புதன், மே 25, 2011

''ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு... ஃபினிஸிங்ல பிரச்னை பண்ணிடாதீங்க..!'’ -கோவணாண்டி

மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டி... மூணாவது முறையா முதலமைச்சரா பொறுப்பேத்து இருக்குற தங்கத் தாரகை, புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு, வணக்கம்... வாழ்த்து... எல்லாத்தையும் சொல்லிக்கறான் இந்தக் கோவணாண்டி.


'ஆகா, இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள கிளம்பிட்டான்யா... கிளம்பிட்டான்'னு நினைக்காதீங்க. ஆரம்பிக்கறதுக்கு முன்னதானே நிறுத்த முடியும். நான் ஆட்சியை ஆரம்பிக்கறத பத்தி சொல்லலீங்க... எங்களுக்கு நல்லது செய்றேன்கிற பேருல, யாரு யாரு பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு, நீங்களா திட்டங்கள ஆரம்பிச்சுடக் கூடாதுங்கறத சொல்றேன்!

நாங்கள்லாம் ரொம்ப பாவப்பட்ட ஜென்மங்கம்மா. இந்தத் தடவை ஒங்க முகத்துல தவழற அமைதியையும் பக்குவத்தையும் பார்த்தா... நிஜமாலுமே இந்தப் பயலுகளுக்கு நல்லபடியா ஆட்சியை நடத்தி, நாலு நல்லது செய்து பார்த்துடுவோம்'னு நீங்க நினைக்கற மாதிரிதான் எங்களுக்குத் தோணுது. அதனால, ஏற்கெனவே இருந்த ஒங்க ஆட்சியில நடந்தது... நேத்தைய ஆட்சியில நடந்தததுனு அநியாய, அக்கிரமங்கள மறந்துட்டு, நிஜமாவே ஒரு நல்ல ஆட்சியை நடத்தித்தான் பாருங்களேன்!

இப்ப நீங்க நடந்துக்கறத பார்த்தா... கொஞ்சம் நம்பிக்கை வரத்தான் செய்யுது. பதவியை ஏத்துக்கிட்ட அடுத்த நிமிஷமே சுறுசுறுப்பாயிட்டீங்க. அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி மணிக் கணக்குல ஆலோசிச்சிருக்கீங்க. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயாவோட ஆலோசகர் பொன்ராஜை வெச்சு அமைச்சர்களுக்கு வகுப்பெல்லாம் எடுத்திருக்கீங்க. அதுலயெல்லாம் ரொம்ப நேரத்தை, விவசாயத்தை மேம்படுத்துறதுக்காகவே செலவழிச்சதாவும்... 'இரண்டாவது பசுமைப் புரட்சி' கொண்டு வர்றதுக்கான முயற்சிகள நீங்க முன்னெடுக்கப் போறதாவும்... பேசிக்கறாங்க.

இதுலதான் கொஞ்சம் கிலி கிளம்புது! அதாவது... ஓப்பனிங் நல்லா இருக்கு. ஆனா, ஃபினிஸிங்ல பிரச்னையாகிடுமோனுதான் பயமா இருக்குதுங்கம்மா.

இப்ப விவசாயத்துக்காக நீங்க பெருமுயற்சி எடுக்கற சேதி தெரிஞ்சதுமே... நன்கொடையை நீட்டுற பூச்சிமருந்து கம்பெனிக்காரன், விதைக் கம்பெனிக்காரன்; ஆராய்ச்சி பண்ணி பண்ணி மூளையில இருந்து அறிவு ஆறா ஒழுகி ஓடிக்கிட்டிருக்கற அறிவாளி; உலகம் பூரா இருக்கற வெவசாயத்தை அலசி ஆராய்ஞ்ச விஞ்ஞானினு ஆளாளுக்கு ஒங்கள வட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க... ஆரம்பிப்பாங்க. அவங்க சொல்றதையெல்லாம் கேட்டு அசந்து போய், நீங்க பாட்டுக்கு கன்னாபின்னானு திட்டங்கள தீட்ட ஆரம்பிச்சுடாதீங்க. 'அவங்க புடுங்கறதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்'.

'என்னடா இவன் எடுத்ததுமே இப்படியெல்லாம் பேசறானே?'னு மேற்கொண்டு படிக்காம நிறுத்திடாதீங்க.

அதாவது, இந்த விவசாயத்தை நிலைநிறுத்த... இயற்கையான விஷயங்கள புரிஞ்சுகிட்டு, அதோட ஒட்டி உறவாடினாலே போதும்கிறதுதான் உண்மை. இதை நான் சொல்லலீங்க. உலகத்தை அறிஞ்ச... தெரிஞ்ச பெரிய மனுஷங்க சொன்னது. நம்ம ஊரு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்... மகாராஷ்டிராவோட சுபாஷ் பாலேக்கர் மட்டுமில்லீங்க. நாடறிஞ்ச வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனும் இதைத்தான் இப்ப சொல்றாரு! வேணும்னா நீங்களே கூப்பிட்டுக் கேட்டுக்கோங்க!

முதலாம் பசுமைப் புரட்சி நடந்த பஞ்சாப்ல இப்ப பசுமை வறட்சி தாண்டவமாடுது. உரத்தையும், பூச்சிமருந்தையும் கொட்டிக் கொட்டி, நிலமெல்லாம் வளமிழந்து போனதால, தலையில துண்டு போட ஆரம்பிச்சிருக்காங்க அந்த ஊரு விவசாயிங்க. இதைப்பத்தி கூட சுவாமிநாதன் அய்யாகிட்ட கேட்டுக்கலாம்.

அப்புறம் ஒங்க கெழுதகை நண்பரு குஜராத் முதல்வர் மோடியோட ஆட்சியில அந்த மாநிலத்துல விவசாயம் சிறப்பா இருக்கறதா ஊரே பேசிக்குதுனு நீங்களும் ஏமாந்துடாதீங்க. 'அங்க சுற்றுச்சூழல் டண்டணக்கா ஆகிக்கிட்டிருக்கு'னு அபாய எச்சரிக்கை அடிக்கறாங்க சூழல் ஆர்வலர்கள். ஊரைச் சுத்தி தொழிற்சாலைகளா தொடங்கிட்டு, அதுல விவசாயத்தை எப்படி வளர்த்தெடுக்க முடியும்?

அதனால, ஆளாளுக்கு சொல்ற யோசனைகளையெல்லாம் செயல்படுத்தறேன் பேர்வழினு, மறுபடியும் விவசாயத்துக்கு மரண சாசனம் எழுதிப்புடாதீங்க. முக்கியமா செய்ய வேண்டிய விஷயங்கள்னு ஒரு விவசாயியா சிலதைச் சொல்றேன். இதையெல்லாம் செயல்படுத்தினாலே... வெவசாயத்தை நல்லாவே தூக்கி நிறுத்திப்புடலாம்ங்க! எல்லாமே... போன ஆட்சியிலயும் நான் புட்டுப்புட்டு வெச்சதுதான்நீங்களாச்சும் காது கொடுங்க!

அதாவது... மு.க. ஆட்சியில மோட்டரை போட்டுட்டு, மடையைத் திருப்புறதுக்குள்ள காணாம போயிடும் கரன்ட்டு. 'வாம்மா மின்னல்’னு சொல்ற மாதிரி... வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது. இந்த அரைகுறை கரன்ட்டு காரணமா... பல சம்சாரிக மோட்டாருக்கு காயில் கட்டியே கடனாளியாகிட்டாங்க. அதனால... ஒரே சீரா கரன்ட்டு கிடைக்கறதுக்கு உடனடியா ஏற்பாடு செய்ங்க!

உங்க கூட்டாளி 'கருப்பு எம்.ஜி.ஆர்.' கூட, தேர்தல் நேரத்துல, 'மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க ஒரு திட்டம் வெச்சிருக்கேன். ஆனா, இப்ப சொன்னா கருணாநிதி காப்பி அடிச்சிடுவாரு. தேவைப்படும்போது சொல்றேன்’னு வசனமெல்லாம் பேசிக்கிட்டிருந்தாரு. அது சிறப்பா இருந்தா, சீக்கிரமா செயல்படுத்துங்க.

தேர்தல் அறிக்கையில சொன்ன மாதிரியே எல்லா விவசாயிகளுக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தையும் சட்டுபுட்டுனு அமைச்சுக் கொடுத்துடுங்க. இப்ப செலவாகுற தண்ணியில 25 சதவிகிதம்தான் செலவாகும்; விளைச்சலும் கூடும்; ஏகப்பட்ட மின்சாரமும் மிச்சமாகும்!

அங்கங்க இருக்கற ஆறு, குளம், குட்டை, கண்மாய், ஏரி இதெல்லாத்தையும் தூர் வாரினாலே... பெய்யுற மழையை முறையா சேமிக்க முடியும். கூடவே, ஆறுங்கள்ல அங்கங்க தடுப்பு அணையையும் கட்டி வெச்சீங்கனா... ஆத்துப் பாசனத்துல உள்ளவங்களுக்கும் வசதியாயிடும். அதுக்குப் பிறகு பாருங்க... மோட்டாரைப் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சற அவசியமே இல்லாம போயிடும்.

முக்கியமான பிரச்னையே கட்டுபடியான விலை கிடைக்கலங்கறதுதான். கரும்புக்குக் கட்டுப்படியான விலை கேட்டு போன ஆட்சியில விழுப்புரத்துல கலக்கி எடுத்த உங்களுக்கு தெரியாதா எங்க கஷ்டம். தேர்தல் அறிக்கையிலயே 'ஒரு டன் கரும்புக்கு 2,500 ரூபாய்'னு சொல்லிட்டீங்க. எப்ப எப்பனு எங்காளுங்க காத்துக்கிட்டிருக்காங்க. கரும்பு மாதிரியே மத்த எல்லா விளைபொருளுக்கும் கட்டுப்படியான விலை கிடைக்கறதுக்கு உருப்படியா ஒரு யோசனையைப் பண்ணி நிறைவேத்த பாருங்க... புண்ணியமா போகும்!

நம்ம ஊருல கொஞ்ச நஞ்சம் உழைச்சிக்கிட்டிருந்த விவசாயிகள, நிலத்தை தரிசா போட வெச்சு, கூலி வேலைக்கு வெறட்டிவிட்ட பெருமையான திட்டம்... 'ஊர் கூடி குளத்துல கும்மியடிக்குற திட்டம்'! அதாங்க, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். நூறு நாள் வேலை வாய்ப்புக் திட்டம்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன். ஆத்தை வெட்டுறேன்... குளத்தை வெட்டுறேன்... ஏரியை வெட்டுறேன்னு மேலாப்புல புல்லை மட்டும் சொரண்டிட்டு, கணக்கு காட்டினதுதான் அந்தத் திட்டத்ததோட சாதனை.

இதே திட்டத்த வெச்சு, 'ஆடு மேய்ச்ச மாதியும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு’னு கேரளாவுல விவசாய வேலைகளோட இணைச்சு... அழகா அங்க நடைமுறைபடுத்திக்கிட்டிருக்காங்க. அதேமாதிரி நம்ம ஊருலயும் மாத்திட்டீங்கனா... பட்டம் தவறாம பயிர் விளையும், விவசாயமும் செழிக்கும்.

அம்பது வயசு வரைக்கும் உணவுக்கு செஞ்ச செலவைவிட, அம்பது வயசுக்கு மேல ஆஸ்பத்திரிக்கு அதிகமா செலவாகுது. காத்து, தண்ணி, மண்ணு, உணவு எல்லாமே விஷமா மாறிக்கிட்டு வருது. இதுக்குக் காரணம் விவசாயத்துல பயன்படுத்துற ரசாயனம்... ஒரேயடியா பெருகிக்கிட்டே போற தொழிற்சாலைங்க. இதுல இருந்து தப்பிக்கறதுக்கான ஒரே வழி... இயற்கை விவசாயம்தான். இந்த விஷயத்தை ஒங்களுக்கு எடுத்துச் சொல்ல ஆளிருக்காங்களானு தெரியல. தேவைப்பட்டா இதுக்காகவே உழைச்சுக் கிட்டிருக்கற நம்ம ஊரு நம்மாழ்வாரைக் கூப்பிட்டு பேசுங்க.

விவசாயிகள என்னிக்குமே கடனாளியாக்காத... பூமியை புண்ணாக்காத... உணவை விஷமாக்காத 'இயற்கை விவசாயம்தான் நிலைச்ச நீடிச்ச விவசாயம்'கிறதுதான் நிஜம். இதை சர்வதேச உயிரியல் விஞ்ஞானிகள் மாநாட்டுலயே சொல்லி இருக்காங்க. இதுல இருக்கற உண்மைகள நீங்களே நேரடியா அலசி ஆராய்ங்க. விஞ்ஞானிகள இறக்கி விட்டா... மறுபடியும் குழப்பிடுவாங்க ஜாக்கிரதை!

இதையெல்லாம் விட்டுட்டு... 'என்ன ஆனா என்ன, அடுத்த அஞ்சி வருஷத்துக்கு நம்மள எவனும் அசைச்சிக்க முடியாது. அதுக்குப் பிறகு, ஒரு அஞ்சி வருஷம் ஓய்வு கொடுப்பானுங்க. மறுபடியும் நம்மகிட்டதான் திரும்பவும் வந்தாகணும். இந்தப் போக்கத்த பயலுகளுக்கு வேற யாரு இருக்கா?'ங்கற நெனப்புல திரிய வேணாம்... பீ கேர் ஃபுல்.

எங்களச் சொன்னேன்!


இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமை விகடன் 10-ஜூன்-2011

செவ்வாய், மே 24, 2011

பறவைகளின் தேவ சிற்பி: தூக்கணாங் குருவிகள்

நான் 10 , 11ம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் தேனி சுந்தரம் தியேட்டர் என் கலை ஆர்வத்தின் கற்பனைத் திறவுகோலாக இருந்தது. என் வீட்டிலிருந்து 10 நிமிடத்தில் அங்கு சென்று விடலாம். இந்த தியேட்டரின் சிறப்பே இரவு 8.30 ஷோ தான். இது இங்கு மட்டுமே .முழுக்க முழுக்க ஆங்கிலப் படங்கள்தான். ஒரு படம் ஒரு நாள் மட்டுமே காண்பிக்கப்படும். அந்தக் காட்சிக்கான டிக்கெட் விலையும் அதிகம். தினமும் எப்படியாவது அந்தக் காட்சிக்கு சென்றுவிடுவேன். அன்டோனியா பண்டாரஸ் எட்டி மர்ஃபி. பில் ஸ்மித் என்று என் ஆகர்ஷன கதாநாயகர்கள் இந்த தியேட்டரின் உபயத்தில் வந்து போனார்கள். ஆக்க்ஷன் படங்களுக்கு இடையே ப்ளூ லாகூன் போன்ற கிளர்ச்சிப் படங்களும் காட்டப்பட்டு இளைஞர்களைக் கிறங்க வைக்கும்.

மெக்கனஸ் கோல்ட் போல் ஆக்க்ஷன் காட்ட முடியாவிட்டாலும், கெளபாய் தொப்பி போட்டு மனது ஆசுவாசப்படும். தியேட்டரைப் போலவே அங்கு வளர்ந்திருக்கும் வாகை, புன்னை மரங்கள் என்னை மிகவும் கவர்ந்ததவை. திராட்சைக் கொத்துகள் தொங்குவது போல பல நூறு தூக்கணாங்குருவி கூடுங்கள்.

சுற்றித் திரியும் பல நூறு குருவிகள், பகல் நேரத்திலும் அங்கு சென்று வர மனதைத் தூண்டும். எப்போதாவது கீழே கிடக்கும் கூடுகள் என் பொக்கிஷமாய் வீடு வரும். தியேட்டரின் எதிரில் எங்களுக்கு சொந்தமான வயல் வெளி இருந்தது. அங்கு சிறு கிணறும், அதை ஒட்டி வளைந்து நிற்கும் வாகை மரமும் நிறைய கூடுகளைப் பூக்களாய்த் தாங்கி நின்றது. பல சமயம் என் பொழுது போக்கு இடம் அதுவாகவே இருக்கும். அங்கு குருவிகளையும், அவை கூடு பின்னும் நேர்த்தியையும் பார்க்க ஆச்சரியமூட்டும். சூழ்நிலையின் கட்டாயத்தில் வயல் வெளியை மிகக் குறைந்த விலைக்கு விற்க நேர்ந்தது. வாங்கியவர் முதல் நாளே அங்கிருந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். பதறிப்போன குருவிகளைப் பார்த்து என் மனது பதைபதைக்கத் துவங்கியது. குற்ற உணர்வும், மன வலியும் ஒன்று சேர அன்றிலிருந்து அந்தப் பக்கம் போவதையே நிறுத்தி விட்டேன்....

தூக்கணாங்குருவிகள் ஆசியப் பகுதிகள் முழுவதும், குறிப்பாக தென் பகுதி முழுவதும் காணப்படும் பறவை இனம். கூட்டம் கூட்டமாய் வாழும். பெரும்பாலும் வயல் வெளி சார்ந்த பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும். அடர்த்தியான புதர்கள் ,நீரோடை சார்ந்த வனம் மற்றும் ஆற்றங்கரை ,குளக்கரையோரம் அமைந்த மரங்களில் வளைந்த கிளைகள், வயல் வெளி, கிணறுகளில் வளர்ந்த ஆல், அரசு, மரக்கிளைகளில் கூடு அமைக்கும். பெரும்பாலும் முள் மரம் அல்லது மிக உயரமான ,பிற ஜீவராசிகளின் தொந்தரவு இல்லாத நிலையில் மட்டுமே கூடுகளைப் பின்னத் துவங்கும். கூடுகளை நார், இலைகள் கொண்டு பின்னும். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் விரவி, பரவிக் காணப்படும். இவை பிராந்தியம் சார்ந்து தங்கள் குணநலன்களை மாற்றிக் கொள்பவை. குறிப்பாக ,மழை மற்றும் உணவை மையப்படுத்தி, தங்கள் வாழ்வியல் முறையை மேற் கொள்கின்றன.

நாம் தவிட்டுக் குருவிகள் என அழைக்கும் சிட்டுக்குருவிகள் போல் காணப்படும் இவை ஏறத்தாழ அதே வண்ணத்தில், உருவ அமைப்பில் காணப்படுவதால் வித்தியாசம் காண்பது எளிதல்ல. 15 செ.மீ. அளவே உருவம் கொண்ட இவைகளின் பால் வேறுபாடு காண்பது எளிதல்ல. கூர்மையான வலிமையான அலகும், குட்டையான வாலும் மட்டுமே, இதை சிட்டுக்குருவிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். கண்கள் மிகக் கூர்மையான பார்வை சக்தி கொண்டவை. கண்களைச் சுற்றி கருவளையம் காணப்படும். வயது வந்த ஆண்கள் பளபளப்பான மஞ்சள் நிறம் பூசிய ,பழுப்பு நிறம் மேலோங்கிய தலைமுடி கொண்டிருக்கும். உணவின் இருப்பிடத்தை ஒரு குருவி அறிந்து விட்டால், தன் கூட்டத்தை மொத்தமாக அழைத்து வரும். இருப்பிடத்தை அடைந்த குருவிகள், பல்வேறு திசைகளிலும் பரவி, உணவை உட்கொள்ளும். முக்கியமாக நெல், கம்பு, கேப்பை போன்றவற்றை உண்ணும், வட மாநிலங்களில் கோதுமை வயல், திராட்சைத் தோட்டம் அமைந்த பிரதேசங்களைத் தேர்ந்தெடுக்கும். உணவு மிகக் குறைவாக இருந்தால் பயிர்களின் குருத்தை உண்ணும். இதனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இதை "தொல்லை தரும் குருவி" என அழைக்கிறார்கள். இதைக் கொல்வதற்காக விசேஷ பூச்சி மருந்து தயாரித்து ,"வயல்வெளிகளைப் பாழாக்கும் குருவிகளைக் கொல்வோம் " என்ற விளம்பரப் படத்துடன் இம் மருந்துகள் அங்கு விற்பனைசெய்யப்படுவது கொடுமை.

கர்ப்ப காலங்களில் தவளை ,மண்புழு , வெட்டுக்கிளி போன்ற சிறு உயிரிகளை உண்ணும். குஞ்சுகளுக்கும் அதையே ஊட்டும். பருவ நிலை மாற்றங்கள் இதன் வாழ்வின் பிரதான காரணிகளாகின்றன. இதன் வாழ்க்கைப் பற்றிய முழு விவரங்களைத் திரட்டுவது இன்று வரை கடினமாக உள்ளது. மிக வேகமாகப் பறக்கும் இவை, சிட்.....சிரிக் ....என குரல் எழுப்புகின்றன. பரபரப்பான சூழலில் சிரீக்...சிரீக்...என நீண்ட அலறலை வெளிப்படுத்தி தன் சகாக்களை எச்சரிக்கை செய்கின்றன. இதைத் தவிர, காமமுற்ற வேளைகளிலும், கர்ப்பம் தரித்த காலத்திலும், முட்டையிடும்போதும் இவ்வாறான நீண்ட அலறலை வெளிப்படுத்துகின்றன. உறவு கொள்ளும்போது, பரவசத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் இவ்வாறான நீண்ட குரலெழுப்புகின்றன.

மழைக் காலங்களையே இவை உறவுக் காலமாகத் தேர்ந்தெடுக்கின்றன. குறைந்தது ஒருமாத காலம், தொடர்ந்து உறவில் ஈடுபடுகின்றன. சூழலுக்கு ஏற்ப, பகலிலும், இரவிலும் கூட இது தொடரும். வெப்ப காலங்களை மிக அரிதாகவே தேர்ந்தெடுக்கின்றன. பருவகாலங்களில் மட்டும் ஆணுக்கு இனப்பெருக்க உறுப்பு ,ஒரு நீட்சி போல உருவாகிறது. விந்து சுரப்பிகளும் அப்போது தான் உருவாகும். நீட்சியைப் பெண்ணின் புழைக்குள் உட்செலுத்துவதன் மூலம் விந்து நீரை பாய்ச்சுகிறது. பெண் கீழ் அமர்ந்து ,கிட்டத்தட்ட படுத்த நிலையில் வாலை செங்குத்தாகத் தூக்க ,ஆண் மேல் அமர்ந்து செயல்படுகிறது. குடும்ப உறுப்பினர்களில் பருவம் கொண்ட தம்பதியினர் ஒன்று சேர்ந்து ,பல கூடுகளை உருவாக்குகின்றன. ஒரே இடத்தில் கொத்து கொத்தாகப் பல கூடுகளை நாம் காண இயலும். இவற்றின் எண்ணிக்கை 5---30 வரை இருக்கும். கூடு அமையப் பெறும் இடத்தில் உணவு, நீர்,மற்றும் கூடு அமைப்பதற்கான புல், இலை, நார் போன்ற உப பொருட்களும் இருத்தல் வேண்டும். ஆண்குருவிகளே கூடுகளைப் பின்னும். பெண் அவ்வப் போது உதவும். பெண்ணே கூடு கட்டுவதற்கான இடத்தை தேர்ந்தெடுக்கும். கீழ் நோக்கித் தொங்கும் குழாய் போன்ற அமைப்பு கொண்ட கூடைக் கண்டு பிரமித்த லியனார்டோ டாவின்சி இதை " உலகின் பேரதிசயம்" என புகழ்கிறார்.இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கூடே உலகின் மிகப் பெரிய பறவைக் கூடு என கருதப்படுகிறது.இதன் நீளம் சுமார் 2 அடி.

நீண்ட குழல் போன்ற அமைப்பு கொண்ட இதன் கூடுகள் ,மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ,சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்டதாக இருக்கும். முதல் அறை நுழைவு மற்றும் ஆணின் ஓய்வு அறை, இரண்டாவதாகப் பெண் மற்றும் குஞ்சுகளுக்கான பிரத்யேக அறை ,மூன்றாவது வெளியில் செல்ல ஏதுவாகப் பின்வாசல் அமைப்போடு பின்னப்பட்ட அறை. கடினமான புற்களையும், வைக்கோல் ,மர நார்களைக் கொண்டு கூடு பின்னப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட சுமார் 500---1000 புற்கள் தேவைப்படும். மிக நேர்த்தியாக அடர்த்தியாக அமையப் பெற்றிருக்கும். ஒவ்வொரு புல்லும் 30 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும். எப்போதும் இக்குருவிகள், தாம் கட்டும் மரத்தின் தென் பகுதியையே தேர்ந்தெடுக்கும். கிழக்கிலிருந்து வீசும் காற்றும் , மழையும் குஞ்சுகளைத் தாக்காத வாறு ,இதன் கால ,இட தேர்வு அமையும். இதைக் கண்டு, விவசாயிகள் வட கிழக்கு பருவ மழை துவங்கும் என அக்காலத்தில் நம்பினர். அதற்கேற்ப குருவிகளும், பருவமும் அப்போது ஏமாற்றவில்லை.கருங்குருவிகள் ,இதன் கைவிடப்பட்ட கூடுகளைக் கையகப்படுத்தி ,தனது இருப்பிடமாக்கிக் கொள்ளும். இளம் குருவிகள் முதிர் குருவிகளின் கூடுகளுக்கு அருகில், கூடு கட்டிப் பழகும்.

பர்மாவில் காணப்படும் குருவிகள் ,வீடுகளின் மாடியில் ஒரு மூலையில் கூடமைக்கும் குணம் கொண்டவை. இது இந்நாட்டுக் குருவிகளுக்கு மட்டுமே உரித்தான குணம். அதற்கேற்ப அம்மக்களும், தங்கள் இல்லங்களின் மூலையில் இதற்கான தனி அமைப்பை உருவாக்கி வைக்கின்றனர். ஆண் குருவி ஒரு கூட்டைப் பின்னி முடிக்க 18--20 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பெண் முதல் கட்ட பணிகளை ஆராய்ந்து, தனது கற்பனைக்கேற்ப கூட்டில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னால் ஆணும் உடனடியாக தலைபடுகிறது. சில நேரங்களில் 75 சதவீத பணி முடிந்த பின்னும் ,பெண் கூட்டை நிராகரித்தால், ஆண் சளைக்காமல் புதிய கூட்டைப் பின்னத் துவங்கும். அப்போது 8 நாட்களில் அவை பின்னி முடிக்கிறது. கூட்டைப் பலப்படுத்தவும், தட்ப வெப்ப நிலையை சீராக வைக்கவும் ,பெண் களிமண் உருண்டைகளைக் கொணர்ந்து கூட்டின் உட்பகுதியில் பூசும். ஆணும் இப்பூச்சு வேலையில் பங்குகொள்ளும். அப்போது காதல் லீலைகளும் நிகழும். ஆண்மைக்கான நிரூபணமாக ,அழகாக களிமண் பூசும் ஆணையே பெண் விரும்புகிறது.

காரல் ஆண்டர்சன் நடத்திய தற்போதைய ஆய்வின் மூலமே இது தெரிய வந்திருக்கிறது. ஆணும், பெண்ணும் ஒரே சமயத்தில் பலருடன் உறவில் ஈடுபடும். ஆண், தனது மனைவியருக்காகப் பல கூடுகளைத் தயார் செய்து கொடுக்கும். சில சமயங்களில் தான் கட்டிய கூட்டிற்குப் பல பெண்களை அழைத்து வரும். இது பெண்களுக்கிடையேயான யுத்தத்தில் முடியும். அபூர்வமாக ஒரே கூட்டில் இரு பெண்கள் முட்டையிடும். 3--4 முட்டைகள் இடும். 14---20 நாட்கள் அடைகாத்தலுக்குப் பின் குஞ்சு வெளிவரும். பெண்ணே, குஞ்சைப் பராமரிக்கும். அவ்வப்போது ,ஆணும் உதவிசெய்யும். 6 மாத காலப் பராமரிப்புக்கு பின், குஞ்சுகள் தன் பெற்றோரைப் பிரிந்து தனி வாழ்க்கை மேற்கொள்ளும். ஒரு வருட வளர்ச்சிக்குப் பின் பருவம் எய்திய ஆணும், பெண்ணும் உறவுக்குத் தயாராகும். குறைந்தது 4 வருடங்கள் வாழும். உடலில் ஏற்படும் வர்ண மாற்றத்தின் மூலம் தாங்கள் பருவமெய்தியதை வெளிப்படுத்தும். காதலின் முதல் நிகழ்வாக ஆணும், பெண்ணும் இறக்கைகளை அடித்து ,மெல்லிய நடன அசைவுகளைப் பறந்தபடியே தரும்.

அபுல் ஃபசல் எழுதிய "அய்னி அக்பரி"யில் அக்பர் காலத்தில், கிளிகளைப் போல் இக்குருவிகளையும் மனிதர்கள் பிடித்து ,பயிற்றுவித்து ,சிறு வித்தைகள் செய்யப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.பயிற்சியாளன் குரல் எழுப்பியதும், கீழே உள்ள கூழாங்கற்களைக் கொத்தி எடுத்து வந்தும், அதே போல் ,கீழே கிடந்த காசை எடுத்து வந்து தந்ததையும் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார். ஜோர்டன் என்ற ஆய்வாளர் 1926ல் தான் எழுதிய கட்டிட கலை தொடர்பான புத்தகத்தில் இதையே செய்திருப்பதுடன்,இவற்றை "சிறந்த கட்டிடக் கலைஞன் " என்ற புகழாரம் சூட்டுகிறார். 1924 ல் டாக்டர் டி.பி. பிளட்சர் எழுதிய "இந்திய தோட்டக் குருவிகள்" என்ற புத்தகத்தில் பஞ்சாபில் நிலவும் ஒரு பழங்கதையை மேற்கோள் காட்டுகிறார். ஒரு குரங்கு தூக்கணாங்குருவிகளைப் பார்த்துக் கேலி செய்து ,அதன் கூட்டைப் பிரித்து துரத்தி அடித்து, தன் உருவத்தோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தியதாம். அக்குருவிகள் பேசாமல் மெளனம் காத்தன. மழைக் காலம் வந்ததும், குருவிகள் தான் கட்டிய வீட்டில் நனையாமல் பத்திரமாய் இருக்க, குரங்கோ மழையில் நனைந்து வீடில்லாமல் ,உணவில்லாமல் வருந்தியதாம். " உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்ற அறநெறி அடிப்படையில் இக்கதை புனைவிக்கப்பட்டிருக்கிறது. மின்மினிப்பூச்சிகளை வெளிச்சத்திற்காக இவை பிடித்துச் சென்று தன் கூட்டில் வைத்துக் கொள்ளும் என்ற புனைவு நம்மிடத்தில் உள்ளது.

புற்றீசல் போல் தோன்றியுள்ள செல்போன் டவர் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகளின் கர்ப்பப்பை மட்டும் தாக்கப்படவில்லை. தூக்கணாங்குருவிகளின் கருவும் கலைந்து ,குருவிகளே அற்றுப் போகும் நிலைக்கு வந்துவிட்டது. வயல் வெளிகளில் தெளிக்கப்படும் கொடூரமான ரசாயன மருந்துகளும் இதன் உயிருக்கு உலை வைத்து விட்டது. தற்போதெல்லாம் தூக்கணாங்குருவிக் கூடுகளை எந்த ஊரிலும் எளிதாக காண இயலவில்லை... வருத்தமாக உள்ளது...

-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா


நன்றி: உயிரோசை இணையம்

திங்கள், மே 23, 2011

புகுஷிமா அணுஉலை வெடிப்பு: வழிபயக்கும் ஊதியம்

1

அண்மையில் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநிலத்திலுள்ள மான்மத் பல் கலைக்கழகத்தில் உள்ளுறை வல்லுநராகத் (Scholar-in-Residence) தங்கியிருந்தேன். அப்பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் என்னைச் சந்தித்து அத்துறையின் பேராசிரியர் ஒருவருக்கு ஒரு பெரும் சிக்கல் எழுந்திருப்பதாகச் சொல்லி, அவரது வகுப்புகளை நான் முன்னெடுத்து நடத்த முடியுமா எனக் கேட்டார். அவரது இரண்டு வயது பச்சிளங்குழந்தைக்கு ஒரு கண்ணின் பின்பகுதியில் கட்டி ஒன்று வளர்ந்துகொண்டிருப்பதாகவும் அது புற்று எனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதால், அக்குழந்தைக்கு வேதியியல் சிகிச்சையும் அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் விளக்கினார். இரண்டே வயதான ஓர் இளம் பிஞ்சுக்கு இப்படி ஓர் இன்னலா என உறைந்து நின்றேன் நான். அந்தப் பேராசிரியரைச் சந்தித்து என்னென்ன பாடங்கள் நடத்த வேண்டுமெனத் திட்டமிட்டு விட்டு, குழந்தையைப் பற்றி விசாரித்தேன். கண்கள் பனிக்க, நா தழுதழுக்க சன்னமான குரலில் நிறுத்தி நிறுத்தி நிதானமாகப் பேசினார். ஒரு தந்தையின் அன்பும் கரிசனமும் கவலையும் பயமும் அவர் பேச்சில் விரவிக் கிடந்தன. அவர் வசிக்கும் நகரத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் குழந்தைகள் பலர் மூளைப் புற்றால் (brain tumor) பாதிக்கப்படுவதைச் சொன்னார்.

வடக்கே நியூயார்க் நகரமும் தெற்கே பிலடெல்ஃபியா நகரமும் தாங்கள் வெளியிடும் மாசுக்களோடு நியூஜெர்ஸியை நெரித்துக்கொண்டிருக்க, ஏராளமான மருந்து, மாத் திரை தயாரிக்கும் நிறுவனங்களின், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகளின், ஆயிஸ்டர் க்ரீக் (Oyster Creek) அணுமின் நிலையத்தின் நச்சுக்களோடு இம்மாநிலம் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. நியூஜெர்ஸி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே இதுபோன்ற ஒரு நெருக்கடிக்குள் பயணிப்பதாகவே உணர்கிறேன். பொருளாதார வளர்ச்சி, தனி மனித வருமான உயர்வின் காரணமாக உற்பத்தித்திறன் அதிகரிக்கும்போது, கனிம வளங்களின், ஆற்றலின் தேவைகளும் அதற்குள்ளவாறு உயர்கின்றன. சுற்றுச்சூழலும் உலக வளங்களும் இன்னும் அதிகமான பாதிப்புக்குள்ளாகின்றன. வளர்ச்சி, அபிவிருத்தி, மேம்பட்ட வாழ்க்கை முறை, உலகமயமாக்கல், முகிழ்க்கும் நாடுகள் (emerging countries) என்றெல்லாம் வலிமைமிக்க தரப்பு, இறுமாப்புகொள்ளும்போது, என்ன நடக்கிறதென்றே தெரியாத, ஏன் துன்புறுகிறோம் என்றே புரியாத மனித உயிர்கள் மறுபக்கம் பரிதவிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எடுத்துக்காட்டாக, தங்களின் வீணான வாழ்க்கை முறையால் தொழில்வளமுற்ற நாட்டுமக்களும் எஞ்சிய நாடுகளின் மேட்டுக்குடியினரும் பருவநிலைச் சீரழிவுகளை ஏற்படுத்துகின்றனர். கரியமில வாயுக்கள் அதிகரித்து, ஓசோன் படலத்தில் ஓட்டைவிழுந்து, புவி வெப்பமாகி, துருவப் பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து, கடலரிப்பு ஏற்படும்போது, இந்தச் சீரழிவோடு முன்பின் தொடர்பேயில்லாத ஏழை மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நவீன வளர்ச்சி சித்தாந்தத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதென்றால், வள்ளுவம் குறிப்பிடுவதுபோல

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

எனச் செயல்படலாம். இந்த வளர்ச்சி சித்தாந்தத்தின் வெளிப்பாடுகளான வளர்ச்சித் திட்டங்களை இன்னும் நுணுக்கமாக அளக்க வேண்டும்.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

எனும் வள்ளுவத்தை மையப்படுத்திச் சிந்திக்கும்போது, இத்திட்டங்களின் ‘வழிபயக்கும் ஊதியம்’ வன்முறை தோய்ந்ததாகவே, வாழ்க்கையைச் சிதைப்பதாகவே, வாழ்வுரிமைகளைச் சீரழிப்பதாகவே இருப்பதைக் காணலாம்.

அரசக் கட்டமைப்புகளாலும் அணுசக்தித் துறைகளாலும் அணு மின் திட்டம், நவீன வளர்ச்சித் திட்டங்களில் முக்கியமான ஒன்றாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. அழிவது எதுவுமேயில்லை என்பது தான் அவர்களின் வாதம், நிலைப்பாடு. அணுமின் நிலையங்களில் பெரும் விபத்துகளோ இதர நிகழ்வுகளோ நடக்க வாய்ப்பேயில்லை என அடித்துக் கூறுகின்றனர். தீவிரவாதத் தாக்குதல்களோ போர்க்கால நடவடிக்கைகளோகூட அணுமின் நிலையங்களை அசைக்க முடியாது என்கின்றனர். அணுமின் நிலையங்களிலிருந்து புகைப்போக்கிகள் வழியாகவோ உலைகளைக் குளிர்விக்கப் பயன்படுத்தும் தண்ணீர் மூலமாகவோ வேறு வழிகளிலோ குறிப்பிடப்படும்படியான அளவில் கதிர்வீச்சு வெளியேறுகிறது என்கின்றனர். அப்படிக் கதிர்வீச்சு நிகழ்ந்தால், அனுமதிக்கத் தகுந்த அளவுக்குள்ளேயே (Permissible limits) இருப்பதாகச் சமாளிக்கின்றனர். புகுஷிமா நிகழ்ந்த பிறகு, இந்தியப் பிரதமரும் (அணுசக்தித் துறை அமைச்சரும் இவர்தான்), அணுசக்தித் துறைத் தலைவர்களும் சொல்லும் கதைகள் இன்னும் வேடிக்கையாக இருக்கின்றன.

பிரதமர் சொல்கிறார்: “இந்திய அணுசக்தித் துறையும் இந்திய அணுமின் கழகமும் பிற நிறுவனங்களும் சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளும் விதத்தில் நமது அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.” (இந்து, மார்ச் 15, 2001). இதற்கு என்ன அர்த்தம் என்பது அவருக்காவது தெரியுமோ என்னவோ? வெற்றுப் பேச்சு! இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் சிறீகுமார் பானர்ஜி பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜப்பானில் நடப்பது வெறும் வேதியல் வெடிப்பே தவிர அணுசக்தி வெடிப்பல்ல (chemical explosion and not a nuclear explosion) என்று திருவாய் மலர்ந்தருளினார். இம்மாதிரியான மழுப்பல்களும் மறுத்தல்களுமாகவே கதையை நடத்திவிடக் கங்கணம் கட்டி நிற்கிறது அணுசக்தித் துறையும் அரசும்.

ஆக மொத்தம் அணுமின் நிலையங்கள் அழிவேதும் ஏற்படுத்தியதேயில்லை, ஏற்படுத்தவுமில்லை, ஏற்படுத்தப் போவதுமில்லை என்பது அணுசக்தித் துறையின் நிலை. அணுமின் நிலையங்களிலிருந்து வெளிப்படும் கடைத்தரக் கழிவுகளைக் கடலுக்குள் கொட்டிக் கையைக் கழுவிவிடும் துறை உயர்தர, இடைத்தரக் கழிவுகளை எப்படிக் கையாளப்போகிறது, எங்கே வைத்துப் பாதுகாக்கப் போகிறது என்பது பற்றியெல்லாம் பேசுவதேயில்லை. அணுஉலைகள் 40 - 50 ஆண்டுகள் மின்சாரம் தயாரித்து முடித்த பிறகு அவற்றைச் செயலிழக்கச் செய்து நிர்வகிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறது அணுசக்தித் துறை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

1978 மூன்று மைல் தீவு விபத்துக்குப் பிறகு அமெரிக்காவும் 1986 செர்னோபில் விபத்துக்குப் பிறகு ரஷ்யாவும் தங்கள் நாடுகளில் புதிய அணுமின் நிலையங்களை நிறுவவில்லையே? ஜெர்மனி உள்ளிட்டப் பல முன்னணி தொழில்மயமான நாடுகள் அணுமின் தொழில்நுட்பத்தையே ஐயத்தோடும் அச்சத்தோடும் கண்ணுறுகின்றனவே? இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் அந்நாடுகளின் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டிக்கொடுக்கவும் அந்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவும்தானே முக்கியமாக முனைகின்றன? உயர்நிலை விஞ்ஞானத் தொழில்நுட்பப் பேருதவி என்னும் பெயரில் அணு வாயு தங்கள் தயாரிப்பில் மறைமுக மாக உதவி சீனாவையும் நம்மையும் ஆயுதப் போட்டியில் சிக்கவைத்துத் தனது ஏகாதிபத்தியத்தை இடைஞ்சல் ஏதுமின்றித் தொடர அமெரிக்கா திட்டமிடுகிறதோ? பருவ நிலைச் சீரழிவுக்கு ஒரே பதில் அணுமின்சாரம் என்பது பொய்யல்லவா? அணுமின் நிலையங்கள் கட்டுவதற்குத் தேவையான அளவற்ற எஃகு கம்பிகளும் சிமெண்டும் மின்சாரமும் மாசுபடுத்தும் ஆற்றலிலிருந்துதானே பெறப்படுகின்றன? மாசுபட்ட காற்றுக்கு மாற்று கதிர் வீச்சு விஷம் கலந்த காற்றும் கடலும் நிலமும் என்பது மடமையிலும் மடமையல்லவா? இன்னபிற கேள்விகளைக் கேட்டால் கேட்பவரின் நன்னடத்தையை, நாட்டுப்பற்றைக் கேள்விக்குள்ளாக்குவது ஏன்?

அணுமின் நிலையங்களால் ஆவதுதான் அதிகமென்கின்றனர் அரசும் அணுசக்தித் துறையும். நிறுவப்பட்ட 1948ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கணக்குவழக்கின்றி எண்ணிறந்த கோடிகளை விழுங்கி ஏப்பம்விட்ட பிறகும் கேள்விகள் கேட்பாரின்றி மத்திய அரசின் செல்லப்பிள்ளையாகத் தின்று கொழுத்திருக்கும் இந்திய அணுசக்தித் துறை இன்றுவரை சாதித்திருப்பது என்ன தெரியுமா? வெறும் 4780 மெகாவாட் மின்சாரமும் உண்மையிலேயே வெடித்தனவா எனும் விவாதத்துக்குள்ளாகியிருக்கும் அணுகுண்டுகளும்தாம். 2000ஆம் வருடத்துக்குள் 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்போம் என்றும் 2020ஆம் வருடத்துக்குள் 40,000 மெகாவாட் மின்சாரம் கரைபுரண்டு ஓடுமென்றும் வாக்குறுதிகள் மட்டுமே வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது அணுசக்தித் துறை. 1998ஆம் ஆண்டின் அணுவாயுதப் பரி சோதனைகளுக்குப் பிறகு, இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பே எங்களால்தான் சாத்தியமாயிற்று என்று மார்தட்டிக்கொள்ளும் அணுசக்தித் துறை, இவ்வாயுதங்களால் எழுந்த கார்கில் யுத்தத்தை, கனத்த பல தீவிரவாதத் தாக்குதல்களை, எந்தவிதத்திலும் உதவமுடியாதிருக்கும் தங்கள் ஆயுதங்களின் இயலாமையை அப்படியே மறைத்துவிடுகின்றனர். அத்தைக்கு மீசை முளைக்கும் பார், அவளை நான் ஆசையோடு சித்தப்பாவென்றழைப்பேன் பார் என்ற கதைதான் அணுசக்தித் துறையில் இன்றுவரை நடந்துவந்திருக்கிறது.

2

அழிவதே இல்லை, ஆவதே அதிகம் என்று கொண்டால்கூட, ‘வழிபயக்கும் ஊதியம்’ என்று ஒன்றைச் சொல்கிறாரே வள்ளுவர்? “விபத்தேதும் நடக்காது, நடக்க முடியாது” என்ற வெற்றுப் பேச்சுகளையும் வெறும் வாய்ச்சொற்களையும் பொய்யாக்கி, மார்ச் 11ஆம் தேதி மதியம் 2:45 மணிக்கு ரிக்டர் அளவு 9 கொண்ட பயங்கரமான நிலநடுக்கம் வட ஜப்பானைத் தாக்கி 10 மீட்டர் உயரமான சுனாமி அலைகளை உருவாக்கியது. அமெரிக்க ரியாக்டர்களுடனும் ஜப்பானியத் தொழில்நுட்பத்துடனும் மேலாண்மையுடனும் இயங்கிக்கொண்டிருந்த புகுஷிமா அணு உலைப் பூங்கா தாக்குதலுக்குள்ளாகியது.

மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட இந்த அணுஉலைகளில் முதல்நிலைப் பாதுகாப்பு செவ்வனே வேலை செய்தது. நிலநடுக்கம் நடந்ததும் எரிகோல்கள் மூடிப்பாதுகாக்கப்பட்டன, அணு வினை நிறுத்தப்பட்டது. எனினும் எரிகோல்கள் வெப்பத்தை உமிழ்ந்துகொண்டுதானிருந்தன. எனவே ரியாக்டரைச் சுற்றியுள்ள குழாய்கள் வழியாகத் தண்ணீரைச் செலுத்தி அது குளிரூட்டப்பட வேண்டும். நிலநடுக்கத்தால் நிகழ்ந்த மின்தடை காரணமாகக் குளிரூட்டும் செயல் தடைபட்டது. ஆனாலும் டீசல் ஜெனரேட்டர்களால் இயக்கப்படும் குளிரூட்டு அமைப்பு இயங்கத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து சுனாமி அலைகள் தாக்கியபோது டீசல் ஜெனரேட்டர்கள் செயலிழந்துபோயின. ஆனால் பாட்டரிகள் எட்டு மணி நேரம் செயலாற்றிய பிறகு நின்று போயின. மூன்றாம் கட்ட ஏற்பாடு தொடர்கிறது. குளிரூட்டிக்கொண்டிருக்கும் தண்ணீர் சூட்டால் நீராவியானாலும் அதையே மீண்டும் தண்ணீராக்கிச் சுற்றவிடுவது, நடந்துகொண்டிருந்தது. ஆனால் தண்ணீரின் அளவு வேகமாகக் குறைந்து போயிற்று. மேலும் ரியாக்டரில் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறார்கள் வல்லுநர்கள். எரிகோல்கள் தொடர்ந்து சூடாகி, நீராவி ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் எனப் பிரிந்து, வெளியேறிய ஹைட்ரஜன் கட்டடங்களின் வெளிப்புறங்களை வெடிக்கச் செய்தன. டைக்சி வளாகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று உலைகள் வெடித்து நெருப்பையும் புகையையும் கதிர்வீச்சையும் கக்கின. தற்போது டைனி வளாகத்திலுள்ள ஓர் உலையும் ஆபத்தான நிலையில் உள்ளது.

புகுஷிமா அணுஉலைகளிலிருந்து 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்த வளையத்தைத் தாண்டி வெளியே வாழ்ந்த மக்கள்கூடத் தாங்களாகவே தம் ஊர்களையும் உறைவிடங்களையும் உதறித் தள்ளிவிட்டு அணுசக்தி அகதிகளாக வெளியேறினர். மிகப் பயங்கரமான நிலநடுக்கத்தையும் அதனால் எழுந்த சுனாமியையும் இப்பேரிடர்களால் மின்சாரம் குடிதண்ணீர், சூடேற்றம் ஏதுமற்ற பல நாட்களையும் எதிர்கொண்ட மக்கள் தமது மனதுக்கிதமான வீடுகளைவிட்டு வெளியேறக் காரணம் கண்ணுக்குத் தெரியாத கதிர்வீச்சு. ஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுதத் தாக்குதல்களால், அங்கெழுந்த கடுமையான கதிர்வீச்சுகளால் நிலைகுலைந்த நினைவுகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கின்றனர். கதிர்வீச்சு பற்றிய கடுமையான பயத்துடன், தங்கள் அரசு முழுமை யான தகவல்களைத் தங்களுக்கு அறியத் தரவில்லை எனும் ஐயமும் இம்மக்களிடையே ஆழமாய் வேர்விட்டிருக்கிறது.

உலைகளைக் குளிர்விக்கத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதால் கதிர்வீச்சுக்குள்ளான தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதில் ஒரு பகுதியை அண்மையில் கடலில் கொட்டினர்; அண்டை நாட்டுக் கொரிய மக்கள் இதை வரவேற்கவில்லை. தென்கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளில் அயோடின் - 131, சீசியம் - 137, சீசியம் - 134 போன்ற கதிர்வீச்சு துகள்கள் காற்றில் விரவி பரந்திருப்பதாக இந்நாட்டு அரசுகள் தெரிவிக்கின்றன.

புகுஷிமா அணுஉலைகள் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அதற்கு நீண்டகால அவகாசம் தேவைப்படலாம். அப்படியானால் காற்றின் மூலமும் தண்ணீர் வழியாகவும் இன்னும் அதிகக் கதிர்வீச்சு பரவும் ஆபத்துத் தொக்கி நிற்கிறது.

3

கதிர்வீச்சு என்பது ஒரு பொருளின் அனைத்து அணுக்களின் அணுமையங்களிலும் நிகழும் ஒரு வித சக்தியின் வெளிப்பாடாகும். மாதுளம்பழம் போன்றது இந்த அணுமையம். நியூக்ளியஸ். அதனுள்ளே உள்ள வித்துக்கள் புரோட்டான்கள் என்றால், சதைப் பகுதி நியூட்ரான்கள். பழத்தின் வெளியே மொய்த்துச் சுழலும் ஈக்கள் கூட்டம் எலக்ட்ரான்கள். ஒவ்வொரு அணுமையமும் தான் வெளிப்படுத்தும் துகள், புதிய அணுமையம் என இரண்டாகப் பிளவுபடும். இந்தப் பிளவுகள் மிகத் துரிதமாக நடைபெறுவதால் எந்த அணு அடுத்ததாகப் பிளவுபடும் என அறியமுடியாது. கதிர்வீச்சு எனும் வார்த்தை மிகவும் விரிவான அர்த்தம் கொண்டது. ஒளி அலைகளையும் கதிர் அலைகளையும் குறிக்கிறது என்றாலும் பெரும்பாலான சமயங்களில் மின்னணுக்களை உருவாக்கும் கதிர்வீச்சு என்பதையே உணர்த்துகிறது. அதாவது தான் தாக்கும் எந்தவொரு அணுவையும் மின்சக்தி வாய்ந்த மின்னணுவாக மாற்றும் வல்லமை மிக்கக் கதிர் வீச்சில் மட்டுமே நாம் பெரிதும் கவனம் செலுத்துகிறோம். இம்மாதிரி கதிர் வீச்சு நமது உடலில் மின்னணுக்களைத் தோற்றுவித்தால் சாதாரண உடற்கூறு, அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படும். கதிர்வீச்சு நோயென்றும் புற்றுநோயென்றும் பரிதவிக்க நேரிடும்.

இயற்கையாகவே கதிர்வீச்சு இயல்புள்ள பொருட்கள் மூன்று விதக் கதிர்களை வீசுகின்றன. ஆல்ஃபா கதிர்வீச்சு என்பது அதிக வேகத்தில் செல்லும் ஹீலியம் அணுக்களின் அணுமையங்கள். தோலின் மேற்பரப்பை ஊடுருவும் சக்தி வாய்ந்த இதை ஒரு தாள் கொண்டு நிறுத்திவிடலாம். பீட்டா கதிர்வீச்சு என்பது அதிக வேகத்தில் செல்லும் எலக்ட்ரான்கள். ஆல்ஃபா கதிர்களைவிட ஆழமாக ஊடுருவும் தன்மையது என்றாலும் அலுமினியத் தகட்டால் இதை முற்றிலுமாகத் தடுத்துவிட முடியும். கண்ணுக்குத் தெரியும் ஒளிக்கதிர் போன்ற ஃபோட்டோன்களின் (photon) அணிவகுப்பைக் ‘காமா’ கதிர்வீச்சு என்கிறோம். காமா கதிர்களால் மனித உடலை ஊடுருவி மறுபக்கத்துக்குச் செல்ல இயலுமென்றாலும் ஒரு மீட்டர் பருமனுள்ள கான்கிரீட்டின் வழி புகுந்து செல்லும்போது முழுவதுமாகக் கிரகிக்கப்பட்டுவிடும்.

ஆல்ஃபா, பீட்டா, காமா போன்று நியூட்ரான் கதிர்வீச்சு எனவும் ஒன்று உண்டு. ஹைட்ரஜன் அணுக்களைவிடக் கனமான அனைத்து அணுக்களின் அணுமையங்களிலும் இந்த நியூட்ரான் உள்ளது. தான் மோதும் எந்தவொரு அணுவையும் மின்னணுவாக (ion) மாற்றும் இந்நியூட்ரான்களால் உடல் திசுக்களைத் தாக்கி அழிக்க முடியும்.

ஒரு விபத்து ஏற்பட்டு உடனடியாக அணுஉலை மூடப்பட்டப் பிறகும் உலையின் உள்ளே (core) எரிகோல்கள் எரிந்துகொண்டுதானிருக்கும். எனவே உலை சூடாகிக்கொண்டேயிருக்கும். இது குளிர்விக்கப்படாத நிலையில், உலையிலுள்ள வெப்பமும் அழுத்தமும் அதிகமாகி உலை வெடித்துச் சிதறும். யுரேனிய எரிகோல்கள் உருகிக் கசிந்து (meltdown) கதிர் வீச்சை உமிழ்ந்தால் உயிரினங்கள் அனைத்துக்கும் பேராபத்து உருவாகிறது.

1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் நாள் (அப்போதைய சோவியத் நாட்டின் மாநிலம்) தற்போதைய யுக்ரெய்ன் நாட்டிலுள்ள செர்னோபில் எனுமிடத்தில் அணுசக்தி நிலைய விபத்து ஒன்று நிகழ்ந்தது. 28 பேர் உயிரிழந்தும் 203 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் அனைத்தையும் துறந்து அகதிகளாய் ஓடியும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது இவ்விபத்து. விளைநிலங்கள் உபயோகமற்றதாகி, வீடுகளும் வீதிகளும் வெறிச்சோடிப்போயின. அண்டை நாடுகட்கும் பரவிய இக்கதிர்வீச்சால் அந்நாடுகளின் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்துகொண்டிருந்த மேற்கத்திய நாடுகள் அவற்றை வாங்க மறுத்தன. வாணிபம் தடைபட்டது. வாழ்க்கை ஸ்தம்பித்தது. ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தைக் கழித்துவிட்டுத் தமது உறைவிடமான ஸ்காண்டிநேவியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பறவைகள் செர்னோபில் வழியாகப் பறக்க நேரிட்டது. பாவம் பின்லாந்து நாட்டு எல்லையில் கூட்டம் கூட்டமாய் இறக்க நேரிட்டது. செர்னோபில் விபத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்புக்குள்ளான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பல்லாயிரக்கணக்கில் இறந்திருப்பதாகவும் இன்றளவும் துன்புறுவதாகவும் பல ஆய்வுகள் சுட்டுகின்றன.

4

தமிழகத்திலோ தலைக்கும் காலுக்கும் கொள்ளிவைப்பது போலக் கல்பாக்கத்திலும் கூடங்குளத்திலும் அணுஉலைகள் கட்டப்பட்டுவருகின்றன. எங்குமேயில்லாத ஈனுலைகள் (fast breeder) கல்பாக்கத்திலும் இந்தியாவிலேயே அதிக சக்தி வாய்ந்த 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு உலைகள் கூடங்குளத்திலும் நிறுவப்படுகின்றன. 2004 டிசம்பர் மாதம் 26ஆம் நாள் நடந்த சுனாமி கல்பாக்கம் அணுமின்நிலையத்தை மூழ்கடித்தது. சுமார் 10 பொறியாளர்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களையும் காவுகொண்டதாக அதிகாரபூர்வ மற்ற தகவல்கள் தெரிவித்தன. ஊழியர் குடியிருப்பு பெரும் சேதத்துக்கு உள்ளாகியது. கூடங்குளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

2003ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி பாளையங் கோட்டையிலும் 2006ஆம் வருடம் மார்ச் மாதம் 19ஆம் தேதி மாலை 6:50 மணிக்கு கன்னன்குளம் அஞ்சு கிராமம் அழகப்பபுரம் மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களிலும் மெலிதான நிலஅதிர்வு ஏற்பட்டுச் சுவர்களிலும் கூரைகளிலும் கீறலும் உடைவும் ஏற்பட்டன. புகுஷிமா விபத்து ஒட்டுமொத்த தமிழினத்தையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

கடந்த மார்ச் 11ஆம் நாள் கூடங்குளம் அணுமின்நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி நிருபர்களை அழைத்து “கூடங்குளம் அணு உலைகள் சமீபத்திய தொழில்நுட்பத்தில் செயல்பட உள்ளன” என்றும் “கடல் மட்டத்திலிருந்து 60 மீட்டர் உயரத்தில் ரியாக்டர் அமைக்கப்பட்டுள்ளது” என்றும் (தினமலர், மார்ச் 16, 2011) கூறி அவர்களைத் தேற்றி அனுப்பியிருக்கிறார். இந்தக் கூற்றுக்களின் உண்மை, நம்பகத்தன்மை பற்றிக் கேள்விகள் எழுப்பப்பட்டாலும் சில தமிழ்ப் பத்திரிகைகள் அணு சக்தித் துறையின் ஆறுதல்களை அப்படியே ஏற்றுக்கொண்டு புகுஷிமா செய்திகளை இருட்டடிப்புச் செய்கின்றன. தென்தமிழகத்தில் புற்று நோய் தொற்றுநோய் போன்று பரவிக்கொண்டிருப்பதையோ அரசு நிறுவனமான இந்திய அரியவகை தாதுக்கள் மற்றும் பல தனியார் மணற்கொள்ளைக் கம்பெனிகள் தென்தமிழகக் கடற்கரையைக் கபளீகரம் செய்வதையோ கூடங்குளம் அணுமின்நிலைய விபத்துகளுக்கோ இழப்புகளுக்கோ ரஷ்ய அரசு இழப்பீடு ஏதும் தராது, இந்திய அரசின் இழப்பீடு சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று ரஷ்ய அரசு அறிவித்திருப்பதையோ பொருட்படுத்தாது அணுசக்தித் துறையின் விளம்பரங்கள் மூலம் பொருளீட்டுவதிலேயே அப்பத்திரிகை நிறுவனங்கள் கவனமாயிருக்கின்றன. பல மதக் குழுமங்களும் தொண்டு நிறுவனங்களும் மத்திய அரசோடு பகைப்பானேன், அயல் நாட்டு வரவுகளை இழப்பானேன் என்று கண்களை மூடிக்கொள்கின்றன.

மேற்கு வங்கத்தில் அணுமின் நிலையங்களை அனுமதிக்கமாட்டோம் என்று மாவோயிஸ்ட்களும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் அறிவித்துள்ளன. மகாராஷ்டிர மாநிலம் ஜைத்தாப்பூரில் திட்டமிடப்பட்டிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான ‘அரெவா’ அணு உலையை எதிர்க்கிறோம் என சிவ சேனா அறிவித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ ஜப்பானிய விபத்துகளுக்குப் பிறகு வாய் திறக்கவில்லை, மௌனம் கலைக்கவில்லை. அணு சக்தியின் இன்றியமையாமை பற்றித் தனது நாடாளுமன்ற கன்னிப் பேச்சில் கட்டியம் கூறிய கனிமொழிகூட இதுவரை கருத்தேதும் கூறவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் மக்களுக்கு எந்தவிதமான கதிர்வீச்சுப் பேரிடர் தகவல்களையோ பயிற்சிகளையோ தரவேயில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் பேரிடர் முன்னேற்பாடுகள் பற்றி வினவியபோது தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரித்திருக்கிறார்கள்.

செர்னோபில் விபத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் தருணத்தில், மொத்த உலகமே புகுஷிமா விபத்தால் செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளையில், பல நாடுகள், நிறுவனங்கள் புதிய ஆற்றல் (New Energy) கூறுகளை ஆராயும் நிலையில் இந்திய அரசும் அணுசக்தித் துறையும் தமிழருக்குத் தரும் பரிசு: கூடங்குளம் முதல் அணுஉலை ஜூன் மாதம் செயல்படத் தொடங்கும். அந்த மின்சாரம் செப்டம்பர் மாதம் கிரிட்டில் (grid) சேர்க்கப்படும் எனும் அறிவிப்பு (பிசினஸ் லைன், ஏப்ரல் 1, 2011). கூடங்குளம்-2, ஓராண்டுக்குள் இயங்குமாம். கூடங்குளம் 3, 4, 5, 6 அணுமின் நிலையங்களின் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இத்தனை நிலையங்களினின்றும் வெளிவரும் கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஒரு சுத்திகரிப்பு நிலையமும் வரலாமாம். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வெகுதூரத்தில் அமைந்திருப்பதால் கூடங்குளத்தில் அணுவாயுத நிலையமும் கட்டப்படலாம். மொத்தத்தில் ‘ஒளிமயமான’ எதிர்காலம் நம் கண்முன்னே உருவாகிக்கொண்டிருக்கிறது.

தட்டிக்கேட்கும் திமிர், வீரம் கொண்ட தமிழர்கள் அழிக்கப்பட்டும் அடக்கப்பட்டும் விட்டனர். கைகட்டி இலவசங்களுக்காய் ஏங்கிக்கிடக்கும் தமிழர்கள் எழுந்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும்

நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து

வஞ்சகமழிக்கும் மாமகம் புரிவம் யாம்

எனும் பாரதியின் வார்த்தைகளை நினைந்து நடப்போம், காலம் மாறும்!

-சுப. உதயகுமாரன்

நன்றி: காலச்சுவடு, மே 2011

புதன், மே 18, 2011

எண்டோசல்ஃபான் எனும் எம தூதன் ! எதிர்ப்புக் காட்டும் உலகம்...வக்காலத்து வாங்கும் இந்தியா...

'கல்யாணத்துக்கு வரச் சொன்னா... கருமாதிக்கு வந்து சேர்ந்திருக்கான் பாரு’ என கிராமத்தில் சொல்வார்கள். இந்தச் சொலவடை அரசு இயந்திரத்தை உருட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டணிக்கு, காலகாலமாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே பொருந்திக் கொண்டிருப்பதுதான் மக்களின் சாபக்கேடு!

''விவசாயப் பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி என்ற பெயரில் தெளிக்கப்படும் 'எண்டோசல்ஃபான்', மிக வீரியம் மிக்க விஷமாக இருக்கிறது. இது மனித இனத்துக்கே, பெரும்கேடாக முடியப்போகிறது'' என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்களும், சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் பாதிப்பு எப்படி இருக்கும், என்பதற்கு சாட்சியாக கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

இதன் பிறகும்கூட, 'எண்டோசல்ஃபான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் வேண்டும்' என்று சொன்னபடி... அந்தப் பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு தடைவிதிக்க மறுத்து வருகிறது, இந்திய அரசு.

அது மட்டுமா... சமீபத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் உலக நாடுகள் ஒன்றுகூடி, 'உலக அளவில் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கப்படும்' என்று முடிவெடுக்க... அந்தக் கூட்டத்திலும்கூட, 'இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க முடியாது. அதற்கு இணையாக இன்னொரு விஷத்தைக் கண்டுபிடித்து எங்கள் கையில் கொடுத்துவிட்டு தடை செய்யுங்கள்' என்று கோரிக்கை வைத்திருக்கிறது இந்தியா! எங்கே போய் முட்டிக் கொள்வது நாம்?

ஆளையே காவு வாங்கிவிடும்!

'எண்டோசல்ஃபான்' பூச்சிக்கொல்லிக்கு எதிராகச் சுழன்று கொண்டிருக்கும் தன்னார்வலர்களில் முக்கியமானவர்... கேரளாவைச் சேர்ந்த 'தணல்' எனும் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதர். அவர் இதைப்பற்றி நம்மிடம் பேசியபோது, 'எண்டோசல்ஃபானை, 'பலரும் பூச்சிமருந்து'னு சொல்றாங்க. அது தப்பு... விஷம்னுதான் சொல்லணும். 'இரண்டாம் நிலை விஷப்பொருள்’னு உலகச் சுகாதார நிறுவனமும், 'முதல் நிலையில், இரண்டாம் பிரிவை சேர்ந்த நச்சுத்தன்மையுடைய பூச்சிக்கொல்லி’னு அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் எண்டோசல்ஃபானை அறிவிச்சிருக்கு.

இத்தகைய நச்சுப்பொருளைத்தான், உணவுப் பொருள் உற்பத்தியில அளவுக்கு அதிகமா நாம பயன்படுத்துறோம். இதன் நச்சுத்தன்மை மனுஷங்களோட உடம்புல சுலபமா நுழைஞ்சிரும். மூச்சுக்குழாய் வழியா மட்டுமில்ல... தோல்ல இருக்கற நுண் துளைகள் வழியாகூட நுழையக்கூடிய சக்தி அதுக்கு உண்டு. நுரையீரல், வயிறுனு வசதியா அது இடம் புடிச்சுட்டா... சாமான்யமா அசையாது. மத்த நச்சுகள், மலத்தோட வெளியேறுற மாதிரி, இது வெளியேறாது. உடம்புலயே தங்கி, 'ஸ்லோ-பாய்சன்’ மாதிரி செயல்பட்டு ஆளையே காவு வாங்கிடும்.

பயிர்கள்ல தெளிக்கப்படுற இந்த விஷம், காத்து மூலமா தண்ணியிலயும் கலந்திருது. அதை குடிக்கற கால்நடைகளின் ரத்தம் வழியா இறைச்சியில கலந்து, அதைச் சாப்பிடுற மனுசஷங்களோட ரத்தத்துலயும் கலந்து பல நோய்களை ஏற்படுத்துது. எண்டோசல்ஃபான் உள்ளிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், உயிருக்கும் சூழலுக்கும் மிகப்பெரிய அபாயம் ஏற்படுறதைத் தடுக்கவே முடியாது.

அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா?

பூச்சிக்கொல்லிகளோட தன்மை, அதனால ஏற்படுற பிரச்னைகள் இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு, அவை பத்தின உண்மை நிலையை அரசுக்கு அறிக்கையா கொடுக்கறதோட, தடை செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்து வைக்கறதுக்காக 'மத்தியப் பூச்சிக் கட்டுப்பாட்டுக் கழகம்' இயங்கிக்கிட்டிருக்கு. ஆனா, இந்த அமைப்பு தனியார் முதலாளிகளோட கட்டுப்பாட்டுலதான் முழுக்க இயங்கிக்கிட்டிருக்கு.

கேரளாவோட காசர்கோட்டுல நடந்த விபரீதங்கள் (பார்க்க, பெட்டிச் செய்தி) கண்முன் சாட்சிகளா இருக்கு. அதை அடிப்படையா வெச்சே எண்டோசல்ஃபானைத் தடை செய்யலாம். பெரும்பாலான உலக நாடுகள் தடை விதிச்ச பிறகும், நம்ம அரசு அசையாம இருக்கு. 1952-ம் வருஷமே அமெரிக்காவுல டி.டி.டி ரசாயன மருந்தைத் தடை பண்ணிட்டாங்க. ஆனா, 50 வருஷம் கழிச்சு, 2002-ம் வருஷம்தான் இந்தியாவுல அதைத் தடை பண்ணியிருக்காங்க. ஒரு நாட்டுல வாழற மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துற ரசாயனம், அடுத்த நாட்டுல இருக்கற மக்களை வாழவா வைக்கும்? இந்த அடிப்படை அறிவுகூடவா நம்ம அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்காது? இல்ல... அமெரிக்காவுல இருக்கறவங்கதான் வாழத் தகுதியான மனுஷங்க... இந்தியா மாதிரியான நாடுகள்ல இருக்கறவங்க வாழத் தகுதியில்லாத இழிபிறவிங்களா?'' என்று கொதிப்புடன் கேட்ட ஸ்ரீதர்,

''போபால் விஷ வாயுக் கசிவு மாதிரியான மிகமோசமான விளைவுகள் ஏற்படுறதுக்குள்ள எண்டோசல்ஃபானை அரசு உடனடியா தடை செய்யணும்' என்று தங்களின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்!

நாசமாகும் நரம்பு மண்டலம்!

தமிழகத்தில் எண்டோசல்ஃபான் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 'செரின்' அமைப்பின் நிர்வாகி ஜேம்ஸ் விக்டர், ''தமிழகத்தில், எண்டோசல்ஃபான் பாதிப்பு பற்றி சரியான ஆவணங்கள் இல்லை. அதனால், என்ன மாதிரியான பாதிப்புகள் என்பது குறித்து இங்கே யாருக்கும் தெரியவில்லை. அதேசமயம்... இதுதான் என்று தெரியாமலேயே பலவகையான பாதிப்புகள் பரவலாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விவசாயிகளுக்கு அதை தெரிவிக்க, நாம் தவறி விட்டோம்.

இந்தப் பூச்சிக்கொல்லியைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பு ஏற்படுவதோடு, நிலத்தில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகின்றன. இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட்டு, உயிர்ச்சூழல் மிகப்பெரிய அபாயத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எண்டோசல்ஃபானின் நச்சுத் தன்மை, மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. இதை அதிகமாக நுகரும்போது தலைவலி, மயக்கம், சோர்வு, மனஅழுத்தம் ஏற்படுகிறது. அளவு கூடும்போது, கடும் விஷமாக மாறி, உயிருக்கே உலையாகிவிடும். புரோட்டின் குறைவாக உள்ளவர்களை இதன் நச்சு எளிதாக தாக்கும். இதனால் தோலில் வெடிப்புகள், புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற தொடர் பாதிப்புகளும் ஏற்படும்.

எண்டோசல்ஃபான் தெளித்த வயல்வெளிகளில் மேயும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சிறுநீரகங்கள், கல்லீரல், விந்துப் பைகள் செயலிழந்து, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, கண்பார்வை இழப்பும் ஏற்படுகின்றன. பயிர்களில் தெளிக்கப்படும்போது நீரிலும், பழம் மற்றும் காய்கறிகளிலும் ஏழு நாட்கள் வரை இதன் வீரியத் தன்மை இருக்கும். அதேசமயம், மண் துகள்களில் அவை படிந்து 60 முதல் 800 நாட்கள் வரை வீரியம் குறையாமல் இருக்கும். எனவே, உணவுப் பயிர்களில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். எண்டோசல்பானைத் தடை செய்ய இந்தியா உடனடியாக முன்வரவேண்டும்'' என்று வலியுறுத்தினார்.கல்யாணமா... கருமாதியா... என்பதை இனியாவது அரசு முடிவு செய்தால் நல்லது!.

உண்ணாவிரதம் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு!

'இந்தியா முழுவதும் எண்டோசல்ஃபானைத் தடை செய்ய வேண்டும்'' என்று ஏற்கெனவே வலியுறுத்தி வரும் கேரள முதல்வர் அச்சுதானந்தன், சமீபத்தில் அதிரடியாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார... எண்டோசல்ஃபானுக்கு எதிரானப் போராட்டம்... அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. எலியும், பூனையுமாக இருந்த பாரதிய ஜனதா உட்பட அரசியல் கட்சிகளும், நடிகர்களும்கூட அக்கறையோடு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

''காசர்கோடு மாவட்டத்தில் பலரும் பாதிக்கப்பட்டது போதாதா? அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால்தான் தடை செய்வோம் என மத்திய அரசு சொல்வது முறையா? விவசாயத் துறை மந்திரி சரத் பவார் மக்களைப் பற்றி சிந்திக்காமல், எண்டோசல்ஃபான் கம்பெனிக்கு வக்காலத்து வாங்குகிறார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றவாளி எனத் தெரிந்திருந்தும், ராசாவுக்கு வக்காலத்து வாங்கிய அரசுதானே இது... வேறு எப்படி இருக்கும்?'' என்று உண்ணாவிரதத்தில் குரல் எழுப்பிய அச்சுதானந்தன்,

''எண்டோசல்ஃபானுக்கு, தடைவிதிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதப்போகிறேன்' என்றும் தன் அக்கறையை வெளிப்படுத்தினார்.

அச்சுதானந்தன் உண்ணாவிரதமிருந்த அதேநாளில், கேரள சர்வக் கட்சித் தலைவர்கள் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, இந்திய அளவில் எண்டோசல்ஃபானைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது அதில், 'எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தடை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் இது பற்றிய அறிக்கை கேட்டிருக்கிறோம். இந்த அறிக்கை கிடைத்ததும், இறுதி முடிவு அறிவிக்கப்படும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உண்ணாவிரதம் மாநிலம் முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளத் தொலைக்காட்சிகளில் எண்டோசல்ஃபானால் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகள், பாதிப்பு காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஓரணியில் திரட்டியப் பெருமை எண்டோசல்ஃபானுக்கு கிடைத்துள்ளது.

எண்டோசல்ஃபானும்... காசர்கோடும்!

கேரள மாநிலத்தின், காசர்கோடு பகுதியில் மாநில அரசுக்கு சொந்தமான 4,700 ஏக்கர் முந்திரிக் காடுகளில் ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்ஃபான் தெளிக்கப்பட, அந்தப் பகுதியே நோயாளிகளின் பூமியாகிவிட்டது. உடல் ஊனமுற்றவர்களாக, புற்றுநோயாளிகளாக, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவர்களாக மொத்தத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து வருகிறார்கள் மக்கள். அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து, மக்கள் போராட ஆரம்பித்த பிறகு, விபரீதத்தை உணர்ந்த மாநில அரசு, உடனடியாக எண்டோசல்ஃபானுக்கு தடை விதித்தது . காசர்கோடு மாவட்டத்தை ஒட்டியுள்ள கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளிலும் எண்டோசல்ஃபானின் பாதிப்பு எதிரொலிக்க, கர்நாடக மாநிலமும் தடை விதித்துள்ளது.

கோடிகளில் நடக்கும் வியாபாரம்!

உலக அளவில் எண்டோசல்ஃபான் தயாரிப்பில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. பூச்சிக்கொல்லி தயாரிப்புத் தொழிலில் 3,800 முதல் 4,100 கோடி வரை வியாபாரம் நடக்கிறது. இந்தியாவில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் இத்துறையில் கால் பதித்திருந்தாலும், 'எக்செல் இன்டஸ்ட்டிரீஸ்', 'ஹிந்துஸ்தான் இன்செக்டிசைஸ்', ஈ.ஜ.டி. பாரி ஆகியவையே அதிகளவில் தயாரிக்கின்றன.

விதவிதமானப் பெயர்கள்!

'எண்டோசல்ஃபான்’, 'ஆர்கினோ குளோரின்’ வகையைச் சேர்ந்த ரசாயனப் பூச்சிக்கொல்லி. பழுப்பு மற்றும் கிரீம் நிறங்களில் சிறியத் தூளாகவும், படிகமாகவும் டர்பன்டைன் வாசத்துடனும் இருக்கும். குளோரின் ஏற்றப்பட்ட ஹைட்ரோ-கார்பன்தான் எண்டோசல்ஃபான் என அழைக்கப்படுகிறது. இதில் குளோரின் ஏற்றம் செய்யக் காரணியாக பயன்படுவது... தயோனில் குளோரைடு. இது, கந்தகத்தை பகுதிப் பொருளாகக் கொண்டுள்ளதால் நச்சுத் தன்மையுடையதாக இருக்கிறது.

எண்டோசைட் (Endosite), தியோடன் (Thiodan), ஹில்டன் (Hildan), எண்டோசெல் (Endocel),, எண்டாசிட் (Entacid), எண்டோசிட் (Endocid), ஹைசல்பான் (Hysulphan),, பாரிசல்ஃபான் (parrysulfan) ஆகிய பெயர்களில் எண்டோசல்ஃபான் சந்தைப்படுத்தப்படுகிறது.இது, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க நீரில் கலந்து தெளிக்கும் பூச்சிக்கொல்லி வகையைச் சேர்ந்ததாகும்.

தானியங்கள், காபி, பருத்தி, பழப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், உருளைக்கிழங்கு, தேயிலை, நெல், காய்கறிகள் மற்றும் உணவுப் பயிர்களில் நோய் உண்டாக்கும் பூச்சிகளை அழிக்கவும், மரத் துண்டுகளைப் பூச்சிகள் அரித்திடாமல் பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உச்சநீதி மன்றம் கேள்வி!

மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு 'எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், 'எண்டோசல்ஃபானைத் தயாரிக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் ஏன் தடை விதிக்கக்கூடாது? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கெஞ்சிய இந்தியா... மிஞ்சிய உலக நாடுகள்!

'உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயற்கை (ரசாயன) மாசு ஒழிப்பு' பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறும். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று, தங்கள் தங்கள் நாட்டிலுள்ள ரசாயனப் பாதிப்புகளைப் பற்றி விவாதிப்பார்கள்.

இந்த ஆண்டுக்கான மாநாடு ஏப்ரல் 25 முதல் 29 தேதி வரை நடைபெற்றது. இந்தியாவில் இருந்து, பார்வையாளராகக் கலந்துகொண்ட திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் அதைப்பற்றி நம்மிடம் பேசும்போது, ''மக்கள் நலனில் அக்கறையுள்ள பல நாடுகள் ஏற்கெனவே எண்டோசல்ஃபானைத் தடைசெய்து விட்டன. தற்போது நடைபெற்ற மாநாட்டில்கூட ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள், தங்கள் பகுதிகளில் தடை விதிக்கத் தயார் என அறிவித்தன. வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 'நாங்கள் ஏற்கெனவே தடை விதித்துவிட்டோம். என்றாலும், காற்றின் மூலம் பரவக்கூடிய இந்த மருந்தின் வீரியம், அது பயன்படுத்தப்படாத நாடுகளிலும்கூட பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உலகம் முழுவதும் தடை செய்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்' என வலியுறுத்தினர்.

பெரும்பாலான நாடுகளின் கருத்தும் இதுதான். இதை முன்கூட்டியே கணித்துவிட்ட இந்திய அரசின் பிரதிநிதிகள், 'ஓட்டெடுப்பு மூலமாக தடை ஏற்படுத்தி விடுவார்களோ' என அஞ்சி... ஆசிய மற்றும் பசிபிக் கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினர். 'எண்டோசல்ஃபான் உடனடியாக தடை செய்யப்பட்டால், பல விவசாயிகள் நஷ்டமடைவார்கள். இதனால் சமூக, பொருளாதாரத் தாக்கம் ஏற்படும். அதனால் தடைக் காலத்தை 2013-ம் ஆண்டுக்குப் பிறகு தள்ளிப்போடலாம்' என அதில் கெஞ்சிக் கூத்தாடியிருந்தனர். இதற்கெல்லாம் காரணம்... மக்கள் மீதான அபிமானமல்ல. பூச்சிக்கொல்லி தயாரிக்கும் கம்பெனிகள் மீதான அபிமானமே!

ஆனால், பெரும்பான்மையான நாடுகள் தடையை ஆதரிக்கவே, இந்தியாவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தடைக்கு எதிராக இதுவரை முழங்கி வந்த இந்தியப் பிரதிநிதிகள், வேறு வழியில்லாமல், 'ஐந்தாண்டுகள் வரையாவது அனுமதி தாருங்கள்’ எனக் கெஞ்ச ஆரம்பித்தனர். இதையடுத்து, இந்தியா, சீனா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு மட்டும் அடுத்த ஐந்து ஆண்டுக்கு எண்டோசல்ஃபானைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது'' என்றார் ஜெயக்குமார்


-ஆர்.குமரேசன், என்.சுவாமிநாதன்
படங்கள் உதவி: மதுராஜ், மாத்ருபூமி..

நன்றி: பசுமை விகடன், 25-மே-2011

திங்கள், மே 16, 2011

வனப் பாதுகாப்பு... தனிமனிதனிடம் இருந்துதான் தொடங்க வேண்டும் !

இந்தியா... புலிகளின் தேசம். அந்த அளவுக்கு இங்கே கணக்கு, வழக்கில்லாமல் புலிகள் நிறைந்திருந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் அவை தாறுமாறாக அழிக்கப்படவே... அருகி வரும் விலங்கினங்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டிய துரதிர்ஷ்டசாலிகளாக அவை மாறிப் போயிருக்கின்றன. 2006-ம் ஆண்டில் 1,413 என்ற கவலை தரும் எண்ணிக்கைக்கு புலிகள் குறைந்து போகவே... அவற்றுக்கு ஆதரவாக இயற்கை ஆர்வலர்கள் ஆர்த்தெழுந்து குரல் எழுப்பினர். அதையடுத்து, பல்வேறு தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு நேசக்கரம் நீட்ட... அரசுத் தரப்பிலிருந்தும் உதவிகள் வந்து சேர... புலிகளைக் காப்பாற்றும் முயற்சிகள் முடுக்கவிடப் பட்டன. இதையடுத்து, சமீபத்திய கணக்கெடுப்பின்படி 1,711 என்று நம்பிக்கை தரும் எண்ணிக்கைக்கு உயர்ந்திருக்கின்றன புலிகள்!


புலிகள் பற்றிய இந்திய ஆய்வாளர்களில் மிகமுக்கியமானவரான டாக்டர் உல்லாஸ் கரந்த்திடம், இதைப் பற்றிக் கேட்டோம். இவர், புலிகளை, அவற்றின் கால்த்தடங்கள் மூலம் கணக்கிடும் உத்தேச முறைக்கு மாற்றாக, புலிகளின் உடம்பில் உள்ள வரிகளை வைத்து மிகத் துல்லியமாக கணக்கிடும் 'கேமரா ட்ராப்பிங்’ முறையைக் கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

''புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது மிகமகிழ்ச்சியான செய்தி. புலி, மிகவும் அடர்ந்த காட்டில் மட்டுமே வாழும். நம்நாட்டில் இருந்த அடர்காடுகளில் 93% காடுகளை நாம் அழித்து விட்டோம். இருப்பினும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

தற்போது, வனங்களின் பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை. வனங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறை, வனத்துறை ஊழியர்கள் அத்தனைப் பேரிடமுமே இருப்பதில்லை. அவர்களில் பலரின் துணையோடுதான் வனமும், விலங்குகளும் சூறையாடப்படுகின்றன. காடுகளில் சாலை வசதி, அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள் என வனங்களை அழிக்கும் பல திட்டங்களை அரசே இயற்றுகிறது.

சமூக விரோதிகள், தங்கள் அன்றாடத் தேவைக்களுக்காக வனச் செல்வங்களைத் திருடிய காலம் போய், இன்று அதனை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள். இவை எல்லாவற்றையும்விட வனங்களைக் காப்பதில் நீயா... நானா... போட்டி மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. இத்தகையச் சூழலில், வனவிலங்குகளை நாம் எப்படி காப்பாற்ற முடியும். இனியாவது, அதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதை அரசாங்கமோ... அதிகாரிகளோ நிச்சயமாக எடுக்கமாட்டார்கள். அதை எதிர்பார்ககவும் கூடாது. ஏனென்றால்... வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு நம் ஒவ்வொருவருக்குமே வேண்டும். தனிமனிதனில் இருந்து அதை ஆரம்பித்தால்தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும்'' என்று நிதர்சனத்தை எடுத்து வைத்தவர்,

''காட்டுக்குள் விலங்குகள் வாழ்வதற்குத் தேவையான உணவு, நீர்நிலைகள், தகுந்த சூழ்நிலை இல்லாததால் சமீபகாலமாக அவை ஊருக்குள் வருகின்றன. இதனால் விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மக்களும், அரசும் விலங்குகளுக்குத் தேவையான வசதிகளை காட்டுக்குள்ளேயே செய்து கொடுத்தால்... அவை ஏன் ஊருக்குள் நுழைந்து, நம்மை இடையூறு செய்யப் போகின்றன?'' என்ற நியாயமானக் கேள்வியையும் எழுப்பினார்!

யார் கரடியாகக் கத்தினாலும்... புலியாக அலறினாலும்... கடைசிச் சொட்டுத் தண்ணீரும், கடைசி மூச்சுக் காற்றும் தீர்ந்தபிறகுதான் இயற்கையைப் பற்றிச் சிந்திப்போம்... என்ற முடிவிலிருப்பவர்களை என்னதான் செய்ய முடியும்?

-இரா. வினோத்

நன்றி: பசுமை விகடன்
25 மே 2011

சனி, மே 14, 2011

தமிழகத்தின் செர்னோபில் கல்பாக்கம்?!

உலக வரலாற்றின் பக்கங்களில் ரசாயன நெடி பூசிய செர்னோபில் கொடூரம் அரங்கேறி, 25 வருடங்கள் ஆகிவிட்டன. ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்து நடந்து கால் நூற்றாண்டுக்குப் பின்னரும் அந்த இடத்தில் கதிர் வீச்சின் வீரியம் குறையவில்லை. ஆனால், அந்தக் கொடூர அனுபவத்தில் இருந்து இந்த உலகம் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை... அல்லது கற்றுக்கொள்ள முயலவில்லை என்பது இன்னும் உறையச் செய்யும் அதிர்ச்சி!

அதிலும், தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்கள்... அவற்றில் கூடுதலாக இன்னும் சில அணு உலைகள் என விபரீதங்களுக்கு வரிசையாகக் கால்கோள் விழா எழுப்பிக்கொண்டு இருக்கிறோம்!

கல்பாக்கம் அணு மின் நிலையத்தால் தமிழகத்துக்கு விளைந்த நன்மை, தீமைகள் என்னென்ன? அந்தப் பகுதியில் அமைந்துள்ள சதராஸ் குப்பம், ஆயப்பாக்கம், பூந்தண்டலம், புதுப்பட்டணம் உட்பட ஏழு கிராமங்களுக்கும் சென்று வந்தோம்.

புவனேஸ்வரி. துறுதுறுவென விளையாடித் திரிய வேண்டிய நான்கு வயதுச் சிறுமி. குடிசையின் ஒரு மூலையில் சுருண்டுகிடந்தாள். ஒரு கையும் காலும் இல்லை. முகத்தில் ஆங்காங்கே கொப்புளங்கள். குடிசையை விட்டு வெளிச்சத்துக்கு அவளைத் தூக்கி வந்தாலே... அழுகிறாள்.

தொடக்கப் பள்ளியில் நான்காவது படிக்கிறாள் பவித்ரா. படிப்பில் படு சுட்டி. டாக்டர் கனவு காண்கிற பவித்ராவுக்கு, கால்களில் வலு இல்லை. சுயமாக நடக்க முடியாது. நடக்கிற போது கால்கள் இரண்டும் பின்னிக்கொள்கின்றன. தாய் மட்டுமே துணை. துணை இன்றி ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாது. ஓடும் கால்கள், நடக்கும் கால்கள், குதிக்கும் கால்கள் என விளையாடும் நண்பர்களின் கால்களை, மைதானத்துக்கு வெளியே இருந்து ஏக்கத்துடன் பார்க்கிறாள்.

விஜிக்கு 22 வயது. தன் வயதுப் பெண்கள் எல்லாம் குழந்தை பெற்றுக்கொண்டு சந்தோஷமாக இருக்க, இவருக்கோ மூன்று முறை கரு கலைந்து போனது. 6 மாதங்கள் வரை வயிற்றில் கரு தங்கி, கலைந்துபோனது மூன்று முறையும். மருத்துவர் களால் என்ன காரணம் எனக் கண்டறியப்பட வில்லை.

இப்படி அந்தக் கிராமங்களில் பத்து வீடுகளுக்கு நான்கு வீடுகளில் ஏதேனும் ஒரு குறைபாடுள்ள குழந்தை இருக்கிறது. இந்தப் பகுதி மக்கள் சந்திக்கும் உடல்ரீதியான பிரச்னைகள்பற்றி ஆய்வு செய்திருக்கிற அணு சக்தி எதிர்ப்பாளரும், மருத்துவருமான புகழேந்தி சில முக்கியத் தகவல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

''2003-ல் நான் ஒரு ஆய்வை மேற்கொண்டபோது, அதில் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர் குடும்பங்களில் உள்ளவர்கள் Multiple Myeloma எனும் எலும்பு மஜ்ஜைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அப்போது, மூன்று பேர் 21 நாள் இடைவெளியில் இந்தப் புற்றுநோயால் அடுத்தடுத்து இறந்துபோனார்கள். எனவே, புள்ளியியல் அடிப்படையில் மிக முக்கியத்துவம் (Statistically Highly Significant) வாய்ந்தது என்று அந்த மரணங்களைப் பதிவு செய்தேன்.

அதை எதிர்த்து, 'அப்படி எல்லாம் ஒன்றும் பாதிப்பு இல்லை’ என்று அணு மின் நிலையத்தார் அப்போது ஓர் ஆய்வை மேற்கொண்டதாகச் சொன்னார்கள். அந்த ஆய்வு அறிக்கை நகல் ஒன்றைத் தாருங்கள் எனப் பல ஆண்டுகளாகக் கேட்டும், அவர்கள் தரவில்லை. கதிர் வீச்சின் பாதுகாப்பான அளவு (Safe Dose) குறித்து நான் அந்தப் பகுதி முழுக்க ஆய்வு மேற்கொள்ள முற்பட்டேன். அதற்காக, எங்களுக்கு நிதி உதவி அளிக்க முன் வந்த சில தொண்டு நிறுவனங்கள், என்ன காரணத்தினாலோ கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டன. மிரட்டல் காரணமாக இருக்கலாம். அணு மின் பணியாளர்கள் உள்வாங்கும் External & Internal Dose பற்றி நான் ஆய்வு நடத்தவும் அவர்கள் வாய்ப்பு அளிக்கவில்லை.

2010-ம் ஆண்டில் டிராஃபிக் ராமசாமி என் ஆய்வுகளை அடிப்படையாகவைத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை புற்று நோயால் இறந்தவர்களின் பட்டியலைக் கேட்டு இருந்தார். அணு மின் நிலையத்தார், 10 வருடக் காலகட்டத்தில் இதுவரை 244 பேர் புற்று நோயால் இறந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்கள். அணு சக்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் ஓம் பால் சிங்கின் மகன் என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். அவர் Ewig Sacome எனும் எலும்பு மஜ்ஜை நோயால் தாக்கப்பட்டு இருந்தார். நோய் முற்றி, அவர் இறந்துவிட்டார். அணு சக்தித் துறையில் மிக முக்கியமானவராக இருக்கும் ஒருவரின் மகன் இறந்ததைக்கூட, அவர்கள் தந்த புள்ளிவிவரத்தில் பதிவு செய்யவில்லை. 244 கேஸ்களில் இந்த இறப்புபற்றி ஒரு செய்தியும் இல்லை.

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நியூஸிலாந்து நாட்டில் கிறிஸ்ட் சர்ச் என்னும் இடத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 65 பேர் உயிரிழந்தனர். நில நடுக்கப் பதிவேடுகளில், அந்த இடத்தில் நில நடுக்கம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனப் பதிவு செய்யப்பட்டு இருந்தபோதும் அங்கே நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை Blind Fault என்று அழைப்பர். கல்பாக்கம் பகுதியிலும் Blind Fault ஏற்பட வாய்ப்பு இல்லையா? முன்பு சென்னை நில நடுக்க அளவு 1-ல் இருந்தது. அதனால், நில நடுக்க அளவு 2-க்கு ஏற்றாற்போல, அணு உலையைக் கட்டி இருப்பார்கள். இன்று சென்னையின் நில நடுக்க அளவு 3-க்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கு ஏற்றபடி அணு உலையில் என்னென்ன மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள்? 'நிச்சயமாக நாங்கள் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்வோம்’ என்கிறார்கள் அணு நிலையத்தார். ஆனால், அந்த ஆய்வு யாரால் நிகழ்த்தப்படும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது!'' என்கிறார் புகழேந்தி.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அணு மின் நிலைய இயக்குநர் கே.ராமமூர்த்தியும், 'கிரீன் பீஸ்’ அமைப்பின் அணு சக்திக்கு எதிரான செயல்பாட்டாளர் கருணா ரெய்னாவும், 'அணு மின் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு’ பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள். கருணா முன்வைத்த எந்த ஒரு கருத்தையும் ராமமூர்த்தி மறுக்கவில்லை. அவர் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில் தெரிவிக்கவில்லை.


நிகழ்ச்சியில், ''பாதுகாப்பான அளவு கதிர் வீச்சு பற்றிப் பேசுகிறீர்களே... உங்கள் பணியாட்கள் உள் வாங்கும் கதிர் வீச்சின் அளவு என்ன?'' என்று நான் கேட்டதற்கு, ''அதுபற்றி எனக்குத் தெரியாது. அது தொடர்பான நிபுணர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்!'' என்றார். அணு மின் நிலையத்தின் இயக்குநராக இருப்பவருக்கு, இந்த சாதாரணத் தகவல்கூடத் தெரியாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இவரின் கட்டுப்பாட்டில் செயல்படும் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு நடை முறைகள் எந்த அளவுக்கு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே, உதறலாக இருக்கிறது!

மேலும் தன் உரையில் அவர், ''ஒருவேளை விபத்து ஏற்பட்டால், நிலையத்தில் இருந்து 1.6 கி.மீ. வரை என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அதற்கேற்றபடி நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பிட்ட கி.மீ-க்கு மேல் சென்றால், அது மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் வரும். விபத்து ஏற்பட்டவுடன் நான் அவருக்குத் தகவல் தெரிவிப்பேன். அவர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்றார் 'பொறுப்பாக’!

''ஒருவேளை அப்படி விபத்து ஏற்பட்டால், மக்களை வெளியேற்ற என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, ''நிலைய அலுவலர்களுக்கு, பணியாளர்களுக்கு எனத் தனித்தனியாக வாகனங்கள் வைத்திருக்கிறோம். அதில் அவர்களை ஏற்றி பத்திரமான இடங்களுக்குக் கொண்டுசெல்வோம்!''

''எத்தனை வாகனங்களை வைத்திருக்கிறீர்கள்?''

''ஏறக்குறைய 54 பேருந்துகள்!'' பேருந்துக்கு சுமார் 100 பேரை அமுக்கித் திணித்தாலும் அதிகபட்சம் 5,400 பேரை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியும். ஆனால், அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 10,000-க் கும் மேல்!

''உங்கள் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நீங்கள் 'ரிஸ்க் அலவன்ஸ்’ தருவது இல்லையாமே?'' என்ற கேள்விக்கு, ''ஆம், தருவது இல்லை. காரணம், நாங்கள் அவர்களுக்கு எந்த ரிஸ்க்கும் தருவது இல்லை!'' என்றார் ஜோக் அடித்த தொனியில்!

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்காக, நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் நகரியம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். 5 கி.மீ. தூரத்துக்குள் உள்ள ஐந்து கிராமங்களில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.

1986, மார்ச் மாதம் இந்த நிலையத்தில் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் எரிந்துபோனது. ஜூன் மாதத்தில் 15 டன் கன நீர் கசிந்து வழிந்தது. 1999, மார்ச் 26 அன்று, அணு மின் நிலையம் 2-ல் ஏற்பட்ட கன நீர் கசிவு காரணமாக, ஏழு பேர் அதிகபட்சக் கதிர் வீச்சுப் பாதிப்புக்கு ஆளானார்கள். 2011, மார்ச் 19 அன்று அணு உலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் கார்த்திக் என்ற பணியாளர் இறந்துபோனார்.

கடந்த ஏப்ரல் மாதம் இரவு தோன்றிய மின்னல் காரணமாக, கல்பாக்கம் முதல் அணு உலை மூன்று நாட்கள் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப் பல விபத்துகள் நடந்து இருக்கின்றன.

கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் எப்போதும் ரசாயன நெடி வீசிக்கொண்டே இருக்கிறது. ஒரு கையும், காலும் இல்லாத குழந்தையின் அம்மாவிடம் கேட்டேன், ''ஏம்மா... ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனீங்களா? டாக்டர் என்ன சொன்னார்?''

''எதனால இப்படி ஆச்சுன்னு எங்களையே கேட்கிறாங்க. என்ன பிரச்னை இருக்குன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க. என் குழந்தைக்கு விடிவுக் காலமே பொறக்காதா?''

மின்சாரம், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, வல்லரசு என்று கதைப்பவர்கள்... இந்தக் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள். மக்களை ஊனமாக்கிவிட்டு, தன்னிறைவு பெற்று என்ன செய்யப்போகிறீர்கள் விஞ்ஞானிகளே?

உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள்!

அணு மின் நிலையத்தைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் முழு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்!

அமெரிக்காவில் கதிர்வீச்சால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு Energy Employees Occupational Illness Compensation Program Act இருப்பதுபோல இங்கும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை முழு அளவில் ஆய்வு செய்ய வேண்டும்.

நில நடுக்க அளவு 3-க்கு ஏற்றாற்போல அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்த வேண்டும்!

''மாற்றி யோசிக்கலாமே!''

அணு மின்சாரத்துக்கு மாற்றாகச் சில யோசனைகளை முன்வைக்கிறார் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சார்ந்த சுந்தர்ராஜன்.


''இந்தியாவிலேயே இரண்டு அணு உலைகள் உள்ள மாநிலம் தமிழகம் மட்டும்தான். மின்சாரத்துக்காக அணு உலை என்று சொல்வது, பீரங்கியைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிப்பது போன்றது! இந்தியாவின் மின்சாரத் தேவை தற்சமயத்தில் 1,70,000 மெகாவாட்.
ஆனால், நாடு முழுக்க இருக்கும் 20 உலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரமோ வெறும் 4,780 மெகாவாட் மட்டும்தான்!

தமிழகத்தில் மட்டுமே குண்டு பல்புகளை நீக்கி விட்டு சி.எஃப்.எல். பல்புகளைப் பொருத்தினால், சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். அதை இந்தியா முழுக்கச் செயல்படுத்தினால், பெருமளவு மின்சாரம் மிச்சமாகும்! 2030-ல் நமது நாட்டின் வளர்ச்சி விகிதம் 8 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, நம் மின்சாரத் தேவை 6 முதல் 8 லட்சம் மெகாவாட் ஆக இருக்கும். அணுவைப் பயன்படுத்தி அதில், 6 முதல் 12 சதவிகித மின்சாரத் தேவையைத்தான் பூர்த்திசெய்ய முடியும் என்று அணு சக்தி ஆணையமே தெரிவித்து இருக்கிறது.

மின்சாரத்தை உற்பத்தி செய்து அதைப் பகிர்ந்து அளிக் கும்போது, குறிப்பிட்ட சதவிகிதம் இழக்கிறோம். அதாவது, Transmission & Distribution Loss. உதாரணமாக: 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரித்தால், இறுதிப் பயன்பாட்டுக்கு 8,000 மெகாவாட்தான் நம்மிடம் இருக்கும். 2,000 மெகாவாட் பகிர்ந்தளிக்கும்போது வீணாகிவிடும். 2008-ல் 'வேர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட்’ நடத்திய ஒரு கணக்கெடுப்பில் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக மின்சார இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்த மின்சார உற்பத்தியில் 27 சதவிகிதம் வீணாகிறது. இதைக் குறைப்பதில், கவனம் செலுத்தலாம்!

அணு மின் நிலையம் மூலமாக மின்சாரம் தயாரித்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லை என்பது, அதை ஆதரிப்பவர்களின் முக்கிய வாதம். ஆனால், அது முற்றிலும் தவறு. இயற்கையாகவே யுரேனியம் 238 கிடைக்கிறது. இதைச் செறிவூட்டினால் யுரேனியம் 35 கிடைக்கும். இதைத் தயாரித்தால்தான், அணு உலையின் செயின் ரியாக்ஷன் நடக்கும். இந்த யுரேனியத்தை எடுக்கும்போது கரியமில வாயுக்கள் வெளியேறும். ஆகவே, அணு மின்சாரம் மூலமாகவும் சூழல் கெடத்தான் செய்யும்.

காற்றாலைத் தொழில்நுட்பம், சூரிய ஒளி மின்சாரம், பயோமாஸ் எனப்படும் உயிர்த்திரள், புவிவெப்பச் சக்தி என மரபு சாரா முறையில் மின்சாரம் தயாரிக்கப் பல வழிகள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு, ஆபத்து அதிகமான அணு சக்தி மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதே உலகை நேசிக்கும் அனைவரின் கேள்வி!'' என்கிறார் சுந்தர்ராஜன்.

கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் குறைபாடுகளாக அந்தப் பகுதி மக்கள் முன் வைக்கும் பிரச்னைகள்!

அணு சக்திக் கழிவைக் கடலில் கலக்கிறார்கள். அதனால், கடல் நீர் உஷ்ணமாகி, மீன் வளம் குறைகிறது. நிலத்தடி நீர் வளமும் குறைந்துவிட்டது.

அணுக் கழிவுகள் கலப்பதால், கடலில் உள்ள பவளப் பாறைகள் அழிந்துவருகின்றன. அதனால், கடல்சார் சுற்றுச்சூழல் கெடுகிறது.

தைராய்டு புற்று நோய், கரு கலைதல், மூளை வளர்ச்சி இன்றிப் பிறக்கும் குழந்தைகள், கை-கால் போன்ற உறுப்புகள் இன்றி குழந்தைகள் பிறத்தல் போன்றவை கதிர்வீச்சாலும் ஏற்பட்டு இருக்கலாம். மேலும், கதிர்வீச்சுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டு பணியாற்றுபவர்களுக்கு உயிரணுக்களும் குறைவாக இருக்கின்றன.

அணு மின் நிலையத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில், நிலையத்தில் பணியாற்றுபவர் களுக்கு மட்டுமே அனுமதி. அங்கு யாருக்கும் மெடிக்கல் ரிப்போர்ட் கொடுப்பது இல்லை.

அந்த மருத்துவமனையில் அணு சக்தி ஒழுங்குக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி, கதிர்வீச்சு தொடர்பான விபத்துக்களைக் கையாள்வதற்கான சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் சரி இல்லை. உதாரணம், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு நடவடிக்கை பயிற்சி நடத்த வேண்டும் என்பது சட்டம். ஒரு முறை அந்த நடைமுறையின்போது மக்களை அவசரமாக அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றும் வாகனம் பஞ்சராகி நின்றது. வாக்கி-டாக்கி வேலை செய்யவில்லை!

கதிர்வீச்சு மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துச் சில தகவல்கள்...

கதிர்வீச்சைப் பொறுத்தவரை மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லவே இல்லை!

2005-ம் ஆண்டு ஜனவரியில் எக்ஸ் கதிர்கள், காமா கதிர் கள், நியூட்ரான்கள் போன்றவை புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என அதிகாரப்பூர்வமாக அறிவியல் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது!

அணுசக்தித் துறையில் மிகவும் முக்கியப் பிரச்னை, பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான். இதற்கான தொழில்நுட்பம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்தக் கதிர்வீச்சின் தாக்கம் கடல்வாழ் தாவரங்களில் எந்த அளவு இருக்கிறது என்பதை கல்பாக்கம் அணு நிலையத்தார் அளப்பதே இல்லை!

கதிர்வீச்சினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்றிலுமாகக் கண்டறியவே முடியாது என்பதுதான் இன்று நிதர்சனம்! உதாரணமாக, உடலில் கதிர்வீச்சு நேரடியாக ஸ்பரிசிக்காத உறுப்புகளிலும் ஏற்படும் பாதிப்பை By Stander Effect என்பார்கள். கதிர்வீச்சுப் பாதையில் உள்ள செல்களிலே ஏற்படும் வேதிமாற்றம் தூர உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும் பிரச்னை இது!

கூடங்குளம் நிலவரம் என்ன?

நாடெங்கும் அணு மின் நிலையங்கள் அமைப்பதுபற்றி விவாதங்களும், எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்து வரும் நிலையில், திருநெல்வேலி கூடங்குளத்தில் வருகின்ற ஜூன் மாதம் முதல் அணு மின் நிலையம் இயங்க இருப்பதாகச் செய்தி! அதன் பின்னணி குறித்து சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார், அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுப. உதயகுமாரன்...


''இந்த அணு மின் நிலையத்தை கடல் மணல் கலந்து கட்டி இருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் நான் ஜெய்தாபூர் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, தாராபூரில் ஒரு ஒப்பந்தக் காரரைச் சந்தித்தேன். அவர் கூடங்குளத்தில் எட்டு ஆண்டுகள் ஒப்பந்தம் எடுத்து வேலை பார்த்தவர். அங்கு நிறுவப்படும் பைப்கள் எல்லாம் மிகவும் மெல்லியதாக இருக்கின்றன. எளிதில் உடைந்துவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவித்தார். கூடங்குள அணு மின் நிலையத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.கே.அகர்வால், ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் செலவு செய்வதாக முன்பு ஒருமுறை தெரிவித்தார். இந்தத் திட்டம் ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிச் செயல்படுத்துகிற திட்டம். இதுவரை எத்தனை முறை கடன் வாங்கி இருக்கிறார்கள்? அத்தனை கோடி ரூபாய்களுக்கு என்னென்ன செலவுகள் செய்து இருக்கிறார்கள்? ஏற்கெனவே நிர்ணயித்த பட்ஜெட்டுக்குள் கட்டு மானப் பணிகள் நடைபெறுகின்றனவா? இல்லை தாண்டி விட்டதா? எல்லாம் கேள்விகள்தான்!

ஒரு வருடத்துக்கு முன்பு எஸ்.கே.அகர்வால், மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் புற்றுநோயால் இறந்தார். அணு மின் நிலைய இயக்குநராக இருந்தவரை, பதவி உயர்வு கொடுத்து, அணு சக்தி தொடர்பான பல்வேறு திட்டங்களில் நல்ல பதவி கொடுத்து, அவரை மாற்றல் செய்தார்கள். அப்படிப்பட்டவர் இறந்துபோன தகவல் குறித்து இதுவரையில் தகவல் வெளிவரவில்லை!

சர்வதேச அணு சக்தி வல்லுநர்கள் குழு (World Association of Nuclear Operators - WANO) சில வருடங்களுக்கு முன்பு கூடங்குள அணு மின் நிலையத்தைப் பார்வையிட்டனர். ஆனால், அவர்கள் அந்த அணு மின் நிலையத்துக்குள் ஒரு மணி நேரம் கூட இருக்கவில்லை. அவர்கள் என்ன வகையான பரிசோதனைகளைச் செய்தார்கள், எதையேனும் ஆய்வு செய்து விளக்கம் அளித் தார்களா என்பதுபற்றி விவரங்கள் கேட்டு நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப் பித்து இருந்தேன். இதுவரைக்கும் பதில் இல்லை.

இப்போதைய அணு மின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி, ஜப்பானில் நடந்த அணு மின் நிலைய விபத்து பற்றி ஒரு கருத்தும் கூறாமல் இருக்கிறார். சுனாமிக்குப் பிறகான கடல் மட்டத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்தில் இந்த நிலையத்தைக் கட்டி இருக்கிறோம் என்கிறார். ஆனால், யார் அதை அளந்து பார்த்தது, அணு சக்தித் துறை நீங்கலாக, தன்னாட்சி அமைப்புகள் எதுவும் பரிசோதனை மேற்கொண்டார்களா என்பதைப்பற்றி எந்தக் கருத்தும் கூற மறுக்கிறார்!'' என்கிறார் உதயகுமாரன்!

-ந.வினோத்குமார்

நன்றி: ஆனந்த விகடன், 18 மே 2011