புதன், ஜூலை 29, 2009

இந்திய அணு உலைகள் - மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் !

தமிழகத்தில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக, மின்சாரம் எப்பொழுது வருகிறது என்கிற தகவலை ஏறக்குறைய அனைவருமே கச்சிதமாய் தெரிந்து வைத்துள்ளனர். வீட்டில் மோட்டார் போட்டு தண்ணீரை ஏற்றுவது முதல் சிறுவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வரை, எல்லாமே அட்டவணையாக மாறிப் போனது. ஏதோ சென்னை போன்ற நகரங்களுக்கு இதில் விதிவிலக்காக கொஞ்சம் இரக்கம் காட்டப்படுவதாகத் தெரிகிறது. இந்தப் பின்னணியில்தான் கடந்த சில ஆண்டுகளாக, இந்தியப் பொது மக்கள் முதல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடும் விவாதங்கள் வரையிலும், பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் சூழல் வரையிலும் அனைத்திற்கும் ஒரு விஷயமே காரணம். அது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்.

Koodankulam
இந்த காலகட்டத்தில் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று, "இந்த ஒப்பந்தம் அடிமைத்தனமானது, இந்திய நலன்களும், உரிமைகளும் அமெரிக்க அடகுக் கடையில் அடமானம் வைக்கப்பட்டு விட்டன' என்று பேச முயன்றால் உடனே பலரிடமும் கிடைத்தது ஒரே பதில்தான்: “ஏங்க அப்ப மின்சாரமே உங்களுக்கு வேண்டாமா? நாட்டையே இருட்டாக வச்சிருக்கலாமுனு நினைக்கிறீங்களா? மின்சாரம் இல்லைனா எப்படி தொழில் பெருகும்-நாடுன்னா வளர்ச்சி வேண்டாமாங்க?'' அணு உலைகள் அமைத்து மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்கும் கனவு, இன்று சாமானியர்கள் வரை எட்டியுள்ளது என்பது இதிலிருந்து நமக்கு கிடைக்கும் செய்தி.

இன்னும் ஒருபடி மேலே சென்று, “அட இந்த அணு உலை எல்லாம் வெறும் முகமூடி தாங்க. உண்மையான நோக்கம் அணுகுண்டு தயாரிப்பதற்கான கச்சா பொருள் தயாரிப்புதாங்க'' என்றால் அதற்கும் உடனே பதில் வரும்: “என்னங்க நாடுன்னா அணு ஆயுதம் வேண்டாமா? அணுகுண்டு வச்சிருந்தாதான் நாலு பய நம்ம நாட்ட மதிப்பான், பயப்படுவான்.'' இது, சாமானியரின் குரல் என்றால், வேறு ஒரு முக்கிய நபரின் வாக்குமூலத்தையும் கேளுங்கள். மும்பை தாக்குதல்கள் நிகழ்ந்து நாடு ஒருவித கொதி நிலையில் இருந்த சம காலத்தில் பத்திரிகை பேட்டியாக இது அளிக்கப்பட்டது : “பாகிஸ்தானுடன் இன்றைய சூழ்நிலையில் போர் ஏற்பட்டால், அது கண்டிப்பாக ஓர் அணு ஆயுதப் போராகவே இருக்கும். பேய்களை ஒழிக்க வேறு வழி இல்லை. ஆனால் என்னால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். இந்த பேரழிவுக்குப்பின் ஒரு புதிய உலகம் மலரும். அது மிகவும் அற்புதமாகத் திகழும். அங்கே தீயவர்கள், தீவிரவாதிகள் இருக்க மாட்டார்கள்.'' இது வேறு யாரும் இல்லை, ஆர்.எஸ்.எஸ். பாசிச அமைப்பின் "சர்சங்சலக்' கே.எஸ். சுதர்சன் அளித்துள்ள பேட்டி.

1948 இல் அணு சக்தி கழகம் அமைக்கப்பட்டது. அது பின்னர் 1954இல் அணு சக்தித் துறையாக உயர்வு பெற்றது. அது முதல் அணு ஆற்றலை நன்மைக்கும் அமைதிக் கும் பயன்படுத்துவது என்கிற நோக்குடன் தன் பணியை அக்கழகம் தொடங்கியது. 1987இல் இத்துறை சார்பில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வோம் என்ற முழக்கம் பெரிதாக ஒலித்தது. 2000 ஆம் ஆண்டில் அது 45 ஆயிரம் மெகா வாட்டை எட்டிப் பிடிக்கும் என திருத்தப்பட்டது. இப்பொழுது அது மீண்டும் புதிய ஒப்பனையுடன் 2020 இல் 20 ஆயிரம் மெகாவாட் என்று கூறுகிறது. 1998-99 ஆம் ஆண்டில் நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 90 ஆயிரம் மெகாவாட். இதில் அணு உலைகளிலிருந்து பெறப்பட்டவை வெறும் 1840 மெகாவாட் மட்டுமே. வேறு வார்த்தைகளில் சொன்னால், அது 2 சதவிகிதம் மட்டுமே. 2000 இல் அது 3 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தற்பொழுது 14 அணு உலைகள் இயங்கி வருகின்றன. அதில் ஓர் உலை கூட அதன் அடைவு நிலையை எட்டியதில்லை. தாராப்பூர், கல்பாக்கம், நரோரோ, காக்ராபர், கைகா ஆகிய இடங்களில் தலா இரண்டு அணு உலைகளும் ராவத்பாட்டாவில் நான்கு உலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பல தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதால் தான் அடைவு நிலையை எட்ட இயலவில்லை என வெளிப்படையாகவே முன்னாள் கப்பற்படைத் தளபதி டாக்டர் பி.கே. சுப்பாராவ் தெரிவிக்கிறார். நாம் மிக எளிதாக இன்று அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம் மற்றும் காற்றாலைகளின் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவையும், அதற்கு அரசு செய்யும் செலவையும், அணு உலைகளுக்கும் அரசு செலவிட்டுள்ள பெருந்தொகைகளுடன் ஒப்பிட்டால் உண்மை விளங்கும். அணு உலைகளுக்காக மத்திய அரசு கணக்கிட முடியாத அளவுக்கு அரசு வருவாயை இழந்துள்ளது. இப்பொழுது அவர்கள் 2020 இல் 20,000 மெகாவாட் என்று சொல்லும்போதுகூட அதற்கான செலவை அறிவிக்க மறுக்கிறார்கள். ஆனால் நிபுணர்கள் அதனை 80 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடுகிறார்கள்.

இத்தனைப் பெரும் தொகையை அரசால் இன்று ஒதுக்க இயலாது என்பதற்காகவே 1962 இல் இயற்றப்பட்ட அணுசக்தி சட்டத்தை இப்பொழுது ஒரு பெரிய குழு திருத்தம் செய்யும் வேலையில் இறங்கி யுள்ளது. இந்தத் திருத்தம் மிகவும் ஆபத்தான நோக்கம் கொண்டது. முதன் முறையாக அணு உலைகள் அமைப்பதில் தனியாருக்கு அனுமதியளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்க, பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் அணு உலை அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி யுள்ளன. பிரான்சின் அர்வேரா (அணூதிஞுணூச்) நிறுவனம், மகாராட்டிர மாநிலத்தின் ஜைத்தா பூரில் ஆறு அணு உலைகளை அமைக்க இருக் கிறது. அந்த நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா, கஜகஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் சொந்தமான யுரேனிய சுரங்கங்கள் உள்ளன. கூடங்குளத்தில் மொத்தம் 8 அணு உலைகள் அமைக்க ரஷ்யா இசைவு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் ஹரிப்பூரில் அமெரிக்க நிறுவனம் அணு உலைகள் அமைக்க இருக்கிறது. இவை தவிர குஜராத்தில் மீதிவிதீ, ஒரிசாவில் பிட்டீ சொனாப்பூர், ஆந்திராவில் கோவாடா, மகாராட்டிரத்தின் மாத்பன் என இந்தியாவில் திரும்பிய பக்கம் எல்லாம் இனி அணு உலைகள்தான். மேற்குலக நாடுகள் கடந்த 25 ஆண்டுகளாக அணு உலைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, அவை அனைத்தையும் மெல்ல மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டும் பணியை தீவிரமாக செய்து வருகின்றன.

இத்தனை அணு உலைகளை அமைக்கும் அதே வேளையில், இவை அனைத்தையும் எத்தகைய ஜனநாயக நடைமுறையையும் பின்பற்றாமல், ஒரு சர்வாதிகார நடைமுறையில் மிகத் துரிதமாக அதிகார வர்க்கம் தன் மனம் போன போக்கில் செயல்படுகிறது. இதில் அரசியல் கட்சிகள் முதல் அப்பகுதி பொது மக்கள் வரை எவரும் ஆலோசிக்கப்படுவதில்லை. மக்கள் கருத்தாய்வு என்கிற நடைமுறைகள் கூட காவல் துறையின் தடிகளின் நிழலில் நடத்தப்படும் நாடகமாக மாறிப் போய் விட்டன. சுற்றுச் சூழல் மதிப்பாய்வு அறிக்கை என்பதுகூட, நாடாளுமன்றம் முதல் சாமானிய மக்கள் வரையிலும் நாட்டில் எவரிடமும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இந்த அணு உலைகள் குறித்த சாதாரண தகவல்களைக்கூட நீங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது. அத்தகைய ஆபத்தான சட்டமாக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிராக இந்த 1962 அணு சக்தி சட்டம் விளங்குகிறது.

ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டில் எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படாத சூழலில், மக்கள் இந்த தகவல்களைப் பெறுவது மிகவும் அவசியமாகிறது. அதனை அவர் களுக்கு அளிப்பது அரசின் ஜனநாயகக் கடமையே அன்றி வேறு அல்ல. இந்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு இப்படியான விஷயங்களில் எந்த அக்கறையும் இல்லை. இடதுசாரிகளைப் பொருத்த வரை, அவர்கள் அணு ஆயுதத்திற்கு எதிரானவர்களாகத் தங்களை முன்னிறுத்துகிறார்கள்; ஆனால் அணு உலைகள் அமைப்பதை ஆதரிக்கிறார்கள். இருப்பினும் அணு உலையை ஆதரிக்கிறவர்கள் கூட, அந்தப் பகுதியில் பூர்வக்குடிகளாக வாழ்பவர்களின் இடப்பெயர்வு, பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களில் தலையிடாதது பெரும் முரண்பாடாகவே இருக்கிறது.

கடற்கரை ஒழுங்குச் சட்டம், கடற்கரைப் பாதுகாப்பு சட்டம் என பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, கடற்கரையிலிருந்து 500 மீட்டர் பகுதிக்குள் மனிதர்கள் வசிப்பது, வணிக நடவடிக்கைகள் என அனைத்தையும் அது தடை செய்தது. ஆனால் இவற்றுக்கு நேர் மாறாக, தமிழகத்தில் இரு உலைகளும் கடற்கரை அருகிலேயே அமைந்துள்ளன. இப்பொழுது அமையவிருக்கும் பல அணு உலைகளும் இதே வகையில்தான் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த கடற்கரை சார் சட்டங்கள் உள்நோக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. கடல் சார் மக்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மேல்தட்டு மக்களுக்கும் சொகுசான தங்கும் விடுதிகள், கேளிக்கைத் தளங்கள் அமைப்பது என பெரும் அநீதி அரங்கேறி வருகிறது. மேலும், கிராமங்களை அப்புறப்படுத்திவிட்டு அங்குள்ள மோனோசைட், தோரியம், செர்டியம், கார்நெட், ரூடைல், இல்மெனைட் போன்ற தாதுக்களை, கனிமங்களை அறுவடை செய்யும் நோக்கம் இருப்பதாகவும் தெரிகிறது.

2004இல் தமிழகத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஏற்படுத்திய இழப்பு மிகக் கொடூரமானது. அதுவும் குறிப்பாக கல்பாக்கம் உலையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி எஸ்.பி. உதயக்குமார் "தெகல்கா' வார இதழில் "கதிர் வீச்சு சுனாமி' என்றொரு கட்டுரை எழுதினார். அது, ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உலகம் முழுவதும் உள்ள முக்கிய அணு விஞ்ஞானிகள் பலர் இது குறித்து கவலை தெரிவித்தனர். கல்பாக்கத்தில் செர்னோபில் அளவுக்கு ஒரு பெரும் விபத்து நடைபெறுவதற்கான பல வாய்ப்புகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இத்தகு ஆபத்துகளை எல்லாம் உணர்ந்த இந்திய பிரதமர், உடனே அணு சக்தி கழகத் தலைவர் அனில் ககோட்கரை விரைவாக கல்பாக்கத்துக்கு அனுப்பினார். வெளிநாட்டு நிபுணர்கள் அவசர கதியில் வரவழைக்கப்பட்டனர். ராணுவம் களமிறங்கியது. அங்கிருந்து 15 ஆயிரம் பேர் அசுர வேகத்தில் வெளியேற்றப்பட்டனர். அங்கு பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களில் 200–300 பேரை காணவில்லை என தகவல்கள் கசிந்தன. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் சிலர் கூட அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். கல்பாக்கம் தொலைபேசி நிலையம் மூழ்கிய தால் அனைத்து தொலைபேசிகளும் செயல் இழந்தன. தனியார் கைபேசிகள் மட்டுமே அப்பொழுது இயங்கின.

அங்கு பொதுவாக தரையில் குவிக்கப்படும் மென் கதிர் வீச்சுடைய கழிவுகள் அனைத்தையும் கடல் அலை அடித்துச் சென்று விட்டதாக விஞ்ஞானி வி.டி. பத்மநாபன் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கிறார். இந்த மென் கதிர்வீச்சு கழிவுகள் நிலத்தடி நீரிலும், கடலில் உள்ள மீன்கள் உண்டு, அதன் வழியாக மனித உடலை கதிர்வீச்சு வந்தடையும். இது, பலவித நோய்கள் முதல் விதவிதமான புற்றுநோய் வரை ஏற்படுத்த காரணமாக அமையும். ஏற்கனவே கல்பாக்கம் சுற்று வட்டாரத்தில் பல கிராமங்களில் உள்ள புற்று நோய்கள் குறித்து வி.டி. பத்மநாபன் பல ஆய்வுக் கட்டுரை களை தீவிர கள ஆய்வின் அடிப்படையில் எழுதியுள்ளõர்.

1953 இல் அமெரிக்காவின் அல்பன்-ட்ராயி என்ற இடத்தில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அங்கிருந்த அணு உலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் லிட்டர் கதிர்வீச்சுக் கழிவு மிசிசிப்பி ஆற்றில் கலந்தது. அது அந்த ஆற்றின் மொத்த நீளத்திற்கும் படுகைகளை நாசப்படுத்தியது. 1971இல் கூர்க்ஸ் அணு உலை முற்றாக தண்ணீரில் மூழ்கியது. இன்றும் கூட உலகில் 10 அணு உலைகளும், 50 அணுகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகளும் கடற்கரைகளில் மிகவும் ஆபத்தான சூழலில் உள்ளதாக "கிரீன் பீஸ்' அமைப்பு தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

மறுபுறம் ரஷ்யாவின் செர்னோபில் விபத்து, நவீன வரலாற்றின் முக்கிய நிகழ்வாக மாறிப்போனது. 1986 ஏப்ரல் 25 அன்று உக்கிரைன் பிரதேசத்திற்கே ஒரு துயர நாளாக நிலைத்து நிற்கிறது. விபத்து நடந்தவுடன் 93 ஆயிரம் பேர் இறந்தனர். அடுத்த சில ஆண்டுகளில் மட்டும் ரஷ்யாவில் 60 ஆயிரம் பேரும், ÷பலாரஸ் பகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் சடலங்களாக மாறினர். அங்கிருந்து 2000 மைல் தொலைவில் சுவீடன் நாட்டில் ஆயிரக்கணக்கான மான்கள் செத்து மடிந்தன. மொத்தம் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வரலாற்று நிகழ்வுகள் மனித இனத்திற்கே பல ஆழமான படிப்பிடினைகளை வழங்குகிறது. ஆனால் அரசதிகாரம் மட்டும் இவைகளிலிருந்து பாடம் கற்க மறுக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்ட நாடுகளே பல விபத்துக்களை சந்திக்க நேரும்பொழுது, மூன்றாம் உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் நிலையைப் பற்றி யோசிக்கக்கூட மனம் தயங்குகிறது. இவற்றின் அடிப்படையில்தான் குறைந்தபட்சமாக பாதுகாப்பு சார்ந்த ஏற்பாடுகளையேனும் முறையாக செய்ய வேண்டிய தேவை எழுகிறது.

பொதுவாக, ஓர் அணு உலையின் மய்யக் குவியலிலிருந்து (Stack) 1.6 கிலோ மீட்டர் வரையிலான இடத்தை விலக்கல் பகுதி (Exclusion Zone) என்கிறார்கள். இந்தப் பகுதியில் உலை தவிர்த்த வேறு எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது. அதே போல் 5 கிலோ மீட்டர் வரையிலான பகுதியை பாதுகாப்பான பகுதி (Sterile zone) என்கிறார்கள். இந்தப் பகுதி மனிதர்கள் வசிக்க லாயக்கற்றது. கதிர்வீச்சு ஆபத்திலிருந்தும் ஒரு விபத்துச் சூழலில் உடனே மக்களை வெளியேற்ற இப்படியான பல பாதுகாப்பு நடை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் இப்படியான எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் அணு உலையிலிருந்து 300-400 மீட்டர் தொலைவில்கூட வசிப்பிடமாக தற்காலிக கொட்டகைகள் அமைத்து வாழ்கிறார்கள் தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் வழியாக சென்றவர்களுக்கு அது துல்லியமாக விளங்கும். அருகில் உள்ள கூடங்குளத்தின் மக்கள் தொகை 25 ஆயிரம், இடிந்த கரையின் மக்கள் தொகை சுமார் 15 ஆயிரம். இது தவிர மனவாளக்குறிச்சி, சின்னவிளை, பெரியவிளை, மந்தைக்காடு புதூர், பரப்பற்× என பல கிராமங்கள் அணுமின் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளன. கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். இதில் விவேகானந்தரும் திருவள்ளுவரும் விலக்கல்ல.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அடிமை சாசன ஒப்பந்தத்தால், இனி இந்திய அணுசக்தி துறை தனது தலைமை அலுவலகத்தை வாஷிங்டனுக்கு மாற்றியாகிவிட்டது. கடும் விதிமுறைகளில் இனி நம்மால் உண்மையாகவே ஓர் அணுவைக்கூட அசைக்க இயலாது. இனி ஒரு சிறு அணு சோதனையை நடத்தினால்கூட, மொத்த அணு உலைக்கான எரிபொருளும் நிறுத்தப்படும். கழிவுகளை சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என பல சுருக்கு கயிறுகள் நம்மை இறுக்கவே செய்கின்றன. இருப்பினும் இந்தியா வசம் இப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயார் நிலையில் உள்ளன. அவை ஏவுகணைகளில் பொருத்தப்படாமல் பிரித்துதான் வைக்கப்பட்டுள்ளனவாம். இது தவிர்த்து 1000 அணு குண்டுகளுக்கான கச்சா பொருளை இந்தியா தன் கைவசம் வைத்துக் கொண்டுதான் அணு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதாக சிலர் மார்தட்டிக் கொள்கிறார்கள்.

இந்த அணு ஆயுத அந்தஸ்தை (?) அடைய நாம் எத்தகைய விலைகளை கொடுத்துள்ளோம். நாடு முழுவதிலும் யுரேனிய சுரங்கங்கள் உள்ள பகுதிகள்-சுத்திகரிப்பு ஆலைகள், அணு உலையை சுற்றியுள்ள பகுதிகள் என நாடெங்கும் விளிம்பு நிலை மக்கள் லட்சக்கணக்கில் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். புற்று நோய், உருச்சிதைந்த குழந்தைகள் பிறப்பது, எந்த அறிகுறியும் இல்லாமல் கருச்சிதைவு, குழந்தைகள் வித வித ஊனங்களுடன் பிறப்பது என சகிக்க முடியா துரயங்களும் அவலங்களும் முடிவற்று நீள்கின்றன. இதைவிட முக்கியமான செய்தி என்னவென்றால், அணு உலை விபத்து அல்லது கதிர் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்களுக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகம் முதல் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வரை எவரும் இழப்பீடு வழங்குவதில்லை. அணு தொடர்புடைய அனைத்தும் மர்மமாகவே உள்ளன.

இந்தச் சூழலில்தான் 2009 சூன் மாதம் 4, 5, 6 நாட்களில் கன்னியாகுமரியில் ஒரு தேசிய அளவிலான கலந்தாய்வு மற்றும் மாநாடு நடைபெற்றது (National Convention on The Politics of Nuclear Energy and Resistance). இதனை "அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் இயக்கம்' மற்றும் தில்லியில் உள்ள "அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் அமைப்புக்கான கூட்டமைப்பு' இணைந்து ஒழுங்கமைத்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு எதிர்ப்பு இயக்கங்கள், விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள், போராளிகள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கமித்தனர். அணு ஆயுதம், அணு ஆற்றல் தொடர்புடைய பல்வேறுபட்ட விவாதங்கள் நடைபெற்றன. பல கட்டுரைகள் அங்கு வாசிக்கப்பட்டன. யுரேனியம் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படுவது, சுத்திகரிக்கப்படுவது, உலையில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது முதல் கழிவை சுத்திகரிப்பது வரையிலான பல கட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகள், நடைமுறை குளறுபடிகள் குறித்து அறிஞர்கள் விவாதித்தனர். கன்னியாகுமரி தீர்மானம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது.

Nuclear waste
கூடங்குளம் அணு உலையால் தமிழகம் மட்டுமின்றி, கேரளாவின் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்பட உள்ளன. இலங்கை மற்றும் சில தெற்காசிய நாடுகள் வரை இதன் பாதிப்புகள் பரவ வாய்ப்புள்ளன. எனவே, முன்னெப்போதைக் காட்டிலும் விழிப்படைய வேண்டிய தருணமிது; அல்லது மறைந்த சூழலியலாளர் அசுரன் கூறியது போல் தமிழர்களே பிணமாகத் தயாராகுங்கள்! 

ரஷ்யாவிலிருந்து கூடங்குளம் அணு உலைக்கான எரிபொருள் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தது. அங்கிருந்து சாலை வழியே அது கூடங்குளம் அணு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கூடங்குளம் வரையான இந்தப் பாதை நெடுகே அடர்த்தியான கிராமங்கள் உள்ளன. இவ்வாறு செரிவான யுரேனியத்தை கொண்டு செல்லும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் சாலையின் இரு பக்கங்களிலும் 100 மீட்டர் தொலைவுக்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகுதான் இந்த யுரேனியம் கொண்டு வரும் வாகனம் செல்லும். இது ஒரு பெரும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும். மக்கள் தொடர்ந்து இது குறித்து அறிவுறுத்தப்படுவார்கள். பொதுவாக குழந்தைகளை இன்னும் கூட அதிக தொலைவுக்கு கொண்டு செல்வது நடைமுறை. ஆனால் அப்படி எதுவும் இங்கு நடைபெறவில்லை. அந்த வாகனம் நாகர்கோவிலை கடக்கும்பொழுது, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனை ஒரு பெரிய வாகனம் என்று பலரும் வேடிக்கைதான் பார்த்தார்கள். எல்லோருக்கும் ஒரு நல்ல அளவு கதிர்வீச்சு "டோஸ்' இலவசமாய் கிடைத்ததுதான் மிச்சம்!

மேற்கண்ட இந்த பீப்பாய்களில் உள்ளது எல்லாம் எரிக்கப்பட்ட ஆற்றல் இழந்த யுரேனியம். அணு உலையிலிருந்து வெளியேறிய இவை அடுத்த 1 லட்சம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். கூடங்குளத்திலிருந்து வெளியேறும் கழிவுகளை கையாளுவதற்கான திட்டம் உள்ளதா என்கிற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. ஆனால் அந்தக் கழிவுகள் ரஷ்யா கொண்டு செல்லப்படும் என்கிறது அணு சக்தி துறை. நடக்குமா?

-அ. முத்துக்கிருஷ்ணன்

நன்றி தலித் முரசு - ஜூன் 2009, கீற்று இணையதளம்

திங்கள், ஜூலை 27, 2009

நவீன நீர்க் கொள்ளையர்கள்!

இந்தியாவின் விவசாயப் பாரம்பரியம் சிந்து நதி நாகரிகத்துடன் தொடர்புள்ளது. அண்மைக்காலக் கல்வெட்டு எழுத்தியல் ஆய்வுப்படி அது திராவிட பாரம்பரியம் என்றும் சொல்லப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துநதி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி உணவை உற்பத்தி செய்து, நூலில் நெய்யப்பட்ட உடை தரித்து வாழ்ந்த இந்தியத் திராவிடர்கள் நாகரிக மிதப்பில் வாழ்ந்தபோது, ஐரோப்பிய மனித இனம் காட்டுமிராண்டிகளாகவும், நரமாமிசம் உண்போராகவும் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே தலைசிறந்த நீர்நிர்வாகத்தை இந்திய மன்னர்கள் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. ""வெள்ளாளர்'' என்ற சாதிப்பெயர் உண்மையில் ஒரு தொழில்பெயரே. வெள்ளத்தைத் தடுத்து விவசாயம் செய்யக்கூடிய தொழில்நுட்ப விளைவால்தான் மேட்டில் ஓடும் நதியைக் கால்வாய் மூலம் ஒரு ஏரியில் சேமித்து நிறைந்ததும், பள்ளத்தில் உள்ள அடுத்த ஏரிக்கு வடியவிட்டுப் பின் அடுத்த ஏரி, அடுத்த ஏரி என்று ஏரிகளின் சங்கிலிப்பிணைப்பு உருவானது.

உதாரணமாக மதுராந்தகம் ஏரி மிகப்பெரியது. அந்த ஏரிக்கு சுமார் மேற்கு திசை மேட்டுப் பகுதியில் உள்ள 20 ஏரிகள் (சிறியவை) நீர் வழங்குகின்றன. சில ஏரிகள் இயல்பான பள்ளங்கள். சில ஏரிகள் மனிதனால் வெட்டப்பட்டவை. தமிழ்நாட்டில் ஏராளமான ஏரிகள் சோழர்காலம் - பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகச் செப்பேடுகள் கூறும். நீர்த்தேக்க வரலாற்றில் கரிகாலன் கட்டிய கல்லணை, தாஜ்மகாலைவிட உயர்வான உலக அதிசயம். வெள்ளநீர்த் தடுப்புக்குக் கொள்ளுமிடம் கொள்ளிடமாவதெல்லாம், கல்லணையின் பழைய கட்டுமானங்களைக் கவனித்தால் புரியும். காவிரி முக்கொம்பில் பிரிந்து, ஸ்ரீரங்கத்தை ஒரு தீவாக்கி கல்லணையில் கலந்து, கொள்ளிடமாகவும் வெண்ணாறாகவும் காவிரி வெள்ளம் திருப்பிவிடப்படுகிறது.

1925 காலகட்டத்தில் காட்டன் துரையால் கல்லணையில் வெண்ணாறிலிருந்து புது ஆறு வெட்டப்பட்டு புதிய டெல்டாப் பகுதி தஞ்சை-ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை-பேராவூரணி-அறந்தாங்கி வட்டங்களில் உருவாகி, தஞ்சை நெற்களஞ்சியம் விரிவானது. ஒரு அகண்ட காவிரி பழைய டெல்டாப் பகுதியான திருவையாறு - சுவாமிமலை - குடந்தை - மயிலாடுதுறை கடந்து பூம்புகாரில் ஒரு சிற்றாறாகிக் கடலில் கலக்கிறது.

மேட்டிலிருந்து பள்ளத்திற்கு வரும் நதிநீரை ஆங்காங்கே தேக்கி முழுப்பயனையும் பெற்ற பெருமை இன்று நேற்றல்ல, சங்க காலத்திலிருந்து இன்றும் நீடித்து வருகிறது.

நெல் விளைந்த தஞ்சைத் தரணியில் மக்காச் சோளமும் கரும்பும் ஊடுருவியுள்ளது. நஞ்சையைப் புஞ்சை உயர்த்தித் தென்னை நடவும் செய்கின்றனர். இந்தப் பிரச்னை ஒருபுறம் இருக்கட்டும். நமது பாரம்பரிய நீர் நிர்வாகத்தில் என்ன குறை உள்ளது? இப்போது இந்தியா முழுவதும் ஏ.சி. அறையில் அமர்ந்தபடி விவசாயம் - நீர் நிர்வாகம் செய்யும் மேல்நிலை விஞ்ஞானிகளின் புலம்பல் எதுவெனில் "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'. ஆங்கிலத்தில் ‘Water Shed’ தமிழில் "நீர் வடிமுனை மேம்பாடு'.

இது இந்தியாவுக்கு வந்த கதை தெரியுமா?

1980-களில் வேளாண்மை அமைச்சரகச் செயலாளராக இருந்த ஒரு வேளாண் விஞ்ஞானி அமெரிக்காவில் உள்ள டென்னசி மலைப்பள்ளத்தாக்கைப் பார்வையிட்டபோது அங்குள்ள மலைச்சரிவு வடிகால் மழை சேமிப்புக் கட்டமைப்புகளைக் கவனித்து அதே முறையை இந்தியாவில் அறிமுகம் செய்ய விரும்பினார். விரும்பியதோடு நிற்கவில்லை. செயல்படுத்தியும் விட்டார்.

அமெரிக்காவில் உள்ள புவியியல் - பருவச் சூழ்நிலையில் தொடர்மழைப்பொழிவு உள்ள சூழலுக்கு அது சரி. இந்தியாவில் உள்ள வறட்சி சூழ்நிலைக்கு ஆண்டில் மூன்றுமாதம் மட்டும் சுமார் 100 மணிநேர மழைப்பொழிவுள்ள இடங்களுக்கு இந்தக் கட்டுமானங்கள் பொருந்தாது. எதற்குத்தான் அமெரிக்க மாதிரிகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு விவஸ்தையே இல்லை. அமெரிக்கா என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற தப்பெண்ணம் வளர்ந்துவிட்டது. இந்த டென்னசி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு மாதிரிகளை 40 முன்னோடித் திட்டங்களாகத்தான் இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இத்திட்டங்கள் வெற்றியுடன் செயல்பட்டனவா என்பதை ஓராண்டு முடிவில் மதிப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யாமலேயே மேலும் 2000 வட்டாரங்களில் உலக வங்கி உதவியுடன் மறு ஆண்டில் செயல்படுத்தினார்கள்.

காலம் கடந்த நிலையில் விவசாய விஞ்ஞானிகள் மறுப்புத் தெரிவித்தாலும், உலக வங்கிப் பணத்தை அபேஸ் செய்யும் வாய்ப்பு போய்விடுமே என்று அரசு அம்மறுப்புகளை நிராகரித்துவிட்டது. இதனால், "வாட்டர் ஷெட்' ஒரு தொழிலாகிவிட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், பஞ்சாயத்துத்தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை / ஆகியவர்கள், இத்தொழிலைச் செய்து வருகிறார்கள். மழைநீரை எந்த அளவு சேமித்தார்கள்?

இதற்கான கட்டுமானச் செலவுக்கு ஏற்ப மழை அறுவடை லாபமா என்ற கேள்விகள் முக்கியமில்லை. இதில் உலக வங்கிப் பணத்தைச் சுடுவதில்தான் தொழில் திறமை உள்ளது. மழைநீர் சேமிப்பு / நீர்வடிப்பகுதி மேம்பாடு போன்ற "வாட்டர் ஷெட்டுகள்' யாவும் அமெரிக்க இறக்குமதி. ஆனால், இதில் நகைப்புக்கு இடமான விஷயம், அமெரிக்கா இந்திய மாதிரியைப் பின்பற்றுவதுதான்.

அமெரிக்காவில் சில பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய மழைநீர் சேமிப்பு நீர் ஆதாரங்களான ஏரி நீர்ப்பாசனத்தின் "வாட்டர் ஷெட்டுகளை' ஆய்வு செய்து, மழை நீர் சேமிப்புக்கு அம்மாதிரிகளைச் சிறந்த உத்திகள் என்று போற்றிக் கண்காட்சிகளாக வைத்துள்ளதுடன், அவற்றைப் பின்பற்றவும் திட்டமிட்டுள்ளனர். உதாரணத்திற்கு டெக்சாஸில் உள்ள ஏ.எம். பல்கலைக்கழகத்தில் இம்மாதிரிகளைப் பார்க்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பொதுப்பணித்துறை - வேளாண் பொறியியல் துறை டென்னசிப் பள்ளத்தாக்கு மாதிரியைச் சிறப்பாகக் கருதுகிறது.

அமெரிக்காவில் உள்ள நிபுணர்கள் நமது மாதிரிகளை உயர்வானது என்று கூறியும், நமக்குப் புத்தி வரவில்லை. நமது பாரம்பரிய நீர்ப்பிடிப்பு உத்திகளை நமது பொறியாளர்களோ, விஞ்ஞானிகளோ ஒரு நுண்ணறிவுடனும் அக்கறையுடனும் கவனிப்பதில்லை. அப்படியெல்லாம் கவனித்தால் நம்மவர்களுக்கு அமெரிக்கப் பயணங்கள் ஓசியில் கிட்டுமா? "வாட்டர் கேட்டை' நினைத்துக் கொண்டு அமெரிக்காவின் "வாட்டர் ஷெட்டு மாதிரிகளை' இறக்குமதி செய்வதன் மூலம், இந்திய விஞ்ஞானிகளும், இந்தியப் பொறியாளர்களும் வாழ்க்கையில் வெளிச்சம் பெறுகிறார்கள்.

அதுபோதுமே! இது ஒருபக்கம். நவீன நீர்க்கொள்ளையர்கள் யார்? அவர்களிடமிருந்து இவர்களுக்குப் பங்கு வருகிறதா? இந்தக் கேள்விகளுக்கு உலக வங்கியின் வாட்டர் ஷெட் திட்ட ஒருங்கிணைப்பாளர்களால்தான் பதில் கூற முடியும். இருப்பினும் உலக வங்கியின் வடிமுனைப் பகுதிப் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து, நிஜமாக என்னதான் நடக்கிறது என்று கண்டறியும் பணியை மேற்கொண்டுவரும் "ஸ்வராஜ்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் குமாரராஜாவை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரும் ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து விலகியவர் என்ற முறையில், அவர் கூறிய செய்திகள் திடுக்கிட வைத்தன. "சேது சமுத்திரத் திட்டத்தில் தூர்வாரிய மண்ணை எவ்வாறு அளவிட முடியாதோ அதுபோலவேதான் இதுவும்' என்ற பீடிகையுடன் அவர் கூறியபோது, ""செலவு செய்ததாகக் கணக்கு இருக்கும். ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட்டு ஒரு கணக்கு. குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு ஒரு கணக்கு'' என்று பேச்சைத் தொடங்கினார்.

"தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான்'. எதில்தான் கையாடல் இல்லை? அதைவிடுங்கள். ஏன் இந்த உலக வங்கி, இவ்வளவு ஊழல் இருந்தும்கூட, விடாப்பிடியாக வாட்டர் ஷெட்டைப் பிடித்துக் கொள்வது ஏன்? இதற்கு நான் பெற்ற பதில்தான் இக்கட்டுரைத் தலைப்பு.

இந்த வாட்டர்ஷெட் அல்லது நீர்வடிப்பகுதி மேம்பாடு என்பதும் மழைநீர் சேமிப்பு என்பதும் ஒன்றுதான். குடிநீர்த்திட்டம் என்றாலும் சரி கூடுதல் பாசன வசதி என்றாலும் சரி போர் போடுவது அதாவது ஆழ்துளைக் குழாய்களை இறக்குவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு ஆழ்துளைக் குழாய்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும், மேல்மட்ட நீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் கொள்கை. உலக வங்கியின் கொள்கை அதுவல்ல. பாசனப் பகுதியை விஸ்தரித்தல். ஒருபோகம் விளையும் நிலத்தில் பாசன வசதியளித்து இருபோகமாகவோ, மூன்று போகமாகவோ மாற்றுவது. நீர்வடி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் கொள்ளளவு உயர்ந்த பின்னர் ஆழ்துளைக்குழாய் இறக்கும் பணியும் அதிகமாகும்போதுதான் பாசன நிலம் கூடுதலாகும்.

பாசன நிலம் கூடும்போது உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யாமல், வர்த்தக நிறுவனங்கள் விரும்பும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்து, பன்னாட்டு விதை நிறுவனங்களையும் ஏற்றுமதியையும் உயர்த்துவது மறைமுகமான நீர்திருடல். நேரடியான நீர்த்திருட்டு என்பது குடிநீர்த்திட்டம் என்ற பெயரில் பெப்சி, கோகோ கோலா போன்ற மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு வாட்டர் அளிப்பதும் நவீனமான அல்லது நாகரிகமான நீர்க் கொள்ளை.

பெரிய அளவில் பெப்சி, கோகோ கோலா கம்பெனிகளின் அக்வாஃபினா, கின்லே போன்றவை ஒருபுறம். உள்ளூரிலேயே மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் போன்றவையும் ஆங்காங்கே மினரல் வாட்டர் உற்பத்தித் தொழில் நிலையங்களை அமைத்துள்ளனர். பல சுதேசித் தனியார் நிலையங்களும் மினரல் வாட்டர் உற்பத்தி - விற்பனையில் இறங்கிவிட்டனர். அரசாங்கக் குழாய் வழிவரும் குடிநீர் பெரும்பாலும் குளியலுக்கும், துணி துவைக்கவும் பயனாகிறது. நான் வசிக்கும் சின்னாளப்பட்டி போன்ற சின்ன ஊரில்கூட குடிநீர் வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. 1 லிட்டர் புட்டி முதல் 25 லிட்டர் ரிஃபில் வரை நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. ஆகவே உலக வங்கியின் மூலதனம் ""வாட்டர் ஷெட்'' என்ற பெயரில் மினரல் வாட்டர் விற்பனைக்கு ஊக்கம் அளிப்பதாயுள்ளது.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று பாரதியார் கேட்டால், "1 லிட்டர் அக்வாஃபினா மினரல் வாட்டர் குடித்தால் தணிந்துவிடும்' என்கிறது உலக வங்கி. ""நமது தேசபக்தியைச் சற்று மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு, "எல்லாம் உலகமயமடா' என்ற தாரக மந்திரத்தை தினம் நூறு தடவையாவது கோஷமிட்டு, அமெரிக்காவை அணைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்று நமது பிரதமர் கூறுகிறார். பாரதியார் புத்தகத்தைக் குப்பையில் போட்டுவிட்டு, "அடிமைவாழ்வே ஆனந்தமடா' என்று நாம் ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம். வாழ்க பாரதம்!

-ஆர். எஸ். நாராயணன்

நன்றி: தினமணி 23-07-2009

வெள்ளி, ஜூலை 24, 2009

என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?


தரைவாழ் உயிரினங்களில் மிகப் பெரியதும், பல்வேறு அல்லல்களுக்கு உள்ளாகி நாளுக்கு நாள் அழிந்து வருவதுமான யானைகளைப் பற்றிய செய்திகள் மனிதகுல வரலாறு நெடுகிலும் மண்டிக் கிடக்கின்றன. மன்னராட்சிக் காலங்களில் பல்லாயிரக்கணக்கில் போர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது முதல், இன்றைய கணிப்பொறி காலம் வரை யானைகள் மனித குலத்துக்குப் பல்வேறு வகையில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றன.

யானைகளைப் பாதுகாப்பதைக் காட்டிலும் அவற்றை எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டு பிழைக்கலாம் என்பதே மனிதர்களின் சிந்தனையாக இருக்கிறது. ஆசி வழங்கும் கோயில் யானைகள்; வித்தை காட்டும் சர்க்கஸ் யானைகள்; வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களைத் தூக்கிக் கொண்டு வந்து அதை லாரியில் ஏற்றிக் கொண்டிருக்கும் முகாம் யானைகள்; முகாம் யானைகளுக்குப் பயிற்சி கொடுக்கவும், அடங்காத யானைகளை அடக்கவும் பயன்படுத்தப்படுகிற ‘கும்கி’ யானைகள்; மனிதர்களின் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்கிற கவலையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டு யானைகள் என்று யானைகளில் எத்தனையோ பிரிவுகள்!


மனிதர்களின் கைகளில் சிக்காத காட்டு யானைகள் எந்த அளவுக்கு நிம்மதியாக வாழ்கின்றன என்பது தெரியவில்லை. ஆனால் பல்வேறு விதங்களில் மனிதர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான யானைகளில், எந்த யானையும் நிம்மதியாக இல்லை என்பது கண்கூடான உண்மை. முகாம்களில் உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு யானைக்கும், ஒரு நாள் உணவாக 100 கிராம் வெல்லம், 5 கிலோ கொள்ளு, 15 கிலோ ராகி ஆகியன உணவாக வழங்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.இதில் பெண் யானைகள், கருவுற்ற யானைகள், மற்றும் குட்டி யானைகளின் உணவு தொடர்பான அளவு விவரங்கள் மாறுபடுகின்றன. ஆனால் முகாம்களில் இல்லாமல் மனிதர்களுக்கிடையில் பல்வேறு தொழில் செய்து ஒடுங்கிக் கிடக்கும் எல்லா யானைகளுக்கும் இந்த அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அடர்ந்த காடுகளில் விருப்பம்போல் கூட்டம் கூட்டமாக நடமாடி, மரங்களின் பசுந்தழைகளைத் தின்று, பெரிய பெரிய காட்டாறுகளில் நீர் குடித்து அங்கேயே விளையாடி மகிழும் உடல் அமைப்பு கொண்ட யானைகள், அருகம்புல்லும் முளைக்க வாய்ப்பில்லாத நகரத்துச் சூழலில் எப்படி வாழ முடியும் என்பது சமூகத்தின் கவலைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது.

காடுகளில் வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு காட்டைவிட்டு வெளியேறுகிற பல யானைகள் அருகில் உள்ள விளைநிலங்களைத் துவம்சம் செய்து பயிர்களைத் தின்று பசியாறிச் செல்கின்றன. காடுகள் அழிக்கப்படுவது; யானையின் வாழிடங்கள் காப்பி, தேயிலை போன்ற விளை நிலங்களாக மாற்றப்படுவது; தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் காட்டு யானைகளின் வாழ்வுரிமை தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. ஆசிய யானைகளில் 50 விழுக்காடு தென்னிந்தியாவில் வாழ்கின்றன. இத்தகைய இயற்கையின் கொடை நமக்கு வாய்த்திருந்தாலும் இது குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியவில்லை.

1998ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 28 யானைகள் ரயிலில் அடிப்பட்டுச் செத்துப் போயின. இவற்றில் 15-11-2001ஆம் நாள் அசாம் மாநிலம் தின்சூக்கியா மாவட்டத்தில் ஒரே ரயிலில் 7 யானைகள் அடிப்பட்டு மாண்டன; 1980 முதல் 1986 வரை ஆறு ஆண்டுகளில் 100 ஆண் யானைகள் தந்தங்களுக்காகக் கொல்லப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட யானைகள் விஷ உணவை உண்டு மாண்டுபோய் விட்டன என்று வனத்துறையின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது தவிர காடுகளின் ஓரம் அமைக்கப்படுகிற மின்சார வேலியில் சிக்கிப் பல யானைகள் மாண்டு கொண்டிருக்கின்றன. யானை வாழிடங்கள் பல்வேறு வகையில் ஆக்கிரமிக்கப்படுவதை வசதியாக மறந்துவிட்டு, யானைகளின் அட்டகாசம் பற்றியே மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1977ஆம் ஆண்டு மேலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, யானைகளை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் யானைகள் பல்வேறு வகையில் அழிக்கப்பட்டு வருவதைக் கருத்திற் கொண்டு 1992ஆம் ஆண்டு யானைகள் பாதுகாப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அத்திட்டத்தை உரிய வகையில் செயற்படுத்துமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இப்பத்தாண்டுத் திட்டம் (1992 - 2002) நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தியபோது யானைகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாக வனத்துறை பட்டியலிட்டிருக்கிறது. அதன்படி 1991இல் 3260ஆக இருந்த தமிழக யானைகளின் எண்ணிக்கை 2001இல் 3635 ஆக உயர்ந்துள்ளது. முகாம் யானைகளும், சர்க்கஸ் மற்றும் கோயில் யானைகளும் காட்டு யானைகளின் கணக்கில் சேர்க்கப்படவில்லை.யானைகள் பாதுகாப்பில் 1977ஆம் ஆண்டு சட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்். ஆனால் எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் யதார்த்தம் அவ்வளவு நிறைவாக இல்லை. யானையை வைத்து மனிதர்கள் பல்வேறு விதங்களில் பிழைக்கும் நிலைக்கு முதலில் தடைவிதிக்கப்பட வேண்டும். யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது, மனிதர்களுக்காக உழைக்கும் யானைகளையும் உள்ளடக்கியதாக இருந்தால்தான் முழுமை பெறும். மனிதர்களால் கைது செய்யப்பட்டவை போல வாழ்ந்து கொண்டிருக்கும் யானைகளை விடுதலை செய்து மீண்டும் அவற்றை இயற்கையின் வனச் சூழலிலேயே வாழ வைப்பதுதான் உண்மையிலேயே யானை நலச் சட்டங்களை மதிப்பதாக அமையும்.

யானைகள் வாழ்வதற்கேற்ற வெப்ப மண்டலக்காடுகளை நாம் பெற்றுள்ளதால் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இயற்கை நமக்கு அளித்திருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

யானை என்பது நமது இயற்கை வளத்தின் அடையாளமாகும். இயற்கையான வனவெளிகளில் யானைகளைப் பல்லாயிரக் கணக்கில் வளர்ப்பது எனத் திட்டமிட்டுச் செயலாற்றினால், அதன் விளைவாகக் காடுகள் செழிக்கும். வளமான காடுகள்தான் மழை உள்ளிட்ட இயற்கையின் பல்வேறு கொடைகளை நமக்கு வழங்கும்.

- ஜெயபாஸ்கரன்

திங்கள், ஜூலை 20, 2009

அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்

பவளப்பாறகள் அழிந்து போவதற்கான காரணங்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. புவிவெப்பமடைவதும் கடல்நீரில் அமிலத்தன்மை கூடுவதும் பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கியமான காரணங்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பவளப்பாறைகளை அழியாமல் காப்பது எப்படி என்பதும்கூட இந்த ஆய்வுகளில் அடங்கும்.

Pavalapaarai
பவளங்கள் என்பவை மிகச்சிறிய உயிரினங்கள். மரபியல் ரீதியாக ஒத்த உருவமுடையவை. இவை தாவர உயிரிகளை உண்டு வாழக்கூடியவை. பவளங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக்கூடியவை. வளர்சிதைமாற்றத்தின்போது கால்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருளை இவை சுரக்கின்றன. கால்சியம் கார்பனேட் படிவுகளின்மீதுதான் பவளங்கள் அமர்ந்துகொள்கின்றன. இவ்வாறு தோன்றும் படிவுகள் நீண்டகாலம் நிலைத்து பவளப்பாறைகளாக உருவெடுக்கின்றன. இந்த பவளப்பாறைகளில் சுமார் 4,000 வகையான கடல்வாழ் உயிரினங்கள் குடியிருக்கின்றன.

பவளங்கள் தம்முடைய உணவை தாமே தயாரித்துக் கொள்வது இல்லை. பவளங்களுக்குள் வாழும் ஆல்காக்கள் தங்களுடைய பச்சையத்தின் உதவியாலும் சூரிய ஒளியின் உதவியாலும் ஒளிச்சேர்கை செய்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த ஆல்காக்களின் குளுக்கோஸ் உற்பத்தி செய்யும் திறன் அபாரமானது. ஆல்காக்கள் உற்பத்திசெய்யும் குளுக்கோஸை உண்டு பவளங்கள் செழிக்கின்றன. மாறாக, பவளங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் கழிவுகள் ஆல்காக்களுக்கு உணவாக பயன்படுகிறது. கடல் நீரில் நைட்ரஜன் கிடைப்பது அரிது. பவளங்கள் வெளிப்படுத்தும் கழிவுகளில் இருந்து ஆல்காக்களுக்கு தேவையான நைட்ரஜன் கிடைப்பது இயற்கையின் விந்தைகளுள் ஒன்று.,

மனித உடலைப்போன்றே பவளங்களிலும் சிக்கலான மரபியல் கூறுகள் உள்ளன. சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்த மரபியல் கூறுகளை பாதிப்படையச் செய்கின்றன. 250 மில்லியன் ஆண்டுகள் இந்த பவளப்பாறைகள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்து விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுவரும் சுற்றுப்புற மாற்றங்களால் இந்த பவளப்பாறைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. இவற்றுள் பவளப்பாறைகள் வெளுக்கத் தொடங்கியதும் அடக்கம். நெடுங்காலம் ஆபத்தின்றி வாழ்ந்துவிட்ட பவளப்பாறைகளுக்கு மனிதன் எதிரியாகிப் போனது அவமானகரமான செய்தி அல்லவா?

புவி வெப்ப மாறுபாடுகளால் பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கி வருவதாக ஓரிகான் மாகாண பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் வர்ஜீனியா வீஸ் கூறுகிறார். பவளப்பாறைகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் ஏராளம். கடல்நீரின் வெப்பநிலை உயர்வு, கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தம், வண்டல் படிவு, அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றால் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. ஏறத்தாழ 20 சதவீத பவளப்பாறைகள் ஏற்கனவே அழிந்துவிட்டதாகவும், இன்னும் 24 சதவீத பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கியிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடல்நீரின் அமிலத்தன்மை கூடுவதால் அடுத்த நூற்றாண்டில் பவளப்பாறைகள் உருவாவது 50 சதவீதமாக குறையும் என்றும், இருக்கும் பவளப்பாறைகளும் அமிலத்தன்மையால் கரையத்தொடங்கும் என்றும்கூட ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

-மு.குருமூர்த்தி

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/05/090528142819.htm

Courtesy: http://www.keetru.com

வியாழன், ஜூலை 16, 2009

பசுமைக்கு ஏற்ப காதல் பாட்டு


அடர்ந்த காடுகளில் அதிர்வெண்குறைந்த ஒலி எளிதாக பரவும். பறவைகளின் சுற்றுப்புறத்தில் மரங்கள் அடர்த்தியாக வளரும்போது அவை காதல் கீதத்தின் அதிர்வெண்ணையும் மாற்றிக்கொள்வது விந்தையானது. வரைமுறை இல்லாது மரங்களை வெட்டும்போது வனங்கள் அழிந்துபோகின்றன.
புவிவெப்பமடைவதும்கூட காடுகளின் அழிவிற்கு ஒரு காரணம்தான். அழிந்துபோன காடுகளுக்கு புத்துயிர் அளிக்கும்போது அங்கே பசுமை மலரத் தொடங்குகிறது. உயிரினங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றன.

பச்சைப்பசேலென்று மரங்கள் நெருக்கமாக செழிக்கத் தொடங்கும்போது பறவைகளின் குரலோசை அடர்த்தியான வனத்தில் தொலைதூரத்திற்கு கேட்கவேண்டிய அவசியமில்லை. ஆண்பறவையின் குரல் அருகில் வாழும் எதிர்பாலினத்தை ஈர்க்கத்தானே? தாழ்ந்த அதிர்வெண்ணில் அந்தக் காதல் பாட்டுஇருந்தால் போதாதா? வீட்டிற்குள்ளேயே பாட்டுக் கேட்பவர் வானொலிப்பெட்டியின் ஒலிஅளவை குறைத்துக் கொள்வதைபோலத்தான் இதுவும். சுரம்தாழ்ந்த காதல் பாடல்கள் மட்டுமே அடர்த்தியான வனங்களில் தெளிவாக எதிரொலிக்கும் என்பதால் பறவைகளின் குரலில் இந்த தகவமைப்பு ஏற்படுகிறது. வாழும் வனத்தின் அடர்த்திக்கேற்ப பறவைகள் தங்கள் குரலை மாற்றிக் கொள்கின்றன.

எலிசபத் டெர்ரிபெர்ரி என்னும் உயிரியல் ஆய்வாளர் இதுபற்றிய தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை டியூக் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளார். கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் ஆகிய இடங்களில் 35 ஆண்டுகளுக்கு முன்பு மொட்டையடிக்கப்பட்ட மரங்கள் இப்போது மீண்டும் செழிக்கத் தொடங்கியிருக்கின்றன. மரங்களின் அடர்த்தி அதிகரிப்பதால் அங்கு வாழும் வெள்ளைக்கொண்டை குருவிகள் தங்களுடைய காதல் பாடலின் சுரத்தை தாழ்த்தி அடக்கமாக பாடத் தொடங்கியிருக்கின்றன.

இந்த ஆய்வாளர் 15 இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். 1970களில் இந்த இடங்களில் வாழ்ந்த பறவைகளின் குரலோசை கலிபோர்னியா அறிவியலாளர் அகாடமியைச் சேர்ந்த ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதே இடங்களில் 2003ல் வாழ்ந்துகொண்டிருக்கும் பறவைகளின் குரலோசையுடன் நிலப்பகுதிகளின் பழைய, புதிய படங்களை ஒப்பிட்டு நோக்கும்போது மேற்காணும் ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளன
.

மரங்களின் அடர்த்தியில் எங்கெல்லாம் மாற்றம் இருக்கிறதோ அங்கெல்லாம் பறவைகளின் குரலோசையின் அதிர்வெண்ணில் மாற்றம் தெரிந்தது. மரங்களின் அடர்த்தி மாறுபடாத இடங்களில் பறவைகளின் குரலோசையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆய்வகச் சோதனைகளில் புதிய காதல் கீதம் முடிவதற்கு முன்பாகவே பெண்பறவை வாலை உயர்த்தி இனச்சேர்க்கை நடனத்தை தொடங்கிவிட்டனவாம். ஒரு தலைமுறையில் பிடித்துப்போன காதல்பாடல் அடுத்த தலைமுறைக்கு பிடிக்காமல் போனதன் காரணம் என்ன? பறவைகளின் குரலோசையில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டும் பதிவைப்பாருங்கள்......

பறவைகள் தங்களின் குரல் அதிகதூரத்திற்கு போகவேண்டிய அவசியம் இல்லை என்பதால் குரலை தாழ்த்தி காதல் கீதம் இசைக்கின்றன. ஆனால் மனிதனிடம் இந்த பண்பு இல்லை. எட்டடிக்குச்சுக்குள் வாழ்க்கையை நடத்தும் இந்த மனிதன் டிவி பெட்டியின் ஒலிஅளவை தெருமுழுவதும் கேட்குமாறு வைக்கிறான் இல்லையா?

இந்த ஆய்வுகள் இன்னும் முடிவுபெறவில்லை. பறவைகளின் குரலோசையில் ஏற்படும் மாற்றங்கள் இரு பாலினத்திற்கும் பொதுவானதா என்பதையும், பறவைகளின் குடியிருப்புகளை தேர்ந்தெடுப்பதில் இந்த குரலோசை உதவி செய்கிறதா என்பதையும் இன்னும் ஆராயவேண்டியிருக்கிறது. மரங்களை வெட்டுவதாலும், புவிவெப்பமடைவதால் வனப்பிரதேசங்களின் அடர்த்தி மாறுபட்டுவரும் தென் அமெரிக்காவில் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

-மு.குருமூர்த்தி

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/05/090520114710.htm

நன்றி : www.keetru.com