வெள்ளி, ஜூன் 10, 2011

கம்பெனிக்காரன வாழ வைக்க...கலப்பைக்காரனைக் காலி பண்ணீடாதீங்க - கோவணாண்டி

'விவசாயத்துல இருக்கற பிரச்னைகள... விவசாயிகளால மட்டுமே தீர்க்க முடியாது’னு ஒரு விஷயத்தை பிரமாதமா ஆராய்ச்சி மூலமா கண்டுபிடிச்சு, இந்த வருஷம் 'நோபல் பரிசு'க்கான இடத்தைத் துண்டு போட்டு பிடிச்சு வெச்சிருக்குற கோயம்புத்தூரு வேளாண்மைப் பல்கலைக்கழக ராசா (துணை வேந்தர்) டாக்டர். முருகேச பூபதி அய்யாவுக்கு... வணக்கம் சொல்லிக்கறான், ஒங்க பாசக்கார கோவணாண்டி.


ஆட்சி மாற்றம் நடந்து, கண்ட இடத்துலயும் அதிகாரிக மாற்றம் நடந்துனு ஊரே ஏகத்துக்கும் கலகலத்துப் போய் கிடக்கற இந்த நிலைமையிலயும்... கொஞ்சம்கூட கலங்காம விவசாயிகளுக்காக பாடுபட்டு இதைக் கண்டுபிடிச்சி சொல்லியிருக்கீங்களே... இதுக்காகவே நம்ம விவசாயிகள எல்லாம் ஜோரா ஒரு தடவை கைதட்டச் சொல்லலாம்!

அய்யா, நீங்க சொன்னது முச்சூடும் உண்மைதான். இல்லீனு நான் சொல்லல. இன்னிக்கு விவசாயத்துல ஏகப்பட்ட பிரச்னைங்க இருக்கறது உண்மை. அதையெல்லாம் நாங்க தீர்க்க முடியாது. ஒங்கள மாதிரி அதிகாரிகளும்... அரசியல்வாதிகளும்தான் தீர்த்து வைக்க முடியும்கிறதுல சந்தேகமே இல்ல. ஏன்னா... பிரச்னையே நீங்கள்லாம்தானே!

விவசாயிங்க இன்னிக்கு படுற கஷ்டத்துக்கு காரண கர்த்தா யாரு..?

எங்க மேல பிரச்னையை ஏவி விட்டது யாரு?

ஆட்டுச்சாணி, மாட்டுச்சாணினு மண்ணைக் கெடுக்காம, மனுஷன கெடுக்காம, விவசாயம் செஞ்சுக்கிட்டு இருந்த எங்கள... ரசாயனச் சாக்கடையில தள்ளி விட்டது யாரு?

நல்லா இருந்த விவசாயத்துல நஞ்சைக் கலந்தது யாரு?

'நல் உரம், நல் விதை, நல் விளைச்சல்’னு உங்காளுக சொன்னதக் கேட்டுட்டு, 'படிச்சவன் பொய் சொல்ல மாட்டான்’னு நம்பி, எங்காளுகளும் கடன, ஒடன வாங்கி பூமியில போட்டாங்க. நம்ம மண்ணுக்கேத்த ரகங்களை வெளிநாட்டுக்கு வித்துட்டு, வெளிநாட்டுல இருந்து எதையோ கொண்டாந்து கொடுத்து, 'இந்த நெல்லு நல்ல மகசூல் கொடுக்கும்'னு அடிச்சு விட்டீங்களே? அப்பவே பிரச்னைக்கு பிள்ளையார் சுழிப் போட்டுட்டீங்க.

'இனி, இந்தியாவுல சண்டை போட்டுக் கொள்ளை அடிக்கத் தேவையில்ல. விதையை வித்தே கொள்ளை அடிக்கலாம்'னு அன்னிக்கே முடிவு பண்ணிட்டான் வெள்ளைக்காரன். அவன் பேச்சைக் கேட்டு, அவன் சொன்னபடி நீங்க கொண்டு வந்து கொடுத்த வீரிய விதைக ஆரம்பத்துல சூரத்தனம் காட்டினது என்னவோ உண்மைதான். ஆனா, நாளாக நாளாக அதிகமா உரம் கேட்டுச்சு, அதிகமா தண்ணி கேட்டுச்சு... 'முளைப்புல இருந்து, அறுப்பு வரைக்கும் மருந்து தெளிச்சாத்தான் விளைவேன்’னு அடம் பிடிச்சுது. கடைசியில பாத்தா... பயிரைவிட, கடன்தான் கடகடனு வளர்ந்துச்சு. மாட்டையும், மண்ணையும் வெச்சு பொன்னு விளைய வெச்சிகிட்டிருந்த எங்க பொழப்புல, புயல் வீசத் தொடங்குச்சு. அறுபது, எழுபதுகள்ல ஆரம்பிச்ச அந்தப் புயல்... இந்த ரெண்டாயிரத்து பத்துலயும் ஓய்வேனானு அடம்பிடிச்சுக் கிட்டிருக்கு.

'படிச்சவன் பாட்டைக் கெடுத்த கதை'யா, 'பசுமைப் புரட்சி, பசுமைப் புரட்சி'னு கூத்தடிச்சி, பாதி விவசாயிகள பரலோகத்துக்கு அனுப்பிட்டீங்க. இப்ப குத்து உசுரும், கொலை உசுருமா ஊசலாடிக்கிட்டு இருக்குற மிச்ச சம்சாரிகளையும் சாகடிக்கறதுக்காக 'இரண்டாம் பசுமைப் புரட்சி'னு மறுபடியும் படையா கிளம்பிட்டீங்க. எங்கள ஆளுறதுக்காக நாங்க ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கற ஜென்மங்களும், கோட்டு-சூட்டு போட்ட ஆளுங்க தேனொழுக சொல்றதையெல்லாம் தலையாட்டிக் கேட்டுட்டு. 'தேனெடுக்கறப்ப புறங்கையை நக்கிட வேண்டியதுதான்'னு லஞ்சப் பணத்துக்காக எங்க தலையை அடகு வெக்கறாங்க.

அய்யா, எங்க பிரச்னை வயலுலயும், வயித்துலயும்தான். ஆனா, நீங்கள்லாமே வானத்துல இல்ல தீர்வைத் தேடுறீங்க. பின்ன எப்படி பிரச்னை தீரும்.

விவசாயிகளுக்குப் புதுசு, புதுசா சொல்லிக் கொடுத்து விளைச்சல பெருக்க வைக்க வேண்டியதுதான் பல்கலைக்கழகத்தோட வேலை. விவசாயிகள தோழனா பார்த்தாத்தான் அது சாத்தியம். ஆனா, இன்னிக்கு விவசாயிகள வில்லனாத்தானே பாக்குது ஒங்க பல்கலைக்கழகம்! அதேசமயம்... பன்னாட்டு கம்பெனிகள பங்காளியாப் பாக்குது..!

ம்... ஒங்களச் சொல்லிக் குத்தமில்ல. ஆராய்ச்சி, அது, இதுனு ஏதோ ஒரு பேர்ல காசைக் கொண்டு வந்து கொட்டுற கம்பெனிக்காரனுங்களைப் பாப்பீங்களா... இல்ல ஒட்டு கோவணத்துக்குக்கூட வக்கத்த எங்களப் பாப்பீங்களா?

உற்பத்திப் பொருளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கறப்பத்தான் எங்க பிரச்னைத் தீரும். அதை ஒங்களால தர முடியுமா?

இயற்கை விவசாயத்தாலதான் நாங்க தற்சார்பு அடைய முடியும்... கடன் இல்லாம வாழ முடியும். இதுக்கு வழி சொல்ல முடியுமா?

இப்படி ஒண்ணு ரெண்டு இல்ல... ஓராயிரம் விஷயங்கள நான் பட்டியல் போட முடியும். ஆனா, இதுக்கெல்லாம் உண்மையிலேயே உருப்படியா ஒரு யோசனை சொல்ல முடியுமா ஒங்க சங்கத்தால?

கோட்டு-சூட்டு போட்டுக்கிட்டு, அரசாங்க சம்பளத்தை வாங்கிகிட்டு வளைய வர்றது... எங்கள மாதிரியான விவசாயிகள வாழ வைக்கத்தான்கிறத என்னிக்கு மறந்தீங்களோ... அன்னிக்கே பிரச்னை ஆரம்பிச்சுடுச்சி. கண்டவனும் இங்க வந்து விதை, உரம், பூச்சிக்கொல்லினு கண்டதையும் எங்க தலையில கட்டுறதுக்கு நீங்க சிவப்புக் கம்பளத்தை என்னிக்கு விரிச்சீங்ளோ... அன்னிக்கு ஆரம்பிச்சதுதான் எங்களோட பிரச்னை. ஏ.சி-யில உக்காந்துட்டு ஏகப்பட்ட யோசனை சொல்றவங்களுக்கு, தூசியில நிக்குறவன் கஷ்டம் எப்படிய்யா தெரியும்?

ஆலோசனை சொல்ற ஆளுங்க... எங்க வயல்ல வந்து நேரடியா விவசாயம் செஞ்சி, ஒரு போகம் எடுத்து, வரவு-செலவைப் போட்டுப் பார்க்கச் சொல்லுங்க. அதுக்குப் பிறகு, வாழ்க்கையில யாருக்குமே ஆலோசனை சொல்ல மாட்டாங்க. அதை விடுங்க, பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமா நூத்துக் கணக்கான ஏக்கர் நிலமிருக்குல்ல. எங்களுக்கு சொல்ற ஆயிரமாயிரம் யோசனைகள்ல ஒரேயரு யோசனையை கையில எடுத்து, லாபகரமா வெள்ளாமை செஞ்சி, பட்டியல் போட்டுக் காட்டுங்க. அப்ப நம்புறோம்... ஒங்களாலதான் எங்க பிரச்னைக்கு தீர்வு தரமுடியும்கிறத!

அய்யா... நீங்க சொல்றதெல்லாம் கேக்குறதுக்கும், பேசுறதுக்கும் நல்லா இருக்கும். ஏன் செய்து பார்க்கறதுக்குக்கூட ஈஸியாத்தான் இருக்கும். ஆனா, கடைசியிலதான் பொழப்பு நாறிடும் ஒங்க பசுமைப் புரட்சி போல!

பிரச்னை இருக்கற இடத்துலதான் அதுக்கான தீர்வையும் தேடணும். எங்க மண்ணுல என்ன விவசாயம் செய்யணும்னு எங்களுக்குத்தான் தெரியும். தஞ்சாவூரு விவசாயத்துக்கும், சேலத்து விவசாயத்துக்குமே எம்புட்டு வித்தியாசம். ஒரு மண்ணுல அருமையா வர்ற பயிரு, இன்னொரு மண்ணுல முளைக்கவே மாட்டேங்குது. இந்த நிலைமயில அமெரிக்க கம்பெனிக்காரன்... ஆஸ்திரேலிய கம்பெனிக்காரன் எல்லாம் எப்படி எங்களுக்குத் தீர்வு சொல்ல முடியும்? கம்பெனிக்காரன வாழவெக்குறதுக்காக கலப்பைக்காரனைக் காலி பண்ணீடாதீங்க.

இப்படிக்கு,
கோவணாண்டி


நன்றி: பசுமை விகடன், 25-ஜூன் -2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக