ஞாயிறு, செப்டம்பர் 06, 2009

உயிருள்ள பட்டாம்பூச்சியை உருவாக்க முடியுமா?வெறும் ஐந்தாம் வகுப்பே படித்த ஒருவர் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் எடுக்கிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இன்னும் சொல்லப்போனால் அவர் கல்லூரி பேராசிரியர்களுக்கும், பி.எட் படிக்கும் வருங்கால பள்ளி ஆசிரியர்களுக்கும் கூட வகுப்புகள் எடுக்கிறார். எட்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். மூன்று சிறு படங்களை எடுத்திருக்கிறார்.

தனது கடும் உழைப்பாலும் கரையில்லாத கற்கும் ஆர்வத்தாலும் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த கோவை சதாசிவம். அவருடன் பேசியதிலிருந்து...,

"" எனது முப்பாட்டன், பாட்டன் காலத்திலிருந்து முதன்முதலாக 5 ஆம் வகுப்பு வரை படித்த முதல் ஆள் நான்தான். ஐந்தாவது வரைக்கும் கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் உள்ள பாலரங்கநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தேன். அப்போது என் அப்பாவால் ரூ.200 பள்ளிக் கட்டணமாகச் செலுத்த முடியவில்லை. அதோடு என் படிப்பு முடிந்தது.

அப்புறம் தினக்கூலி வெறும் ஐம்பது பைசாவுக்கு ஒரு லேத் பட்டறையில் சேர்ந்தேன், குழந்தைத் தொழிலாளியாக. ஆனாலும் படிப்பின் மீதிருந்த என் ஆர்வம் குறையவில்லை. நிறையப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். கவிதையின் மீது ரொம்ப ஆர்வம் இருந்தது. எனது 17 - 18 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அதற்குப் பின்பு சைக்கிள் கடை வைத்தேன். சைக்கிள் கடையில் நிறைய நேரம் இருந்தது. நிறையப் புத்தகங்களைப் படித்து என் அறிவை வளர்த்துக் கொண்டேன். அப்போது எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. நான் எழுதி வைத்திருந்த கவிதைகளைத் தொகுத்து "பரிணாமங்கள்' என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்தேன். அந்தப் புத்தகம் கொண்டு வருவதற்கான செலவை சைக்கிள் கடையிலிருந்த சைக்கிளை விற்றுச் சமாளித்தேன்.

இப்படியே போனால் ஒன்றும் இருக்காது என்று நினைத்த என் மனைவி எதிர்ப்புத் தெரிவித்தார். அதனால் சைக்கிள் கடை முழுவதையும் இன்னொருவருக்கு விற்றுவிட்டு திருப்பூருக்கு 1983 இல் வந்தேன். திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் கட்டிங் மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்தேன்.

திருப்பூர் அப்போது நகர்மயம் ஆகத் தொடங்கியிருந்தது. அது தனது பழைய முகத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. அதன் நீர் வளம் சுருங்கிக் கொண்டிருந்தது. நிலத்தடி நீர் ரசாயனப் பொருட்களாலும், சாயத் தண்ணீராலும் நாசமாகிக் கொண்டிருந்தது. இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. இதைப் பற்றி 64 பக்கமுள்ள "பின்னல் நகரம்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டேன்.

சுற்றுச் சூழல் பற்றி இன்று உள்ள அளவுக்கு விழிப்புணர்வு இல்லாத அன்றையக் காலத்தில் இந்தப் பிரச்னை குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூலாக அனேகமாக அது இருக்கும் என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் பரவலாக அனைவருடைய கவனத்தையும் கவர்ந்தது. அப்படிக் கவரப்பட்டவர்களில் ஒருவர் காளிதாசன். அவரால் என் வாழ்க்கையின் போக்கு மாறப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியாது.

நண்பர் காளிதாசன் "ஓசை' என்ற பெயரில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார். வருகிறார். அந்த அமைப்பின் மூலமாக அவர் பல கல்லூரிகளில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வந்தார். என்னுடைய புத்தகத்தைப் படித்த அவர், எனக்குக் காடுகளைப் பற்றி அதிகம்
தெரிந்தால் நான் அவற்றைப் பற்றி நன்றாக எழுதுவேன் என்று நினைத்தார். அதனால் என்னைக் காடுகளுக்கு அழைத்துச் சென்றார். அப்புறம் அவர் வகுப்பு எடுக்கும் மாணவ, மாணவியரிடையே என்னையும் வகுப்புகளை எடுக்கச் சொன்னார்.

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகளில் மாணவ, மாணவியரை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று முகாம் நடத்துவது வழக்கமாக இருக்கிறது. அந்த வெளியூர் முகாம்களில் பலவித நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மருத்துவமுகாம், ரத்த தான முகாம், எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி முகாம் என்று பலவித முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதில் சுற்றுச் சூழல் முகாமும் ஒன்று. இந்தச் சுற்றுச் சூழல் முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் எடுக்கும் வேலையைத்தான் தற்போது செய்து வருகிறேன். பனியன் தொழிற்சாலையில் கட்டிங் மாஸ்டர் வேலையை விட்டுவிட்டுவிட்டேன்.

மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும்போது அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டிவிட்டு வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். வெறும் கரும்பலகையில் எழுதிப் போடுவதாலோ, சொற்பொழிவு நிகழ்த்துவதாலோ அந்த அளவுக்கு ஆர்வத்தை உருவாக்க முடியாது என்று நினைத்தேன்.

எனது கவனம் இதனால் சிறு படங்களை எடுப்பதில் திரும்பியது. "மண்' என்ற 9 நிமிடங்களே ஓடும் குறும்படத்தை எடுத்தேன். அதில் மண்ணில் நாம் ஏற்படுத்தும் மாசுகளைப் பற்றி மண்ணே நம்மிடம் பேசும். இந்த குறும்படம் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்துவிட்டது.

மயில் நமது தேசியப் பறவை. ஆனால் அதை கோவைப் பகுதியில் உள்ள விவசாயிகளில் சிலர் அடியோடு வெறுத்தனர். மயில் தங்களுக்குத் தொந்தரவு செய்கிறது என்று நினைத்தார்கள். இத்தனைக்கும் அங்கிருந்த மயில்கள் அவர்களால் வளர்க்கப்பட்டவையல்ல. பிற ஊர்களில் காக்கைகள் இருப்பதைப் போல அந்தப் பகுதிகளில் மயில்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் மயில்களை விஷம் வைத்து கொல்லவும் சில விவசாயிகள் துணிந்துவிட்டனர். மயில்கள் விவசாயிகளின் நண்பன். வேளாண்மைக்குக் கேடு செய்யும் புழு, பூச்சிகளை உண்டு உயிர் வாழ்பவை என்பதை வலியுறுத்தும் வகையில் "மயில்' என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். அதற்காக தமிழ்நாட்டில் மயில்கள் வாழும் பல இடங்களுக்குப் பயணம் செய்தேன்.

அடுத்து நான் எடுத்தது "சிட்டு' என்ற விவரணப்படம். அது 16 நிமிடம் ஓடக் கூடியது. நகர்மயமாதலினால் நீர்நிலைகள், மரங்கள் அழிந்து போகின்றன. சிட்டுக் குருவிகள் வாழ்வதற்கான சூழ்நிலை நகரங்களில் இல்லாமற் போகிறது. எனவே சிட்டுக் குருவிகள் நகரங்களில் காணாமற் போகிறது. சிட்டுக் குருவிகள் இல்லாத இடம் மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற இடமாகத்தான் போகப் போகிறது என்பதைச் சொல்லும் படம்தான் "சிட்டு'

இப்போது நீர்வாழ் பறவைகள் பற்றிய படம் ஒன்றை எடுத்து வருகிறேன்.

இப்படி வகுப்புகள் எடுப்பதுடன் நின்றுவிட்டால் சுற்றுச் சூழலைக் காப்பாற்ற முடியாது என்பதால் சுற்றுச் சூழல் சீர்கேட்டை எதிர்த்து நடக்கும் போராட்டங்களிலும் கலந்து கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து ஆர்வமாக வரும் மாணவர்களையும் என்னுடன் இணைத்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மிகுந்த அபாயமுள்ள சுற்றுச் சூழல் சீர்கேடு மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் நடைபெற்று வருகிறது.

குமரி முதல் மகாராஷ்டிரம் வரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 29 லட்சம் ஏக்கர் பரப்புள்ள காடுகளை அழித்திருக்கிறோம். தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான அமராவதி, பவானி, நொய்யல் போன்ற ஆறுகளின் பிறப்பிடமும் அதுதான்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகளை அழிப்பதனால் மழை பெய்வது குறைந்தால் நமக்கு விவசாயம் செய்யத் தண்ணீர் எப்படிக் கிடைக்கும்?

ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் நிறைய கல்வி நிறுவனங்கள், மடங்கள், ஓட்டல்கள், உல்லாச விடுதிகள், பெரிய நிறுவனங்களின் புதிய புதிய காப்பி, தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன. அங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்குத் துரத்தப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, அங்குள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன. வனவிலங்குகள் வாழ முடியாமல் போகின்றன. வேறு இடங்களுக்கு இடம் பெயர்கின்றன.

குறிப்பாக யானைகள் உலாவும் இடங்களை மேற்குத் தொடர்ச்சி மலையில் அழித்து வருகிறோம். அவை காடுகளை விட்டு வெளியேறி கோயம்புத்தூர் நகரின் சூலூர் பகுதி வரை வந்துவிடுகின்றன. அப்படி வரும் யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துவிடுகின்றன. இது நல்லதல்ல.

மனிதர்களைவிட யானைகள் அதிக அளவில் காடுகளை உருவாக்கும். எப்படி என்கிறீர்களா? காடுகளில் வாழும் யானைகள் ஓர் இடத்தில் அப்படியே இருக்காது. அங்குமிங்கும் போய்க் கொண்டிருக்கும். அப்படிப் போகும்போது ஒருநாளைக்கு அவை 16 முறை சாணம் போடும். அதன்மூலம் நிறைய விதைகளை அவை காடுகள் முழுக்க விதைத்துக் கொண்டே போகின்றன. இதனால் காடுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

இது நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பூமி. இதை நாம் நமது வருங்காலத் தலைமுறைக்கு எந்தப் பழுதுமில்லாமல் விட்டுச் செல்ல வேண்டும். மனிதன் தன் லாப நோக்கத்தினால் சுற்றுச் சூழலை நாசம் செய்கிறான். எவ்வளவோ விஞ்ஞானிகள் எத்தனையோ புதிய புதிய இயந்திரங்களை உருவாக்கலாம். ஆனால் உயிருள்ள ஒரு பட்டாம்பூச்சியை உருவாக்க முடியுமா? எனவே சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக உழைப்பதே எனக்கு இப்போது முக்கியமான வேலையாகிவிட்டது'' என்றார் அந்த முன்னாள் லேத் பட்டறைத் தொழிலாளி.
Align Right
-ந. ஜீவா

நன்றி: தினமணி கதிர், 06-09-2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக