திங்கள், ஜனவரி 25, 2010

மரபணு மாற்று கத்தரிக்காய் - தமிழக முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

மரபணு மாற்று கத்தரிக்காயை இந்தியாவில் அறிமுகம் செய்வதால் தீய விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்களும், சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும், இயற்கை வேளாண் நிபுணர்களும், சட்ட நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு என்ற பெயரில் மரபணு மாற்று வேளாண்மைக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கூட்டமைப்பினர் இன்று (25-01-10) காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, தமிழ்நாட்டில் மரபணு மாற்று கத்தரியை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில்....

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை இன்று (25-01-2010) காலையில் அவரது இல்லத்தில் "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பின் தலைவர் டாக்டர் சிவராமன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத்தலைவர் திரு ஆர். செல்வம், நிர்வாகி டாக்டர் ஜீவானந்தம், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர் நடிகை திருமதி ரோகினி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு தலைவர் திருமதி ஷீலு, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் திருமதி சங்கீதா, திரு. ராம் ஆகியோர் சந்தித்து மரபணு மாற்றுக் கத்தரிக்காயை தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.
அவர்களின் மனுவை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றும், வேளாண்மைத்துறை அமைச்சர் இது குறித்து சட்டப்பேரவையில் விளக்கமாகக் கூறியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியதுடன் - எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும்வரையில் இதனை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக்கூடாது என்று கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.

6 கருத்துகள்:

சீ.பிரபாகரன் சொன்னது…

தமிழக அரசு மரபணு மாற்று கத்தரியை அனுமதிக்கக்கூடாது. தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்

பூவுலகின் நண்பர்கள் சொன்னது…

//சீ.பிரபாகரன் சொன்னது…
தமிழக அரசு மரபணு மாற்று கத்தரியை அனுமதிக்கக்கூடாது. தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்//

நன்றி சீ. பிரபாகரன்! எங்கள் முயற்சி நமது முயற்சியாகும்போது நமது நியாயமான விருப்பங்கள் அனைத்தும் வெற்றியடையும்.

பெயரில்லா சொன்னது…

பூவுலகின் நண்பர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!

அதிஷா சொன்னது…

உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்

mutu சொன்னது…

தமிழக அமைச்சர் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்து உள்ளார். ஒரு கிலோ பிடி கத்திரிக்காயின் விலை 750 என்று குறைத்து உள்ளதாக அறிவித்து உள்ளார். அதன் விலை 1500 என்று இருந்த விலையை குறைத்து உள்ளதாக கூறி உள்ளார்.மேலும் தமிழக அரசுக்கு இதை தடுப்பதற்கு என்று எந்த அதிகாரமும் இல்லை. மேலும் ஏகாதிபத்திய நிறுவனங்கள் இந்திய, தமிழக அரசுக்கு எஜமானர்கள் போன்று உள்ளவர்கள்.அவர்களின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியாது. எனவே முதல்வரின் வாக்குறுதி கூட நிலையானது அல்ல.இதுவும் மாற கூடியது.எனவே இதனை எதிர்த்து நாம் மக்களை அணிதிரட்டி போராடவேண்டும். இது வெறும் விவசாயிகளின் பிரச்னை மட்டும் அல்ல.இது நாட்டின் தற்சார்பு பற்றிய ஒரு விஷயம்.எனவே இதற்க்கு எதிராக நாம் போராட முன் வர வேண்டும்.

anand சொன்னது…

இது போன்ற மரபணு மாற்று விதைகள் மலட்டு தன்மை உடையது. இந்த வகை விதைகளை ஒருமுறை பயிரிட்டால் நிலம் மாசுபாடு அடையும். இந்த விதைகளை விதைக்கும்போது நாம் பூச்சிக்கொல்லி மருந்து, உரம் போன்றவற்றை அந்த நிறுவனத்திடம் இருந்துதான் வாங்கவேண்டும்.இது உழவர்களின் தற்சார்பை அளித்து நிறுவனத்திடம் அவர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் ஒரு யுக்தி.எனவே இதனை நாம் அனுமதிக்க கூடாது.
நண்பர் முத்து கூறியது போல தமிழக அரசுக்கு இதை தடுக்க எந்த அதிகாரமும் இல்லை. பெரும்பாலான விதை ஆராய்ச்சி அனைத்தும் தமிழ்நாடு வேளான் பல்கலைகழகத்திலே நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை அருகிலே உள்ள ஆலந்துறை என்ற கிராமத்தில் பிடி நெல் ஆராய்ட்சிகாக பயிரிடப்பட்டு இருந்தது. அப்போது விவசாயிகள் அப்பயிர்களை தீயிட்டு கொளுத்தினர். அதற்காக அவர்களின் மீது தமிழக அரசு பல வழக்குகளை போட்டது. எனவே தமிழக அரசு மான்சாண்டோ நிறுவனத்திற்கு அதரவாக மட்டுமே செயல்படும். இதுதான் நடைமுறை உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது.

கருத்துரையிடுக