ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

குக்கூ என அழைத்தது கருங்குயில் ஒன்று.....!

சென்ற வாரம் ஒரு மாலைப்பொழுதில் மரக்கா மலைக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான், என் மனைவி, என் மகள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றோம். என் வாழ்க்கையில் நிகழ்ந்த நிறைய இனிய அனுபவங்களில் இதையும் ஒன்றாகக் கருதுகிறேன். மலையடிவாரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, சுமார் 300 மீ. உயரம் வரை அடர்ந்த காட்டின் வழியாக நடந்து சென்றோம். மாலை ஆறு மணி என்பதால் சுற்றுவட்டாரத்தில் ஆள் அரவமற்றுக் கிடந்தது.மா, தென்னை, சப்போட்டா, வாழை, கரும்பு, கொய்யா என அணி அணியாகத் தோப்புகள் வர, அதைப் பிளந்து அமைக்கப்பட்ட ஒத்தையடிப் பாதை வழியாகத்தான் நாம் மலைக்குப்போக வேண்டும். நம் இடப்புறம் வாய்க்காலில் சலசலத்து நீரோடும். காலை நனைத்தவாறே செல்லலாம். வருடுகின்ற தென்றலும், வானுயர்ந்த மரங்களும்,மயங்கும் சூரியனும், வந்தடையும் காக்கை,குருவிகளும் ஏகாந்த கவிச்சூழலை உருவாக்கின. கருக்கல் நேரம் என்பதால் நாங்கள் மலையடிவாரத்திற்குத் திரும்பினோம். ஏனெனில் திடீரென்று காட்டு மாடுகளோ, ஓநாய்களோ அங்கு வரக்கூடிய சாத்தியம் உண்டு, எனவே அந்த இடத்தை விட்டு அகன்று விடுவது தான் நன்று. 2 மணி நேரத்திற்குப் பின் நாங்கள் திரும்பும்போது, உயர்ந்த பருத்த மரங்களில் நிறைய குருவிகள் கத்தியவாறே இருந்தன. வரும் வழியில் குயில் ஒன்றைக் கண்டேன். மிக நீண்ட இடைவெளிக்குப்பின் குயிலைக் காண்கிறேன். புகைப்படம் பிடிக்க முயலும் போதெல்லாம் அது பறந்து மறைந்து விடுவதும், மீண்டும் மரங்களில் உட்காருவதாகவும் இருந்தது. குக்கூ...குக்கூ என்று கூவியவாறே அது என்னை வழியனுப்பியது. அதன் நெடிய குரலோசை வீடு திரும்பும்வரை செவிகளில் ஒலித்தவாறே இருந்தது.

குயில்கள் அண்டார்டிகா தவிர்த்து உலகெங்கும் வாழ்பவை. ஏறத்தாழ 60க்கும் மேற்பட்ட வகையினங்கள் இவற்றில் உள்ளதன. நம் இந்தியாவில் காணப்படும் குயில்கள் ஆசிய வகையாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. பிரதேசங்களுக்கு ஏற்றவாறு, அங்குள்ள பறவைகளில் சிலவகை, அவைகளின் குரல் ஒலியின் விசேஷத்திற்காக குயில் வகுப்பில் சேர்க்கப்படுகிறது. பொதுவாக குயில்கள் மரங்களில் வாழும் நடுத்தரப் பறவை. பார்ப்பதற்கு கவர்ச்சியற்றே காணப்படும்.இந்தியாவில் குயில்களில் ஆண் சிறியதாக, கறுப்பு நிறத்தோடும், பெண் சற்று பெரிதாக,இறகுகள் பழுப்பு நிறம் கொண்டும் ஆங்காங்கே கறுப்புப் புள்ளிகள் கொண்டும் இருக்கும். குயில்களின் சிறப்பே அதன் குரலோசையும், முட்டை இடும் தன்மையும்தான். குயில்களில் ஆண் மட்டும் குக்கூ...... என நெடிய ஒலியையும், பெண் க்யிக்...க்யிக்....என்று குறைந்த அழுத்தத்தில் இடைவெளி விட்டும் குரலெழுப்புகிறது. இங்கு குரலோசை எதிர்பால் இனத்தைக் கவர்வதற்காகவே எழுப்பப்படுகிறது. பொதுவாக இவை தனிமையில்தான் வாழ்கின்றன. இணை சேரும் காலத்தில் மட்டும் அவை ஒன்று கூடும். ஆண்--பெண் இனச்சேர்க்ககை வருடத்திற்கு ஒருமுறை நடக்கும். ஒரு ஆண் பல பெண்களோடும், ஒரு பெண் பல ஆண்களோடும் உறவு கொள்ளும். வழக்கமான முறையில் பெண் கீழே அமர்ந்தும், ஆண் மேலே இருந்தும் உறவு கொள்ளும். ஒரிரு முறை மட்டுமே உடலுறவு நிகழ்ச்சி நடக்கும். ஆண் இந்த சந்தர்ப்பத்திலேயே தேவையான விந்தைப் பாய்ச்சும்.

குயில்கள் பிரதேசம் சார்ந்தே வாழ்பவை. அவை தங்கள் பிரதேசம் விட்டு, பிற இடங்களுக்குச் செல்வது அரிது. ஆப்பிரிக்கவாழ் குயில்களில் தரையினக் குயில்கள் உண்டு. இவை தரையிலேயே வாழும். புழு, வண்டு, ஓணான் மற்றும் சிறு குருவிகளையும் ஓடி, விரட்டி ,பிடித்துண்ணும். நிமிடத்திற்கு 30 கி.மீ.வேகத்தோடு ஓடும் இவைகளின் உடல் பருத்துக் காணப்பட்டாலும், எடை லேசாகவும், பார்ப்பதற்கு பருந்து போலவும் இருக்கும். தரையிலேயே குழியமைத்து முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கும். இவை பழுப்பு நிறத்தில் காணப்படும்.

இந்தியக் குயில்கள் கொட்டையுள்ள பழங்களை மட்டுமே உண்கின்றன. அதனால், அவை மரங்களிலேயே வசிக்கின்றன.அமெரிக்காவில் வாழும் குயில்கள் சிறு உயிரினங்களை உண்பதோடு, பழங்களையும் உண்ணும்.இவை வெளிர் நிறத்திலும்,நீல நிறத்திலும் காணப்படும். எல்லா வகை குயில்களுக்கும் கண் சிவப்பாகவும், கருவிழியோடு எடுப்பாகத் தெரியும்.குயில்களுக்கான விசேஷ குணம் முட்டையிடுதல். இந்தியாவில் வாழ்பவை காக்கை கூடுகளிலும், இலங்கை, பர்மாவில் வாழ்பவை நாரை அமைத்த நீர்நிலை சார்ந்த கூடுகளிலும், ஆப்பிரிக்கவாழ் மரம் சார்ந்த குயில்கள் தேன் சிட்டுகளின் கூடுகளிலும் தங்கள் முட்டைகளை இடும். ஆப்பிரிக்க தேன் சிட்டுகள், நம் இந்திய தேன் சிட்டுக்களைப் போல் சிறியதாக இல்லாமல், புறா அளவிற்குப் பெரியதாகக் காணப்படும்.

குயில்கள் எந்தப் பறவையின் கூடுகளைத் தேர்ந்தெடுக்கிறதோ, அது போன்ற நிறத்திலேயே முட்டையிடும். காக்கையின் கூட்டிலும் முட்டையிடும்போது பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலும், தேன் சிட்டுகளின் கூட்டில் முட்டையிடும்போது பழுப்பு நிறத்திலும், காணப்படும். இவைகளின் அலகை வைத்தே, இனம் காணமுடியும். கறுப்பு, பழுப்பு, வெளிர் மஞ்சள் என நிற வகை உண்டு. பெண் குயில்கள் முட்டையிடும் முன்பு, தான் முட்டையிடப்போகும் கூட்டைக் கண்காணிக்கும். அங்கு ஏற்கனவே வேறு பறவையின் முட்டையிருப்பின் அவற்றைக் கீழே தள்ளிவிடும். பின் அப்பறவை இல்லாத போது, இது சென்று முட்டையிடும். 2---7 முட்டை வரை இடும். குயில்களின் முட்டை, பிற முட்டைகள் குஞ்சு பொரிக்கும் காலத்திற்கு 3 நாட்கள் முன்பே பொரிந்துவிடும்.

பொரிந்த குஞ்சுகள் கூட்டிலுள்ள மற்ற பறவையின் குஞ்சைப் போலவே குரலெழுப்பும். உருவ அமைப்பிலும் வேறுபாடு காட்டாது. அதே சமயம், பிற இனக் குஞ்சுகளை கீழே தள்ளாது. கூட்டின் உரிமையாளர் இல்லாதபோது, தாய் அல்லது தந்தைக்குயில் பிற குஞ்சுகளைக் கீழே தள்ளிக் கொன்றுவிடும். இவை அதிகமான உணவை உட்கொள்ளும். இதனால் 3 நாட்களில் போதுமான உடல் பருமனை அடையும். உணவுப் பற்றாக்குறையால் பிற குஞ்சுகள் இறந்து விடும். 17 நாட்களில் அக்கூட்டை விட்டு, உரிமைப் பறவைக்குத் தெரியாமல், தனது தாயுடன் பறந்து சென்றுவிடும். இவ்வாறான நிகழ்வுகள் அனைத்தும் பாரம்பரிய கடத்தியாகவே உள்ளன.

48 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த பறவையாக மாறிவிடும். இதன் கால்கள் 4 விரல் கொண்ட விசேஷ அமைப்பு கொண்டவை. முன்னோக்கி 2 விரலும், பின்னோக்கி 2 விரலும் இருக்கும். இவற்றின் நகம் மிகக் கூர்மையானது. சிறு பூச்சிகளைப் பிடிக்க பேருதவி புரிகிறது. கம்பளிப்பூச்சி போன்ற முடியுள்ள பூச்சிகளை உண்ணும் ஒரே பறவையினம் இவை. பிடித்த பூச்சியை, இரண்டு மூன்றாக கிழித்து எறிந்து விடும். பல சமயம் ஓடுள்ள உயிரினங்களான சிறு நண்டு, வண்டு, நத்தைகளைத் தனது அலகின்கீழ் புறத்தால் ஓங்கித் தட்டும். அதிக பலத்தோடும் அழுத்தத்தோடும், தாக்குதல் நடத்தி அதன் ஓட்டினை உடையச் செய்துவிடும்.

இவை பொதுவாகவே காலைப் பொழுதைவிட இரவு நேரங்களில் மட்டுமே அதிக ஓசை எழுப்பும் என்கிறது பறவையியல் குறித்த ஆய்வுகள். இந்திய குயில்களின் இரவு ஓசையைப் பற்றிய குறிப்புகள் தெரியவில்லை. நம் தமிழகத்தில் குயில்களை விட , செம்போத்துப் பறவைகளே அதிகம் ஓசையை எழுப்புவதாகவும், ரம்யமான அந்த ஒலி கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என்றும், பல சமயம்,ஆண்குயிலின் அழைப்பை ஒத்திருக்கும் என்றும் கூறுகிறார் பறவையியல் நிபுணரான ரமணி.நானும் இக்கட்டுரை எழுதும்வரை அதைக் குயிலின் ஓசை என்றே நினைத்திருந்தேன்.

உத்தரப் பிரதேசத்தில் குயில்களைக் கூண்டில் அடைத்து வளர்க்கும் பழக்கம் சில வருடங்களுக்கு முன்வரை இருந்ததாம்.மலைக்காடுகள் உள்ள மாநிலங்களான மேகாலயா, சிக்கிம் போன்றவை அவற்றின் கறியை விசேஷ உணவாக,திருவிழா காலங்களின் பரிமாறுகின்றனர். இலங்கையில் வீடு கட்டும்முன் அல்லது புது மனை புகுவிழாவின் முன், குயில்கள் கூவினால்,அது நல்லசகுனம் என்றும் "கோகிலா தேவியே" தங்கள் இல்லத்திற்குள் குடியேறப் போவதாக நம்புகின்றனர்.

வனங்களின் அழிவு, இன்று பல பறவைகளைப் போலவே இதன் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அழிந்து வரும் பறவையினங்களில் ஒன்றாக, .நா.சபை அறிவிக்காவிட்டாலும் ,இன்னும் சில வருடங்களில் இவை அழிந்தே போகும் சாத்தியம் அதிகமுள்ளது...!?

-எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா

நன்றி: உயிர்மை.காம்

புதன், ஆகஸ்ட் 24, 2011

காட்டுயிர் பாதுகாவலர் ஜே.சி.டேனியல் மறைவு


முதுபெரும் இயற்கையியலாளரும் காட்டுயிர் பாதுகாவலருமான ஜே.சி.டேனியல் (84), மும்பை மாஹிம் மருத்துவமனையில் ஆகஸ்ட் 23ந் தேதி காலமானார். புகழ்பெற்ற பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society - BNHS) துணைத் தலைவராக அவர் செயலாற்றி வந்தார்.

ஜீவநாயகம் சிரில் டேனியல் ( - ஆகஸ்ட் 23, 2011) என்ற முழுப் பெயர் கொண்ட இயற்கையியலாளரான அவர் ஜே.சி. என்றும் அறியப்படுகிறார். இந்திய பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள அவர், அவற்றைப் பற்றி நூல்களை எழுதியுள்ளார். யானைகள், பெரியபூனை (புலி) குடும்ப உயிரினங்களை பாதுகாப்பதில் தீவிரமாக இருந்து வந்தார்.

இளம் வயதிலேயே இயற்கை மீது நேசம் கொண்டார். இரவில் நரிகள் ஊளையிடுவதும், அவற்றுடன் ஆந்தைகளின் அலறலும் அவரது குழந்தைப் பருவ நினைவுகளாக இருந்துள்ளன. விலங்குகளின் மீதான அவரது தாயின் பாசமும், அவரது தந்தையின் கல்வித்துறை பாண்டித்யமும் அவரை திருவனந்தபுரம் பொது நூலகத்துக்குச் செல்லத் தூண்டியுள்ளன. இளம் வயதில் இயற்கை பற்றி அறிய வேண்டும் என்ற அவருடைய ஆவலுக்கு அங்கிருந்த ஆப்பிரிக்க காட்டுயிர்கள் தொடர்பான நூல்கள் தீனி போட்டன.

இளைஞராக இருந்தபோது, உலகப் புகழ்பெற்ற பறவை நிபுணர் டாக்டர் சாலிம் அலியால் உத்வேகம் பெற்ற அவர், சாலிம் அலி இணைந்திருந்த பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தார். பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியைத் தொடங்கிய அவர், கடைசி வரை அந்த அமைப்புடன் இணைந்து பணிகளைத் தொடர்ந்து வந்தார். 1950லேயே அந்தக் கழகத்தின் காப்பாளராக பொறுப்பேற்ற அவர், அந்த நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் பின்னர் மாறினார். 1991இல் ஓய்வு பெற்ற பிறகு, அந்தக் கழகத்தின் கௌரவ உறுப்பினர், கௌரவ செயலராக இருந்து வந்தார்.

தி புக் ஆஃப் இந்தியன் ரெப்டைல்ஸ் (இந்திய ஊர்வன), எ செஞ்சுரி ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி அண்ட் கன்சர்வேஷன் இன் டெவலப்பிங் கன்ட்ரீஸ் (வளரும் நாடுகளில் ஒரு நூற்றாண்டு இயற்கை வரலாறும், பாதுகாப்பும்), தி புக் ஆஃப் இந்தியன் ரெப்டைல்ஸ் அண்ட் ஆம்பிபியன்ஸ் (இந்திய ஊர்வன மற்றும் நீர்நில வாழ்விகள்), எ வீக் வித் எலிஃபன்ட்ஸ் (யானைகளுடன் ஒரு வாரம்), சமீபத்தில் பேர்ட்ஸ் ஆஃப் இந்தியன் சப் கான்டினன்ட் எ ஃபீல்ட் கைடு (இந்திய துணைக்கண்ட பறவைகள் கள வழிகாட்டி) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்தியன் ஒயில்ட்லைஃப் இன்சைட் கைட்ஸ் என்ற நூலில் சிங்கங்கள் பற்றிய பிரிவை எழுதியுள்ளார். சாலிம் அலியின் நூற்றாண்டு 1996இல் கொண்டாடப்பட்டதை ஒட்டி, அவர் எழுதிய தி புக் ஆஃப் இந்தியன் பேர்ட்ஸ் (இந்திய பறவைகள்) புத்தகத்தை திருத்தி எழுதி 12வது பதிப்பை டேனியல் கொண்டு வந்தார்.

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ஆய்விதழின் நிர்வாக ஆசிரியராக இருந்ததுடன், ஹார்ன்பில் என்ற இதழையும் அவர் தொடங்கினார். அந்த இதழ் 2001ஆம் ஆண்டு வெள்ளிவிழாவைக் கொண்டாடியது. ஆர்வலர்களின் உதவியுடன் மும்பை பகுதியில் உள்ள பழைய மரங்களைப் பற்றி ஆவணப்படுத்தும் முயற்சியை தொடங்கி வைத்தார்.

இந்திய இயற்கையியல், காட்டுரியல் துறைக்கு அவரது பங்களிப்பு மிகப் பெரியது. அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமை.

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

ஒற்றைக் கொம்பு... உதைத்தால் வம்பு!

தெங்குமரஹடா ராமசாமி... மேற்குத் தொடர்ச்சி மலையின் தனிக் 'காட்டு’ ராஜா! மாயாறு பள்ளத்தாக்கு, தெங்குமர ஹடா, முதுமலை, மசினக்குடி, தலமலை, தாளவாடி எனச் சுமார் 1,000 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட வனத்தில், யானை ஆராய்ச்சியாளர்களுக்கு இவர் தான் வழிகாட்டி. அடர்ந்த வனத்தில் அவரைச் சந்தித்தேன்.

''அப்பாவுக்கு வேட்டையாடுறதுதான் தொழில். அதனால காடே கதின்னு கிடப்போம். அப்பலாம் வேட்டைக்குத் தடை கிடையாது. நாலு வயசுலயே 10 வேட்டை நாய்களைக் கூட்டிட்டு வேட்டைக் குப் போயிருக்கோம். கடமான், உடும்பு, காட்டுப் பன்னி, அலுங்கு (எறும்பு தின்னி), மந்தியெல்லாம் வேட்டையாடிச் சாப்பிடுவோம். நேரம் இருந்தா வீடு திரும்புவோம். இல்லேன்னா, ஏதாவது ஒரு மரத்துல மேல ஏறிப் படுத்திருவோம்.

பறவையியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சிவகணேசன் என்னைத் தேடி வந்தார். 'மாசம் 1,000 ரூபா தர்றேன். என் கூட வர்றியா’னு கேட்டார். காட்டு யானைங்க இருக்கிற இடத்துக்கு அவரைக் கூட்டிட்டுப் போகணும். இதுதான் என் வேலை. அவரை ஆனைக்கட்டி, முதுமலை, சிறுயூர், தெங்குமரஹடா காட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனேன். அங்கே மறைவா இருந்து மணிக்கணக்கில் யானைகளைப் பத்திக் குறிப்பு எடுத்தார்!'' என்பவர் சின்ன இடைவெளி கொடுத்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் பேச்சைத் தொடர்கிறார்.

''காட்டுக்குள் போறப்ப பேசக் கூடாது. காதுகளைக் கூர்மையா வெச்சுக்கணும். பழுப்பு, பச்சை நிற உடுப்பைத்தான் உடுத் தணும். நான் முன்னாடி போவேன். மத்தவங்களை 10 அடி தூரம் பின்னாடி வரச் சொல்வேன். ஒருவேளை, யானை துரத்தினா, அதை என் பின்னாடி வரவெச்சு அவங்களைத் தப்பிக்கவைக்கத்தான் இந்த ஏற்பாடு. காட்டுக்குள்ளே நுழைஞ்சதுமே யானை எங்கே இருக்குன்னுசுலபமா கண்டுபிடிச்சிருவேன். யானைக்குனு தனி வாடை இருக்கு. அதை வெச்சே கண்டு பிடிச்சுரலாம். அது போக, மரத்தை ஒடிக் குற சத்தம், மூச்சு விடுற சத்தம், நடக்குற சத்தத்தைவெச்சு, எத்தனை யானைங்க இருக்குது, கொம்பு யானை (ஆண்) எத்தனை, பெண் யானை எத்தனை, குட்டி எத்தனைன்னு ஓரளவு கணிச்சிருவேன்.

யானைங்க நம்மைப் பார்த்திருச்சுன்னா, தும்பிக்கையைத் தூக்கி, காதை விறைக்கும். உடனே, எதிர் திசையில நாம மெதுவா நகர்ந்துடணும். மீறி அங்கேயே இருந்தோம்னா, காலைத் தரையில ஓங்கி உதைக்கும். அப்படிப் பண்ணினா, நம்மைத் தாக்கப் போகுதுன்னு அர்த்தம். உடனே ஓடிரணும். யானை எடுத்த எடுப்புலயே 40 கி.மீ. வேகத்துல ஓட ஆரம்பிக்கும். அப்படித் துரத்த ஆரம்பிச்சதுன்னா, விசாலமான பாதையில ஓடாம புதரைப் பார்த்து ஓடணும்.

ஒரு முறை ரெண்டு ஆராய்ச்சியாளர்களை அழைச்சுட்டு பவானி சாகர் - காராச்சிக்கொறை காட்டுல யானைகளைத் தேடிப் போனேன். திடீர்னு யானை பிளிர்ற சத்தம் கேட்டுச்சு. 'யானை நம்மைக் கவனிச்சுடுச்சு’னு சொல்லிட்டு இருக்கும்போதே, ஒரு கொம்பு யானை நேருக்கு நேரா துரத்த ஆரம்பிச்சது. நான் அவங்க ரெண்டு பேரையும் புதர்ல தள்ளிவிட்டுட்டு, பாதையில் ஓட ஆரம்பிச்சேன்.

ஏன்னா, யானைக்குக் கண் பார்வை குறைவு. புதர்ல இருக்குறவங்களைவிட, பாதையில தெளிவா தெரியிற உருவத்தைக் குறிவெச்சு ஓடி வரும். நான் நினைச்ச மாதிரியே அவங்களை விட்டுட்டு என்னைத் துரத்த ஆரம்பிச்சது. ஓடிட்டு இருக்கும்போதே உடைஞ்சுகிடந்த கண்ணாடி பாட்டில் துண்டு ஒண்ணு என் கால்ல குத்திடுச்சு. சுருண்டு விழுந்துட்டேன். யானை நாலு எட்டு தூரத்துல வந்து நின்னுருச்சு. உடனே, பக்கத்துல கிடந்த பாட்டிலை எடுத்துப் பாறையில் அடிச்சு உரசுனேன். ஆக்ரோஷமா வந்த யானை சடக்குனு திரும்பி ஓடிப் போயிருச்சு. பொதுவா, கருங்கல்லைத் தட்டுற சத்தம் கேட்டாலோ, அரிவாளைக் கல்லுல உரசுற சத்தம் கேட்டாலே யானைகளுக்கு ஆகாது. அப்படிச் செஞ்சா, யானை பயந்து ஓடிரும்னு எதுவும் நிச்சயம் கிடையாது. ஆனா, அது நம்ம அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விஷயம். புகையைவெச்சு யானையை விரட்டலாம். பல தடவை பீடியைப் பத்தவெச்சே யானைகள்கிட்ட இருந்து தப்பிச்சிருக்கேன்.

ஒரு சமயம் 'மாயாறு பக்கமா ஒரு யானைக்கு மதம் பிடிச்சு இருக்கு. அதைக் கண்காணிச்சுத் தகவல் சொல்லுங்க’னு வனத் துறையினர் சொல்லி அனுப்புனாங்க. மதம் பிடிச்ச யானைக்குன்னு தனி வாடை உண்டு. ஒரு பெரிய புதர் பக்கத்துல அந்த வாடை அடிச்சது. புதரை விலக்கிப் பார்த்தா, ரெண்டு அடி தூரத்துல யானை நின்னுட்டு இருக்கு. என்னைப் பார்த்ததும் தும்பிக்கையைத் தூக்கி என் தலை முடியைப் பிடிச்சு இழுத்துச்சு. அப்படியே குனிஞ்சு ஓடினேன். தலையில கொத்து முடியைக் காணோம். அரை மணி நேரமா காட்டுக்குள் ஓடிக்கிட்டே இருக்கேன். அந்த யானை விடாமத் துரத்துது. மாயாறு வந்ததும் குதிச்சிட்டேன். உள் நீச்சல் அடிச்சிட்டே கொஞ்ச தூரம் தள்ளிப் போய் எழுந்து பார்க்குறேன்... நான் ஆத்துல குதிச்ச இடத்துல யானை இறங்கி தும்பிக்கையால துழாவிட்டு இருந்தது. அந்த ராஜாவுக்கு அவ்வளவு கோபம். அன்னிக்கு நான் தப்பிச்சது என் முன்னோர்கள் செஞ்ச புண்ணியம்!

சுரேந்திர ராஜான்னு ஒரு ஃபாரஸ்ட் கார்டை ஒத்தைக் கொம்பு யானை மிதிச்சுக் கொன்னுடுச்சு. 'அது அடிக்கடி ரோட்டுப் பக்கம் வருது. அதைக் கண்காணிச்சு காட்டுக்குள் திசை திருப்பிவிடணும்’னு என்கிட்ட சொல்லி அனுப்பினாங்க. நாலு பசங்களைக் கூட்டிக்கிட்டுப் போனேன். வாட்ச்சிங் டவர் பக்கம் காரை நிறுத்திட்டு உள்ளே போனோம். நான் யானையை மோப்பம் பிடிச்சிட்டேன். அதுவும் என்னை மோப்பம் பிடிச்சுருச்சு போல. திடீர்னு பெரிய சலசலப்பு. எங்களைச் சுத்தி ஏழெட்டு யானைங்க ஆங்காங்கே தும்பிக்கை தூக்குதுங்க. தலை தெறிக்க ஓடி ரோட்டுக்கு வந்தோம். அங்கே 10 யானைங்க காரைச் சுத்தி நிக்குது. நெருப்பு மூட்டி எல்லா யானைகளையும் விரட்டித் தப்பிச்சு வந்தோம்.

பல தடவை என்னை யானைங்க துரத்தினாலும் எனக்கு அதுங்க மேல கோபம் எதுவும் கிடையாது. சொந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைஞ்சா, யாருக்குத்தான் கோபம் வராது? அதுங்க செய்யிறதுதான் சரி. முன்னாடி நான் வேட்டையாடி விலங்குகளைக் கொன்னதை நினைச்சா, இப்போ வருத்தமா இருக்கு. அதுக்குப் பிராயச்சித்தமா மரக் கடத்தல், வேட்டை கும்பலைப்பத்தி தகவல் கொடுத்து, காட்டைப் பாதுகாத்துட்டு வர்றேன். ஒண்ணு மட்டும் நிச்சயம்... காடும் விலங்கு களும் நல்லா இல்லைன்னா, நாம நல்லா இருக்க முடியாது. நம்மளால காடுகளை உருவாக்க முடியாது. பாதுகாக்கத்தான் முடியும். காடுகளைப் பாதுகாக்க நாம எதுவும் செய்ய வேண்டாம். சும்மா இருந்தாலே போதும். காடும் விலங்குகளும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும்!''- சுற்றிலும் நேசத்தோடு பார்வையைப் படர விட்டபடி முடிக்கிறார் ராமசாமி!

-டி.எல்.சஞ்சீவிகுமார்

நன்றி: ஆனந்தவிகடன், 24-08-2011

புதன், ஆகஸ்ட் 17, 2011

சிறுநுண் எறும்பின் சூழல் - சு.தியடோர் பாஸ்கரன்

பணி ஓய்வுகாலத்தின் பெரிய அனுகூலம் காலையில் அவசரமாகப் புறப்பட்டு வேலைக்கு ஓட வேண்டியதில்லை. மனம்போனபடி நடைப்பயிற்சி போகலாம். எங்கள் வீட்டருகிலேயே இருக்கும் வயற்புரங்கள், கொய்யாத் தோப்பு, ஏரிக்கரை இவைதான் நான்போகும் தடங்கள். நடக்கும் பாதையில் நான் அடிக்கடி பார்ப்பது சாரிசாரியாக எறும்புகள் எங்கோ போய்க்கொண்டிருப்பது. காலையில் மட்டும்தான் இதைப் பார்க்க முடியும். சில இடங்களில் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட வரிசையில் போய்க்கொண்டிருக்கும். சிலசமயம் ஒரு தனிக்குழுவாகவும் நகர்ந்துகொண்டிருக்கும். இவைகளை மிதித்துவிடாமல் எச்சரிக்கையாக சென்றபோதிலும், ஒருநாளும் நான் உட்கார்ந்து அவைகளை உன்னிப்பாக கவனித்ததில்லை. அண்மையில் கிடைத்த எறும்பு பற்றிய ஒரு நூலை படிக்கும் வரை.

பெங்களூர்வாசிகளான அஜய் நரேந்திராவுக்கும் சுனில் குமாருக்கும் எறும்புகள் மேல்தனி அக்கறை. கடந்த நூற்றாண்டில் தேனி, குளவி போன்ற சிற்றுயிர்களின் சமூக வாழ்க்கையைப் பற்றிய ஆய்வுகள் (Sociobiology) பலவிவரங்களைதந்து, ஒரு புதிய ஆய்வுதளத்தை திறந்துவிட்டிருக்கின்றன. இதில் எறும்புகள் பற்றிய ஆய்வு தனித்துறையாக வளர்ந்திருக்கின்றது. புதியபுதிய தொழில்நுட்பக்கருவிகளின் வரவும், கம்ப்யூட்டரின் துணையும், டிஜிட்டல் போட்டோகிராபியும் இத்துறையில் பலர் ஆர்வம் கொள்ள செய்திருக்கிறது. துல்லியமாகப் படமெடுக்கக்கூடிய காமிராக்களின் வரவால் சிற்றுயிர்கள் பற்றிய கவனிப்பு அதிகரித்திருக்கின்றது.

அஜயும் சுனிலும் எறும்புகளைப் பற்றி தகவல் திரட்டும்போது, இந்தப் பொருளில் இதுவரை 1903இல் பிரிட்டிஷ் இந்தியாவில் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான கர்னல் பிங்காம் எழுதிய ஒரே ஒரு புத்தகம்தான் வந்திருக்கின்றது என்ற விவரத்தைக் கவனித்தார்கள். ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகிவிட்டது. இன்னொரு நூல் எழுதினால் என்ன என்று கேட்டதின் பலன்தான் நூற்றிஐம்பது வண்ணப்படங்களுடன்கூடிய இந்த அருமையான 2நூல். நண்பர்களிடமும், காட்டுயிர் ஆர்வலர்களிடமும் நிதிதிரட்டி அவர்களே வெளியிட்டுள்ளனர். கடந்த நூறாண்டுகளில் இந்தத் துறையில் நடந்த ஆய்வுகளின் சாராம்சத்தை உள்ளடக்கியது இந்நூல். அத்துடன், எறும்புகளை இனங்கண்டுகொள்ள தனித்தனி அடையாளக் குறிப்புகளும், படத்துடன், இடம் பெற்றிருக்கின்றன. இருபத்து வருட உழைப்பு.

இவ்வுலகில் ஒரு கடுகளவிலிருந்து நான்கு செ.மீ அளவுள்ள ஏறக்குறைய 12000 வகை எறும்புகள் உள்ளன. அவை எல்லா இடங்களிலும் வியாபித்து, பரவி இருக்கின்றன. அதிலும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் எறும்புகள் இல்லாத இடமே இல்லை எனலாம். மழைக்காடுகளில் மரத்தின் விதானங்களிலும், தரைக்கு அடியில் வளைகளிலும், மக்கிப்போகும் மரக்கட்டைகளிலும் என எறும்புகளுக்குப் பலவித வாழ்விடங்கள். காட்டுத்தரையில் கிடக்கும் இலைக்குவியல்களில் வசிக்கும் எறும்புவகைகளும் உண்டு. தரைக்கடியில் உள்ள காலனிக்கு ஒரு கோட்டை போல வட்டமான மண்ணாலான வாசலைக் கட்டும் எறும்புகள் உண்டு. புள்ளினங்கள் போலவே, காட்டின் வெவ்வேறு சூழல்களில் - மரப்பொந்துகளில், புதர்களில் - வாழும் விதவிதமான எறும்பினங்கள் ஒரு காட்டின் செழுமைக்கு ஒரு குறியீடு. அதிலும் தாவரங்களுக்கும் எறும்புகளுக்கும் நெருக்கம் மிகுதி. சில எறும்பினங்களுக்கு மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதுடன் விதைகளைப் பரப்புவதிலும் பங்கு உண்டு. பறவைகள் போன்ற பல உயிரினங்களுக்கு எறும்புகள் இரையாகின்றன. இதையே பிரதான இரையாகக் கொள்ளும் ஒருவிலங்கு, உடும்பு போன்ற விலங்கு. இதன் ஆங்கிலப்பெயர் Ant-eater. அவ்வப்போது கூவம் நதிக்கரையில் பிடிபட்டு இதன்படம் ‘அதிசயவிலங்கு’ என்ற தலைப்பில் தினத்தந்தியில் வெளியாவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

தேனிக்களின் சமூக அமைப்பு போன்றே எறும்புகளிலும் ராணி, வேலைக்காரன், சிப்பாய் என தனித்தனி வேலை செய்யும் எறும்புகள் உள்ளன. நாம் சாதாரணமாக வெளியில் காண்பவை எல்லாமே பெண் வேலைக்கார எறும்புகளே. ஆண் எறும்புகளைக் காண்பதரிது. காலனியில்தானிருக்கும். கூட்டையும் உணவு சேகரிப்பையும் பாதுகாப்பது சிப்பாய்களின் வேலை. ஒரு காலனிக்கும் மற்றொன்றிக்கும் போர்மூள்வதும் உண்டு. சில இனங்கள் அடிமை எறும்புகளையும் உருவாக்கி, காலனிக்கு வேண்டிய வேலைகளை எல்லாம் இவைகளைச் செய்யவைக்கின்றன.

மற்ற உயிரினங்கள் சிலவற்றுடன் சேர்ந்து எறும்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்று நூலாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஒரு எறும்பினம் கூடு கட்டுவதற்கெனவே வங்கு போன்ற இடத்தை தண்டின் நடுவே உருவாக்கிக்கொள்ளும் மரமொன்று இருக்கின்றது. அதுபோலவே, தமிழகக் காடுகளில் இலைகளைக் கொண்டு மரங்களில் ஒரு பலூன் போல, கூடுகட்டும் எறும்பினம் உண்டு. எச்சிலுடன் இலைகளைமென்று, ஒரு பசையை உருவாக்கி பல அறைகளுடைய இக்கூட்டைக் கட்டுகின்றன. மரத்தில் தூக்கணாங்குருவி கூடுபோல், கால்பந்து அளவில் தொங்கும் இதில் சிவப்புமரங்கொத்தி (Rufous Woodpecker) ஒரு கூட்டை உருவாக்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றது. அதிசயம் என்னவென்றால் இந்த முட்டைகளையோ, அதிலிருந்து பொரிக்கும் குஞ்சுகளையோ எறும்புகள் ஒன்றும் செய்வதில்லை. இந்தப் பிணைப்பினால் எறும்புகளுக்கும், மரங்கொத்திக்கும் என்ன நன்மை என்பது பறவையியலாளர்கள் மத்தியில் ஒரு புதிராகவே இருக்கின்றது. இந்த மாதிரியான ஒரு எறும்புக் கூட்டில் மரங்கொத்தி தொத்திக் கொண்டிருப்பதை நான் முதுமலைக்காட்டில் பார்த்ததுண்டு. தாவரங்களில், அதிலும் ரோஜா செடியில் காணக்கூடிய aphid ஒட்டுப் பூச்சிசுரக்கும் பால் போன்ற திரவத்தை எறும்புகள் உட்கொள்கின்றன. ஆகவே எறும்புகளின் பசு என்று இந்தப்பூச்சி குறிப்பிடப்படுகின்றது.

வேதியல் எறும்புகளின் வாழ்வில் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. ஊர்ந்து செல்லும்போது அவை வகையான வேதியல் தடயத்தை விட்டுச்செல்கின்றன. இதைத் தொடர்ந்துதான் மற்ற எறும்புகள் சாரிசாரியாக ஊர்கின்றன. கவனித்துப் பார்த்தால் அவை நேர்கோட்டில் போகாமல், வளைந்து வளைந்து செல்வது தெரியும். எறும்புக்காலனியில் இவை ஒரு நெடியைப் பரப்பி அபாய அறிவிப்பை விடுக்கின்றன.

எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, ஒவ்வொரு எறும்பையும் மோந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச்சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்லவிடுகின்றது எவ்வாறு தேனீயின் நடனத்திலிருந்து மனிதர் சில அறிவியல் உண்மைகளை கண்டுகொண்டார்களோ அதேபோல எறும்புகளிடமிருந்தும் பலபாடங்களை மனிதர் கற்றுக் கொள்ள முடிகின்றது. உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் முக்கியமானது. தாங்கள் சேர்த்துவைக்கும் உணவில் பூசனம் பூத்துவிடாமலிருக்க இவை ஒருவேதியல் கூறைப் பயன்படுத்துகின்றன. இதைப்பார்த்து மனிதர்களும் பாடம் கற்றுள்ளனர், அந்த வேதியல்கூற்றை தனிப்படுத்தி, அதன் இயல்பைக் கண்டறிந்த பின்னர், மருந்து தயாரிப்பில் இன்று அது பயன்படுத்தப்படுகின்றது. எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக ஒரு அகநானூற்றுப் பாடல் கூறுகின்றது.

நமது பழமொழிகளிலும், நாட்டுப்புறவியலிலும் புராணங்களிலும் எறும்புகள் அவ்வவ்போது தோன்றுகின்றன. திருச்சிக்கருகே உள்ள திருவெறும்பூர் சிவாலயத்தின் கதையில் எறும்பிற்குச் சிறப்பிடம் உண்டு. அசுரர்களுக்குப் பயந்த தேவர்கள், அவர்கள் கண்களிலிருந்து தப்ப எறும்பு உருவெடுத்து தினமும் வரிசையாக ஊர்ந்து அந்தப்பாறையின் உச்சிக்குச் சென்று சிவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தேவர்களின் அன்பால் நெகிழ்ந்த சிவன் எறும்பேஸ்வரன் எனும் பெயரை ஏற்றுக்கொண்டு தேவர்களுக்கு அருள்பாலித்ததாக ஸ்தலபுராணம் கூறுகின்றது. அதே போல திருவானைக்கோவில் சிவன் கோயிலில் லிங்கத்தை சிலந்தி வழிபட்டதாக ஐதீகம்.
*புறம்: 173:6-7

On A Trial with Ants. A Handbook of Ants
Of Peninsular India. By Ajay Narendra
And Sunil Kumar. 2006. Bangalore

நன்றி: உயிர்மை, ஜூலை 2011

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

''வைகை... இனி, மதுரையைத் தாண்டாது!''

''இன்னும் கொஞ்ச ஆண்டுகளிலேயே... 'தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் வைகை என்ற ஆறு ஓடியது... அதில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது' என்று நம்முடைய குழந்தைகள் வரலாற்றுப் பாடத்தில் பாடம் படிக்கும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது வைகை. இதற்குக் காரணம்... வைகையின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக இருக்கும் மேகமலை மொட்டை அடிக்கப்படுவதுதான்!'' என்று அதிர்ச்சிச் செய்தி சொல்கிறார்கள்... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.


மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றின் மூலம் பாசனம் பெற்று வந்த ஆயிரக்கான ஏக்கர் நிலங்கள் வறட்சியில் சிக்கியிருக்கின்றன. இதன் காரணமாக, வைகை அணையைத் தூர் வார வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படவே, கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்ற நிலைக்குழு அணையை நேரில் ஆய்வு செய்தது (இதுகுறித்து பசுமை விகடன் ஜூலை 10-ம் தேதியிட்ட இதழில் செய்தி வெளியாகியிருந்தது). இதையடுத்து, அணையைத் தூர்வாரி பாசனப் பரப்பை அதிகரிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில்தான், 'வைகை... வரலாறு...' என்று திகில் கிளப்புகிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இந்த விஷயம் பற்றி வெளியில் பேசினாலே, அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், தங்களின் முகம் மறைத்தே நம்மிடம் பேச முன்வந்தனர், அந்தச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

''வைகை உற்பத்தியாகும் மேகமலை 42 ஆயிரம் ஹெக்டேர் பரப்பரளவு கொண்டது. இதில் 1,700 ஏக்கர் பட்டா நிலங்கள். இதில் 23 தனியார் எஸ்டேட்கள் உள்ளன. இதில்லாமல் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பல தரப்பினரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் முன்பு பஞ்சம் வந்த சமயத்தில் பட்டினிச் சாவுகளைக் குறைப்பதற்காக வருசநாடு மலையில் மக்களை குடியேற அனுமதித்தது அரசு. அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு கூடிக்கொண்டே போனதன் விளைவுதான் இது. தற்போது, வனச் சரணாலயமாக மேகமலை அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிய ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பழைய ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த அரசு ஆர்வம் காட்டுவதில்லை.

மேகமலையில் வனப்பகுதி எது... அரசுப் புறம்போக்கு நிலம் எது என்று பிரித்துக் காட்டக்கூடிய நில அளவைப் படத்தை இதுவரை வருவாய்த்துறை தயார் செய்யவே இல்லை. சப்-டிவிஷனும் செய்யவில்லை. அதனால் வனப்பகுதிக்குள் வருவாய்துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்களை சில எஸ்டேட் உரிமையாளர்கள் ஆண்டாண்டு காலமாக வெட்டி வருகின்றனர். அதனால்தான் வைகையின் மூலாதாரமான மேகமலை வறண்டு வருகிறது. சூரியனே தெரியாத அளவுக்கு எப்போதும் மேகங்கள் சூழ்ந்திருந்ததால்தான் இதற்கு மேகமலை என்றே பெயர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மலைப்பகுதியில் மொட்டை வெயில் அடித்து வருகிறது. இதே நிலை நீடிக்குமானால்... வைகை ஆறு மதுரையைக் கடப்பது சந்தேகமே'' என்று கவலை பொங்கச் சொன்னார்கள்.

வருவாய்த் துறையிலிருக்கும் சிலரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''சரியான நில அளவைப் படம் இல்லாததால் கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள 'அ’ பதிவேட்டில் ஆறு, ஆற்றுப் புறம்போக்கு, காடு, கரடு, மேய்ச்சல் தரிசு, வனப் புறம்போக்கு, பட்டா நிலம் என மொத்தமாக 1,400 ஏக்கர் நிலம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவை எந்தெந்த இடத்தில் உள்ளன என்பது தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை. இதனால் வைகையின் நீராதாரமாக இருக்கும் சிறு சிறு ஆறுகளின் புறம்போக்கில் வளர்ந்துள்ள வேங்கை, அத்தி, மா, பலா, தோதகத்தி... எனப் பல வகை மரங்களை எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களுடையதாக நினைத்து ஆண்டாண்டு காலமாக வெட்டி வருகின்றனர். தேனி மாவட்ட வருவாய்துறையினரிடம் மரம் வெட்ட அனுமதி வாங்குவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ரூபாயை லஞ்சமாக அள்ளிக் கொடுக்கிறார்கள். அதனால் நில அளவை விஷயத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. அரசின் கவனத்துக்கும் இந்த விஷயத்தைக் கொண்டு செல்வதில்லை'' என்று உண்மை நிலையை உடைத்துப் போட்டார்கள்.

தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவியிடம் இதுகுறித்து கேட்டபோது, ''மேகமலை வனப்பகுதியில் சப்-டிவிஷன் செய்யவில்லை என்பது உண்மைதான். அதனால்தான், மலைப்பகுதியில் நில அளவை செய்து புல வரைபடம் தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று சொன்னார்.

அளவெடுப்பதோடு நில்லாமல்... ஆக்கிரமிப்புகளைத் தடுத்து, மரங்கள் அழிப்பையும் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வைகையை யாராலும் காப்பாற்ற முடியாது!

- இரா.முத்துநாகு

நன்றி: பசுமைவிகடன் , 25-08-11

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

'அரசியல்வாதிகள் நிலத்தை அள்ளுங்க... விவசாயிகள் நிலத்தைத் தள்ளுங்க...'

முதலாம் புரட்சித் தலைவி, 'இரண்டாம் பசுமைப் புரட்சி'யின் தாய், மூன்றாம் முறை முதல்வராகியிருக்கும் தங்கத் தாரகை, முப்பத்து முக்கோடி தேவர்களும் அரண்டு மிரண்டு வணங்கும் அற்புத அம்மா... ஸ்ரீரங்கத்து ரங்கநாயகி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மறுக்கா ஒருவாட்டி வணக்கம் சொல்லிக்கிறான் கோவணாண்டி.

உங்களுக்கு இருக்கற டென்ஷன்ல... நானெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஆனாலும், அடுத்த அஞ்சி வருஷத்துக்கு ஒங்கக் கிட்டதானே எதையுமே ஓதியாகணும். ஏற்கெனவே ஆட்சியில இருந்த ஐயாகிட்டயும் இப்படித்தான் நமக்கு ஏகப்பட்ட வம்பு, வழக்கு. ஆனா, அதுக்கெல்லாம் ஐயா பெருசா அலட்டிக்கிட்ட மாதிரி தெரியல. பாவம், அவருக்கு ஆயிரத்தெட்டு பிக்கல்... பிடுங்கல்! சொந்த மனுஷ, மக்களெல்லாம் ஜாஸ்தி! அதனால எங்க விஷயமெல்லாம் அவ்வளவா அவரோட கவனத்துக்கே போகல. ஆனா, 'தமிழக மக்களைப் பத்தி மட்டுமே முழுநேரமும் சிந்திக்கற ஆளு நான்'னு நீங்களே மேடை போட்டு முழங்கியிருக்கீங்க. அந்த நம்பிக்கையிலதான் ஒங்களுக்கு இந்தக் கடுதாசி!


பட்ஜெட்டுல சில பல நல்ல திட்டங்களைச் சொல்லியிருக்கீங்க. இதுவே, பட்ஜெட் போடுறதுக்கு முன்ன எங்க ஆளுங்க நாலு பேரைக் கூட்டி வெச்சி ஆலோசனை நடத்தியிருந்தா... நிஜமாவே எங்களுக்கு பலன் கொடுக்கற இன்னும் நாலு திட்டங்களையும் போட்டிருக்கலாம். வயக்காட்டுல இறங்கி நிக்கறவனுக்கு வலி தெரியுமா... இல்ல, கோட்டு சூட்டு ஆபீஸருக்கு வலி தெரியுமா?

சரி விஷயத்துக்கு வாரேன். ஒங்க நிதி மந்திரி... 'பணிவு’ பன்னீர்செல்வம் வாசிச்ச பட்ஜெட்ல நிலவங்கி திட்டம்தான் ரொம்ப அருமையானத் திட்டம். 'பெரிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான நிலங்கள் அரசிடம் இல்லை. அதனால் அரசின் வசம் உள்ள நிலங்களை ஒருங்கிணைத்தும், நில உரிமையாளர்களை பாதிக்காத வண்ணம் தனியார் நிலங்களை கையகப்படுத்தியும் நிலவங்கியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்’னு அறிவிச்சிருக்கீங்க.

பாடுபட்டு சேர்த்து வெச்ச நிலத்தை, வம்சத்தை வாழ வெக்குற பூமியை, 'ரோடு போடுறோம், பாலம் கட்டுறோம், கம்பெனி கட்டுறோம்’னு எப்ப... யாரு புடுங்குவாங்களோனு பதட்டத்தோட வாழுற எங்க சனங்களுக்கு... இந்தத் திட்டம் மூலமா நூறு சதவிகிதம் நிம்மதி கிடைக்கும்னா... மொதல் ஆளா நானே நிலத்தைக் கொடுக்கத் தயார். ஆனா, அதுக்கு முன்ன... நீங்க சில விஷயங்கள உறுதியா நிறைவேத்திக் காட்டணும். அப்பத்தான் எங்க ஆளுங்க எல்லாருக்கும் நம்பிக்கை பொறக்கும்!

அதாவது, ஆளும் கட்சியோட வார்டு, வட்டம், மாவட்டம், எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரினு பதவியில இருக்கற வெகுபேர்கிட்ட ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர்னு நிலம் குவிஞ்சு கிடக்குது. அதையெல்லாம் உரிய விலையைக் கொடுத்து, வாங்கி... நிலவங்கியில மொதல்ல சேருங்க. 'இதுக்கு சம்மதம்னா மட்டும்தான் பதவி... இல்லைனா... கோவணத்த இழுத்துக் கட்டிக்கிட்டு வயக்காட்டுல போய் பாடுபடு'னு சொல்லி பத்திவிட்டுருங்க.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்கக் கட்சிக்காரங்ககிட்ட இருந்தே நாலு லட்சம் ஏக்கர் நிலத்தை சுலபமா வாங்கிடலாம். அப்புறம் தி.மு.க- காரங்கக் கிட்ட இருந்து ஏழெட்டு லட்சம் ஏக்கர், காங்கிரஸ்கிட்ட இருந்து 4 லட்சம் ஏக்கர்... மத்தமத்த கட்சிக்காரங்கிட்ட இருந்து சில, பல லட்சம் ஏக்கர்னு சட்டுபுட்டுனு ஒங்க நிலவங்கி... உலக வங்கியைவிட பெருசாகிடும். தொழில் தொடங்க வர்ற, கம்பெனிகளுக்கு இதுல இருந்தே நிலத்தைக் கொடுத்துடலாம். ஒங்களோட நிலவங்கியில இருக்கற மொத்த நிலமும் காலியான பிறகு, தேவைப்பட்டா எங்ககிட்ட வாங்க.

அம்மா... இந்த கவுன்சிலரு, மந்திரி, மாவட்டம் இவங்கக்கிட்ட இருக்கற நிலத்தையெல்லாம் நீங்க கைப்பத்தினா... அவங்க யாரும் கவலைப்பட மாட்டாங்க. ஏன்னா, அவங்களுக்கு வாய்தானே மூலதனம். வாயாலயே வடையைச் சுட்டு வண்டியை ஓட்டிடுவாங்க. ஆனா, என்னைய மாதிரி கோவணாண்டிகளுக்கு நிலம் மட்டும்தான் மூலதனம். அதையும் புடுங்கிக்கிட்டா... புவ்வாவுக்கு லாட்டரிதான்.

அதனால, விவசாயிகளோட நிலங்களை எடுத்துக்கிற மாதிரி இருந்தா... அதுக்கு பதிலா, நில வங்கியில இருக்கற, உருப்படியான, மதிப்புக் குறையாத வேற நிலத்தைக் கொடுக்கணும்கிறதையும் நிலவங்கியோட விதிமுறைகள்ல எழுதி வைங்க. இதுதான் சம விவசாயக் கொள்கை.

உங்களுக்கு 'சமச்சீர்' பிடிக்காம இருக்கலாம். ஆனா, நாங்கள்லாம் சீரோடும், சிறப்போடயும் வாழணும்னா... நாஞ்சொல்றத மனசுல நல்லா ஏத்திக்கிட்டு, உருப்படியானத் திட்டங்களா நிறைவேத்த முயற்சி பண்ணுங்க.

இல்ல நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்தான்னு பிடிவாதம் பிடிச்சா... சமச்சீர் கல்வி விஷயத்துல ஒங்க பேரு டேமேஜ் ஆனது மாதிரியே... விவசாயிங்க விஷயத்துலயும் ரொம்பவே டேமேஜ் ஆகிப்போயிடும். அப்புறம் உள்ளாட்சித் தேர்தல்லயே ஓட ஓட விரட்டி அடிச்சுடுவாங்க, ஜாக்கிரதை!

இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமைவிகடன் 25-08-11

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

மான்சண்டோவே இந்தியாவை விட்டு வெளியேறு!

பன்னாட்டு நிறுவனப் பிடியில் பாரத விவசாயம் ஏன்?
(வெள்ளையனே வெளியேறு தினத்தன்று (09 ஆகஸ்ட் 2011 ) நாடு தழுவிய இயக்க/செயல்திறன் நாள் மற்றும் உழவர் சுயராஜ்ஜிய வாரம் (09 - 15) ஆகஸ்ட் 2011 )மான்சாண்டோ என்னும் விவசாயக் கம்பெனியைப் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ, பல்வேறு சூழ்ச்சிகளையும் குறுக்கு யுக்திகளையும் கையாண்டு உலகிலேயே மிகப் பெரிய விதைக் கம்பெனியாக வளர்ந்துள்ளது. இதன் வருட லாபம் சுமார் 22500 கோடி ரூபாய்! கிட்டத்தட்ட 48 நாடுகளின் GDP யை விட இது அதிகமாகும் என்றால் இதன் பலத்தை நீங்களே யூகித்து கொள்ளலாம். உலகம் முழுவதிலும் பல கிரிமினல் குற்றங்களுக்கும் குயுக்திகளுக்கும் பெயர் போனது மன்சாண்டோ: இயற்கை வளங்களை மாசு படுத்துதல், தன உற்பத்தி பொருட்களால் மனிதர்களை ஊனம் மற்றும் மரணம் அடைய செய்தல், அனுமதிகளுக்காக சட்ட அரசாங்க அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், அபாயகரமான 'டயாக்சின் ' போன்ற ரசாயனங்களை தீங்கு விளைவிக்காதவை என்று ஆய்வு அறிக்கைகளை மாற்றி எழுதுதல், அனுமதி அளிக்கும் அரசு பதவிகளைத் தன் நிறுவன ஆட்களால் நிரப்புதல், ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு தன் நிறுவனத்தில் உயர் பதவி அளித்தல், பொய் விளம்பரங்கள் என்று ஏகப்பட்டவை!

தன்னுடைய விதைகளை பேடன்ட் (patent ) செய்துள்ள இந் நிறுவனம் ,அவ்விதைகளை நட்ட விவசாயிகள் அதிலிருந்து விதைகளை சேமித்தால் அது ஒரு கிரிமினல் குற்றம் என்று வழக்கு தொடுத்தும், உழவர்களை சிறைப்படுத்தியும் இருப்பதை நம் இந்திய விவசாயிகள் அறிய வேண்டும் . பல்லாண்டு காலமாய் விதைகளைப் பாதுகாத்த விவசாயிகளே தன் விளைச்சலில் இருந்து விதைகளை சேமிக்க கூடாது என்ற சட்டத்தின் அவலத்தை என்னவென்று சொல்லுவது!

உலகத்தின் அனைத்து உணவும் நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும் (no food shall be grown which we do not own ) என்பதே இந்த நிறுவனத்தின் குறிக்கோளாகக் கூறப்படுகிறது. மானுடம் உள்ள வரை உணவு உற்பத்தியும் இருக்குமாதலால், உலக உணவு முழுவதையும் ஆளுமை செய்வதே இதன் தந்திர ஆசை. பேட்டேன்டுகள் மூலமும், ஒட்டு மற்றும் மரபீனிய (GM ) விதைகள் மூலமும் உணவு உற்பத்தியை முழுமையாக ஆளுமை செய்து, போட்டிக்கு யாருமின்றி, உழவர்கள் நிரந்தரமாய் தன்னிடம் மீண்டும் மீண்டும் விதை வாங்க வைப்பதே இதன் உள்நோக்கம். தனக்கு மிக நட்பான சூழல் உள்ள அமெரிக்காவிலேயே இந்நிறுவனத்தின் மீது anti -trust (ஏகாதிபத்திய எதிர்ப்பு சட்டம்) விசாரணைகள், வழக்குகள் உள்ளன.

இந்தியாவில் மான்சாண்டோ செய்யும் விஷமங்களும், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களும்

  • மஹிகோ-மான்சாண்டோ நிறுவனம், தன் Bt பருத்தி விதையின் ஏகாதிபத்தியத்தால் அநியாய விலை நிர்ணயம் செய்தது. ஆந்திர மாநில அரசாங்கம் MRTP கமிஷன் , அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் மற்றும் ஒரு புது சட்ட திருத்தமும் இயற்றி இதன் பருத்தி விதை விலையை ஒரு பாக்கெட் 1800 ரூ என்பதை 750 ரூ ஆக குறைக்க வேண்டியிருந்தது.

  • ஆந்திர மற்றும் குஜராத் மாநில அரசுகளின் மீது மான்சாண்டோ 'விதைகளின் விலையைக் குறைக்க அரசுக்கு உரிமை இல்லை' என்று வழக்கு தொடுத்தது. இதற்கு காங்கிரசின் முக்கிய தலைவர் ஆன அபிஷேக் சங்க்வி மான்சாண்டோவின் வழக்கறிஞர் ஆக ஆஜர் ஆனார்!

  • பல விதை நிறுவனங்களுடன் லைசென்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது மான்சாண்டோ ; இதன் விளைவாக 225 லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட Bt பருத்தியில் 210 லட்சம் ஏக்கர் மான்சாண்டோவின் போல்கார்ட் பருதியாயிற்று. 2002 -2006 வருடங்களில் மான்சாண்டோவின் ராயல்டி வருமானம் மட்டும் 1600 கூடி ரூபாய்!

  • அமெரிக்காவிலே உணவு பாதுகாப்பு சட்டங்கள் பலவும் மான்சாண்டோ நிறுவனத்தின் வசதிக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டன. இந்த சட்டம் வரையறுக்கும் FDA என்ற அரசு குழுவின் அங்கத்தினர்கள் பலரும் மான்சாண்டோவின் மாஜி வக்கீல்கள், ஆபீசர்கள் ! இதே குயுக்தியுடன் இந்தியாவில் 'இந்திய அமெரிக்க வேளாண்மைக்கான அறிவு முனைப்பு' (US -India Knowledge Initiative for Agriculture ) என்று ஒன்றை ஆரம்பித்து மரபீனிய (genetically modified ) விதைகளுக்குச் சாதகமாக உயிர்ப்பன்மை பாதுகாப்பு சட்டங்களைத் தகர்த்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருகின்றன.

  • மான்சாண்டோ பல மாநில அரசுகளுடன் (ராஜஸ்தான், ஒரிசா, குஜராத், ஹிமாச்சல் பிரதேஷ், ஜம்மு-காஷ்மீர்) ரகசியமாய் ஒப்பந்தம் செய்து கொண்டு , தன் மரபீனிய மக்கா சோள விதைகளை மாநில அரசுகள் பல நூறு கோடி ரூபாய்களுக்கு வாங்கி இலவசமாய் விவசாயிகளுக்கு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் தன் மக்கா சோள விதைகளுக்கு ஒரு உடனடி சந்தையை அது தயார் செய்கிறது.

  • மலட்டு தன்மையை உருவாக்கும் கிளைபோசேட் (Glyphosate) என்னும் களைக்கொல்லி மருந்தை இந்த நிறுவனம் சந்தைப் படுத்தி வருகிறது. இக் களைக்கொல்லிக்கு எதிர்ப்பு சக்தி உள்ள அதன் மரபீனிய விதிகளுக்கு அரசு அனுமதி அளித்தால் இக் களைக்கொல்லியின் உபயோகம் விண்ணளாவ வளரும்.
  • சமீபத்தில் கர்நாடகத்தில் மரபீனிய மக்கா சோளப் பரிசோதனை வயல்களில், மிகுந்த பாதுகாப்பு அத்து மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உணவையும் உழவையும் பன்னாட்டு மையங்கள் ஆளுமை செய்வதை எதிர்ப்போம்

ஊழலும் அதன் தோழனாய் முதலாளித்துவமும் சமீப காலமாய் வெளிப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம் - டெலிகாம், காமன்வெல்த் விளையாட்டுக்கள் போன்ற பல துறைகளில். இதே போல் உணவு மற்றும் விவசாய துறைகளிலும் சட்டங்களும், கட்டுபாடுகளும் திரிக்கப்படுவதும், திணிக்கப்படுவதும் அம்பலமாகிக் கொண்டிருகின்றன. மான்சண்டோவுடன் அரசு போட்ட PPP ஒப்பந்தமும், மரபீனிய பயிர்களுக்கு அனுமதி அளிக்கும் அரசு/நிபுணர் குழுக்கள் இந்நிறுவனத்தினால் மானியம் பெற்ற விஞ்ஞானிகளால் நிரப்பப்படுவதும் இன்னும் பலவும். புதிய விதைச்சட்டத்தில் , பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் மாநில அரசுகளின் கடுமையான வேண்டுகோளையும் மீறி, நம் மத்திய விவசாய அமைச்சர், விதைகளின் விலைக்கோ ,ராயல்ட்டிக்கோ உச்ச வரம்பு விதிக்க மறுத்து விட்டார் - விதைக்கம்பெனிகளின் உத்தரவுக்கு அப்பட்டமாய்த் தலை சாய்த்து!

இந்திய விவசாயம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சந்தை வாய்ப்பாக நம் நாட்டு மற்றும் பன்னாட்டு விவசாய தொழில் நிறுவனங்கள் பார்க்கின்றன. "அமெரிக்க இந்திய விவசாய அறிவு முனைவு" என்னும் குழுவில் பன்னாட்டு மையங்களான Monsanto , Archer -Daniels Midland மற்றும் Walmart நிறுவனங்கள் இடம் பெற்று இருப்பது பெரும் அநியாயமானாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. விதையில் தொடங்கி, உணவு உற்பத்தி, பதப்படுத்துதல் , விற்பனை என்று உணவுத்தொழிலின் அனைத்து அங்கங்களையும் கட்டுப்படுத்துவதே இவர்களின் நோக்கம்.

இவ்வாறு விவசாயத்தை கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்தால் எங்கே கொண்டு விடுமோ என்று நாம் யோசிக்கவே வேண்டாம் - அமெரிக்காவை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். சிறு, மத்திய விவசாயிகள் விவசாயத்திலிருந்து 30 -40 வருடங்களுக்கு முன்பே தள்ளப்பட்டு விட்டனர். அமெரிக்காவின் மொத்த ஜனத் தொகையில் 1 % மட்டுமே விவசாயத்தில் ஈடு பட்டுள்ளனர்! விவசாயகக் குடும்பங்களை ஆதரிக்காமல் உணவுத் தொழிற்சாலைகளை ஆதரிக்க ஆரம்பித்தனர். பெரும் நிறுவனங்களின் வக்கீல்கள் அரசின் திட்ட வரைவோராக உருமாறி தனி விவசாயிகள் விதைகளைச் சேமிப்பதும், பொது ஜனங்கள் உணவுத் தொழிற்சாலைகளை விமர்சிப்பதும் குற்றம் என்றவாறு சட்டங்கள் தீட்டினர். Super market chains எனப்படும் தொடர் விற்பனை அங்காடிகள் , ஆயிரக் கணக்கான ஏக்கர் கொண்ட பெரும் நிறுவனங்களிடம் மட்டுமே கொள்முதல் செய்கின்றன - 50 ஏக்கர் உள்ள விவசாயி கூட தன் விளைச்சலை அங்காடிகளில் விற்பது இயலாது.

இந்த "அமெரிக்க மாதிரியை" பார்த்துப் "பாடம்" கற்றுக்கொள்ளும் நம் இந்திய திட்டம் வரைவோர் , விவசாயத்தை நம்பி வாழும் 60 % மக்களை 10 % ஆகக் குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறிக்கொண்டிருக்கிரர்கள்! மற்றவர் எல்லாம் எங்கு போவது? நம் நகர, கிராமியப் பொருளாதாரம் என்ன ஆவது ?
இந்நிலையில் பெரும் அளவில் விளைநிலங்கள் சில கம்பெனிகளால் வாங்கி சேர்க்கப்படுகின்றன. விவசாயிகள் மட்டுமே கவலைப்படும் நிலைமை அல்ல இது; நுகர்வோராகவும் பாதுகாப்பான, சத்தான, பலவகையான நம் பாரம்பரிய உணவு வகைகள் அழியும் நிலையில் இருக்கின்றன.

இன்றே போராட்டத்தில் சேருங்கள்!

ஒரு தேசத்தவராய், நம் உணவையும் சுதந்திரத்தையும் காக்க வேண்டுமானால், நாம் விளைவிப்பதையும், சாப்பிடுவதையும் நாமே தீர்மானிக்க வேண்டுமானால், நாம் செயல்பட இதுவே நேரம்! வாருங்கள் , சேருங்கள்:

ஆகஸ்ட் 9 - நாடு தழுவிய செயல்திறன் நாள் : " மான்சாண்டோ இந்தியாவை விட்டு வெளியேறு!" என்ற கோஷத்துடன்.
ஆகஸ்ட் 9 -15 : உழவர் சுயராஜ்ய வாரம் : வாழ்வாதாரங்கள் , நிலைத்த வேளாண்மை கோரியும், உழவில் பன்னாட்டு மையங்கள் தலை இடுவதை எதிர்த்தும்.