ஞாயிறு, ஜனவரி 03, 2010

புத்தகத் திருவிழாவில் பூவுலகின் நண்பர்கள் - தினமணி செய்தி

சென்னை, ஜன.2: சென்னை புத்தகக்காட்சியில் முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் மற்றும் சூழல் சார்ந்த நூல்களுக்காக தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள 6 பேர் ஒன்று சேர்ந்து 1989-ல் "பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பைத் தொடங்கினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆங்கிலத்தில் மட்டுமே வெளியான அரிய பல நூல்களை தமிழில் வெளியிட்டும், பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்தி வந்தனர்.இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த நெடுஞ்செழியன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததை அடுத்து சுற்றுச்சூழல் போராளியும் எழுத்தாளருமான அசுரனின் முயற்சியால் பூவுலகின் நண்பர்கள் குழு மீண்டும் உயிர் பெற்றது.

2007- டிசம்பரில் அசுரன் இறந்த பின்னர் அவரால் ஈர்க்கப்பட்ட சுமார் 12-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்போது பூவுலகின் நண்பர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள். சூழலியல் ஆர்வலர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து இந்த அமைப்பைச் செயல்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் பொங்கல் நிகழ்ச்சியை நடத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தனர் இவர்கள்.

சூழலியல் தொடர்பான தமிழ், ஆங்கில நூல்கள், விழிப்புணர்வு குறும் படங்களின் சி.டி.க்கள் என அனைத்தும் இந்த (கடை எண்: 233) அரங்கில் கிடைக்கும். இது தவிர 100 பக்கங்கள் கொண்ட "பூவுலகு' என்ற சிறப்பிதழையும் வெளியிட்டுள்ளனர்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Green Greetings!

Hr.அ.உமர் பாரூக் சொன்னது…

வணக்கம்.
பூவுலகின் நண்பர்களின் மறுவரவு மகிழ்ச்சியளிக்கிறது.வாழ்த்துக்கள். உங்கள் வெளியீடுகள் பரவலான வரவேற்பைப்பெற்றுள்ளன. மிக அவசியமான விழிப்புணர்வு தேவைப்படுகிற காலத்தில் - உங்கள் பணி அவசியமானது. சென்னை புத்தகக்கண்காட்சியில் உங்கள் அரங்கிற்கு வந்திருந்தேன். வம்சியோடு இணைந்த உங்கள் வெளியீடுகளுக்காக காத்திருக்கிறேன்.

நான் கம்பம் பகுதியைச்சேர்ந்தவன். நீலகிரி மசினகுடியில் ஒருந்து விரட்டப்பட்ட நியூட்ரினோ ஆய்வகம் இங்கே சுருளி, தேவாரம் மலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. கோவையில் இருந்த எதிர்ப்பும், விழிப்புணர்வும் இப்பகுதியில் இல்லை. மிக பலவீனமாக உள்ளது.
நியூட்ரினோ பாதிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகிறது. பூவுலகு (ஜனவரி) கட்டுரையில் போதுமான தகவல்கள் இல்லை. என்ன செய்யலாம்?

அ.உமர் பாரூக்

கருத்துரையிடுக