சனி, பிப்ரவரி 27, 2010

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஏன் பின்வாங்கினார்?

மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது?- இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே தீரவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.


கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில்

ஈடுபடுகிறார். இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.


இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்?

முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.

இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக் கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும். இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.

இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல் எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?

பாரதியின் பாஞ்சாலி சபதம்தான் நினைவுக்கு வருகிறது. ""கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல்போலும்...''

சீச்சீ... சிறியர் செய்கை!

நன்றி: தினமணி, 27-02-2010

வியாழன், பிப்ரவரி 25, 2010

நிலத்தின் நலம் காக்க...

"பூச்சிக் கொல்லிகளையும், மரபணு மாற்று விதைகளையும் பயன்படுத்தியதால், விளைநிலங்கள் பாழ்... இதைத் தவிர்க்க, உயிர்தன்மையை காக்கும் இயற்கை விவசாயம் அவசியம்...' - இந்த குரல்கள், நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. பூமியில் ஒவ்வொரு இரவும், ஏறத்தாழ பல லட்சம் பேர், உணவின்றி, பசித்த வயிறுடன் உறங்குகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, உணவு உற்பத்தி பெருகவில்லை. விவசாயத்தில் நவீன தன்மையை பயன்படுத்தாததே இதற்கு காரணம்."விவசாயத்தில் நவீன தன்மையை, பூச்சிக் கொல்லிகளை, உரங்களை, இயந்திரங்களை, மரபணு மாற்று விதைகளை பயன்படுத்தாவிட்டால், உணவுப் பஞ்சம் வந்து விடும். மற்ற துறைகள் நவீனத்திற்குள் நுழைந்து விட்ட நிலையில், விவசாயமும், இந்த, "நவீன ஆடை'யை அணிந்தால் தான் உயிர் பெறும்; மக்கள் உயிர் வாழ வழி தரும் என்ற கருத்து, சாதாரண மனிதனையும் யோசிக்க வைக்கக்கூடியது. நவீனத்திற்கு மாறினால், உற்பத்தி பெருகும் என்ற, "லாஜிக்' தான் இதற்கு காரணம். ஆனால், மற்ற தொழில் துறையும், விவசாயமும் ஒன்றா என்ற ஒப்பீடு எழுமானால், அது இந்த, "லாஜிக்'கை தகர்க்கக்கூடியதாக இருக்கும். உணவுப் பஞ்சம் வந்து விடும் என்பது கட்டுக்கதை என ஆதாரங்களை முன்வைத்து சண்டையிடுகிறது பிரான்சை சேர்ந்த, "பிரான்சஸ் மோரோ லேப்பி' என்ற விஞ்ஞானியின் தலைமையிலான குழு.அந்தக் குழுவின் அறிக்கை இப்படி சொல்கிறது...* உலகில் வாழும் அனைத்து மக்களின் தேவைக் கும் உரிய தானியங்கள், காய்கறிகள் விளைகின்றன. தற்போதைய மொத்த விளைச்சலை, அப்படியே தலைக்கு இவ்வளவு என்று பிரித்தால், ஒவ்வொருவருக்கும், தினசரி 1.25 கிலோ தானியங்கள் மற்றும் பயிறு வகைகள், அரை கிலோ காய்கறி மற்றும் பழங்கள், கால் கிலோ பால், மாமிசம், முட்டை கிடைக்கும்.* இவற்றின் மூலம், ஒவ்வொருவரும் 3,500 கலோரியை பெற முடியும். ஆனால், நன்கு வளர்ந்திருக்கும் ஒரு மனிதனின் தேவை 2,100 கலோரியில் இருந்து 2,500 கலோரி தான். தினசரி 3,500 கலோரி உணவை உட்கொண்டால், ஒவ்வொருவரும் உடல் பருமன் நோயில் சிக்கிக் கொள்ள வேண்டி வரும். எங்கே பிழை இருக்கிறது என யோசிக்க வைக்கிறது இந்த குழுவின் அறிக்கை. உலக மக்களிடையே பகிர்தலில் உள்ள முரண்பாடு தான், பஞ்சத்திற்கும், பட்டினிக்கும் காரணமாக அமைகிறது. அமெரிக்க சிறுவனுக்கும், எத்தியோப்பிய சிறுவனுக்கும் பாரபட்சமின்றி சமமாய் விளைவித்து தருகிறாள் பூமித்தாய். ஆனால், ஒரு புறம் வீசி எறியப்படும், "பீட்சா'க்களும், மறுபுறம் ரொட்டித் துண்டுகளுக்கு ஏங்கும் நிலையும் தொடர நாம் தான் காரணம் என்பது உறுதிப்படுகிறது. உணவுப் பஞ்சத்தை தவிர்க்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது அடுத்த வாதமாக உள்ளது. முதல் வாதமே தோற்றுப் போன நிலையில், அடுத்த வாதமும் இப்படி நொறுங்கிப் போகிறது."புழு மற்றும் பூச்சிகளில் இருந்து பயிரைக் காப்பாற்றுவதற்காகவே, மரபணு மாற்றுப்பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. விளைச்சலை அதிகப்படுத்தும் தந்திரம் எதையும் செய்யவில்லையென, மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் விதை நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. அப்படியிருக்க, உலக பசியைப் போக்க மரபணு மாற்று விதைகள் எப்படி உதவப் போகிறது?' என்ற இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கம் எதிரொலிக்கிறது. இந்த மரபணு மாற்று விதைகளை நம்பாமல், இயற்கை விவசாயத்தில் சாதனைக் கொடி நாட்டியவர்களின் பட்டியலும் பிரமிக்க வைக்கிறது.* பொலிவியா நாட்டில், ஒரு எக்டேருக்கு 4 டன்னாக இருந்த உருளைக்கிழங்கு உற்பத்தி, இயற்கை விவசாயத்தால் 15 டன்னாக உயர்ந்தது.* கியூபாவில் காய்கறி விளைச்சல் இரு மடங்கானது.* எத்தியோப்பியாவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, 6 டன்னில் இருந்து 30 டன்னானது.* கென்யா மக்காச்சோள விளைச்சல், 2.25 டன்னிலிருந்து 9 டன்னாக உயர்ந்தது.* பாகிஸ்தானில் மாம்பழ விளைச்சல், 7.5 டன்னிலிருந்து 22 டன்னாக உயர்ந்தது.* ஆந்திராவில் நாகரத்தின நாயுடு என்பவர், ஒற்றை நாத்து இயற்கை விவசாயம் மூலம், ஏக்கருக்கு 6,900 கிலோ நெல் விளைவித்து, சாதனை படைத்துள்ளார்.இவையனைத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் உழவு மற்றும் உணவு அமைப்பின் ஆய்வு தகவல். சாதாரண பொதுமக்களுக்கு, இந்த விவாதங்களின் மேல் பெரிதாய் அக்கறை இருந்ததில்லை. ஆனால், அவர்களையும் இந்த விவகாரம் சென்றடைய காரணமாய் அமைந்து விட்டது பி.டி., கத்தரிக்காய். பார்லிமென்டில் துவங்கி, தமிழக சட்டசபை வரை இந்த விவகாரம் பேசப்பட்டு, "கத்தரிக்காய் முற்றினால், கடைக்கு வந்து தானே ஆகணும்' என்பது போல, தெருவோர டீக்கடை வரை இந்த விவகாரம் அலசப்படும் பொருளாகிவிட்டது. பி.டி., கத்தரிக்காய் குறித்து கருத்து கேட்பதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு விவசாயிகளிடம் கிடைத்த, "வரவேற்பு' ஆள்பவர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அதனால், கொஞ்ச நாளைக்கு இந்த விவகாரத்தை ஒத்திப் போடுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது."பி.டி., கத்தரிக்காயை முழுமையாக தடை செய்யவில்லை; தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இது குறித்த ஆராய்ச்சிகளின் முடிவில், இறுதி முடிவெடுப்போம்' என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதனால், கத்தரிக்காய் விவகாரம் இத்தோடு முடிந்து விடப் போவதில்லை எனத் தெரிகிறது. மத்திய அமைச்சரின் வார்த்தைகளையே தமிழக அரசும் ஒப்பிக்கிறது. "பி.டி., கத்தரிக்காய்க்கு அனுமதி கொடுக்கவில்லை' என்று, தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஒருபுறம் சொன்னாலும், "பி.டி., கத்தரிக்காயை விளைவித்து, சோதனை நடத்தியதில், எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை' என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சான்றளித்துள்ளதையும், சட்டசபையில் அமைச்சர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இதை விட ஒருபடி மேலாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமே, தனியாக மரபணு மாற்று விதைகளை தயாரித்து இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பதிவு செய்தால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைவர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கும், விவசாயிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. பல கோடி ரூபாய் அரசின் பணத்தை கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளின் பலன், விவசாயிகளுக்கு கிடைப்பதே இல்லை. ஒவ்வொரு ஆய்வறிக்கையும், சில லட்சங்களை விழுங்கி விட்டு, ஆவணங்களாகி, அதன் மூலம் குறிப்பிட்ட பேராசிரியரின் பெயருக்கு பின்னால் சில எழுத்துக்களை சேர்க்க மட்டுமே உதவி வருகிறது. மேற்கத்திய நாட்டின் விவசாயிகளும், விஞ்ஞானிகளும் சொல்லும் விஷயங்களே பல்கலைக்கு பிரதானமாக உள்ளது. அவர்கள் மட்டுமே மேதாவிகள், அறிவாளிகள் என்ற உளுத்துப்போன சிந்தனை, பல்கலைக் கழகம் முழுவதும் பரவி இருக்கிறது. பாட்டன் காலம் முதல் நாங்கள் பயன்படுத்திய விவசாய முறைகளை அறிந்து கொள்வதிலோ, அவற்றின் நன்மைகளையோ பல்கலை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்களை பொறுத்தவரை, பல்கலையிடம் இருந்து விவசாயிகள் கற்றால் போதும் என்ற ஒரு வழி சிந்தனை தான். விவசாயிகளுக்கான பல்கலைக் கழகத்தின் முதல் எதிரியே, இயற்கை விவசாயிகள் தான் என்ற, "கோரஸ்' கருத்து, நான் சந்தித்த பல விவசாயிகளிடமும் எதிரொலித்தது.நமது பூமி பரப்பில், 2 சதவீதம் மட்டுமே விளைநிலம். விளைச்சலை முடிவு செய்வது, நிலத்தின் உயிரோட்டமுள்ள மேல் மண் பகுதியே. இந்த மண்ணை மாசுபடுத்தி, மலடாக்கும் மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இயந்திரமயமான, ரசாயன விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவும், 6 கிலோ மண்ணின் உயிர்த்தன்மையை அழித்து விளைகிறது. அமெரிக்காவை பின்பற்றும் மூன்றாம் உலக நாடுகளிலோ, 12 கிலோ மண்ணின் உயிர் தன்மையை அழித்து, ஒரு கிலோ உணவு பெறப்படுகிறது. முழுமையான நவீனத்துக்குள், இந்திய விவசாயம் செல்லும் முன்பே ஏகப்பட்ட குளறுபடிகள். கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு அரசு வாரி வழங்கினாலும், விவசாயிகள் தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.அப்படி இருக்கையில், மரபணு மாற்று விதைகளை அடிப்படையாகக் கொண்ட, மேற்கத்திய விவசாய முறையில், இந்திய விவசாயம் அமையுமானால், அது ஏற்படுத்தும் விளைவுகளை கற்பனைக்குள் கொண்டு வர முடியவில்லை. விளைநிலத்தோடு விளையாடும் முன், உலகமும், அரசும், அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும், மேதாவிகளும் யோசிக்கட்டும்.- எஸ்.கோவிந்தராஜ், பத்திரிகையாளர் (expressboy007@yahoo.com)


நன்றி: தினமலர், 21-02-2010

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

மரபணு கத்தரி: நம் ஆய்வுகளை நாமே செய்வோம்!

எல்லா மாநிலங்களிலும் பரவலாக எதிர்ப்பு தோன்றியதையடுத்து,​​ குறிப்பாக இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டங்களில் காணப்பட்ட ஏகோபித்த எதிர்ப்பைக் கண்டு,​​ மரபீனி மாற்றுக் கத்தரிக்காயை அறிமுகம் செய்வதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.​ இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டோம் என்ற சொல்லத் துணிவில்லாமல்,​​ தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கும் வேளாண் தொழில்துறையினருக்கும் ஏற்புடைய வகையில் அறிவியல் உண்மைகள் நிறுவப்படும் வரை,​​ சுற்றுச்சூழலுக்கும் மனித உடலுக்கும் தீமை விளைவிக்காது என்பதை ​ நீண்டகாலச் சோதனைகள் நடத்தி முடிவுகள் காணப்படும்வரை இந்த பி.டி.​ கத்தரிக்காயை நிறுத்தி வைப்பதாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.​

இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டித்தான் இத்தனை நாள்களாக விவசாயிகள் போராடி வந்தனர்.​ ஆனாலும்,​​ அதே காரணங்களை அரசே தன் வாயால் சொல்லி,​​ நிறுத்தி வைப்பதுதானே அரசின் வழக்கம்.​ அந்த வழிவழி வந்த நடைமுறை மாறாமல்,​​ ஏதோ தாங்களாகவே நிறுத்தி வைப்பதைப்போல பி.டி.கத்தரிக்காயை மூட்டை கட்டி வைக்கத் தீர்மானித்தார்கள்.​ கடைசியாக,​​ இப்போதாகிலும் இத்தகைய நல்ல முடிவு எடுத்தார்களே என்பதற்காக மத்திய அரசைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பி.டி.​ கத்தரிக்காய் தடை செய்ததில் வெற்றி அடைந்த களிப்பில் இன்னும் சில கடமைகளை வேளாண் போராளிகள் மறந்துவிடக்கூடாது.​ இந்தியாவில்,​​ கத்தரிக்காய் போன்று 46 வகை உணவுத் தாவரங்களுக்கு இத்தகைய மரபீனி மாற்று வடிவங்கள் சோதனை அடிப்படையில்,​​ ​ வளர்க்கப்பட்டு வருகின்றன.​ இவையும் மெல்லமெல்ல தலைகாட்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.​ இவற்றில் கத்தரிக்காய்போல,​​ அனைவராலும் உண்ணப்படும் முக்கிய பயிரான நெல் ரகமும் இருக்கிறது.


கத்தரிக்காய் மீதான எதிர்ப்புகள் அதிகமாக இருந்ததால்,​​ சற்றே கிடப்பில் போடப்பட்ட மரபீனி மாற்று நெல் ரகங்கள் தற்போது வேறு வடிவம் கொள்ளவும்,​​ அவற்றை வீரிய ரகங்களாகச் சந்தைக்குள் கொண்டுவரவும் புதியபுதிய உத்திகளைக் கையாளுவார்கள் என்று சொல்லப்படுகிறது.​ இவை வீரிய ரகங்களாகச் ​ சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டால்,​​ அவற்றை பிரித்தறியும் திறன் நம்மில் பலருக்கும் கிடையாது.​ ஆகவே,​​ வேளாண் போராளிகள் இத்தகைய மரபீனி மாற்று ஆய்வுக்காக களத்தில் சாகுபடி நிலையில் உள்ள அனைத்துப் பயிர்களையும் கண்டறிந்து அத்தகைய சோதனை முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

பி.டி.​ கத்தரிக்காய் எதிர்ப்பு வெற்றியில் முடிந்ததற்கு காரணம்,​​ இதை அனைவரும் சாப்பிடுகிறோம் என்பதுடன் இப்பயிர் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது என்பதும்தான்.​ கத்தரிக்காய் அல்லாமல்,​​ சில மாநிலங்கள் மட்டுமே விளைவிக்கும் சில வகை உணவுப் பயிர்களுக்கு மரபீனி மாற்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக முழுமையான எதிர்ப்புத் தோன்றியிருக்காது.​ சில மாநிலங்களில் மட்டும் எதிர்ப்பு எழுந்து,​​ பிசுபிசுத்துப் போயிருக்கும்.

இத்தகைய குளறுபடிகள் அனைத்துக்கும் அரசையும் இதற்கான பொறுப்பு வகிக்கும் ஆட்சியாளர்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.​ இந்தக் குளறுபடிக்கு மிகப்பெரும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்களும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
பி.டி.​ கத்தரிக்காய் அறிமுகம்,​​ சாகுபடி இவற்றுக்கு மூல ஆதார நிறுவனம் மான்சாண்டோ.​ இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான மைக்கோ மூலமாகத்தான் இந்தியாவில் பி.டி,​​ கத்தரிக்காய் எடுத்துக்கொள்ளப்பட்டது.​ இது எந்த வித ஆபத்தையும் விளைவிக்காது என்று பரிந்துரை செய்த நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்.​ ​

இந்திய ஆட்சியாளர்களைவிட,​​ இந்திய ஆராய்ச்சியாளர்களைக் கைக்குள் போட்டுக்கொள்வதில் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வெற்றிதான்,​​ இத்தகைய தேவையற்ற மரபீனி மாற்று உணவுப் பொருள்கள் இந்தியாவுக்குள் நுழையக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

இந்தியாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள்,​​ இந்திய வேளாண் ஆராய்ச்சிக் ​ கழகம் ஆகியவற்றின் பல ஆராய்ச்சிகளுக்கு நிதிநல்கை பெருந்தகையாளர்களாக மான்சாண்டோ,​​ ஃபோர்டு போன்ற பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.​ இந்தியாவில் ஆராய்ச்சி செய்வதோடு,​​ ஆய்வு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பெறும் களப்பணிக்கு,​​ நம் ஆராய்ச்சியாளர்களை ஐரோப்பா,​​ அமெரிக்கா போன்ற நாடுகளைக்கு நிதிநல்கையுடன் அழைத்துச் செல்லவும் செய்கிறார்கள்.​ இந்த ஆராய்ச்சியாளர்கள்தான் அரசு மற்றும் பல்கலைக்கழகப் பணிகளில் உயர் பதவிக்கு வருபவர்களும்!​ பழைய நட்பு புதுப்பிக்கப்படுகிறது.​ அன்பினால் நெருக்கடி தந்து,​​ ​ தங்களுக்குச் சாதகமான மரபீனி மாற்றுப் பயிர்களை இந்தியச் சந்தையில் நுழைக்கும் அனைத்து கருத்துருக்களையும் தயாரிக்க வைக்கிறார்கள்.​ பிறகுதான் ஆட்சியாளர்களை மயக்கும் வித்தையை இந்த பன்னாட்டு நிறுவனங்கள் கையில் எடுக்கின்றன.

இந்த நிலைமை ஏற்படக் காரணம் இந்திய அரசு,​​ வேளாண் ஆராய்ச்சிகளுக்கு போதிய ஆர்வம் காட்டாமல்,​​ போதிய நிதி ஒதுக்காமல்,​​ இவ்வாறாக அன்னிய நிதிநல்கைகளைப் பெற்றுக்கொள்வதை அனுமதிப்பதுதான் என்றால் அது மிகையாகாது.​ இந்திய அரசுப் பணத்தில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளை நடத்தவும்,​​ பன்னாட்டு நிதிநிறுவனம்,​​ அல்லது அத்தகைய தொடர்புகள் உள்ள நிறுவனங்களின் நிதிநல்கையைத் தவிர்ப்பதும் இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்கள் ​ முழுக்க முழுக்க இந்தியத்தன்மையோடு நிலைத்து நிற்க நிச்சயம் உதவியாக இருக்கும்.

ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

பி.டி. கத்தரிக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு - தலைமைச் செயலாளர் அறிவிப்பு!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் (பி.டி. கத்தரிக்காய்) சாகுபடியை தமிழகத்தில் அனுமதிக்கப் போவதில்லை என்று தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் சாகுபடியை அனுமதிக்கலாமா என்பது பற்றி மக்கள் கருத்தறியும் கூட்டம் மத்திய சுற்றுச் சூழல் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் பெங்களூரில் சனிக்கிழமை (06-02-2010) நடந்தது.

கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், இதுதொடர்பாக மாநில முதல்வர்களுக்கு கடிதங்கள் எழுதி கருத்து கேட்டுள்ளதாகத் தெரிவித்தார். பல மாநிலங்களில் இருந்து கடிதங்கள் வந்திருப்பதாக அவர் கூறினார்.
தமிழகத்தின் நிலைப்பாடு பற்றி தகவல் வந்ததா என்று நிருபர்கள் கேட்டனர். மாநில அரசின் தலைமைச் செயலாளர் தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தக் கத்தரிக்காய் சாகுபடியை தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்ற தகவலைத் தெரிவித்தார் என அமைச்சர் கூறினார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை வணிக ரீதியில் சாகுபடி செய்ய அனுமதிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குழு பரிந்துரை செய்ததில் இருந்தே இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

அதனால் மக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகுதான் இதுபற்றி முடிவு செய்யப்படும் என அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார். அதன்படி கருத்து கேட்பு கூட்டங்கள் நடக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டன.

எல்லா மாநிலங்களிலும் கருத்து கேட்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதும், தமிழகத்தில் இதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்பதும் விவசாயிகள், தன்னார்வ அமைப்புகள், இந்திய முறை மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தில் மக்களின் கருத்துகளைக் கேட்குமாறு முதல்வர் மு. கருணாநிதி யோசனை கூறியிருந்தார்.

இருந்தபோதிலும் தமிழகத்தில் கருத்து கேட்பு கூட்டம் எதற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

மத்திய அரசு ஏற்பாடு செய்யாவிட்டாலும், மாநில அரசே மாவட்டம் தோறும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி, மாநிலத்தின் ஒட்டுமொத்த கருத்தை தொகுத்து மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம் என நிபுணர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.


இதற்கிடையில், விவசாயிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் குழு இரு வாரங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதியை சந்தித்து, மரபணு மாற்றிய கத்தரிக்காயை அனுமதித்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று விளக்கியது. நீண்ட நேரம் அவர்களின் கருத்துகளை முதல்வர் கேட்டறிந்தார்.

குடியரசு நாளன்று ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில், பல இடங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்பட பல மாநிலங்களில் இந்த கத்தரிக்காயை அனுமதிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பு வந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து இன்னும் அறிவிப்பு எதுவும் வரவில்லையே என விவசாய நிபுணர்கள் காத்திருந்தனர்.

தமிழகம் இதை எதிர்ப்பதாக, பெங்களூரில் நடந்த கூட்டத்தில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிலைப்பாடு புதன்கிழமை (பிப்ரவரி 10) மதியம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


நன்றி: தினமணி 07-02=2010

வெள்ளி, பிப்ரவரி 05, 2010

பி.டி.​ கத்தரிக்காய் கூடாது:​ மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்

பி.டி.​ கத்தரி எனப்படும் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிடக் கூடாது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை மருத்துவ நிபுணர்கள் குழு வியாழக்கிழமை (04-2-2010) சந்தித்து வலியுறுத்தியது.

டாக்டர் மீரா சிவா ​(புது தில்லி),​​ டாக்டர் ஜி.பி.சிங் ​(சண்டிகர்),​​ ​டாக்டர் பாரத் ஷா ​(பரோடா),​​ டாக்டர் ஜி.சிவராமன் ​(சென்னை)​ ஆகிய நால்வர் குழு,​​ அமைச்சரைச் சந்தித்து எந்தந்த வகையில் பி.டி.​ நச்சு புரதம்,​​ பொது மக்களின் உடல் நலனில் பாதிப்பை உண்டாக்கும் என்பதை விரிவாக விளக்கினர்.​ ​

மேலும் குழந்தைகளுக்கு உடல் எடை குறையும் வாய்ப்பு மற்றும் ஒவ்வாமையை ​

பி.டி.​ கத்தரிக்காய் ஏற்படுத்தும் ஆபத்து குறித்தும் சான்றுகளுடன் விரிவாக விளக்கினர்.

​ சித்த,​​ ஆயுர்வேத மருந்துகளில் நீண்ட காலமாக இப்போதுள்ள கத்தரிக்காய் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து சித்த மருத்துவ நிபுணரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவருமான ஜி.சிவராமன் விளக்கினார்.

​அதே சமயம்,​​ மத்திய அரசின் மரபணு மாற்ற தொழில்நுட்ப அனுமதிக் குழு (ஜிஇஏசி)​ வெளியிட்ட முடிவில்,​​ பி.டி.​ கத்தரியின் ஆல்கலாய்டுகள் பெருவாரியாக மாறியுள்ளதையும் இது கத்தரியின் மருத்துவக் குணத்தை மாற்றி விடும் ஆபத்தையும் ​

குறிப்பிட்டனர்.​ இதனால் ஜீன் கலப்படமடைந்து அதே குடும்பத்தைச் சேர்ந்த ​ பிற மருத்துவக் குணமுள்ள தாவரங்கள் பாதிக்கப்படும் அபாயத்தை அமைச்சரிடம் ​ விவரித்தனர்.

​மருத்துவ நிபுணர்கள் குழு கூறிய விஷயங்களை ஆவணப்படுத்திக் கொண்ட அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,​​ வரும் 10-ம் தேதி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

நன்றி: தினமணி 05-02-2010