புதன், அக்டோபர் 28, 2009

பூவுலகு 2-ஆம் இதழ் - இணையத்தில் படிக்கலாம்!


பூவுலகு சுற்றுச்சூழல் 2-ஆம் இதழ் (ஆகஸ்ட்-செப்டம்பர்) இதழ் பூவுலகு இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளது.


இந்த இதழில்....

மரபணு மாற்றப்பட்ட உணவுகளும், நமது உடல்நலப் பிரசினைகளும் (மருத்துவர் சிவராமன்)

மரபணு மாற்றுப் பயிர்களும், சட்ட நடைமுறைகளும் (வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வன்)

வேம்பு: களவாடப்பட்ட காப்புரிமை மீட்கப்பட்ட வரலாறு (விருந்தினர் பக்கம்: கோ. நம்மாழ்வார்)

புவி வெப்பமடைதல்: நமக்கு பங்கில்லையா? (ஆதி)

காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பன்முகத்தாக்கங்கள் (சி.மா. பிரிதிவிராஜ்)

வெடிக்கக் காத்திருக்கும் (அணுசக்தி) ரகசியங்கள்

ரயில் மோதி யானைகள் பலி - யார் குற்றவாளி? (கோவை சதாசிவம்)

மாபெரும் விதைக்கொள்ளை (தொடர்)

.....உள்ளிட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. படித்துவிட்டு உங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வையுங்கள்.

உங்கள் ஆதரவையும் நம்பித்தான் பூவுலகு இதழ் வெளிவருகிறது.

படைப்புகள், சந்தா, விளம்பரம் போன்ற பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.


பூவுலகு மூன்றாவது இதழ் வெளிவந்து விட்டது. தேவைக்கு பூவுலகு முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

திங்கள், அக்டோபர் 26, 2009

மரபு மாற்று விதைகள் – இயற்கையை விஞ்சுமா செயற்கை?

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ வெளிநாட்டு விதைகளை இரண்டே உரூபாய்க்கு தருவோம்' என்பது அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக இன்னும் சில ஆண்டுகளில் மாறலாம். அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் பயிர் விதைகளும் அரசின் பொது வழங்கல் பட்டியலில் வரலாம். 'ஒரு கிலோ நெல்லு கொடுங்க' என உழவர்கள் கடைகளில் சென்று கேட்கலாம். ‘தக்கன தழைத்தல்’ - டார்வினின் இந்தத் தத்துவம் இன்னும் சில நாட்களில் பொய்த்துப் போகலாம். மாற்றம் மட்டுமே மாறாதது என்னும் இவ்வுலகில் 'டார்வின்' மட்டும் விதிவிலக்கா என்ன?BT cotton

சரி செய்திக்கு வருவோம்! மரபு மாற்று விதைகளுக்கு இந்திய அரசு உரம்போட்டுத் தண்ணீர் தெளித்திருக்கிறது! தக்காளி, கத்தரிக்காய், காலிபிளவர் ஆகிய காய்கள் இன்னும் மூன்று ஆண்டுகளில் மரபு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்திருக்கிறது இந்தியா. மைய அரசின் மரபறிவியல் ஒப்புதல் குழு, மரபியல் மேலாய்வுக்குழு ஆகியவற்றின் ஒப்புதலுக்குப் பின் இந்தியாவில் அவை பயிரிடப்படும்.

அரசின் இம்முடிவு வேளாண்மை அறிஞர்களை மட்டுமல்லாது பல வெளிநாட்டு அறிஞர்களையும் வியப்படைய வைத்திருக்கிறது.

ஒரு பக்கம் மரபு மாற்று விதைகளை அமெரிக்கா முதலிய நாடுகள் தீவிரமாக ஆதரிக்கின்றன. பெருகி வரும் உணவுப்பற்றாக்குறையைச் சமாளிக்க இம்முறை உதவும் என்பது அந்நாடுகளின் வாதம். மரபுமாற்று முறையில் பயிர்களின் மரபுகளை மாற்றுவதால் பூச்சிக்கொல்லிகள் குறைந்த அளவிலேயே தேவைப்படும்; இதனால் மண்வளம் பாதுகாக்கப்படும். அருகி வரும் சில பயிரினங்களை மரபு மாற்று முறையில் காப்பாற்ற முடியும் எனப் பல வாதங்களை முன் வைக்கிறது அமெரிக்கா. நோபல் பரிசு பெற்ற 25 அறிவியலாளர்கள், 3400 அமெரிக்க வேளாண் அறிவியலாளர்கள் அமெரிக்காவின் இக்கருத்தை ஆதரிக்கிறார்கள்.

(கொசுறுச் செய்தி: பல நாட்கள் வைத்திருந்து விற்பதற்கு வசதியாக மெதுவாகப் பழுக்கும் 'பிளார் சாவர்' என்னும் மரபு மாற்றுத் தக்காளியை முதன்முதலில் கலிபோர்னிய நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது)

வலுக்கும் எதிர்ப்புக்குரல்கள்

இத்தனை இருந்தாலும் எதிர்ப்புக்குரல்களும் பலமாகவே கேட்கின்றன. முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் இல்லாத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மரபு மாற்றுக் காய்கறிகளைத் தனியே வைத்திருக்கின்றன. இக்காய்களைச் சந்தை விற்பனைக்கு அனுமதித்தாலும் அவற்றின் மீது ஒட்டுத்தாள்கள் ஒட்டப்பட்டு அவை வேறுபடுத்தப்படுகின்றன.

வெனிசுலா நாடு கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்பிரல் முதல் மரபுமாற்றுப் பயிரிடலைத் தடுத்திருக்கிறது. அங்கேரி நாடு மரபுமாற்றுப் பயிரிடலையும் இறக்குமதியையும் சட்டம் போட்டு நிறுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் கருத்துகள் அனைத்தும் வடிகட்டிய பொய் என்கிறார் வேளாண் அறிவியலாளர் சார்லசு பென்புருகு. 'இம்முறையால் 5 - 7 விழுக்காடு நட்டம் கூடும்; 5 - 10 மடங்கு களைக்கொல்லி அதிகம் செலவாகும்' என்கிறார் இவர். "ஒட்டு மொத்த ஐரோப்பா கண்டமே புறக்கணித்த மரபுமாற்றுப் பயிர்களை இந்தியா ஆதரிக்கக் கூடாது. மீறி ஆதரித்தால் வட அமெரிக்காவின் சந்தையாக இந்தியா மாறி விடும். இந்தியர்கள் ஆய்வுக்கூட எலிகளாகப் பயன்படுத்தப் படுவார்கள்" என எச்சரிக்கிறார் பிரான்சைச் சேர்ந்த மரபணு ஆய்வாளர் செராலனி. "எலி, ஆடு, முயல் ஆகியவற்றிற்கு மரபு மாற்றுப் பயிர்களை உணவாகக் கொடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவ்விலங்குகளின் இரத்த உறைதல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்பட்டன. எனவே மரபுமாற்றப்பயிர்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்கிறார் இலண்டன் கிங் கல்லூரிப் பேராசிரியர் அந்தோனியோ.

“அரசின் அறிவிப்பே ஒரு மோசடி”

இயற்கையைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடும் கிரீன் பீசு தன்னார்வ அமைப்பு மரபுமாற்றுப் பயிரிடலைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. ‘காலம் காலமாக இருந்து வரும் உணவுச் சங்கிலியை மாற்றுவது தவறானது. வணிகத்தைப் பெருக்க வேண்டுமானால் மரபு மாற்று முறை உதவும். வாழ்க்கைக்கு உதவாது’ என்பது கிரீன் பீசின் கருத்து. இதைப் பற்றி, 'கிரீன்பீசு' அமைப்பைச் சேர்ந்த செய் கிருட்டினனைக் கேட்டபோது, " இந்திய அரசின் அறிவிப்பே ஒரு மோசடி! மரபு மாற்றுப்பயிர்கள் தொடர்பான முடிவுகளைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் இது நிலம் தொடர்பான சிக்கல்! ஆனால் இப்போது வேளாண்துறை அமைச்சர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவே தவறானது! " எனப் பொரிந்து தள்ளினார்.

“வடிகட்டிய பொய்”

"ஒரே ஒரு மரபணுவை மாற்றுவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் என்பதே வடிகட்டிய பொய்! நம் நாட்டில் ஏற்கெனவே மரபுமாற்று முறையில் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் உழவர்களுக்கு அதனால் எவ்விதப் பயனும் இல்லை. சொல்லப்போனால் பருத்தி உழவர்கள் தற்கொலை இன்னும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது." என்றவர் "மரபு மாற்றுப் பயிர் நிறுவனங்கள் நெல்லையும் மரபு மாற்றுப் பயிரிடல் முறையில் திட்டமிட எண்ணியுள்ளன. இந்திய அரசு இப்போதே கவனமாகச் செயல்பட்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கனடா, அர்சென்டினா, வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் மட்டும்தான் மரபுமாற்றுப் பயிரிடல் முறை நடைமுறையில் உள்ளது. வேறெந்த நாட்டிலும் இல்லை. மேலும் முதன்மைப் பயிர்களை மரபுமாற்று முறையில் பயிரிட எந்த நாடும் ஒப்புக்கொண்டதில்லை. அமெரிக்கா புளோரிடாவின் முதன்மைப் பயிர் பருத்தி. அங்கு 'பிடி' பருத்திக்குத் தடை உள்ளது. இதே போல் பெரு நாட்டில் உருளைக்கிழங்கும் சீனாவில் சோயாவும் மெக்சிகோவில் சோளமும் மரபுமாற்று முறையில் பயிரிடத் தடை விதித்துள்ளார்கள். நம்முடைய நாட்டிலும் மரபு மாற்றுப் பயிர்களுக்கு முழுமையாகத் தடைகள் வேண்டும்" என்று அவர் விலாவாரியாக விளாசித் தள்ளினார்.

'பிடி' (‘Bt’) என்றால் என்ன?

பேசில்லசுத் துரிசென்சி (‘Bacillus Thurigiensis’) என்பது ஒருவகை புரதம். அப்புரதத்தில் இருந்து பருத்திப் புழுக்களைக் கொல்லும் ஒருவகை மரபீனி பருத்திப் பயிர்களில் சேர்க்கப்படுகிறது. இம்மரபீனி சேர்க்கப்பட்ட பருத்தி வகைகள் 'பிடி' பருத்தி எனப்படுகின்றன.

இயற்கை வேளாண்மையை ஆதரிக்கும் நம்மூர்க்காரர்கள், "பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த முறையை மாற்றுவது மண்வளத்தைப் பாதிக்கும்; உழவர்கள் விதைகளுக்காகப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டி வரும்" என்கிறார்கள். முதலாளித்துவத்தை வளர்ப்பதே இதன் நோக்கம் என்பது இவர்களின் குற்றச்சாட்டு.

மலட்டுத்தன்மை அடையும் நிலம்:

தமிழ்நாடு உழவர்கள் சங்க மாநிலத்தலைவர் வேட்டவலம் மணிகண்டனிடம் கேட்டபோது "மரபுமாற்றுப் பயிரிடலால் நிலம் மலட்டுத்தன்மை அடைந்துவிடும். மராட்டிய மாநிலத்தில் மரபுமாற்றுப் பயிர்களைப் பயிரிட்ட உழவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் மரபுமாற்றுப் பயிர்களைப் பயன்படுத்திய உழவர்கள் பலருக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்காகப் பலகட்டப் போராட்டங்கள் நடத்தி ஏக்கருக்கு ஐயாயிரம் பணத்தைப் பெற்றுக் கொடுத்தோம். எனவே மரபுமாற்றுப் பயிர்கள் அதிக மகசூல் தரும் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை" என முடித்துக்கொண்டார்.

தடை விதித்துள்ள நாடுகளில் சில : தாய்லாந்து, ஆசுதிரியா, அங்கேரி, வெனிசுலா , பிரான்சு, இரசியா, நியூசிலாந்து

"மரபு மாற்றுப் பயிரிடல் முறை பயிர்களில் பல வகைகள் அழியும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் பழைய காலத்தில் 120000 அரிசி வகைகள் இருந்தன. 'பசுமைப் புரட்சி'யின் விளைவாகத் தற்போது வெறும் ஐம்பது அரிசி வகைகள் மட்டுமே உள்ளன. இன்னும் மரபு மாற்றுப் பயிரிடலைக் கொண்டு வந்தால் இருக்கும் அரிசி வகைகளும் அழிந்து போகும். சொல்லப்போனால் அன்றாடம் நாம் சாப்பிடும் கத்தரிக்காயில் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. அரசின் இவ்வறிவிப்பால் இவை எல்லாம் அழிந்து போகும் நிலை ஏற்படும்" என எச்சரிக்கிறார் இயற்கைமுறை வேளாண்மை முறையைப் பின்பற்றும் செல்லையா.

“வழக்கமாக உழவர்கள் ஓராண்டு விளைச்சலில் இருந்து அடுத்த ஆண்டுக்கான விதைகளைப் பெறுவார்கள். ஆனால் மரபுமாற்றுவிதைகளை இப்படிப் பயிரிட முடியாது. மரபுமாற்று விதைகள் 'அறிவுசார் உரிமை'ச் சட்டத்தின் கீழ் வருகின்றன. மரபு மாற்று விதைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும். அவற்றிடம் இருந்து தான் உழவர்கள்

விதைகளைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் 'எங்களை ஏமாற்றி விதைகளைப் பயிரிட்டிருக்கிறார்கள்' என அந்நிறுவனங்கள் வழக்குத் தொடுக்கும். 1998 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஒரு விவசாயி மேல் இப்படி வழக்குத் தொடரப்பட்டது." எனப் புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.

இன்னும் பிரான்சில் உள்ள கேன் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறைத் தலைவர் செராலனி, ஒரிசா மாநில ஓமியோபதி மருத்துவர்கள் சங்கத் தலைவர் தத்தா, இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியாளர் கவிதா குருகந்தி, மரபியல் துறை அறிஞர் பார்கவா, முன்னாள் அமைச்சர் அன்புமணி இராமதாசின் ‘பசுமைத்தாயகம்’ தன்னார்வ அமைப்பு, நடிகைகள் அமலா, உரோகிணி, இயக்குநர்கள் மிசுகின், வசந்து, மருத்துவர் கமலா செல்வராசு என மரபு மாற்றுப் பயிரிடல் முறையை எதிர்ப்போர் பட்டியல் நீளுகிறது.

இப்படிக் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாகப் பல சிக்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாம் இருக்க, இந்திய அரசின் தடாலடி அறிவிப்புப் பலரைப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

கடைசிச்செய்தி: இந்திய அரசின் அறிவிப்பு வெளியான அதே வாரத்தில் இந்தியா வந்த இலாரி கிளின்டன் மரபுமாற்றுப் பயிரிடலை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் அதற்கு வேண்டிய உதவிகளை அமெரிக்கா செய்யும் என்றும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

- முத்துக்குட்டி


நன்றி: கீற்று இணையதளம்

வெள்ளி, அக்டோபர் 23, 2009

பி.டி. கத்தரிக்காய் பிரச்சினை: கருணாநிதி யோசனை

பி.டி. கத்தரிக்காய் பிரச்சினையில் விவசாயிகள், நுகர்வோர் கருத்தை அறிந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.

சென்னை, அக்.23-

பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்கும் பிரச்சினையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கருத்தை அறிந்து முடிவு எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் விவரம் வருமாறு:-

கேள்வி:- மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

பதில்:- பி.டி. கத்தரிக்காய் எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவுக்குள் அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்து; அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்; அந்தப் பிரச்சினையை ஆராய மத்திய அரசு குழு அமைப்பதாக அறிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கருத்தறிந்து, அதன் அடிப்படையில் முடிவெடுப்பதே உகந்ததாகும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

நன்றி: தினத்தந்தி 23-10-09

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விரும்பும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு "பூவுலகின் நண்பர்கள்" நன்றி தெரிவிக்கிறது.

உணவுக்கொள்கைகள் மாநில அரசின் அதிகாரவரம்பின்கீழ் உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநில அரசுகளும், சத்திஷ்கர் போன்ற வேறு சில மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்துக்குள் மரபணு மாற்று உணவுப்பொருட்களை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளன.

இத்தகைய ஒரு நிலையை தமிழ்நாடு அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று "பூவுலகின் நண்பர்கள்" கேட்டுக்கொள்கிறது.

செவ்வாய், அக்டோபர் 20, 2009

அழிவை நோக்கி கடலோரக் கிராமங்கள்


கடலோர மக்களின் வாழ்வு என்றாலே போராட்டங்களை எதிர்கொள்வதாகவே அமைந்துவிடும்போல! இலங்கை கடற்படையின் தாக்குதல், மீனவர்களுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பாணை, மீனவர்களைக் கடற்கரையில் இருந்து வெளியேற்றும் சட்டங்கள் என அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருக்க, இயற்கைப் பேரிடர்களால் பாதிப்புகளில் தத்தளித்து மீளமுடியாமல் இருப்போருக்கு இன்னோர் அதிர்ச்சியாக வந்துள்ளது கடலரிப்பு.

தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் தற்போது அதிகரித்து வரும் கடலரிப்பு மீனவ மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடலரிப்பு என்பது ஒன்றும் புதிதல்ல.

திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான உவரி கப்பல் மாதா ஆலயம், முன்னர் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுத்தான், புதிய ஆலயம் 1970-1974-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் புனித அந்தோனியார் ஆலயம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியுள்ளது. அப்போதெல்லாம் மக்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை உணரவில்லை.

ஆனால், அண்மைக்காலங்களில் 5 அல்லது 10 ஆண்டுகளில் ஏற்பட்டு வரும் கடலரிப்புதான் பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தி மீனவர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து வேம்பார் காலனி அமைந்த இடத்தின் தொலைவு சுமார் 200 மீட்டர். ஆனால், தற்போது கடல் அலைகள் காலனி வீடுகளின் சுவர்களைத் தொடுவதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றன.

கடற்கரையில் இருந்து தொலைவில் கட்டப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம், கடலுக்குள் மூழ்கும் அபாயக் கட்டத்தில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலும் இதேபோல கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வருவதாகப் பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.

மேலும், மாற்றுவழி காணும் கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல தமிழகத்தில் பல கடலோரக் கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன. இதைப் பற்றிச் சிந்திப்பது யார் என கடலோர மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடியப்பட்டினம், தேங்காய்ப்பட்டினம், இரயுமன்துறை உள்ளிட்ட கிராமங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் பெரியதாழை, கூட்டப்புளி உள்ளிட்ட கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள தருவைகுளம், சிப்பிகுளம், கீழவைப்பார், வேம்பார் உள்ளிட்ட கிராமங்களும் அதிக அளவில் கடலரிப்பைச் சந்தித்து வருவதாக அண்மையில் சின்பேட் என்ற தொண்டு நிறுவனம் பின்லாந்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 9 கடலோர மாவட்டங்களில் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் விவசாயம், மீன் பிடித்தலில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றி ஆய்வு நடத்தியபோதுதான் இந்த அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான கடலோர மாவட்டங்கள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

கடலரிப்பால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை உணராமலேயே "கரை தேய்கிறது, வளர்கிறது' என சாதாரணமாகக் கூறுகின்றனர் மீனவர்கள். இந்த பேராபத்து கடலோரக் கிராமங்களை மட்டுமன்றி, மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளையும் விட்டுவைக்கவில்லை.

மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இவற்றில் விலாங்குசல்லி, பூவரசன்பட்டி ஆகிய இரு தீவுகளும் கடல்மட்டத்தின் உயரத்துக்குச் சமமாகத்தான் தற்போது இருக்கின்றன. மிக விரைவில் இவை அடியோடு காணாமல்போகும் நிலை ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிலவியல் துறை ஆராய்ச்சியாளர்கள். மற்ற தீவுகளின் வடிவமும், அளவும் சில ஆண்டுகளாக உருமாறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கடலரிப்பும், கரை வளருவதும் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து வந்துள்ளன. இதை ஆபத்து நிலைக்கு வளரவிடாமல் சூழியல் சமநிலை அமைப்புகளான மணல் குன்றுகள், உயிர் அரண் காப்புக் காடுகள் மற்றும் கரையோரத்தில் அமைந்த தாவரங்கள் பாதுகாத்துள்ளன.

இதற்கு மாறாக, கடலில் கற்களைக் கொட்டுவதும், கட்டடங்களைக் கட்டுவதும், கடலோரத்தில் மணல் அள்ளுவதும், பவளப் பாறைகளை வெட்டி எடுப்பதும் கடலரிப்புக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் பனிக்கட்டி உருகிக் கடல் மட்டம் உயருகிறது என்றால், அதைத் தாக்குப்பிடிக்கும் இயற்கை அரண்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல இயற்கையைச் சுரண்டும் மனிதனின் செயல்பாடுகளே இயற்கைச் சீற்றத்துக்கு வழி அமைத்திடுகிறது.

புதுச்சேரி பகுதியில் கரையில் போடப்பட்ட கற்களால் விழுப்புரம் பகுதியில் உள்ள கோட்டக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கடலரிப்பின் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அரசின் முடிவு கற்கள் மற்றும் கான்கிரீட் தடுப்பு உள்ளிட்ட இயற்கைக்கு மாறான தாற்காலிகத் தீர்வை நோக்கித்தான் உள்ளது.
அரசின் கட்டுப்பாடுகள் மீனவர்களின் வாழ்வுரிமைக்கான உத்தரவாதம் கொடுப்பதாக அமைய வேண்டும்.

கடலோர மக்களை வெளியேற்றாமல் நிரந்தரத் தீர்வுக்கான வழிமுறைகளை அரசு செயல்படுத்த வேண்டும் என மீனவ மக்கள் விரும்புகின்றனர்.

அரசு, இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காட்டி வரும் வேகத்தை அழிந்து வரும் கடலோரக் கிராமங்களைப் பாதுகாப்பதில் காட்டினால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம். தினமும் விடியலை முதலில் பார்க்கும் கடலோர மக்களுக்கு வாழ்விலும் விடிவு ஏற்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.

-ரெ. ஜாய்சன்

நன்றி: தினமணி, 20-10-09

வெள்ளி, அக்டோபர் 16, 2009

மரபீனி மாற்றுக் கத்தரிக்காய் - அப்படி என்ன தேவை?


மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு மத்திய அரசின் மரபீனி பொறியியல் அங்கீகாரக் குழுமம் (GEAC) அனுமதி அளித்துவிட்டது என்றும், இது குறித்து அரசு இன்னும் முடிவு மேற்கொள்ளவில்லை என்றும் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

அங்கீகாரக் குழுமம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே இதற்கு அனுமதி அளித்துவிட்டது என்பதும், தற்போது அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டம், வெளிப்படையாக அறிவிக்கும் முன்பாக நடந்த ஆய்வுக்கூட்டம் என்பதும் சொல்லப்படாத உண்மை. இந்த அறிவிப்பை மத்திய அரசு ஏப்ரல் மாதமே அறிவிப்பு செய்திருக்கும். ஆனால், கிரீன்பீஸ் அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து மைக்கோ சமர்பித்த களஆய்வு அறிக்கைகளைப் பெற்று, ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து கருத்து அறிந்தன. அதில் உள்ள குறைபாடுகள் பற்றிப் பேசத் தொடங்கின. அதனால் அரசு இத்தனை மாதங்களாக இந்த அறிவிப்பைத் தள்ளி வைத்து வந்தது.

மைக்கோ சமர்ப்பித்த ஆய்வுக்கூட அறிக்கைகள் முறையாகத் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பதும், பல முடிவுகள் சாதகமாக காட்டப்பட்டுள்ளன, அறிவியல்பூர்வமானவை அல்ல என்பதும் கிரீன்பீஸ் அமைப்புகளின் வாதங்கள். அவற்றில் அவர்கள் குறை சொல்லும் முக்கியமான மூன்று விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை:

அ) மரபீனி மாறுதல் புகுத்தப்பட்ட இந்தக் கத்தரிக்காய், அதன் புரதத்தில் எத்தகைய மாற்றத்தைப் பெறுகிறது என்பதற்கும், இந்தப் புரதம் மனிதருக்குத் தீமையாக அமையாது; நச்சுத்தன்மை கட்டுக்குள் இருக்கிறது என்பதற்கும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.

ஆ) மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயை உண்போருக்கு இனப்பெருக்கக் கோளாறுகள் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.

இ) இந்த ஆய்வு 90 நாள்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. நீண்டகால ஆய்வுகள் இருந்தால்தான், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணியாக மரபீனி கத்தரிக்காய் மாறுகிறதா என்பதை அறிய முடியும்.

கிரீன்பீஸ் அமைப்பினர் சுட்டிக்காட்டிய இந்தக் குறைபாடுகள் குறித்து மறுஆய்வுகள் செய்யப்பட்டனவா இல்லையா என்ற எந்தத் தகவலும் இல்லாமல், மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மட்டுமே அமைச்சர் கூறியிருக்கிறார். அங்கீகாரக் குழுவின் பரிந்துரையை ஏற்று அனுமதிப்பதைத் தவிர அரசு செய்யப்போவது ஏதுமில்லை என்பது மட்டும் நிச்சயம்.

உலக நாடுகளில் உற்பத்தியாகும் கத்தரிக்காயில் 26 சதவீதம் இந்தியாவில் விளைகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. மொத்தம் 4.72 லட்சம் ஹெக்டேரில் 76 லட்சம் டன் கத்தரிக்காய் விளைகிறது. பூச்சிகள் பாதிப்பால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயால் இந்திய மக்களுக்கும் இந்திய வணிகத்துக்கும் எந்த வகையிலும் லாபம் இல்லை.

அமெரிக்கா மட்டுமே மரபீனி மாற்றுப் பயிர் நிறுவனங்களை ஆதரிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த மரபீனி மாற்றப்பட்ட உணவுப்பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உலக வர்த்தக நிறுவனத்தின் (ரபஞ) சட்ட திட்டத்துக்கு எதிரானது. இருந்தாலும்கூட, தைரியமாகத் தடை விதித்துள்ளது. தடையை நீக்க வேண்டும் என்று மான்சான்டோ, மைக்கோ உள்ளிட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இந்தியாவில் 56 உணவுப் பயிர்களுக்கு மரபீனி மாற்றுப் பயிர் களஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் நெல், சோளம், தக்காளி, உருளை ஆகியனவும் உள்ளன. இதில் முதல் வர்த்தக உற்பத்தி அனுமதியைப் பெறுவது மரபீனி மாற்றுக் கத்தரிக்காய்.

இந்தியாவில் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் சந்தைக்கு வரும்போது, அவற்றின் மீது லேபிள் ஒட்டப்படுமா என்பது குறித்து இன்னும் மத்திய அரசு விளக்கம் சொல்லவில்லை. அத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டாலும், உற்பத்தி அதிகம்; விலை மலிவு என்ற காரணத்தால் நாட்டுக் கத்தரிக்காயுடன் கலந்து விற்கப்படும் ஆபத்து நிறையவே இருக்கிறது.

மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு அப்படியென்ன தேவை இருக்கிறது? என்று கேட்டால் அதற்கு கிரீன்பீஸ் அமைப்பினர் சொல்லும் முதல் காரணம், இதன் மூலம் காப்புரிமை என்கிற பெயரில் விதைகளை இந்திய விவசாயி பயன்படுத்தும்போதெல்லாம் இதை அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிறுவனத்துக்கு "ராயல்டி' செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, அமெரிக்காவில் மரபீனி மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்க முயற்சிக்கிறார்கள்.

உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்கிற கதையாகிவிட்டது இந்தியாவின் நிலைமை. திட்டமிட்டு விவசாயத்தை அழிக்க முனைந்து செயல்படுகிறார்கள்.

என்ன அரசோ? என்ன ஆட்சியோ?

நன்றி: தினமணி 16-10-2009

சனி, அக்டோபர் 10, 2009

தீபாவளி

உடைந்து போன பாதி சிலேட்டில் – தெரிந்தது,

பாதியில் நின்ற அக்காவின் படிப்பு.


அக்காவை பார்த்து நாளாச்சு!

அக்காவை பார்த்து நாளாச்சு!

இரவில் வந்து விடிவதற்குள் வேலைக்குச் செல்லும்

அக்காவை பார்த்து நாளாச்சு!

தீபாவளிக்கு அம்மா, அக்காவிற்கு வைத்துவிட்ட – மருதாணி

சிவக்கவில்லை......

அக்காவின் வேலை பட்டாசு தொழிற்சாலையில்

அக்காவை பார்த்து நாளாச்சு!

-மா. யோகநாதன், கோவை