்டம்பர் 12, 2011

'நில ஆர்ஜிதத்தை நேராக்குங்க... எங்களோட வாழ்க்கையை சீராக்குங்க' - ராகுல் காந்திக்கு கோவணாண்டி கோரிக்கை

'ஆசியஜோதி'யின் அம்சம், 'இரும்பு மனுஷி'யின் வம்சம், இந்திய-இத்தாலி கூட்டுத் தயாரிப்பு, கலப்பட கதர் சட்டைகளின் கஜானாவை நிரப்பும் கனவு நாயகன், விவசாயி வேஷத்தில் வலம் வர்ற இந்தியாவோட இளம் நம்பிக்கை நட்சத்திரம், நாளைய பிரதமர், ராகுல் காந்திக்கு... வணக்கம் போட்டு, இந்தக் கடுதாசியை எழுதறான்... தென்னாட்டு கோவணாண்டி.


'ஹூ இஸ் திஸ் கோவணாண்டி’னு சீறிக்கிட்டு கிளம்பிடாதீங்க. ஒங்க ம.சி. (மன்மோகன் சிங்), ப.சி. (ப.சிதம்பரம்) கிட்டேயெல்லாம் கேட்டுப்பாருங்க... நம்பள பத்தி சொல்லுவாங்க.

இப்ப விஷயத்துக்கு வாரேன். என்னமோ ஏழை, பாழைகள காப்பாத்தவும், விவசாயிக வாழ்க்கையை உசத்தவும் அவதாரம் எடுத்த மாதிரி திடுதிப்புனு உத்தரபிரதேசத்து வயக்காட்டுலயும், பீகாரோட வரப்பு மேட்டுலயும் சுத்தறீங்க... குடிசை கண்ட இடமெல்லாம் குத்தவெச்சு உக்கார்ந்து, என்னைய மாதிரி பஞ்சைப் பராரிங்ககிட்டேயெல்லாம் குசலம் விசாரிக்கறீங்க... இதையெல்லாம் பார்க்கவும் கேக்கவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா.........................?!

'எதுக்கு இந்த இழுவை. இதுல என்ன குத்தத்தைக் கண்டுபிடிச்சே?'னு பாய்ஞ்சுடாதீங்க?

தம்பி, இன்னிக்கு மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவுல, கடனைக் கட்ட முடியாம கொத்துக் கொத்தா நாண்டுகிட்டு சாகுறானே விவசாயி. அதுக்குக் காரணம் யாரு?

கிராமத்துல சேத்தை பிசைஞ்சு, ஒங்களுக்கெல்லாம் சோத்தை கொடுத்த சின்ன, சின்ன விவசாயிங்களை எல்லாம், மண்ணை வித்துட்டு, மல்லாக்க படுக்க வெச்சது யாரு?

கிராமத்துல இருந்த ஆளுங்களையெல்லாம் பொழப்பு தேடி நகரத்துப் பக்கம் நகர வெச்சு, நாறப் பொழப்பு பொழைக்க வெச்சது யாரு?

வழிவழியா காப்பாத்திட்டு வந்த விதைகள தொலைச்சுட்டு, கம்பெனிக்காரன் பின்னாடி கையேந்தி நிக்குறமே... அதுக்குக் கா£ரணம் யாரு?

இப்படிப்பட்ட 'கொள்ளி'ங்க ஊருபட்டது இருக்குது. அத்தனையையும் இங்க சொல்லி மாளாது. ஆனா, அது அத்தனையையும் அள்ளி எங்க மேல போட்டதுக்குக் காரணம்... ஒங்க காங்கிரஸும்... ஒங்கப்பாவும்... ஒங்கம்மாவும்... இப்ப நீங்களும் ஓயாம உசத்திப் பிடிக்கற ஒலகமயம்... தாராளமயம்கிற... சனிமயம்தான்!

ஒலகமய ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்டு, அந்த ஒலகமய ஒநாயை, 'கம்பெனி'ங்கற பேருல என்னிக்கு நாட்டுக்குள்ள நுழைய விட்டீங்களோ... அன்னிக்கு பிடிச்சதுதான் எங்களுக்கு சனி. இப்ப, உள்ளூரு வெவசாயி உருத்தெரியாம போயிட்டான். விதை, மானியம், திட்டம்னு எதை எடுத்தாலும் அவன் கையசைவுக்கு ஏத்த மாதிரியே ஆட்சியை நடத்திக்கிட்டிருக்கற நீங்க, உங்க பங்குக்கு 'கொளத்துல கும்மியடிக்குற திட்டம்'னு ஒண்ணைக் கொண்டு வந்து, ஒட்டுமொத்தமா வெவசாயத்தையும் வெளங்காம செஞ்சுட்டீங்களே... அதாங்க, நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்!

இந்த லட்சணத்துல ஊர், ஊரா போயி, 'இந்தியன்னு சொல்லறதுக்கு வெட்கமா இருக்கு... இப்படி பரிதாபமான நிலையில விவசாயிகள வெச்சு இருக்கிறத நெனச்சா அவமானமா இருக்கு... ஆடு, மாடுகளைப் போல அவங்கள்லாம் குடிசையில வாழறதை நெனச்சா துக்கம் தொண்டைய அடைக்குது’னு சும்மா கலைஞரய்யா எழுதிக் கொடுத்த வசனம் கணக்கா பேசிட்டு திரியறீங்க.

சுதந்திரம் அடைஞ்ச இந்த அறுபத்தி நாலு வருஷத்துல,

50 வருஷத்துக்கு மேல இந்தியாவை ஆண்டது ஒங்களோட குடும்பக் கட்சி காங்கிரஸ்தானே! 'தேனாறு ஓடும்... பாலாறு ஓடும்'னு சொல்லிக்கிட்டே... கொஞ்ச நஞ்சமிருந்த துண்டுக் கோவணத்தையும் காணாம அடிச்சதைத் தவிர, ஒங்க சாதனைனு பெருசா எதுவுமே இல்ல. இந்தியாவுல இருக்கற ஜனங்கள்ல கிட்டத்தட்ட பாதி பேருக்கு மூணுவேளையும் சாப்பாடு கிடைக்கறதில்ல. மக்கள்லாம் தெருக்கோடிக்கு வந்துட்டாங்க... ஆனா, மந்திரிகள்லாம் பல கோடிக்கு அதிபதியாகிட்டாங்க. இதுதான் காங்கிரஸோட சாதனை. இந்த லட்சணத்துல, எங்கள பார்த்து பரிதாபப்பட்டு நீங்க கண்ணீர் வடிக்கிறதைப் பார்த்துட்டு, எனக்கு கோவம் வராம இருந்தாத்தான் ஆச்சரியம்!

இப்ப நாஞ்சொல்றதெல்லாமே ஒங்களுக்குத் தெரியாத விஷயமில்ல. நீங்க பேப்பர் படிக்கறதில்லையா.... டி.வி. பார்க்கறதில்லையா? அத்தனை விஷயமும் தெரிஞ்சிருந்தும், என்னமோ தீர்த்தயாத்திரை கணக்கா... ஊர் ஊரா சுத்திக்கிட்டிருக்கீங்க. நீங்க நினைச்சா... உக்காந்த இடத்துல இருந்துகிட்டே நல்லது செய்ய முடியுமே! ஒரு வார்த்தை சொன்னதும், அத்தனையையும் நிறைவேத்தறதுக்குத்தானே ம.சி., ப.சி.-னு ஏகப்பட்ட ஆளுங்கள பதவியில உக்கார வெச்சுருக்கீங்க. சட்டுபுட்டுனு செய்றத விட்டுட்டு, எதுக்காக இந்த கபட நாடகம்?

இந்த நாட்டுல இருக்கற... வெளிநாட்டுல இருக்கற அத்தனை பண முதலைக்கும் ஒரே கண்ணு... எங்ககிட்ட இருக்கற நிலம்தான். வெள்ளைக்காரன் போட்ட 'நில ஆர்ஜித சட்ட'த்தைக் காட்டிக் காட்டியே எல்லாத்தையும் மிரட்டி பறிச்சு, கண்டவன் கையிலயும் கொடுக்கறதுக்குத்தான் ஆளாளுக்கு இத்தனை நாளா அலைஞ்சீங்க. கொஞ்ச நாளா எங்க ஆளுங்களும் கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு எதிர்த்து நிக்கவே... என்னமோ எங்களுக்கு சாதகமா எல்லா சட்டத்தையும் மாத்திடப் போறது மாதிரி மேடை போட்டுப் பேச ஆரம்பிச்சுட்டீங்க.

உண்மையிலேயே விவசாயிகளுக்கு நல்லது செய்யறதுனு நெனப்பு இருந்தா... நிலஆர்ஜித சட்டத்துல இருக்கற எங்களுக்குப் பாதகமான அம்சங்கள உளப்பூர்வமா நீக்கிட்டு, எங்களுக்கு சாதகம் பண்ணிக் கொடுக்கறதுக்கு முயற்சி பண்ணுங்க. அதுக்குப் பிறகு நீங்க நினைக்கற மாதிரி தொழில் வளர்ச்சியும் சிறக்கும்... விவசாய உற்பத்தியும் செழிக்கும்... பிரச்னைகளும் தீர்ந்துடும். அதைவிட்டுட்டு, எப்பாடு பட்டாவது பண முதலைங்களுக்கு எங்க நிலத்தைப் பறிச்சு கொடுக்கற வகையில, கபட நாடகம் ஆடினா... இப்ப மூழ்கிக்கிட்டு இருக்கற காங்கிரஸ் கப்பலை... இனி எந்தக் காலத்துலயும் கரையேத்தவே முடியாம போயிரும். இது ஙொப்புரான சத்தியம்!

இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமைவிகடன், 25-09-11

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

hai motber fukker ramadas what you did at the time of anbumani was at delhi??????????????????????????????????????????????????????/
today why you are acting ????????????????????????????????????????????????????????????????????????
FUCK YOU ALL??????????????????????????????????

கருத்துரையிடுக