வியாழன், ஆகஸ்ட் 11, 2011

'அரசியல்வாதிகள் நிலத்தை அள்ளுங்க... விவசாயிகள் நிலத்தைத் தள்ளுங்க...'

முதலாம் புரட்சித் தலைவி, 'இரண்டாம் பசுமைப் புரட்சி'யின் தாய், மூன்றாம் முறை முதல்வராகியிருக்கும் தங்கத் தாரகை, முப்பத்து முக்கோடி தேவர்களும் அரண்டு மிரண்டு வணங்கும் அற்புத அம்மா... ஸ்ரீரங்கத்து ரங்கநாயகி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மறுக்கா ஒருவாட்டி வணக்கம் சொல்லிக்கிறான் கோவணாண்டி.

உங்களுக்கு இருக்கற டென்ஷன்ல... நானெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஆனாலும், அடுத்த அஞ்சி வருஷத்துக்கு ஒங்கக் கிட்டதானே எதையுமே ஓதியாகணும். ஏற்கெனவே ஆட்சியில இருந்த ஐயாகிட்டயும் இப்படித்தான் நமக்கு ஏகப்பட்ட வம்பு, வழக்கு. ஆனா, அதுக்கெல்லாம் ஐயா பெருசா அலட்டிக்கிட்ட மாதிரி தெரியல. பாவம், அவருக்கு ஆயிரத்தெட்டு பிக்கல்... பிடுங்கல்! சொந்த மனுஷ, மக்களெல்லாம் ஜாஸ்தி! அதனால எங்க விஷயமெல்லாம் அவ்வளவா அவரோட கவனத்துக்கே போகல. ஆனா, 'தமிழக மக்களைப் பத்தி மட்டுமே முழுநேரமும் சிந்திக்கற ஆளு நான்'னு நீங்களே மேடை போட்டு முழங்கியிருக்கீங்க. அந்த நம்பிக்கையிலதான் ஒங்களுக்கு இந்தக் கடுதாசி!


பட்ஜெட்டுல சில பல நல்ல திட்டங்களைச் சொல்லியிருக்கீங்க. இதுவே, பட்ஜெட் போடுறதுக்கு முன்ன எங்க ஆளுங்க நாலு பேரைக் கூட்டி வெச்சி ஆலோசனை நடத்தியிருந்தா... நிஜமாவே எங்களுக்கு பலன் கொடுக்கற இன்னும் நாலு திட்டங்களையும் போட்டிருக்கலாம். வயக்காட்டுல இறங்கி நிக்கறவனுக்கு வலி தெரியுமா... இல்ல, கோட்டு சூட்டு ஆபீஸருக்கு வலி தெரியுமா?

சரி விஷயத்துக்கு வாரேன். ஒங்க நிதி மந்திரி... 'பணிவு’ பன்னீர்செல்வம் வாசிச்ச பட்ஜெட்ல நிலவங்கி திட்டம்தான் ரொம்ப அருமையானத் திட்டம். 'பெரிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான நிலங்கள் அரசிடம் இல்லை. அதனால் அரசின் வசம் உள்ள நிலங்களை ஒருங்கிணைத்தும், நில உரிமையாளர்களை பாதிக்காத வண்ணம் தனியார் நிலங்களை கையகப்படுத்தியும் நிலவங்கியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்’னு அறிவிச்சிருக்கீங்க.

பாடுபட்டு சேர்த்து வெச்ச நிலத்தை, வம்சத்தை வாழ வெக்குற பூமியை, 'ரோடு போடுறோம், பாலம் கட்டுறோம், கம்பெனி கட்டுறோம்’னு எப்ப... யாரு புடுங்குவாங்களோனு பதட்டத்தோட வாழுற எங்க சனங்களுக்கு... இந்தத் திட்டம் மூலமா நூறு சதவிகிதம் நிம்மதி கிடைக்கும்னா... மொதல் ஆளா நானே நிலத்தைக் கொடுக்கத் தயார். ஆனா, அதுக்கு முன்ன... நீங்க சில விஷயங்கள உறுதியா நிறைவேத்திக் காட்டணும். அப்பத்தான் எங்க ஆளுங்க எல்லாருக்கும் நம்பிக்கை பொறக்கும்!

அதாவது, ஆளும் கட்சியோட வார்டு, வட்டம், மாவட்டம், எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரினு பதவியில இருக்கற வெகுபேர்கிட்ட ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர்னு நிலம் குவிஞ்சு கிடக்குது. அதையெல்லாம் உரிய விலையைக் கொடுத்து, வாங்கி... நிலவங்கியில மொதல்ல சேருங்க. 'இதுக்கு சம்மதம்னா மட்டும்தான் பதவி... இல்லைனா... கோவணத்த இழுத்துக் கட்டிக்கிட்டு வயக்காட்டுல போய் பாடுபடு'னு சொல்லி பத்திவிட்டுருங்க.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்கக் கட்சிக்காரங்ககிட்ட இருந்தே நாலு லட்சம் ஏக்கர் நிலத்தை சுலபமா வாங்கிடலாம். அப்புறம் தி.மு.க- காரங்கக் கிட்ட இருந்து ஏழெட்டு லட்சம் ஏக்கர், காங்கிரஸ்கிட்ட இருந்து 4 லட்சம் ஏக்கர்... மத்தமத்த கட்சிக்காரங்கிட்ட இருந்து சில, பல லட்சம் ஏக்கர்னு சட்டுபுட்டுனு ஒங்க நிலவங்கி... உலக வங்கியைவிட பெருசாகிடும். தொழில் தொடங்க வர்ற, கம்பெனிகளுக்கு இதுல இருந்தே நிலத்தைக் கொடுத்துடலாம். ஒங்களோட நிலவங்கியில இருக்கற மொத்த நிலமும் காலியான பிறகு, தேவைப்பட்டா எங்ககிட்ட வாங்க.

அம்மா... இந்த கவுன்சிலரு, மந்திரி, மாவட்டம் இவங்கக்கிட்ட இருக்கற நிலத்தையெல்லாம் நீங்க கைப்பத்தினா... அவங்க யாரும் கவலைப்பட மாட்டாங்க. ஏன்னா, அவங்களுக்கு வாய்தானே மூலதனம். வாயாலயே வடையைச் சுட்டு வண்டியை ஓட்டிடுவாங்க. ஆனா, என்னைய மாதிரி கோவணாண்டிகளுக்கு நிலம் மட்டும்தான் மூலதனம். அதையும் புடுங்கிக்கிட்டா... புவ்வாவுக்கு லாட்டரிதான்.

அதனால, விவசாயிகளோட நிலங்களை எடுத்துக்கிற மாதிரி இருந்தா... அதுக்கு பதிலா, நில வங்கியில இருக்கற, உருப்படியான, மதிப்புக் குறையாத வேற நிலத்தைக் கொடுக்கணும்கிறதையும் நிலவங்கியோட விதிமுறைகள்ல எழுதி வைங்க. இதுதான் சம விவசாயக் கொள்கை.

உங்களுக்கு 'சமச்சீர்' பிடிக்காம இருக்கலாம். ஆனா, நாங்கள்லாம் சீரோடும், சிறப்போடயும் வாழணும்னா... நாஞ்சொல்றத மனசுல நல்லா ஏத்திக்கிட்டு, உருப்படியானத் திட்டங்களா நிறைவேத்த முயற்சி பண்ணுங்க.

இல்ல நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்தான்னு பிடிவாதம் பிடிச்சா... சமச்சீர் கல்வி விஷயத்துல ஒங்க பேரு டேமேஜ் ஆனது மாதிரியே... விவசாயிங்க விஷயத்துலயும் ரொம்பவே டேமேஜ் ஆகிப்போயிடும். அப்புறம் உள்ளாட்சித் தேர்தல்லயே ஓட ஓட விரட்டி அடிச்சுடுவாங்க, ஜாக்கிரதை!

இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமைவிகடன் 25-08-11

1 கருத்து:

Anand சொன்னது…

// காங்கிரஸ்கிட்ட இருந்து 4 லட்சம் ஏக்கர்..

40 லட்சம் ஏக்கர்?

கருத்துரையிடுக