செவ்வாய், செப்டம்பர் 27, 2011

கூடங்குளம் : மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி! - பழ. நெடுமாறன்

ரஷிய நாட்டின் உதவியோடு கூடங்குளத்தில் நிறுவப்பட்டிருக்கும் அணுமின் நிலையம் திடீரென்று அங்கு வந்துவிடவில்லை. ஆந்திர மாநிலத்தில் நாகார்ஜுன சாகரிலும், கர்நாடக மாநிலத்தில் கைக்காவிலும் கேரளத்தில் பூதகான்கெட்டு என்ற இடத்திலும் தொடங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டு இருந்த அணுமின் நிலையங்கள் அந்தந்த மாநில மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டன.

ஆனால், 1992-ம் ஆண்டு தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு கூடியபோது கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பது என்றும் உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்வது என்றும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு முடிவு செய்தது.

இத்திட்டத்துக்கு இசைவளித்ததன் மூலம் தமிழக மக்களை அணு அபாயத்துக்கு உள்ளாக்கிய தவற்றினை தமிழக அரசு செய்துவிட்டது. தொடர்ந்து பதவியிலிருந்த தமிழக அரசுகள் எதுவும் இத்திட்டத்துக்கு எதிராக எதுவும் கூறவில்லை, செய்யவில்லை.

தங்கள் மாநிலங்களில் மக்கள் எதிர்ப்புக்கு அடிபணிந்து அணு உலைத் திட்டங்களைக் கைவிட்ட, ஆந்திர, கர்நாடக, கேரள அரசுகள் தமிழ்நாட்டில் அணு உலைகள் நிறுவுவதில் அக்கறை காட்டி ஓரளவு நிதியுதவி செய்யவும் முன்வந்தது தங்களது சுயநலத்துக்காக என்பதைத் தமிழக அரசு அன்று உணரவில்லை.

அணு உலை அபாயம் ஏற்பட்டால் அதிலிருந்து தங்கள் மாநில மக்களைக் காப்பாற்றிக் கொள்வதோடு தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இம் மாநிலங்களின் சதித்திட்டங்களின் பின்னணியைப் புரிந்து கொள்ள முடியாமல், இந்திய அரசின் நெருக்குதலுக்கு உள்பட்டு இதற்கு இணங்கியது தமிழக அரசின் தவறாகும். இந்தியாவில் இயங்கி வரும் அணு மின் உலைகள் வெற்றிகரமாகச் செயல்படவில்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்ட உண்மையாகும்.

உலகம் முழுவதும் பயன்படும் மின்சக்தியில் அணுசக்தி மூலம் கிடைப்பது 4 விழுக்காடுதான். இதற்கென அரசுகள் பெரிய அளவுக்கு உதவி செய்தாலும் கடந்த 15 ஆண்டுகளாக இந்த 4 விழுக்காட்டில் முன்னேற்றம் இல்லை. பயன்பாடு இவ்வளவு சிறிதாக இருக்கும்போது இந்த நச்சரவத்தை மடியில் போட்டுக்கொள்ளத் துடிப்பது ஏன்?

உலைகளைக் குளிர்விக்கும் கதிர்வீச்சுக் கலந்த தண்ணீரையும் உப்பு அகற்றும் ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு மற்றும் ரசாயனங்களையும் கடலில் கொட்டி ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கும் முயற்சியே இதுவாகும். கடல் வாழ் உயிரினங்களை நம்பி வாழ்கிற மீனவர்களின் கதி என்ன?

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கினால் அதைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவு வரை அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த வீடுகளிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் வெளியேற நேரிடும்.

இதைத் தவிர, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உவரியிலிருந்து குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் வரையில் உள்ள சுமார் 75 கிலோ மீட்டர் கடற்கரைப் பகுதி நெடுகிலும் வாழும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.

அணு சக்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சால் கடற்கரையும் கடலும் பாதிக்கப்படும்போது அங்கு வாழும் உயிரினங்களும், பெரும் பாதிப்புக்குள்ளாகும். 3 லட்சத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தங்கள் பிழைப்பை இழப்பதுடன் வாழையடிவாழையாக வாழ்ந்த தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும்.

கூடங்குளத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து அணுமின் நிலையத்துக்குத் தேவையான தண்ணீர் கொண்டு போகப்படும். கிணற்றுப் பாசனவசதி அதிகமில்லாத குமரி மாவட்ட மக்கள் விவசாயத்துக்கு பேச்சிப்பாறை - பெருஞ்சாணி அணைகளின் நீரைத்தான் நம்பியிருக்கிறார்கள். இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால் இந்த நிலங்கள் போதுமான நீர்வளமில்லாமல் வறண்டு போகும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ. சுற்றளவுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை முழுவதுமாக வெளியேற்றுவதோ, பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளைச் செய்வதோ, மருத்துவம், கல்வி வசதிகள் அமைத்துத் தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ எந்த அரசாலும் செய்யமுடியாத காரியமாகும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கிடைக்கும் அணுக்கழிவிலிருந்து அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உதவும் புளுட்டோனியம் எடுக்கப்படுகிறது. எனவே, இந்த அணுக்கழிவு மிக முக்கியமானது.

கல்பாக்கம், தாராப்பூர் ஆகிய இரு அணு மின் நிலையங்களில் மட்டும் ஆண்டுக்கு தலா 1,000 கிலோ புளுட்டோனியம் உற்பத்தியாகிறது. 3 தேக்கரண்டி புளுட்டோனியம் மூலம் 900 கோடி பேருக்குப் புற்றுநோயை ஏற்படுத்த முடியும் என்ற நிலையில் மேலும் மேலும் சேரும் புளுட்டோனியத்தை என்ன செய்வது? புளுட்டோனியத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் வேக அணு ஈனுலைக்கான எரிபொருள் சாதாரண யுரேனியத்தைவிட 5 முதல் 10 மடங்கு விலை அதிகமாகும்.

அணு உலைக் கழிவு ஒரு பெரிய பிரச்னையாகும். கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவு ரஷியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர், அது இந்தியாவிலேயே மறுசுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கூடங்குளம் அணுஉலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தைப் பயன்படுத்தும்.

ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும்போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்தக் கொடிய நச்சை, 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு நாம் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளைத் தேக்கி வைத்திருப்பதாலும், மறுசுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும் காற்றும் பாதிக்கப்படும்.

நமது விளைநிலங்களும் பயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றிலிருந்து பெறப்படுகிற பால், பழங்கள், காய்கறிகள் நச்சு உணவுகளாக மாறும். கதிர்வீச்சுக் கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் மீன்வளம் பெரிதும் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும் வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். அணு உலையின் புகைப்போக்கிகளிலிருந்து வெளிவரும் நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின், சிசிஎம், ஐசோடோப்புகள் போன்ற கதிர்வீச்சு நிறைந்த பொருள்கள் நமது உணவில், குடிநீரில், சுவாசத்தில், வேர்வையில் கலந்து மக்கள் வதைக்கப்படுவார்கள். நமது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும்கூட நீண்ட காலத்துக்குப் பாதிக்கப்படுவார்கள்.

கூடங்குளம் அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் என்ன நேரும் என்பது பற்றி டாக்டர் சிவாஜிராவ் என்ற அணு விஞ்ஞானி வெளியிட்ட கருத்துகளின் அடிப்படையில் 21-4-90 தேதியிட்ட "தினமணி' நாளிதழ் தனது தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது.

""கூடங்குளம் அணுமின் உலை வெடித்தால் 140 கிலோமீட்டர் தொலைவு வரை வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்களுக்கும் கால்நடைகளுக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளுக்கும் 20 ஆண்டுகள் வரை ஏற்படக்கூடிய பேரிழப்புகளை இங்கிலாந்து நாட்டு சைஸ்வெல் அறிக்கையிலிருந்து ஒருவாறு நாம் ஊகித்து உணரலாம்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 140 கி.மீ. தொலைவு வரை வசிப்பவர்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். விபத்துக்குப் பிறகு 77 கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும் 115 கிலோமீட்டர் வரை 5 ஆண்டுகளுக்கும் 140 கி.மீ. வரை ஓராண்டு காலத்துக்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பவே முடியாது.

திருநெல்வேலியும் மற்றும் பல மக்கள் நெருக்கமாக வாழும் ஊர்களும் கூடங்குளத்திலிருந்து 77 கி.மீ. தொலைவுக்குள் இருக்கின்றன. தூத்துக்குடியும் மற்றும் பல ஊர்களும் 115 கி.மீ. தொலைவுக்கும், சாத்தூர் போன்ற பல ஊர்கள் 140 கி.மீ. தொலைவுக்குள்ளும் அமைந்துள்ளன.

கேரளத்தில் இருக்கும் திருவனந்தபுரம், கொல்லத்தின் புறநகர்ப் பகுதிகள் உள்ளிட்ட பெரிய ஊர்கள் 140 கி.மீ. அபாய எல்லைக்குள் அடங்கியுள்ளன. கூடங்குளத்தில் அணு உலை வெடித்தால் மேற்கண்ட நகரங்களும், கிராமங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

எல்லா வகையிலும் பாதுகாப்பு வாய்ந்த அணு உலை அமைக்கப்படுகிறது என்றே வைத்துக்கொண்டாலும், அவற்றிலிருந்து வெளியேறும் அணுக்கழிவை அகற்றுவது என்பது மிகப்பெரிய பிரச்னையாகும். இதற்கான பாதுகாப்பான முறையை இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவேயில்லை. அணு உலை ஒன்றின் ஆயுள்காலம் சுமார் 25 ஆண்டுகாலம் மட்டுமே. இதைக் கட்டி முடிக்க 15 ஆண்டுகள் ஆகும். அணு உலையில் உள்ள எரிபொருளைப் பத்திரமாகப் பிரித்தெடுக்க 5 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு தொலைவில் இருந்து இயங்கும் கருவிகள் ரோபாட்டுகள் ஆகியவற்றின் மூலம் அணு உலையைப் பிரிப்பதற்கு 10 - 15 ஆண்டுகள் ஆகும்.

அணு உலையைப் பிரிப்பதற்குப் பதில், பெரும் பொருள்செலவில் அணுஉலைக்கு காங்கிரீட்டினால் ஆன சமாதியைக் கட்டலாம் என்றும் ஒரு யோசனை கூறப்படுகிறது. அப்படியே கட்டினாலும் இதற்குள் உள்ள கதிரியக்கம் தணிவதற்கு 130 ஆண்டுகள் ஆகும். அதற்குப் பின்தான் அதைப் பிரிப்பது பாதுகாப்பாக இருக்கும் என்று விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.''

இந்தியாவில் உள்ள அணு உலைகளில் குவிந்துவரும் அணுக்கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை நம்முடைய அணு விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும். நமது நாட்டைவிட எத்தனையோ மடங்கு விஞ்ஞானமும், தொழில் வளர்ச்சியும் அடைந்த ஜெர்மனி 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து அணுஉலைகளையும் மூடிவிட முடிவெடுத்துள்ளது.

இத்தாலியில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 90 சதவீதம் மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகளும் அணுஉலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன.

புகுஷிமா விபத்து நடந்த ஜப்பான் நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் 10 அணு உலைகளின் வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.

கூடங்குளத்தில் அமையவிருக்கும் அணுமின் நிலையத் திட்டம் தங்களின் கொலைக்களமாக ஆகிவிடுமோ என்ற அச்சமும் கவலையும் தென் மாவட்டங்களில் வாழும் மக்களை ஆட்டிப்படைத்ததன் விளைவாகத்தான் அவர்கள் போராடினார்கள்.

உண்ணாவிரதம் இருந்த மக்களின் பிரதிநிதிகள் முதல்வரைச் சந்தித்துப் பேசியபோது, அவர்கள் கோரிக்கையை ஏற்று இப் பிரச்னை குறித்துத் தமிழக முதல்வர், அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் விளைவாக, உண்ணாவிரதப் போராட்டத்தை போராட்டக் குழுவினர் கைவிட்டனர்.

மக்களின் போராட்டம் எவ்வளவு வலிமையானது என்பதை கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பான போராட்டம் நிரூபித்துள்ளது. தாங்கள் அணுஉலையால் பெரும் பாதிப்புக்குள்ளாவோம் என அஞ்சிய விவசாயிகளும், மீனவர்களும் ஒன்றுதிரண்டு இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். எந்த அரசியல் கட்சியும் அவர்களைத் தூண்டிவிடவில்லை. தொண்டு நிறுவனங்களும், கிறிஸ்தவ நிறுவனங்களும் இந்தப் போராட்டத்துக்குப் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அர்த்தமில்லாதது.

மக்களின் மகத்தான எழுச்சியிலிருந்து யாரும் விலகி நிற்க முடியாது. கூடங்குளம் மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், ஊழல்கள் ஆகியவற்றுக்கு எதிராக அந்தந்தப் பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு போராடுவார்களேயானால், அந்தப் போராட்டத்தை முறியடிக்கும் வலிமை எந்த அரசுக்கும் இருக்க முடியாது. ஜனநாயகத்தில் மக்களே இறுதித் தீர்ப்பை வழங்குபவர்கள் என்பதை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்தப் போராட்டம் உணர்த்தியிருக்கிறது.

நன்றி: தினமணி, 26-09-2011

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

கூடங்குளம் போராட்டம் – ஒரு அற்புத அனுபவம்

கூடங்குளத்திற்கும் எனக்குமான உறவு மறைந்த சூழல் ஆர்வலர் அசுரனின் மூலம் தொடங்கியது. சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு மரணத்தின் நிழல் தெரிந்த நிலையிலும் அவர் "புதிய கல்வி" சுற்றுச்சூழல் இதழ் உட்பட பல்வேறு ஊடகங்களில் எழுதிய அணுசக்தித் துறை நடத்திய நெல்லை நாடகம். கிழித்தெறிந்த மக்கள்! , கூடங்குளம் அணு உலை: தமிழர்களே பிணமாகத் தயாராகுங்கள்! போன்ற கட்டுரைகள் வாயிலாக கூடங்குளம் சந்திக்கவிருக்கும் ஆபத்துகள் குறித்த தகவல்களை அறிந்திருந்தேன். பின்னர் அசுரன் எனக்கு நண்பராகி அவ்வபோது தொலைபேசி வழி பேசியபோதும் கூடங்குளம் குறித்த பல்வேறு தகவல்களை என்னிடம் பகிர்ந்திருந்தார்.

(அனைத்துப் படங்களும் சொடுக்கினால் பெரிதாகும்)

அதன்பின்னர் கல்பாக்கம் குறித்து நான் பணிபுரிந்த தொலைகாட்சியில் ஒரு செய்திக்கதையை செய்ய முயற்சித்தபோது அறிமுகமான மருத்துவர் ரமேஷ் (கோவை) அவர்களும் கூடங்குளம் குறித்து ஒரு அறிமுகத்தை வழங்கியிருந்தார். அவரைத் தொடர்ந்து எஸ்.பி. உதயகுமார் அவர்கள் மிக நெருங்கிய நண்பரானதைத் தொடர்ந்து கூடங்குளம் அணுஉலை குறித்து அரசுத் தரப்பில் கட்டமைக்கப்படும் பல பொய்களை புரிந்து கொள்ள முடிந்தது.

இந்நிலையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் கடந்த 11-09-2011 அன்று 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

அடிப்படையிலேயே எனக்கு உண்ணாவிரதம் போன்ற வழிமுறைகளில் ஈடுபாடு இல்லை. அதை ஈவெரா பெரியாரும் ஏற்கவில்லை என்பதை அறிந்திருக்கிறேன். மேலும் எழுத்தாளர் அருந்ததி ராய் சென்னையில் பேசியபோது, மக்கள் தற்கொலை செய்து கொள்வதை அரசு விரும்புகிறது – தற்கொலைப் படையாக மக்கள் மாறுவதற்குத்தான் அரசு பயப்படுகிறது என்று பேசினார். மேலும் சுய விளம்பரத்திற்காக சமூகத்தின் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் முதல், கடைக்கோடியில் இருப்பவர்கள்வரை உண்ணாவிரதம் இருப்பதை பார்த்து வந்ததால் இடிந்தகரையில் நடந்த உண்ணாவிரதமும் முதலில் என் கவனத்தை கவரவில்லை.
ஆனால் உண்ணாவிரதம் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் ஏழாவது நாளை கடந்தபோது அந்த உண்ணாவிரதம் என் கவனத்தை கவர்ந்தது. எட்டாவது நாளான 18ம் தேதி நானும், "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பின் அணுசக்தி ஆய்வாளர் நண்பர் சுந்தர்ராஜனும் இடிந்தகரை கிராமத்திற்கு சென்றோம்.

(போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் "பூவுலகின் நண்பர்கள்" சுந்தர்ராஜன்)

அந்த கிராமத்தின் சூழல் மிகவும் புதுமையாகவே இருந்தது. சென்னை போன்ற நகரங்களில் பத்து பேர் போராட்டம் செய்தால் காவல்துறையினர் 20 பேர் இருப்பார்கள். போராட்டக்காரர்களை மிரட்டுவதற்காக தடி, கண்ணீர்புகை வாகனங்களுடன், உளவியல் ரீதியான அச்சுறுத்தலுக்காக புகைப்படம், வீடியோ, காவல்துறை வாகனத்தின் மீதான கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஏதோ சமூக விரோத செயல் நடைபெறுவதைப்போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.


(செய்தியாளர்களுடன் ஊடுருவி நிகழ்வை பதிவு செய்யும் காவல்துறையினர்)

ஆனால் இடிந்தகரை கிராமத்தின் எல்லைப்பகுதிகளில் மட்டுமே காவல்துறையினர் முகாம் இட்டிருந்தனர். இடிந்தகரை கிராமத்தில் சீருடை அணிந்த ஒரு காவலரைக்கூட நான் பார்க்கவில்லை.

(காவல்துறை வாகனத்தின் உச்சியில் கண்காணிப்பு கேமரா)

கிறித்துவ தேவாலயத்தின் முன்புறத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எட்டாவது நாளானதால் போராட்டக்காரர்களின் அனைவரது முகமும் மிகவும் வாடியிருந்தது. எனினும் வலைபதிவர் கூடல்பாலா போன்றவர்கள் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றதோடு அதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் செயல்பாடுகளிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை நண்பர்கள் எஸ்.பி.உதயகுமார், மை.பா. சேசுராஜன் போன்றோர் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தாலும் எந்த ஒரு தனிநபரையும் முன்னிலைப்படுத்தாமல் ஒருமித்த கூட்டு முயற்சியாகவே அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

போராட்டத்தில் 127 பேர் நேரடியாக கலந்து கொண்டு உண்ணாநோன்பை மேற்கொண்டிருந்தாலும், மேலும் சுமார் 100 பேர் உண்ணாவிரதம் நடந்த அனைத்து நாட்களிலும் அங்கேயே இருந்து அந்த போராட்த்திற்கு தேவையான அனைத்துப்பணிகளையும் செய்து கொண்டிருந்தனர். இதில் மீனவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், வழக்கறிஞர்கள், மதகுருமார்கள் என அனைத்துத் தரப்பினரும் இருந்தனர்.

(உண்ணாவிரதத்தில் மயங்கி விழுந்தவரை மருத்துவசிகிச்சைக்காக தூக்கிச் செல்கின்றனர்)

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 127 தனிநபர்கள் என்றாலும்கூட அவர்கள் சார்ந்த குடும்பத்தினரும்கூட அவர்தம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கான மனநிலை இல்லாமல், குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் மட்டும் தேவையான உணவுகளை மட்டுமே தயாரித்துக் கொடுத்தனர். பெரியவர்கள் பலரும் இரவு உணவை மட்டுமே உட்கொள்வதாக கூறினர்.

127 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அந்த இடத்தின் எதிரே இருந்த மிகப்பெரிய மைதானம் முழுவதும் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தல் முழுக்க மக்கள் குழுமியிருந்தனர். இதற்கு முன் அத்தனை பெரிய மனிதத் திரளை நான் மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் மாநாடுகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். பிரியாணிப் பொட்டலங்கள், மற்ற ஏற்பாடுகள், போக்குவரத்து ஆகிய அனைத்தையும் செய்து ஊடகங்களின் கவனத்தை கவர்வதற்கு அரசியல் கட்சிகள் படும்பாடு ஊடகத்தில் சில வருடங்கள் பிழைப்பு நடத்திய எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இதுபோன்ற எந்த வசதியும் இல்லாத நிலையில் தினமும் சுமார் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மக்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காலை முதல் மாலைவரை அங்கே குழுமினர்.

போராட்டம் நடக்கும் நாட்கள் அனைத்திலும் அந்தப்பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. என்ன காரணத்தாலோ பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டிருந்தது.

வைகோ, சீமான், விஜயகாந்த் போன்ற பிரபலத் தலைவர்கள் முதல் பல சிறு மற்றும் குறுகிய மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள்வரை அனைத்துத் தரப்பினரும் மாநிலம் முழுவதிலும் இருந்து இடிந்தகரை வந்து போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

உண்ணாவிரதம் துவங்கியபோது அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதமும் நடந்து கொண்டிருந்ததால், ஊடகத்துறையின் கவனம் இடிந்தகரை மீது முதல் சில நாட்களுக்கு முழுமையாக விழவில்லை. ஆனால் சில நாட்களிலேயே தமிழ்நாட்டு ஊடகங்கள் புறக்கணிக்க முடியாத செய்தித் தன்மையை இடிந்தகரை உண்ணாவிரதப் போராட்டம் பெற்றுக் கொண்டது. புதியதலைமுறை தொலைக்காட்சி சென்னையிலிருந்து சிறப்புச் செய்தியாளர்களையும், நேரடி ஒளிபரப்பு செய்யும் வாகனத்தையும் இடிந்தகரைக்கு அனுப்பி போராட்டத்திற்கு வலு சேர்த்தது. எனவே மற்றைய ஊடகங்களும் இடிந்தகரை போராட்டத்தை எடுத்துரைக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது.


இந்த நிலையில் 19-09-2011 அன்று மேதா பட்கர் இடிந்தகரை வந்தார். மேதா பட்கருடன் என்டிடிவி போன்ற அனைத்திந்திய செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்களும் இடிந்தகரையில் கரை ஒதுங்கினர்.

மேதா பட்கர் ஆற்றிய உரையும், அவரது அணுகுமுறையும் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றவர்களையும், அவர்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் பெரும் ஊக்கமாக அமைந்தது.

(மேதா பட்கர் ஆங்கிலத்தில் உரையாற்ற, தமிழில் மொழி பெயர்க்கிறார் சுப. உதயகுமாரன்)

அதே நாளில் தமிழ்நாடு முதலமைச்சர், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அறிக்கையும் வந்தது. சில நாட்களுக்கு முன் கூடங்குளம் அணுஉலை மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர், தனது நிலையை மாற்றிக்கொண்டு கூடங்குளம் பகுதி மக்களின் ஐயங்களை தீர்க்கும்வரை அணுஉலை தொடர்பான வேலைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வெளியிட்ட அறிக்கை, போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

போராட்டக்குழுவின் பிரதிநிதிகள், முதலமைச்சரை நேரடியாக சந்தித்து, முதல்வர் தம் நிலையை உறுதி செய்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.

+++

இடிந்தகரை மக்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறையும் பேருதவி செய்தது. உண்ணாவிரதம் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்வரை பலவழிகளிலும் போராட்டக்குழு தலைவர்களை உளவியல் ரீதியாக மிரட்டி வந்த காவல்துறை, உண்ணாவிரதம் தொடங்கிய பின்னர் அந்த ஊருக்குள் நேரடியாக நுழையாமல் ஒதுங்கி இருந்ததே, காவல்துறை செய்த மிகப்பெரிய உதவியாகும்.

எனினும் உளவுத்துறை காவல்துறையினர் தம் பங்கை செவ்வனே ஆற்றியதாகவே தெரிகிறது. உள்ளூரில் உள்ள செய்தியாளர்கள் மூலமாகவும், போராட்டக்குழு தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதன் மூலமும் தகவல்களை பெற்றுக்கொண்டிருந்தனர். ஒரு பிரபல தனியார் தொலைகாட்சியின் செய்தியாளர், பினாமியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர். அந்தச் செய்தியாளர், தாம் சேகரிக்கும் செய்திகளை பணி புரியும் நிறுவனத்துக்கு செய்து கொடுப்பதைவிட, சற்று அதிக பொறுப்புணர்வுடன் அணுமின் நிலைய நிர்வாகத்துக்கும் கொடுப்பதாக அவர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டனர்.

+++

பங்கேற்பாளனாக, ஆதரவாளனாக, பார்வையாளனாக, விமரிசகனாக, பத்திரிகையாளனாக பல்வேறு போராட்டங்களில் நான் கலந்து கொண்டிருந்தாலும், போராட்டம் குறித்த நகர்ப்பகுதி சார்ந்த பொதுமக்களின் பார்வையை நான் உணர்ந்திருக்கிறேன்.

போராட்டங்களின் காரணம் குறித்தோ, நியாயம் குறித்தோ எந்த பரிசீலனையும் இல்லாமல் அதை ஒரு பொதுத்தொல்லையாக மட்டுமே கருதும் மனநிலை நகர்ப்புறத்து மக்களிடம் அதிகரித்து வருகிறது. இம்மாதிரியான மனநிலையை கட்டமைப்பதில் அரசும், ஊடகங்களும் தொடர்ந்து செயலாற்றி வருகின்றன.

அரசு என்ற அமைப்புக்கு எதிரான போராட்டத்தை, ஆளும் அரசியல் கட்சிக்கும், ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதலமைச்சருக்கும் எதிரான தனிப்பட்ட போராட்டமாக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே ஆட்சித்தலைமை, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் உதவியுடன் போராட்டத்தை ஒடுக்கவே முயற்சி செய்கிறது. இந்த முயற்சி வெற்றியும் அடைந்து வருகிறது. எனவே இந்த போராட்ட வடிவங்களிலும், மக்களுடைய போராட்ட உணர்வுகளிலும் எனக்கு நம்பிக்கை குறைந்து கொண்டிருந்தது.

ஆனால் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் நடந்த போராட்டமும், அந்த போராட்டம் அடைந்த வெற்றியும் எனக்கு மட்டுமல்ல என் சிந்தனைகளை ஒத்த நண்பர்களிடமும் நம்பிக்கை விதைகளை விதைத்துள்ளன.

நியாயமான எந்த போராட்டத்திற்கும் மக்கள் தயாராகவே உள்ளனர். அதற்கு அவர்களை தயார் படுத்தும் பணி மட்டுமே நம்மிடம் உள்ளது என்பதை என்னைப் போன்றவர்கள் உணர்வதற்கு இடிந்தகரை மக்களின் போராட்டம் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.

-பி. சுந்தரராஜன்,

வழக்கறிஞர்

வியாழன், செப்டம்பர் 22, 2011

தொல்லை தராதீர் .......குளவிகள் கூடுகட்டுகின்றன!

பொதுவாக ஜூலை இறுதியில் துவங்கி ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் இறுதிவரை குளவிகள் பரபரப்பாக இருக்கும். மிக முக்கியமாக புதிய கூடுகளைக் கட்டுதலில் மூத்த குளவிகள் ஈடுபடுவதும், கருவுற்ற இளம்பெண்கள், புழுக்களைக் கவ்விக் கொணர்ந்து தங்கள் கூடுகளில் அடைத்து, அதன் உடலில் முட்டைகளைச் செலுத்துவதுமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க, வேலைக்காரப் பெண் குளவிகள், இளம் குளவிகளை சீராட்டுவதுமாக இருக்கும். இந்த மாதங்களில் இதன் உடலில் ஊறும் ஹார்மோன்கள் அவைகளை அவ்வாறு பரபரப்பாக இயங்கத் தூண்டும். கோபமோடு எப்போதும் இருக்கும். உடலில் வேதிப் பொருட்கள் விஷமாக கொடுக்கின் முனையில் சொட்டதயாராக இருக்கும். சீண்டிப்பார் போரோ அல்லது அதன் தினசரி நிகழ்வில் குறுக்கிட்டவரோ தாக்கப்படுவர்.

லாரி பேக்கர் தனது பசுமை இல்லக் கனவினையும், அதற்கான எளிமையான தொழில் நுட்பத்தையும் குளவிகள் மூலம்தான் கண்டறிந்தாராம். இவற்றை, "இயற்கை படைத்த சிறந்த கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்" என பாராட்டும் இவரது வீடுகள் அனைத்தும் ஆங்காங்கே கிடைக்கும் பொருட்களைக் கொண்டே கட்டப்படுகின்றன. கம்பிக்குப் பதிலாக மூங்கிலோ அல்லது தென்னை கட்டைகளோ கிடைத்தால் அதுவே போதுமானதாகும். அதுபோல செம்மண் கலவை அதிகம் உபயோகிக்கப்படுகிறது. சுடப்படாத செங்கல்லே போதுமானது. இவ்வாறான கட்டுமான அமைப்பு, பல மாடிக் கட்டிடங்களாகவும், இயற்கை பேரிடர்களால் தாக்கப்படாததாக, தற்போது கட்டப்படும் கட்டுமான செலவில் 30 சதவீதம் குறைவாக உள்ளதால் கேரள மாநிலம் இவரின் தனித்திறமையைப் புரிந்து ஏழைகளுக்கான வீடுகட்டும் திட்டத்தை ஒப்படைத்தது. மிகக் குறைந்த செலவில் அதி நவீன இல்லங்களை, குறிப்பாக சுற்றுச் சூழலுக்கு எந்த ஒரு மாசும் ஏற்படாத வகையில் கட்டித்தந்துள்ளார். இவரின் அரைமுட்டை வடிவ இல்லக் கூரை, குளவிக் கூடுகள் மூலம் கற்றுக் கொண்டதன் விளைவு என அடிக்கடி கூறுவதுண்டு.

குளவிகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வகையினங்கள் உண்டு. இவை தேனி என்றும் கூறமுடியாமல் எறும்பு என்றும் வகைப்படுத்தப்படாமல் இரண்டிற்கும் இடையினலான அமைப்பாகத் திகழ்கிறது. இவ்வினத்தை "அபோ கிரைட்டா" என அறிவியல் கூறுகிறது. இவற்றின் உடல் மூன்றமைப்பு கொண்டது. தலை, நடுஉடல், பின்பகுதி. சில வகை கூட்டமாகவும், சில வகை தனிமையிலும் வாழ்கின்றன. கூட்டமாக வாழ்பவை, ராணி குளவியின் தலைமையில் இயங்குகின்றன. தேனீ, எறும்பினங்கள் போல், குளவி வகுப்பிலும் பெண்ணே சகல சக்தி படைத்தவையாக இருக்கிறது. ஒரு கூட்டத்தில் 10,000க்கும் மேல் இருக்கும். இங்கு ஆண் விந்தணுவைப் பாய்ச்சுவதற்கும், பெண்ணிற்குத் தேவைப்படும்போது உடலுறவு சுகத்தை தருவதற்கும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர, எதிரிகள் வருவதை அடையாளம் கண்டு தெரிவிப்பது ,இதன் பிரத்யேகப் பணியாகும். வேலைக்காரக் குளவிகள் அனைத்தும் பெண்ணாக உள்ளது. ராணிக் குளவி சற்று பெரிதாக இருக்கும். அவை கட்டும் கூட்டில் ராணிக்கென்று தனி அறை உண்டு. ராணியின் முக்கிய வேலை, கூடு கட்டும் இடத்தை தேர்வு செய்து, கட்டுமானப் பிரிவுகளை வகுப்பது, இனப்பெருக்கம் செய்வது. தனியாக வாழும் வகுப்பினங்கள், தேவைப்படும்போது தங்கள் இன நபருடன் இணைந்து செயல்படும். சரியான நபர் கிடைக்காதபோது, பிற வகுப்புக் குளவிகளோடு இணையும். இதற்கு இரு சாராரிடம் இருந்தும் பெருமளவு எதிர்ப்புகள் வருவதில்லை.

இதன் தலைபாகத்தில் இரு ஜோடி கண்கள் உணர்வுக் கொம்புகள், வாய் காணப்படுகிறது. கிட்டத்தட்ட கூட்டுக்கண்கள் ஒத்த அமைப்பு .தவிர முன் தலை பகுதியில், முக்கோண அமைப்பிலான நிறைய கண்களும் சில இனங்களுக்கு உண்டு. இதை "ஒசிலி" என அழைக்கிறார்கள். இதன் உணர்வுக் கொம்புகள் 12---15 கட்டுகள் கொண்டதாக இருக்கும். கொம்புகள் மூலமே உணவின் தன்மை, கூடுகட்டும் போது தேவைப்படும் பொருட்களின் தன்மைகளைத் தொடுதல் உணர்ச்சி மூலம் கண்டறிகிறது. நடுப்பகுதியில் மூன்று ஜோடிக் கால்களும், இரண்டு ஜோடி இறகுகளும் இருக்கும். தேனிக்களைப் போல, இவைகளும், இறகுகளை விசிறிக் கொள்வதன் மூலம் சக தோழர்களுக்கு சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்கின்றன. பொதுவாக அவைகள் வேதி திரவத்தை வெளிப்படுத்துவதன் மூலமே சமிக்ஞைகளை தெரியப்படுத்தும். பின் பகுதியில் மலப்புழையும், கொடுக்கும் உள்ளது. இங்கு விஷத்தை சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. இதன் கொடுக்கானது உள்ளுணர்வின் கட்டளைக்கு அடிபணிந்தே செயல்படுகிறது. மலப்புழையின் மூலமே உடலுறவு கொள்ளும். இந்நிகழ்வு பெரும்பாலும் இரவு நேரத்திலேயே நடக்கிறது. இவைகளுக்கு இரவில் கண்தெரியாது. இதனால் தன் நடமாட்டங்கள் அனைத்தையும் வெயிலுடன் கூடிய பகல் வேளையிலேயே செய்கின்றன. இவை பெருமளவு மனிதர்களாலும், பிற பறவையினங்களாலும் தாக்குதலுக்கு ஆளாவதும் இவ்வேளையில்தான்.

இதன் இல்லற வாழ்வு சுவாரசியமானது. பல கட்டங்களைக் கொண்டது. ராணிக் குளவி தான் காமமுற்றிருக்கும் போதெல்லாம் ஆணை அழைத்து உறவு கொள்ளும். பருவ காலங்களில் தன் கருப்பையில் முட்டை உருவாகி விட்டால், வலுவான ஆணுடன் உறவு கொண்டு, அதன் விந்தணுவை ,தன் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள பை போன்ற பிரத்யேக அமைப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளும். கருமுட்டை சீராக உருவான பின் விந்தணுவோடு கலப்புறச் செய்து , குஞ்சு பொரித்தலுக்கு உண்டான ஏற்ற பக்குவத்தோடு, வெளியேற்றும். குளவிகள் முட்டைச் சார்பு கொண்டவை. அதாவது, பிற உயிரினங்களின் உடலில் தங்களது முட்டையை செலுத்தி பொரித்தலுக்கு ஏதுவாக்கும். இதன் காரணமாகவே இவை புழுக்களை அதிகம் வேட்டையாடுகின்றன. பாயர் கம்பெனியில் வேலை பார்த்து வெளியேறிய அண்ணன் வெங்கட் ராமன் குளவிகளை "விவசாயிகளின் நெருங்கிய ,நம்பகத் தோழன்" என்றழைப்பார். தங்கள் கம்பெனி பூச்சி மருந்துகளே இவைகளை அழித்து வருவதாக அடிக்கடி கூறுவார். புழுக்கள் கிடைக்காத போது மண்ணிற்குள் புதைந்து வாழும் "நில சிலந்திகளை" இவை வேட்டையாடும்.

குளவிகள் பிராந்தியம் சார்ந்து வாழ்பவை என்பதால், அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தங்களது கூட்டை அமைத்துக் கொள்ளும். தேனிக்களைப் போல் இவைகளுக்கு மெழுகு சுரக்கும் சுரப்பிகள் கிடையாது. எனவே மண், மரப்பிசின், சுண்ணாம்புக் கலவை போன்றவை கொண்டே அழகான கூட்டை அமைத்துக் கொள்கின்றன.அப்பொருட்களை உருண்டையாக்கி, கவ்விக் கொணர்ந்து வாயினாலும், முன்னங்கால்களாலும், அமைக்கும் அழகையும், அப்போது அவை வெளியிடும் ரீங்கார ஒலியையும் ரசிப்பதற்கு தனி உணர்வு வேண்டும். பாதி கூட்டைக் கட்டி முடித்த பின், தான் கொணர்ந்த புழுவையோ, சிலந்தியையோ உட்செலுத்தும். கொட்டுப்பட்டதால் ஏற்கெனவே மயக்க நிலையில் உள்ள இவை, எதிர்ப்பேதும் தெரிவிக்க முடியாத நிலையில், அதன் உடலில் கொடுக்கின் உதவி கொண்டு ஓரிரு திடகாத்திரமான முட்டைகளை உட்செலுத்தும். பின் மீதமுள்ள கூட்டையும், அதன் வாயிலையும் அடைத்து விடும். இரையின் உடலில் உள்ள முட்டை, பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து வெளியேறும் வரை அவை உயிரோடு இருக்கும். உடலைக் கிழித்து வெளியேறும் குளவிக் குஞ்சுகளுக்கு, புழுவின் உடலே துவக்க இரையாகும். முட்டை பொரிந்ததை உணர்ந்த தாய்க் குளவி, கூட்டின் வாயிலை உடைத்து,தன் வாரிசை அழைத்துக் கொண்டு தன் கூட்டை அடையும். பின் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு , வேலைக்காரப் பெண் குளவிகளிடம் ஒப்படைக்கப்படும். அவை இதற்கு தேன், இனிப்பு கலந்த பழச்சாறு போன்றவைகளை உணவாக ஊட்டுகின்றன. இவை பெரும்பாலும் இவ்வகை உணவுகளையே உட்கொண்டாலும், அவ்வப்போது, சிறிய ஈ, கொசு, வண்டுகளையும் உணவாக்கிக் கொள்ள தயங்குவதில்லை.

வேலைக்காரக் குளவிகள் வளர்த்த, திடகாத்திரமான பெண் குளவி, பிற்காலத்தில் ராணிக்குளவியாகும் சந்தர்ப்பம் ஏற்படின், தலைமையோடு பெருமளவு விரிசல் கொள்ளாமல், சில சந்தர்ப்பம் சார்ந்த எதிர்ப்புகளை மட்டுமே காண்பித்து , பின் வெளியேறும். அப்போது அது, தனக்கு விசுவாசமான ஆண் மற்றும் பெண் குளவிகளைத் தன்னுடன் அழைத்துச் செல்லும். அந்த சமயங்களில் தான் அவை பிற குளவிகளின் கூட்டையோ அல்லது தேனீக்களின் கூட்டையோ தாக்கி, தனதாக்கிக் கொள்கின்றன. அந்தப் போரில் பலத்த உயிரிழப்பும் ஏற்படுவதுண்டு. பல சமயங்களில் அவை கூட்டமாக இறந்து விடும்போது, ராணிக் குளவி தன் கூட்டிலேயே ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு, ஆணை விந்தணுவைப் பாய்ச்ச ஆணையிடும். இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே. இவற்றின் வாழ்க்கை முறை இதுவரை சரியாக கணிக்கப்படவில்லை. ஆப்பிரிக்க,ஆஸ்திரேலிய வகை குளவிகள், நம் தோட்டங்களில் காணப்படும் கதம்ப வண்டு, போன்ற இனங்கள் மிகவும் கொடியவை, கோபம் கொள்பவை. தங்கள் எதிரியை 1/2 கி.மீ. துரத்திக் கொட்டுபவை. ஒரு முறை என் வலது தோள்பட்டையில் கொட்டுப்பட்டு, இரண்டு மாத காலம் கையை அசைக்கவே முடியாத அளவு வேதனைப்பட்டிருக்கிறேன்.

இப்பூமிப்பந்து,பூச்சிகளால் நிரம்பியது. அதன் சமநிலையும் இவைகளால் மட்டுமே நிலைநாட்டப்படுகிறது. அவற்றுக்கு தோள்கொடுப்பதாய் பறவைகளும்,பிற ஜீவராசிகளும் உள்ளன. இங்கு மனிதனால் ஆவதற்கு ஒன்றுமே இல்லை. இந்தியாவைப் பொறுத்த மட்டில் குளவிகளைப்பற்றிய விரிவான புத்தகம் என்று ஒன்றுமே கிடைக்கவில்லை. தற்போது பெங்களூர் மீனாட்சி எழுதிய நூல் மட்டுமே உள்ளது. தவிர குளவி, தேனீ, பிற பூச்சியினங்களுக்கு அயல் நாட்டவரின் புத்தகங்களையே நாட வேண்டியுள்ளது. அவை அந்தப் பிரதேசங்களை வைத்தே பெரும்பாலும் எழுதப்பட்டவை. பிளினி, சிசரோ போன்ற தத்துவ, அறிவியல் அறிஞர்கள் தொடங்கி, கடந்த 60 வருடங்களாக குளவிகள் குறித்த ஆய்வு உலகெங்கிலும் நடந்து வருகின்றது. டாக்டர் ஷூவல்ட்டே, அதன் பிதாமகராகத் திகழ்கிறார். அயல் மகரந்தச் சேர்க்கையின் அற்புத தூதுவனாகவும், வேளாண்மையின் பாதுகாவலனாகவும் திகழும் பூச்சிகளைப் பற்றிய விரிந்த ஆய்வுகளும் அதைப்பற்றிய நூல்களுமே இந்தியாவில் நிறைய வரவேண்டும்.

1945ல் வந்திறங்கிய டி.டி.டி. துவங்கி, இன்று புழக்கத்தில் உள்ள என்டோ சல்ஃபான் வரை, இவைகளைக் கொன்று குவித்து வருவதை ஐ.நா. சபையின் பூச்சியியல் ஆய்வாளர்கள், கவனத்தில் கொள்ளவில்லை போலும்! இதே நிலை நீடிக்குமெனில் குளவிகளும் "அழிவின் சிவப்பு பட்டியலில்" வெகு விரைவில் இடம்பெறும்.

-கிருஷ்ணன் ரஞ்சனா

நன்றி: உயிர்மை இணையம்


புதன், செப்டம்பர் 14, 2011

வண்ணத்துப்பூச்சி - நிறங்களைக் கையாளும் சூப்பர் ஜீன்கள்

"ஒரு வனத்தின் அழகே அங்கே படபடத்துக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்தான்" என்பார் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். சிறு பூச்சிகளும், வண்டுகளும் வனத்தின் கணையம்,கல்லீரல், மண்ணீரல் என எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் என்பது வனவியலாளர் உல்லாஸ் கரந்தின் கருத்து. வண்ணத்துப்பூச்சிகளின் பிரதான வேலை அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவது என்ற போதும், சிறு உயிரிகள், பறவைகளின் பிரதான உணவாகவும் திகழ்கிறது. இவை உணவாக்கப்படுவதும், படாமல் போவதும் அதன் இறகுகளில் பூசியிருக்கும் வண்ணங்களால் தான் என்ற உண்மை இப்போதுதான் அறிவியல் உலகிற்கே தெரியவந்துள்ளது. இவை தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் இயல்பு கொண்டவை என்ற உண்மை அழகியலாளர் முதல் அறிவியலாளர் வரை புருவத்தை நிமிர்த்தக்கூடிய செய்தியாக உள்ளது. மாறும் வண்ணம் தொடர்பான மர்மம் தற்போது அவிழ்க்கப்பட்டுள்ளது. தேவைக்கும் சூழலுக்கும் ஏற்றாற் போல் வண்ணத்தை மாற்றிக் கொள்வதும், பின் இயல்பு நிறத்திற்குத் திரும்புவதையும் ,விஞ்ஞானிகள் கண்டறிந்து ஆச்சரியமுறுகின்றனர். இந்த ஆய்வு ஐரோப்பிய விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

மரபணு தொடர்பான நீண்ட ஆய்வுகளை நடத்திய வேல்ஸ்,பேட்ஸ், டார்வின் போன்றோர் கூட இது தொடர்பான ஐயங்களைக் கொண்டிருந்தனர். ஒரு நாள், சில பறவைகள் ,சில வண்ணத்துப்பூச்சிகளை உணவாகக் கொள்வதைக் கண்டனர். அடுத்த நாள் அதே வகை வண்ணத்துப் பூச்சிகள் வேறு நிறத்தில் இருப்பதையும், பறவைகள் அவற்றை வெறுத்து விட்டதையும் பார்த்து, இது ஏதோ பறவைகளின் உணவுத் தேர்வு தொடர்பானது என விட்டு விட்டனர். அதே சமயம்,இவ்வாறு பறவைகள் பூச்சிகளை சாப்பிடாமல் ஒதுக்குவது "மனிதக் கண்களுக்குத் தெரியாத மாற்றம் பறவைகளை அறுவறுக்கச் செய்கிறது" என ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்கிறார் வேல்ஸ். இங்கிலாந்து பல்கலைக்கழகமும், பாரீஸ் பல்கலைக்கழகமும் இணைந்து முதன் முதலாக நீண்ட, ஆழமான , வண்ணத்துப்பூச்சிகளின் மாறும் வண்ணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தங்கள் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் உத்தியாக இந்த வண்ண மாறுதலை அவை மேற்கொள்கின்றன எனக் கண்டறிந்தனர். இந்த ஆய்விற்காக ,இவர்கள் அமேசான் வகை வண்ணத்துப்பூச்சியான "ஹெலிகோனியஸ் நுமட்டா" என்ற பூச்சிகளைத் தேர்ந்தெடுத்தனர். மிக நீண்ட, அதிக செலவு பிடித்த இந்த ஆய்வில் பல வகை வண்ணத்துப்பூச்சிகளும் உட்படுத்தப்பட்டன.

மழைக் காடுகளில் மட்டுமே வாழும் நுமட்டா வகை வண்ணத்துப் பூச்சிகளே தங்களை இவ்வாறான நிற மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளும் என்ற தங்கள் கருத்தாக்கங்களை ,வெப்ப மண்டல வகையினங்களும் மாறுதலுக்கு உள்ளாகி ,தகர்த்தெறிந்தன. ஒரே இனத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் ,தங்கள் இறகுகளில் பல வித வண்ணங்களைக் கொண்டிருந்தன.சில, பறவைகளுக்கு உணவானதும், தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொண்ட மற்றவை, அவற்றின் முன்பே பறந்தாலும் ,உணவாகமல் இருப்பதையும் கண்டனர். இந்தியாவில் அதிகம் காணப்படும் மோனார்க் வகை பூச்சிகளின் நிறத்தை ஒத்த சில வகை நுமட்டோக்களே இவ்வாறான நிறமாற்றத்தைக் கொண்டன. இந்த மோனார்க் வகை வண்ணத்துப்பூச்சிகளே அதிவேகமாக, அதிக தொலைவு, கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும்.

குரோமோசோம்களின் நிலைப்பாடே இவ்வாறான நிற மாற்றத்திற்கு முக்கிய காரணம் .பொதுவாக வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்களும், அவைகளின் நிற மாறுபாடுகளும், குரோமோசோம்களில் அடங்கிய குறிப்பிட்ட ஜீன் தொகுப்பால் உருவாக்கப்படுகிறது. இந்த வகை ஜீனை விஞ்ஞானிகள் "சூப்பர் ஜீன்" என்றழைக் கின்றனர். இந்தத் தொகுப்பு ஜீன்கள் வண்ணத்துப்பூச்சிகளின் தற்காப்புக்காவும், உணவு களைத் தக்க வைக்கவும், பிற இனத்தோடு இணை சேரவும் உதவுகிறது. இந்த வகை மாற்றங்கள் நத்தை இனங்களிலும் ஏற்படுகிறது. சில நத்தைகள், ரோஜாப் பூக்களின் ரோஸ் நிறத்தைக் கண்டவுடன் இந்நிறத்தை ஒத்து தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. இவ்வாறான நிற மாற்றம், இவை பிற பறவைகளால் அடையாளம் காண முடியாத சூழலை உருவாக்கும். அதே சமயம், நத்தைகள் இருப்பதை அறியாத தேனீக்களும், பிற பூச்சிகளும் பூவை அணுகும் போது அவை கொல்லப்படுகின்றன. இவ்வாறான சூப்பர் ஜீன்கள் இயற்கையின் மாற்றத்தில் பெரும் பங்காற்றுகின்றன என்கிறார் டாக்டர். ஃபெப்பர். இவர் ஸ்மித்சோனியன் ஆராய்ச்சி மையத்தில் பூச்சியியல் தொடர்பான ஆய்வாளர்.

பாரீஸை சேர்ந்த டாக்டர் மாத்யூஷோரன், "நாங்கள் இவ்வாறான நிகழ்வுகளைப் பார்த்து அதிர்ந்து விட்டோம்" என்றார். பூச்சிகள் உலகில் நிகழும் செயற்கையான உருமாற்றங்களை இந்த ஆய்வு அறிவியல் உலகிற்கு எடுத்துக்காட்டிவிட்டது. இனி இது தொடர்பான,தேவையான ஆய்வுகளும் நடத்தப்படும் என்றார் பேராசிரியர் ரிச்சர்ட் பிரின்ஸ். இது இயற்கையின் தேர்வு --காலா காலத்திற்கும் நடந்து கொண்டே இருக்கும். நமக்குத் தேவையான அறிவியல் உபகரணங்களும், குறிப்புகளும் இப்போதுதான் கிடைத்துள்ளது. எனவே நாம் இப்போது தான் அறிந்துள்ளோம் என்றார். இது தொடர்பான ஆய்வுகள் 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரிட்டனில் துவங்கியது. குரோமோசோம்களின் தரவரிசை, மாறுபாடுகளை உண்டாக்கும் சூப்பர் ஜீன்களை உருவாக்குவதுதான். இது இயற்கையின் மாபெரும் நிகழ்வு. மேத்யூஷோரன், கிரிஸ் ஜிக்கிள் என்ற இரு விஞ்ஞானிகள் வண்ணத்துப்பூச்சிகளின் உணவுத் தேடலில் குரோமோசோம்களின் பங்களிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் N,YP,SB,H குரோமோசோம்களின் நிலைப்பாடு, பெரும் பங்காற்றுவதைக் கண்டறிந்தனர். தவிர இவை உணவுத் தேடல், பொறாமை கொள்ளல் என்ற உணர்வுகளையும் தூண்டுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

விஷமுள்ள வண்ணத்துப்பூச்சிகள், பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிப்பவை. இவை அதிகம் வண்ணங்களை மாற்றிக் கொள்வதில்லை. அதற்கு மாறாக, துர்நாற்றத்தை தங்கள் மலக்குழாய் வழியே பீய்ச்சியடித்து எதிரிகளை நிலைகுலையச் செய்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் சிவப்பு நிற உருவாக்கத்தை "ஆப்டிக்ஸ்" என்ற ஜீன் வழங்குகிறது. இது ஆபத்தை சுட்டிக் காட்டுவதோடல்லாமல், பிற உயிரிகளுக்கு எச்சரிக்கை சமிக்ஞையாக, தான் காதலில் உள்ளதை, அதிக காமமுற்று உள்ளதை, நோய்வாய்ப்பட்டிருப்பதை, போன்றவைகளின் குறிப்பேற்று அறிகுறிகளாகவும் பயன்படுத்துகிறது. இந்தச் சிவப்பு நிறம், பொதுவாக அவைகளின் கண்களில் அதிகம் உருவாக்கும். ஓம்மோ குரோம் நிறமிகள் இதனுடன் சேர்ந்து இறகுகளின் நிறமியை உருவாக்கும். இந்த வகை குரோமோசோம்களின் கட்டமைப்புகள் பிராந்தியம் சார்ந்தும், சூழ்நிலைப் பொறுத்தும் வெகு எளிதாகச் செயல்படுகின்றன.

-எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா

நன்றி: உயிரோசை இணையம்


திங்கள், செப்டம்பர் 12, 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள்

1. கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.2. தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.


i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.


ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.


iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.


iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.


3. அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?


4. உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.


5. பேரிடர்கள் வராது, நடக்காது என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.


6. அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.


7. 2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.


8. அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.


9. 1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.


10. நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.

நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.

கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன்வருவார்கள் என எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.

இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.

Ø மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற்காக மக்களா?

Ø ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா?

சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!


நன்றி: தமிழ்நாடு மக்கள் பேராயம்