வெள்ளி, டிசம்பர் 12, 2008

மரபணு மாற்று வேளாண்மை : அன்புமணி ராமதாஸ் x கபில்சிபல்

மரபணு மாற்று வேளாண்மை குறித்து இந்திய அரசின் முக்கிய அமைச்சர்களிடையே ஒத்த கருத்து நிலவவில்லை.

கடந்த செவ்வாய் அன்று காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் அன்புமணி, நுகர்வோர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதற்கான சோதனைகள் நடைபெறாத நிலையில் மரபணு மாற்ற உணவுப் பொருட்களை தம்முடைய அமைச்சகம் அனுமதிக்காது என்று கூறினார்.

ஆனால் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கபில்சிபல், இந்திய அரசு மரபணு மாற்ற வேளாண்மைக்கு ஆதரவு நிலையிலேயே உள்ளது என்று தெரிவித்தார். ஏற்கனவே மரபணு மாற்ற பருத்தி குறித்த ஆய்வுகள் நடைபெறுவதாக தெரிவித்த அவர், மேலும் பல வேளாண்பொருட்களில் மரபணு மாற்ற வகைகள் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தெரிவித்துள்ளார்.


வீடியோக் காட்சிஆனால் சூழலியல் ஆர்வலர் கவிதா குருகந்தி, மரபணு மாற்ற வேளாண்பொருட்கள் மக்களின் உடல்நலத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக எச்சரிக்கை தெரிவித்துள்ளார். அண்மையில் ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஆய்வில் மரபணு மாற்ற உணவுப்பொருட்கள் கொடுக்கப்பட்ட எலிகளுக்கு ஆண்மைக்குறைவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார்.


விரைவில் மரபணு மாற்ற கத்திரிக்காய் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் சுமார் 180 நாடுகளி்ல் மரபணு மாற்று உணவுப்பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ள சூழலில், இந்தியாவின் முக்கிய அமைச்சர்கள் இருவரிடம் மரபணு மாற்ற உணவுப்பொருட்கள் குறித்த மாறுபட்ட கருத்து நிலவுவது கவலை தருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

நன்றி: CNN-IBN தொலைக்காட்சி

உணவா? விஷமா?

கேரள மாநிலம் காசர்கோடு, இன்னும் அந்த சாபத்தில் இருந்து மீளவில்லை. இன்று வரையிலும் காலோ, கையோ, இதயமோ, மூளையோ, உயிரோ..., ஏதோ ஒன்று இல்லாமல் தான் அங்கு குழந்தைகள் பிறக்கின்றன. சில பெரியவர்கள் திடீரென ரத்தம் கக்கி சாகின்றனர். புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, மூளை வளர்ச்சியின்மை.. என ஏதேனும் ஒரு நோய்கள் அண்டாத மனிதர்களே அங்கு இல்லை.

கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் இந்த அவலத்தின் மூலம் எது?

7000 ஏக்கரில் விரிந்து கிடந்த முந்திரி தோட்டத்தை திடீரென தாக்கி சிதைத்தன பூச்சிகள். பூச்சிகளின் தொல்லையால் நிலை தடுமாறிய கேரள முந்திரி கார்பரேஷன் எடுத்த முடிவு தான் காசர்கோடு மாவட்டத்தையே விஷக்குழியில் தள்ளியது. ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் என்ற விஷத்தை முந்திரி தோட்டத்தில் கொட்டியது அந்நிறுவனம். மிகவும் சக்தி வாய்ந்த அந்த விஷத்தால் பூச்சிகள் அழிந்ததோ இல்லையோ? நீர், நிலம், காற்றில் மிக வேகமாக ஊடுருவிய எண்டோசல்பான் மனிதர்களுக்கு கொள்ளை நோய்களை வாரி வழங்கியதுடன் ஜென்ம சனியாக அந்த மாவட்டத்தையே ஆட்டி படைக்க தொடங்கி விட்டது. 1971ல் தொடங்கி 30 வருடங்களுக்கும் மேலாக நடந்த பாவ செயலை, ஒரு டாக்டர் கண்டு பிடித்து உலகுக்கு சொல்ல, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப்போல 2003ல் அந்த விஷத்தை தடை செய்தது கேரள உயர்நீதி மன்றம்.

இந்த கொடூரத்தை நினைவில் வைத்துக்கொண்டு, இப்போது தமிழக டெல்டா மாவட்டங்களுக்கு வருவோம்.

தஞ்சை, நாகை திருவாரூர் அடங்கிய டெல்டா பூமியில், பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதம் வரை சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக உளுந்து பயிரை புரோட்டீனிய புழுக்கள் உண்டு-இல்லை என்றாக்கி வருகின்றன. வெறுத்துப்போன விவசாயிகள் 10 நாளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 250 முதல் 500 மிலி எண்டோசல்பான் விஷத்தை தெளிக்கிறார்கள். 60 நாள் பயிரான உளுந்துக்கு 30 நாள் வரை, நாளொன்றுக்கு 3 முறை மருந்து தெளிக்கப்படுகிறது.


இந்த கணக்குப்படி பார்த்தால் ஒரே மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3.75 லட்சம் முதல் 7.5 லட்சம் லிட்டர் எண்டோசல்பான் காற்றில், நீரில், உணவில் கலந்து உயிருக்குள் ஊடுருவுகிறது. இது மட்டுமின்றி அதன் பிறகு பயிரிடப்படும் நெல் பயிருக்கும் இதே எண்டோசல்பானைத்தான் லிட்டர், லிட்டராக கொட்டுகிறார்கள் நம் விவசாயிகள்.

இது காசர்கோட்டைக் காட்டிலும் விபரீதமானது. பெரும்பான்மை உணவுத் தேவையை டெல்டா மாவட்டங்களே நிறைவு செய்கிறது என்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் இந்த விபரீதத்துக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது தான் விஷயமே!

நம் விவசாயத்துக்கு 15 ஆயிரம் வருட பாரம்பரியம் உண்டு. இன்று விவசாயத்தில் வெற்றி கண்ட எல்லா மேலை நாடுகளும் நம்மிடம் தொழில்நுட்பத்தை பிச்சை வாங்கியவைகள் தான். வீட்டுக்கு வீடு வளர்க்கப்பட்ட மாடுகளின் சாணம், வயற்காட்டோரம் இருக்கும் மரங்களின் இலை தழைகள்தான் உரங்கள். பருவத்துக்கேற்ற ரகங்கள்.


பயிருக்கு கேடு செய்யும் ஒரு பூச்சியிருந்தால், அதை சாப்பிடும் 5 பூச்சிகள் இயல்பாகவே வளரும் சூழல். உழைப்பு மட்டுமே விவசாயியின் முதலீடு. சாகுபடியில் கிடைக்கும் உற்பத்தி முழுவதும் லாபம். இது தான் நம் பாரம்பரியம். விவசாயிகளின் வியர்வையில் மட்டுமே உப்பை காணும் வயற்காடுகளில் உற்பத்தியாகும் அத்தனை உணவு பயிர்களும் முழு சக்தி தருவனவாக இருந்தன.

கைபிடி மண்ணை அள்ளி ஆராய்ந்தால் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள், லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள்.., சிலந்தி, தவளை, தட்டான், குளவி, பறவைகள் என வயலே சங்கீத மேடையாக இருக்கும். ஆற்காடு கிச்சடி, திருவண்ணாமலை தூயமல்லி, புதுக்கோட்டை மாப்பிள்ளை சம்பா, தஞ்சை சம்பா மோஷனம், ஒட்டடை சம்பா, சீரக சம்பா என உலகை பொறாமைப்பட வைத்தன நம் உற்பத்தி செய்த உணவு ரகங்கள்.

உள்நாட்டு உணவு தேவையை நிறைவுசெய்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்த நம் விவசாய தொழில்நுட்பத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பார்த்த பார்வை தான் இன்றைய அவலத்துக்கு காரணம். அதிகமில்லை. ஐம்பதே ஆண்டுகளில் தமிழகத்தில் செழித்து வளர்ந்திருந்த 65 சதவீத விவசாயிகளின் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் கட்டத்துக்கு வந்தாயிற்று.

1949ல் தான் மாபெரும் பேரழிவுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. 1940களில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகள் பயன்படுத்தி, பின்னர் அதன் தன்மை உணர்ந்து தடை செய்யப்பட்ட டி.டி.சி, டி.டி.டி, பி.ஹெச்.சி போன்ற பூச்சி மருந்துகள் அந்த காலகட்டத்தில்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தன. சூழ்ச்சியின் தன்மை அறியாமல் ஐந்துக்கும், பத்துக்கும் ஆசைப்பட்ட சில அதிகாரிகளை, கைக்குள் போட்டுக்கொண்டு இந்திய விவசாயிகள் மத்தியில் கடைவிரிக்கத் தொடங்கின பூச்சி மருந்து நிறுவனங்கள்.


சிறிது, சிறிதாக இந்த பூச்சி மருந்துகளில் மதிமயங்கினர் விவசாயிகள். 1952ல் அமெரிக்க மோட்டார் கம்பெனியான போர்டும், எண்ணை கம்பெனியான ராக்பெல்லரும் இந்திய விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உதவிகளை செய்வதாக கூறி களமிறங்கின. 1959ல் புதிய ஒட்டுரக பயிர்கள் புகுத்தப்பட்டன. அதோடு நம் விவசாயிகளின் நிம்மதி முடிவுக்கு வந்தது.
வயற்காடுகள் யூரியா, பாஸ்பேட் போன்ற உப்பின் ருசிக்கு பலியாகி மலடாக தொடங்கின.

மேலை நாடுகளின் ஒட்டுரக பயிர்கள் நம் நிலத்தின் தட்ப வெப்பங்களுக்கு தாக்கு பிடிக்காமல் வாடி வதங்கின. மேலும் தீமை செய்யும் பூச்சிகளை அந்த பயிர்கள் ஈர்ததன. இன்று ஒட்டு மொத்த மனித குலத்துக்கே சவாலாக மாறிய பிரச்னையின் வித்து அப்போது தான் தூவப்பட்டது. ஒட்டு ரக பயிர்களையும், உரங்களையும் தந்த மேலை நாட்டு நிறுவனங்களே பூச்சி கொல்லிகள் என்ற பெயரில் விஷங்களையும் வழங்கின.


நம் உற்பத்தியை இறக்குமதி செய்த மேலை நாடுகள், உரங்களுக்கும், பூச்சிக் கொல்லிகளுக்கும் நாம் பழக்கப்பட்ட பிறகு, உரம் போட்ட பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் என்று கை விரித்து விட்டன. நம் பூமி சுயம் அழிந்து, உரங்களின்றி புல் பூண்டுகளைக்கூட பிரசவிக்க தகுதியற்றதாகி விட்ட நிலையில், இருக்கும் பூமியை விற்றுவிட்டு வெளிநாடுகளில் கொத்து வேலைக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி விட்டு தெருவோர டீக்கடைகளில் உக்கார்ந்து ஆடுபுலியாட்டம் ஆடுகின்றனர் விவசாய பெருங்குடி மக்கள். இதுதான் ஒரு அடிமைக்கதையின் சுருக்கமான வரலாறு.

உலக அளவில் இரசாயன உரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மை இடம் வகிக்கிறது இந்தியா. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட எண்டோசல்பான், மாலத்தியான், அல்ட்ரின், எண்ட்ரின், லின்டேன், குளோர்பைரிபாஸ் ( இது போபால் விஷவாயு சம்பவத்துக்கு காரணமான டோ கெமிக்கல் கம்பெனியின் தயாரிப்பு. அமெரிக்காவில் உற்பத்தியாகிறது. அங்கு தடை செய்யப்பட்டு தற்போது இந்திய வயல்களுக்குள் கொட்டப்படுகிறது). உள்பட 90 வகை பூச்சிக்கொல்லிகள், 147 வகை ரசாயான உரங்களை பயன்படுத்தி இந்திய காற்று, நிலம், நீரை விஷமாக்குகிறார்கள் விவசாயிகள். நெல், உளுந்து, பயறு, காய்கறிகள், எண்ணை, பூக்கள் என நிலங்களில் விளையும் எல்லாமே விஷமாகி விட்டது.

டிடிசி, எக்காலக்ஸ், ஆண்ட்ரின், பாலிடால் உள்ளிட்ட 12 விஷங்களுக்கு எதிராக உலக அளவில் நடத்தப்பட்ட 12 அழுக்குகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டன. ஆனால் இந்தியா இன்னும் கண்மூடி கிடக்கிறது.

வியட்நாம் நாட்டு போராளிகளை ஒழிக்க அந்த அரசு, காடுகளில் "ஏஜென்ட் ஆரஞ்ச்" என்ற பயங்கர விஷ மருந்தை விமானங்கள் மூலம் தெளித்தது. அந்த ரசாயன விஷம் பட்ட மரங்கள் கருகி அழிந்தன. அந்த ஏஜென்ட் ஆரஞ்ச் விஷமும் நம் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் வரிசையில் இடம் பிடித்துள்ளதுதான் அதிர்ச்சி.

வேதி பூச்சி மருந்துகளை வயல்களில் கொட்டுவதால் விவசாயிகளின் நண்பர்களான மண்புழு, தவளை, பாம்பு, சிலந்தி, வெட்டுக்கிளி, தட்டான் போன்ற உயிரினங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து விட்டன. இயற்கை எதிரிகளான பூச்சிகள், விஷங்களையே புரோட்டின்களாக மாற்றிக்கொண்டு கொளுத்துப் போய்விட்டன.

விஷங்களை தெளித்தும் பூச்சிகள் அழியாததால் மேலும், மேலும் விஷங்களை கொட்டுக்கிறார்கள் விவசாயிகள். குறிப்பாக காய்கறி பயிர்களுக்கு வாரத்துக்கு 3 முறை கூட மருந்தடிக்கிறார்கள். எண்டோசல்பான் மாதிரியான பூச்சிக்கொல்லியின் வீரியம் முற்றிலும் அழிய 50 வருடங்கள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


குறைந்தபட்சம் பூச்சிமருந்தடித்து 23 நட்கள் கழித்து தான் காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் நாளை பறிக்க வேண்டிய காய்கறிக்குக்கூட இன்று மருந்தடிக்கும் பழக்கம் விவசாயிகளிடம் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில காய்கறிகளில் டாக்ஸிக்ஸ் லிங்க் (TOXICS LINK) நிறுவனம் நடத்திய சோதனையில் 80 சதவீதம் விஷத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உண்ணும் உணவில் 10 லட்சத்தில் 1 பங்கு விஷத்தன்மை இருக்கலாம் என்கிறது ஐநா சபை. ஆனால் இந்தியர்களின் உணவில் சராசரியாக 50 சதம் விஷம் இருக்கக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள்.

நேரடி உணவு பொருட்களான திராட்சை, வெள்ளரி, வெத்தலைகளில் கூட எண்டோசல்பான், மோனோகுரோட்டபாஸ் மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இதை சாப்பிடும்போது அந்த பொருட்களால் கிடைக்கும் சத்துக்களைக் காட்டிலும் 50 சதம் அதிக பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உற்பத்தியில் பூச்சிக்கொள்ளிகள் பயன்படுத்துவது மட்டுமின்றி இப்பயிர் வகைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தங்கள் பங்குக்கு விஷத்தை சேர்க்கிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சி.

பொதுவாக உளுந்து போன்ற பயறு வகைகளை இருப்பு வைக்கும் போது அந்துப்பூச்சி பதம் பார்த்துவிடும். முதலுக்கே மோசம் வரும் என்பதால் அலுமினியம் பாஸ்பேட் என்ற ஹெவி பாய்ஸனை இருப்பு வைக்கும் அறைக்குள் வைக்கிறாகள் வியாபாரிகள். அந்த விஷம் காற்றில் பரவி உளுந்திலேயே தங்கி விடுகிறது. உளுந்து நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக மாறிவிட்ட நிலையில் நுகர்வோர் இந்த விபரீதம் குறித்து கவலைப்படுவதில்லை என்பது தான் சோகம்.

மேலும் விஷம் கலந்த தவிடு, புண்ணாக்கு, பயிர்களின் மிச்சங்களை உண்பதால் மாடுகள் தரும் பால், ஆடுகளின் இறைச்சி எல்லாமும் விஷ முலாம் பூசப்பட்ட பொருட்களாக உருமாறி விட்டன.

இது போன்ற விஷங்கள் உடம்பில் நிகழ்த்தும் பாதிப்புகள் சொல்லி மாளாது. மூளை, இதயம், பெண்களின் மார்பகம், கர்ப்பப்பை, விரைப்பை போன்ற இடங்களில் தங்கி புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்குகிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பெண்களின் கொழுப்பு திசுக்களில் கலந்து தாய்ப்பால் வழி குழந்தைகளுக்கும் அந்த விஷம் சப்ளை செய்யப்படுகிறது என்று உயிரை கலங்கடிக்கிறார்கள் டாக்டர்கள்.

மல்லி, முல்லை, ரோஜா போன்ற மலர்களில் இயற்கை மணம் மறைந்து இன்று பூச்சி மருந்துகளின் நாற்றமே அடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மலர்கள் அதிகம் பயிரிடப்படும் தாமரைப்பாக்கம், வெங்கல், பூரிவாக்கம் போன்ற பகுதிகளில் பூந்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கைகளே இந்த அவலத்துக்கு சாட்சி. மேலும் அதிகபட்ச விஷம் தெளிக்கப்படும் பூக்களை தலையில் வைப்பதால் கூட சில அபாயகரமான பாதிப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு கிராமங்களில் மாடுகள் இல்லாத வீடே இல்லை. இன்றோ அடிமாடுகளாக கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மாடுகள் ஏற்றுமதியாகி விட்டன. மாடுகள் மூலம் கிடைக்கும் கோமயம், சாணம், பால், தயிர், மோர் தான் விவசாயிகளின் மூலதனம். கோமயத்தில் ஆடாதொடை, ஆடு தின்னா பாலை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, துத்தி போன்ற ஆடு சாப்பிடாத இலைகளில் 5 வகைகளை 15 நாட்கள் ஊறவைத்து அந்த நீருடன் தண்ணீர் கலந்து அடித்து தான் விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்தினர். மேலும் மாடு தரும் பொருட்களால் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மிகச்சிறந்த ஊக்க மருந்து. மாடுகளை இழந்ததே உணவு விஷமானதுக்கு காரணம் என்கிறார்கள் முற்போக்கு விவசாயிகள்.

உணவே மருந்து, மருந்தே உணவு என்றார்கள் நம் மூதாதை சித்தர்கள். ஒரு 50 ஆண்டு இடைவெளியில் உணவே விஷம், விஷமே உணவு என்று நமக்கு நாமே அழிவை தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்டத்திலேனும் விழித்துக் கொள்ளாவிட்டால் நம்மை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.


-முடச்சிக்காடு புதியபாரதி

புதன், டிசம்பர் 10, 2008

மரபணு மாற்று உணவுப்பொருட்களை அனுமதிக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் 9-12-2008 செவ்வாய் அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய ஆரோக்கியம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது அவர், "மரபணு மாற்று உணவுப்பொருட்களால் மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுமா? என்பது குறித்த ஆய்வுகளை நடத்தாமல் மரபணு மாற்று உணவுப்பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது " என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக மரபணுமாற்றப்பட்ட கத்தரிக்காய் வகைகளை இந்திய சந்தையில் எந்த விதமான பாதுகாப்பு சோதனைகளும் நடத்தாமல் அறிமுகப்படுத்துவதற்கு சில தரப்பில் முயற்சிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மரபணு மாற்று தொழில்நுட்பத்தை வேளாண்மையில் புகுத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு சோதனைகள் எதுவும் நடத்தாமல் மரபணு மாற்று உணவுப்பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்துவதை மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதிக்காது என்றும் அவர் உறுதி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் அன்புமணி்க்கு நன்றி தெரிவிக்க விரும்புபவர்கள் அவரது கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்: hfm@alpha.nic.in

நன்றி: தி ஹிந்து, தினமணி, தினத்தந்தி

செவ்வாய், நவம்பர் 18, 2008

பருவநிலை மாறுதலும், மரபணு மாற்று கொள்ளையும்...!

பருவநிலை மாறுதல் (Climate Change) குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றுவரும் நிலையில் பருவநிலை மாறுதலையும் தாக்குப்பிடிக்கும் மரபணுவின் காப்புரிமையை பதிவு முயற்சியும் நடைபெறுகிறது.

பருவநிலை மாறுதல் காரணமாக வழக்கத்திற்கு மாறான, அசாதாரண மழை, வெள்ளம், வறட்சி போன்றவை ஏற்படலாம் என்று அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். பருவநிலையில் மேலும் மாறுதல் ஏற்படாமல் தடுப்பது குறித்து ஏறக்குறைய அனைத்து அரசுகளும், மற்ற நிறுவனங்களும் ஆலோசனை செய்து வருகின்றன.

இந்நிலையில் பருவநிலை மாறுதலின் பாதிப்புகளை தாங்கும் சக்தி வாய்ந்த பயிர்களை உருவாக்கி உள்ளதாக சில நிறுவனங்கள் கூறுகின்றன. மான் சாண்டோ (Mon Santo), சின்ஜென்டா (Syngenta), டு பாண்ட் (DuPont), பாயர் (Bayer), டெள (Dow) மற்றும் BASF ஆகிய நிறுவனங்கள் பருவநிலை மாறுதலால் பாதிப்படையாத பயிர்வகைகளை உருவாக்கி உள்ளதாக கூறுவதோடு பல்வேறு காப்புரிமை அலுவலகங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காப்புரிமை மனுக்களையும் பதிவு செய்துள்ளன.

ஆனால் இவை அனைத்தும் ஏமாற்றுவேலை என்று சற்று யோசித்தாலே தெரிந்துவிடும்.

தமிழகம் உட்பட உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வறட்சியை தாங்கக்கூடிய வகையிலும், தண்ணீர் தேங்கும் நிலங்களிலும் செழித்து வளரக்கூடிய வகையிலும், மண்ணின் கார-அமிலத்தன்மையால் பாதிக்கப்படாமல் விளைச்சலை கொடுக்கக்கூடிய வகையிலும் பல்வேறு இனப்பயிர்கள் உள்ளன.


இயற்கையிலேயே உள்ள இந்த தாவர வகைகளை, தங்களது கண்டுபிடிப்புப் போல பதிவு செய்ய மேற்கூறிய நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு காப்புரிமை வழங்கப்பட்டால் உலகின் மொத்த வேளாண்மையும் அந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் அபாயம் உள்ளது.

இதன்மூலமாக எந்த நாட்டில் எந்த தானியத்தை பயிர் செய்வது என்ற முடிவினை அந்த நாட்டு மக்களோ, அரசோ மேற்கொள்ள முடியாது. விதைகளுக்கான காப்புரிமை பெற்ற விதை நிறுவனங்களே அவற்றை முடிவு செய்யும். இந்த நிலையில் உணவு தானியங்களின் விலையை நிர்ணயிப்பதில் விவசாயிகளுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ எந்த பங்கும் இருக்க வாய்ப்பில்லை.

பருவநிலை மாறுதலுக்கு காரணமாக விளங்கும் பன்னாட்டு நிறுவனங்களே, பருவநிலை மாறுதலால் பாதிக்கப்படாத பயிர்களையும் கண்டுபிடிக்கின்றனவாம். கம்யூட்டரில் வைரஸையும் பரப்பி, ஆன்டி-வைரஸை விற்கும் தந்திரம் மட்டும் அல்ல இது. மாறாக உணவுப் பொருட்கள் அனைத்தையும் வணிகக்கழகங்கள் கையகப்படுத்தி, உலகம் முழுவதையும் அடிமைப்படுத்தும் அராஜகப்போக்கே இது!

என்ன செய்யப்போகிறோம்?


-சுதந்திரன்

திங்கள், நவம்பர் 17, 2008

பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் !

'மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அணுகுண்டுகளைப் போன்றவை, தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும். நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்துவிடும்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை மறைக்கும் வகையில் களப் பரிசோதனை விவரங்களை வெளியிட அரசு நிறுவனம் மறுத்துள்ளது. 'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்வது போல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களை வெளியிட மறுப்பது அவற்றின் நம்பகத்தன்மையை பெருமளவு கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பசுமைஅமைதி (கிரீன்பீஸ்) அமைப்பைச் சேர்ந்த திவ்யா ரகுநந்தன், நாட்டில் நடைபெறும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான களப் பரிசோதனை விவரங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரிதொழில்நுட்ப பிரிவுக்கு இந்த மனு அனுப்பப்பட்டிருந்தது. இந்தியாவில் கத்தரிக்காய், கடுகு, நெல் உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு களப் பரிசாதனைகள் நடத்தப்பட்டுள்ளன. களப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட இடங்கள், அந்தப் பயிர்களில் உள்ள நச்சுத்தன்மை, ஒவ்வாமைத்தன்மை அளவீடு தொடர்பான பரிசோதனைகள் மற்றும் மரபணு மாற்றங்கள் மறுஆய்வுக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி குறிப்பு போன்றவற்றை அளிக்குமாறு திவ்யா கோரியிருந்தார்.


இந்த கோரிக்கைக்கு எதிராக, மகாராஷ்டிரா கலப்பின விதை கழக நிறுவனம், மத்திய தகவல் கமிஷனுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் 2007 டிசம்பரில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீதிமன்றம் வர்த்தக நலனுக்கே முக்கியத்துவம் தந்து வருகிறது. வர்த்தக நலன்கள்-பொது சுகாதாரம் ஆகிய இரண்டுக்கும் இடையில், எல்லா நேரமும் வர்த்தக நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.


வர்த்தக நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படைத் தகவல்கள் மறைக்கப்படும் ஆபத்து அதிகரித்து இருக்கிறது. மருந்து உற்பத்தி தொழிலில் இதுதான் பெருமளவு நடந்து வருகிறது. வர்த்தக நலன் பாதிக்கப்பட்டுவிடும் என்ற போர்வையில் களப் பரிசோதனை முடிவுகளை மருந்து நிறுவனங்கள் மறைக்கின்றன. ஆனால் பொது சுகாதாரமே முக்கியம் என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உண்மைத் தகவல்களை வெளியிட வலியுறுத்த வேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.


இந்த பரிசோதனை முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எந்த வகையில் எதிர்வினை ஆற்றுகின்றன என்பதையும், மருந்துகள் எந்த வகை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று தெரிந்து கொள்வதும் பொது சுகாதாரத்துக்கு மிக முக்கியம். மனிதர்களிடம் அவை எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய, களப் பரிசோதனை விவரங்கள் முக்கிய ஆதாரம். ஆனால் இந்த விவரங்கள் வசதியாக மறைக்கப்படுகின்றன. மறைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அந்நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. நிறுவனத்தின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 'டிரிப்ஸ்' எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தின் 'வர்த்தக அறிவுசார் சொத்து உரிமை ஒப்பந்தத்தை' மீறி தகவல்களை வெளியிட முடியாது என்று மாஹிகோ நிறுவனம் கூறியுள்ளது.


''இந்தத் தகவல்களுக்கு ஏற்கெனவே காப்புரிமை பெறப்பட்டு விட்டதால், அவை வெளியிடப்படுவது வர்த்தக நலன்களை பாதிக்கும் என்று கூறுவது அப்பட்டமான பொய்'' என்கிறார் கிரீன்பீஸ் அமைப்பின் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன். உணவு பாதுகாப்பு தகவல்களை வெளியிட வேண்டும் என்றுதான் திவ்யாவின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது எந்த வகையிலும் வர்த்தக நலன்களை பாதிக்காது. பொது நலன் அடிப்படையில் மேற்கண்டது போன்ற தகவல்களை வெளியிடலாம் என்று தகவல் உரிமைச் சட்டம், டிரிப்ஸ் ஆகிய இரண்டின் கீழும் வழிவகை உண்டு. பொது சுகாதாரத்தை பாதிக்கக் கூடிய அனைத்தையும் பொது ஆய்வுக்கு உட்படுத்துவதே சரி என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதற்கு எடுத்துக்கட்டாக அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தை அவர்கள் கூறுகிறார்கள்.


மனஅழுத்த பிரச்சினைக்கு அமெரிக்காவில் கொடுக்கப்படும் போர்சாக் என்ற மருந்து தொடர்பான களப் பரிசோதனை விவரங்கள், அது அளிக்கும் பலனை வெட்டவெளிச்சமாக்கியது. அதன் பிறகுதான் அரசு விதிமுறைகளில் உள்ள ஓட்டைகள் தெரிய வந்தன. போர்சாக் மருந்துக்கு நடத்தப்பட்ட களப் பரிசோதனை விவரங்களை ஆராய்ந்தபோது, அந்த மருந்து நோயாளிகளுக்கு போதுமான அளவு பலனை அளிப்பதில்லை என்று தெரியவந்தது.


இதேபோல ஜெர்மனியில் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் தொடர்பான களப் பரிசோதனை விவரங்களை வியாபார ரகசியம் என்று மான்சான்டோ நிறுவனம் மறைத்தது. அந்தத் தகவல்களை கிரீன்பீஸ் கோரிக்கை விடுத்து பெற்றது. பரிசோதனை விவரங்களின் அடிப்படையில், மக்காச்சோளத்தை சாப்பிட்ட எலிகளின் கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என்பது தெரிய வந்தது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள், எதிர்விளைவுகள் பற்றி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள மத்திய அரசு அதைப் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. பொதுமக்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச தகவல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் அங்கீகாரக் குழுவின் இணையதளத்தில் உள்ள சொற்ப தகவல்கள் மட்டுமே.


மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இந்தியாவில் ஏற்கெனவே ரகசியமாக அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. அதைச் செய்தது மான்சான்டோ நிறுவனம். சாதாரண விதைகளுடன், மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை மறைமுகமாக கலந்து கொடுத்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மாஹிகோ நிறுவனம் சர்ச்சைக்குரிய மான்சான்டோ பன்னாட்டு பயிர் நிறுவனத்துடன் நேரடி தொடர்பு வைத்துள்ளது. திவ்யாவின் மனு 2006 பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் எந்த பதிலும் தரப்படவில்லை. தாமதப்படுத்துவதன் மூலம் களப் பரிசோதனைகள் தொடர்பான தகவலை மறைக்க மாஹிகோ முயற்சிக்கிறது. பொது சுகாதாரம் - வர்த்தக நலன்களுக்கு இடையிலான போரில் இந்த மனு முன்னுதாரணமாக திகழும். இதுவரை வர்த்தக நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து தகவலை வெளிக் கொண்டுவர வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.


-ஆதி

புதன், நவம்பர் 12, 2008

உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம்

மரம் நமக்கு என்ன தருகிறது?
மலர்கள், காய், கனிகள் தருகிறது
நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது
காற்றை சுத்தப்படுத்துகிறது
நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.
மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.
ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அந்த செயற்கை பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது.

ஒவ்வொரு மரமும் ஒரு வரம்
மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:
மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.
நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.
கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் எமன்

சுற்றுச்சூழல் மாசுபடுவதே பூமி வெப்பமடைய முக்கிய காரணம். மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டைஆக்சைடு, மீதேன் போன்ற வாயுக்களே சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. பூமி வெப்பமடைதவதால் மனிதகுலத்தின் வாழ்வுரிமை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இதைத் தடுத்து சுற்றுச்சூழலை காக்க நாம் வாழும் இடத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.பூமியின் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கிய அச்சுறுத்தலாக இருப்பது பல்கிப் பெருகி வரும் குப்பைகளே. தெருவில் அனைவரது கண்களில் தென்படும் குப்பை பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கவர். எளிதாகவும், கையாளுவதற்கு வசதியாகவும் இருப்பதால் இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் கேரி பேக் மாறிவிட்டது.

இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப்படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம்.

பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.

பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.

குப்பை கழிவுகளுடன் மண்ணில் பிளாஸ்டிக் பைகளை புதைப்பதால், அவை நெடுங்காலத்துக்கு மண்ணில் மக்கிப்போகாமல் தாவரங்களின் வேர்கள் ஊடுருவ முடியாமலும், மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுக்கவும் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமாக அமைகின்றன.

பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்போது, கால்நடைகளின் உணவுக்குழல் அடைபட்டு அவை இறந்து போகின்றன. சில உயிரினங்கள் பேப்பர் என்று நினைத்துக் கொண்டு தவறுதலாக பிளாஸ்டிக் பைகளை உண்டுவிடுகின்றன. யானைகள், மாடுகள் இப்படி இறந்து போகும் நிகழ்வுகள் நிறைய பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம். மற்ற நண்பர்கள், உறவினர்களுக்கும் இச்செய்தியை எடுத்துச் சொல்வோம். அவசரத் தேவைக்கு ஒன்றிரண்டு முறை பிளாஸ்டிக் பையை பயன்படுத்தினால், அந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பையோடு குப்பையாகப் போடாமல், சேமித்து மறுசுழற்சிக்கு அனுப்புவோம்.

துணிப்பைகள், சணல்பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம்.

பூவுலகின் நண்பர்கள் - அறிமுகம்

பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
சுயேச்சையான, மக்கள் நலன் அமைப்பு. சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அறிவியல் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாள வலியுறுத்துவோம். உலகமயமாக்கம் மற்றும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடைக்கச் செய்வது இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம்.

பொருளாதார லாபங்களை மட்டுமே முன்வைக்கும் வளர்ச்சி , கட்டுமீறிய நிலச் சீரழிவு, கட்டுப்படுத்தப்படாத தொழில்மயமாக்கம் வெளியிடும் நச்சு போன்றவற்றால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறது. வறுமை, எழுத்தறிவின்மை, ஏற்றத்தாழ்வு போன்ற சிக்கல்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்குகின்றன.

இன்றைய சூழ்நிலையில் . . .
தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க முயற்சிப்பது, அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்வது; சுற்றுச்சூழலை புரிந்து கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வை பெறுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது; இயற்கை ஆதாரங்கள் சந்தைப்படுத்தப்படும் சூழ்நிலையில், இயற்கை மற்றும் இயற்கை வளங்களை (நிலம், நீர் உள்ளிட்டவை) சூழலியல் பாதுகாப்பு பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு வளங்குன்றாத வகையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாக்கும் பண்பை ஊக்குவிப்பது; மாசுபடுத்துதல் மற்றும் வீண் நுகர்வை குறைக்க வலியுறுத்துவது; தமிழகத்தில் அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள்-தாவரங்கள் மற்றும் உறைவிடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது; இயற்கையை அழித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கூருணர்வை ஏற்படுத்துவது ஆகியவை எங்களது விரிவான நோக்கங்கள்.

பல்லுயிரியத்துக்கு எதிரான ஆபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் . . .
இயற்கையுடன் மனிதர்கள் இசைந்து வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, செயல்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்கு இயற்கை வளமும்,இயற்கை அற்புதங்களும் செழித்துள்ள உலகை விட்டுச்செல்ல வலியுறுத்துவோம்.

பணிகள்
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் தகவல்களை ஆவணப்படுத்துதல்
பதிப்பித்தல்-பரப்புதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பரிந்துரைத்தல்-ஆதரவை திரட்டுதல், தொடர்பியல் கருவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், சட்ட ஆலோசனை வழங்குதல், ஒத்துணர்வுள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் - இவை மூலம் அனைத்து வர்க்க மக்களிடமும் விழிப்புணர்வை உருவாக்குதல்.