வியாழன், ஆகஸ்ட் 27, 2009

வீட்டை மாற்றிய வண்ணத்துப்பூச்சி!

உடலில் வரிவரியாக பளிச்சென்ற வண்ணத்தில் இருக்கும் கம்பளிப் புழு, அதைவிட வனப்புமிக்க வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்கு தன்னையே அழித்துக் கொள்கிறது. இந்த 'உருமாற்றம்', இயற்கையில் பொதிந்துள்ள எத்தனையோ ஆர்வத்தைத் து£ண்டும் அம்சங்களில் ஒன்று மட்டுமே.

butterfly சமீபத்தில் காந்தி கிராமம் சென்றிருந்தேன். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்கு அழகான பெயர் உண்டு. பகலில் வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ஓய்வெடுக்கத் திரும்பும் இடம் என்று பொருள்படும் வகையில், 'அந்தி சாய்ந்த பிறகு' (பிஹைன்ட் எ சன்செட்) என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் பல சுவாரசியமான விஷயங்கள் இருந்தன. என்னை ஆச்சரியப்பட வைத்த விஷயம் ஒரு வண்ணத்துப்பூச்சிக் கூடு. முட்டையில் இருந்து வெளிவரும் கம்பளிப் புழு, உணவாகக் கொள்ளும் தாவர இலைகளின் அடிப்புறத்தில்தான் வண்ணத்துப்பூச்சிகள் சாதாரணமாக முட்டையிடும்.

ஆனால் ஒரு கூட்டுப்புழுவின் கூடு அந்த வீட்டு முன் மரக்கதவில் ஒட்டிக் கொண்டிருந்ததுதான் என்னை ஆச்சரியப்பட வைத்தது. மற்றொரு கூடு வரந்தா கிரில் கம்பிகளில் ஒட்டிக் கொண்டிருந்தது. மனிதர்களின் வாழ்நிலையை ஒட்டி சில உயிரினங்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை தகவமைத்துக் கொள்கின்றன. அதன் ஒரு பகுதி இது என்று நினைக்கத் தோன்றியது. கல்லு£ரியில் படித்தபோது செடிகளில் ஒட்டிக் கொண்டிருந்த கம்பளிப்புழுக்களின் கூடுகளைக் கண்டது ஞாபகம் வந்தது. பளபளப்பான அந்தக் கூடுகள் விநோதமான தோற்றத்துடன் இருக்கும்.

சாதாரணமாக வண்ணத்துப்பூச்சிகள் இடும் முட்டைகள், நிலவும் வெப்பத்தைப் பொருத்து 3 முதல் 12 நாட்களில் பொரிந்துவிடும். பிறகு, அதிலிருந்து உருவாகும் வண்ணமயமான முதல்நிலைப் புழு, தாவர இலைகளை வட்டவட்டமாகக் கடித்து உண்ணும். இருவாரங்கள் இலைகளை உண்ட பின், 2 அங்குல நீளமுள்ள கொழுகொழு கம்பளி புழுவாக அது வளர்ந்துவிடும். இந்த வண்ணமயமான கம்பளிப்புழுவின் பின் பாகத்தில், இரண்டு கொக்கிகள் போன்ற பகுதி இருக்கும். இதன்மூலம் வசதியான ஓர் இலையின் அடிப்புறம் ஒட்டிக்கொண்டு, கம்பளிப் புழு தலைகீழாக தொங்க ஆரம்பிக்கும்.

அதன்பிறகுதான் ஆரம்பிக்கிறது ரொம்ப முக்கியமான பகுதி. கம்பளிப்புழு உருமாற்றத்தின் முக்கிய கட்டத்தை எட்டப் போகிறது. தன்னையே அழித்துக் கொள்ளப்போகிறது. தன் தோலை சிறிதுசிறிதாக இழந்து கூட்டுப்புழுவாக மாறும். இந்த உருமாற்றம் சில மணி நேரங்களில் நடந்துவிடும். கவிழ்ந்த பூஞ்சாடி போன்ற இந்த கூட்டுப்புழுவைச் சுற்றி, மெழுகுபடலம் போன்ற மெல்லிய தோல் இருக்கும். நாளாகநாளாக, இந்த தோல் கண்ணாடி போல வெளிப்படையாகி, உள்ளிருப்பது தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.

இரு வாரங்களில் இந்த கூட்டுப்புழு அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறிவிடும். அதன்பிறகு கூட்டின் தோல் பகுதியை கிழித்து வெளிவரும். தன் வயிற்றுப்பகுதியில் உள்ள ரத்தத்தின் மூலம் சத்தைப் பெறும் வண்ணத்துப்பூச்சி, இறக்கைகளை மெதுமெதுவாக விரிக்கும். உடலிலுள்ள கூடுதல் திரவப் பொருட்களை வெளியேற்றும். தன் இறக்கைகள் காயவும், உறுதியாக மாறவும் காத்திருக்கும். என்னதான் அதன் இறக்கைகள் எடை குறைவாக இருந்தாலும், உடனடியாக பறக்க முடியாது.

முட்டையிட்டது முதல் வண்ணத்துப்பூச்சி பிறக்கும் வரை மொத்த நடைமுறை நடந்து முடிய ஒரு மாதம் ஆகும். ஒரு நாள் அதிகாலை நான் அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, வண்ணத்துப்பூச்சி கூட்டை கிழித்து, பிறந்துவிட்ட தகவல் கிடைத்தது. வண்ணத்துப்பூச்சி பிறந்தவுடன் பறக்க முடியாது என்பதை நேரடியாகப் பார்த்தேன். அந்த வண்ணத்துப்பூச்சி நீண்டநேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதன் இறக்கைகள் கூட்டின் உள்ளே இருந்ததுபோல, உட்புறமாக வளைந்து இருந்தன. இறக்கை விரிய நேரம் ஆனது. அதன் இயல்பை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் யாரும் அதைத் தொடவில்லை.

காலையில் பிறந்த அந்த வண்ணத்துப்பூச்சி, மாலை நான் வீடு திரும்பியபோதும் முன்னறையிலேயே ஓரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இயற்கை எத்தனையோ அதிசயங்களை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. அழகு மிகுந்த, நுணுக்கமான இதுபோன்ற வண்ணத்துப்பூச்சியை மனிதனால் உருவாக்க முடியுமா என்ற கேள்வியை, இயற்கை என்றென்றைக்கும் நம்மைப் பார்த்து எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

-ஆதி
(adhi@poovulagu.org)

நன்றி: கீற்று இணையதளம்

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் - யாருக்காக, இது யாருக்காக?

சொன்னால் வெட்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு' என்கிற கதையாக, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, மறுநாளே எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது தமிழக வேளாண் தொழில்ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம் என்கிற மசோதா.

இந்தச் சட்டத்தின் அடிப்படையான ஒரேயொரு விஷயம் ""விவசாயிகளுக்கு வேளாண்மைத் தொழில்நுட்பத்தை சொல்லித் தருவோர் பதிவுபெற்ற வேளாண் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்'' என்பதுதான். இதை மீறினால் சிறை அல்லது ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். இச் சட்டத்தில் இயற்கை, மற்றும் பாரம்பரிய விவசாயத்துக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால், ஒன்று அது யாருக்கோ லாபம் சேர்ப்பதாக இருக்கலாம். அல்லது நாட்டில் பொதுமக்கள் அல்லது குறிப்பிட்ட துறையினர் பாதிக்கப்பட்டு பேரிழப்பு நேர்ந்திருந்தால், மறுபடியும் அப்படி நடக்கக்கூடாது என்பதற்காகச் சட்டம் இயற்றப்பட்டிருக்கலாம்.

சரி, இத்தகைய சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாட்டில் போலி வேளாண் ஆலோசகர்கள் பெருகிப்போய், விவசாயிகள் ஏமாற்றப்பட்டு, நஷ்டமடைந்து, தற்கொலைச் சம்பவங்கள் நடந்துவிட்டதா? அப்படியேதும் நடைபெற்றுவிடவில்லையே! ஏன் கொண்டுவந்தீர்கள் என்று நம் சட்டப்பேரவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளும்கூட கேட்கவில்லை. அமைச்சரும் இதற்கான காரணத்தை விளக்கவில்லை.

மருத்துவத் துறையில் பட்டம்பெற்று பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில்புரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டபோது, பல தலைமுறைகளாக சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவம் அளித்துவந்தோருக்கு, அவர்கள் பரம்பரையாகச் செய்து வருகிறவர்கள் என்பதை நிரூபித்து பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவத்துக்கு தனித்தனியாக கல்லூரிகள் வந்துவிட்டன. மாணவர்களும் அதிக அளவில் சேர்கிறார்கள். இப்போது பரம்பரை வைத்தியர்கள் என்பதை நீக்கினாலும், இந்த இந்திய மருத்துவ அறிவைக் கொண்டு செல்ல ஆட்கள் வந்தாகிவிட்டது.

ஆனால், தமிழகத்தின் பாரம்பரிய, இயற்கை வேளாண்மைக்கு அத்தகைய நிலைமை இல்லை. பாடத்திட்டத்தில் ஒரு சிறு அறிமுகப் பாடமாக இவை இருக்கக்கூடுமே தவிர, தமிழகப் பல்கலைக்கழகங்களில் பாரம்பரிய விவசாயம், இயற்கை வேளாண்மை குறித்த தனியான சிறப்புப் பட்டப்படிப்புகள் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் பாரம்பரிய விவசாயம் அறிந்த விவசாயிகளின் தலைமுறை முடிந்துபோனது. இப்போது இருக்கும் விவசாயிகள் பசுமைப் புரட்சியின் ரசாயன விவசாயத்துக்குப் பழகியவர்கள். இந்த நிலையில் பாரம்பரிய விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் பணியில் சில விவசாய அமைப்புகள் குழுக்கள் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பாரம்பரிய அறிவு இப்போதுதான் பரவலாகப் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி, மண்புழு உரம் என்பதெல்லாம் இப்போதுதான் மீண்டும் கையாளப்படுகிறது. இந்நிலையில் இச்சட்டம் வந்திருப்பது தமிழகப் பாரம்பரிய விவசாயத்தை அழிக்கத்தான் உதவுமே தவிர, காப்பாற்றாது.

தமிழக அரசு தனது தவறைத் திருத்த விரும்பினால் ஒன்றைச் செய்ய வேண்டும். அதாவது, முன்பு மருத்துவத் துறையில் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பார்த்த பாரம்பரிய மருத்துவர்களையும் பதிவு செய்துகொண்டு மருத்துவம் நடத்த அனுமதித்ததைப் போல, தற்போது இயற்கை வேளாண்மை, பாரம்பரிய வேளாண்மையில் கருத்தரங்கம், செயல்விளக்கம், பண்ணைவிளக்கம் நடத்துபவர்களையும் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்களில் இதற்கான தனிச்சிறப்பு பட்டப்படிப்புகளில் போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் பட்டம் பெற்று வந்தபின்னர், இந்த நடைமுறையில் தேவைப்பட்டால் திருத்தம் செய்துகொள்ளலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய அமைப்புடன் இணைந்து, இயற்கை வேளாண் வல்லுநர் நம்மாழ்வார் ஒரு வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்போவதாக அறிவித்தார். இதில் பயில அடிப்படைத் தகுதி அவர் விவசாயியாக இருந்தால் போதும். அத்தகைய பல்கலைக்கழகம் செயல்பாட்டில் இருக்குமேயானால், அது அரசு அங்கீகாரம் பெற்றிருக்காவிட்டாலும்கூட, அதில் தொடர்புடையவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இந்த விதித் தளர்வுகள்தான் தமிழகப் பாரம்பரிய வேளாண்மையை இந்தத் தமிழ் மண்ணில் நீடிக்கச் செய்யும்.

மண்ணை வீணாக்கும் முயற்சிக்கும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிக்கும் ஊக்கமளிக்கும் இப்படிப்பட்ட சட்டத்தை எந்தவித விவாதமும் இல்லாமல் சட்டப்பேரவை நிறைவேற்றி இருப்பதற்கு நமது மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு விழா எடுத்தால் தகும்!

நன்றி: தினமணி, 21-08-2009

பூவுலகு (ஜூன்-ஜூலை 2009) இதழ் வலையேற்றம்

அன்பு நண்பர்களே,

பூவுலகு சுற்றுச்சூழல் (ஜூன்-ஜூலை 2009) இதழ் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

படங்கள் இணைந்த வடிவமைப்புகளுடன் பிடிஎஃப் கோப்பாக பூவுலகு இணையதளத்திலும், படங்கள் இல்லாமல் வெறும் படைப்புகள் மட்டும் கீற்று இணையதளத்திலும் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

படித்துவிட்டு வாசகர்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கோரப்படுகிறார்கள்.

பூவுலகு இதழ் ஆகஸ்ட்-செப்டம்பர் 2009 இதழ் வெளியாகிவிட்டது. தேவைப்படுபவர்கள் பூவுலகு இணையத்தைப் பார்க்கவும்.

உங்கள் சிறு சிறு செயல்பாடுகளும் சூழலை பாதுகாக்க உதவும்.

உங்கள் சிறு சிறு உதவிகளும் பூவுலகு இதழை பாதுகாக்க உதவும்.

வியாழன், ஆகஸ்ட் 13, 2009

நாராய்.. நாராய்.. புலம் பெயரும் புள்ளினம்

ஜனவரி மாதத்தின் ஒரு காலை. மூடுபனி விலகி, இதமான வெயில் படர ஆரம்பித்திருந்தது. வேலூரிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் ஐந்து கிலோமீட்டர் சென்றிருப்போம். வலதுபுறத்தில், ஒரு வறண்ட ஏரியில் இரண்டு, பெரிய வெள்ளை நிறப்பறவைகள் இரை தேடிக் கொண்டிருப்பதை கவனித்தோம். அந்த ஜோடிக்கு ஒரு நூரடி தூரத்தில் கிராமத்து ஆட்கள் சிலர் வட்டமாக அமர்ந்து ஏதோ விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். வண்டியை நிறுத்தி விட்டு பைனாகுலரைப் பொருத்திப் பார்த்தேன். கதிரவனின் ஒளி பட்டு வெண்ணிற உடல் மின்னியது. நீண்ட செந்நிறக் கால்கள். செங்கால் நாரைகள்!

வெண்கொக்கு போன்ற உடலமைப்பு. ஆனால் உருவில் பெரியது, ஒரு மீட்டர் உயரமிருக்கும். நீண்ட, சிவப்பு வண்ணஅலகு. ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த நாரை குளிர் காலத்தில் மட்டும் இங்கு வரும். ஐரோப்பிய ஐதீகத்தில் இந்த நாரை தான் குழந்தையைக் கொண்டு வரும் பறவை. இதன் உருவையும், அலகின் பரிமாணத்தையும் கவனித்தால் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வரும் திறன் கொண்டது போல்தான் தெரிகின்றது. அங்கே, முக்கியமாக ஹாலந்து, போலந்து நாடுகளில் இந்த நாரை மக்களுக்கு நெருங்கிய பறவைகளில் ஒன்று. நம் கிளிப் பிள்ளை மாதிரி. ஆனால் அதை அவர்கள் வளர்ப்பதில்லை. வீட்டு மாடியில், அதிலும் புகைபோக்கியில் கூடு கட்டினால் அதை ஒரு பாக்கியம் என்று கருதுகின்றனர். அதைப் பாதுகாக்க வீட்டுக்காரருக்கு அரசு ஒரு ஊக்கத்தொகை கொடுக்கின்றது. மனிதரின் அருகாமைக்கு இவை நன்கு பழகியிருக்கின்றன.

ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளிலுள்ள ஏரிக்கரையோரமுள்ள மரங்களிலும் சுள்ளிகளாலான பரந்த கூடுகளை இந்த நாரைகள் கட்டுகின்றன. அதே இடத்திற்கு, அதே மரத்திற்கு வருடாவருடம் வந்து, பழைய கூட்டைப் புதுப்பித்து இனப் பெருக்கத்தைத் தொடர்கின்றன. ஆணும் பெண்ணும் மாறி மாறி அடைகாத்து, குஞ்சுகளைப் பராமரிக்கின்றன. குளிர்காலத்தில், ஐரோப்பாவில் தரை பனியால் மூடப்படும் போது இவை கூட்டம் கூட்டமாக வலசை போக ஆரம்பிக்கின்றன. சில கூட்டம் ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றன. வேறு சில இந்தியா நோக்கிப் பயணிக்கின்றன. பறவையியலாளர்கள் சில நாரைகளைப் பிடித்து, அதன் கால்களில் சிறு வளையங்கள் பொருத்தி அவை போகும் இடம், போகும் பாதை இவற்றைக் கணிக்கின்றார்கள். தமிழ் நாட்டிலும் வருடாவருடம் கோடிக்கரை பறவைச் சரணாலயத்தில் இந்த வளையம் பொருத்தும் வேலை நடக்கின்றது.

பறவைகள் உலகில் உள்ள இந்தப் புலம்பெயரும் வழக்கம் அறிவியலுக்கு விளங்காத பெரும் புதிராகவே இருக்கின்றது. சிட்டுக்குருவி அளவு உள்ள புள்ளினத்திலிருந்து, வல்லூறு, நாரை போன்ற பல இனப் பறவைகள் இவ்வாறு கண்டம் விட்டு கண்டம் வலசை போகின்றன. ஒரு பறவை இனம் எந்த நாட்டில், எந்த இடத்தில் கூடுகட்டுகின்றதோ அந்த இடத்தைச் சேர்ந்தது.

குளிர்காலத்தில் தரை பனியால் மூடப்படும் போது இவை வெப்ப நாடுகளுக்கு வலசை போகின்றன. அக்டோபரில் இந்தியா வந்து சேரும் இவை, மார்ச் ஏப்ரல் மாதங்களில் திரும்பிப் போகின்றன. அங்கே கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து விட்டு, மறுபடியும் அக்டோபரில் பயணத்தை ஆரம்பிக்கின்றன. எப்படி ஒவ்வொரு ஆண்டும் அதே இடத்திற்கு வலசை போன்றன, எப்படி வழி கண்டு பிடிக்கின்றன என்ற கேள்விகளுக்கு இன்னும் பதிலில்லை. இயற்கையின் பெரிய புதிர் இது. பறவைகளின் காலில் மாட்டப்படும் ப்ளாஸ்டிக் வளையத்தின் நிறத்தை வைத்து இது எந்த நாட்டில் பொருத்தப்பட்டது என்றறிய முடியும். இதற்கு அந்தப் பறவையைப் பிடித்துப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. சென்ற மாதம் சென்னை தி ஸ்கூல் பள்ளி ஆசிரியர் அருண், திருநெல்வேலிக்கருகிலுள்ள கூந்தங்குளத்தில் பறவைகளை பைனாகுலர் மூலம் அவதானித்துக் கொண்டிருந்தபோது பட்டைத்தலை வாத்து ஒன்றின் காலில் மஞ்சள் வளையம் மாட்டப்பட்டிருந்ததைக் கண்டார். பிறகு இணையத்தளத்தொடர்புகள் மூலம் இது மங்கோலியாவில் மாட்டப்பட்ட வளையம் என்றும், அங்கு தான் இந்த வாத்துக் கூட்டம் கூடுகட்டி இனவிருத்தி செய்கின்றன என்றும் அறிந்தார். மங்கோலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு ஆண்டாண்டு பயணம் செய்யும் வாத்து பற்றிய இந்தத் தகவலை அருண், Tamilbirds என்ற யாஹூ குழுவுடன் பகிர்ந்து கொண்டார்.

அண்மையில் பறவைகளின் கால்களில் வளையத்தைப் பொருத்துவதற்கு பதிலாக, சிறு chip ஒன்றை பறவையின் உடலில் பொருத்தி, விண்கோள் வழியாக துல்லியமாக பறவை வலசை போகும் பாதையையும் வேகத்தையும் அறிய முடிகின்றது. இம்முறையை பயன்படுத்தியதால் ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. சிலமாதங்களுக்கு முன், பேருள்ளான் (Godwit) என்ற புறா அளவிலான பறவை, வட அமெரிக்காவிலுள்ள அலாஸ்காவிலிருந்து, உலகின் அடுத்த கோடியிலுள்ள நியூசிலாந்திற்கு வலசை சென்றது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 17,460 கி.மீ தூரத்தை, இந்தப் பறவை 9 நாட்களில் கடந்துள்ளது. மூன்றே இடங்களில் இரையுண்ணத் தரையிறங்கியது. நான்காவது கட்டத்தில் 11000 கி.மீ தூரத்தை, இரவு பகலாக ஒரே மூச்சில் பறந்து முடித்து நியூசிலாந்தில் மிரான்டா என்ற இடத்தில் இறங்கியது. ஒரு பெரிய கூட்டமாகத்தான். இதை நான் எழுதும் போது ணி7 என்று பெயரிடப்பட்ட இந்தப் பறவை மிரான்டாவில் இருக்கின்றது. இந்த விவரங்கள் உயிரியலாளர்கள் மத்தியில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. புள்ளினம் புலம் பெயர்வதின் மர்மம் தொடர்கின்றது. (பேருள்ளான் பறவையை சென்னைக்கருகில் முட்டுக்காடு, மாமல்லபுரம் இங்குள்ள நீர்நிலைகளில் காணலாம்.)

இப்படி வலசை போகும் பறவைகளின் விண்பாதையைக் கணித்து ஒரு உலக வரை படமே தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பாதைகளை skyway என்கிறார்கள். இந்த விண்பாதை கடலோரமாகவே அமைந்திருக்கும். சமுத்திரப்பரப்பைக் கடப்பதை இப்புள்ளினங்கள் முடிந்த வரை தவிர்க்கின்றன. ஐரோப்பாவிலிருந்து செங்கால் நாரைக் கூட்டங்கள், ஆப்பிரிக்காவை ஏறக் குறைய தொட்டுக்கொண்டிருக்கும் ஜிப்ரால்டர் மேல் பறந்துதான் ஆப் பிரிக்காவிற்குள் செல்கின்றன. இந்த உலக பறவைப் பாதை வரைபடத்தை National Geographic Magazine தனது சந்தாதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அன்பளிப்பாக அனுப்பியது.

இவை வலசை போகும்போது திரளாகக் கூடிப் பறந்தாலும், நம் நாட்டில் ஒன்று அல்லது இரண்டாகத் தான் செங்கால் நாரைகளை நாம் காண முடிகின்றது. ஒரே ஒரு முறை, குஜராத்திலுள்ள வேலவதார் சரணாலயத்தில் பன்னிரண்டு நாரைகளை நான் ஒரு சிறு குட்டையில் பார்த்தேன். குட்டை வற்றி அதில் நூற்றுக்கணக்கான மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. பார்ப்பதற்கு ஒரு ராட்சதக் கொப்பரையில் எண்ணெய் கொப்பளித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அதே போன்ற ஒலியையும் கேட்டோம். நாரைகள் போட்டி போட்டுக்கொண்டு அவைகளைப் பிடித்துண்பதை நாங்கள் வெகு நேரம் பார்க்க முடிந்தது. மீன்களை மட்டுமின்றி, தவளை, நண்டு, வெட்டுக்கிளி போன்ற உயிரினங்களையும் செங்கால் நாரை இரையாகக் கொள்ளும்.

ஆயிரத்திஐநூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணதிற்கருகேயுள்ள சத்திமுத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த கவி ஒருவர் மதுரைக்குப் பயணித்திருந்தபோது அங்கு வலசை போகும் செங்கால் நாரை ஜதை ஒன்றைக் கவனித்திருக்கின்றார். சத்திமுத்தப் புலவர் எழுதியதாகக் கூறப்படும் கவிதை இந்த நாரையை வர்ணித்து, தூது போகும்படி கேட்டுக் கொள்கின்றது.

நாராய்...நாராய்...செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக்கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்தவாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

ஆனால் இன்று உலகின் மற்றெல்லாப் பறவையினங்களையும் போலவே செங்கால் நாரையும் அரிதாகிக் கொண்டு வருகின்றது. வாழிடங்கள் சீரழிக்கப்பட்டதாலும், பூச்சிக்கொல்லி மருந்துகள் நீர்நிலைகளை மாசுபடுத்தி சிற்றுயிர்களை அழித்து விட்டதாலும் பறவையினங்கள் அற்றுப் போய்க்கொண்டிருக்கின்றன. காலநிலை மாற்றமும் புள்ளினங்களுக்குப் பாதமாகின்றது. அதனால்தான் ஆரணி சாலையில் நாங்கள் அந்தக் காலையில் பார்த்த காட்சி காணற்கரிய ஒன்றாகின்றது.

*

-தியடோர் பாஸ்கரன்

படங்கள்: நித்திலா பாஸ்கரன்

நன்றி: உயிர்மை ஏப்ரல் 2009

பன்றிக் காய்ச்சல்: பலனடையும் மரண வியாபாரிகள்!

மருத்துவ நிபுணர்களே! H1N1 தொற்று நோயை தடுத்திடுங்கள். உயிர்களை காப்பாற்றுங்கள்!” என்று பிரபல பத்திரிகைகளில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரங்களை பலரும் பார்த்திருக்கலாம். மக்கள் மீதுதான் அரசுக்கு எவ்வளவு அக்கறை? எவ்வளவு கரிசனம்? என்று வியப்பு ஏற்படலாம். ஆனால் இது போன்ற நோய்களை தடுப்பதற்கான வாய்ப்பு உண்மையிலேயே மருத்துவர்களிடம் உள்ளதா? என்ற கேள்வி மிகவும் முக்கியமானது.

பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த வைரஸ்களால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். “ஆர்த்தோமிக்சோவிரிடேஎன்னும் பெயர் மூன்று கிரேக்க சொற்களால் ஆனது. orthos = சரியான, சீரான ('standard, correct'), myxo = சளி ('mucus'), viridae வைரஸ் நுண்கிருமிகள். இந்நோய் இன்புளூயன்சா A, இன்புளூயன்சா B, இன்புளூயன்சா C என்னும் மூன்று வகையான வைரஸ்களால் ஏற்படுகிறது. இதில் இன்புளூயன்சா A-வால் மிக அதிகமான அளவிலும், இன்புளூயன்சா C-யால் மிக அரிதாகவும் தொற்றுகிறது. இந்நோயை பரப்பும் வைரஸ் மிகவும் அரிதான மரபணு தொகுதியை பெற்றிருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளனர்.

இந்நோய் பன்றிகளிடம் தோன்றி மனிதர்களிடம் பரவுவதாக கூறப்படுகிறது. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் வைரஸ்களின் மரபணு புகுந்து மிக விரைவில் மாற்றம் பெற்று, வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது.

இதுபோன்ற காய்ச்சல் (flu) வகை உலக சரித்திரத்தில் பலமுறை கண்டறியப்பட்டுள்ளது. 1957ம் ஆண்டு ஆசியக் காய்ச்சல் (Asian Flu) 4.5 கோடி அமெரிக்கர்களை பாதித்து அதில் எழுபதாயிரம் பேர் இறந்து போனார்கள். அதற்கு பதினொரு வருடங்களுக்குப் பின்னர் 1968 மற்றும் 1969ம் ஆண்டில் ஹாங்காங் காய்ச்சல் (HongKong flu) 5 கோடி அமெரிக்கர்களை பாதித்து, அதில் முப்பத்தி மூவாயிரம் பேர் இறந்தனர். 1976ம் ஆண்டு அமெரிக்க படையினர் ஐநூறு பேர் பன்றிக் காய்ச்சலால் (wine flu) சில வாரங்கள் பீடிக்கப்பட்டார்கள் என்றாலும், சில மாதங்களுக்குப் பின் இந்த நோய் மாயமாக மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இத்தகைய கொடிய நோயை தடுக்கும் ஆற்றல் நமது மருத்துவர்களுக்கு இருக்கிறதா என்ற கேள்வி இதுவரை எழுப்பப்படவில்லை. பல்லாயிரம் மக்களை பாதிக்கும் இந்த நோயை தடுக்கும் ஆற்றல் மருத்துவர்களுக்கு இல்லை என்பதே யதார்த்தமான உண்மை. ஏனெனில் இந்த நோய்களுக்கான காரணிகள் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த நோய்களுக்கான காரணிகள் பல்வேறு நாடுகளின் அரசுகளை கட்டுப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டியது.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பம், அறிவுச் சொத்துரிமை போன்ற பெயர்களில் உணவு தானியங்களையும், உணவுக்கு பயன்படும் கால்நடைகளையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றி பெற்று வருவதாகவே தோன்றுகிறது. குறிப்பாக இறைச்சி உணவில், இந்த பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. உலகில் உள்ள முட்டை மற்றும் இறைச்சிக் கோழி வளர்ப்பு நவீன பண்ணை முறைக்கு மாறியதன் விளைவாக, ஜெர்மனி நாட்டின் எரிக் வெஸ்ஜோஹன் குரூப்”, நெதர்லாந்தின் ஹென்ட்ரிக்ஸ் ஜெனடிக்ஸ்”, பிரான்ஸின் க்ரிமாட் குரூப்”, அமெரிக்காவின் டைசன்ஆகிய நான்கு நிறுவனங்களின் ஏகபோக கட்டுப்பாட்டிற்குள் அடங்கி விடுகின்றன.

இதேபோல உலக அளவில் பண்ணை முறையில் வளர்க்கப்படும் பன்றிகள் அனைத்தும் இங்கிலாந்து நாட்டின்ஜீனஸ் பிஎல்சி”, நெதர்லாந்தின் ஹென்ட்ரிக்ஸ் ஜெனடிக்ஸ்மற்றும் பிக்-சர் குரூப்”, டானிஷ் நாட்டின் மாட்டிறைச்சிக் கூட்டுறவு அமைப்பு ஆகிய நான்கு நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளது.

அதிக முட்டை, அதிக பால், அதிக இறைச்சி போன்ற காரணங்களுக்காக இந்த கால்நடைகளின் மரபணுக்களில் பன்னாட்டு நிறுவனங்கள் பல மாறுதல்களை உருவாக்குகின்றன. இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தால் அந்த உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு அறிவுச் சொத்துரிமை சட்டத்தின்கீழ் காப்புரிமை பதிவு செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாடு, ஆடு, பன்றி, வாத்து, மீன் போன்ற உணவுக்கு பயன்படும் விலங்குகளையும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிற்சாலை முறையில் வளர்ப்பதற்கு இந்த நிறுவனங்கள் வழி செய்கின்றன.


உலக வர்த்தக நிறுவனத்தின் நிர்பந்தம் காரணமாக, இன்று தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களுக்கு உலகெங்கும் காப்புரிமை வழங்கப்படுகிறது. இதற்கென Budapest Treaty என்கிற ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதைப் பயன்படுத்தி மான்சான்டோபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்று பன்றிக்களுக்கு மட்டும் அல்லாமல் பாரம்பரிய பன்றி வகைகளுக்குமாக சுமார் 12 பன்றி ரகங்களுக்கு காப்புரிமை கோரி மனு செய்துள்ளது.


வளரும் நாடுகளின் அரசுத் துறைகளில் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் செலுத்தும் ஆதிக்கம் காரணமாக, இந்த மரபணு மாற்ற விலங்குகளே சந்தையில் கிடைக்கும் நிலை ஏற்படுகிறது. பாரம்பரிய விலங்கு மற்றும் பறவை இனங்கள் காலப்போக்கில் அழியும் நிலையும் ஏற்படுகிறது. இந்தியா போன்ற வளரும்(?) நாடுகளில் சுயஉதவிக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், சிறுகடன், வங்கிக் கடனுதவி போன்ற அம்சங்கள் மூலமாகவும் மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது.


ஆனால் மரபணு மாற்றம் காரணமாக இந்த விலங்குகளில் ஏற்படும் எதிர்விளைவுகள் குறித்து உரிய ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை. பயிர் வகைகளைப் போல இந்த கால்நடைகளிலும் அதிக உற்பத்தி என்ற இலக்குக்காக மரபணு மாற்றம் நடைபெறுவதால், கால்நடைகளின் இயல்பான நோய் எதிர்ப்புத் திறன் வீரியமிழந்து போகிறது. வீடுகளில் நாம் வளர்க்கும் நாட்டு மாடுகளுக்கும், கோழிகளுக்கும் இருந்த வீரியமோ, நோய் எதிர்ப்புத்திறனோ நவீன உயர்ரக (!!??) ஜெர்சி போன்ற கறவை மாட்டு இனங்களுக்கும், பல வகை பண்ணைக் கோழிகளுக்கும் இல்லை என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் மனித குலத்தையே அச்சத்திற்கு உள்ளாக்கும் பல வகை நோய்கள் இந்த நவீன பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளால் உருவாகின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.


லாப நோக்கில் இயங்கும் நிறுவனம் சார்ந்த அறிவியலாளர்கள், இந்த கால்நடைகளின் மரபணுக்களில் உருவாக்கும் மாற்றத்தால், இவை இயல்பு நிலையில் இருந்து பெருமளவு மாறி விடுகின்றன. இதன்காரணமாக கால்நடைகளின் வழக்கமான நோய் எதிர்ப்புத்திறன் குறைவதோடு, புதிய நோய்கள் தாக்கக்கூடிய ஆபத்தும் அதிகரித்து வருகிறது. இந்த கால்நடைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகள் பல நேரங்களில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் வைரஸ் போன்ற நுண்கிருமிகளை உருவாக்குகின்றன. இந்த வைரஸ்களே சார்ஸ், ஆந்தராக்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களை உருவாக்குகின்றன.

இந்த நோய்க்கிருமிகள், உயிரியல் ஆயுதங்களாக திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்ற கருத்தும் ஒரு தரப்பினரிடம் உள்ளது.

இந்த நோய்கள் உருவாவதற்கான காரணம் தெரியாததாலோ அல்லது வேறு வர்த்தக காரணங்களுக்காகவோ இந்த நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் இதுவரை தயாரிக்கப்படவில்லை. ஆனால் இந்நோய்களுக்கான சிகிச்சை மருந்துகளை தயாரிக்க மருந்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இந்த நோய்களுக்கான மருந்துகளை தயாரிப்பதில், குறிப்பிட்ட நோயை உருவாக்கும் வைரஸ்களின் மாதிரிகள் தேவைப்படுகின்றன. இந்த மாதிரிகளை, நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து மட்டுமே சேகரிக்க முடியும்.

இதற்காக உலக சுகாதார நிறுவனம் (WHO) சார்பில் சர்வதேச இன்ப்ளூயன்சா கண்காணிப்பு இணையம் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் இன்ப்ளூயன்சா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் உள்ள தேசிய இன்ப்ளூயன்சா மையம், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வைரஸ் கிருமிகள் பிரித்தெடுத்து உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து செயல்படும் ஆய்வு மையங்களில் ஒப்படைக்கிறது.


உலக சுகாதார மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய இந்த மையங்கள் தனியார் மருந்து நிறுவனங்களின் லாபத்திற்காக, நோய்க்கிருமிகளை திருட்டுத்தனமாக பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு அளிப்பதாக புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தோனேஷியா நாட்டில் இன்ப்ளூயன்சா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட வைரஸ் கிருமிகள் தனியார் மருந்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும், அந்த வைரஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை இந்தோனேஷியாவிற்கு தேவையான அளவில் வழங்க மருந்து நிறுவனங்கள் மறுப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சர்வதேச இன்ப்ளூயன்சா கண்காணிப்பு இணையத்திற்கு, நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸ் கிருமிகளை வழங்க இந்தோனேஷியா மறுத்துவிட்டது. இதையடுத்து உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இந்தோனேஷியா இருப்பதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.


இன்ப்ளூயன்ஸா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலிருந்து எடுக்கப்படும் வைரஸ் கிருமிகளை சேகரிக்கும் மருந்து நிறுவனங்கள், அந்த வைரஸ் கிருமிகளுக்கு காப்புரிமை பெற்றுவிடுகின்றன. எனவே இந்த வைரஸ் கிருமிகளைக் கொண்டு மற்றவர்கள் எந்த சோதனையும் செய்ய முடியாது. இதன் மூலம் இந்த இன்ப்ளூயன்ஸா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் முடக்கப்படுகின்றன.


பன்றி காய்ச்சல் தொடர்பாக 1983 ஆம் அண்டு முதல் 2008 வரை 326 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்துகள் தவிர்த்து இந்நோய் கிருமியின் மரபணுவுக்கும் காப்புரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பொரும்பாலான காப்புரிமைகள் AstraZeneca (UK), Sanofi Pasteur (FR), Novartis, GlaxoSmithKline (UK), Solvay (BE) போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் உள்ளது.


இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு “Tamiflu” என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் Oseltamivir என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்து அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை ரோச்” (Roche) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் இந்திய கூட்டாளியான ஹெடெரோ” (Hetero) என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மற்ற நாடுகளில் இந்த மருந்துக்கான காப்புரிமை ரோச்நிறுவனத்திடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் இதுவரை இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்கப்படவில்லை. எனவே, ‘சிப்லா’, ‘ரான்பாக்ஸி’, ‘நேட்கோபோன்ற நிறுவனங்களும் இம்மருந்தை தயாரிக்கின்றன. ஆனால் இந்த மருந்தின் நேரடி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளோ ரோச் நிறுவனத்திடமிருந்தே வாங்கப்டுகிறது. எனவே இந்த மருந்திற்கான காப்புரிமை ரோச் நிறுவனத்திற்கு வழங்கப்படாவிட்டாலும், மறைமுகமாக ரோச் நிறுவன மருந்துகள் மட்டுமை நோயாளிகளை சென்றடைகின்றன.


இவ்வாறாக நோய்க்கு காரணமாக இருக்கும் கால்நடைகளையும், நோய்களைக் கடத்தும் வைரஸ் கிருமிகளையும், நோய்களுக்கான மருந்துகளையும் காப்புரிமை என்ற சூழ்ச்சி வலையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், மக்களின் நல்வாழ்வை கெடுப்பதன் மூலம் தங்கள் மரண வியாபாரத்தை பெருக்கிக் கொள்கின்றன. உலக வர்த்தக நிறுவனம் என்ற வலைக்குள் சிக்கிய ஏழை நாடுகளின் இறையாண்மையை பலியாக கேட்கும் இந்த சூழ்ச்சி வலையை பிரித்து எறிய வேண்டியது காலத்தின் கட்டாயம்.


-மு. வெற்றிச்செல்வன்.