வெள்ளி, டிசம்பர் 24, 2010

கீழே விழுந்த குயில் குஞ்சு - சு. தியடோர் பாஸ்கரன்

தமிழ்நாட்டிலுள்ள பறவை ஆர்வலர்கள் அவ்வவ்போது தாங்கள் கண்ட பட்சிகளைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதுடன் இத்துறை சார்ந்த தகவல்களைப் பரி மாறிக் கொள்கிறார்கள். அண்மையில் தெருவோரம் கீழே விழுந்து கிடந்த ஒரு குயில் குஞ்சு ஒன்றை எடுத்து வீட்டிற்குக் கொண்டு வந்த ஒருவர் அதற்கு என்ன இரை கொடுக்க வேண்டும், எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று மின்னஞ்சலில் கேள்வி எழுப்பினார். பறவை ஒன்றைக் காப்பாற்றும் அவரது முயற்சியை சிலாகித்துப் பலர் பதில் எழுத ஆரம்பித்தனர். அதன் நடுவே, சின்னஞ்சிறு உயிரியலாளர் ரவி செல்லம் ஒரு குருவியைப் பற்றி நாம் கவலைப்படுவதைவிட, உயிரினங்களைப் பற்றி (species) அக்கறை காட்ட வேண்டும் என்றும், நம்து நேரமும் சக்தியும் சுற்றுச் சூழலைப் பராமரிப்பதில் இருக்க வேண்டும் என்றும் எழுதினார். கூட்டிலிருந்து விழுந்து இறப்பது இயற்கையுடன் கூடிய ஒரு நிகழ்வே என்ற அவர் கூற்றிற்கு பலத்த எதிர்வினை கிளம்பியது. கருணை, ஈரம், இரக்கம், ஈவு, பச்சாத்தாபம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து சிறிது நாட்கள் அந்த யாஹூ குழுவில் நடந்த விவாதம் காட்டுயிர் பராமரிப்பு (conservation) நம் நாட்டில் சற்று திசைமாறிப் போய்க்கொண்டிருப்பதைக் கோடிட்டுக் காட்டியது. எழுபதுகளில் அமெரிக்காவில் உருவான விலங்குரிமை (Animal Rights) இயக்கம் வேகமாக வளர ஆரம்பித்தது. பண்ணையில் வேலை செய்யும் கால்நடைகளையும், கறிக்காக வளர்க்கப்படும் கோழிகளையும், சர்க்கஸ் விலங்குகளையும், உயிர்க் காட்சி சாலைகளிலுள்ள விலங்குகளையும், பந்தயக் குதிரைகளையும் நல்லபடி பராமரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பித்த இந்த இயக்கம், நிறுவ உருப்பெற்று எண்பதுகளில் இந்தியாவிற்குள் வந்து சில நகரங்களில் கிளைகள் தோன்றின. மருத்துவப் பரிசோதனைக்காக வளர்க்கப்படும் விலங்குகள், முக்கியமாக குரங்கினம்மேல் இதன் கவனம் சென்று பல நல்ல பயன்கள் கிடைத்தன. 1977இல் இந்தியாவிலிருந்து குரங்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது. அழகு சாதனம் தயாரிப்பில் விலங்குகள் பயன்படுத்தப்படக்கூடாது என்ற தடைச் சட்டம் பல நாடுகளில் வர இந்த இயக்கங்கள் வழிகோலின. செல்லப் பிராணிகள் பரிவுடன் பேணப்படுகின்றனவா என்றும் திரைப்படங்களில் தோன்றும் குதிரை போன்ற விலங்குகள் படப்பிடிப்பின்போது துன்புறுத்தப்படுகின்றனவா என்றும் இவை கண்காணிக்க ஆரம்பித்தன.

இந்த விலங்குரிமை இயக்கம் தோன்றும் முன்னரே, சென்ற நூற்றாண்டு பிரிட்டனில் ஆரம்பித்த பிராணி நலன் (Animal Welfare) கருத்தாக்கம் 1824ல் மிருகவதை தடுப்புசங்கமாக (Society for the Prevention of Cruelty of Animals) நிறுவனமாக உருப்பெற்றபோது அதன் முதல் நோக்கம் சாரட்டில் பூட்டிய குதிரைகளின் நலன்தான். பின்னர் இதன் தளம் மற்ற விலங்குகளுக்கும் விரிவடைந்து, இந்தக் கருத்தாக்கம் காலனிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு சட்டமாக உருப்பெற்று அதைச் செயல்படுத்த இன்ஸ்பெக்டர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். வண்டியிலும், ஏரிலும், செக்கிலும் பூட்டும் மாடுகள் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதைக் கவனிப்பதே இவர்கள் வேலை. மாட்டின் கழுத்தில் நுகம் அழுந்தி புண் உண்டாகி உள்ளதா என்று பரிசோதித்துப் பார்ப்பதை இவர்கள் முக்கிய பணியாகச் செய்ததால் மக்களிடையே இவருக்கு ‘புண்கழுத்து இன்ஸ்பெக்டர்’ என்று பெயர்.

அடையார் பிரம்ம ஞானசபையின் பாதிப்பில் வளர்ந்த ருக்மணி அருண்டேலுக்கு பிராணிநலனில் ஆழ்ந்த அக்கறை இருந்தது. அவருடைய முயற்சிகளின் பயனாக இந்தக் கருத்தாக்கம் இந்தியாவில் பரவி, அரசின் சார்பில் 1962இல் பிராணிநல வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியம் இன்று மத்திய சுற்றுச்சூழல் துறையில் ஒரு அங்கமாக சென்னையில் இயங்கி வருகின்றது. விலங்குகளின், அதிலும் கால்நடைகளின் நலனில் அக்கறை காட்டி செயல்படுபவருக்கு ‘பிராணி மித்ர’ என்ற விருதை இந்த வாரியம் வழங்குகின்றது. தமிழ்நாட்டில் இவ்விருதைப் பெற்ற ஜீவபந்து ஸ்ரீபால் பிராணிகள் நலனுக்காக உழைத்தவர்.. சௌகார்பேட்டையில் வசித்த இவர், உழைக்கும் கால்நடைகளுக்காகவும், மிருகபலியை எதிர்த்தும் வேலை செய்தார். சமண சமயத்தை சார்ந்த ஸ்ரீபால் ‘பொறி வாயில் ஐந்தவித்தான் யார்?’, ‘இளங் கோவடிகள் சமயம் யாது?’ போன்ற முக்கியான நூல்களை எழுதியுள்ளார்.

ஆனால் இதே காலகட்டத்தில் தெருவில் திரியும் நாய்களையும் பன்றிகளையும் பிடித்துக் கொல்ல The Destruction of Stray pigs, Stray dogs and Monkeys Act 1919 என்று ஒரு சட்டமும் அமலில் இருந்தது. ஒவ்வொரு முனிசிபல் அலுவலகத்திலும் தரையில் ஒரு தொட்டிபோல ஒரு Gas Chamber கட்டப்பட்டிருந்தது. ஆகவே அந்த அந்தக் காலகட்டத்தில் தெருநாய்கள் மக்களுக்கு ஒரு பிரச்சினையாக உருவாகியிருக்கவில்லை. நாய்களைப் பிடிப்பதற்காக ஆட்கள் பணிசெய்தனர். கோவாவில், பனாஜி நகரில் நகரசபை அலுவலர் ஒருவர், தினமும் ஒரு .22 ரைஃபிளுடன் ரோந்து சுற்றி வருவார். இவரது வேலை தெரு நாய்களைக் கண்டால் சுடுவது. இந்த சட்டம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் கிடப்பில் போடப்பட்டது. அண்மையில் 6.9.10 இந்து நாளி தழில் பெல்ஜியத்தில் பூனைகளை எப்படிக் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற கட்டுரை வந்துள்ளது. தானாகச் சுற்றிக்கொண்டிருந்த 13000 பூனைகள் அரசால் அழிக்கப்பட்டன. செல்லப்பிராணியாய் Gas chamber கட்டப்பட்டிருந்தது. ஆகவே வளர்க்கப்படும் மீதி பூனைகள் கட்டாயமாக கருத்தடை செய்யப்பட வேண்டும் என்ற விதியை அமல்படுத்தியிருக்கிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், அந்நாட்டின் பிராணிநல சங்கங்கள் இதை வரவேற்றிருக்கின்றன. காட்டுயிர் பற்றிய கரிசனை சுற்றுச் சூழல் இயக்கத்தின் விளைவாக எழுபதுகளில்தான் உருவானது. 1971இல் தோன்றிய பெட்ரோல் தட்டுப்பாடு, எண்ணெய் விலை விஷம் போல் ஏறியது, இதைத் தொடர்ந்து ஸ்டோக்ஹோம் நகரில் 1972இல் நடந்த சுற்றுச்சூழல் பன்னாட்டு மாநாடு, இவைதான் சுற்றுச் சூழல் இயக்கத்தின் ஆரம்பமாக சுட்டிக் காட்டப்படுகின்றன. காடுகளைப் பேண வேண்டியதின் முக்கியத்துவமும் காட்டுயிர் பாதுகாப்பின் அவசியமும் தேசத்தலைவர்களின் கவனத்தைப்பெற்றது. காட்டுயிர் பேணல் பற்றிய சட்டம் இயற்றப்பட்டது. வேட்டை நம் நாட்டில் அறவே தடை செய்யப்பட்டது.

1972இல் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், 1982இல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டன. இயற்கையிலுள்ள இணைப்புகள் பற்றிய ஒரு அறிவியல் புரிதல் ஏற்பட்டது. மத்திய அரசில் இந்த அக்கறையின் குறியீடு போல ஒரு புதிய துறை, சுற்றுச்சூழல் துறை மத்தியிலும் மாநிலங்களிலும் துவங்கப்பட்டது. காட்டுயிர் பராமரிப்பை முறையாகப் பயிற்றுவிக்க டேராடூனில் இந்தியக் காட்டுயிர் நிறுவனத்தை மத்திய அரசு தோற்றுவித்தது. பல இளம் உயிரியலாளர்கள் உருவாக்கப்பட்டு காட்டுயிர் பற்றிய புதிய புரிதல்களை அளித்தார்கள். (இந்த நிறுவனத்தில் படித்தவர்தான் சென்னையைச் சேர்ந்த ரவி செல்லம். கிர் காடுகளிலுள்ள சிங்கங்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.) விண்கோள் தொடர்பு, தானியங்கி காமிராக்கள், யானை போன்ற விலங்கையும் - சிகிச்சை அளிக்க, ரேடியோ பட்டை மாட்ட - செயலிழக்கச் செய்யக்கூடிய மயக்க மருந்து துப்பாக்கிகள் போன்ற புதிய தொழில் நுட்ப வசதிகள் காட்டுயிர்களின் உலகின் அருகில் நம்மைக் கொண்டு சென்றது. பல உண்மைகள் நமக்குப் புரிய ஆரம்பித்தது. ஒரு வேங்கை வாழ 40 சதுர கி.மீ. காடு தேவை என்றறிகிறோம். காட்டுயிர் பராமரிப்பு அறிவியல் தளத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. பல தன்னார்வக் குழுக்களுக்கும் இது தோன்றி காட்டுயிர் பேணலை ஊக்குவிக்கிறார்கள். இத்துறைக்கென சில இதழ்களும் தோன்றியிருக்கின்றன.

குயில் குஞ்சு பற்றிய இணையதள விவாதத்தில் காக்கையின் கூட்டில் முட்டையிட்டு தனது இனப் பெருக்கத்தை நிலை நிறுத்தும் குயில், சென்னையில் எண்ணிக்கையில் மிகுந்து இருப்பதை ஒருவர் சுட்டிக் காட்டியிருந்தார். நகர்ப்புறங்களில் காக்கைகள் நிறைய இருந்து கூடுகள் கட்டுவதால், குயில்களுக்கும் முட்டையிட வேண்டுமான இடம் கிடைக்கின்றது. தமிழ்நாட்டில் குயிலோசை கேட்காத ஊரே இல்லையெனலாம் (ஆண் குயில் மட்டும்தான் கூவும்). இயற்கையில் குஞ்சுகள் இறப்பது சாதாரணமாக நடப்பது. இத்தகைய இழப்பிற்கு இயற்கை ஈடு கட்டிக்கொள்ளும்.

அகமதாபாதில் எங்கள் வீட்டுக்கு முன்புறம் இருந்த ஒரு விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் ஆள்காட்டிக்குருவி ஒன்று முட்டையிட்டு-இது தரையில்தான் முட்டையிடும் - நான்கு குஞ்சுகள் பொரித்தன. ஒரு மாதமாகத் தினமும் இந்தப் பறவைகளை நாங்கள் கவனித்தோம். கடைசியில் ஒரு குஞ்சுதான் எஞ்சி, முழு வளர்ச்சியடைந்து பறந்து போனது. கடலாமை போன்ற சில உயிரினங்கள் நூற்றுக்கணக்கான முட்டைகள் இடுகின்றன. பிழைத்து முழு வளர்ச்சி அடைவது நான்கோ ஐந்தோதான். பொரித்து வெளிவந்தவுடன் தானாகவே கடலுக்குள் சென்று வாழ ஆரம்பிக்கும் இந்தச் சிறிய குஞ்சுகளை இரையாக்கிக் கொள்ள காத்திருக்கும் உயிரினங்கள் பல. அமெரிக்காவில் தொடங்கிய விலங்குரிமை இயக்கம் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகளையும் மாடுகளையும் சரிவர நடத்துவதில் கவனம் செலுத்தியது. கோல்டி ஹான் போன்ற நட்சத்திரங்கள் ஆதரவு தந்ததால் இந்தக் கருத்தாக்கம் வேகமாகப் பரவியது.

நம் நாட்டிலும் சில நடிகைகள் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்தனர். இந்த இயக்கத்தினர் ஜல்லிக் கட்டை எதிர்த்தனர். கிராமதேவதைகளின் கோவில்களில் நடக்கும் ஆடு, கோழி பலியையும் நிறுத்த வேண்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மேலை நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்தபோது இந்தக் கருத்தாக்கம் உருமாற்றம் பெற்று, வேறு ஒரு போக்கின் வெளிப்பாடாக இங்கு இயங்க ஆரம்பித்தது. சைவ உணவு அந்த இயக்கத்தின் முக்கிய பகுதியாகி அதன் சித்தாந்தமே மாற்றம் கொண்டது. நம் நாட்டில் சைவ உணவு என்பது ஒரு உணவுப் பழக்கம் மட்டுமல்லவே. அதைச்சுற்றி ஒரு அரசியலே இருக்கின்றது. மரக்கறி உணவு ஒரு சித்தாந்தத்தின் குறியீடாக இங்கு முன்னிறுத்தப்படுகின்றது.. விலங்குரிமை பற்றிப் பேசுவது ஒரு அடையாளமாக ஆகிவிட்டது.


இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் விலங்குரிமை, பிராணி நலன், காட்டுயிர் பராமரிப்பு இவைகளைப் போட்டுக் குழப்பிக் கொள்கின்றோம். சென்னையில் ஒரு முறை காட்டுயிர் ஆர்வலர்கள் கூட்டமொன்றில் நான் பங்கெடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு அங்கத்தினர், சைவ உணவின் மேன்மைகள் பற்றிய துண்டுப்பிரசுரம் ஒன்றை வினியோகித்துக் கொண்டிருந்தார். இம்மாதிரியான குழப்பம் மக்களைக் காட்டுயிர் பராமரிப்பு போன்ற கருதுகோள்களிலிருந்து அந்நியப்படுத்துகின்றது.

அறிவியல் சார்ந்த செயல்பாடுகளின் மூலம்தான் காட்டுயிர் நல்ல விளைவுகளைக் காணமுடியும். இறைச்சிக்காக பிராணி நலன், விலங்குரிமை இயக்கத்தினரின் நடவடிக்கைகளைக் கவனித்த சலீம் அலி கவலையை 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The Fall of the Sparrow/1985 ) என்ற தனது சுயசரிதையில் கடைசி வரிகளாகப் பதிவு செய்தார்: “என்னைப் பொறுத்தவரையில் காட்டுயிர் பேணல் நடைமுறை நோக்கங்களைக் கொண்டது. அதாவது, பன்னாட்டளவில் ஒப்புக்கொண்டபடி, அறிவியல், கலாச்சார, அழகியல், பொழுதுபோக்கு, பொருளாதார காரணங்களை அடிப்படையாகக் கொண்டது. உணர்வுபூர்வமான செயல்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஆனால் இன்று காட்டுயிர் பற்றி சொல்லிக் கொடுக்கப்படுவது, அகிம்சை சம்பந்தப்பட்டதாயிருக்கின்றது, புனிதப்பசுவைப் பாதுகாப்பது போல. இது தவறானது மட்டுமல்ல, துரதிருஷ்டவசமானது.”

-சு. தியடோர் பாஸ்கரன்


நன்றி: உயிர்மை

பசுமைப் புரட்சியின் கதை: பொய்களைக் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள்

முகலாயர்கள் சிறிய அளவில் நமது வேளாண்முறையை மாற்றியமைத்தார்கள். ஆங்கிலேயர்கள் அதைப் பெரிய அளவில் மாற்றியமைத்தார்கள். பிறகு சுதந்திர இந்தியாவின் அரசாங்க - தனியார் நிறுவனக் கூட்டணி இதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோயிற்று. இந்திய வேளாண்முறையில் ஏற்பட்ட மாற்றத்தின் உச்சகட்டமாகப் பொய்களை விதைத்து வெற்றிகரமாக வளர்த் தெடுக்கப்பட்ட ‘பசுமைப் புரட்சி’யின் கொடுமைகளைப் பற்றித் தோண்டத் தோண்டப் புதிய உண்மைகள் கிடைத்தவண்ணம் உள்ளன. இத்தனை வன்முறையான ஒரு திட்டம் அரங்கேறி, இன்றும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருப்பதற்கு யார் காரணம்? ‘மொன் சாண்டோ’ என்று ஏதோ நமக்கும் அதற்கும் தொடர்பே இல்லாதது போல் கூறிவிட்டு நம் வேலையைப் பார்க்கப்போவதெல்லாம் இனி செல்லாது; பிரச்சினையை அர்த்தமுள்ள வகையில் தீர்க்கவும் உதவாது!

பள்ளிக்கூடக் கல்வி

தங்கள் பிள்ளைகள் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தி, கடினமாக உழைத்து, ஆசிரியரை மகிழ்விக்குமாறு பாடப்புத்தகத்தில் உள்ள ‘பதில்களை’ வரி மாறாமல் ஒப்பித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்றால், பாராட்டாமலிருக்கும் பெற்றோர் நம்மில் எத்தனை பேர் இருப்போம்? “ஐயா, புத்தகத்தில் அச்சாகியிருக்கும் தகவல் தவறு.” என்று அதில் இல்லாத வேறொரு தகவலை விடையாக எழுதி, அதனால் பெரிய முட்டை ஒன்றைப் பெற்று, ‘அதிகப்பிரசங்கி’ என்னும் பட்டத்தையும் தலையில் கட்டிக் கொண்டு பிள்ளை வீடு வந்து சேர்ந்தால், கோபித்துக் கொள்ளாமல் பெருமிதம் கொள்ளும் பெற்றோர் நம்மில் எத்தனை பேர் இருப்போம்?

1950-60களில் வேளாண்மைப் பாடநூல்கள் சில ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை நம் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டாமென எச்சரித்து, இயற்கை வேளாண் அறிவைப் புகட்டியது பற்றி விரிவாகப் பார்த்தோம் (காண்க: இதழ் 110). ஆனால் அதற்கு நேரெதிராக, அதற்கடுத்த பத்தாண்டுகளில் (70களில்) வெளிவந்த பாடநூல்கள், பசுமைப் புரட்சியை வானளாவப் புகழ்ந்து பிரச்சாரம் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தன. பத்தே ஆண்டுகளில், ‘நமது விவசாயத் தொழில்நுட்பம் பின் தங்கியது. பஞ்சம் பசி பரவலாவதற்குக் காரணமானது. நவீன அறிவியல், தொழில்நுட்பம் மட்டுமே பெருகிவரும் மக்கள்தொகைக்குச் சோறு போட முடியும்!’ என்னும் பொய்யை அச்சிடத் தொடங்கிய காலம் அது! அன்றிலிருந்து இன்றுவரை, எந்தத் தடங்கலுமின்றி இந்தக் கதை கோடிக்கணக்கான தாள்களில் அச்சிடப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு, நாம் எல்லோருமே சாட்சிதான். இந்தக் கதையை விடைத்தாளில் எழுதி, உயிரியல் பாடத்தில் நான் முதல் மதிப்பெண்கூட வாங்கியுள்ளேன்!

இன்றைய பாடநூல்கள் இந்திய வேளாண்மையைப் பற்றி என்னதான் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கின்றன என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கினேன். எல்லா வகுப்பு ‘தமிழ்நாடு அரசின் அறிவியல் பாட நூல்’களையும் பக்கம் பக்கமாகப் புரட்டினேன். இவை அனைத்திலும் 13ஆம் பாடத் தலைப்பு ‘பயன்பாட்டு உயிரியல்’. மனிதன், மற்ற உயிரினங்களை எவ்வாறு கட்டுப்படுத்திப் பயன் படுத்திக்கொள்வது? நவீனத் தொழில்நுட்பத்தை அவனுக்குத் தேவையான ஒன்றாக எப்படி மாற்றியமைத்துக் கொள்வது, இவையே இந்தத் தலைப்பின் முக்கிய உள்ளடக்கங்கள்.

‘அதிக மகசூல் தரும் நெல், கோதுமை மற்றும் இதர பயிர் வகைகள் இவ்வுலகின் பசிப்பிணியைக் குறைத்துள்ளன.’

‘மாலத்தியான், டி.டி.டி. ஆகிய பூச்சிக்கொல்லிகளைக் கிடங்குகளில் பயன்படுத்தலாம்.’

‘டையெல்ட்ரின், எண்டோசல்ஃபான், மாலத்தியான் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதன் மூலம் இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.’

எனப் பல பொய்களையும் அபாயகரமான செய்முறைகளையும் (எண்டோசல்ஃபான், டி.டி.டி. ஆகிய பூச்சிக்கொல்லிகள் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன!) இளம் மனங்களுக்குப் பரிந்துரைக்கிறது, ஏழாம் வகுப்பு நூல்.

ஆனால் பத்தாம் வகுப்புக்கு வந்ததும் எப்படியோ “இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் மண்ணுக்கும் உடல் நலத்துக்கும் நல்லதல்ல. அதனால் ‘நீடித்து நிற்கும் வேளாண்மை’ (sustainable farming) மற்றும் ‘சுற்றுச்சூழலுக்கு இசைவான விவசாயத்தை’ (eco-friendly farming) கடைப்பிடிக்க வேண்டும்” எனச் சொல்கிறது. படித்தவர்கள் கூறும் பசுமைப் புரட்சியின் கதைச் சுருக்கத்தை மேலும் சுருக்கி அச்சிட்டுவிட்டு, இந்தப் பாடநூல் தரும் சில பொய்யான தகவல்களைப் பார்ப்போம். (விவரங்களுக்குக் காண்க: பசுமைப் புரட்சியின் கதை அத்தியாயங்கள் இதழ் 118, 124,)

* அரிசியில் இரண்டு வகை உண்டு.

- பாரம்பரிய நெட்டை வகை. (இவை மிகக் குறைந்த மகசூலையே அளிக்கின்றன . . . இவை சூரிய ஒளியைத் திறமையாகப் பயன்படுத்த இயலாத வகையிலும் மண்ணிலிருந்த ஊட்டச் சத்துக்களைத் திறனுடன் பெற இயலாத வகையிலும் உள்ளதால் . . .)

- அதிக மகசூல் தரும் குட்டை வகை.

* கலப்பினத் (hybrid) தாவரங்கள்... நோய், பூச்சி, வறட்சி எதிர்ப்புத் திறனை அதிகம் பெற்றுள்ளன.

பல தரப்பட்ட எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வைட்டமின் கி பொருத்தப்பட்டுள்ள மரபணு மாற்றப்பட்ட ‘தங்க அரிசி’யைக்கூட இந்தப் பாடம் சர்வ சாதாரணமாக முன்னிறுத்துகிறது.

‘ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு, 40 கி தழைச்சத்து (N), 20 கி மணிச்சத்து (P), 20 கிலோ சாம்பல்சத்து (K) கொண்ட உரம் தேவைப்படுகிறது’ என்னும் கணக்கையெல்லாம் கொடுத்து, மண்வளம் என்பது ஏதோ சோதனைக் குழாயில் ரசாயனங்களைச் சேர்த்து உருவாக்குவது என்பது போன்ற தவறான கொள்கைகளைப் பிஞ்சு மனங்களில் திணிக்கிறது.

இன்று வேளாண் துறையின் அடிப்படையாக இருந்துவரும் ‘NPK’ கோட்பாட்டை முன்வைத்த வேதியியலாளர் வான் லீபிக்கூடத் தனது தவறான அணுகுமுறைக்காகத் தனது கடைசிக் காலத்தில் வருந்தினார். “நம்மை உருவாக்கிய படைப்பாளியின் பேரறிவுக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்.” என நேர்மையாக வாக்குமூலம் தந்த அவர் இப்படிக் கூறியிருக்கிறார்:

“அறிவுக்கூர்மையும் உயிர்த் துடிப்பும்கொண்ட வேளாண்மைக் கோட்பாடுகளின் அழகை நாம் அங்கீகரிக்கத் தவறிவிட்டோம். அறியாமை நிறைந்த, அறிவியலுக்குப் புறம்பான, குறுகிய நோக்கம்கொண்ட ஆசிரியர்கள் உலகளாவிய தீர்வுகளைக் கைக்கொள்ளும் படி விவசாயியைத் தூண்டுவதன் மூலம் வேளாண்மை என்னும் கலை காணாமல் போய்விடும். உலகளாவிய தீர்வு என்ற ஒன்று இயற்கையில் இல்லை. இந்த அறிவுரையைப் பின்பற்றி, தற்காலிக வெற்றியால் கண் மறைக்கப்படும் விவசாயி மண்ணைப் பற்றியும் தனது பாரம்பரிய மதிப்பீடுகளையும் அவற்றின் தாக்கங்கள் பற்றியும் மறந்துவிடுவார்”.

இந்த உண்மையை அந்தப் பிஞ்சு மனதுக்குப் புரியவைக்கும் பொறுப்பு யாருடையது?

இவற்றையெல்லாம் தாண்டி, பதினொன்றாம் வகுப்பு தொழிற் கல்விப் பாடத்தில் ‘வேளாண் செய்முறைகள்’ என்னும் பகுதிக்கு வந்தேன். ‘இந்திய வேளாண்மை வரலாறு மற்றும் எழுச்சி’ என்னும் முதல் பாடத்தைப் படித்துப்பார்த்த போது, அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை! கி. மு. 1500 கற்காலம், உலோகக் காலம், சோழர் காலம், திருவள்ளுவர் காலம் என்று ஒரு சில பக்கங்களுக்கு எழுதிவிட்டு, நேரடியாக ஆசிரியர் குழு 1943இல் வங்காளப் பஞ்சத்திற்குத் தாவிவிடுகிறது. இதையும் சில வரிகளில் கூறிவிட்டுப் பசுமைப் புரட்சியின் ‘சாதனைக’ளைப் பெருமையாகப் பட்டியலிடுகிறது. அது நடுவில் கழிந்த 3,400 ஆண்டுகளும் ‘நம் விவசாயி ஏதோ அறியாமையில் மண்ணைச் சுரண்டிக்கொண்டு, பரிசோதனைகளைச் செய்து, பெரிதாக எந்தப் பலனும் கிடைக்காமல், வெள்ளைத் தோல் விஞ்ஞானிகளின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தான்!’ என்றுதானே சராசரி மாணவன் மனத்தில் பதியும்? இதைத்தான், ரசாயன இடு பொருட்களைத் தயாரித்த யூனியன் கார்பைட் வெளியிட்ட ஆணவமான இந்த விளம்பரம் காட்டுகிறது.

அதற்கடுத்த பாடங்களில், மிகவும் சர்ச்சைக்குள்ளாகிய ‘மரபணு மாற்றுத்’ தொழில்நுட்பம், ஏதோ பிரச்சினையே இல்லாத, சுலபமாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுச் செயல்படுத்தப்பட்டுவரும் சாதாரண ஒரு தொழில்நுட்பத்தைப் போன்று எழுதியுள்ளனர்.

‘நவீன அறிவியல் முறையான மரபணு மாற்றத்தின் மூலம் பயிர்களின் அளவும் தரமும் மேம்படுத்தப்பட முடியும்’ என்னும் வாக்கியத்தை திரும்பத் திரும்பச் சொல்லிப் பாருங்கள்! சரியாக இருக்குமோ எனத் தோன்றும்.

கல்லூரிக் கல்வியும் வேளாண் ஆராய்ச்சியும்

பள்ளிக்கூடப் புத்தகங்களே இவ்வளவு சேதம் செய்யும்போது, தனியார் நிறுவனங்கள் தங்கள் கைகளுக்குள் போட்டுக்கொண்டிருக்கும் ‘கல்லூரிக் கல்வி’யைப் பற்றிக் கேட்கவா வேண்டும்!? இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு சார்ந்த முன்முயற்சி (India-US Agriculture Knowledge Initiative) ஒப்பந்தம் ஒன்று இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் நிர்வாக அமைப்பில் இடம்பெறும் முக்கிய நிறுவனங்களுள், அமெரிக்கத் தனியார் வேளாண் நிறுவனங்களான மொன்சாண்டோ, சிஞ்சென்டா, கார்கில் ஆகியவை உள்ளன. நம் நாட்டின் அனைத்து வேளாண் பல்கலைக் கழகங்களில் எத்தகைய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுமென இந்த நிறுவனங்களே முடிவு செய்யும். அது மட்டுமல்ல. இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளை எப்படித் தங்களுக்குச் சாதகமான விதத்தில் முன்வைப்பது, எவ்வாறு ‘அதற்கேற்ற’ புள்ளிவிவரங்களைத் தயாரிப்பது என்பதில்கூட நல்ல பயிற்சி கிடைக்கும். கொடுத்த பதில்களை உருப்போட்டு, பெரியோர்களிடம் நல்ல பெயர் வாங்க வைத்து, இளம் மனங்களை இத்தகைய வேலைக்கு நாம் ஏற்கனவே தயார் செய்துவிடுகிறோமே!

சென்ற மாதம் கோவையில் ஒருநாள் கூட்டம் போட்ட ‘விவசாயிகள் விடுதலைப் பயணிகள்’ பல விவசாயிகளிடமிருந்து பணம் சேகரித்துத் தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகத்திடம் “நாங்கள் உங்களுக்குப் பணம் தருகிறோம்! எங்களுக்காக ஆராய்ச்சி மேற்கொள்ளுங்கள்!” என்று கோரிக்கை விடுத்தனர்.

“இத்தகைய கல்வியை உள்வாங்கிய பின், அரசாங்கத்தில் மேசையில் உட்கார்ந்துகொண்டு எப்படிக் கைநிறையச் சம்பளம் வாங்கலாம் என்பதுதான் பட்டதாரிகளின் ஒரே குறிக்கோளாக உள்ளது” (காண்க: இதழ் 105) என்று வோல்கர் நம் வேளாண் பல்கலைக்கழகத்தின் போக்கைப் பற்றிக் கூறி நூற்றாண்டுக் காலம் கழிந்துவிட்டது! இன்றைய இளைய தலைமுறை, அடிப்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டங்கள் பெற்றுத் திருப்தி அடைவதில்லை. இவற்றைக்கொண்டு கம்பெனிகளை எவ்வாறு அதிகபட்ச லாபத்தைச் சம்பாதிக்கச் செய்யலாம் என்னும் கலையை எம்.பி.ஏ. பட்டப் படிப்பின் மூலம் கற்பதற்காகப் பிசினஸ் கல்லூரிகளுக்குப் படையெடுக்கின்றனர். உணவு மற்றும் வேளாண் துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன எனப் பெற்றோர்கள் கருதுகிறார்கள். இவர்கள் பார்வையில் வேளாண் துறையில் வேலைவாய்ப்பு என்றால் நிலத்தில் வேலை செய்வது அல்ல. வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சிகள் முதலான பணிகள்.

இந்தியப் பாரம்பரிய வேளாண்மை பற்றி எதுவுமே தெரியாமல் பசுமைப் புரட்சி பற்றிய கதைகளையும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் குறித்த பசப்புகளையும் படித்து மூளைச்சலவையாகி வெளியில் வரும் பள்ளி மாணவர்களில் பலர், லாபம் சம்பாதிக்கும் இலக்கைக்கொண்ட கல்லூரி மாணவர்களாக மாறுகிறார்கள். ஏதேனும் ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒத்துழைத்து நல்ல ‘பதவி’களை எட்டிப்பிடித்து வசதியாக அமர்ந்துகொள்ளும் விஞ்ஞானிகளாகி விடுகின்றனர். இப்படிப்பட்ட ‘விஞ்ஞானி’கள் எப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, எப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிடுவர் என்பதற்கு ஆதாரமான சமீபத்திய செய்தி ஒன்றைப் பார்ப்போம்.

மரபணு மாற்றுக் கத்திரிக்காயை (பி.டி. கத்திரிக்காய்) அனுமதிப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் நாட்டின் தலைசிறந்த ஆறு அறிவியல் கல்வி அமைப்புகளை (இந்தியன் அகாடமி ஆஃப் சயின்ஸஸ், த இந்தியன் நேஷனல் அகாடமி ஆஃப் இஞ்சினியரிங், த இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடமி, த நேஷனல் அகாடமி ஆஃப் அக்ரிகல்சுரல் சயின்ஸஸ், த நேஷனல் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ், த நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸ்) இவ்விஷயத்தில் பாரபட்சம் அற்ற அறிவியல்பூர்வமான அறிக்கையைத் தயார் செய்யுமாறு கடந்த மார்ச் மாதம் கேட்டுக்கொண்டார். ஆறு மாதங்கள் கழிந்து செப்டம்பர் மாதம் வெளியான அவர்களின் அறிக்கை ‘பி. டி. கத்திரிக்காயை உடனடியாக வெளியிட வேண்டும்!’ என்னும் முழக்கத்தை முன்வைத்தது. அறிவியல்ரீதியான எந்த ஆதாரமும் இல்லாத இந்த அறிக்கையை ஜெயராம் கிட்டத்தட்ட தூக்கி எறிந்துவிட்டார்! விஞ்ஞானிகள் உட்படப் பல தரப்பினராலும் இந்த அறிக்கை மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டது. மரபணு மாற்றுப் பயிர்களை ஊக்குவிக்கும் தனியார் ஒருவரின் அறிக்கையிலிருந்து 60 வாக்கியங்கள் இந்த அறிக்கையில் அச்சு அசலாக நகல் செய்யப்பட்டிருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டினர். நம் நாட்டின் அறிவியல் துறை மிகவும் கீழ்த்தரமாக விலைபோய்விட்டது என்பதற்கு இதற்கு மேல், வேறெந்த ஆதாரமும் தேவையில்லை!

ஊடகங்கள்

ஊடகங்களின் நிலையும் அதே கதைதான். எந்த ஊடக நிறுவனம் யாருக்கு விலைபோயிருக்கிறது என்பதைத் தெரிந்துவைத்துக் கொண்டுதான் இப்போதெல்லாம் செய்தியைப் படிக்க வேண்டியிருக்கிறது. சென்ற ஆண்டு பி.டி. கத்திரிக்காய்க்கு எதிரான பிரச்சாரம் நடந்த சமயத்தில், த ஹிந்து நாளிதழ் அப்பிரச்சினை குறித்து இவ்வாறு தலையங்கம் எழுதியது: பி.டி. பருத்தி விஷயத்தில் விவசாயிகள் பலன் பெற்றது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்திச் செலவு குறைந்து விளைச்சல் அதிகரித்தது... மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மீது ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கும்படி வாதிடுவது அறிவியலுக்குப் புறம்பானதும் அபாயகரமானதுமாகும். மரபணு மாற்றம் எழுப்பும் கேள்விகளுக்கு மேம்பட்ட அறிவியல்தான் விடையாகுமே தவிர, பகுத்தறிவுக்குப் புறம்பான அச்சங்களின் அடிப்படையில் எழும் மாற்றத்துக்கு எதிரான போராட்டம் அல்ல.’

“பி.டி. கத்திரியின் அபாயங்களைப் பற்றிய எங்கள் தகவல், போராட்டம் பற்றிய அறிவிப்பையும் செய்தியையும் வெளியிடுவீர்களா?” எனப் பல முறை கேட்டுக்கொண்டும் அரசாங்க அலுவலகத்தில் பந்தாடப்பட்டது போல் அலைக்கழிக்கப்பட்ட அனுபவம் போராளிகள் சிலருக்கு உண்டு! மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிராக அறிவியல் ஆதாரங்கள் உலகம் முழுவதிலும் பலராலும் முன்வைக்கப்பட்டபோதிலும் இப்படிப்பட்ட ஒருதலைப்பட்சமான கருத்தை ஒரு நாளிதழ் எழுதினால் நமக்கு என்ன தோன்றும்? மாற்றுக் கருத்துகளுக்கு இடம் கொடுக்காத அளவுக்கு மரபணு மாற்றுப் பயிர்களை ஆதரிக்கும் இந்தச் செய்தித்தாளை யார் விலை கொடுத்து வாங்கியிருப்பார்கள் எனும் கேள்வி எழத்தானே செய்யும்?

மேலும், பி.டி. பருத்தியின் ‘அமோக விளைச்சலை’ப் பற்றியும் அதனால் ‘விவசாயிகள் பணக்காரர்களானது’ பற்றியும் பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் வெளிவரும் செய்திகள் சிலவற்றை அலசிப் பார்க்கையில், இந்தச் சந்தேகம் தெளிவானது. சில உதாரணங்கள்: “The rise of Bt-cotton (ஜனவரி 29, 2008), Bt cotton boosts farmers’ income (ஜனவரி 12, 2008) ஆகிய இரண்டு செய்திகளும் பொருளாதார, சமூக ஆய்வு மையத்தின் (Centre for Economic and Social Studies - CESS) அறிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த அமைப்புக்கு நிதியுதவி அளிப்பவை ஃபோர்டு, ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன்கள், யு.எஸ்.எய்ட் (US AID), உலக வங்கி.

‘பி.டி. பருத்தி விவசாயிகளுக்கு அதிக விளைச்சல்’ Bt cotton farmers get more returns (ஜனவரி 29, 2008) என்று எகனாமிக் டைம்ஸில் வெளியான செய்தி, தார்வாட் வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையைக் குறிப்பிடுகிறது. அந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நிதியுதவி அளிப்பது மான்சாண்டோ.

அக்டோபர் மாத Outlook ஊடகங்களின் ஊழலைப் பற்றி எழுதிக் கிழித்துத் தள்ளியிருப்பது போல், ‘யாரெல்லாம் (தங்கள் மன சாட்சிகளை மௌனமாக்கிவிட்டு) பணம் தருகிறார்களோ அவர்கள் சொல்வதை அப்படியே அச்சிடத் தயாராக இருக்கின்றன இன்றைய ஊடகங்கள்!’ இந்த இதழில் இடம் பெற்றுள்ள நோம் சாம்ஸ்கியின் நேர்காணலில் இதை அழகாக விளக்குகிறார்.

கேள்வி: ‘சர்வாதிகாரத்துக்கு வன்முறை என்றால் ஜனநாயகத்துக்குப் பிரச்சாரம்’ என்று ஒருமுறை நீங்கள் சொன்னீர்கள். பிரச்சாரம் மக்களின் மன உறுதியைக் குலைத்து அரசியல்ரீதியாக முடிவெடுக்கும் திறனை மழுங்கடிக்கும் திறனை மேட்டுக்குடியினருக்குத் தருகிறதா?

பதில்: அதுதான் அதன் இலக்கு என்பது தெளிவு. இது வெளிப்படையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. 1920களில் பிரச்சாரம் சாதாரணமான விஷயமாகத்தான் இருந்தது. 1930களில் நாஜிகள் தலையெடுத்த பிறகு பிரச்சாரம் என்னும் வார்த்தையில் குருதி மணம் ஒட்டிக்கொண்டுவிட்டது. எனவே அதைப் பிரச்சாரம் என்று இப்போது சொல்ல முடியாது. ஆனால் 1920களில் அப்படி இல்லை. மக்கள் தொடர்புத் துறை மக்களின் போக்குகளையும் நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்துவதைத் தன் இலக்காகக் கொண்டிருந்தது. தாராளப் போக்குகளுடைய கொண்ட வால்டர் லிப்மேன் போன்ற சிந்தனையாளர்கள், முடிவெடுக்கும் செயல்பாட்டிலிருந்து மக்கள்திரளை விலக்கிவைக்க வேண்டியது பற்றிப் பேசியிருக்கிறார். நாம்தான் பொறுப்புள்ள மனிதர்கள், நாம்தான் முடிவெடுக்க வேண்டும். எனவே ‘ஆட்டுமந்தைகள் போன்ற மக்கள் கூட்டத்திலிருந்து’ நாம் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயக நடைமுறையில் நாம்தான் பங்கேற்பாளர்கள். அவர்கள் பார்வையாளர்கள். அவர்கள் அமைதியாகவும் கீழ்ப்படிதலுடனும் இருப்பதை உறுதிசெய்வது அறிவுஜீவிகள், ஊடகங்கள் ஆகியோரின் பணி என்று பேசியிருக்கிறார். இதுதான் லிபரலின் பார்வை. இந்தப் பொருளில் ஊடகத் துறையும் லிபரல்தான் என்பதில் சந்தேகமில்லை.

o

பிரச்சினையை அலசியது போதும்! ‘உணவு கிடைப்பது, விவசாயிகளின் நலம், நம் உடல்நலம், கல்வி , மண்வளம், சுற்றுச்சூழல், பாரம்பரியச் சொத்து, சமுதாயம், அரசாங்கம், அரசியல், விஞ்ஞானம் அனைத்தும் இத்தனை சிக்கலாக ஒரு வலைக்குள் மாட்டிக்கொண்டிருக்கின்றன. இவற்றை மீட்க முடியுமா?’ என்னும் கேள்வி நம் மனத்தில் எழத்தான் செய்யும். உங்கள் குழந்தைகளின், நெருங்கிய உறவினர் களின் பிறந்தநாளின்போது ‘இன்று போல் என்றும் வாழ்க’ என்று மனப்பூர்வமாக வாழ்த்துவதில் உங்களுக்கு விருப்பமும் நம்பிக்கையும் இருந்தால், உங்களுக்கு இந்தச் சிக்கலான வலையிலிருந்து நமது சமுதாயத்தை மீட்க முடியும் என்னும் நம்பிக்கை இருந்தே ஆக வேண்டும்.

-சங்கீதா ஸ்ரீராம்

திங்கள், நவம்பர் 01, 2010

பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?

கையில் வைத்து பட்டாசை தூக்கி எறிந்தபோது மகேஷின் கையிலேயே அது வெடித்ததில் படுகாயம் ஏற்பட்டது. பட்டாசு மருந்துக்கு அருகே முகத்தை வைத்துக்கொண்டு பற்ற வைத்தபோது சுரேஷின் முகத்தோல் உறிந்துவிட்டது. கீதாவுக்கு ஏற்கெனவே ஆஸ்துமாவும் சுவாசப் பிரச்சினையும் இருந்தன. தீபாவளி நேரத்தில் அது மோசமாகிவிட்டது.


மற்றொருபுறம்...
"டமார்" என்ற மிகப் பெரிய ஓசையோடு வெடிச்சப்தம் கேட்டது. எல்லோரும் ஓடிச் சென்று பார்த்தபோது, அந்தக் கட்டடமே சுக்குநூறாகச் சிதறிக் கிடந்தது. கூலிக்கு பட்டாசு செய்து கொடுக்கும் குடும்பங்களில் அதுவும் ஒன்று. நடுத்தர வயது ஆணும் பெண்ணும் இறந்துகிடந்தார்கள். "பட்டாசு தயாரித்தபோது விபத்து, இரண்டு பேர் சாவு" என்று அடுத்த நாள் நாளிதழில் செய்தி வந்தது. இதுபோன்ற செய்தியை, ஆண்டுக்கு 20 - 30 முறையாவது பார்க்க முடிகிறது.


சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மாரி, அவளது கைகளில் உள்ள கந்தக மருந்தை எவ்வளவு தேய்த்தாலும் போவதில்லை. அவள் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்க்கவில்லை. ஏனென்றால், இப்பொழுது பட்டாசு தயாரிப்பில் குழந்தைகள் ஈடுபடக் கூடாது என்று நெருக்கடி வந்துவிட்டது. அதனால் பட்டாசு தயாரிப்பதற்கான பொருள்களை வீட்டுக்கே கொண்டு வந்து தந்துவிடுகிறார்கள். வீட்டிலேயே பட்டாசு தயாரித்து கொடுத்தால் போதும், கூலி கிடைத்துவிடும்.


மாரியின் ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த தங்கராசுவுக்கு நரம்புக் கோளாறு. ஏதோ கெமிக்கல் அவரது உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று தற்போது அதிகம் சேர்ந்துவிட்டதால்தான் இந்தப் பிரச்சினை என்கிறார் மருத்துவர். இனிமேல் அவரால் பட்டாசோ, மத்தாப்போ செய்ய முடியாது. தினசரி ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.


தீபாவளி அன்று நாமும் நமது குழந்தைகளும் மகிழ்ச்சியாக வெடித்துத் தள்ளும் பட்டாசுகளைத் தயாரிக்கும்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு சிறிய உதாரணம்தான் மேலே உள்ள சம்பவங்கள்.


தீபாவளிக்கு எவ்வளவு பட்டாசு வெடிக்கிறோம் என்பதில் குழந்தைகளிடம் மட்டுமின்றி, பெரியவர்களிடையேயும் போட்டி நிலவுகிறது. இதற்காக அதிக பட்டாசுகளை, அதிக சப்தம் தரும் பட்டாசுகளை, வாணவேடிக்கை மத்தாப்புகளை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் ரூ. 700 கோடிக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் தீபாவளிக்காக வாங்கப்படுகின்றன. ஒரு நாள் கூத்துக்காக, ஒரு சில நிமிடங்களில் கரியாவதற்காக இவ்வளவு கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கப்படுகின்றன.

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இவை காற்றை மாசுபடுத்துகின்றன. தீபாவளி அன்றைக்கு காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் உங்கள் ஊரை புகைமூட்டம் எப்படி சூழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். என்றைக்கும் இல்லாத அந்த புகைமூட்டம் எப்படி உங்களை பாதிக்கப்போகிறது என்று அப்பொழுது புரியும்.எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு அந்த புகைமூட்டம் இருக்கும். நீங்கள் பட்டாசு வெடிக்காவிட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளை தூண்டிவிடும். ஏனென்றால் இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.


பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:

செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்

காட்மியம்: ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு

காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்

மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்

மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு

சோடியம்: ஈரப்பத காற்றுடன் வினைபுரிந்து தோலை பாதிக்கலாம்

துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்

நைட்ரேட்: மூளை வளர்ச்சியை பாதிக்கலாம், கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்


உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஒரு பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால் இது செய்யப்படுவதில்லை.


காதுகள் ஜாக்கிரதை


மேற்கண்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நம்ம ஊர் காவல்துறை இதை நடைமுறைப்படுத்துவதில்லை. அத்துடன் 125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால் சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சப்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. இவை அந்தத் தடையை சாதாரணமாக மீறுகின்றன.


ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல்
இந்தச் சப்தத்தை நீங்கள் கேட்டால் உங்கள் காது செவிடாவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சப்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம்.


பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது. குறைவான மாசுபாட்டைகூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.


இப்படி நமது குழந்தைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, முகம் தெரியாத எத்தனையோ குழந்தைகள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பட்டாசு தயாரிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் குழந்தைகளும் போராடியபோது, "இதைத் தயாரிப்பதில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படவில்லை" என்று பட்டாசு, மத்தாப்பு அட்டைகளில் அச்சிடப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. குறைந்த கூலிக்கு, மிக வேகமாக வேலைகளை முடித்துத் தரும் குழந்தைகளை எப்படி பட்டாசு ஆலை முதலாளிகள் பேசாமல் விடுவார்கள். குட்டி ஜப்பான் என்ற பட்டப் பெயர் கொண்ட சிவகாசி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் இன்றைக்கும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது பெற்றோருக்கு இதே வேலையை அந்த முதலாளிகள் தருவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு கூலி அதிகம் தர வேண்டி இருக்கும், கூலிஉயர்வு தராவிட்டால் வேலைநிறுத்தம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்கள் என பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக முதலாளிகள் நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், குழந்தைகளோ, பெரியவர்களோ யார் பட்டாசு தயாரித்தாலும், அவர்களுக்கு முறைப்படி கையுறை, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதில்லை.

ஆனால் 100 - 150 ஆண்டுகளுக்கு முன் இன்றைக்கு உள்ளதுபோல் பெரிய அளவில் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இல்லை. அப்போது நம்மிடம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கமும் இருந்ததில்லை.


தீபாவளி என்பது வயிற்றுக்கு பாதகமில்லாத இனிப்புகள், விளக்குகள் வைத்து கொண்டாடுவதுதான். ஒரு சில நிமிடங்களில் கருகிவிடும் பட்டாசுகளுக்காக காசை கரியாக்காமல் குழந்தைகளுக்கு பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், வண்ணவண்ணப் புத்தகங்கள், அறிவூட்டும் புத்தகங்களை வாங்கித் தரலாம்.


மேற்கண்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் நன்றாக சிந்தித்துப் பார்ப்போம், பிறகு நமது குழந்தைகளுக்கும் இதைக் கூறுவோம்.

இந்தச் செய்தியை மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ், அலுவலக - குடியிருப்பு நோட்டீஸ் போர்டு உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் பரப்புவோம்.


பட்டாசுகளை தவிர்ப்பதற்கான கூடுதல் செயல்பாடுகள்:


- பள்ளி காலை வணக்கக் கூட்டங்களிலும், வகுப்புகளிலும் இது பற்றி பேசலாம் - பட்டாசுகளின் மோசமான தன்மைகள் பற்றி குழந்தைகளே சிறு நாடகத்தை நடத்தலாம்

- ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகளே பட்டாசுகளின் தீமைகள் பற்றி படச் சுவரொட்டிகள், கையால் எழுதப்பட்ட நோட்டீஸ்களை தயாரிக்கலாம்.

- "பட்டாசுகள் வேண்டாம்", "பட்டாசுகளைத் தவிருங்கள்" என்கிற பேட்ஜ்களை விநியோகித்து மற்ற மாணவர்களிடமும் பட்டாசுகளைத் தவிர்ப்பதன் அவசியம் பற்றி பேசலாம்.

- "பட்டாசு வெடிக்கமாட்டோம்" என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் கடிதங்களை குழந்தைகளே எழுதலாம். இவற்றை மற்ற வகுப்புகள், பள்ளிகளுக்கு அனுப்பலாம்.

- இது தொடர்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் உறுதிமொழி எடுக்கலாம்.

- பூவுலகின் நண்பர்கள், குக்கூ குழந்தைகள் வெளி, பாட்டாளிகள் படிப்பகம்

சனி, அக்டோபர் 30, 2010

குளங்களில் கருவேல மரங்கள் - ஏகாதிபத்திய சதி

தமிழக விவசாயத்தில் ஏரிப்பாசனம் மிக முக்கியமான ஓர் அங்கம். குறைவான மழையும், நீர்வளமும் கொண்ட மேற்கு மற்றும் தென் தமிழகத்தின் முதன்மையான நீர் ஆதாரமே குளங்களும், கண்மாய்களும், ஏரிகளும்தான். தற்போது இந்தப் பகுதிகளில் பெரும்பாலான ஏரிகளிலும், கண்மாய்களிலும் நடுப்பகுதி முழுவதும் கருவேல மரங்கள் அடைத்துக் கொண்டுள்ளன. இதன் காரணமாக, குளங்களின் நடுப்பகுதி முழுவதும் மேடு தட்டிப் போய், அவற்றின் மொத்தப் பரப்பில் ஏறக்குறைய கால்பகுதியில் மட்டுமே நீர் தேங்க இடமுள்ளது. ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போனதன் காரணமாக, பல்லாயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. ஏரிப்பாசனத்தை நம்பியிருந்த விவசாயம் சின்னாபின்னாமாகி வருகிறது.
குளங்களின் நடுவே உள்ள கருவேல மரங்கள், அரசின் அலட்சியத்தால் தானே வளர்ந்தவை அல்ல. திட்டமிட்டு நடப்பட்டு, வனத்துறையால் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருபவை. வறண்ட நில விவசாயத்திற்கு உயிராதாரமாக இருக்கும் ஏரிகளையும், கண்மாய்களையும், அவற்றை நம்பியுள்ள விவசாயத்தையும், மக்கள் வாழ்வையும் நாசமாக்கக்கூடிய விதத்தில் – ஏரிகளில் அரசே கருவேல மரங்களை நட்டு வளர்ப்பதற்கு, அப்படியென்ன காரணம் இருந்துவிட முடியும்?

கடந்த இருபத்தி அய்ந்து ஆண்டுகளாக, தமிழகத்தில் விவசாயத் துறை அடைந்துவரும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் தோழர் "விடியல்' சிவாவின் ஆய்வுகள், இக்கேள்விக்குப் பதிலளிக்கின்றன.

“1960களில்தான் குளங்களின் நடுவே கருவேல மரங்களை நடும் முடிவை அரசு எடுத்தது'' என்கிறார் அவர். அதற்கு முன்பு வரை குளங்களும், ஏரிகளும் கிராம மக்களின் பொதுச் சொத்தாகத்தான் கருதப்பட்டு வந்தன. அவற்றைப் பராமரிப்பது அதாவது கரைகளைப் பலப்படுத்துவது, தூர்வாருவது போன்றவற்றை மக்களேதான் செய்து வந்தனர். குளங்களில் படியும் வண்டல் மண், விவசாயிகளால் மிகச் சிறந்த உரமாகக் கருதப்பட்டது. வேனில் காலங்களில் குளங்களில் நீர் வற்றிப் போனதும், தரை சேறும் சகதியுமாக இருக்கையில் முதலில் மீன்பிடி திருவிழா நடக்குமாம். அந்தக் குறிப்பிட்ட ஏரியின் பாசனப் பகுதியில் வாழும் மக்கள் அத்தனை பேரும் ஒரே நாளில் ஏரியில் கூடி மீன்பிடிப்பார்களாம். மீன்கள் அனைத்தும் பிடிக்கப்பட்டதும் தூர்வாரும் வேலை தொடங்குமாம்.

குளங்களை சுற்றிப் பல கிலோ மீட்டர் தூரத்திற்குப் பரவியிருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் படை போலத் திரண்டு வருவார்கள். வண்டிகளில் ஏற்றிச் செல்லப்படும் வண்டல் மண், வயல்களில் கொட்டி உழப்படும். இந்த வண்டல் மண்ணுடன் வேறு இயற்கை உரங்களையும், சில வேளைகளில் மனிதக் கழிவுகளையும்கூட சேர்த்து விவசாயிகள் உரமாகப் பயன்படுத்துவார்களாம். “நிலவொளியில் கருவேல மரங்களற்ற பரந்து விரிந்த ஏரிகளிலிருந்து மண்ணெடுத்துச் சென்ற உழவர்களில் சில ஆயிரம் பேர்களாவது இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்'' என்கிறார் சிவா.

அடுத்த மழைக்காலத்துக்குள் குளங்கள் சுத்தமாகத் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு புதுப்புனலை வரவேற்கத் தயாராகிவிடும். பலநூறு ஆண்டுகளாக ஏரிப்பாசனப் பகுதிகளில் விவசாயம் இப்படித்தான் நடந்து வந்தது. பெரும்பாலும் நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்த விவசாயத்தில், ஏகாதிபத்தியத்தின் நேரடித் தலையீடு மிக அற்பமானதாகவே இருந்து வந்தது.

ஆனால், உரம் மற்றும் பூச்சி மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு பல்கிப் பெருகின. உலகப் போர் நடைபெற்ற காலத்தில் மனிதர்களைக் கொன்று குவிக்கும் நச்சு வாயு போன்ற ரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்து வந்த நிறுவனங்களுக்கு, அமைதிக் காலத்தில் வேறு சந்தைகள் தேவைப்பட்டன. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உர உற்பத்திக்கு மாறிவிட்டன. தங்களது கண்டுபிடிப்புகள் மனிதர்களுக்குப் பதில் பூச்சிகளை யும், புழுக்களையும் அழிக்கும் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் நண்பன் என்று கருதப்பட்ட மண்புழுகூட, அழிக்கப்பட வேண்டிய உயிரிகளின் வரிசையில் சேர்க்கப்பட்டது.

எனவே, இந்த நிறுவனங்களுக்குச் சந்தை ஏற்படுத்திக் கொடுக்கத்தான் "பசுமைப் புரட்சி' தொடங்கப்பட்டது. வெளிநாட்டு உரங்கள் நமது வயல்களில் வெள்ளம் போல் பாயத் தொடங்கியதும், ஏகாதிபத்தியம் நேரடியாக விவசாயிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டத் தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான். குளங்களில் ஏன் கருவேல மரங்கள் நடப்பட்டன என்ற கேள்விக்கு, “பல்லாயிரம் கோடி டாலர் செலவில் உர உற்பத்தி ஆலைகளைக் கட்டி வைத்திருக்கும் ஏகாதிபத்தியம், எப்படி பைசா செலவில்லாமல் மக்கள் ஏரிகளின் படுக்கைகளிலிருந்து உரத்தை உற்பத்தி செய்து கொள்வதை ஒப்புக் கொள்ளும்?'' என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார் சிவா.

தமிழகத்தின் விவசாயத்தை உர உற்பத்தி ஆலைகளின் பிடிக்குள் கொண்டுவர வேண்டுமென்றால்; விவசாயிகளிடம் உர விற்பனை செய்ய வேண்டுமென்றால், அவர்கள் தங்களுக்குத் தேவையான உரத்தைத் தாங்களே தயாரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அழித்துவிட வேண்டும். இது நடக்காதவரை உர உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் சந்தைகளை விரிவாக்குவதற்கு வாய்ப்பே இல்லை. அதுவரை, நம் நாட்டில் படித்த மேல்தட்டு வர்க்கத்தினர் அந்நியப் பொருட்கள் மீது தீராத மோகம் கொண்டிருந்தாலும்கூட, விவசாயிகள் தங்கள் வேர்களின் மீது நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஒரு வயல் முழுவதற்கும் பயன்படுத்த ஒரு சட்டைப் பையளவு நவீன உரம் போதும் என்று ஒரு விஞ்ஞானி கூறியதற்கு, ஆமாம் விளைச்சலைக் கொண்டு செல்ல இன்னொரு சட்டைப் பை போதும் என்று ஒரு விவசாயி கிண்டலடித்ததாக ஒரு கதை உண்டு.

இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், செயற்கை உரங்களை விவசாயிகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும் திட்டமிட்ட முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. “ஏரிப்படுக்கைகளிலிருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதைத் தடுப்பதற்காகத்தான் ஏரிகளின் நடுவே கருவேல மரங்கள் நடப்பட்டன'' என்ற முடிவுக்கு சிவா வருகிறார். ஏரிகளிலிருந்து வண்டல் மண் எடுக்கப்படுவது தடுக்கப்படாத வரையில் உர விற்பனை சாத்தியமேயில்லை. தன்னிறைவான இந்த முறை இருக்கும் வரை, ஏகாதிபத்திய பாணி விவசாயத்திற்கு மாறிச் செல்ல விவசாயிகளைத் தூண்டுவது சாத்தியமேயில்லை.

இது எப்படி நிறைவேற்றப்பட்டதென்றால், முதலில் சில குளங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு, கருவேல மரங்கள் நடுவதற்காக வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும். மரங்கள் நடப்பட்டவுடன் அவற்றில் பறவைகள் தங்கும். அவற்றின் எச்சம் கலந்த நீர் நிலங்களுக்குப் பாயும்போது, அது ஓர் அற்புதமான, வீரியமான சத்து நிறைந்த தண்ணீராக, நீரே உரமாக இருக்கும் என்ற பிரச்சாரத்தை வனத்துறை சுற்றியுள்ள கிராமங்களில் மேற்கொள்ளும். துண்டுப் பிரசுரங்கள் முதல் செய்திப் படங்கள் வரை அத்தனை பிரச்சார சாதனங்களும் பயன்படுத்தப்படும். ஆனால், இத்தகைய பிரச்சாரம் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது. குளங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடைவெளிவிட்டு வனத்துறையால் விழுங்கப்பட்டன.

கருவேல மரங்கள் நடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களையும் ஏரிகளையும் சுற்றி மட்டுமே இந்தப் பிரச்சாரம் நடத்தப்பட்டன. அதாவது காதைக் கிழிக்கும் அரசின் வழக்கமான பாணியில் இல்லாமல், ஏறத்தாழ ஒரு கிசுகிசுப்புப் பாணியே நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் ஏதோ ஒரு பிரம்மாண்டமான திட்டம் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தி – நகரங்களை யும், மற்ற பகுதிகளையும் எட்டிவிடாமல் தடுக்கப்பட்டது.

மழைக்காலங்களில் குளங்களில் நீர் நிரம்பும்போது, கருவேல மரங்களால் மட்டுமே தாக்குப் பிடித்து நிற்க முடியும். எனவேதான் இம்மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு குளத்தில் அல்லது ஏரியில் கருவேல மரங்கள் நடப்பட்டதுமே வனத்துறை வேலியிட்டு, அதை மக்களிடமிருந்து பிரித்துவிடும். குளத்தில் வண்டல் மண் எடுப்பது மட்டுமல்ல; ஆடுமாடுகள் மேய்ப்பதுகூட வனத்துறையால் தடுக்கப்பட்டு விடும். அப்போதிருந்து இன்றுவரை ஒவ்வொரு குளமாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அவற்றில் கருவேல மரங்கள் நடப்பட்டு வருகின்றன. ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட ஏரிகளில் இம்மரங்கள் நடப்பட்டதால், மேடுதட்டிப் போய் பெயருக்கு மட்டுமே ஏரிகளாக உள்ளன.

மக்களின் எரிபொருள் தேவைக்காகத்தான் ஏரிகளில் கருவேல மரங்கள் நடப்பட்டன என்ற அப்பட்டமான மற்றொரு பொய்யையும் சிவாவின் ஆய்வு வெட்ட வெளிச்சமாக்குகிறது. குளத்தில் வளர்ந்திருக்கும் கருவேல மரத்தில் இருந்து ஒரு சுள்ளியை உடைக்கக்கூட சட்டப்படி வனத்துறையின் அனுமதி பெற வேண்டியிருக்கும். இது, கிராம மக்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததுதான். “அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் வளர்ந்திருக்கும் கருவேல மரங்கள் வனத்துறையால் வெட்டப்பட்டு, திருப் பூருக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அவை அங்கே தொழிற்சாலைகளில் எரி பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அது மொத்த எரிபொருள் தேவையில் ஒரு சதவிகிதம்கூட இருக்காது'' என்கிறார்.

“தங்கள் வாழ்வில் இப்படியொரு பெரும் பாதிப்பு ஏற்படுவதை மக்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. எப்போதாவது ஒரு முறை ஏதாவது ஒரு விவசாயிகள் இயக்கம், குளங்களில் கருவேல மரங்களை நடக்கூடாது என்று விடுவிக்கும் அறிக்கைகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துத் தானிருக்கும். ஆனால், இத்திட்டத்தின் வீச்சையும் அது ஏற்படுத்தி வரும் சர்வநாசத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், இதற்கெதிராக குறிப்பிடத்தக்க போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்பது உண்மைதானே. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் விவசாயிகள் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள்/ அரசின் இந்தத் திட்டமிட்ட தாக்குதலின் வெற்றிக்கு உதவிகரமாயிருந்தன'' என்ற முடிவுகளுக்கு சிவா வருகிறார்.

கால்நடை வளர்ப்பு வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. வண்டி மாடுகள் மற்றும் உழவு மாடுகளைப் பெறுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டன. இது தவிர, தமிழகம் முழுவதும் கூட்டுக் குடும்பங்கள் உடைபட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான். விவசாயிகள் ஆயிரக்கணக்கில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்குப் படையெடுத்து, கண்ணீரும் கம்பலையுமாகப் பாகப் பிரிவினை செய்து கொண்டார்கள். குடும் பங்கள் தனித்தனித் தீவுகளாக மாறிப்போய் பலவீனப்பட்டுப் போன நிலையில், பழைய முறையில் குளங்களுக்கு வண்டி கட்டிச் சென்று மண்ணெடுக்கத் தேவையான ஆள்பலத்தையும் அவர்களால் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. தலித்துகள் பெருமளவில் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தது மற்றொரு காரணம்.

கருவேல மரங்களை நடுவது முழுவேகம் பெற்றது எண்பதுகளின் தொடக்கத்தில்தான். இந்தக் காலத் தில் கால்நடை வளர்ப்பு ஏறக்குறைய அழிவை நெருங்கிவிட்டது. இந்த மரங்களினால் குளத்தில் தேக்கப்படும் நீரின் அளவு கால்பகுதியாகக் குறைந்துவிட்டது. ஆனால், நீர்ப்பாசனத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தற்காலிகமாகச் சமாளிக்க, பம்புசெட் நிறுவனங்கள் உதவிக்கு வந்தன. நமக்கே நமக்கென்று ஒரு போர்வெல். மழையைப் பற்றி, கொடிக்கால்கள், கால்வாய்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பஞ்சாயத்து வேண்டாம். கூட்டு உழைப்பு வேண்டாம். பூமி சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டன.

எனவே, பழைய முறையில் விவசாயம் செய்வதில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிரமங்கள், செயற்கை உரம் சிறந்தது என்ற அரசின் திட்டமிட்ட பிரச்சாரம் போன்றவை, மக்களை இப்பேரழிவு ஏற்படுத்தும் திட்டத்திற்கு எதிராகப் போராடாமல் தடுத்துவிட்டன. பலநூறு கிலோ மீட்டர் பரந்து விரிந்திருக்கும் தமிழகத்தின் வறண்ட நிலப்பரப்புகளில் தலைமுறை தலைமுறையாக கடும் உழைப்பாலும், அனுபவம் தந்த அறிவாலும் மக்கள் ஏற்படுத்தியிருந்த ஏரிகளும், அவற்றைச் சுற்றியிருந்த பசுமைத் திட்டுகளும் சுருங்கி வருகின்றன.

ஏறக்குறைய ஏரிப்பாசனம் பெயரளவிலானதாகச் சுருங்கிப் போய் காவிரி வடிநிலத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டு வருகிறது. ஏரிகள் நாசமாக்கப்பட்டதால், ஏராளமான நெல்வகைகள் அழிந்து போய்விட்டன. மீன் வகைகள் மறைந்தே போய் விட்டன. குளங்களைச் சுற்றி வாழ்ந்து வந்த மீனவர்கள், கொடும் வறுமைக்குள் தள்ளப்பட்டு விட்டன. விவசாயிகளின் நிலையோ சொல்லவே வேண்டாம். “ஆனால், இத்திட்டத்திற்கு ஆங்காங்கே எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை'' என்கிறார் சிவா.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து என்ற கிராம மக்கள், தங்கள் கண்மாயில் கருவேல மரங்களை நடுவ தற்கு வனத்துறை செய்துவரும் முயற்சியை, ஆறு ஆண்டுகளாகத் தன்னந்தனியாகப் போராடி முறியடித்து வருகின்றனர். “கொக்கோ கோலாவைப் போராடி விரட்டிய கேரள பிளாச்சி மடத்தின் போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் குறையாதது பிலாத்து கிராம மக்களின் போராட்டம். ஆனால், எந்தச் செய்தித்தாளும் பிலாத்து பற்றிய செய்திகளை வெளியிடவில்லை; சுற்றுச்சூழல்வாதி கள் படையெடுக்கவும் இல்லை. இருப்பினும், பிலாத்து கிராமம் தன்னந்தனியாக தொடர்ந்து எதிர்த்து நிற்கிறது. பிலாத்து வெல்வதும் வீழ்வதும் தமிழக மக்களின் கைகளில்தான் இருக்கிறது'' என்கிறார் அவர்.

ஆங்காங்கே பிலாத்துகள் இருந்தாலும் அரசு (தி.மு.க., அ.தி.மு.க., தற்போதுள்ள 7 கட்சிக் கூட்டணி அரசு) எந்தவிதமான அவசரமுமின்றி, தன் வழி யில் நிதானமாக முன்னேறி வருகிறது. கிசுகிசுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வதில் வனத்துறை, கடந்த இருபது ஆண்டுகளில் பெரும் நிபுணத்துவம் பெற்றுவிட்டது. சின்னஞ்சிறு ஓடைகளையும், காட்டாறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மக்கள் உருவாக்கிய ஏரிப்பாசனம், ஏகாதிபத்தியத்தின் லாபவெறியால் அழிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேரழிவு மக்களின் கண்களிலிருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு மழையின்மையும், வறட்சியும்தான் விவசாயத்தின் அழிவுக்குக் காரணம் என்று நம்ப வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுக் கட்சிகள் அத்தனையுமே கருவேல மரங்களின் விஷயத்தில் பொருள் பொதிந்த மவுனம் மட்டுமே இதுவரை சாதித்து வந்துள்ளன. அவற்றிடமிருந்து நாம் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், இந்த மாபெரும் சதி நம் சுற்றுச் சூழல்வாதிகள் மற்றும் புரட்சியாளர்களின் கவனத்தைக் கவராமல் போனதுதான் ஆச்சரியம். அவர்கள் தன்னிச்சையாகத் தோன்றும் மக்கள் எழுச்சிகளில் சவாரி செய்வதில் மட்டுமே விருப்பம் கொண்டிருப்பதால், இந்தச் சதி முழு வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பசுமைப் புரட்சி, செயற்கை உரங்கள் ஆகியவை விவசாயத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து ஏராளமான ஆய்வு கள் செய்யப்பட்டிருந்தாலும், கருவேல மரங்களை நடுவதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு, பெரும்பாலும் ஆய்வாளர்களின் கண்களுக்குத் தப்பியே வந்துள்ளது. உரிய காலத்தில் இந்த மாபெரும் சதி தடுக்கப்படாவிட்டால், போபால் விஷவாயுக் கசிவால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பதைப் போல தமிழக ஏரிப்பாசனம் ஏகாதிபத்தியத்தின் லாப வெறியால் அழிந்தது என்பதும் பின்வரும் தலைமுறைகளுக்கு வெறும் செய்தியாக மட்டுமே மாறிவிடும்.


_இரா.முருகவேள்

புதன், அக்டோபர் 06, 2010

கனிம வள கொள்ளையர்கள்

ராமாயணத்தில் எல்லோருக்கும் தெரிந்த கதை ஒன்று உண்டு. அம்பால் குத்தப்பட்டு , உயிர்விடும் நிலையிலிருக்கும் தவளையைப் பார்த்து ராமபிரான், "என்னை அழைத்திருக்கக் கூடாதா?, கூப்பிட்டிருந்தால் ஓடோடி வந்திருப்பேனே" என்று பதை பதைப்புடன் கேட்பார். அதற்கு தவளையானது, "எப்போதெல்லாம் எனக்குத் துன்பம் வருகிறதோ அப்போதெல்லாம் "ராமா" என்று தான் அழைப்பேன், ஆனால் இப்போதோ நான் வணங்கும் ராமனின் அம்பாலேயே குத்தப்பட்டு துன்பத்திற்கு ஆளாகி இருக்கும் போது நான் யாரை அழைப்பது" என்று பதிலுரை பகர்ந்தது. தன் அம்பினால் இறப்புக்கு ஆளான தவளையை எண்ணியும், தன் அறியாமையால் விளைந்த தவறையும் நினைத்து மனமொடிந்து போனார் ராமர்.

உலகெங்கும் உள்ள பழங்குடி மக்களின் நிலை இந்தத் தவளையின் நிலையாகத்தான் இருக்கிறது. அவர்களைக் காக்க வேண்டிய அரசோ, ராமனாக வருந்தாமல், செங்கிஸ்கான் போல் செயல்பட்டு ,அவர்களை வாழிடத்திலிருந்தே அகற்றுகிறது அல்லது கொன்று குவிக்கிறது. ஏனெனில் அவர்கள் வாழும் இருப்பிடங்கள் அனைத்தும் பன்னெடுங்காலமாய் இயற்கையால் உருவாக்கப்பட்டுள்ள பல லட்சம் டாலர் சந்தை மதிப்புள்ள கனிமங்கள் நிரம்பியது.

இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களில் ,அதிக வன வளமும் , மலைவளமும் நிரம்பியது ஒரிசா. அதே போல் பழங்குடி மக்களும் ஏராளமானோர் வாழ்கின்றனர். சிறு சிறு தொகுப்புகளாய் பல பிரிவினர் வாழ்கின்றனர். அவரவர்க்கென்று வாழிடம், கலாச்சாரம், என தனித்துவத்தோடு வாழும் அவர்களைக் குறிவைக்கிறது திறந்த பொருளாதார அமைப்பு .நியாம்கிரிமலை ஒரிசாவில் கிழக்கு மலைத் தொடர்ச்சியாய் அமைந்த ஓர் அமைப்பு. "டோங்கிரியா கோண்டு" என்ற ஆதிவாசிப் பழங்குடியினர் சுமார் 8000 பேர் வாழ்கின்றனர். இவர்கள் 1000 வருடத்திற்கும் மேலாக காட்டையும், மரங்களையும், அடைக்கலம் அடைந்து ,அவைகளையே தெய்வமாக வழிபடுகின்றனர். இங்கிலாந்தின் மிகப்பெரிய கனிம வள ஆராய்ச்சி நிறுவனமான "வேதாந்தா " இந்த நியாம்கிரி வனப்பகுதியில் 17 மில்லியன் டன் பாக்ஸைட் உள்ளதைக் கண்டறிந்து அதை எடுக்கும் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற முயற்சிக்கிறது. அலுமினியம் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் மூலப் பொருளான பாக்ஸைட் , உலகச் சந்தையில் பெரும் மதிப்புடைய கனிமமாகும் . இவை விரவி பரவியுள்ள இடங்கள் அனைத்தும் டோங்கிரியா கோண்டுகளின் வாழ்வாதாரப் பகுதி. ஆலையின் வருகையால் இவர்கள் பாதிக்கப்படுவர். நிச்சயம் இவர்களைப் பாதுகாப்போம் என ஆலை நிர்வாகம் உறுதிகூறினாலும், கோண்ட் மக்களும், மனித உரிமை ஆணையர்களும், பிற நாடுகளும் கூட சம்மதம் தெரிவிக்க மறுக்கின்றன. இதற்கு உதாரணமாக, லான்ஜிகாரில் இவர்கள் அமைத்துள்ள அலுமினிய சுத்திகரிப்பு ஆலையைக் கூறலாம். அந்நிலமும் பழங்குடிகளின் வாழிடம். அவர்கள் ஆலை நிர்வாகத்தின் பொய்யுரைகளை நம்பி, தங்கள் இடங்களை விட்டுக் கொடுத்தனர். கொடுத்த நேரத்திலே ,வீடுகள் காணாமல் போயின. "தெய்வங்கள் " அனைத்தும் அவர்கள் கண்முன்னே தீயில் பொசுங்கின. இறந்த முன்னோர்களின் ஆவிகள் வாழ்வதாக இத்தனை ஆண்டுகளும் நம்பி வணங்கிய பாறைகள் அனைத்தும் உடைந்து தவிடுபொடியானதைக் கண்ணீர் மல்க அவர்களால் பார்க்கத்தான் முடிகிறது. இதையெல்லாம் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் முன்னோர்களின் ஆவிகளும் உடன் அழத்தான் செய்கிறது.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை அமைச்சகம், போன்றவை விதித்த சட்டங்களை மதியாமல், தங்கள் போக்கிற்கு உள்ளூர் அரசியல்வாதிகளையும், அரசையும், "கையில் போட்டுக் கொண்டு" காட்டுத் தர்பார் நடத்தி வருவது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தூசி, புகை, தண்ணீர் என அனைத்திலும் கேட்டை விளைவித்துக் கொண்டிருக்கிறது. அபூர்வ மரங்கள் அழியத் துவங்கியுள்ளது.நீராதாரம் கெடத் துவங்கியுள்ளது. மக்களும், நோயுறத் துவங்கியுள்ளனர். "நாங்கள் காப்போம்" என உறுதி அளித்த நிர்வாகம் கைவிரிக்கிறது. அரசியல்வாதிகள் ,குண்டர்கள் போல் செயல் பட , ஒரு இனமே அழிந்து வருகிறது என்பதை கோண்ட் இன மக்கள் பெரும் அதிர்ச்சியோடு "லான்ஜிகாரை" உதாரணமாக உலகிற்குக் காட்டத் தயங்கவில்லை.

இதனை அடிப்படையாகக் கொண்டு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் , மனித உரிமையாளர்களும், கடந்த 2002 முதல் வழக்குத் தொடர்ந்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம், சுரங்கம் அமைக்க அனுமதி அளித்தது அவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மலைச்சரிவில், "படிக்கட்டு வயல் வெளிகளை" அமைத்து கோண்டுகள் தானியங்களைப் பயிரிடுகின்றனர். மலைகளில் கிடைக்கும் பழங்கள், பனையிலிருந்து உருவாகும் "கள்" இவர்களின் பிரதான உணவு. அடர்ந்த காடும் தூய நீர் நிலைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. பல உயிர்களுக்கும், ஜீவாதார இருப்பிடமாகத் திகழ்கிறது. இயற்கையை " நியான்ராஜா" என வணங்கும் அவர்கள் ,தங்களை " ஜார்னியா" என அழைப்பதில் பெருமை கொள்கிறார்கள். இதற்கு "வன, நீர் நிலைகளின் காவலன் " என்பது பொருள். ‘வேதாந்தா’வின் 2 மில்லியன் டாலர் முதலீடு ,இவ்வாறு பாதுகாக்கப்பட்ட இயற்கையைப் பெரும் இயந்திரங்களின் உதவியோடு அழிக்க முற்படுகின்றன. பெரும் பாறைகள் உடைக்கப்பட்டு சாலைகள் தயாராகி வருகின்றன. ஓடி வருகின்ற நீர் நிலைகள் வற்றும் அளவு பெரும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு உறிஞ்சத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். தேர்ந்தெடுத்த இடங்களில் பல நூறு வயதுள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. தடுத்து நிறுத்த முற்படும் கோண்டுகளின் தலைவர்களும், தலைவிகளும் ,யுவர்களும்,யுவதிகளும், கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகிச் சிறை வைக்கப்படுகிறார்கள்.

கடந்த 2002ல் நான்கு பேர் கமிட்டி உச்சநீதி மன்ற ஆலோசனைப் படி அமைக்கப்பட்டது. இங்கு ஆராய்ந்த அவர்கள் தாதுக்கள் அதிகம் உள்ளதை உறுதி செய்தார்கள். பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், சமூக அமைப்பு போன்றவற்றைக் கவனத்தில் கொள்வதாகக் கூறிய அவர்கள் , அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு ஆலைகளும் ,சுரங்கங்களும் அமைக்க நடுவண் அரசுக்குப் பரிந்துரை செய்தார்கள். ஸ்டெர்லைட் மூலம், வேதாந்தா தனது கால்களை இவ்வாறு பதித்தது. இதுதான் கொடூரத்தின் முதல் துவக்கம்.

உலகப் புகழ்பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளரான அருந்ததி ராய்,நல்ல சுற்றுச் சூழல் சமூக ஆர்வலர். இவர் நேரிடையாகப் பல மாநிலங்களுக்குச் சென்று , தகவல்களைச் சேகரித்துள்ளார்." இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னிறுத்தி மலைவளம் சுரண்டப்படுவது அதிகரித்துள்ளது. சத்தீஸ்கரில் 644 கிராமங்களில் 3 லட்சம் பேர் விரட்டப்பட்டுள்ளனர். பீகாரில் 600 கிராமங்கள் அழிக்கப்பட்டு 1 லட்சத்து 10,000 ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டுள்ளது. நிலச்சுவான்தார்களின் கூலிப்படையான ரன்வீர் சேனா இத்தகைய செயலில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 8 ஆண்டுகளில் தான் இத்தகைய சம்பவங்கள் பெருமளவில் நடந்தேறி உள்ளது" என்கிறார். 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஊரக விரிவாக்க சட்டம் ,சுரங்கம் தொழில் நிறுவனங்கள் துவங்க பழங்குடி மக்களின் ,அதாவது அங்கு வாழ்கின்ற பூர்வ குடிகளிடம் சம்மதம் பெற வேண்டும் என்கிறது. இதே போல் அவ்விடத்தின் ஊராட்சிக்கும் "மறுக்கும் உரிமை "உண்டு. இவையெல்லாம் மிக எளிமையாகக் காற்றில் விடப்பட்டுள்ளன.

100 வருடங்களாக நியாம்கிரி மலையில் வாழும் அவர்களின் வாழ்க்கையின் அமைப்பை, உழைப்பின் பலனை எப்படி மாற்றமுடியும் என்ற வாதம் நடுவண் அரசிடம் எடுபடவில்லை. நீதிமன்றமும் பொத்தாம் பொதுவாக ,கம்பெனியின் லாபத்தில் குறிப்பிட்ட பங்கு இம்மக்களின் வாழ்விற்குச் செலவிட்டு ,தொழிலைத் துவங்கலாம் என்கிறது. ஆனால் உலக அளவில் மனித உரிமை ஆணையம் இதை ஏற்க மறுத்துள்ளது. ‘வேதாந்தா’வில் முதலீடு செய்துள்ள "சர்ச் ஆஃப் இங்கிலாந்து" ,தனியார் மூலம் முதலீடு செய்துள்ள நார்வே, தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுள்ளன. ! " அடிப்படை மனித உரிமைகளை க் கொன்றும் ,பழங்குடியினரை அழிக்கும் நோக்கிற்கும் நாங்கள் உதவ முடியாது "என தெள்ளத் தெளிவாக அறிக்கை சமர்பித்துள்ளது ,நடுவண் அரசை சற்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மத்திய அரசால் முன்னர் அமைக்கப்பட்ட 4 பேர் கமிட்டி தாங்கள் "மிகப் பெரிய தவறு செய்துவிட்டோம்" என மறு அறிக்கையைத் தந்துள்ளது. மத்திய கனிம வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர், "நிறுவனங்கள், நமது வளங்களைக் கொள்ளை அடிக்கின்றன" என நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். சுமார் 3000 மடங்கு ராயல்டி தொகை, குறைக்கப்பட்டு வெறும் 3 சதவீதம் மட்டும் இரும்புத் தாதுக்களுக்கு வழங்கப்படுவது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. ‘வேதாந்தா’விற்கு அளித்த அனுமதியை மறு பரிசீலனை செய்யத் தயாராக உள்ளது என அமைச்சகமும், பிரதமரும் வாயைத் திறந்துள்ளனர். "இயற்கையில் விளைந்துள்ள மூலிகை, பழங்கள் மற்றும் கனிம வளங்கள் சரிவர விலைபேசாமல் கொள்ளையடிக்கப்படுவதால், நக்சல்களும், மாவோயிஸ்டுகளும் எளிதாக உருவாகிறார்கள்" என நமது உள்துறை அமைச்சர்
.சிதம்பரம் கூறியது, அவர் உண்மையை உணரத் துவங்கியுள்ளதைக் காட்டுகிறது.

" வேதாந்தா எங்களை ,எங்கள் மலைவளத்தை அழிக்க வந்திருக்கிறார்கள். எங்களைத் துரத்தி , பிச்சைகாரர்கள் ஆக்க நினைக்கிறார்கள் . எங்களை அகற்ற அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மலையில் கால்வைக்கக் கூட அவர்களுக்குத் தகுதியும், அருகதையும் இல்லை. எங்கள் தலை வெட்டப்பட்டாலும், தலையில்லா உடல் அவர்கள் வருகையை எதிர்க்கும் " -------ராஜேந்திர வடகா (டோங்கிரியா கோண்டு).

-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா


வெள்ளி, செப்டம்பர் 24, 2010

மிரட்டும் தார் உருண்டைகள்!! ----மாசாகும் கடல் பகுதி

"உலகிலேயே மிக நீளமான கடற்கரைகளைக் கொண்ட இந்தியா, மேற்கத்திய நாடுகளையும், அண்டை நாடுகளையும் பொறாமை கொள்ளச் செய்கிறது. அதிகளவு கப்பல் போக்குவரத்தும், அந்நியச் செலாவணியும் ஈட்டித் தரும் கடல் சார் அமைப்பை உடைத்தெறியும் நோக்கோடும், கோட்பாடுகளை வகுத்து அவை இயங்கி வருகின்றன. இந்நிலையில், இவற்றின் அருமை பெருமை பற்றியும் , பாதுகாப்புத் தன்மை குறித்தும், சிறிதளவு அக்கறையோ, அறிவோ கூட இல்லாமல் அரசுத் துறை மெத்தனமாக இயங்கி வருகிறது". இவ்வாறு நான் கூறவில்லை, நமது சுப்பிரமணிய சுவாமி டெல்லியில், நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் ஒரு பாகம் இது. அவர் கூறிய வார்த்தைகள் நூறு சதவீதம் உண்மையானவை என நிரூபிக்கும் அளவு சம்பவங்கள் நடந்தவாறு உள்ளன. சமீபத்தில் கோவா கடற்கரையில் "மிதந்த தார் உருண்டைகள்" இப்படியான நிகழ்வு. இதை அரசு துறை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டது. ஊடகங்கள், சூழலியலாளர்களின் தொடர்ச்சியான அழுத்தமும் , பொது மக்களின் எதிர்ப்பும் மத்திய அரசையும் ,மாநில அரசையும் பிரச்சினை நோக்கி திரும்ப வைத்துள்ளது.

சென்ற மார்ச் மாதம் துவங்கி , டன் கணக்கில் தார் உருண்டைகள் கோவாவின் கடற்கரையில் முக்கிய பிரதேசங்களில் ஒதுங்கத் துவங்கியது. தெற்கு கோவா கடற்கரை மற்றும் வடக்கு கோவாவின் சில பகுதிகள் இதனால் பாதிப்புக்கு உள்ளாகின. உருண்டைகளின் வரத்து இன்று வரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. கப்பல் படை ,துறைமுக காவல் படை,மற்றும் கடலியல் அறிவியலாளர்கள் தங்கள் மூளையைக் கசக்கி தீர்வு காண விரைந்துள்ளனர்.


இனி வரும் கால கட்டத்திலாவது இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கோல்வா, பீட்டல் பாட்டிம், சென்னாபாட்டிம், சிகுரிம் மற்றும் காண்டோளம் போன்ற புகழ்வாய்ந்த கடற்கரைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறையின் டைரக்டர் சுவபில் நாயக் ,அரசின் மெத்தனப் போக்கைப் பிரதிபலிக்கும்படி , "இது எப்போதும் நடக்கும் சாதாரண நிகழ்வு தான் , பத்திரிகைகள் தான் பெரிது படுத்துகின்றன " என்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் நீல் காந்த் ஹாலான்கரின் உத்தரவுப்படி ,லாரிகளில் சேமிக்கப்படும் அளவிற்கு ஆயிரக்கணக்கில் உருண்டைகள் மிதந்து வருகின்றன. இந்நிகழ்வு கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகின்றது.


இந்த வருடம் அதிகளவு உருண்டைகள் மிதந்து வருவது சுற்றுலாத்துறையை நிச்சயம் பாதிக்கும். இதற்குப் பின்னணியில் ஏதேனும் நாசகார சக்தி இருக்கலாம் என்கிறார் நேஷனலிஸ்ட் பார்ட்டி தலைவர். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓசனோகிராபி (NIO) பல திட்டங்களைத் தீட்டி வைத்துள்ளது .யாருக்கும் தெரியாமல் இந்தியக் கடல் பகுதிகளில் சில கப்பல்கள் கழிவு எண்ணையைக் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகின்றன. போதுமான கருவிகளோ பாதுகாப்பு திறமையோ இல்லாமையே இத்தகைய செயல்கள் செய்ய அவர்களுக்குத் தைரியம் தருகிறது. குறைந்தபட்சம் இந்த தார் உருண்டைகளால் கடல் பகுதிக்கு எந்த பாதிப்பும் வராமல் NIO பார்த்துக் கொள்ளும் என அக்கறையோடு கூறும் ஒரே மனிதராக காட்சி தருகிறார் இதன் டைரக்டர்.

சாக்லேட் படிமம் போல நீரின் மேலே பாய் விரித்தாற் போல இவை பரவுகிறது. 6" தடிமனும் ,15 செ.மீ நீளமும் கொண்ட இவை ஒட்டும் தன்மை, நீட்சித் தன்மை கொண்டு காற்றாலும் ,அலையாலும் தள்ளப்படும் போது பல துண்டுகளாகவும் ,உருண்டைகளாகவும் மாறி விரவிப் பரவுகின்றன. இதன் மேல் பகுதி எண்ணையானது ,மிக லேசாக உள்ளதால் ஆவியாகிவிடுகின்றது. அடிப்பகுதி மட்டும் தேக்கம் கொள்கிறது. கடலின் ஆக்ஸிஜன் பரிமாற்றம் இதனால் முற்றிலும் தடைபடுகிறது. பற்றாக்குறைக்கு கடலின் மேல்புறம், எண்ணை ஆவியாவதால் பனி போல் காற்றுடன் கலந்து மூடிக் கொள்கிறது. இதனை சுவாசிக்கும் மனிதர்கள் சுவாச நோயால் பாதிக்கப்படுகின்றனர்.


பறவைகள், எண்ணை பிசுக்கில் மாட்டிக் கொண்ட ,விஷம் தோய்ந்த மீனை உண்ணுவதால் பார்வை இழப்பு ,தோல் நோய், அஜீரணக் கோளாறு போன்ற கூடுதல் பாதிப்பால் கொத்துக் கொத்தாக இறந்து விடுகின்றன. பறவைகள் மட்டுமல்ல, பெரும் பாலூட்டிகள்,அறிய கடல் சார் உயிரினங்கள் ,பவளப்பாறைகள் , தாவரங்கள் என பட்டியல் நீண்டு இயற்கை சங்கிலி முற்றிலும் அறுந்து போகும் நிலை உருவாகி உள்ளது.

தார் உருண்டைகள் என்றால் என்ன? இவை ஏன் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்? குரூட் ஆயில் எனப்படும் சுத்தம் செய்யப்படாத எண்ணையிலிருந்து பென்சீன் எடுக்கப்படுகிறது. இது விமானங்களுக்கு எரிப்பொருளாக பயன் படுத்தப்படுகிறது. இந்த பென்சீனிலிருந்தே பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. இதன் அடுத்த கட்டமாக ,ஹை ஸ்பீட் டீசல் தயாரிக்கப்படுகிறது. இது வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயனாகிறது. இதன் அடுத்த நிலையே மெரைன் டீசல் ,கப்பல்களுக்கு இவையே தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது . இதன் உப பொருளாக மண்ணெண்ணை வருகிறது. இதிலிருந்து ஹெவி ஆயில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அதிகளவு "பாய்லர் " எனப்படும் எரிகொல்கலன்கள் சூடேறப் பயன்படுகிறது. மேலும் நீராவி என்ஜின்கள் பொருத்தப்பட்ட கப்பல்கள் ,ஒருசில ரயில் என்ஜின்களிலும் இது பயன்படுகிறது. இவை கிட்டத்தட்ட திட நிலையிலேயே காணப்படும். 120 டிகிரி சூடான பின்னரே கப்பல்களுக்கும், இன்னபிறவற்றிற்கும் உபயோகம் ஆகிறது. இதற்குப்பிறகு பியூரிபிகேஷன் என்ற சுத்தப்படுத்தும் சுழற்சிக்குப்பிறகு , பிஸ்டன் என்ஜின் பொருத்தப்பட்ட மோட்டார்களுக்கு உபயோகிக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் கழிவே தார் உருண்டைகள். சில நாடுகள் இவைகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றன. உதாரணமாக சீனா. இது தங்கள் துறைமுகத்தில் நிற்கும் கப்பல்களில் உள்ள தார் உருண்டைகளை விலை கொடுத்து வாங்கி அங்குள்ள தொழிற்சாலைகளின் எரிபொருளாக மாற்றுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் ,கப்பல் உரிமையாளரிடம் காசும் வாங்கிக் கொண்டு தார் உருண்டைகளையும் பெற்றுக் கொண்டு ,அவைகளை பாலைவனத்தில் கொண்டு போய் அழிக்கிறது. இந்திய நிலைமை இன்னும் மோசமானது. நாம் வாங்குவதுமில்லை, விற்பதுமில்லை. இந்த கழிவு எண்ணை உபயோகம் உள்நாட்டில் இல்லாதது பெரும் குறை.மேலும் சிறிய கப்பல்கள் யாருக்கும் தெரியாமல் கடற்கரையில் கொட்டிவிட்டுச் சென்று விடும். பொதுவாக இந்த எண்ணை உருண்டையை எரித்து சாம்பலாக்கும் வசதி கப்பல்களில் பொருத்தப்படவேண்டும் என்பது விதி. பல கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்பதால் பல கப்பல்களின் உரிமையாளர்கள் இதைப் பொருத்துவதே இல்லை.

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தங்கள் கடலில் , ஏதேனும் எண்ணை கசிவுகள் இருக்கக் கூடாது என்பதற்காக ,கடுமையான சோதனை அமைப்புகளையும், விதிகளையும் ,அமைத்தும் ,செயற்கைக்கோள் முலம் கண்காணித்தும் வருகின்றன. இந்தியாவில் நேற்றுவரை இந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை. அதை நடுவண் அரசும் ஒரு கருத்தாகக் கொள்ளவில்லை போல் தெரிகிறது. இதைத் தவிர பல கப்பல்கள் நம் நாட்டு எல்லையைக் கடக்கும் போது ,குப்பைகளையும் கொட்டிவிட்டு, சென்றுவிடுகின்றன. இதனால் பல "பீச்சுகள் " துர்வாடை அடிக்கும் சுற்றுலாத் தளமாக குறைப்பட்டுப் போனது. மேலும் கொள்ளை, கற்பழிப்பு ,கடத்தல் போன்ற குற்றங்களும் நம் கடற்கரையில் நடப்பது அதிகரித்துள்ளது.

சென்ற மாதம் கோவா கடற்கரையில் பூனே மாநில இளம் தம்பதியினரிடம், இரு ஆங்கிலேயரிடமும் , துப்பாக்கி காட்டி மிரட்டி ,ரூ 15,000 ,இரு சக்கர வாகனமும் பிடுங்கப்பட்டன. காவல் துறை தூங்கியவாறே உள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரை சுமார் 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் சுற்றுலா மேற் கொள்வர். அதில் அரை மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள். இவர்கள் மூலமான அந்நியச் செலாவணி மொத்த வரவில் 16 சதவீதம் என்கிறார் ஜூடித் அல்மெடா. அவர் கோவா சோஷலிஸ்ட் ஒர்க்கர் அமைப்பைச் சேர்ந்தவர்.

நமது சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இனி பீச்சுகளும் ,துறைமுகங்களும் ,கடுமையான ஆய்விற்கும் ,பாதுகாப்பிற்கும் உட்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இந்தியப் பரப்பில் 50 சதவீதத்திற்கு மேல் உள்ள கடல் பகுதி "மாசுபடுமேயானால் " நம் அழிவு நிச்சயம். இதை உறுதிப்படுத்தி உள்ளார் கப்பல் படை தளபதி.இந்தியர்கள் அனைவரும் இதை நினைவில் கொள்வோமா?

-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
(kannan233@gmail.com)

நன்றி: உயிர்ம்மை இணையம்