திங்கள், நவம்பர் 23, 2009

புலிக்குட்டிகளுக்கு சவால் விடும் குரங்கு (வீடியோ)

காட்டில் வாழும் பெரிய உயிரினங்கள் வலுவானவை: அவற்றிற்கு அஞ்சி மற்ற விலங்குகள் வாழ்கின்றன என்றே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் காடுகளில் உடல் வலு மட்டுமே விலங்குகளின் ஆளுமையை நிர்ணயிப்பதில்லை. விலங்குகளின் மற்ற இயல்புகளும் அவற்றின் பலமாகவே இருக்கிறது.

கீழே உள்ள வீடியோவில் நமது திரைப்பட கதாநாயகர்களுக்கே சவால் விடும் விதமாக ஒரு குரங்கு செயல்படுகிறது.

விளையாடிக்கொண்டிருக்கும் இரண்டு புலிக்குட்டிகளுக்கு இடையே புகுந்து அந்த புலிக்குட்டிகளின் தலையைத்தட்டுவதும், காதையும் - வாலையும் பிடித்து இழுத்துவிட்டு தப்பி ஓடுவதும் ரசிக்கத்தக்க காட்சிகள்.

வெள்ளி, நவம்பர் 13, 2009

நீலகிரி - கரையும் மலைகள்


நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்தாலும், 40-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு என்ன ஆறுதல் கூறிவிட முடியும்!
அதிக அளவு மழை பெய்திருப்பதை நிலச்சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறினாலும், இதை இயற்கையின் பேரிடர் என்பதைக் காட்டிலும், மானுடத்தின் பிழை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

1994-ல் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில், மரப்பாலம் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவின் போதே, இதற்கான காரணங்களையும், இனிவரும் காலங்களில் எத்தகைய அணுகுமுறை மூலம் இதைத் தவிர்க்க முடியும் என்பது குறித்தும், பல்வேறு அமைப்புகள் கருத்துத் தெரிவித்த பிறகும், அது குறித்து எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றால் வேறு என்னதான் சொல்ல முடியும்?
நீலகிரியில் நிலச்சரிவு என்பதே 1970-க்குப் பிறகுதான் சிறிய அளவில் ஏற்படத் தொடங்கியது. நீலகிரியில் உள்ள குன்றுகள் அனைத்துமே முழுக்கமுழுக்கப் பாறைகளால் அமைந்தவை அல்ல. பெரும்பாலான குன்றுகள் கால்பங்கு பாறை, முக்கால் பங்கு மண்ணாக இருப்பவை. சில இடங்களில் பாறைகள் பாதி, மண் பாதி கலந்து நிற்கிறது. அந்தந்தக் குன்றுகளில் உள்ள பாறை, மண் விகிதம் மற்றும் கடல்மட்டத்தின் உயரத்துக்கு ஏற்ப தனக்கான தாவரங்களையும் மரங்களையும் நீலகிரி மலை தனக்குத்தானே வளர்த்து செழித்திருந்தது - திப்பு சுல்தானிடமிருந்து பிரிட்டிஷ் அரசின் கைக்கு மாறும்வரை.

பிரிட்டிஷ் அரசின் அன்றைய கோயமுத்தூர் கவர்னர் ஜான் சலைவன் இந்த மலைக்கு முதலில் சென்ற பிரிட்டிஷ் அதிகாரி. மலையின் அழகும், அதன் குளுமையும் பிடித்துப்போனதால், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கான கோடை வாசஸ்தலமாக மாற்றினார். சென்னை ராஜதானியின் பிரிட்டிஷ் அதிகாரிகள் வருவதற்காகவே மலை ரயில் பாதை (இரு தண்டவாளங்களுக்கு இடையே பல்சக்கரங்களுடன் ஒரு தண்டவாளம் இருக்கும் வகையில்) அமைக்கப்பட்டது. கவர்னர் சலைவனின் இந்த ஊடுருவலை மலைவாழ் மக்களான படுகர், தோடா இனத்தவர் எதிர்த்தனர். அந்தப் பழங்குடி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதான் தனது விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடிந்தது.
கோடை வாசஸ்தலம் என்பதோடு, இங்கே தேயிலை பயிரிட முடியும் என்பதையும் கண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக காடுகளை அழித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த மலையின் பாறை - மண் கலப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் கிடைத்த இடங்களையெல்லாம் தேயிலைத் தோட்டம் அமைப்பதற்காகக் காட்டை அழித்தனர்.

1970-களில் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்ததால் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டம் அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. எத்தகைய மழையிலும் வேர்களால் மண்ணைப் பிடித்துக் காத்துநின்ற மரங்களும் புல்வெளிகளும் அழிக்கப்பட்டபிறகு, மழையில் வெறும் மண் கரைந்தது. நீர் ஊறி, ஓதம் தாளாமல் மண்முகடுகள் சரிந்து, மனிதர்கள் இறப்பது வாடிக்கையானது. நீலகிரியின் பல்லுயிர்ப்பெருக்கம் (பயோ டைவர்சிட்டி) முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.

தேயிலைத் தோட்டங்களுக்காக மலை அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, சுற்றுலாத் தலமாக மாறியதால் பயணிகள் எண்ணிக்கை பலநூறு மடங்கு அதிகரித்தது. இவர்களுக்காக காடுகள் மறைந்து, கட்டடங்கள் முளைத்தன. உதகை, குன்னூர் இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 500 விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் உள்ளன. சரியான கழிவுநீர் வாய்க்கால்கூட உதகை, குன்னூரில் இல்லை என்பது சிக்கலை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.
1994 மரப்பாலம் நிலச்சரிவின் போதே, தொலையுணர் தொழில்நுட்பத்தின் மூலம் மலையின் தன்மையையும், காட்டின் அளவையும் கண்காணித்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது தொலையுணர் தொழில்நுட்பத்தில் பலபடிகள் முன்னேறியுள்ள நமக்கு, நீலகிரி மலைகளின் வகைகளையும், எத்தகைய காடுகள் அங்கே இருந்தால் நிலச்சரிவு ஏற்படாது என்பதையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும்.

ஆக்கிரமிப்பாலும், காடு அழிப்பாலும் முற்றிலும் மாறிக்கிடக்கும் "ஒத்தக் கல் மண்டூ' என்கிற உதகமண்டலம், குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைகளில் மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகள் வழியாக மழை நீர் கீழே இறங்குகிறது என்பதைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் நீர் வெளியேற வாய்க்காலும், மண்கரையாமல் இருக்கக் காடுகளும் வளர்க்க முயல வேண்டும்.

பாறையின்றி மண்மேடுகள் மட்டும் இருக்கும் பகுதிகளில் வீடுகள் கட்டத் தடை விதிப்பதும், போக்குவரத்து வசதி என்ற பெயரில் நீலகிரியில் புதிய சாலைகள் அமைப்பதைக் கைவிடுவதும்கூடப் பயன்தரும்.

நீலகிரி மலையில் சமவெளியாகப் பரந்து கிடக்கும் புல்வெளிகூட, தன் வேர்களால் அந்த மண்மலையைத் பிடித்துக் காத்து நிற்கிறது என்பதைப் புரிந்து கொண்டால்தான், மலையரசி "கரையாமல்' நிற்பாள்; மனிதரையும் அழ வைக்க மாட்டாள்.


நன்றி: தினமணி, 13-11-09 புகைப்படங்கள்: தினமலர்

செவ்வாய், நவம்பர் 10, 2009

டென்மார்க்கில் டால்பின் மீன்கள் படுகொலை – பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்!

மனிதர்களிடம் நட்புடன் வாழும் ஒரே கடல் வாழ் உயிரினம் டால்பின் மீன்கள்தான். மனிதனிடம் தானாகவே வந்து நட்புறவு கொள்ளும் டால்பின் மீன்கள் பார்ப்பதற்கு அழகானவை மட்டுமல்ல. மிகவும் புத்திசாலியான விலங்கும்கூட.

டால்பின் மீன்கள் அவை வாழும் பகுதியின் சுற்றுச்சூழலின் அளவுகோலாக இருக்கிறது. டால்பின்கள் அதிகம் வாழும் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதாக சூழலியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்த டால்பின் மீன்களை பழக்கி பொழுதுபோக்கு பூங்காக்களில் பயன்படுத்தும் பழக்கம் நீண்ட காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகிறது.
இன்று இந்த டால்பின் மீன்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. காரணமாக இருப்பவன் வழக்கம்போல மனிதன்தான்.

டென்மார்க்கில் உள்ள ஃபாரோத் தீவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டால்பின் மீன்கள் படுகொலை செய்யப்படுகின்றன.
அத்தீவில் உள்ள இளைஞர்கள் முதிர்ச்சி அடைந்ததை உலகுக்கு உணர்த்தும் நிகழ்வாக இந்த டால்பின் வேட்டை நடைபெறுகிறது.

இந்த விழா நடைபெறுவதை அறியாமல் மனிதர்களின் நட்பை நாடி அந்த அந்தப்பகுதியில் உலா வரும் டால்பின் மீன்களின் மீது மிகப்பெரிய தூண்டில் போன்ற இரும்புக் கொக்கிகளை வீசி அவற்றை கரைக்கு இழுத்து வருகி்ன்றனர்.

பின் பெரிய கத்திகளைக் கொண்டு அந்த டால்பின் மீன்களை பல துண்டுகளாக வெட்டுகின்றனர்.
வலி தாங்க முடியாத டால்பின் மீன்களின் மரண ஓலம், குழந்தைகள் அழுவதை போலவே இருக்குமாம். ஆனால் வெறியின் உச்சத்தில் இருக்கும் மனிதப்பேய்களுக்கு அந்த ஓலம் காதில் விழுவதில்லை.

பல்லாயிரக்கணக்கான டால்பின்கள் அப்பகுதியில் வெட்டப்படுவதால் அந்தப் பகுதி கடலே, ரத்தக்கடலாக மாறி விடுகிறது.


இதனால் அந்தப் பகுதியில் சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


மேலும் கடல்வாழ் உயிரினங்கள் பலவும் இந்த சூழல் சீர்கேடால் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

டால்பின் மீன் இனமே அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

எனினும், ஐந்தறிவு விலங்குகளிடம் (அதுவும் மனிதனை நண்பன் என்று தவறாக கருதும் சாதுவான விலங்கான டால்பின் மீனிடம்) தனது முதிர்ச்சியை காட்டுவதாக நினைக்கும் மனிதர்களின் வெறியாட்டம் ஓயவில்லை.

சூழலை அழிப்பது புவியை அழிப்பதாகும். புவியை அழிப்பது மனிதனை அழிப்பதாகும்.

வீடியோக் காட்சி:


-பூவுலகின் நண்பர்கள்

புதன், நவம்பர் 04, 2009

மேற்குலகின் குப்பைக்கூடையாகும் இந்தியா..!

இந்தியர்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பார்கள்: ஆனால் வீட்டின் குப்பைகளை தெருவில் கொட்டிவிடுவார்கள் என்று நகைச்சுவையாக சொல்வதுண்டு. வீட்டில் உருவாகும் குப்பைகள் பெரும்பாலும் எந்த ஆபத்தும் இல்லாதவை. ஆனால் ஆபத்து நிறைந்த குப்பைகளும்கூட, தெருவில் கொட்டப்படுகிறது என்பது கவலைக்குரிய செய்தி.

குறிப்பாக தொழிற்சாலைகளில் உருவாகும் குப்பைகளில் பெரும்பாலானவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்த குப்பைகளை கையாள்வோர் மட்டுமன்றி, அந்தப் பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவைகளையும் மாசுபடுத்தும் இயல்புடையவை. உதாரணமாக சாயப்பட்டறைகளையும், தோல் தொழிற்சாலைகளையும் கூறலாம். இங்கு உருவாகும் கழிவுகள் உரியமுறையில் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும்போது நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தையும் பெருமளவில் பாதித்து பேரழிவுகளை ஏற்படுத்துகிறது.

மக்கள் நலன் காக்கும் மருத்துவமனைகளிலும் பல்வேறு குப்பைகள் உருவாகின்றன. மருந்துப்பொருட்கள், சிகிச்சைப்பொருட்கள், மனித உடலின் பாகங்கள் உள்ளிட்ட பலபொருட்களும் கழிவாக மாறும்போது பெரும் நச்சுத்தன்மையை உருவாக்குகின்றன. எனவே இந்த கழிவுகளை அவற்றின் நச்சுத்தன்மையை அகற்றிவிட்டே வெளியேற்ற வேண்டும் என்று சட்டங்கள் சொல்கின்றன. ஆனால் அரசு மருத்துவமனைகளும், பிரபல மருத்துவமனைகள் உட்பட தனியார் மருத்துவமனைகளும் இந்த சட்டத்தை எந்த அளவு மதிக்கின்றன என்பது கேள்விக்குறியே.

இதுபோன்ற நச்சுப்பொருட்கள் கேரள மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்டு கோவை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள கேட்பாரற்ற நிலங்களில் கொட்டப்படுவதாக வரும் செய்திகளை படித்திருக்கலாம். நம் வீடுகளில் உள்ள கழிவறைக்கழிவுகள் எங்கு செல்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த கழிவுகளும்கூட அருகாமைப்பகுதியில் உள்ள கேட்பாரற்ற நிலங்களில்தான் கொட்டப்படுகிறது.

இந்தக்குப்பை விவகாரம் ஒரு சர்வதேச பிரசினையாகும். இதற்காக ஐ.நா.சபை சார்பில் மாநாடுகள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அது விருப்ப உடன்படிக்கை என்ற பெயரில் சட்டமாகவும் உள்ளது. ஆனால் இந்த விருப்ப உடன்படிக்கை என்பது கட்டாயமானது அல்ல. நாடுகள் விரும்பி ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த சட்டத்தை அந்த நாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியும். எனவே எந்த சர்வதேச சட்டத்தையும் மதிக்கும் வழக்கம் இல்லாத அமெரிக்கா முதல், அமெரிக்கப்பாதையில் நடைபோட விழையும் இந்தியாவரை பல்வேறு நாடுகள் இந்த விருப்ப உடன்பாட்டை புறக்கணித்துள்ளன. அப்படியே ஏற்பளிப்பு செய்தாலும், முழுமையாக அமல் படுத்துவதில்லை. இதன் விளைவுகள் இந்திய மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.

அமெரிக்காவின் 9/11 கழிவுகள் இந்தியாவில்..!

அமெரிக்கா மிகவும் பாதுகாப்பான நாடு என்ற மாயையை விலக்கிய 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அந்நாட்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் இந்தியாவையும் பலவிதங்களில் பாதித்தது. அதில் முக்கியமானது தாக்கி சிதைக்கப்பட்ட உலக வர்த்தக மையம் அமைந்துள்ள ட்வின் டவரின் நச்சு நிறைந்த கழிவுகள் இந்தியாவிற்குத்தான் வந்தன.

பிரோஸ்னா, ஷென் குவான் ஹை மற்றும் பின்டோஸ் என்ற பெயருடைய மூன்று கப்பல்களில் இரும்புக்கழிவுகள் இந்தியாவிற்குள் வந்தன. அவற்றில் பிரோஸ்னா கப்பலில் மட்டும் சுமார் 30 ஆயிரம் டன் எடையுள்ள இரும்புக்கழிவுகள் வந்ததாக தெரிகிறது. இந்த இரும்புக் கழிவுகளுடன் நச்சுத்தன்மை வாய்ந்த அஸ்பெஸ்டாஸ், காட்மியம், பாதரசம், டையாக்ஸின்கள், பாலி குளோரினேடட் பைபினைல்ஸ் ஆகிய பொருட்கள் இருந்துள்ளன.

இந்த பிரசினை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் குரல் எழுப்பினர். அப்போது துறைமுக அதிகாரிகள் கூறிய பதில்: இரும்பை இறக்குமதி செய்வது சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கையே! அதில் நச்சுக் கழிவுகள் இருக்கக்கூடும் என்பதை நீங்கள் நிரூபித்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்!!

மின்னணுக் கழிவுகள்!

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரும் பிரசினைகளுள் முதன்மையானது: மின்னணுக் கழிவு மேலாண்மை. கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, செல்போன் ஆகிய அனைத்தும் பயன்படுத்தியபின் குப்பையாகி விடுகிறது. ஆனால் இந்த குப்பைகள்தான் மிக அதிக அளவில் நச்சுத்தன்மையுடன் இருக்கின்றன.

இந்த மின்னணு சாதனங்களை மிக அதிக அளவில் பயன்படுத்தும் அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளும், மின்னணுக் கழிவுகளை சட்டவிரோதமாக குவித்து வைக்க இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஏழை ஆசிய நாடுகளையே குறிவைக்கின்றன.

ஏழை ஆசிய நாடுகளின் குழந்தைகளுக்கு கணிப்பொறியை அறிமுகப்படுத்துவது போன்ற “தர்ம காரிய”ங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களை கொடையாக அளிப்பது என்ற பெயரில் இந்த குப்பைகள் இந்தியாவிற்கு அனுப்பப் படுகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை அப்படியே குப்பையில் போடமுடியாது. அவற்றில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கியபிறகே அவற்றை குப்பையில் போட முடியும். அவ்வாறு நச்சுப்பொருட்களை நீக்குவதற்கு ஆகும் செலவில் பத்தில் ஒருபங்கு செலவில் அந்த குப்பைகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யமுடிகிறது.

இந்த மின்னணுக் குப்பைகள் இந்தியாவில் உள்ள சில தொழிலதிபர்களால் டன் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்து வாங்கப்படுகிறது. ஒரு டன் மின்னணுக் குப்பையில் சுமார் 10 கிராம் தங்கம், 30-40 கிலோ செம்பு, மேலும் அலுமினியம், வெள்ளி, சில நேரம் பிளாட்டினம் கூட கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் இந்திய தொழிலதிபர் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடிகிறது. ஆனால் இந்தப் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழிலாளர்களுக்கு அந்த மின்னணுக்குப்பைகளில் உள்ள நச்சுப்பொருட்களால் புற்றுநோய், காச நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிக்கும். அதனால் என்ன? அவர்கள் படிப்பறிவற்ற, கேட்பாரற்ற தொழிலாளர்கள்தானே??

இவ்வாறு இந்தியாவிற்கு ஆண்டு ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் மின்னணுக் கழிவுகள் வருகின்றன. இதில் இந்திய தொழிலதிபருக்கு எத்தனை கோடி லாபம்? அதில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கு எவ்வளவு? என்றுதான் பார்க்கவேண்டும். இந்தியா ஒளிர வேண்டும் அல்லவா!

நகராட்சி குப்பைகள்!

மேற்கூறப்பட்ட இரும்பு, மின்னணு போன்றவை தவிர்த்த குப்பைகளும் இந்தியாவிற்குள் வந்தவண்ணம் உள்ளன. புகழ்பெற்ற ஐடிசி போன்ற நிறுவனங்கள் இந்த கழிவுகளை பல்வேறு பெயர்களில் எடுத்து வருகின்றன. அவற்றில் முக்கியமானவே நகராட்சி குப்பைகள்.இந்த குப்பைகளில் எதுவும் இருக்கும். அண்மையில் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏராளமான குப்பைகள் இவ்வாறு வந்து இறங்கி இருப்பதாக செய்திகளை படித்திருக்கக்கூடும். லேடக்ஸ் எனப்படும் ரப்பர் தொழிற்சாலைக்கழிவுகள் என்ற பெயரில் வந்த கழிவுகளில், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட நச்சுப்பொருட்கள் கலந்த மருத்துவக்கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் இருந்ததாக தெரிகிறது.

அணுக்கதிர்வீச்சு கழிவுகள்!

மேலை கூறப்பட்ட கழிவுகளைப்போல எளிதில் அடையாளம் காண முடியாதவை அணுக்கதிரியக்க கழிவுகள். ஏனெனில் அணுக்கதிரியக்கத்திற்கு நிறமோ, மணமோ கிடையாது. எனவே மெத்தப்படித்தவர்கள்கூட அணுக்கதிரியக்கத்தை அதற்கான உபகரணங்கள் இல்லாமல் கண்டுணர முடியாது. மேற்கூறப்பட்ட கழிவுகளுக்குள், குறிப்பாக உலோகக்கழிவுகளுக்குள் அணுக்கதிரியக்க கழிவுகள் ஊடுவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் என்ன?
ரஷ்யாவின் செர்னோபில்லில் அணுஉலை வெடித்து விபத்து ஏற்பட்டபோது உருவான அணுக்கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இந்தியாவிற்குள் வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்தபோது இந்திய அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டதா
? அல்லது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உணவுப்பொருட்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக சந்தேகம் எழுப்பப்பட்டதாக மக்கள்தான் கவலைப் பட்டார்களா?

இதற்கிடையில் மரபணு மாற்று உணவுப்பொருட்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அறிவியலை மதமாக வழிபடும் சிலர், அறிவியலின் பெயரால் விஷத்தையே கொடுத்தாலும் அமுதமாக நினைத்து அருந்த வேண்டும் என்று கூறுகின்றனர். மரபணு மாற்று உணவுப்பொருட்களால் நுகர்வோருக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்று சுற்றுச்சூழல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் மக்களிடமோ இது குறித்து தேவையான விவாதங்கள் எழவில்லை.

நமக்குதான் பேசுவதற்கு அரசியல், சினிமா என்று எத்தனை முக்கிய விவகாரங்கள் இருக்கின்றன. இப்போது மக்களின் அறிவை மேம்படுத்துவதாகக்கூறி வழங்கப்பட்ட இலவச வண்ணத்தொலைக்காட்சி வேறு வந்துவிட்டது. அதில் "மானாட, மயிலாட" பார்த்துக்கொண்டிருந்தால் போதுமானது.

பாதாள சாக்கடைக்குள் சிக்கி சுகாதாரத் தொழிலாளர்கள் உயிரிழக்கும் செய்திகள் நமக்கு புதியவை அல்ல. ஆனால் இதுபோன்ற பிரசினைகள் நமது வீட்டுக்கதவை தட்டும்வரை நாம் கவலைப்படாமல் இருக்கப் பழகிவிட்டோம்.

இந்த நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகளை இந்தியாவிற்குள் அனுமதித்து இந்தியர்களின் உயிருக்கு உலை வைக்கும் இந்த வணிகம் குறித்து படித்தவர்கள் யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். ஏனென்றால் இதுபோன்ற தொழில்கள் ஈடுபடுபவர்கள் கல்வியிலும், சமூகத்திலும் பின்தங்கிய தலித், சிறுபான்மை மக்களும் பெண்களும்தான். மீறி யாராவது கேள்வி எழுப்பினால், இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழலாம். இந்தியாவின் இறையாண்மையை ஏலம் விடும் உரிமை அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உள்ளது.

நாம் என்னதான் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றி இருக்கும் நச்சு வளையம் வேகமாக சுருங்கி வருகிறது. நமது கழுத்தை அந்த வளையம் சுருக்குவதற்கு அதிக நாட்கள் இல்லை.

என்ன செய்யப்போகிறோம்?


-வழக்கறிஞர் சுந்தரராஜன்

திங்கள், நவம்பர் 02, 2009

பஞ்சம் போக்கும் புன்செய் தானியங்கள்

வீரத்தமிழனை எடுத்துக்காட்டும் புறநானூறு பாடல்களில் சிறப்பாகப் போற்றப்பட்ட வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு, கருஞ்சோளம், அரிசிக்கம்பு, செந்தினை, கருந்தினை, பைந்தினை, பெருந்தினை, சிறுதினை, காடைக்கண்ணி, கேப்பை, வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற தானியங்களுக்குரிய பொதுவான தமிழ்ப்பெயர் புன்செய் தானியங்கள். நன்மை என்றால் சிறந்தவை. புன்மை என்றால் அற்பம், சிறுமை, இழிவு என்று பொருள் உண்டு. நெல், வாழை, கரும்பு எல்லாம் நன்செய். மற்றவை புன்செய். நல்ல சுவையான உணவு தானியங்களுக்கு ""புன்மை'' என்று பட்டம் கட்டினர்.

உண்மையில் அரிசிச் சோறு உண்டவர்கள் தாம் பூஞ்சையாக இருந்தனர். புஞ்சை உணவாகிய கம்பு உருண்டையையும், உளுத்தங்களியையும், கேப்பைக் களியையும் உண்டவர்கள் நோய்நொடியின்றி வலுவாக இருந்தனர். வீரம் விளைத்தனர்.

எட்டாண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு மாபெரும் இயற்கை விவசாயக் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டிருந்தேன். நான் பேச வேண்டிய ""பசுமைப்புரட்சி'' என்ற தலைப்பு எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையில் பணிபுரிந்த முன்னாள் கோவை விவசாயப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு வழங்கப்பட்டது. பேச்சு ஒருகட்டத்தில் நான் ஏற்கெனவே தொட்டிருந்த புன்செய் தானிய விஷயத்துக்கு வந்தது. அப்போது அவர் எனது புள்ளிவிவரங்களை அள்ளித் தந்தார். அதாவது 1950 - 51 புள்ளிவிவரத்துடன், 2000 - 01 புள்ளிவிவரத்தை (2009 - 10 - புள்ளிவிவரமானாலும்) ஒப்பிட்டால் அரிசி உற்பத்தி 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் பெருவகை புன்செய் தானியங்களான சோளம், கம்பு, கேப்பை சுமார் 300 சதவீதம் உற்பத்தி குறைந்துவிட்டதுடன், தினை, சாமை, வரகு முதலிய சிறு தானியங்கள் காணாமல் போய்விட்டன என்றும் குறிப்பிட்டு, உணவு தானியங்கள் உற்பத்தியில் உள்ள சமனற்ற போக்கை வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் எழுந்து சில கேள்விகளைக் கேட்க அனுமதிக்கப்பட்டேன். ""புன்செய் தானிய உற்பத்தி குறைந்தது தெரிந்த விஷயம். அதற்குக் காரணமானவரே நீங்கள்தானே? புன்செய் தானிய உற்பத்தியை உயர்த்தும் முயற்சிகளைச் செய்வதில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பொறுப்பு இல்லையா?'' என்று கேட்டேன்.

""பஞ்சத்தையும் பசியையும் போக்குவதற்கு அரிசி உற்பத்தி மட்டுமே வழிவகுக்கும் என்று நெல் சாகுபடிக்கு மட்டுமே பேக்கேஜ் திட்டம், மானியம் வழங்கப்பட்டது'' என்று அவர் கூறிய விளக்கம் யாரையும் கவரவில்லை. மீண்டும் நான் எழுந்து, ""புஞ்சை தானியங்களுக்குத்தான் பஞ்சம் தீர்க்கும் பஞ்சை தானியம் என்று பெயருண்டு. அரிசியை 2 மாதம் சேமிக்கலாம். நெல்லை ஓராண்டு சேமிக்கலாம். ஆனால் புஞ்சை தானியங்களை 5,6 ஆண்டுகளுக்குச் சேமிக்கலாம். ஆகவே ஆண்டுதோறும் பல்லாயிரம் டன்கள் அளவில் வீணான அரிசி சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் ஏலம் விடப்பட்டு பசை உற்பத்தி நிறுவனங்களுக்குச் செல்கிறது. வீணாகி விஷமான ரேஷன் அரிசி ஏழை மக்களின் வயிற்றுக்கும் செல்வதால், வீரத்தமிழன் நோய் தொற்றி நோஞ்சானாகி விட்டான் என்றேன்.

அதை அவர் ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; எவ்வாறு அந்த மாஜி துணைவேந்தரின் பாட்டி அவர் கிராமத்தில் கம்பைக் குத்திப் புடைத்துக் குடித்ததை ஒரு மலரும் நினைவாக எடுத்துக் கூறினார்.

இந்தியாவிலேயே புன்செய் தானிய உணவை கிராமங்களில் இன்னமும் விட்டுக் கொடுக்காதவர்கள் வீரமராட்டியர்களே. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே மானாவாரி புன்செய் தானிய சாகுபடி விரிந்த அளவில் எஞ்சியுள்ளதுடன் அவ்வளவையும் சொந்த உணவு உபயோகத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் காணாமல்போன பல வகையான சாமை, குதிரை வாலி, தினை வகைகள், வரகு எல்லாவற்றையும் மராட்டிய மாநிலத்தில் கண்டுபிடித்து விடலாம். கிருஷ்ணராஜசாகரம், கபினி அணைகள் கட்டி, புஞ்சை நிலங்கள் சதுப்பு நிலமாக மாற்றப்பட்டு, கர்நாடகத்தில் நெல்லும் கரும்பும் ஆக்கிரமித்துக் கொண்டன.

இதனால் புன்செய் தானியம் உண்டு வீரமாக வாழ்ந்த திப்புசுல்தான் படைவீரர்களின் வாரிசுகள் இன்று கர்நாடகத்தில் நோயாளிகளாகிவிட்டனர். ஏனெனில் புன்செய் தானிய சாகுபடியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடமாகவும் கர்நாடக மாநிலம் இரண்டாவது இடமாகவும் விளங்கி வந்தது.

கர்நாடக மாநிலச் சூழ்நிலை எல்லா மாநிலங்களிலுமே ஏற்பட்டுள்ளதால் இந்திய அளவிலும் எந்த வளர்ச்சி வீதத்தில் நெல், கோதுமை சாகுபடி உயர்ந்துள்ளதோ அந்த வளர்ச்சி வீதத்துக்குமேல் பன்மடங்காக புன்செய் தானிய சாகுபடி குறைந்துவிட்டது. மராட்டிய மாநிலம் மட்டுமே சற்று விதிவிலக்கு.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் "பழைய குருடி கதவைத் திறடி' என்ற பழமொழிக்கு ஏற்ப ஹரியாணா, மேற்கு உ.பி. பஞ்சாப் பகுதியில் சில விவசாயிகளும் ஆந்திரப் பிரதேசத்திலும் அரிசி, கோதுமையை விதைக்காமல் புன்செய் தானியங்களையும், பருப்புவகைப் பயிர்களையும் சாகுபடி செய்துள்ளனர். இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் நெல் சாகுபடி 1960-க்குப் பின் அறிமுகமானது. அதற்கு முன்பு, கரீஃப் பருவத்தில் புன்செய் தானியங்களுடன் மக்காச்சோளம், பருப்பு வகை, கரும்பு, எண்ணெய்வித்து சாகுபடி செய்வர். பிறகு ரஃபி பருவத்தில் கோதுமை சாகுபடி செய்வது மரபு. நிலத்தடி நீர் கீழே செல்லச் செல்ல நெல் சாகுபடி செலவுமிக்கதாகவும், நீர்ப்பற்றாக்குறை காரணமாக நெற்பயிர் காய்ந்துவிடும் அபாயமும் உள்ளதால், சில விவசாயிகள் பழைய நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்புவதாகத் தகவல்.

ஆந்திர மாநிலத்திலும் இம்மாற்றம் தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் கடற்கரை மாவட்டங்கள் தவிர மையப்பகுதி மாவட்டங்களில் மழைப்பொழிவும் குறைவு. நிலத்தடி நீரும் வற்றிவிட்ட சூழ்நிலையில் பழையபடி புன்செய் தானியம் மற்றும் துவரை சாகுபடி துளிர்விடுகிறது.

இரண்டாவது போகமாக உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக்கடலை சாகுபடி செய்யவும் அம்மாநில அரசு, மத்திய அரசின் வறட்சிப் பயிர் சாகுபடித் திட்டம் மூலமும் தக்காண சமூக வளர்ச்சி மையம் போன்ற சில தொண்டு நிறுவனங்கள் மூலமும் ஊக்கம் அளித்தாலும்கூட, அடிப்படையான கொள்கை மாற்றம் இல்லாத ஒரு சூழ்நிலையில் புன்செய் தானியம் - பருப்பு வகை சாகுபடி உகந்த அளவில் வளர்ச்சி பெறுமா என்பது ஒரு கேள்விக்குறி.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் வறட்சிப் பயிர் சாகுபடி முயற்சியில் ஒரு துரும்புகூட அசைவு இல்லை. ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கும்போது 12 ரூபாய்க்கு யார் சோளமோ கம்போ வாங்கி உண்பார்கள்? இதர மாநிலங்களில் இரண்டு ரூபாய் அரிசித் திட்டம் உள்ளது. தமிழ்நாட்டைவிட இதர மாநிலங்களில் புன்செய் தானிய விலை சற்று மலிவாக இருந்தாலும், மகாராஷ்டிர மாநில மக்களைத் தவிர இதர மாநிலங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் புன்செய் தானியங்களுக்கு உகந்த கிராக்கி வருமா என்பது ஒரு கேள்விக்குறி.

எனினும் இந்த விஷயத்தில் உணவு அமைச்சரகத்தைச் சார்ந்த ஊட்ட உணவுக் குழுமம் செய்ய வேண்டிய விழிப்புணர்வுப் பிரசாரமும் பொது விநியோகத்தில் சோளம், கம்பு, ராகி, சாமை, தினை, வரகு போன்றவை வழங்குதலும் விவசாயிகளுக்கு நல்ல விலையும், தாராளமான அளவில் புன்செய் தானிய உற்பத்திக்கு மானியமும் வழங்க வேண்டும். புன்செய் தானியங்களை நன்கு சுத்தப்படுத்தி ரவாவாகவும், மாவாகவும் நல்ல முறையில் பேக் செய்து வழங்கலாம்.

தமிழ்நாட்டில் ஒரு தனிநபராக புன்செய் தானியங்களிலிருந்து விதம்விதமான உணவுகளை இன்சுவையுடன் ராமசுப்பிரமணியம் என்பவர் வழங்குகிறார். வறட்சி நிலப் பயிர்களான தானியங்களில் குறிப்பாக அழிந்து வரும் வரகு, தினை, பனிவரகு, சாமை, குதிரைவாலி போன்றவற்றைத் தேடிப்பிடித்து அவற்றைக் கொள்முதல் செய்வதுடன் அவற்றிலிருந்து நறுமணமுள்ள உணவுகளைச் சமைக்கவும் காலத்துக்கு ஏற்ப புதுமையாகவும் வழங்குகிறார்.

பல்வேறு கண்காட்சிகளில் உணவகங்களை நடத்தித் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளைப் புதுமையான முறையில் அவர் மீட்டுயிர்த்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த அவர் புன்செய் தானியங்களை இன்சுவை உணவாகப் படைத்து வழங்கிய காட்சிகளை ""கைமணம்'' என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சி மதியப் பொழுதில் தொகுத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பசுமைப்புரட்சியின் கரிய விளைவுகளுக்குப் பின் மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்று நிலவிவரும் நீர்ப்பற்றாக்குறையை அனுசரித்து முன்போல் மானாவாரி - வறட்சி நில சாகுபடிக்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். புன்செய் தானியங்களையும் பருப்பு வகைகளையும் முன்பு கலப்புப் பயிர்களாக சாகுபடி செய்த மரபு மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். இவ்வாறு கலப்புப் பயிர் செய்வதன் மூலம் மண்ணும் வளம் பெறும். நீர்ச் செலவும் குறையும்.

புறநானூறு பாடல்களில் விவரிக்கப்பட்ட வீர ரத்தமுள்ள தமிழர்களை மீண்டும் உருவாக்க புன்செய் தானிய உற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்தி, அவற்றைத் தமிழர்களுக்கு ஊட்ட வேண்டும். புன்செய் தானியங்களில் சோளம், கம்பு, கேப்பை, துவரை, உளுந்து பயிரிடுவோருக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 மானியமும் அழிந்து வரும் சிறுதானியங்களான சாமை, தினை, வரகு, குதிரைவாலி பயிரிடுவோருக்கு ரூ. 2,000 மானியமும் வழங்க வேண்டும். அவற்றை அரசு கொள்முதல் செய்து, பொதுவிநியோகத்தில் அரிசியுடன் புன்செய் தானியங்களையும் மாதம் 5 கிலோ வீதம் ரேஷன் வழங்கலாமே.

வீரமராட்டியர்களைப் போல் ஊட்டம்மிக்க புன்செய் தானியங்களால் வீரத்தமிழர்களை உருவாக்கும் ஒரு கடமையை நமது முதல்வரும், முத்தமிழ் வித்தகருமான கலைஞரைத் தவிர வேறு யாரால்தான் நிறைவேற்ற முடியும்?
-ஆர். எஸ். நாராயணன்

நன்றி: தினமணி, 31-10-09